Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா? - கலாநிதி சர்வேந்திரா

<p>புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா?</p>
 

 

1993 இல் ஒஸ்லோவில் நடந்த ஒரு இலக்கியக் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைகளில் காணப்பட்ட படிமம் ஒன்று குறித்து கருத்தினை வெளியிட்டிருந்தார்.

புலம்பெயர் கவிஞர்கள் இலையுதிர்த்து நிற்கும் மரங்களை 'கருகிய' அல்லது 'எரிந்த' அல்லது 'பட்ட' மரங்களாக சித்தரிக்கும் படிமங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகின்றனர். இலையுதிர்த்து நிற்கும் மரங்களை இவ்வாறு சித்தரிப்பதனை இலையுதிர் மரங்களைத் தமது வாழும் அனுபவத்திற் கொண்ட மேற்குலகக் கவிஞர்கள் செய்யமாட்டார்கள். எரிந்த, கருகிய அல்லது பட்ட மரங்களை மட்டும் இலையுதிர்த்த மரங்களாகக் கண்ட நமது தாயகப்படிமமே- நமது கவிஞர்கள் இவ்வாறு ஒப்பீடு செய்வதற்குக் காரணமாக அமைகிறது எனப் பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்றதோர் உரையாடல் எனது நண்பருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலும் இடம்பெற்றிருக்கிறது. நண்பரது மனைவி ஒப்பீட்டளவில் பின்னர்தான் புலம்பெயர்ந்திருந்தவர். நண்பர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தனது இளைய வயதில் புலம்பெயர் நாடொன்றில் காலடி வைத்தவர். ஒரு தடவை நண்பரும் அவரது மனைவியாரும் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் இலையுதிர்த்து நின்ற மரங்களைப் பார்த்து 'இது என்ன சுடலை மரங்கள் மாதிரிக் கிடக்குது' என்று கூறிச் மனைவி சலித்திருக்கிறார். அப்போது நண்பர் கூறியிருக்கிறார். 'எங்களுக்கு இது சுடலை மரம் மாதிரித் தெரியுது. இங்கு பிறந்து வளர்பவர்களுக்கு இது இயற்கையின் ஒரு வடிவம்'. நண்பரின் மனைவிக்கூடாகவும் இலையுதிர்த்த மரங்களைப் பற்றிய நமது ஊர்ப்படிமம் ஒன்று வெளிவந்திருக்கிறது.

இது தாயகத்தில் இருந்து நாம் எம்மோடு எடுத்து வந்த படிமங்களின் வெளிப்பாடு. தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த உடனடிக் காலத்தில் இத்தகைய படிமங்கள் நம்மவர்களிடையயே கூடுதலாக வெளிப்பட்டது. புலத்தில் தரம் மிகுந்த 'சோடா' வகைகள் இருக்கின்ற போதும் நம்மில் பலருக்கு யானை மார்க் சோடாவிலும் – நெக்டோ, ஒரேஞ்பார்லி போன்றவற்றைக் கண்டால் இப்போதும் நாக்கில் நீர் சுரக்கும். இது தாயகத்திலிருந்து நாம் எடுத்து வந்த சுவையின் வெளிப்பாடு. சோறு சாப்பிடாவிட்டால் உணவு சாப்பிட்ட மாதிரி இருப்பதில்லை என புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் பலர் உணரும் நிலை இப்போதும் உள்ளது. இது நாம் எம்முடன் எடுத்து வந்த உணவுப் பழக்கத்தின் வெளிப்பாடு. இப்படியாக புலம்பெயர் வாழ்வை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் புலம்பெயர்ந்தோர் பலர் தாயகத்தின் பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்து வைத்திருப்பது இப்போதும் தொடர்கிறது.

இத்தகைய ஊரின் நினைவுகள், பழக்க வழக்கங்கள் போன்றவை நாம் புலம்பெயர்ந்த பின்னர் முதலாம் தலைமுறையினரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினையும் செல்வாக்கினையும் செலுத்தி வருவது எவ்வளவு காலத்துக்குத் தொடரப் போகிறது என்பது புலம் பெயர்ந்தோர் பலரின் மத்தியிலும் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது. ஊரில் தாம் வாழ்ந்த நமது வாழ்க்கை முறையுடன், தாம் வாழ்ந்து வந்த இயற்கைச்சூழலுடன் மாறுபட்ட முறையில் வாழ்க்கையினை புலத்தில் ஆரம்பிக்கும்போது ஊரின் நினைவுகளும் தாக்கங்களும் அதிகமாகவிருந்தமை இயல்பானதுதான். புலம்பெயர் சூழல் வாழ்வதற்கு எவ்வகையிலும் பொருத்தம் இல்லாத இடமாக புலம் பெயர்ந்தோர் பலர் கருதிக் கொண்டதும் உண்டு. கவிஞர் ஜெயபாலன் புலம்பெயர்ந்து, நோர்வேயில் வாழ்ந்த ஆரம்ப கால கட்டத்தில் எழுதிய கவிதை ஒன்று புலப்பெயர்வை குடும்பத்துப் படிமத்தின் ஊடாகச் சொல்லும். இக் கவிதையின் வரியொன்று இப்படித்தான் அமையும்.

'.....நானோ

வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஓட்டகம் போல்

ஒஸ்லோவில்....'

<p>புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா?</p>

பனிமண்டலமான அலாஸ்காவில், பாலைவன மிருகமான ஒட்டகம் வந்திறங்கி விட்டால் இசைவாக்கம் அடைவதில் அதற்குள்ள கடினங்கள் போல- புலம்பெயர் சூழலில் புதிய வாழ்க்கை மற்றும் இயற்கைச் சூழலுக்கு இசைவாக்கம் அடைவதில் புதிதாய் நமது தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்தவர்களுக்குள்ள கடினநிலையினை இக் கவிதை வரிகள் தெளிவாக வெளிப்படுத்தின. இக் கவிதை வரிகளை அடிப்படையாகக் கொண்டு 'அலாஸ்காவின் ஒட்டகங்கள்' என்ற திரை நாடகம் ஒஸ்லோவில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. புலத்து வாழ்க்கையில் தமது வாழ்க்கையினை அமைப்பதில் முதலாம் தலைமுறையினருக்கு ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை இத் திரைநாடகம் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. ஜெயபாலனின் கவிதை வரிகளில் குறிப்பிட்டவாறு புலம்பெயர் வாழ்க்கைக்கு தம்மை இசைவாக்க முடியாமல் அல்லது இசைவாக்க விரும்பாமல் மீண்டும் தாயகம் நோக்கி இயன்றவரை விரைவாகத் திரும்ப வேண்டும் என்று பலம் பெயர்ந்தோர் பலர் ஆரம்பத்தில் எண்ணிக் கொண்டதும் உண்டு.

ஆனால் நாளடைவில் புலம்பெயர்ந்தோர் இவ் வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடையும் அல்லது 'சமாளித்துப்' பழகும் நிலை உருவாகி விட்டது. புலத்தில் வாழ்வதற்காக நம்மவர்கள் இப்போது பனிமண்டலங்களில் ஒட்டகங்கள் வாழும் வித்தையினை நன்கு கற்றுக் கொண்டனர். இதற்கு புலம்பெயர்ந்தோர் கடைப்பிடித்த ஓர் உத்தி தமது ஊரை, தாம் வாழ்ந்து வந்த தாயகச் சூழலை தாம் வாழும் நாடுகளில் உருவாக்கிக் கொள்வதாக அமைந்து விட்டது. இது புலம்பெயர் தமிழர் மட்டுமல்ல, தமது தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்த பல்வேறு சமூகங்களும் கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறைதான். புலம்பெயர்ந்த நாடுகளின் இயற்கையில் தம்மால் இலகுவில் மாற்றங்களைச் செய்ய முடியாவிட்டாலும் நாம் வாழும் வீட்டுச் சூழலில், சமூகச் சூழலில் புலம் பெயர்ந்தோர் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

இம் மாற்றங்கள் பல்வேறு வகையிலும் தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கையுடன் தொடர்புபட்டதாக இருக்கிறது. வீட்டின் உள்வடிவமைப்பின் பண்பாட்டுச் சூழல் தாயகச் சூழலாக ஆக்கப்பட்டிருக்கிறது. பல வீடுகளில் சுவாமி அறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளில் அலங்காரத்துக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களும் தமிழர் பண்பாட்டை, பிறந்து வளர்ந்த தாயகச் சூழலை பிரதிபலிப்பவையாக அமைகின்றன. வாழும் நாடுகளின் சமூகச் சூழலுக்குள்ளும் தாம் தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒத்த ஒரு வாழ்க்கைச் சூழலை புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறைத் தமிழர் உருவாக்கிக் கொண்டுள்ளனர். இதில் முக்கியமான இடங்களை வகிப்பவை மூன்று வகையான நிறுவனங்கள். முதலாவது கோவில்கள். இரண்டாவது தமிழ்ப் பாடசாலைகள். மூன்றாவது நடனம், இசை போன்றவை கற்பதற்கான கலைக்கூடங்கள். இவற்றை விடவும் தாயகச் சூழலை புலம்பெயர் சூழலில் கொண்டு வருவதற்கு விளையாட்டுத் தளமும் பயன்படுத்தப்படுகிறது. கிரிக்கட் விளையாட்டை தமது விளையாட்டுத் தளத்தில் கொண்டிராத நாடுகளில்கூட கிரிக்கட் விளையாட்டில் ஊறிப்போன புலம்பெயர்ந்தவர்களால் கிரிக்கட் அறிமுகம் செய்யப்பட்டு முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. உதாரணமாக நோர்வேயில் கிரிக்கட் விளையாட்டில் பாகிஸ்தானியர்களும் தமிழர்களும் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார்கள். கிரிக்கட் விளையாடும் பாகிஸ்தானியர்களை மையமாகக் கொண்டு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் ஒரு கலாநிதி ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

எனது ஆய்வில் நாம் தாயகத்தில் பின்பற்றிய பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை புலம்பெயர் சூழலில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நோக்கியிருந்தேன். இதற்கு நான் ஆய்வுக்காகச் செவ்வி கண்டவர்களிடம் நாம் தாயகத்தில் பின்பற்றிய பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை ஏன் புலம் பெயர் சூழலிலும் பின்பற்றுகிறோம்? எவ்வகையில் நமக்கு இப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன? என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தேன். இப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதற்கு இவர்கள் பல்வேறு வகையான காரணங்களைக் கூறினார்கள். நமக்கு பரீட்சயமானவை, நம்மோடு இணைந்து விட்டவை – இதனால் நாம் எங்கு சென்றாலும் இவை நம்முடன் சேர்ந்து வருவவை, நமது அடையாளத்தின் முக்கியமான ஒரு பகுதி இவை, புலம்பெயர் வாழ்வில் நமக்கு மகிழ்வையும் ஆறுதலையும் தருபவை, ஊரில் வாழ்வது போன்ற எண்ணத்தைத் தருவதால் ஊர் ஏக்கத்தினைக் குறைவடையச் செய்பவை, இரண்டாம் தலைமுறையினரை நம்மவர்களாக வளர்க்க உதவுபவை, ஊரில் உள்ள உறவுகளின் எதிர்பார்ப்புக்கு இசைவாக மேற்கொள்ளப்படுவவை – போன்ற பல்வேறு காரணங்களை இவர்கள் தமது அனுபவத்தின் ஊடாக வெளிப்படுத்தினார்கள். இப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் இவர்களுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கி ஊரில் வாழ்வது போன்றதொரு உணர்வை வழங்குகிறது. இவை நம்மவர்கள் புலம்பெயர் சூழலில் தமது வாழ்க்கையினை ஒரு சமநிலையுடன் அமைத்துக் கொள்வதில் முக்கிய பாத்திரத்தினை வகிப்பதாகவே உணர முடிகிறது.

நமது ஊரைப் புலம்பெயர் நாடுகளுக்கு கொண்டு வந்த சேர்த்த பின்னர் தாயகத்துக்கு நிரந்தரமாக திரும்பிச் செல்லும் விருப்பம் குறைவடைந்து விட்டதா? 20 வருடங்களுக்கு முன்னர் தாயகத்துக்குத் திரும்பிச் செல்லுதல் குறித்து நம்மவர்களிடையே பரவலான கலந்துரையாடல்களை – கூடுதலாகத் தனிப்பட்ட சந்திப்புக்களில் காணக்கூடியதாகவிருந்தது. தற்போது இத்தகைய தாயகம் நோக்கித் திரும்பிச் செல்லும் விருப்பு நம்மவர்களிடையே பல்வேறு காரணங்களினால் குறைவடைந்து விட்டது. பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில் வாழும் நிலை இதற்கு முக்கியமானதொரு காரணம். தாயகத்தில் உறவுகளும் நண்பர்களும் குறைவடைந்து தாயகத்துடனான நேரடித் தொடர்பு பலவீனமடைந்து விட்டமை இன்னொரு காரணம். தாயகப் பழக்கவழக்கங்களுடன் நினைவுகளுடன் வாழ்ந்தாலும் புலம்பெயர் நாட்டு வாழ்க்கை பழகிப் போனமையும், சௌகரியமாக இருப்பதுவும் மற்றுமொரு காரணம். சிலர் தாம் முதியவர்களாக வந்த பின்னர் தாயகம் நோக்கித் திரும்பிச் செல்வது குறித்துச் சிந்திக்கின்றனர். தற்போது வெளிநாட்டில் வாழும் 75 வயதினைத் தாண்டிய மூத்தவர் ஒருவர் என்னிடம் ஒரு தடவை கூறினார். 'என்ரை கனவிலை ஒருக்காலும் இங்கத்தைய (தாம் வாழும் நாட்டின்) காட்சியள் வாறதில்லை. எங்கடை நாட்டுக் காட்சியள்தான் வாறது. நான் உடலால் வெளிநாட்டிலை வாழ்ந்தாலும் மனதால் எங்கடை தாயகத்தில்தான் வாழுறன்' நான் அவரிடம் கேட்டேன். 'நாட்டிலை போய் வாழக்கூடிய சூழல் உருவாகினா அங்கை திரும்பிப் போவீங்களா?' அவர் மிகவும் தெளிவாகச் சொன்னார்: 'போய் வருவன் தம்பி. அங்கை வாழ மாட்டன். இங்கை திரும்பி வந்திடுவன். என்ரை எல்லா பிள்ளளையளும் வெளியிலை. நான் அங்கை தனிய இருந்து என்ன செய்யிறது. மற்றது வைத்திய வசதி, மருந்துச் செலவு. நான் வருத்தக்காரன். இங்கை கிடைக்கிற வசதி அங்கை கிடைக்காது.'

நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நமது வேர்கள் புலத்தில் மெல்ல மெல்ல ஆழ விடுகின்றன என்பதற்கு இதனை ஓர் உதாரணமாகக் கொள்ளலாமா? இப்போதும் புலம் பெயர்ந்தோரை வழிதவறி அலாஸ்காவுக்கு வந்து விட்ட ஒட்டகங்களாகக் கருத முடியுமா?

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=75f7a39a-88ab-4093-abdf-33f3507b66ee

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.