Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்

தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers! 1957.

விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுதலை இயக்கத்தினர் நான்கு பேர் ஒளிந்திருக்கிறார்கள். வெளியே நிற்கும் ராணுவ அதிகாரி, ‘அலி... நீ இனிமேல் தப்பிக்க முடியாது. உன் இயக் கத்தார் அனைவரும் பிடிபட்டு விட்டார்கள். ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வா!’ என அழைக்கிறார். தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கும் போராளியான அலியின் நினைவு கள் துவங்குகின்றன.

1954. தேசிய விடுதலை முன்னணியின் அறிவிப்பு வெளியாகிறது. ‘மக்களே, நாம் பிரெஞ்சு அரசின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ரத்தம் சிந்து வதைத் தவிர்க்க, அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நம் தேசத்தையும் சுதந்திரத்தையும் காப்பது நம் கடமை! சகோதரர்களே... ஒன்றிணையுங்கள்!’ என்ற அறிவிப்பு வெளியாகும் போது, தெரு ஓரத்தில் நின்று கொண்டு இருக்கும் அலியை போலீஸ் மடக்கிப் பிடிக்கிறது. சிறுசிறு குற்றங்கள் செய்து பலமுறை ஜெயிலில் இருந்த அவனை போலீஸ் மீண்டும் சிறையில் அடைக்கிறது. சிறையில் குற்றவாளிகளுடன் இருக்கும் அலி, விடுதலைப் போராளி ஒருவரை போலீஸார் அழைத்துச் செல்வதையும், அந்தப் போராளியின் தலையை கில்லெட்டில் வைத்துத் துண்டிப்பதையும் ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். விடுதலை ஆகி வெளியில் வந்ததும், விடுதலை இயக்கத்தில் சேர்கிறான்.

1956, ஜூன் காலை 10.32. சாலையில் போலீஸைப் பின் தொடரும் இளைஞன், போலீஸைக் கொன்று அவரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துச் செல்கிறான். காலை 11.40. பொதுமக்கள் நான்கு பேர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, அதிகாரிகளைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றுகிறார்கள். மாலை 4.15. நகரத்தின் முக்கிய வீதிகளில் பிரெஞ்சு போலீஸார் இறந்துகிடக்க, ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிரெஞ்சு உயர் அதிகாரிகள் அன்றே கூடி விவாதிக்கிறார்கள். போலீஸ் நிலையங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து தெருவுக்கு வரும் பாதைகள் கம்பிவேலிகளால் மூடப்படுகின்றன. மக்கள் அடையாள அட்டையோடு ஒவ்வொருவராக வரிசை யில்தான் வர வேண்டும். போலீஸாரின் கெடுபிடி அதிகரிக்கிறது.

1956, ஜூலை 20. காலை 11.20. பரிசோதிக்கப்படும் பொதுமக்களின் வரிசையில் பர்தா அணிந்த பெண் ஒருத்தி வருகிறாள். பெண் என்பதால், தொட்டுப் பரி சோதனை செய்யவிடாமல் அங்கிருந்து வெளியே வந்ததும், பர்தாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஓர் இளைஞனிடம் கொடுக்கிறாள். அவன் ஒரு போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொல்கிறான். காலை 11.50. பழங்கள் விற்கும் மார்க்கெட். ஒரு பழ வியாபாரி யின் கூடையில் ஒளித்துவைக்கப்பட்ட துப்பாக்கியை எடுக்கும் இளைஞன் அங்கு ரோந்து வரும் அதிகாரியை சுட்டுக் கொல்கிறான். பிற்பகல் 1.30. 15 வயதுள்ள ஒருவன் ஒரு போலீஸ் அதிகாரியைப் பின்தொடர்கிறான். சந்தேகப்படும் அவர் அவனைப் பரிசோதிக்கிறார். அவ னிடம் ஆயுதங்கள் இல்லை என்றதும், அவனைப் போ என விரட்டுகிறார். அவன் அங்கிருக்கும் குப்பைத் தொட்டியில் கிடக்கும் துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்று விட்டு, துப்பாக்கியைக் குப்பைத் தொட்டியிலேயே போட்டுவிட்டுத் தப்பிக்கிறான். விடுதலை இயக்கம் இப்படிச் சாதாரண மக்க ளின் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக மாறத் துவங்கு கிறது.

ஜனவரி 10, 1957. போராளிகளை ஒழிக்க, பல போர்களில் வெற்றி கண்ட கர்னல் மேத்யூ தனது அதிரடிப் படையுடன் நகரத்துக்குள் அணி வகுத்து வருகிறார். பிரெஞ்சு மக்கள் ஆரவாரித்து அவரையும் படையினரையும் வரவேற்கிறார்கள். கர்னல் தன் படைவீரர்களுக்கு எப்படிப் போராளிகளைப் பிடிக்க வேண்டும் என்றும், அங்கிருக்கும் நாலு லட்சம் அராபியர்களில் தீவிரவாதி யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் வகுப்பு எடுக்கிறார். நகரம் முழுக்கத் தேடுதல் வேட்டை துவங்குகிறது.

மார்ச் 4, 1957. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களான அலியும் ஜாபரும் தேடப்படும்போது இயக்கத்தின் முக்கியத் தலைவரான பென்மெஹிதி கைதாகிறார். கைது செய்யப்பட்ட அவருடன் சேர்ந்து கர்னல் மேத்யூ பத்திரிகையாளர் களைச் சந்திக்கிறார். ‘‘பெண்களின் கூடையில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கவைப்பது கோழைத்தன மாக இல்லையா?’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். ‘‘அப்பாவி மக்கள் மீது விமானங்களிலிருந்து குண்டு வீசுவது வீரமா? உங்கள் விமானங்களைக் கொடுங்கள். எங்கள் பெண்களின் கூடைகளைத் தருகிறோம்’’ என்கிறார் மெஹிதி. மறுநாளே அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிப்பு வருகிறது. பத்திரிகையாளர்கள் அதைச் சந்தேகித்து கர்னல் மேத்யூவிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் கர்னல் மேத்யூ, ‘‘நான் உங்கள் எல்லோரிடமும் கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருக் கிறது. இந்த நாட்டில் பிரெஞ்ச் ஆகிய நாம் இருக்க வேண்டுமா? வெளியேற வேண்டுமா? இருக்க வேண்டும் என்பது உங்கள் பதில் எனில், நாங்கள் செய்கிற எதையும் கேள்வி கேட்காதீர்கள்’’ என்கிறார். பத்திரிகையாளர்கள் அமைதியாகிறார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த நிமிஷத்திலிருந்து கடுமை யாகச் சித்ரவதை செய்யப் படுகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாகப் போராளிகளும் நகரத்தில் கடுமை யான தாக்குதலை நடத்துகிறார்கள்.

செப்டம்பர் 24, 1957. ஜாபர் மறைந்திருக்கும் இடத்தை கர்னல் மேத்யூவின் ராணுவம் கண்டுபிடிக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனில் அந்தக் கட்டடத்தில் இருக் கும் அப்பாவி மக்களும் கொல்லப் படுவார்கள் என்று அறிவிக்கப்படு கிறது. அப்பாவி மக்களின் உயிரைக் காக்க, சரணடைகிறார் ஜாபர்.

இயக்கத்தில் எல்லோரும் பிடிபட்ட நிலையில், ஒரு அதிகாலையில் அலி தான் மறைந்திருக்கும் இடத்திலிருந்து தப்பிப்பதற்காகத் திட்டமிடுகிறான். ஆனால், திடீரென துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்க, அங்கு ராணுவம் நுழைகிறது. அலி யுடன் அங்கிருந்த நால்வரும் வேக மாகச் சுவருக்குள் இருக்கும் சின்ன மறைவிடத்தில் ஒளிந்துகொள்ள, அங்கிருக்கும் பெண் அவர்கள் ஒளிந்த இடத்தை சலவைக்கல்லால் மூடு கிறாள். இதையறிந்து சுவரின் அருகே வரும் கர்னல் மேத்யூ, அலி சரண் அடையாவிட்டால் அந்தக் கட்ட டமே தகர்க்கப்படும் என்று மிரட்டு கிறார். சுவரின் இருளுக்குள் தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கும் அலியின் நினைவுகள் நிறை வடைந்து, நிஜத்துக்கு வருகின்றன.

வெளியில் அந்த சுவரைச் சுற்றி ராணுவ வீரர்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைப் பொருத்து கிறார்கள். கர்னல் மேத்யூ வெளி யில் நின்று, ‘அலி... வெளியே வந்துவிடு. கடைசியாக இன்னும் 30 நொடி தருகிறேன். அதற்குள் சரண டைந்து விடு’ என்கிறார். உள்ளிருக்கும் அலி மன உறுதியுடன் இருக்கிறான். கட்டடத்தில் இருக்கும் அனைவரும் வெளியேற்றப்படுகிறார்கள். சுற்றி இருக்கும் வீடுகளில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் மேல் கூடி நின்று பிரார்த்திக்கிறார்கள். கடைசியாக வீட்டுக்குள் இருந்த ராணுவ வீரர்களும் வெளியே ஓடிவருகிறார்கள். அலியுடன் ஒளிந்திருக்கும் சிறுவன் அலியை இறுகக் கட்டிக்கொள்கிறான். கட்டடம் வெடித்துச் சிதறுகிறது. போராளிகளின் இயக்கத்தை அடியோடு ஒழித்துவிட்டோம் என்று கர்னல் மேத்யூவும் அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

டிசம்பர் 11, 1960. இரண்டு வருடம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்து, எப்படி உருவானது என்பதற்கான காரணமே இல்லாமல் திடீரென மக்கள் கலகம் வெடிக்கிறது. கிழிந்த துணிகளாலும், பழைய சட்டைகளா லும் ஒரே இரவில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கொடிகளுடன் சிறுவர்களும், பெண்களும் உள்ளிட்ட மக்கள் கூட்டம் எழுச்சியுடன் ஆர்ப் பரிக்கிறது. ராணுவம், பீரங்கி வண்டிகள், துப்பாக்கிச் சூடு எதனா லும் அடக்க முடியவில்லை. டிசம்பர் 21.1960 எங்கும் புகை மண்டலம். ஒரு அதிகாரி ஒலிவாங்கியுடன் ‘‘உங்க ளுக்கு என்னதான் வேண்டும்?’’ என்று கத்துகிறார். ‘‘சுதந்திரம்’’ என்ற குரல் கூட்டாக ஒலிக்க, கலையும் புகையி லிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் முன்வருகிறார்கள். ஜூலை 2, 1962&ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்து, அல்ஜீய நாடு உருவாகிறது. தங்கள் தேசியக் கொடியுடன் ஒரு பெண் சந்தோஷமாக நடனமாட, படம் நிறைவடைகிறது.

மக்கள் எழுச்சியை அந்த உணர்வு மாறாமல் பதிவுசெய்த விறுவிறுப்பான இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானவை. மூன்று பெண்கள் வெடிகுண்டை வைப்பதற்காகச் செல்லும் காட்சிகளும், வெடிகுண்டு வெடிப்பதற்கு முன் அந்த ஓட்டலில் இருக்கும் மனிதர்களின் முகபாவங் களைக் காட்டும் விதமும் இயக்குநரின் திறமைக்கான சாட்சிகள். படம் முழுக்க சிறுவர்களும், குழந்தைகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அற்புதமானது!

சுவருக்குள் ஒளிந்திருக்கும் போராளிகள் முகத்தில் ஒளிரும் ஒளியை அவர்களுக்குள் தகிக்கும் லட்சியத்தின் சுடராக உணர வைக்கும் ஒளிப்பதிவும், என்ய மொரிக்கானின் பின்னணி இசையும் அற்புதம். புரட்சி தோற்றுவிட்டதாக ஒரு ராணுவ வீரன் அறிவிக்கையில், அவனுக்குத் தெரியாமல் அந்த மைக்கை ஒரு சிறுவன் எடுத்துச் சென்று ‘நம் போராட்டம் வெல்லும்’ என்று சொன்னதும், கூடியிருந்த பெண்கள் குலவை யிட... மக்கள் எழுச்சியுறுகிற காட்சி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

உலக சினிமாவில் முக்கிய அரசியல் படமான இது, பிரான்ஸில் தடை செய்யப்பட்டது. வெனிஸ் விழாவில் ‘தங்கச் சிங்கம்’ விருதுபெற்ற இந்த பிரெஞ்சு மொழிப்படம் 1966&ல் வெளியானது. இதன் இயக்குநர் இத்தாலியைச் சேர்ந்த ஜில்லோ பொன்டேகார்வோ (நிவீறீறீஷீ றிஷீஸீtமீநீஷீக்ஷீஸ்ஷீ).

ஒருமுறை, ஜியாக்ரஃபிக் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சி பிரமிப்பாக இருந்தது. பலம் பொருந்திய காட்டெருமை ஒன்றை நூற்றுக்கணக்கான தேனீக்கள் மொய்த்துக் கொட்டுகின்றன. காட்டெருமை இறந்து தரையில் விழுகிறது.

மேலோட்டமான பார்வையில், அதிகாரம் பலம் பொருந்தியதுதான். ஆனால், ஒற்றுமையாக எழும் மக்கள் சக்தியின் முன் பாவம், அது என்ன செய்ய முடியும்?

‘‘இது என் சகோதரர்களின் கதை!’’

உலகெங்கிலும் ஒடுக்கப் படுகிற தேசிய இனங்களின் விடுதலைப்போருக்கு ஒரு விதையாக ஊன்றப்பட்டு இருக்கிறது இந்தப் படம். பிரெஞ்ச் காலனி ஆதிக்கத் திலிருந்து விடுதலை பெறப் போராடுகிற அல்ஜீயர்ஸ் என்கிற இனக் குழுவின் கதைதான் இது. இதை அல்ஜீ யர்ஸின் படமாக மட்டுமே பார்க்க முடியாது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடிய அயர்லாந்து மக்களின் போராட்டத்துக்கும், இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிற பாலஸ் தீனியர்களின் போராட்டத்துக்கும், எனது சகோதரர்கள் சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிற ஈழ விடுதலைப் போருக்கும் இந்தக் கதை பொருந்தும்.

ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது; மக்கள் விடுதலை வரலாறுகளிலோ போராளிகளின் குருதியும், அடிமைப்பட்ட மக்களின் கண்ணீரும் கலந்து ஓடுகிறது. விடுதலை என்பதன் உண்மையான அர்த்தம், மக்களிடமிருந்து உருவாகிற போராளிகளால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்தப் படத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன்.மீண்டும் மீண்டும் விழுகிற அடியைப் பொறுத்துக்கொள்கிற வரைதான் மனதில் பயம்; கண்களில் மிரட்சி. திமிறி எழுந்துவிட்டாலோ, மரணம் மட்டும்தான் எதிர்காலத்தாய கத்துக்கான விதை. ஏனென்றால், நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால், உயிரை விட ஒரு நாடு வேண்டாமா?

‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று அதிகாரி கேட்க, ‘‘விடுதலை’’ என மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கிறபோது, அந்தக் குரல் ஈழத்திலிருந்து கேட்பதாகத்தான் எனக்குப் படுகிறது. இந்தப் படம் 90 சதவிகிதம் ஈழப் பிரச்னையோடும் போராட் டத்தோடும் பொருந்திப்போகிறது. அதனால் உணர்வுபூர்வமாக இந்தப் படத்தோடு என்னால் ஒன்ற முடிகிறது! & சீமான்

‘புரட்சி’ இயக்குநர்!

இத்தாலியில், யூத தம்பதிகளுக்கு மகனாக 1919 நவம்பர் 19--_ம் தேதி பிறந்தவர் பொன்டே கார்வோ. வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தவர் இவர். இத்தாலியில் பாசிஸம் அதிகாரத்துக்கு வந்த காலங்களில், புரட்சிகர இயக்கங்களோடு தொடர்பு உடையவராக இருந்தார். வேதியியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பத்திரிகையாளராகத் தன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். ஐந்து திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், உலக சினிமா வரலாற்றில் தனக்கென அழியாத தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் இவர்.

இத்தாலிய பாசிஸ சட்டங்களுக்குக் கட்டுப்படாமல் அங்கிருந்து தப்பி ஓடி பிரான்ஸில் தஞ்சம் அடைந்தவர் என்பதாலோ என்னவோ, அடக்குமுறைக்கு எதிரான படங்களாகவே இவருடைய படங்கள் இருக்கின்றன. ‘‘பொழுதுபோக்குப் படங்கள் நம் தரத்தைக் குறைப்பவை. வேகமான எடிட்டிங்கும், விதவிதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ§ம் இருப்பதால் கமர்ஷியல் படங்கள் மிகவும் குழந்தைத்தனமானவையாகத் தெரிகின்றன. அவை நமக்கு எதையுமே சொல்வதில்லை’’ என்கிற பொன்டே கார்வோ, இந்த வருடம் அக்டோபர் மாதம், ரோம் நகரில் இறந்துபோனார்.

http://www.vikatan.com/

Welcome_to_AV.htm

Edited by vasanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வசந்தன்.

சுதந்திரத்தின் வலியை சொல்லிக்கொடுக்கும் வரிகள்.

அதிகாரத்தை வைத்திருக்கும் பயங்கரவாதத்துக்கு,

ஆதிக்கவெறி அப்பாவி இரத்தங்களில் வேள்வி செய்கிறது.

வெளிஉலகின் காதுகளுக்கு பயங்கராவாதம் வேட்டையாடப்படுகிறது

என்று பூ சுத்துகிறார்கள்.

வியட்நாமுக்குள் வால்நறுக்கப்பட்ட பயங்கரவாதம் ஒன்று,

மற்றவன் நாட்டுக்குள் திரியும் பயங்கரவாதம் பற்றி, அக்கறை: முதலைக் கண்ணீர்

வடிக்கிறது.

இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர் அதிகாரத்தின் சட்டம், சுதந்திரப்போராட்டத்தை

பயங்கரவாதம் என்று தீர்ப்பு எழுதி தூக்கில் தொங்கவிட்டது.

இதுதான் நடைமுறை; போராட்டத்துக்கு வைக்கும் பெயர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.