Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடாத கீதம்: தமிழ் பேசும் மக்களின் தேச உணர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடாத கீதம்: தமிழ் பேசும் மக்களின் தேச உணர்வு

மொஹமட் பாதுஷா   / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 08:51

image_66c1e89691.jpgஇரண்டு விடயங்கள் பற்றிக் குறிப்பாகப் பேச வேண்டியிருக்கின்றது.   

ஒன்று, இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை, பெரும்பான்மை இனமும் பெருந்தேசியமும் ஆட்சியாளர்களும் இலங்கைத் தேசத்தின் மக்களாகப் பார்க்க வேண்டிய கடப்பாடு பற்றியதாகும்.   

இரண்டாவது, சிறுபான்மைச் சமூகங்கள், ‘இலங்கையர்’ என்ற பொதுமைப்பாட்டுக்குள், தம்மைச் சரியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதாகும்.   

ஏனெனில், வெறுமனே தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதால் மாத்திரம், ஒரு நாட்டின் மீதான தேசபக்தி உருவாகி விடுவதில்லை.   

அதுபோலவே, எல்லா மக்களையும் சமமாக மதிக்கின்றோம் என்று, சிங்கள ஆட்சியாளர்கள் அறிக்கை விட்டால் மாத்திரம், இன சமத்துவமும் அதன் தொடர்ச்சியாக, இன ஐக்கியமும் பேணப்பட்டு விடும் என்று யாரும் சொல்ல முடியாது. சரியான பொறிமுறைகளின் ஊடாகவும், மக்களின் மனங்களில் இருந்து இயல்பாகவும் அது நடைமுறைக்கு வந்தாலொழிய அது சாத்தியமில்லை.  

எனவே, பெரும்பான்மை மக்களும் சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை, நிஜத்தில் சரிசமமாக மதிக்கின்ற சமகாலத்தில், சிறுபான்மைச் சமூகங்களும் தம்முடைய தேச உணர்வை மேம்படுத்த வேண்டியிருக்கின்றது.   

முஸ்லிம்கள் தம்மை அரேபிய பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதையும், தமிழர்கள் திராவிட வரலாற்றைக் கொண்டவர்கள் என்பதையும் முன்னிலைப்படுத்தி, வெளிக்காட்டும் பாங்கில் செயற்படாது, ‘இலங்கையர்’ என்ற அடையாளத்துக்கு முன்னுரிமை வழங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.  

இப்போது, தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக எண்ணத் தோன்றும் விதத்திலான, பல சம்வங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வடக்கில், பெயர்ப் பலகையில் தமிழுக்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்பட்டமை, 72ஆவது சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமை போன்ற விடயங்கள், தமிழ் பேசும் சமூகங்களால் உற்று நோக்கப்பட்டுள்ளன.  தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதான உணர்வு மேலோங்குவதற்கு, இச்சம்பவங்கள் வித்திட்டுள்ளன எனலாம்.  

இதையடுத்துப் பிரதமர் அலுவலகம், இதுபற்றிய விளக்கத்தை அளித்து, ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், ‘தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கோசமானது, குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது.  ஜனாதிபதியின் உரையின் சுருக்க மொழிபெயர்ப்பு, எட்டு நிமிடங்களுக்கு இடம்பெற்றது. தேசிய கீதம் பாடியிருந்தால், அதற்காக மூன்று நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இவ்வுரையின் தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் எட்டு நிமிடங்கள் தமிழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது சிறந்ததொரு நல்லிணக்கமாகும்’ என்று பிரதமர் அலுவலகம் விளக்கமளித்து இருக்கின்றது.  

உண்மையாகப் பார்த்தால், எல்லாத் தேசிய நிகழ்வுகளிலும் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைத்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த காலங்களில், தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய தடவைகள் மாத்திரமே, தேசிய கீதம் தமிழில் ஒலித்திருக்கின்றது. எனவே, அந்தக் கோணத்தில் இதைச் சாதாரண விடயமாகவே எடுத்துக் கொள்ளலாம் என்று வைத்துக் கொள்வோம்.  

ஆனால், இலங்கையில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் இருக்கத்தக்கதாக, அதை, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் அங்கிகரித்திருக்கின்ற பின்னணியில், திடுதிடுப்பென தமிழில் பாடத் தேவையில்லை என்ற கருத்துகள் முன்வைக்கப்படுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.   

இந்தப் பின்புலத்தில், இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளின்போது, தமிழ் மொழிமூல தேசிய கீதம் பாடப்படாமையே கடுமையான விமர்சனங்களுக்குக் காரணமாகியுள்ளது எனலாம்.  

இது பெரிய விவகாரமோ தலையாய பிரச்சினையோ அல்ல. அந்தக் கோணத்தில் இப்பத்தி இவ்விவகாரத்தை நோக்கவும் இல்லை. கடந்தகால அனுபவங்களில் இருந்து இதனை நோக்கும் போது, இன்னுமொரு வகையான பெரும் நெருக்கடிக்கு, இது இட்டுச் சென்றுவிடுமோ என்ற கவலை, சிறுபான்மை மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கின்றது.  

1956இல் சிங்களம் மட்டும் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட களநிலை மாற்றங்கள், அதற்குப் பின்னர், “இது சிங்களவரது நாடு” எனப் பல பெருந்தேசியத் தலைவர்களால் சொல்லப்பட்டமை, முஸ்லிம்களை வந்தேறு குடிகளாகவும் தமிழர்களை இந்தியாவில் இருந்து வந்தவர்கள் போலவும் நையாண்டி செய்யும் விதத்திலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கருத்துகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, இந்தப் போக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் சந்தோசப்படும் வகையில் அமையவில்லை என்பதை, அரசாங்கம் கவனிக்க வேண்டும்.  

இலங்கையின் தேசிய கீதத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பிருக்கின்றது. இலங்கையின் தேசிய கீதத்தை ஆனந்தசமரகோன் என்பவரே சுயமாக எழுதினார் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் ஆகும்.   

இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றிய சிறுபான்மையினக் கவிஞரான, உலகப் புகழ்பெற்ற ரவிந்திரநாத் தாகூரே இலங்கையின் தேசிய கீதத்தின் முக்கிய முதல் வரிகளை எழுதியதாக ஒரு தகவல் இருக்கின்றது. அவரிடம் சிஷ்யராக இருந்த இசைக் கலைஞரான ஆனந்த சமரகோனுக்காக, ரவிந்திரநாத் தாகூர் ‘நம நம ஸ்ரீ லங்கா மாதா’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலைத் தனது தாய்மொழியான பெங்காலியில் எழுதிக் கொடுத்துள்ளார்.  

இலங்கைக்கு திரும்பிய ஆனந்த சமரகோன் அந்த வரிகளை ‘நமோ நமோ மாதா....’ என்ற ஆரம்ப வரிகளுடன் சிங்களத்துக்கு மொழி பெயர்த்து, பாடலாக்கியதாகக் கூறப்படுகின்றது.   

அதன்பின்னர், அப்பாடல் முதன்முதலாக மியூசியஸ் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பாடப்பட்டது. இருப்பினும், ஒரு தேசிய கீதமாக அன்றி, தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாடலாகவே அன்று அது ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலுக்கு தேசியகீத அங்கிகாரம், 1951 நவம்பர் 22ஆம் திகதியே கிடைத்தது.  

எனவே, இதிலிருந்து சில நிதர்சனங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. அதாவது, இலங்கையின் தேசிய கீதத்துக்குப் பின்னால், தாகூர் எனும் ஒரு சிறுபான்மையினப் பாடலாசிரியரின் உழைப்பும் இருக்கின்றது.   

அதேபோல், இந்தியாவில், பெரும்பான்மை மக்களால் பேசப்படுகின்ற ஹிந்தி மொழியிலன்றி, இந்தியாவில் சிறுபான்மை மக்களின் மொழியில் ஒன்றாகிய பெங்காலியிலேயே தேசிய கீதம் இன்றும் இசைக்கப்படுகின்றது.  

இலங்கையில் சிங்கள மொழியிலான தேசிய கீதத்தை, புலவர் மு. நல்லதம்பி தமிழுக்கு மொழி பெயர்த்தார். இலங்கையின் தேசிய கீதம், இரு மொழிகளில் பாடப்படுவதை, 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அங்கிகரித்திருக்கின்றது. அதன் ஐந்தாவது சரத்தின் 3ஆம் உப பிரிவு, இசை தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைவாகவே தமிழ்த் தேசிய கீதத்தின் வரிகளும் இசையும் அமைந்துள்ளன.   

தமிழிலான தேசிய கீதம் என்பது, சிங்கள வரிகளின் மொழிபெயர்ப்பே அன்றி, அவை புலவர் மு. நல்லதம்பியின் சொந்த வரிகள் அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.  

இலங்கையின் அரசாங்கங்களில் நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக, அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். இனங்களுக்கு இடையில் ஐக்கியம் உருவாக வேண்டும் என்ற கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அரச கரும மொழியாகத் தமிழும் காணப்படுவதுடன், அரச அதிகாரிகள் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெறுவதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், இலங்கையில் சுமார் 40 இலட்சம் பேர், தமிழ் பேசும் மக்களாக இருக்கின்றனர். எனவே, தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் வகையிலான எந்தச் செயற்பாடுகளும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.   

மொழிப் புறக்கணிப்பைச் செய்து கொண்டு, அதற்குச் சமாந்திரமாக இன நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முனைவார்கள் என்றால், அது கல்லில் நார் உரிக்கின்ற வேலையாகவே இருக்கும்.  
இங்கிருக்கின்ற பிரச்சினை யாதென்றால், உண்மையில் எல்லாச் சிறிய பெரிய நிகழ்வுகளிலும் தேசிய கீதம் கட்டாயமாகத் தமிழில் பாடப்பட வேண்டும் என்பதல்ல; மாறாக, விரும்பியவர்கள், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்குச் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும் என்பதாகும்.   

அந்த அடிப்படையில், அரச நிர்வாகத்தில் தமிழ் மொழியைப் புறக்கணித்தல், தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில், நல்லிணகத்தை விரும்பும் அரசாங்கம் ஈடுபடக் கூடாது.  

இதேவேளை, இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. அதாவது, முஸ்லிம், தமிழ் சமூகங்கள், தங்களது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் விதமும் ஒரு குடையின் கீழ் இலங்கையராக வாழ்வதும் அவசியமாக இருக்கின்றது.   

பெருந்தேசியமும் சிங்கள மக்களும் சிறுபான்மையினரின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்பது போல, சிங்கள மக்களின் மனவோட்டத்தைப் புரிந்து செயற்பட வேண்டிய பொறுப்பு, தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கின்றது.  

முஸ்லிம்களும் தமிழர்களும் இந்த நாட்டு மக்கள்தான். அவர்களுக்கும் இந்த நாட்டில் உரிமை இருக்கின்றது என்பதை, அரசாங்கமும் சிங்களத் தேசியமும் சொல், செயல் இரண்டிலும் வெளிப்படுத்த வேண்டும்.   

தமிழ் விடுதலை இயக்கங்களின்  தாக்குதல்கள்; அதேபோல, முஸ்லிம் பெயர்தாங்கிகளின் ‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதல்கள் ஆகியவற்றைப் பொதுவான, சர்வசாதாரண தமிழ், முஸ்லிம் மக்களின் நடவடிக்கைகளில் இருந்து வேறுபடுத்தி நோக்க வேண்டியுள்ளது.  

இந்த நாட்டில் முஸ்லிம்கள் தேசத் துரோகிகளல்ல; வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய முஸ்லிம்களில் சிலர், அவர்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டுள்ள வரலாற்றை யாரும் மறந்து விடக் கூடாது. இன்று வரையும் முஸ்லிம் சமூகம், அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து வருவதுடன், நாட்டின் இறைமைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும் முன்னிற்கின்றது.   

சுதந்திர காலத்தில் தமிழ்ப் புத்திஜீவிகள் மட்டுமன்றி, சாதாரண தமிழ் மக்களும் அவ்வகை சார்ந்தவர்கள் என்றே சொல்லலாம். ஆனால், எல்லாச் சமூகங்களிலும் விதிவிலக்கான பேர்வழிகள் உள்ளனர்.  

ஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் தமது தேச உணர்வையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டிய ஒரு தேவையுள்ளது.   

தேசிய கீதம், தமிழிலா, சிங்களத்திலா ஒலிக்கின்றது என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால், தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த முதலில் பழகிக் கொள்ள வேண்டும்.  

அத்துடன் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற உப அடையாளங்கள் எல்லாவற்றையும் சுற்றி, ஒரு பெரிய வட்டமாக ஒவ்வொரு விடயங்களிலும் ‘இலங்கையர்’ என்ற அடையாளம் இருக்கின்றது. எனவே, அதனை முன்னிறுத்த வேண்டும்.   

‘இது சிங்களவரின் நாடுதானே; நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும், அதற்கு ஏன் கட்டுப்பட வேண்டும்? என்று முட்டாள்தனமாகக் கதைத்து விட்டு, நமக்கு நெருக்குவாரங்கள் எழுகின்ற வேளையில், நாமும் இலங்கைப் பிரஜைகளே என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவதைச் சிறுபான்மைச் சமூகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  

எனவே, இது ஓர் இருபக்கச் செயன்முறையாகும். மொழியுரிமை உட்பட சிறுபான்மை சமூகங்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் உறுதிப்படுத்துவதுடன் சிங்கள சமூகத்தின் மத்தியில் அதுபற்றிய தெளிவையும் ஏற்படுத்துவது அவசியமாகும்.   

சமகாலத்தில், முஸ்லிம், தமிழ் சமூகங்களும் ‘இலங்கையர்’ என்ற பொது அடையாளத்தை முன்னிறுத்தப் பழகிக்க கொள்ள வேண்டியுள்ளது.  

சர்வதேச நெருக்கடிகள் குழுவின்  முஸ்லிம்கள் பற்றிய அறிக்கை

பெல்ஜியத்தின், பிரசல்ஸ் நகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும், ‘சர்வதேச நெருக்கடிகள் குழு’ அண்மையில் வெளியிட்டுள்ள கண்காணிப்புப் பட்­யல் - 2020 அறிக்கையில், இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக, முக்கிய விடயங்களைச் சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றது.  

மனித உரிமைகளைப் பாதுகாக்க, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள இக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான மாற்றங்களுக்கு அமைவாக, இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளது.  

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தோன்­றி­யுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளில், சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் ஆபத்துகள் குறித்து இதில் ஆராயப்பட்டுள்ளது. போருக்குப் பின்னரான நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல்,  ஐ.நா மனித உரி­மைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்­றியம் ஆகிய­வற்­றுக்கு வழங்கப்பட்ட வாக்குறு­திகள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகளை அவதானிக்க முடிவதாக நெருக்கடிகள் குழு தெரிவித்துள்ளது.  

குறிப்பாக, முஸ்லிம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பாகுபாடான வேலைத் திட்டங்களுக்கோ, தீவிரமயமாதலைக் குறைத்தல் அல்லது புனர்வாழ்வளித்தல் எனும் போர்வையிலான ஆனால், முஸ்லிம்களை இலக்குவைத்த திட்டமிட்ட வேலைத் திட்டங்களுக்கோ நிதியளிப்பதை, ஐரோப்பிய ஒன்­றியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரை செய்திருக்கின்றது.  

அத்துடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமை, உத்தேச தேர்தல் சட்ட திருத்தங்களால் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பாகவும் நெருக்கடிகள் குழு இவ்வறிக்கையில் பரிந்துரை செய்திருக்கின்றது.  

இலங்கையரின் பிரச்சினையையும் உள்ளக விவகாரத்தையும் இங்கிருக்கின்ற மக்களே பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் வெளிநாட்டுத் தலையீடுகள் அவசியமற்றவை என்ற நிலைப்பாட்டிலேயே பொதுவாக அரசாங்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வாறான ஒரு தோற்றப்பாடு ஏற்படாத வண்ணம் சிறுபான்மை இன மக்களை நடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது.  

2020ஆம் ஆண்டில் நெருக்கடிகள், வன்முறைகள் ஏற்படலாம் எனக் கருதப்படும் நாடுகளை உள்ளடக்கி, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இது விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.  

முன்னைய காலங்களில் தமிழ் மக்கள் தொடர்பான பல அறிக்கைகளை ஐ.நா. சபை, ஐரோப்பிய ஒன்றியம், மன்னிப்புச் சபை, நெருக்கடிகள் குழு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வெளியிட்டிருந்தன. ஆனால், அநேக ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அதற்குச் சில நியாயமான காரணங்களும் இல்லாமலில்லை.  

எவ்வாறிருப்பினும், தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்த்து, நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த தரப்பினரும் இவ்வாறான அறிக்கைகளை அலட்சியம் செய்யாது, நமது பக்கத்தில் தவறுகளைத் திருத்துவதே சாலப் பொருத்தமானதாக அமையும். இவ்வாறு கூறுவதன் அர்த்தம், சர்வதேசத்துக்கு அடிபணிவது என்றாகாது.  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாடாத-கீதம்-தமிழ்-பேசும்-மக்களின்-தேச-உணர்வு/91-245132

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.