Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவின் பிடியில் தலைநகர் சென்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவின் பிடியில் தலைநகர் சென்னை

எம். காசிநாதன்   / 2020 ஜூன் 08

தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடரில், சிக்கித் தவிக்கும் முக்கிய மாநகரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள, மக்கள், தமது அன்றாட கருமங்களில் ஈடுபடுவதற்கு, 'சாரைசாரை'யாக வீடுகளில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தாலும், தங்களின் உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றமும் பீதியும், அவர்களின் 'முகக்கவசங்களில்' எதிரொலிக்கிறது.

30.6.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தில், அனேகமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொருவரும், பின்பற்ற வேண்டிய தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசின் சார்பில் விளம்பரம் செய்யப்படுகின்றன.

ஆனால், சென்னை மாநகரின் வடசென்னைப் பகுதி மட்டுமின்றி, தென்சென்னைப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று, தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் 30,152 பேர் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருந்தாலும், இந்த எண்ணிக்கையில் சென்னை மட்டுமே மூன்றில் இரண்டு பங்கு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறது. சென்னையில் ஜூன் ஆறாம் திகதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,993 ஆகும். இவர்களில், இறந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆகும்.

தமிழ்நாட்டில், முதலிடத்தில் சென்னை மாநகரமும் இரண்டாவது இடத்தில் 1,719 கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் செங்கல்பட்டு மாவட்டமும் மூன்றாவது இடத்தில் 1,274 வைரஸ் தொற்றாளர்களுடன் திருவள்ளூர் மாவட்டமும் காணப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், தமிழ்நாட்டில் ஒன்றுபட்ட சென்னை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது.

சென்னை மாநகரத்துக்குச் 'சோதனை மேல் சோதனை'யாகத்தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

அரசாங்கத்தின் எந்த உத்தரவுக்கும் உடனடியாக அடிபணியாத மக்களின் நடவடிக்கைகள் ஒரு காரணமாக இருந்தாலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் ஏற்பட்ட தொற்று, கோயம்பேடு காய்கறிச் சந்தையால் தோன்றிய தொற்று ஆகிய இரண்டும், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டுக்குப் போனவர்கள், திரும்பி வந்தவர்கள் என்று, உரிய விவரங்கள் அரசாங்கத்தின் கையில் உடனடியாகக் கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கண்டுபிடித்து அடையாளம் கண்டு, தனிமைப்படுத்துவது சிரமமாக இருந்தது.

தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை உயர்வதற்கு முதற்காரணியாக இருந்த இந்த விடயத்தை, தொற்றுநோய் என்ற அடிப்படையில் பார்க்காமல், அதற்கு மதச்சாயம் பூசவே, பின்னர் அது பெரிய அரசியல் பிரச்சினையானது. ஆனால், அரசாங்கத்தின் சார்பில் மதத் தலைவர்கள் கூட்டம் நடத்தி, ஒருவழியாக அந்தப் பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டது. இருந்தபோதிலும், பரவிய கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்கப் பல நாள்கள் நீடித்தன.

image_4d3e7671b0.jpgஇதிலிருந்து மீண்டு வருவதற்குள், கோயம்பேடு சந்தைப் பிரச்சினை தலை தூக்கியது. ஒட்டுமொத்த சென்னை மாநகருக்கும், ஏன் அண்டை மாவட்டங்களுக்குக் கூட, காய்கறிச் சந்தையாகத் திகழும் இந்தச் சந்தையில் 4,000க்கும் மேற்பட்ட காய்கறி, பழம், பூ ஆகிய கடைகள் காணப்படுகின்றன.

சென்னையின் அடையாளங்கள், 'மெரினா' கடற்கரை, 'சென்ரல்' ரயில் நிலையம், 'எக்மோர்' ரயில் நிலையம் போன்றவை என்றால்,  சென்னையின் இன்னோர் அடையாளமாக இந்தக் 'கோயம்பேடு' சந்தையை எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பிரபலமான சந்தை இதுவாகும். ஆரம்பத்தில் இருந்தே, எவ்வித 'ஆக்கபூர்வமான' கட்டுப்பாடுகளும் இன்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில், 'ஊரடங்குக்குள் ஓர் ஊரடங்கு' அறிவிக்கப்படவே, திடீரென்று கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் கேந்திர நிலையமாக மாறியது. இந்தச் சந்தையில், கொரோனா வைரஸ் தொற்று முதலில் ஏப்ரல் 27ஆம் திகதி கண்டறியப்பட்டது. பிறகுதான், அரசாங்கம் விழித்துக் கொண்டு, கோயம்பேடு சந்தையை முடக்கியது.

ஆனாலும், அந்தச் சந்தை மூலம் ஏற்பட்டு விட்ட தொற்றுப் பரவலை, உடனடியாகத் தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்திருந்த பல மாவட்டங்களில்  புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள். கோயம்பேடு சந்தை, வைரஸ் தொற்றைப் பரப்பிய தீவிரத்தை உணர்ந்த மாநில ஆளுநர், முதலமைச்சரை அழைத்துப் பேச வேண்டிய சூழல் எழுந்தது.

இந்த நெருக்கடிக்கு, மது விற்றனை செய்யும் கடைகள்' திறக்கப்பட்டதும் இன்னொரு காரணியாக அமைந்தது. அதுவரை, கொரோனா வைரஸ் பரவுகையைத் தடுக்கும் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த சென்னை மாநகராட்சி ஆணையாளரையும் யரையும் தாண்டி, சிறப்பு அதிகாரிகள் பலர் பொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவை என்பதை, இதன் பிறகுதான் அரசாங்கம் உணரத் தொடங்கியது. சுனாமி காலத்தில், பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரியாகச் செயற்பட்டுப் பெயர் வாங்கிய இராதாகிருஷ்ணன், சென்னை மாநகரத்துக்கு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூடுதல் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள், சென்னை மாநகரத்தின் பல்வேறு மண்டலங்களுக்கு, பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள்.

இதன் பின்னர், கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள், சென்னை மாநகரத்துக்குள் சூடு பிடித்தாலும் ஏற்கெனவே பரவியதைத் தடுப்பதற்கு, இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 15 மண்டலங்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஐந்து மாநில அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

தற்போது, சென்னை மாநகரத்தின் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள், இந்த ஐந்து மாநில அமைச்சர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர், தமிழ்நாட்டில் மார்ச் மாதம் ஏழாம் திகதி கண்டறியப்பட்டார். அதே மாதத்தில் 19 ஆம் திகதி முதலாவது இறப்புச் சம்பவமும் ஏற்பட்டது. மார்ச் மாதம் முதல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில், கொரோனா வைரஸ் பரவுகை தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் காலகட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  சில நாள்கள் மட்டுமே, நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயற்பட்டார். பின்னர், திடீரென்று அவர் ஒரங்கட்டப்பட்டு, தற்போது மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறார். அரசாஙகத்துக்குச் சார்பான விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு சில நேரங்களில், ''சமூகப் பரவல் என்ற சங்கிலித் தொடரை, அறுத்து எறிந்து விட்டோம்'' என்றெல்லாம் பேட்டியளித்தார்; பின்னர், அவரும் அமைதியானார். குறிப்பாக, அவரது தொகுதி இருக்கும் ராயபுரம் மண்டலம், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில், சென்னையில் முதலாவது மண்டலமாக இருக்கிறது மாறியது.

இதுபோன்ற நிலையில்தான், தற்போது முதல் முறையாக ஜூன் ஐந்தாம் திகதி, மாநிலத்தில் உள்ள மற்ற அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களுக்கும் சென்னையின் கொரோனா வைரஸ் தடுப்பு பொறுப்பு அதிகாரிகள். ஆனால், மாநகராட்சிகளின் நிர்வாகத்துக்கு தொடர்புடைய உள்ளுராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்தக் குழுவில் இடம்பெறாதது, முதலமைச்சரின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில், ஒரு தனித்துவமான முயற்சியாகத் தெரிகிறது.

அதேநேரத்தில், அ.தி.மு.க அமைச்சரவைக்குள் உள்ள மற்றவர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அவர்களையும் இந்தப் பணியில் பயன்படுத்திட வேண்டும் என்ற சிந்தனை, மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஆட்சியின் தலைவரான முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தளவுக்குச் சென்னை மாநகரத்தில், கொரோனா வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரகாலத்துக்குள், 1,000கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது 1,500ஐத் தாண்டும் நிலைக்கு வந்துவிட்டது.

''ஜூலையில் சென்னையில் 1.5 இலட்சம் பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். அக்டோபர் மாதத்தில், இந்த நோயின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்'' என்று, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக குழு, அறிக்கை வெளியிட்டிருப்பதும், ''இப்போதுள்ள கொரோனா வைரஸ், வீரியம் அதிகம் உள்ளதாக இருக்கிறது' என்று, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி அறிவித்திருப்பதும், மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

image_fcadbe0b3e.jpgசமூகப் பரவல் இருக்கிறதா, இல்லையா என்பது ஒருபுறம் விவாதத்துக்குரிய கேள்வியாகக் காணப்பட்டாலும், வடசென்னைப் பகுதியே, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதும் ஒரே தெருவில் நோய் பாதிப்புகள் அதிக எண்ணிக்கையிலும் இருக்கிறது. ஆனால், ''மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவதால், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது'' என்று, மாநகர் சென்னையின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் இராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

''மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான், நோயைக் கட்டுப்படுத்த முடியும்'' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை ஊட்டுகிறார். ஆனால், ''கொரோனா வைரஸ் வீரியம், அதிகமாக இருக்கிறது'' என்று, சென்னையிலிருந்து 526 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏன், எச்சரிக்கை மணி அடிக்கிறார்? அனைவர் மனதிலும், இது ஒருவகைப் பீதியை உருவாக்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றில், சென்னை மாநகருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, எப்போது தீர்க்கப்படும், எப்படித் தீர்க்கப்படும், எப்போது மக்கள் சுதந்திரமாகப் பயமின்றித் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்ற கேள்விகள், இப்போது அனைவர் மனதிலும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனாவின்-பிடியில்-தலைநகர்-சென்னை/91-251527

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.