Jump to content

மடிக்கணினி: துள்ளித் திரிந்த காலம், இன்று படுத்து குறட்டை விடும் காலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
135A6E06-215E-4EF0-B860-BFF8EEFBF32C.jpeg
 

 

அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது.

 அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் கணினியை 10,000-20,000க்குள் வாங்கினால் அசல் விண்டோஸ் இயங்குதளத்தை எல்லாம் நிறுவ மாட்டார்கள். நகல் தான். அதுவும் சமர்த்தாக வேலை செய்யும். தாயிடம் பாலருந்திய நாய்க்குட்டிகளைப் போல துள்ளித் திரியும். நான் அப்போது வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் இப்படியான நகல் இயங்குதள கணினிகளே அதிகம் இருந்தன. எப்போதாவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஆள் வருவார்கள். அப்போது நகல் கணினிகளை அவசரமாக ஒரு தளத்தில் வைத்து பூட்டி விட்டு எங்களை அசல் இயங்குதள கணினிகள் உள்ள பணியிடத்துக்கு மாற்றுவார்கள். இப்போது மடிக்கணினிகளுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் இயங்குதளம் வந்து விடுகிறது. வெர்ட், எக்ஸல் போன்ற செயலிகளை பயன்படுத்த மட்டும் பணம் செலுத்த வேண்டும். ஆனால் இங்கு தான் ஒரு புதிய பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த கணினிகள் கச்சிதமாக இயங்குதளத்துடன் பொருந்துவதில்லை. அப்பா சட்டையை மகன் அணிவது போலத்தான் இந்த மடிக்கணினிகள் இயங்குதளத்தை ஏற்றுக் கொள்கின்றன. பொருத்தப்பாடின்மை இவை சரிவர இயங்காததற்கு ஒரு காரணம் என நினைக்கிறேன்.

 அடுத்து, கடந்த சில ஆண்டுகளில் விண்டோஸ் இயங்குதளத்திற்கு இற்றைகள் (updates)வந்தபடியே இருக்கின்றன. ஒவ்வொன்றும் கணினியை தவறாது திக்கித் திணற வைக்கிறது. பாதுகாப்பு கருதி இந்த அப்டேட்டுகளை நிறுவுவது அவசியம் எனக் கூறினாலும் அவை செயல்பாட்டுத் திறனை வெகுவாக பாதிக்கின்றன. சில அரசியல் மேடைகளில் மாலை மேல் மாலையாகப் போட்டு சம்மந்தப்பட்டவரின் தோளும் முகமும் தெரியாதபடி பண்ணுவார்களே அப்படி இருக்கிறது அப்டேட்டுகளின் வேலை. இன்றைய கணினிகள் எப்போதும் இணையத்தொடர்பில் இருப்பதால் போலி இயங்குதளம், வெர்ட் எதுவும் சாத்தியமில்லை. கண்டுபிடித்து ஆப்படித்து விடுவார்கள். அப்டேட் செய்தாலும் சிக்கல், செய்யாவிட்டாலும் வம்பு.

 

இதற்கு அடுத்து, ஒரு சிறிய பைக்கில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒட்டிகொண்டு பயணிப்பதைப் போல இன்றைய யுகத்தின் கணினித் தேவைகளை சமாளிக்க விண்டோஸ் மூச்சு வாங்குகின்றன. முன்பு எப்போதாவது கணினி தொடர்பு கிடைக்கும் போது ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம், தரவிறக்கம் பண்ணி வைத்ததை படிப்போம், எழுதுவோம். இன்று ஒட்டுமொத்த அலுவலகமும் ஒரு மடிக்கணினிக்குள் வந்து விட்டது. இன்று கணினியின் சுமைகள் பத்து மடங்காவது அதிகரித்து விட்டது. எட்டு ஜிபி ரேம் இருந்தாலும் போதவில்லை, 16ஆக மாற்றினால் தான் வேகமாக இருக்கும் என ஒரு நண்பர் தன் மடிக்கணினியை பற்றி சொல்லுகிறார்.

 

தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில், பின்னணியில் மூன்றாம் தரப்பு மென்பொருட்கள் ஓடுவது, டிஸ்கில் உள்ள இடத்தை மென்பொருட்கள் பயன்படுத்தும் விதம், தெரியாமல் நாமே உள்ளே அனுமதிக்கிற மால்வேர், இன்றைய பிரவுஸர்கள் ரொம்ப சிக்கலானவையாக மாறி உள்ளது என விண்டோஸின் காசநோய்க்கு பல காரணங்களை சொல்லுகிறார்கள். (ஆனால் ஆச்சரியமாக கையடக்க ஆண்டிரய்ட் கருவிகள் இப்பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கின்றன.)

 

 நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரே ஒரு குறிப்பேடு போதுமானதாக இருந்தது. ரெண்டாயிரத்தில் தமிழக அரசு மடிக்கணினியை கொடுத்த போது மாணவர்களுக்கு அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை என்பதை நேரில் கண்டேன். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல - ஒரு மடிக்கணினி இல்லாமல் நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக வெற்றி பெற முடியாது. மின்னூல்களை, இணையதளங்களை படிக்க, அசைஸ்ன்மெண்டுகள் செய்ய, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மடிக்கணினி அவசியமாகி விட்டது. என்னுடைய கல்லூரியில், படிக்கும் நேரத்தில் மடிக்கணினி இல்லாத ஒரு மாணவரைக் கூட பார்க்க முடியாது. அன்று பத்து ரூபாய் குறிப்பேட்டுடன், சில ஜெராக்ஸ் பிரதிகளுடன் படிப்பை முடிக்கலாம். இன்று அதற்கு குறைந்தது 50,000 ரூ மடிக்கணினி அவசியம். (அதுவும் அவ்வப்போது மூச்சிரைத்தபடியே ஓடும் என்றால் பெரும்பாடு தான்.) ஆனால் எத்தனை மத்தியவர்க்க, ஏழை மாணவர்களால் வாங்கி பயன்படுத்த முடியும்?

 

எனக்கு நண்பரின் 70,000 ரூ மடிக்கணினியை பார்த்த போது நான் 2013இல் 17000 ரூபாய்க்கு வாங்கிய ஒரு சிறிய மடிக்கணி நினைவுக்கு வந்தது. அதை நான் தினமும் குறைந்தது 10 மணிநேரமாவது பயன்படுத்தினேன். யுடியூப், பேஸ்புக் என அதை விரட்டினேன். படங்களை தரவிறக்கி பார்த்தேன். நகல் இயங்குதளத்தில் நிறுவப்பட்ட நகல் வெட்டில் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினேன். அதன் மின்கலன் திறன் குறைவு தான். ஆனால் ஒருமுறை கூட அது “மூச்சு வாங்குதப்பா, நெஞ்சு வலிக்கும் போலிருக்கே” என்றெல்லாம் சொன்னதில்லை. ஒருமுறை கூட எதிர்பாராது ஷட் டவுன் ஆனதில்லை. சரியாக நான்கு ஆண்டுகள் ஓடி விட்டு அது எப்போதும் கூடவே திரியும் நாயைப் போல இருந்து விட்டு, ஒருநாள் பட்டென்று ஆழ்துயில் நிலைக்கு போனது. அதன் பிறகு நான் நான்கு மடங்கு அதிக விலைக்கு வாங்கின விண்டோஸ் மடிக்கணினி அந்த சிறிய மடிக்கணினியின் பாதி ஆற்றலைக் கூட காட்டவில்லை. என் நண்பர்கள் வசமுள்ள விண்டோஸ் மடிக்கணினிகளும் அவ்வாறே பணத்தில் கொழுத்த “ஊதாரி மைந்தனைப்” போன்றே இருக்கின்றன. அது உண்மையில் ஒரு அழகான கனாக்காலம் தான். அன்று கணினி போன்ற மின்சாதனங்களின் விலை குறைவு, செயல்திறனோ அதிகம்.  

 

இந்த காலத்தில் சிறந்த தொடர்புசாதனம் திறன்பேசி தான். இன்றைய விண்டோஸை விட ஆண்டிராய்ட் இயங்குதளம் சிறப்பாக வேகமாக இருக்கிறது. நீங்கள் எத்தனை செயலிகளை திறந்து வைத்திருந்தாலும் தொட்டதும் அது திறந்து கொள்ளும். ஆனால் பத்து செயலிகளை திறந்து வைத்துவிட்டு விண்டோஸ் மடிக்கணினியை தட்டி எழுப்பினால் அதற்கு தூக்கம் கலையவே பத்து நிமிடமாகும். அதே போல ஸூம், பேஸ்புக், மின்னஞ்சல், காணொலியை எடிட் செய்வதற்கான செயலிகள், கூகிள் டாக் என எதை எடுத்துக்கொண்டாலும் அது விண்டோஸ் கணினியை விட வேகமாக சரளமாக திறன்பேசியிலே வேலை செய்கின்றன. நான் இந்த லாக்டவுன் காலத்தில் என் வகுப்புகளுக்கு, படிப்பதற்கு, காணொலி கூட்டங்களில் கலந்து கொள்வது, அசைன்மெண்டுகளை கூகிள் கிளாஸ்ரூமில் கொடுப்பதற்கு, அவ்வப்போது எனக்கு ஆய்வு மாணவர்கள் அனுப்பித் தரும் கட்டுரைகளைப் படிப்பதற்கு, பதில் அனுப்புவற்கு, மாணவர்களுக்கான ஆடியோ குறிப்புகள், யுடியூபுக்கான காணொலிகளை பதிவு செய்து எடிட் பண்ணுவதற்கு என் திறன்பேசியையே பயன்படுத்துகிறேன். என் அலுவலகம் இப்போது உள்ளங்கைக்குள் வந்து விட்டது. பெரும்பாலான யுடியூபர்கள் திறன்பேசியை வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார்கள் என நம்புகிறேன்.

 

இன்று நம்பத்தகுந்த கணினிகளாக ஆப்பிள் கணிகளும் சீன ஆண்டிராயிட் திறன்பேசிகளுமே இருக்கின்றன. 70,000 ரூ விண்டோஸ் மடிக்க்கணினியின் வேலையை 15,000 ரூ திறன்பேசி பலமடங்கு அதிக வேகத்தில் திறமையாக செய்கிறது. நான் கவனித்த வரையில் பெரும்பாலான மாணவர்கள் திறன்பேசியிலே பெரும்பாலான வேலைகளை முடிக்க கற்றுக்கொண்டு விட்டார்கள். 

இன்றைய ஸ்மார்ட் டிவிகளில் (வெளிச்சத்தை குறைத்த பின்னர்) திறன்பேசியின் திரையை casting செய்து, ஒரு புளூடூத் தட்டச்சுப்பலகையையும் வைத்து ஒரு சிறிய போனை ஒரு கணினியாக மாற்றி பயன்படுத்த முடியும் என நினைக்கிறேன். தேவையான போது போன், மற்ற நேரங்களில் “போன்-டெஸ்க்டாப்”.

அல்லது கூட 25,000 செலவு பண்ண தயாரென்றால் திறன்பேசிக்கு பதில் ஒரு ஐபேட் வாங்கலாம். அது இந்த விண்டோஸ் மலைமுழுங்கி மகாதேவன்களை விட இந்த போன்-டெஸ்க்டாப்போ, ஐபேடோ சிறப்பாக கைகொடுக்கும். 2018இல் வந்த ஒரு புள்ளிவிபரப்படி ஆண்டிராய்ட் கருவிகள் உலகம் முழுக்க 72.23% பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் 27% கீழே தான் வரும். விண்டோஸ் மடிக்கணினிகளின் காலம் மெல்ல மெல்ல முடிந்து வருகிறது.

Posted 15 hours ago by ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.com/2021/10/blog-post_28.html

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.