Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும் (தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா)

தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும் (தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா)

    — கலாநிதி சு.சிவரெத்தினம் — 

தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது, இயற்கையை ரசித்ததுஇயற்கையைக் கொண்டாடிய ஒரு பண்பாடாகும். அந்தக் கால மக்கள் இயற்கையை எந்தளவுக்குப் புரிந்து கொண்டார்கள்ரசித்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்ததன் காரணத்தினால் இந்த இயற்கைக்கும்தனக்கும் தனது உணவுக்கும் மூலமுதல் பொருளாக இருப்பது சூரியன் என்பதை மனிதன் அறிந்து கொள்கின்றான். தன்னையும் தன்னை வாழ வைக்கின்ற இயற்கையையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றான். இந்த நன்றி எப்போது அவனுக்கு சாத்தியமாகின்றது என்றால் அறுவடையின் போதாகும். அறுவடையின் போது கிடைத்த கிழங்குகள், தானியங்கள்பழங்கள் மற்றும் கரும்பு போன்ற அனைத்தையும் சூரியனுக்குக் காணிக்கையாக்கி தனது நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்றான்.      

இத்தகைய தைப் பொங்கல் தினத்தை உழவர் திருநாள்‘ என்றும் அறுவடை விழா‘ என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றபோது எமது பண்பாடு உலகத்தைப் பார்த்த பார்வைமுறைமையினைஇயற்கையை நேசித்த பண்பாட்டு அகழ்ச்சியை,உழவர்களுக்கானதாகவும் அறுவடைக்கானதாகவும் என குறிப்பிட்ட சிறு வட்டத்துக்குள் சுருக்கிவிடுகின்றோம். உண்மையில் தைப்பொங்கல் என்பது தமிழர்கள் இயற்கையை நேசித்து வெளிப்படுத்திய ஒரு பண்பாட்டு நடவடிக்கையாகும்.  

இவ்வாறு தமிழர்கள் அகன்ற பண்பாட்டு நோக்கைக் கொண்டிருந்ததன் காரணத்தினால்த்தான் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என்றுமனித குலம் வாழும்வரைக்குமான சிந்தனையினை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. இதேபோல் திருவள்ளுவர் தனது திருக்குறளில் இனம்மதம்நாடு கடந்து மனிதகுலத்தின் வாழ்வியல் நெறியை வகுத்துக் கூறமுடிந்தது.  

தமிழ் பண்பாட்டின் பேறானகணியன் பூங்குன்றனாரையும் திருக்குறளையும் இனம், மதம்நாடு கடந்து கொண்டாட முடியுமாக இருந்தால் தமிழ்ப் பண்பாட்டு நடவடிக்கையான தைப்பொங்கலையும் உலகம் இனம், மதம்நாடு கடந்து கொண்டாடுவதற்கு தமிழர்களாகிய நாம் முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் இயற்கை தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல.  

தைப்பொங்கல் சமய விழா அல்ல 

தைப்பொங்கலை உலகம் இனம், மதம்,நாடு கடந்து கொண்டாடுவதற்கு தமிழர்களாகிய நாம் முயற்சிக்க வேண்டும் எனக் கூறுவதன் மூலம் தைப்பொங்கல் எனும் சமய விழாவினை‘ மற்ற மதத்தவர்களுக்கும் திணிக்கின்ற ஒரு கருத்தாக பிறர் கருதக்கூடும். உண்மையில் சங்ககாலச் சமூகம் சமய நெறியின்பால் இயங்கிய சமூகம் அல்ல, இயற்கை நெறியின் மூலம் இயங்கிய சமூகம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  

சங்ககாலத் தமிழர்களுக்கு முன் எகிப்தியர்கள் சூரியனை கடவுளாக நோக்கியிருக்கிறார்கள் வழிபட்டிருக்கிறார்கள். அந்த நோக்கு நிலைக்கும் வழிபாட்டுமுறைமைக்கும் தமிழர்களின் நோக்கு நிலைக்கும் சூரியனை கனம் பண்ணியமைக்கும் இடையில் பாரிய வித்தியாசமுண்டு.  

இன்றைய நவீன விஞ்ஞானம் சூரிய ஒளியின் மூலம்தான் தாவரங்கள் ஒளித் தொகுப்பினைச் செய்து உணவு தயாரிக்கின்றன என்றும் நீர் ஆவியாகித்தான் மழையாகப் பெய்கின்றது என்றும் கூறுவதற்கு முன்பே இவையெல்லாம் சூரியனால்த்தான் நடைபெறுகின்றது என்பதை அறிந்து சூரியனைக் கனம் பண்ணினார்களே தவிர சூரியனை ஒரு கடவுளாகக் கொண்டாடவில்லை என்பது முக்கியமானதாகும்.  

தற்காலத்தில் பொங்கல் தினத்தன்று நிறைகுடத்துடன் பிள்ளையார் படத்தினையோ அல்லது அவர்களுக்கு விருப்பமான ஒரு தெய்வத்தின் படத்தினையோ வைத்து மடைவைப்பது பொதுவானதாக இருப்பதின் காரணத்தினால் இதனை ஒரு சமய விழாவாக கற்பிதம் செய்து கொள்கிறார்கள். நிறைகுடம்தான் மடையின் மூலமாக இருக்க வேண்டுமே தவிர வேறு எந்த தெய்வத்தின் படமும் அல்ல என்பது முக்கியமானதாகும். தெய்வத்தின் படம் வைப்பது அவரவர் விருப்பமேயன்றி பொங்கலுக்கானது அது அல்ல என்பது யாவரும் அறிவர்  

1960, 1970களில் கிழக்கில் முஸ்லிம் விவசாயிகளும் புதிர் எடுத்து பொங்கல் செய்திருக்கிறார்கள், இன்றும் சில கிறிஸ்த்தவர்கள் பொங்கலைக் கொண்டாடுவது சமய நோக்கிலாக அன்றி தமிழ் பண்பாட்டின் அடியாக இயற்கையை நேசிப்பதன் வெளிப்பாடாகும்.  

நிறைகுடம்  

நிறைகுடம் இந்து சமயத்தின் அடிப்படை குறியீடு என்றும் சிலர் புரிந்து வைத்திருக்கலாம். உண்மையில் தமிழ் பண்பாடு நிறைகுடத்தை சமயத்தின் குறியீடாக அன்றி வளத்தின் குறியீடாகவே முன்வைக்கின்றது. குடமும் அதற்குள்ளிருக்கும் தண்ணீரும் உலகத்தைக் குறிக்கின்றது. நிறைகுடத்தின் மேலுள்ள தேங்காயும் மாவிலையும் தாவரச் செழிப்பின் முக்கியத்துவத்தினையும்குடத்துக்கு கீழிருக்கும் தானியங்கள் உணவு உற்பத்தியின் முக்கியத்துவத்தினையும் குறிக்கின்றன. ஆகவே சுருக்கமாகக் கூறுவதானால் உலகுக்கு தண்ணீர் அடிப்படையானதென்பதுவும் அந்த தண்ணீர்தான் தாவரச் செழிப்பிற்கும் தானிய விளைச்சலுக்கும் அடிப்படை என்பதையும் காட்டுகின்றது. இதையேதான் வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு‘ என்றாரே தவிர கடவுள் இன்றி அமையாது உலகு என்று கூறவில்லை.  

ஔவையார் இதனை வேறொரு விதமாகக் கூறுகின்றார். 

வரப்புயர நீர் உயரும் 

நீர் உயர நெல் உயரும் 

நெல் உயரக் குடி உயரும் 

குடி உயரக் கோல் உயரும் 

கோல் உயரக் கோன் உயர்வான்   

எனவே நீரின் முக்கியத்துவத்தினையும் அதன் மூலமான உலகச் செழிப்பினையும் குறியீடாக்கி இவற்றை குறைவில்லாது வழங்க வேண்டும் என சூரியனை வேண்டுவதாக நிறைகுடம் இருக்கின்றதே தவிர, அது மதத்தின் குறியீடாக அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மதநிலைப்பட்டவர்கள் நிறைகுடத்துக்கு மதநிலையிலான விளக்கங்களை முன்வைக்கலாம். நாம் இங்கு முன்வைப்பது தமிழ் பண்பாடு உலகத்தைப் பார்த்த முறையினையே தவிர தமிழ் பண்பாட்டுக்குள் இடையில் உட்புகுந்த மதக்கருத்தையல்ல என்பது முக்கியமானதாகும்.  

இந்த அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு சூரியன்நீர்தாவரம்தானியம் என்று ஒரு பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் உலகை நோக்கியிருப்பதைக் காணலாம். இங்கு பொருட்களே முக்கியம் பெறுகின்றனவே தவிர கருத்துக்கள் அல்ல என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். 

உழவுத் தொழிலின் முக்கியத்துவம்    

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 

தொழுதுண்டு பின்செல் பவர் 

என வள்ளுவர் உலகில் உழவுத் தொழிலுக்கு மிக முக்கியமான இடத்தினைக் கொடுக்கின்றார். ஆனால் இன்று “உழவுத் தொழில்” தாழ்ந்த ஒரு தொழிலாக கருதப்படுகின்றது. தமது பிள்ளைகள் விவசாயிகளாக வர வேண்டும் என எந்தப் பெற்றோரும் விரும்புவது கிடையாது. வைத்தியர்,பொறியியலாளர் என்பவைதான் அவர்களுடைய இலட்சியங்களாக இருக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணத்தை இன்றைய உலக பொருளாதார முறைமையிலும் அது உருவாக்கியிருக்கின்ற கல்வி முறைமையிலும் தேட வேண்டும்.  

உழைப்பை மூளை உழைப்புஉடல் உழைப்பு எனப் பாகுபடுத்தி மூளை உழைப்புக்கு அதிக முக்கியத்துவமும் கௌரவமும் ஊதியமும் வழங்கப்படுவதால் இந்த நோக்கு நிலை உருவாகின்றது. இதனால் அறிவு என்பது மூளை உழைப்பைச் சார்ந்ததாக கதையாடல் நிகழ்த்தப்படுகின்றது. விவசாயம் செய்வோர் அறிவற்றவர்களாகவும் வைத்தியர்கள், பொறியியலாளர் மற்றும் பிற தொழில் செய்வோர் அறிவானவர்களாகவும் நோக்கப்படுகின்றனர்.   

அந்தோனியோ கிராம்சி ஒவ்வோர் வேலையும் அல்லது உழைப்பும் அதற்குத் தேவையான அறிவினையும் தொழில்நுட்பத்தினையும் கொண்டிருக்கின்றது என்பார். இதனால் அறிவு என்பது மூளை உழைப்பைச் சார்ந்தது அல்ல என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இந்த நோக்குநிலை உழைப்பில் பாகுபாடற்ற நிலையினை உருவாக்கி, தேவைக்கேற்ற ஊதியம் என்கின்ற நிலைக்கு இட்டுச் செல்லக் கூடிய சோசலிச பொருளாதார முறையினைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இன்றைய உலகப் பொருளாதார முறைமை சுரண்டலையும் இலாப நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதன் காரணத்தினால் மேற்படி உழைப்புப் பாகுபாடு தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.  

மேலும் நாம் விவசாயத்தினை நவீன உலகுக்கு ஏற்ற ஒரு தொழில்முறையாக மாற்றாமல் இருப்பதினாலும் விவசாயம் ஒரு குறைந்த தொழிலாகக் கருதப்படுவதற்குக் காரணமாகும். நாம் மாட்டினால் உழுத இடத்துக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவதினாலோ அல்லது கையினால் அறுவடை செய்த இடத்துக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவதினாலோ நவீன முறைக்கு வந்து விட்டோம் என்று அர்த்தமாகாது. உற்பத்தியும் உற்பத்திக் கருவிகளும் அவற்றிக்கிடையிலான உறவுகளும் நவீன உலகுக்கு ஏற்றமுறையில் மாற்றயமைக்கப்படவில்லை. இவை பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படுகின்ற போதும் விவசாயம் தொடர்பான மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகும். 

உலகமயமாக்கலும் பொங்கலும் 

உலகமயமாக்கம் உலகுக்கான ஒற்றைப் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் வலியுறுத்துகின்றது. பல்தேசியக் கூட்டுத்தாபனங்களின் இலாபத்துக்கு எதிரான உலகின் பல பண்பாடுகளும் பண்பாட்டு நடவடிக்கைகளும் அழிக்கப்படுகின்றன. தனது இலாபத்துக்குத் தேவையான பண்பாடுகளும் பண்பாட்டு நடடிக்கைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. மனிதர்களுடைய பண்பாட்டு விழுமியங்கள் வாத்தகப் பொருளாக்கப்படுகின்றன. தமிழர்கள் இயற்கையை நேசித்து இயற்கையைக் கொண்டாடுகின்ற இந்தப் பொங்கல் விழா உலகமயமாக்கத்துக்கு எதிரானதேயாகும். ஏனென்றால் இயற்கையை அழித்து பெறும் செல்வம் உலகமயமாக்கத்தின் தலைமை நாடுகளின் கஜானாவை நிரம்புகின்றன. இவ்வாறான நிலையில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் அதனைப் பேணவேண்டும் என்ற தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் இலாபத்துக்கு எதிரானதாகவும் மனிதகுலத்துக்கு தேவையானதாகவும் இருக்கின்றது.  

இந்த நோக்குநிலையில் இன்று இலங்கை அரசு விதித்திருக்கும் உரக் கட்டுப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பல்தேசியக் கூட்டுத்தாபனங்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தங்கள் இலாபத்துக்காக எமது மண்ணின் தன்மைக்கும் காலநிலைக்கும் பொருத்தமான விதைகளை மெதுமெதுவாக அழித்து அந்த இடத்துக்கு எமது மண்ணுக்கும் காலநிலைக்கும் பொருத்தமற்ற விதைகளை வழங்கி வைத்திருக்கின்றன. இவ்வாறு வழங்கப்பட்ட நெல்லினங்களுக்கு கூடிய நீரும் கூடிய நைதரசனும் தேவையாகும். இந்த இனங்களுக்கு கூடிய நைதரசனையும் நீரையும் வழங்குகின்றபோது நெற்பயிர் மென்மையாகி பச்சையாகின்றன இதனால் நோய்த்தாக்கத்துக்குள்ளாகின்றன. நோய்த்தாக்கத்தை வெற்றி கொள்வதற்கு அதிக கிருமிநாசினிப் பயன்பாட்டை நாடவேண்டியுள்ளது. இவற்றால் கிடைக்கின்ற இலாபங்கள் எல்லாம் குறிப்பிட்ட கூட்டுத்தாபனங்களுக்கும் தனிநபர்களுக்கும் செல்ல நீண்ட காலப் போக்கில் வயல் நிலங்கள் மலட்டு நிலங்களாக மாறிப் போக மக்கள் தொற்றா நோய்களுக்குள்ளாகின்றனர் என்பது உண்மையாகும். பொலநறுவையில் அதிக சிறுநீரகப் பாதிப்பு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமைக்கு வயல்களில் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள்தான் காரணம் என்று கூறப்படுகின்றது. இது போல் மட்டக்களப்பில் காணப்படும் அதிக புற்றுநோயாளர்களுக்குக் காரணம் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட மரக்கறிவகைகளை உண்பதினால்த்தான் எனவும் கூறப்படுகின்றது.  

இன்று விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை அதன் இனத்துக்கும் அதற்கான உள்ளீடுக்குமான பிரச்சினையாகும் எளிமையாகக் கூறுவதானால் புறொய்லர் கோழியை வைத்திருப்பவர்களுக்கு அதற்கான தீவனத்தை நிறுத்தி நாட்டுக்கோழிக்குரிய முறையில் வளர்க்கும்படி விடுவதாகும்.  

எனவே விவசாயிகள் எமது மண்ணுக்கும் எமது சூழலுக்கும் பொருத்தமான எமது பண்டைய நெல்லினங்களை மீள் கொண்டு வருதல் வேண்டும். அவை குறைந்தளவு நைதரசனிலும் குறைந்தளவு நீரிலும் எமக்குத் தேவையான விளைச்சலைத் தரக்கூடியவைகளாகும். இதனால் கிருமிநாசினித் தேவை இல்லாமல் போவதுடன் எமது நிலங்கள் வளமான நிலங்களாகவும் நாம் நோயற்றவர்களாக இருப்பதுடன் எமக்கு நன்மை செய்யும் எம்மால் அழிக்கப்பட்ட வண்ணாத்திப் பூச்சிகளும் பறவையினங்களும் புழுக்களும் எமது சுற்றாடலில் மீண்டும் உயிர்ப்பிக்கும். நாம் மகிழ்வான வாழ்வை வாழமுடியும். 

எனவே இந்தப் பொங்கல் தினம் உலகுக்கு இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் அதனை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்குவதற்குமான செய்தியினைக் கூறுவதாக இருக்கின்றது.       
 

 

https://arangamnews.com/?p=7083

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.