Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூதூர் அரபா நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 13-08-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்]

மூதூர் அரபா நகரில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது - மக்கள் படையினரால் விரட்டியடிப்பு

திருகோணமலை மூதூரில் தமிழ் மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்துவரும் சிறீலங்காப் படையினர், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள தமிழ்-முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மூதூர் தெற்கிலுள்ள அரபா நகரில் மீளக்குடியேறியிருந்த 67 குடும்பங்களைச் சேர்ந்த 251 முஸ்லீம்கள் படையினரின் உத்தரவுக்கு அமைவாக வெளியேற்றப்பட்டு, பாலி நகரிலுள்ள பாடசாலையில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டு சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பின்போதும் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்திருந்ததாக அந்தப் பிரதேச கிராம அலுவலர் தெரிவித்தார்.

அரபா நகர மக்களைச் சந்திக்க வருமாறு கடந்த வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்த சிறீலங்காப் படையினர், மறுநாள் காலை அரபா நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தனர்.

அரபா நகர மக்கள் வெளியேற்றப்பட்ட தகவலை திருகோணமலை பிரதேச செயலாளர் கீத்சிறி தயானந்த, சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ஆகியோரும், மூதூர் காவல்துறையினரும் மறுத்துள்ளனர்.

தமிழ் மக்களை தொடர்ச்சியான இடப்பெயர்வு அவலத்திற்குள் தள்ளிவரும் சிறீலங்கா அரசு, தற்பொழுது முஸ்லீம் மக்களையும் குறிவைத்திருப்பதாக, சிறீலங்காவின் பிரபல முஸ்லீம் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்திருந்த நிலையில், மீள் குடியேற்றத்திற்கு என பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள், மீளக்குடியேற்றப்படாது தொடர்ந்தும் கிளிவெட்டியில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமலை உயர் பாதுகாப்பு வலயத்தில் எவரும் குடியேற அனுமதி இல்லை

[15 - August - 2007]

* மாற்றிடம் வழங்க ஏற்பாடு; அரசு அறிவிப்பு

-எம்.ஏ.எம். நிலாம் -

திருமலை மாவட்டத்தில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள எந்தவொரு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களிலும் எவரும் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவித்திருக்கும் அரசாங்கம் அவர்களுக்கு மாற்று இடங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மூதூர் கிழக்கில் அரபாத் நகரில் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கு முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படாமை குறித்து நேற்று தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

`திருகோணமலை மாவட்டத்தில் சில பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதில் மூதூர் கிழக்கிலுள்ள அரபாத் நகரும் ஒன்றாகும். இந்தப் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் 1985 இல் வெளியேறினார்கள். அன்று 53 குடும்பங்கள் வெளியேறினர். இன்று அந்த எண்ணிக்கை 84 குடும்பங்களாக அதிகரித்துள்ளது.

இந்த முஸ்லிம் குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தயாராகி வருகின்றன. தற்போது இந்த அரபாத் நகரும் இம்மாவட்டத்திலுள்ள வேறுபல பிரதேசங்களும் அரசாங்கத்தினால் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மனித நடமாட்டத்துக்கோ, குடியேறுவதற்கோ அனுமதிக்கப்படமாட்டாது.

1985 இல் வெளியேறியவர்கள் இதுவரையில் தமது பிரதேசங்களை ஏறெடுத்தும் பார்க்காமலிருந்து விட்டு இப்போது அங்கு குடியேற முயற்சிக்கின்றனர். பாதுகாப்பை உறுதி செய்வதில் படைத்தரப்பு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இத்தகையதொரு சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்த எந்தவொரு பிரதேசத்திலும் எவரும் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வேறு பிரதேசங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களில் அவர்கள் குடியேறுவதற்கான சகல வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்

அரபாத் நகர் மக்களை மீளக்குடியேற அனுமதிக்க முடியாது: சிறிலங்கா இராணுவம்

August 15,2007

திருகோணமலை மாவட்டம் மூதூர் அரபாத் நகர் முஸ்லிம் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவம் எச்சரித்துள்ளது.

சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியுள்ளதாவது:

திருகோணமலையின் சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக்க அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் அரபாத் நகரும் அடங்கும். இங்கிருந்து 1985 ஆம் ஆண்டு அனைத்து முஸ்லிம் மக்களும் வெளியேறியிருந்தனர். அப்போது 53 குடும்பங்களே இப்பகுதியில் இருந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்போது 84 குடும்பங்கள் இப்பகுதிக்கு உரிமை கொண்டாடுகின்றன.

இதுவரை காலமும் இந்த பகுதிகளை திரும்பிக்கூட பார்க்காமல் இருந்த இவர்கள் இப்போது எதற்காக வருகிறார்கள்?

கிழக்கின் பாதுகாப்பு தான் எமக்கு அவசியம். எனவே உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் மக்களின் நடமாட்டத்துக்கோ அல்லது குடியேற்றத்துக்கோ அனுமதி வழங்கப்படமாட்டாது. அவர்களுக்கு வேறு இடங்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மூதூரில் நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து அப்பகுதி முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். தற்போது மீளக்குடியேற முயற்சிக்கும் நிலையில் சிறிலங்கா இராணுவம் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஏற்கனவே மூதூர் கிழக்கு உள்ளிட்ட சம்பூர் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயாமக்கப்பட்டு அங்குள்ள தமிழ்மக்களின் காணிகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

-நன்றி தமிழ்ப்பிரியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரபாத் நகர் முஸ்லிம்கள் வெளியேற்றம் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள்

[19 - August - 2007]

-அஜாதசத்ரு-

கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களை பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஆக்கிரமித்துள்ள அரச படையினர் அப்பகுதிகளிலிருந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான இருப்பிடங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்கள், மதவழிபாட்டுத் தலங்கள் என்பவற்றை அழித்துள்ள நிலையில் கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் சர்வதேச சமூகத்தையும் தென்னிலங்கை மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு அரசியல் கைங்கரியத்தையே அரசு தற்போது முன்னெடுத்து வருகின்றது.

கடந்த வருடம் 2006 ஏப்ரல் கொழும்பிலுள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அதற்கு பழிவாங்கும் நோக்குடன் கிழக்கின் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்குப் பிரதேசங்களில் தொடர்ச்சியான விமானக் குண்டுவீச்சு மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களை நடத்தியது.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பற்று பிரதேசங்களுக்குள் ஊடுருவி ஆக்கிரமிப்பு நடத்திய அரச படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெறுவதற்கு கூட எந்தவொரு மருத்துவ வசதியுமின்றி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் மற்றும் வாகரைப் பிரதேசங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து சென்றனர்.

வாகரை, வெருகல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் பாடசாலைக் கட்டிடங்களிலும் மரநிழல்களுக்கு மத்தியிலும் தமது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த போதிலும் அரச நிவாரண உதவிகள் வழங்கப்படாத நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவ முன்வந்த போதிலும் அந்த முயற்சிகள் அனைத்தும் கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவையடுத்து படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனைவிட மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகளாலும் வாழைச்சேனை பிரதேச செயலாளர்களாலும் அரச உயர்மட்டத்தின் அனுமதி பெற்றுக்கொண்டு லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட நிவாரண உதவிப் பொருட்கள் மாங்கேணி இராணுவ முகாமிற்கு அருகில் வைத்து வழிமறிக்கப்பட்ட ஆயுதபாணிகளால் அபகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வாகரைப் பிரதேசம் மீதான பாரிய இராணுவ நடவடிக்கைகளை அரச படையினர் மேற்கொண்டனர். விமானக் குண்டுவீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், ஷெல் வீச்சு என்பன காரணமாக சுமார் மூன்று மாதகாலப்பகுதியில் 120 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழக்க நேரிட்டதுடன் 200 இற்கு மேற்பட்டோர் காயமடைய வேண்டிய துன்பகரமான நிலைமையும் ஏற்பட்டது.

அரச படையினர் வாகரைப் பிரதேசத்திற்குள் ஊடுருவியதையடுத்து அங்கிருந்த மக்கள் காட்டுப்பாதைகள் ஊடாகவும் கடல்வழியாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு தப்பியோடி வரும் வழியில் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபகரமான நிலைமையும் ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த மக்கள் 48 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கான அரச நிவாரண உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்பட்டன.

சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களே இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரங்கள், உலருணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகள் என்பவற்றை வழங்கின.

மூதூர் கிழக்கு, வாகரைப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்களின் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு மத்தியில் மற்றுமொரு பாரிய மனித அவலத்திற்கு வழிவகுத்தது படுவான்கரைப் பிரதேசம் நோக்கியதான மற்றொரு பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை.

கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், ஷெல் வீச்சு என்பன காரணமாக போரினால் சிதறுண்டு போன ஒரு பிரதேசமாகவே அப்பகுதி இன்னமும் அழிந்து போய்க்கிடக்கிறது.

படையினரின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் என்றும் எதிர்கொள்ளப்படாதளவிற்கு சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் தமது வாழ்விடங்களையும் வளமான மண்ணையும் விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைக் கட்டிடங்கள் பொது இடங்களில் தஞ்சம் புக வேண்டிய துயரமான நிலைமை உருவாக்கப்பட்டது.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும், உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்று அரசாங்கமும் அதற்குப் பொறுப்பான அமைச்சர்களும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டபோதிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உதவிகள் மாத்திரமே வழங்கப்பட்டன.

இதனைவிட கடந்த காலங்களில் அரசியல் ரீதியான முரண்பாடுகளால் பல்வேறு கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட நிலையிலும் படுவான்கரையிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு அப்பிரதேச முஸ்லிம் மக்கள் வழங்கிய உதவியையும் நேசத்தையும் வரலாற்றில் ஒருபோதும் தமிழர்கள் மறந்துவிட முடியாது.

படுவான்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்ட நிலையில் இரண்டுமாத காலத்திற்கு பின்னர் படிப்படியாக மீள்குடியேற்றப்பட்ட போதிலும் நிவாரண வசதிகள் எதுவுமற்ற நிலையில் உடைந்து, சிதறுண்டு போன தமது வாழ்விடங்களிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தொழில் என்பவற்றையே பிரதான தொழிலாக கொண்ட படுவான்கரைப் பிரதேச மக்கள் தமது வளமான வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய எந்தவொரு வசதியுமற்ற அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் படுவான்கரைப் பிரதேசத்தில் புதிய காவலரண்களும், படைமுகாம்களும், பொலிஸ் நிலையங்களுமே அமைக்கப்பட்டுள்ளன. அழிவுற்ற அந்தப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சேதமதிப்பீடுகள் கூட இன்னமும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லையென்றே மாவட்ட செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதெல்லாவற்றிற்குமப்பால் படுவான்கரைப் பிரதேசத்தின் மற்றொரு பகுதியான குடும்பிமலைப் பிரதேசத்தை அரச படையினர் ஆக்கிரமித்ததையடுத்து, சுதந்திரதின தினத்திற்கு ஒப்பான தேசியப் பெருவிழாவாக தலைநகர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கொண்டாடப்பட்டது.

இவ்வாறே வாகரையை அரச படையினர் ஆக்கிரமித்ததற்கு பின்னர் அங்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளக் குடியேறிய மக்கள் பலரை சந்தித்து அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்கும் என்று உறுதியளித்தார்.

ஆனால், வாகரையிலிருந்து இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் போர் நடவடிக்கைகளால் அழிந்துபோன தமது இருப்பிடங்களில் தொழில் வாய்ப்பின்றி, நிவாரண வசதிகள் இன்றி அவலங்களுக்கு மத்தியில் அச்சத்துடனேயே தமது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து வாகரை, வெருகல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் கட்டாயத்தின் பேரில் பலவந்தமாக திருகோணமலை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள போதிலும் அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வேறு பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தளாய்க்கு இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியேறிய அரபாத் நகர் முஸ்லிம் மக்கள் சில மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு அகதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மூதூர் கிழக்கு, சம்பூர், இலங்கைத் துறைமுகத்துவாரம், மூதூர் மூன்றாம் கட்டை மலை உட்பட பல தமிழ்க் கிராமங்களில் பௌத்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு, பாதுகாப்பு சுற்று மதில்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வேப்பவெட்டுவான் வீதி - சார்ஜன் பத்திரண மாவத்தையென்றும் இலங்கைத் துறைமுகத்துவாரம் - லங்கபட்டுண என்றும் திருகோணமலை இருதயபுரம் - பன்சலவத்தையென்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், குடும்பிமலை பிரதேசத்தை புனித பௌத்த வலயமாக பிரகடனப்படுத்தவும் அரச தரப்பால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை ஏமாற்றி நிதியுதவியைப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அரசாங்கம் அவ்வாறு கிடைக்கும் நிதியுதவிகள் ஊடாக கிழக்கை நிர்வாக ரீதியாக பிரித்து இன மோதல்களை தூண்டி பெரும்பான்மையினரை குடியேற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதையே அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்று ஏழுமக்கள் பிரதிநிதிகளை கொண்ட தமிழ்த்தேசிய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு ஆலோசனையையும் பெறாமல் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது புனிதபூமி பிரதேசம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான உள்நோக்கத்தையே தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

கிழக்கின் உதயம் அபிவிருத்தி திட்டம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களையும் வளங்களையும் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்தானது என்பதையே அரபாத் நகர முஸ்லிம்கள் வெளியேற்றம் எல்லோருக்கும் தெளிவுபடுத்தியிருக்கிறது

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.