Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஆர்யா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,VISAGE

நேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது?

எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்?

டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இறுதியாக அவரது லிவ் இன் துணை ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார்.

 

 

ஒரு படித்த, அதிகாரம் பெற்ற, சுதந்திரமான பெண் ஏன் மரியாதை இல்லாத, வன்முறை நிறைந்த உறவில் தொடர்ந்து இருக்கிறார்?

தனது கணவனிடம் இருந்து பிரிந்துவாழும் முடிவை எடுக்க தீபிகா 7 ஆண்டுகளை எடுத்துகொண்டார். முதன்முதலில் அறையில் தொடங்கிய வன்முறை மூட்டு எலும்பு முறிவுவரை ஏற்பட்ட பின்னர் அவர் இந்த முடிவை எடுத்த நிலையில், எதற்காக உறவில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க அவர் நீண்ட காலத்தை எடுத்துகொண்டார். இறுதியாக அவருக்கு உதவியது யார்? உறவில் இருந்து வெளியேறியதற்கு பின்னர் என்ன? அவரிடம் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டபோது, அவர் மனம் திறந்து தனது கதைகளை கொட்டினார்.

( எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சில வாசகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய மன மற்றும் உடல் ரீதியான வன்முறைகள் பற்றிய விவரம் உள்ளது)

 

அவர் என்னை கொன்றிருப்பார். என் நல்ல நேரம், நான் சரியான சமயத்தில் இந்த உறவில் இருந்து வெளியேறினேன்.

திருமணம், காதல் ஆகிய பந்தத்தில் நம்பிக்கை வைக்கும்படி நாம் வளர்க்கப்படுகிறோம். இது அனைத்தும் சரியாக இருக்கிறது. நாம் பொறுத்துகொள்ளலாம் என்று நம்மை எண்ண வைக்கிறது.

அப்படிதான் எனக்கும் இது தொடங்கியது.

என் கணவர் என்னை முதன்முதலில் அடித்தபோது, அவர் அழுத்தத்தில் உள்ளார் என்று என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டேன். அது வெறும் கோபம்தான், கலைந்துவிடும் என்று நினைத்தேன்.

எங்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், கருச்சிதைவு ஏற்பட்டு, எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

என் கர்ப்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, பிரசவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நான் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது. நான் என் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன், அவருக்கு அது பிடிக்கவில்லை.

குழந்தை ஏழரை மாதங்களிலேயே பிறந்ததால் பதற்றம் அதிகரித்தது. அவள் பிறக்கும்போது வெறும் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்தாள்.

ஆப்ரேசன் தியேட்டரில் இருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்ட நான் அப்போதுதான் மயக்கத்தில் இருந்து விழித்தேன். என் கணவர் உள்ளே வந்து கத்திக்கொண்டு இருந்தார். கிடைத்த பொருட்களை வீசி எறிந்தார். அவரை அமைதிப்படுத்த செவிலியர்கள் அழைக்கப்பட்டனர்.

அவர் என் பெற்றோரை வெறுக்கத் தொடங்கினார், மேலும் அவர்களை என்னிடமிருந்து விலக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார். என் வாழ்வில் ஒன்று பெற்றோர் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும் என்று கூறினார்.

வெறுப்பில் எங்கள் வீட்டைவிட்டும் அவர் வெளியேறினார். எனினும், எனது மகளுக்கு அப்பா தேவை . எனவே, திரும்பி வரும்படி அவரிடம் கெஞ்சினேன்.

அவரும் ஒரு நிபந்தனையுடன் திரும்பிவந்தார். அதாவது, அவர் வீட்டில் இருக்கும்போது என் குடும்பத்தினர் யாரும் வரக்கூடாது. என்னை முழுமையாக அவர் கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,IMAGESBAZAAR

முதல் அறை

அவர் பேயாக மாறியதுபோல் தோன்றியது. அவர் என் குடும்பத்தை பற்றி மரியாதை குறைவாக பேசுவார். அவமரியாதை செய்தார்.

இவை அனைத்துமே வார்த்தை துஷ்பிரயோகம். ஆனால், அந்த நேரத்தில் அதுகுறித்து எனக்கு புரிதல் இல்லை. அது 2005ஆம் ஆண்டு. இந்த பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்படவில்லை.

இறுதியாக ஒருநாள், வார்த்தை துஷ்பிரயோகம், உடல் மீதான தாக்குதலாக மாறியது. அவர் என்னை முதன்முறையாக அறைந்தார்.

உடனே, மன்னிப்பும் கேட்டார். தன் கையை வெட்டிக்கொள்வதாகவும், எனக்கு பூக்கள் வாங்கி தருவதாகவும் கூறினார்.

கோபத்தில் ஒரே ஒரு அறைதானே அறைந்துவிட்டார் என்றும் மீண்டும் இதுபோன்று நடக்காது என்றும் நானும் நினைத்தேன். அவரை மன்னித்து மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றேன்.

முதல் மனநல மருத்துவர், கோபத்தை கட்டுப்படுத்த சில மாத்திரைகளை வழங்கினார். ஆனால், என் கணவர் அதை மூன்று நாட்கள் மட்டுமே எடுத்துகொண்டார் பின்னர் நிறுத்திவிட்டார்.

இரண்டாவது மனநல மருத்துவர், “கணவர் சொல்லும் அனைத்தையும் நான் அனுசரித்து சென்றால்தான் இந்த நிலை மாறும் ” என்று கூறினார்.

ஆனால், இதுவும் தீர்வாக அமையவில்லை. ஏனென்றால், அவரது கருத்துடன் நான் உடன்பட மறுத்தப்போது அவர் மீண்டும் என்னை அறைந்தார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,IMAGESBAZAAR

அறைகள் தழும்பாக மாறத் தொடங்கியது

நான் மீண்டும் கர்ப்பமானேன். ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் வன்முறை தொடர்ந்தது. இந்த முறை என் கணவர் என்னை தாக்கியபோது தழும்பு ஏற்பட்டது.

என் பெற்றோரிடம் இருந்து நான் அதை மறைத்தேன். இரண்டு குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுகொண்டு விலகிச் செல்வது சாத்தியம் என்ற நம்பிக்கை என் மனதில் இல்லை.

இந்த சுழற்சி மீண்டும் தொடங்கியது. என்னை அடிப்பார், மன்னிப்பு கேட்பார், கோபம் மீது பழிபோடுவார், என் மீது பழிபோடுவார். தற்கொலை செய்துகொள்வதாக கூறுவார், ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொள்வார்.

இந்த முறை வேறு மனநல ஆலோசகரிடம் சென்றோம். அவர், “அனைத்து வீடுகளிலும் இது நடக்கிறது. இது குடும்ப வன்முறை அல்ல, ஏனென்றால் அவர் உன்னை தொடர்ந்து அடிக்கவில்லை. எனவே, வீட்டுக்கு சென்று குடும்ப வாழ்க்கையை தொடருங்கள் ” என்றார்.

நான் மூன்று ஆலோசகர்களிடம் சென்றும் யாருமே எனக்கு சரியான தீர்வை வழங்கவில்லை. அவர்கள் வழங்கிய தவறான அறிவுரைகளை நான் பின்பற்றிகொண்டிருந்தேன்.

ஆனால், வன்முறை குறைந்தபாடில்லை. அடுத்த முறை கணவர் என்னை அடித்தபோது, என் இரண்டு வயது மகன் மடியில் இருந்தான். அவனை பாதுகாப்பதற்காக நான் கீழே விழுந்து, தலையில் காயமும் ஏற்பட்டது.

இறுதியாக, நான் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். என்னால் முடிந்தது, ஏனென்றால் என்னிடம் ஒரு படுக்கை அறையுடன் கூடிய அடிக்குமாடி குடியிருப்பு இருந்தது மேலும் பொருளாதார ரீதியாக நான் சுதந்திரமாக இருந்தேன். ஆனால் , என் மனம் சுதந்திரமாக இல்லை.

அப்போதுக்கூட என் பெற்றோரிடம் நான் உண்மைகளை கூறவில்லை. கணவருடன் கருத்துவேறுபாடு இருப்பதை கூறினேனே தவிர அவர் என்னை அடித்ததை கூறவில்லை.

நான் என் பெற்றோரிடம் சொன்னதை என் கணவர் அறிந்தால், அவர் பெற்றோர் மற்றும் எனக்கு இடையே இடைவெளியை மீண்டும் உருவாக்க முயற்சிப்பார், கோபப்படுவார், அது மேலும் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்று நான் பயந்தேன். மேலும், திருமண பந்தத்தின் பலம் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,SUPRABHAT DUTTA

ஒரு நபர் உறவில் துஷ்பிரயோகம் செய்தால், அவர் உங்களை மதிப்பதை நிறுத்திவிட்டார் என்று அர்த்தம். அந்த முதல் அறையை பொறுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், நாம் அதனை தொடரும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறோம்

நான் என்னைதான் குற்றம் கூறுவேன். என் முடிவுகளை கேள்விகேட்டேன். அனைத்தையும் சரி செய்ய முடியும் என்று நம்பினேன்.

என் கணவர் தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்டார். தன்னை மாற்றிக்கொள்வதாக சத்தியம் செய்தார். இது திருமண பந்தத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது. எனவே, மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் நான் வீட்டுக்கு திரும்பினேன்.

என் மகனுக்கு மூன்று வயது ஆனதும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த முறை கணவர் என் தலையை சுவற்றில் மோதினார். என்னை அடித்தார்.

என் கால் முறிந்தது. நான் மருத்துவரிடன் சென்று கட்டுப்போட்டுகொண்டு வீடு திரும்பியபோது, நான் நடிப்பதாக கூறிய கணவர் என்னை மீண்டும் அடித்தார்.

மிகவும் அச்சமாக உணர்ந்தேன். எப்படியோ தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு என் பெற்றோரிடம் தெரிவித்தேன். பின்னர் காவல் நிலையம் சென்றேன்.

மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினேன். என் குழந்தைகளுக்கு கடினமான நேரமாக அது இருந்தது. அவர்கள் இரண்டு திசைகளிலும் இழுக்கப்பட்டனர்.

என் கணவரின் சகோதரியும், என் மாமனாரும் வீட்டுக்கு திரும்பி வரும்படி எனக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தனர்.

 

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,DUA AFTAB / EYEEM

இது என் இரண்டாவது திருமணம். இதனை சரியாக அமைத்துகொள்ள விரும்பினேன்.

முதன்முறை காதல் திருமணம் ஆனது. அப்போது எனக்கு 20 வயது மட்டுமே, சரியான துணையை தேர்ந்தெடுப்பதற்கான போதிய அறிவு எனக்கு அப்போது இல்லை. எனவே, ஒரு வருடத்திற்குள்ளேயே விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன்.

அதன் பிறகு 16 வருடங்கள் நான் திருமணம் பற்றி நினைக்கவில்லை. நான் மகிழ்ச்சியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாக இருந்தேன். எனது ஆசிரியர் பணி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததோடு எனது எண்ணப்படி நான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

எனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் டேட்டிங் இணையதளத்தில் எனது சுயவிவரத்தை உருவாக்கினேன். அங்குதான் அவரைச் சந்தித்தேன். அவர் மிகவும் அக்கறையுள்ளவராகவும், எங்கள் நகரத்திற்கு இடம் மாறவும், என்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாகவும் இருந்தார்.

எங்கள் முதல் சந்திப்பின் ஏழு மாதங்களுக்குள், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் வயது முதிர்ச்சியடைந்திருந்ததால் விரைவில் கருத்தரிக்க விரும்பினோம். நான் கர்ப்பமானேன். ஆனால் இரண்டு மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டது.

திரும்பி பார்க்கும்போது, அப்போதுதான் எல்லாமே மாற தொடங்கியது என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவர் விரைவாகவே கோபம் அடைய தொடங்கினார். எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தினார்.

அந்த நேரத்தில் அனைவருமே, “திருமணமான புதிதில் இது சகஜம்தான் ” என்று கூறினார்கள்.

அப்போது அவர் என்னை அடிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் பொருட்களை எறிந்து, கோப்பைகள் மற்றும் தட்டுகளை உடைப்பார். எந்நேரமும் வீட்டில் ஒரு பதற்றம் நிலவியது. இதுவும் ஒரு வகையான வன்முறைதான், ஆனால் அவர் என்னை அறைந்தபோதுதான் எனக்கு அது புரிந்தது.

சிந்தித்துப் பார்க்கையில், என் திருமணத்தைக் காப்பாற்றும் விருப்பத்துடன் சமூகம் என்ன கூறுமோ என்ற அழுத்தமும் என்னைத் தடுத்து நிறுத்தியதாக உணர்கிறேன். என்னைக் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக, என் கணவர் மாறுவார் என்று காத்திருந்தேன்.

இந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, என் முழங்கால் முறிவு என்னை இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறச் செய்த பிறகும், நான் திரும்பினேன். கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்தேன்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,EVGENIIA SIIANKOVSKAIA

என் தந்தையை அவர் அடித்தார்

ஓராண்டுக்கு அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், என் கணவர் வேலையை இழந்தார். அதே நேரத்தில் அவரது தந்தையும் காலமானார்.

வாழ்க்கை மீண்டும் அழுத்தம் நிறைந்ததாக மாறியது. எனக்கு மீண்டும் அடி விழத் தொடங்கியது. இந்த முறை அதிகரிக்கவும் தொடங்கியது. வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை அவர் என்னை அடித்தார்.

அவரது தந்தை இறந்த துக்கத்தில் என் கணவர் இருந்ததால், மற்றவர்களை தொடர்புகொண்டு இந்த வன்முறை குறித்து கூறுவது எனக்கு கடினமாக இருந்தது. அவரை விட்டு பிரியவும் முடியாமல், அவரது வன்முறை குறித்து வெளியே சொல்லவும் முடியாமல் தவித்தேன்.

பிறகு ஒரு இரவு கோபத்தில் என் மீது பொருட்களை வீசத் தொடங்கினார். பாட்டில்கள், நாற்காலிகள் என கைக்கு கிடைத்ததை வீசினார். கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.

இவை அனைத்தும் எனது ஐந்து மற்றும் ஏழு வயதுக் குழந்தைகளுக்கு முன்னால் நடந்தது. எங்கள் வீட்டின் கதவும் திறந்திருந்தது, எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தார்கள், அன்று எங்களைப் பார்க்க வந்த என் தம்பியும் பார்த்தான்.

ஆனால் அன்று இரவு காவல் நிலையத்திற்குச் செல்லும் தைரியும் எனக்கு இல்லை. நான் மிகவும் பயந்திருந்தேன். என் சிறிய குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் என் குழந்தைகளை அழைத்துச் சென்று என் தந்தையுடன் காரில் அமர்ந்தேன், என் கணவர் பானெட்டில் ஏறிகொண்டு காரை நிறுத்த முயன்றார்.

அடுத்து நிகழ்ந்ததை என்னால் ஏற்றுகொள்ளவே முடியாது, என் 78 வயதான தந்தையை அவர் தாக்க தொடங்கினார். என் தந்தையின் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வரத் தொடங்கியது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பின்னர், நான் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தேன். என் அனைத்து நம்பிக்கைகளும் போய்விட்டன.

நான் முதல்முறையாக அடி வாங்கிய 7 ஆண்டுகள் கழித்து, 2012ல் நாங்கள் பிரிந்துவிட்டோம்.

எனினும், விவாகரத்து பெற எனக்கு மேலும் 4 ஆண்டுகள் தேவைப்பட்டன. மேலும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஈடாக எங்கள் குடியிருப்பில் எனது பங்கை என் கணவருக்கு வழங்க நான் ஒப்புக்கொண்டேன்.

எங்கள் திருமணம் முடிந்தது, ஆனால் வன்முறை தொடர்ந்தது.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,LUCY LAMBRIEX

விவாகரத்துக்கு பிந்தைய வன்முறை

எனது கணவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று எனது அப்போதைய வழக்கறிஞர் தவறாக அறிவுறுத்தினார். இதன் விளைவாக, விவாகரத்து மற்றும் சட்ட போராட்டத்திற்கு பிறகும், ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை தனது குழந்தைகளைப் பார்க்க என் கணவருக்கு உரிமை கிடைத்தது.

நான் காவல் நிலையத்திற்குச் சென்று, என் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி பயப்படுகிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்களோ, உன் குழந்தைகள் உன் கணவருக்கும் குழந்தைகள்தான் பின்னர் என்ன பயன் என்று சொன்னார்கள்.

ஆனால் என் பயம் தவறாகவில்லை.

சிறிது காலம் கழித்து என் மகள் என்னிடம் தன் தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினாள். தனது தந்தை குளியலறைக்கு வந்தார் என்றும் உடைகளில் கைவைத்தார் என்றும் கூறினாள். அப்போது என் மகளுக்கு ஏழு வயது.

இது என்னை நொறுங்கிபோக செய்தது. நான் இப்போது என் மகளை அவளது சொந்த தந்தையிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசில் புகார் செய்தேன். என் கணவரும் பதிலுக்கு என் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்தார்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால், என் கணவரின் குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. எனது மகள் சுமத்திய குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் எங்கள் மகளுடனான அவரது உறவு மீளமுடியாமல் முறிந்தது.

என் மீது போடப்பட்ட மூன்று வழக்குகளையும் அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.

குடும்ப வன்முறை

பட மூலாதாரம்,FIZKES

நான் இப்போது வக்கீல்களை மாற்றிவிட்டேன், குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

நான் அதையும் செய்திருக்கலாம், ஆனால் வாழ்க்கை எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. என் மகன் பள்ளியில் கிழே விழுந்து இறந்தான். அவனுக்கு பத்து வயதுதான் இருக்கும்.

என் எல்லா பலமும் என்னைவிட்டு போவதை போல் நான் உணர்ந்தேன்.

நான் நிறைய போராடிவிட்டேன். தற்போது நிறுத்த விரும்புகிறேன்.

இந்த நேரத்தில், நான் ஒரு புதிய ஆலோசகரை சந்தித்தேன். முதலில் என்னைக் கவனித்துக் கொள்ளவும் பிறகு மற்ற முடிவுகளை எடுக்கவும் அவர் என்னைத் தூண்டினார். நான் விரும்பும் நேரத்தில் , நான் தயாராக இருக்கும்போது மட்டுமே அடுத்த அடியை எடுத்து வைக்க கூறினார்.

என் மகள் இப்போது வளர்ந்துவிட்டாள். மேலும், தற்போது சண்டையிடுவதற்கான தன்னுடைய நேரம் என்றும் அவள் கூறினாள்.அவள் பெரியவள் ஆனது, தன் தந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் திறந்து நீதியைப் பெற முயற்சிப்பாள்.

என்னைப் பொறுத்தவரை, நான் அனைவரையும் மன்னித்துவிட்டேன். தேவையான அளவு போராடி இப்போது நிம்மதியாக இருக்கிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது, அதை கோபத்திலும் வெறுப்பிலும் கழிக்க நான் விரும்பவில்லை.

மிக முக்கியமாக, நான் என்னை மன்னித்துவிட்டேன். எனது வன்முறைத் திருமணத்திலிருந்து வெளியே வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு, அந்த நச்சுச் சூழலுக்கு என் குழந்தைகளை உட்படுத்தியதற்காக நான் உணர்ந்த அவமானத்தில் இருந்தும் குற்ற உணர்வில் இருந்தும் வெளியே வந்துவிட்டேன்.

நல்ல வேளை, நான் கொல்லப்படவில்லை. இது நீண்ட காலத்தை எடுத்துகொண்டது, நான் காயப்பட்டேன். ஆனால், தற்போது நானும் என் மகளும் சுதந்திரமாக இருக்கிறோம்.

 

(*உயிர் பிழைத்தவரின் அடையாளம் அவரது கோரிக்கையின் பேரில் மறைக்கப்பட்டுள்ளது)

நீங்கள் ஏதேனும் வன்முறையை எதிர்கொண்டால், தேசிய மகளிர் ஆணையத்தால் நடத்தப்படும் உதவி எண்ணை அழைக்கவும் - +91 782717017

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் உதவி பெற, நீங்கள் Aks Crisis Line - +91 8793088814 என்ற எண்ணையும் அழைக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cp902m9znzro

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போராடி களைப்பது என்றாலும் கூட தன்னம்பிக்கையை இழப்பதும் வெளியேறினால் என்ன மாதிரியான நிலை வரும் என்ற பயமும் இந்த வன்முறையான உறவில் இருக்க தூண்டும் என நினைக்கிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.