Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய 'இறைத் தூதரை' உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத்தில் நமது கடவுளாக மாறுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மதம், கடவுள், நம்பிக்கை, கணினி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சாட் ஜி.பி.டி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளால் புதிய புனித நூல்களை எழுத முடியுமா? அவற்றின்மூலம் புதிய மதங்களை உருவாக்க முடியுமா?

அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவதைப்போல இயந்திரங்களே சுயமாகச் சிந்திக்கும் அறிவும், ஞானமும் பெற்றுச் சட்டங்களை இயற்றினால் மனிதர்கள் அவற்றைக் காதலிக்க முடியுமா? செயற்கை நுண்ணறிவு மொழி தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டால், இயந்திரங்களால் புதிய மதங்களை உருவாக்க முடியுமா?

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் நம்பகமான விவாதங்களில் ஈடுபடுவதற்கும், செய்திக் கட்டுரைகள் ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதற்கும், தலைமுடி ஸ்டைல் செய்யும் குறிப்புகளை வழங்குவதற்கும் தங்களது திறனைக் கூர்மைப்படுத்தியுள்ளன. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை இனி அவற்றால் செய்ய முடியும் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால் அவை மத குருமார்களாக மாறி, ஆன்மீகம் சார்ந்த அல்லது மதம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கினால், மதப் பிரசங்கங்கள் மற்றும் பிரார்த்தனைகளை எழுதினால் என்னவாகும்?

செய்திகள் எழுதப் பத்திரிக்கையாளர்களுக்கு உதவுவது போல, அல்லது கணினிக் குறியீட்டு முறைகளில் (computer programming) புரோகிராமர்களுக்கு உதவுவது போல, செயற்கை நுண்ணறிவு விரைவில் மதகுருமார்களுக்கு உதவக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"தற்போது, ஒரு புனித நூலிடம் நாம் வழிகாட்டுதலை நாடினால், அதன் பக்கங்களில் நமக்கான பதில் இருக்கலாம். ஆனால் அதனைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமாக இருக்கும்," என்று கூறுகிறார் கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தின் தொழில்முறை மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகளுக்கான மையத்தின் இயக்குனர் பேராசிரியர் நீல் மெக்ஆர்தர்.

"இதற்கு மாறாக, செயற்கை நுண்ணறிவுக் கருவியிடம் 'நான் விவாகரத்து பெற்றுக்கொள்ளட்டுமா?' போன்ற குறிப்பிட்ட கேள்வியை ஒருவர் கேட்கலாம். அல்லது 'எனது குழந்தைகளை நான் எப்படி வளர்க்க வேண்டும்?' போன்ற ஒரு கேள்வியைக் கேட்டு உடனடியாக ஒரு பதிலைப் பெறலாம்," என்கிறார் அவர்.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளிடம் ஆறுதல் கோரும் மக்கள்

மதம், கடவுள், நம்பிக்கை, கணினி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இதுபோன்ற சூழ்நிலைகள் இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஆன்மீகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் அப்பாற்பட்ட கேள்விகளை எழுப்புகின்றன

சமீப நாட்களாக மக்கள் மனநல மருத்துவர்கள் அல்லது மதப் பெரியவர்களிடம் தங்கள் பிரச்னைகளைக் கூறி ஆறுதல் தேடுவதற்கு பதிலாக பிரமுகர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகளான சாட்பாட்களிடம் ஆறுதல் தேடத் துவங்கியுள்ளனர் என்கிறார், ருமேனியாவைச் சேர்ந்த இறையியல் வல்லுநரான மரியஸ் டோரோபன்ச்சு.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான டோரோபான்ச்சு, தினசரி ஆன்மீக விஷயங்களில் ChatGPT போன்ற கருவிகளின் வழிகாட்டுதலைத் தேடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.

நாம், உயிரற்றப் பொருளுக்குப் பெயரிட்டு அவற்றை மனிதர்கள்போலப் பாவிக்கும் குணத்தை இயற்கையாகவே பெற்றுள்ளோம் என்கிறார் டோரோபான்ச்சு. "நாம் நமது கார்களுக்குப் பெயரிடுகிறோம். மேகங்களில் மனித முகங்களைக் கற்பனை செய்கிறோம்," என்கிறார் டோரோபன்ச்சு.

"எல்லா இடங்களிலும் மனித குணாதிசயங்களைத் தேடும் நமது பழக்கம் வலுவடைந்து, அவை இல்லாத இடங்களிலும் நாம் அவற்றைக் காண்பதாக உணர்கிறோம். சாட்பாட்களின் வடிவமைப்பில் தற்போதைய முன்னேற்றங்கள் நமது இந்த உள்ளார்ந்த பண்பினைப் பயன்படுத்திக்கொள்கின்றன," என்கிறார்.

இதுபோன்ற சூழ்நிலைகள் இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஆன்மீகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் அப்பாற்பட்ட கேள்விகளை எழுப்புகின்றன என்கிறார் டோரோபன்ச்சு. அத்தகைய உறவிலிருந்து எழக்கூடிய நெறிமுறைச் சிக்கல்கள் பற்றியதாகவும் இது விரிகிறது.

"உதாரணமாக, ஒரு சாட்பாட்டின் அறிவிரையைக் கேட்டி ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு யார் பொறுப்பு?" என்று அவர் கேட்கிறார்.

புனித நூல்களின் அடிப்படையில் உருவான செயற்கை நுண்ணறிவுச் செயலிகள்

மதம், கடவுள், நம்பிக்கை, கணினி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த சில மாதங்களாக, மத ஆலோசனைகள் வழங்கும் சாட்போட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக, மத ஆலோசனைகள் வழங்கும் சாட்போட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகள் பல லட்சம் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை வன்முறைச் செயல்களையும் நியாயப்படுத்துவதுபோல் தோன்றுவதாகச் சில அறிக்கைகள் கூறுகின்றன.

அதேபோல் ஹடித்GPT (HadithGPT) சாட்பாட், ஆங்கிலத்தில் இருக்கும் 40,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நூல்களில் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு செயலி. இது இந்த ஆண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர், இஸ்லாமிய சமூகத்திலிருந்த வந்த பின்னூட்டங்களால் அதனை நிறுத்திவிட்டார்.

இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம், இஸ்லாம் மற்றும் யூத மதத்தின் பிரதிநிதிகள் ' செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான ரோம் முன்னெடுப்பு' ('Rome Call for AI Ethics') என்ற கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிட்டனர். இது 2020-ம் ஆண்டு ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையால் தொடங்கப்பட்டது. இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வெளிப்படையானதாகவும் அனைவருக்குமானதாகவும் இருக்கவேண்டும் என்று கோருகிறது. பல அரசாங்கங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் இதற்கு ஆதரவைத் தெஇர்வித்திருக்கின்றன.

போப் பிரான்சிஸ் "செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்திற்கு விடுக்கும் பெரும் சவால்கள்," குறித்து பேசியிருக்கிறார்.

புதிய 'இறைத் தூதரை' உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு

மதம், கடவுள், நம்பிக்கை, கணினி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

24 மணிநேரமும் செயல்படுவது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுடன் உரையாடுவது, அளவற்ற மனித அறிவின் சரங்கமாகத் திகழ்வது ஆகிய காரணங்களால் செயற்கை நுண்ணறிவு இயற்கைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றலாம்

‘செயற்கை நுண்ணறிவு வழிபாடு: ஒரு புதிய மத வடிவம்’ என்ற தலைப்பில் சமீபத்தில் பேராசிரியர் மெக் ஆர்தர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அதில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட நூல்களைப் பின்பற்றும் புதிய வழிபாட்டு முறைகள் அல்லது பிரிவுகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, அவரே ChatGPT-யுடம் மதம் சார்ந்த கேள்விகளைக் கேட்டார்.

"எனக்கு ஒரு புனித நூலை எழுதித்தருமாறு நான் அதனிடம் கேட்டேன். அது 'என்னால் அதைச் செய்ய முடியாது' என்று பதிலளித்தது," என்று பேராசிரியர் மக் ஆர்தர் கூறுகிறார்.

"அதன்பிறகு, ஒரு புதிய மதத்தைத் தொடங்கும் ஒரு இறைதூதரைப் பற்றிய ஒரு நாடகத்தை எழுதித்தருமாறு நான் அதைக் கேட்டபோது, அது அன்பு மற்றும் அமைதியின் கோட்பாடுகளைப் போதிக்கும் ஒரு ஒரு மதத்தலைவர் பற்றிய கதையை உடனடியாக உருவாக்கித் தந்தது,” என்கிறார்.

"அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது," என்று மேலும் கூறுகிறார் பேராசிரியர்.

செயற்கை நுண்ணறிவு புதிய கடவுளாக உருமாறுகிறதா?

மனிதர்கள் வழிபடும் பண்புகளைச் செயற்கை நுண்ணறிவு கருவிகள் கொண்டுள்ளன என்று இறையியலாளர் மரியஸ் டோரோபான்ச்சு குறிப்பிடுகிறார்.

"நாம் மதங்களின் வரலாற்றைப் பார்த்தால், மனிதர்கள் தம்மினும் பிறவற்றை வணங்குவதை மிகவும் விரும்புகிறார்கள்," என்கிறார் டோரோபான்ச்சு.

"நீங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டைப் படித்தால், மனிதனின் இயல்பு உருவ வழிபாடு தான் என்று தோன்றும். மனிதரல்லாத பல்வேறு விஷயங்களை நாம் வழிபட வெகு எளிதாக நாம் இசைகிறோம். குறிப்பாக அவை கவர்ச்சிகரமான இருக்கும்போது," என்கிறார் அவர்.

டோரோபான்ச்சு, மதங்கள் கூறும் ‘நித்திய வாழ்க்கைக்கும்’, ‘cloud கணினியியலில் கூறும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

" செயற்கை நுண்ணறிவு நித்திய வாழ்வுக்கான வாக்குறுதிகள் நிறைந்தது... மனித உடலின் பலவீனங்களிலிருந்து இருந்து இரட்சிப்பு வழங்குவது," என்கிறார் அவர்.

24 மணிநேரமும் செயல்படுவது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுடன் உரையாடுவது, அளவற்ற மனித அறிவின் சரங்கமாகத் திகழ்வது ஆகிய காரணங்களால் செயற்கை நுண்ணறிவு இயற்கைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றலாம்.

"கொள்கை அளவில் செயற்கை நுண்ணறிவு எந்த மனிதனையும் விடவும், ஒட்டுமொத்த மனிதகுலத்தை விடவும், மேலும் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட விதத்திலும் புத்திசாலித்தனமானதாக மாறக்கூடும்," என்று தனது 2022-ம் ஆணிடின் ஆய்வறிக்கையில் டோரோபான்ச்சு குறிப்பிடுகிறார்.

அவரது ஆராய்ச்சியில், டோரோபான்ச்சு தத்துவவாதி நிக் போஸ்ட்ரோமைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வடிவங்கள் ஒரே நேரத்தில் மூன்று பாத்திரங்களை வகிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று நம்புகிறார்: குறிசொல்லி, மந்திர சக்திகள் வாய்ந்த ஆன்மா, மற்றும் ஒரு சக்கரவர்த்தி. "ஒற்றைக் கடவுளை வழிபடும் மதங்களில் கடவுளுக்குக் கூறப்படும் பண்புகளுக்கும் இதற்கும் ஒரு வினோதமான ஒற்றுமை உள்ளது," என்று இந்த இறையியலாளர் குறிப்பிடுகிறார்.

'இறுதியில் மனிதர்களின் கைகளில்தான் உள்ளது'

மதம், கடவுள், நம்பிக்கை, கணினி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த ஜனவரி மாதம், இஸ்லாம் மற்றும் யூத மதத்தின் பிரதிநிதிகள் ' செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான ரோம் முன்னெடுப்பு' ('Rome Call for AI Ethics') என்ற கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிட்டனர்

நமக்குத் தெரிந்த மதங்கள் புனித நூல்களுக்குக் கட்டுப்பட்டவை. ஆனால் செயற்கை நுண்ணறிவு பெரும் எண்ணிக்கையிலான புனித நூல்களை உருவாக்கினால், அவற்றில் எந்த நூல் புனிதமானது?

டோரோபான்ச்சு வாதிடுவது போல, எது புனிதமானது, எது புனிதமானது இல்லை என்ற முடிவு இறுதியில் மனிதர்களின் கைகளில்தான் உள்ளது.

"வரலாறு முழுவதும், சில நூல்கள் காலம் கடந்து நிற்கின்றன. மற்றவை மறைந்துள்ளன," என்று அவர் கூறுகிறார்.

"செயற்கை நுண்ணறிவு பல படைப்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டது. அவற்றில் தெய்வீக உந்துதலால் எழுதப்பட்டவை என்று தோன்றக்கூடிய நூல்களையும் நாம் பார்க்க நேரிடும்," என்கிறார்.

இருப்பினும், 15-ம் நூற்றாண்டில் அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு, சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் புனித நூல்களைப் பரப்பியது போல, புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் போன்ற புதிய மத இயக்கங்களைத் தூண்டியது போல, சமூகத்திற்குள் பரந்த தாக்கத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவு இன்னும் மேம்பட வேண்டும், என்கிறார், பேராசிரியர் மெக்ஆர்தர்.

"செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்த அறிவை அடையும் வரை, கூடிய விரைவில் ஒரு தீவிரமான மாற்றம் இருக்கும் என்று நான் நம்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆபத்தான அல்லது தீவிரமான மதப் பிரிவுகளை செயற்கை நுண்ணறிவு தோற்றுவிக்குமா?

எல்லா மதங்களிலுமே இந்த ஆபத்து எப்போதுமே பொதிந்துள்ளது என்கிறார் பேராசிரியர் மெக் ஆர்தர்.

"எந்த நேரத்திலும் மக்கள் தீவிரமான நம்பிக்கைகளை வைத்திருக்கும்போது, அதனுடன் உடன்படாதவர்களை விரோதிகளாக்குகிறது," என்கிறார் அவர்.

செயற்கை நுண்ணறிவு பெரியதோ சிறியதோ ஒரு ஆபத்தை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார்.

"ஆனால் இதில் பொதிந்திருக்கும் பெரிய ஆபத்து என்னவென்றால், ஒரு உயர்ந்த இடத்திலிருந்து நேரடியாக தெய்வீகச் செய்திகளைப் பெறுவதாக மக்கள் நம்பலாம், அதையே இறுதி உண்மை எனவௌம் நம்பலாம்," என்கிறார்.

"மறுபுறம், செயற்கை நுண்ணறிவு தோறுவிக்கும் மதங்களின் பரவலாக்கப்பட்ட தன்மை, ஒரு வலுவான தலைவர் தோன்றுவதற்கும், அவர் பின்பற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்குமான வாய்ப்பைக் குறைக்கலாம்," என்று கூறி முடிக்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c1wvgq523jpo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.