Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சினிமா கண்ட 'கலைமகன்' : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவுதினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

21 JUL, 2023 | 05:16 PM
image
 

லையுலகின் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் கற்பகத்தரு, தமிழ் சினிமா சிம்மாசனத்தில் வேறு யாரும் அமர முடியா வேந்தராக வீற்றிருந்த திரைமுடி சூடிய 'திரைச்சக்கரவரத்தி', வெள்ளித்திரையில் நவரசங்களை நவநூறுகளாக அள்ளி வழங்கிய நவரச நாயகன், கலைமகளின் மூத்த கலைமகன், உலகின் தவநடிகபூபதி, சிரம் தாங்கிய சிகை முதல் பாத நகம் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உணர்ச்சியூட்டி நடிக்கச் செய்த பெரும் ஆற்றல் கொண்ட நடிப்பின் 'யுகபுருஷர்', 'தாதா சாஹெப் பால்கே' நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  22வது நினைவுதினம் இன்று! (21/07)

60 ஆண்டுகால நடிகர் என்ற முறையில் நாடகம் மற்றும் தமிழ் திரையுலகுக்கு தொண்டாற்றி, பல கோடி மக்களின் இதயங்களில் நிரந்தரமான இடத்தைப் பெற்று புகழோடு வாழ்ந்து, மறைந்தவர்தான் மகா நடிகர் செவாலியே, டாக்டர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.  

உலக வரலாற்றை எழுதும்போது கி.மு, கி.பி (கிறிஸ்துக்கு முன், கிறிஸ்துக்கு பின்) என எழுதுவர். ஆயினும், திரையுலக வரலாற்றை எழுதுவதானால், சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின் (சி.மு, சி.பி) என்றுதான் எழுதவேண்டியிருக்கும். அந்தளவுக்கு தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக விளங்கியவர் சிவாஜி கணேசன்.  

தனது அயராத உழைப்பினால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்து 'நடிப்பின் இமயம்' என உலகப் புகழ் பெற்று விளங்கிய ஒரே நடிகர் அவர். 

இந்திய அரசின் உயரிய விருதுகளான 'பத்மஸ்ரீ', 'பத்மபூஷண்' மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கிய 'டாக்டர் சிவாஜி', கலையுலகின் மிகச்சிறந்த கௌரவமான 'தாதா சாஹெப் பால்கே', பிரான்ஸ் நாட்டின் 'செவாலியே சிவாஜி', இலங்கை வழங்கிய 'கலைக்குரிசில்', தமிழக அரசின் 'கலைமாமணி' போன்ற விருதுகளால் அலங்கரிக்கப்பட்டவர் சிவாஜி.

1960இல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக எகிப்து நாடு சிறந்த நடிகருக்கான ஆசிய ஆபிரிக்க விருதினை வழங்கி சிறப்பித்தது. இலங்கையின் பிரபல நாளிதழிலான தினகரன் "கலைக்குரிசில்"வழங்கி கௌரவம் தந்தது.

1962இல் அமெரிக்க அரசு, இந்திய பிரதமர் நேருவுக்கு பின் சிவாஜிக்கு நயாக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி வழங்கி தங்கச்சாவி கொடுத்து நடிப்பின் சிகரத்துக்கு கிரீடம் சூட்டி உயர்ந்த கௌரவம் அளித்தது. அப்போது உலகின் தலை சிறந்த நடிகர்களான மார்லன் பிராண்டோ, ஷெல்லி வின்டர்ஸ் ஆகியோரை சந்தித்தார். 

unnamed.jpg

சிறு வயது நடிப்பாற்றல் 

1928ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி சுதந்திர போராட்ட தியாகி சின்னையா மன்றாயர், ராஜாமணி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கணேசமூர்த்தி. 

சிறு வயதிலே வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை கம்பளத்தான் கூத்தாக நடிக்கும் கலைஞர்களை பார்த்த சிறுவன் கணேசமூர்த்திக்கு நடிப்பிலே கவனம் ஆழப்பதிந்துவிட்டது. 

இந்நிகழ்வுகளால் கலைத்தாகம் தீவிரமாக கணேசமூர்த்தியின் பிஞ்சு உள்ளத்தில் ஊற்றெடுத்தது. பின்னர் பல நாடக கம்பனிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனல் கக்கும் வசனங்களால் இவ்விளைஞன் நாடக உலகில் பேசப்படலானான். இந்த சிறுவனின் நடிப்பாற்றலை பாராட்டாதவர்களே இல்லை. நடிகவேள் எம்.ஆர். ராதா, காக்கா ராதாகிருஷ்ணன் போன்றோருடன் சென்னைக்கு சென்ற கணேசமூர்த்தி, அங்கு சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்தார். 

கணேசமூர்த்தி 'சிவாஜி கணேசன்' ஆன கதை 

சென்னையில் அறிஞர் அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. சிறுவன் கணேசனின் தமிழ் உச்சரிப்பு அண்ணாவை கவர, அண்ணாவின் கைவண்ணத்தில் உருவான 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற வீரசிவாஜியின் வரலாற்று நாடகத்தில் வீரசிவாஜியாக நடிக்கும் வாய்ப்பை கணேசமூர்த்தி பெற்றார். 

அந்த நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாகவே இருந்தது. அண்ணாவின் நீண்ட வசனங்களை மனனம் செய்துகொள்ள முடியாத சூழலில் எம்.ஜி.ஆர் சற்று பின்வாங்கவே, அந்த வாய்ப்பு கணேசமூர்த்திக்குப் போனது. 

காலையில் கொடுத்த 90 பக்க வசனங்களையும் மனப்பாடம் செய்து அன்று மாலையே அண்ணா முன் ஒப்புவித்தார், கணேசன். நடைபெறும் சுயமரியாதை மாநாட்டு நிகழ்வில் கணேசன் 'பேசப்படுவான்' என அப்போதே கணேசனின் ஆற்றலைப் பற்றி தீர்க்கதரிசனமாக அண்ணா வாழ்த்தினார்.

1946ஆம் ஆண்டு சென்னையில் நடந்த 7ஆவது சுயமரியாதை மாநாடு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. அப்போது இடம்பெற்ற இந்நாடகத்தில் சத்ரபதி வீர சிவாஜியாக நடித்த 18 வயதே நிரம்பிய கணேசனின் நடிப்பை பார்த்து வியந்த பெரியார், 'சிவாஜி கணேசன்' என்ற பட்டத்தை வழங்கி பாராட்டினார். 

'பராசக்தி' - திரைப்பிரவேசம் - கம்பீர வசனம் 

download.jpg

பாவலர் பாலசுந்தரம் எழுதிய 'பராசக்தி' நாடகம் அப்போது பிரபல்யம் பெற்றிருந்தது. இதை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் நெஷனல் தியேட்டர்ஸ் நிறுவனர் பி.ஏ.பெருமாள் ஈடுபட்டிருந்தார். 

1950இல் அப்படத்தில்தான் சிவாஜி கணேசன் பல விமர்சனங்களை ஏற்ற வண்ணம் திரையில் பிரவேசித்தார். 

அவர் படத்தில் பேசிய முதல் வசனம் "சக்ஸஸ்". பல ஆயிரம் அடி படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் படத்தை பார்த்துவிட்டு, "ஏம்பா இந்த புதுப்பையனை போட்டு விஷப்பரீட்சை செய்கிறீர்கள்? கே.ஆர் ராமசாமி அல்லது டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்களை நடிக்கச் சொல்லி படத்தை முடியுங்கள்" என்று கூறினார்.  

சிவாஜி கணேசன் துடித்துப்போனார். இத்துடன் தன் கலை வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான் என நொந்துபோனார். சிவாஜி கணேசன் இல்லாமல் 'பராசக்தி' இல்லை என்ற ஒரே நோக்கத்துடன் படத்தை தயாரித்து  வெளியிட்டார் பி.ஏ.பெருமாள். 

கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி கணேசன், "குணசேகரன்" கதாபாத்திரத்தில் அனல் பறக்கும் சிம்மக்குரலால் பேசி நடித்த விதமும் பேசிய வசனங்களும் 17.10.1952 தீபாவளி திருநாளில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்துக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்தது.   

படத்தில் தனது உணர்ச்சிபூர்வமான நடிப்பை பதிவு செய்த சிவாஜியை ஒரே நாளில் புகழின் உச்சியை தொடவைத்த நீதிமன்ற வழக்கு காட்சி இன்றளவும் மிகப் பிரபலம்.

அந்த காட்சியில் நீதிபதியாக உட்கார்ந்திருப்பார் கவியரசு கண்ணதாசன். 'பராசக்தி' தொடங்கி 'பூப்பறிக்க வருகிறோம்' படம் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழிப்படங்களுடன் சுமார் 305  படங்களில் நடித்து உலக சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 

இவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை எனலாம். இருப்பினும் தன் வாழ்நாளில் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீண்ட நாள் காத்திருந்தார். அந்த எண்ணம் கடைசி வரை ஈடேறவில்லை. 

'வீரபாண்டிய கட்டபொம்மன்' 

தமிழ் திரையில் பல புதுமைகளை செய்தவர் சிவாஜி. முதலில் விக் வைத்து நடித்தவர் அவரே. இவரின் சிறு வயது கனவான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நிறைவடைந்த தருணம். 

1959ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நனவாகி நடிகர் திலகம் சிவாஜி கணேசனை உலகறியச் செய்தது. அப்போது சிவாஜிக்கு வயது 30. 

"வீரபாண்டிய கட்டபொம்மன்" கெய்ரோவில் விருது பெற்றதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர் தலைமையில் சிவாஜிக்கு ஒரு மாபெரும் விழாவே எடுத்து மகிழ்ந்தது, திரையுலகம்.

விமான நிலையம் வரை சென்று சிவாஜியை வரவேற்று கௌரவமளித்தார் எம்.ஜி.ஆர். 

சிவாஜியின் தொழில் சிரத்தைக்கு ஓர் உதாரண சம்பவம், சேலம் மாநகராட்சி நடத்திய பொருட்காட்சியில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் நடைபெற்றபோது வீரவசனங்களை உணர்ச்சி பொங்க பேசிய சிவாஜி வாயில் இரத்தம் வழிந்தது. அதை துடைத்தெறிந்துவிட்டு முழு நாடகத்தையும் பூரணப்படுத்திவிட்டுத்தான் சென்னை திரும்பினார், அவர்.  

1426846001-5213.jpg

தமிழ் சினிமாவில் முதன்முதலாக பெரிய 'கட்டவுட்', 'வணங்காமுடி' படத்துக்காக சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 

'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்த சிவாஜியை ரசித்த மூதறிஞர் ராஜாஜி, 'பரதனைக் கண்டேன்' என பாராட்டி சான்று வழங்கி கௌரவித்தார்.

சினிமா பார்க்கும் பழக்கமில்லாத என் உள்ளத்தை சினிமா பார்க்கத் தூண்டியவர் சிவாஜி கணேசனே என கூறியவர் ராஜாஜி. 

1956ஆம் ஆண்டு சிவாஜியின் இளைய மகன் இளைய திலகம் பிரபு பிறந்த அதே ஆண்டில் சிவாஜியின் "நான் பெற்ற செல்வம்" படம் மிகப் பொருத்தமாக வெளியானது. 

mgr__sivaji_ganesan_in__koondu_kili__mov

நடிகர் திலகமும் மக்கள் திலகமும் 

தமிழ்த்திரையில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து நடித்த முதலும் கடைசியுமான படம் 'கூண்டுக்கிளி'. இருவரும் அதன் பிறகு இறக்கும் வரை ஒரு படத்திலேனும் இணைந்து நடிக்கவில்லை. தமிழ்த்திரையில் இவ்விரு திலகங்களும் மீண்டும் இணையாதது ஒரு திருஷ்டி என கூறலாம்.

"உத்தமபுத்திரன்" படம் ஒரே நேரத்தில் இருவரும் நடிப்பதாக தனித்தனியே விளம்பரங்கள் செய்யப்பட்டது. பிறகு சிவாஜியே இதில் இரட்டை வேடம் ஏற்று  நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற "யாரடி நீ மோகினி" பாடலுக்கு சிவாஜி ஆடிய நடன அசைவுகள் இன்று வரை பேசப்படுகின்றது. இதற்கு மாறாக எம்.ஜி.ஆர் "நாடோடி மன்னன்" படத்தில் இரட்டை வேடம் பூண்டு நடித்தார். இரண்டு படங்களும் 1958இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. 

f0033abcd2a88bcb150546836ffc6a6b.jpg

'நவராத்திரி' - 'தில்லானா மோகனாம்பாள்' - 'தங்கப்பதக்கம்'

சிவாஜியின் 100வது படமான "நவராத்திரி" மாபெரும் வெற்றி பெற்று அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு வசூலை வாரிக்கொட்டிய படம். ஒன்பது விதமான தோற்றங்களில் ஒன்பது விதமான நடை, நடிப்பு, அங்க அசைவு, குரலில் மாற்றம் என ஒரு பாத்திரத்துக்கும் மற்ற பாத்திரத்துக்கும் தொடர்பே இல்லாமல் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார் சிவாஜி. 

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி, பத்மினி நடித்த "தில்லானா மோகனாம்பாள்" ஓர் கலைக் காவியமாகும். இப்படத்தின் வெள்ளிவிழாவில் "சிக்கல் ஷண்முகசுந்தரமாக நடித்து தம்பி சிவாஜி பிரமாதப்படுத்திவிட்டார்" என விழாவுக்கு தலைமையேற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார். 

pic15.png

சிவாஜியுடன் அதிக படங்களில் (சுமார் 50 படங்கள்) ஜோடியாக நடித்தவர் நாட்டியப் பேரொளி பத்மினி. காட்சியை சொன்னவுடன் நன்றாக உள்வாங்கிக்கொண்டு இயக்குநரின் எதிர்பார்ப்புக்கும் மேலாக பணியாற்றுவதில் சிவாஜி வல்லவர் என இயக்குநர் பி.மாதவன் பல மேடைகளில் கூறியுள்ளார். 

பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி நடித்த "தங்கப்பதக்கம்" படத்தில் கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்தில் சிவாஜி பின்னியெடுத்திருப்பார். இப்படத்தில் உணர்ச்சிமிக்க ஒரு காட்சி, தன் மனைவி லக்ஷ்மி (கே.ஆர்.விஐயா) இறந்ததாக ஓர் செய்தி தொலைபேசியில் உயர் அதிகாரிக்கு(கே.விஜயன்) வரும். இதை எஸ்.பி.சௌத்ரியிடம் (சிவாஜி) சொன்னவுடன் ஒரு தளர்ந்த நடையுடன் சிவாஜி நடித்த நடிப்பும், வீட்டுக்குச் சென்று பொலிஸ் சீருடையை (சட்டை) அகற்றி வெறும் பணியனுடன் மாடிப்படியில் தள்ளாடியபடி ஏறி, தன் அன்பு மனைவியின் உடலை கரங்களில் ஏந்தி இக்கலைஞன் கண்ணீர் விட்டு கதறும் காட்சியில், திரையரங்குகளில் அழாதவர்கள் யாருமே இருக்க முடியாது. 

'தில்லானா மோகனாம்பாள்' படத்துக்குப் பின், 'தங்கப்பதக்கம்' படத்துக்காகவாவது சிவாஜிக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என தமிழ் திரையுலகம் எதிர்பார்த்தது. ஆனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் பலன். படம் நன்றாக இல்லை என்பதற்காக பாதியில் வந்துவிட்டோம் என சொல்பவர்கள் உண்டு. ஆனால், துக்கம் தாளாமல் சிவாஜியின் "ஹரிச்சந்திரா" படத்தை பார்க்க முடியாமல் பாதியில் ரசிகர்கள் எழுந்து வந்த நிகழ்வுகளும் உண்டு. இதைவிட பெரிய விருது எந்தவொரு நடிகனுக்கும் வாய்க்காது.

எப்போதுமே தமிழ்நாட்டின் வேண்டுதலை இந்திய மத்திய அரசு காதில் போட்டுக்கொள்ளாது அல்லது காலந்தாழ்த்தி வழங்கும். இல்லையேல் இறக்கும் தறுவாயில் நிறைவேற்றும்.

விருதுகளுக்குரிய நடிகர் 

"முதல் மரியாதை" படத்தில் சிவாஜி நடிக்கவே இல்லை, "மலைச்சாமித்தேவர்" என்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார். அதிலும் சிவாஜி ரசிகர்கள் சிவாஜிக்கு தேசிய விருதை எதிர்பார்த்தனர். அரசியல் சித்து விளையாட்டு இந்தியாவில் கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. 

mudhal-mariyadhai-small_dvd.original.jpg

இப்படத்துக்காக சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கும் என அதிகம் எதிர்பார்த்தவர் இப்படத்தின் இயக்குநர் பாரதிராஜா. காலந்தாழ்த்தி 'தாதா சாஹெப் பால்கே' என்ற உயரிய விருதை மத்திய அரசு சிவாஜிக்கு வழங்கியது.

விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது சிவாஜியின் "நடிப்பு" என்ற ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் விருதாகும். சிவாஜிக்கு 'நடிகர் திலகம்' என்ற பட்டத்தை 'பேசும் படம்' சஞ்சிகை வாசகர் ஒருவரால் வழங்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அந்த ரசிகர் யாரென அறியப்படவில்லை.

'பராசக்தி' படப்பிடிப்பின்போது சிவாஜியை வைத்து ஏன் விஷப்பரீட்சை செய்கிறீர்கள் எனக் கூறிய மெய்யப்ப செட்டியார் பின்னாளில் சிவாஜியின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த வரலாறும் நிகழ்ந்தது. இதே தமிழ் சினிமா களத்தில் தான்.

சிவாஜியைக் கொண்டு ஏவிஎம் நிறுவனம் இதுவரை பல படங்கள் தயாரித்து வெற்றி கண்டது. சிவாஜியின் 125வது படமான "உயர்ந்த மனிதன்" ஏவிஎம்மின் வெற்றிப்படமாகும். காலம் ஒருவரை எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். 

1972இல் முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி நடித்த "தவப்புதல்வன்" படத்தில் "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" பாடலில் மொஹலாயர் காலத்தில் வாழ்ந்த இசைக்கலைஞன் "தான்சேனாக" நடிக்கும் ஒரு கனவுக் காட்சியில், தான்சேன் இப்படித்தான் இருப்பான் என தன் வீட்டிலேயே (அன்னை இல்லம் - சிவாஜி வீட்டின் பெயர்) ஒப்பனை செய்துகொண்டு நேராக செட்டுக்கு வந்து சில மணிநேரங்களில் படப்பிடிப்பை பூர்த்தி செய்தவர் சிவாஜி. 

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் படம், ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்து அசத்திய 'தெய்வமகன்'. சிவாஜியின் 150வது வெள்ளிவிழா படம் மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் விவசாயியாக சிவாஜி நடிப்பில் உருவான "சவாலே சமாளி". 200வது படம் இவரது சிவாஜி புரொடக்ஷன் தயாரித்து வசூலை வாரிக்குவித்த "திரிசூலம்". இந்த படத்திலும் சிவாஜிக்கு மூன்று வேடங்கள். 

q.jpg

இலங்கைக்கு வருகை 

"பைலட் பிரேம்நாத்", "மோகனப்புன்னகை" படங்களின் படப்பிடிப்புக்காக இலங்கை வந்த சிவாஜி கணேசன், அதன் பிறகு "பால்கே" விருது பெற்று, அதன் பாராட்டு விழாவுக்காக இலங்கை வந்தார். 

இவ்விழாவில் (கொழும்பு BMICH மண்டபத்தில்) சிவாஜிக்கு ஐம்பது பவுன் தங்கக் கிரீடம் இலங்கை ரசிகர்களால் சூட்டப்பட்டது. சிங்கப்பூரில் சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழாவில் இவ்வுலகில் தலைமுடி முதல் பாத விரல் நகம் வரை அங்கங்களுக்கு உணர்வு  கொடுத்து நடிக்கும் ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே என கவிப்பேரரசு வைரமுத்து விளித்துக் கூறி சிவாஜிக்கு சிறப்பாற்றினார்.

'மனோஹரா'

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் கூறும்போது,  அரோஹரா பாடிக்கொண்டிருந்த தமிழ் சினிமா, (புராண, பக்திப் படங்கள் வந்துகொண்டிருந்த காலம்) சிவாஜியின் "மனோஹரா"வுக்கு பின் தான் மாற்றம் கண்டது எனவும், உன் நடையழகை பார்த்துத்தான் நானே விசில் அடிக்க கற்றுக்கொண்டேன் என சிவாஜியை வார்த்தைகளால் அலங்கரித்தார்.

siv_1.png

 பல ரூபங்கள்... பல வேடங்கள்...

இரையின் பெரும் பகுதியை சிங்கம் சாப்பிட்டுவிடும். அதுபோல் இக்கலைஞன் எல்லா வகையான பாத்திரங்களிலும் தன் உணர்ச்சிமிகு நடிப்பாற்றலை, ஆளுமையை விட்டு வைக்கவில்லை எனலாம். நம் விழிகளால் காணமுடியாத இதிகாச, புராண பாத்திரங்களை சிவாஜி கணேசன் என்ற மனிதன் மூலம் திரையில் சிவனாக, கிருஷ்ணனாக, விஷ்ணுவாக, முருகனாக, நாரதராக, பரதனாக, கர்ணனாக, அர்ஜுனனாக, சீதையாக, நூர்ஜஹானாக, சலீமாக, சாக்ரடீஸாக, ஒத்தெல்லோவாக, சாம்ராட் அசோகனாக, ஜூலியஸ் ஸீஸராக, ஹாம்லெட்டாக, பபூனாக, எமனாக, வீரசிவாஜியாக, கட்டபொம்மனாக, வீரபாகுவாக, மகாகவி காளிதாஸனாக, பாரதியாக, இசைக்கலைஞன் தான்சேனாக, அப்பராக, சுந்தரமூர்த்தி நாயனாராக, சேக்கிழாராக, ஆழ்வாராக, அரிச்சந்திரனாக, ராஐ ராஐ சோழனாக, துஷ்யந்தனாக, புத்தராக, விஸ்வாமித்ரராக, வ.உ.சியாக, ஜோர்ஜ் மன்னராக, தந்தையாக, அண்ணனாக, சமூகப் பாத்திரங்களான டாக்டர், நீதிபதி, ரயில் சாரதி, விமானி, இராணுவ வீரன், ஊனமுற்றவன், ஊமை, பாடகன், கொலைகாரன், பைத்தியக்காரன், மரமேறி, வழக்குரைஞர், ரிக்ஷாக்காரன், காதலன், மிருதங்க - நாதசுர வித்வான், பாதிரியார் என இன்னும் பலராக இக்கலைமகன் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை. 

உலக சினிமா வரலாற்றில் சிவாஜியைப் போல் ஒப்பாரும் மிக்காரும் யாருமில்லை. இது கலையுலக சரித்திரம் கண்ட உண்மை.

சிவாஜி ஒரு சிறந்த கார் மெக்கானிக், மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஆர்வமுள்ளவர், நல்ல பாடகர், நடன அசைவுகளோடு ஆடும் கலைஞன். "திருவிளையாடல்" படத்தில் மூன்றே நாட்கள் பயிற்சி செய்து இவர் ஆடிய ருத்ரதாண்டவம் படத்தின் மைல்கல். 

எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் ஒரே எடுப்பில் (டேக்கில்) ஏற்ற இறக்கத்தோடு வசனங்களை பேசி சரியான வியூகம் அமைத்து  நடித்து காட்டுபவர் சிவாஜி. 

karnan.jpg

'கர்ணன்' பட காட்சி 

'கர்ணன்' படத்தில் குந்திதேவி (ராஐம்பாள்) கர்ணன் (சிவாஜி) நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் தாயும் மகனும் பேசிக்கொள்ளும் உணர்வுபூர்வ வசனம் பொருந்திய காட்சியில் சிவாஜி கர்ணனாகவே வாழ்ந்திருப்பார்.

சக்தி ஆர். கிருஷ்ணசாமியின் எழுத்துகளுக்கு உயிரோட்டம் கொடுத்து அக்காட்சிக்கு சிறப்பூட்டியிருப்பார் சிவாஜி. மஞ்சத்தில் தாயும் மகனும் வீற்றிருந்து கர்ணன் (சிவாஜி) வசனம் பேசிக்கொண்டே இருப்பார். கெமரா சுற்றிக் கொண்டேயிருக்கும். தொகுப்பில்லாமல்(எடிட்டிங்) ஒரே எடுப்பில் (டேக்) எடுக்கப்பட்ட காட்சி அபாரமானது. 

தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத காலங்களில் 'கர்ணன்' போன்ற படங்கள் உருவானமை தமிழ் சினிமாவின் சிறப்பை உலகம் அறியச் செய்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழராக  பிறந்தது உலகவாழ் தமிழ் நெஞ்சங்களின் பாக்கியம். 

நடிப்பின் பல்கலைக்கழகமாக நானிலமே போற்றும் உலக மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் பல யுகங்கள் கடந்தும் போற்றத்தக்கது. 

- எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை.

https://www.virakesari.lk/article/160612

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.