Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சினிமா கலைஞர்களுக்கு குரல் கொடுத்த ஃபெஃப்சி; விமர்சித்த பவன் கல்யாண் - வலுக்கும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஃபெஃப்சி அமைப்பு- பவன் கல்யாண்

பட மூலாதாரம்,JANASENA PARTY/FACEBOOK

 
படக்குறிப்பு,

நடிகர் பவன் கல்யாண்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 30 ஜூலை 2023, 07:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெஃப்சி) (Film Emloyees Federation Of South India) புது விதிகள் குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே அது.

கடந்த 2021ஆம் ஆண்டு இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா நடித்த “வினோத சித்தம” திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகி விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதே திரைப்படத்தை தற்போது நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி “ப்ரோ” என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிக்க, தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடித்துள்ளனர்.

ஃபெஃப்சி அமைப்பு- பவன் கல்யாண்

பவன் கல்யாண் பேசியது என்ன?

“ப்ரோ” திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி திரையரங்குளில் வெளியானது. அதற்கு முன்பாக, ஐதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பவன் கல்யாண் ஃபெஃப்சியின் புதிய விதிகளான தமிழ் திரைப்படங்களில், தமிழ் நடிகர்கள் மற்றும் தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

“தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு திரையுலகம் இன்று வளர்ச்சி அடைந்ததாக இருக்க காரணம், இங்கிருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான்.

எல்லா மொழி மக்களும் ஒன்றாக இருக்கும்போதுதான் அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டுமே நாம் வேலை கொடுக்க வேண்டும் என யோசிப்பது நம்மை நாமே குறுகிய மனப்பான்மைக்குள் வைத்துக் கொள்ளும் தன்மை,” எனப் பேசினார்.

மேலும், பவன் கல்யாண் பேசும்போது, “தமிழ் திரைப்படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில் இருந்து தமிழ் சினிமா வெளியே வந்தால்தான் ஆர்ஆர்ஆர் போன்ற உலகத் தரம் வாய்ந்த சினிமாவை, தமிழ் சினிமாவால் தர முடியும்,” என்றார்.

ஃபெஃப்சி அமைப்பு- பவன் கல்யாண்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

நாசர்- நடிகர் சங்கத் தலைவர்

வீடியோ வெளியிட்டு பதிலளித்த நாசர்

பவன் கல்யாணின் இந்த மேடைப் பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரை நட்சத்திரங்கள் பலரும் பவன் கல்யாணின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பவன் கல்யாணுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பிற மொழி நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.

நாம் இப்போது பான் இந்தியா என்ற அளவிலும், சர்வதேச அளவிலும் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் இங்கே நடிக்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, யாரும் பிற மொழி நடிகர்கள் தமிழ் படங்களில் பணியாற்றக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டார்கள். தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்கவேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள்தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை,” எனப் பேசியுள்ளார்.

மேலும், “பிற மொழிகளில் உள்ள திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக்க ஒரு திரையுலகம்தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது.

சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகியுள்ளனர். இந்தத் தவறான தகவலை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம், அதை உலகளவில் கொண்டு செல்வோம்,” எனக் கூறியுள்ளார்.

ஃபெஃப்சி அமைப்பு- பவன் கல்யாண்

பட மூலாதாரம்,RK SELVAMANI / FACEBOOK

 
படக்குறிப்பு,

ஆர்.கே.செல்வமணி- இயக்குநர் மற்றும் ஃபெஃப்சி அமைப்பின் தலைவர்

ஃபெஃப்சியின் பதில் என்ன?

உண்மையிலேயே ஃபெஃப்சி-யின் புதிய விதிகள் குறுகிய மனப்பான்மையுடன்தான் எடுக்கப்பட்டதா என ஃபெஃப்சி தலைவர் ஆர். கே. செல்வமணியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.

அவர் பவன் கல்யாணின் இந்தப் பேச்சுக்கு, “சினிமாவில் சாதி, மதம் பார்க்கக்கூடாது என்பது உண்மைதான். தமிழ் சினிமாவில் 40 சதவீதத்திற்கும் மேலான தெலுங்கு தொழில்நுட்ப கலைஞர்களும், மலையாள தொழில்நுட்பக் கலைஞர்கள் 20 சதவீதத்திற்கும் மேலானவர்களும் பணிபுரிகிறார்கள்.

சினிமாவில் சாதி, மதம் பார்க்கக்கூடாது என்பதை பவன் கல்யாண் அவருக்கு அவரே கூறிக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.

ஆர்.கே.செல்வமணி தொடர்ந்து பேசும்போது, “அம்மா, அப்பாவிடம் அண்ணனுக்கு சோறு கேட்பது தவறில்லை தானே? அப்படித்தான் நாங்களும் எங்கள் கலைஞர்களுக்கு வேலை வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.

இதற்கு ஏன் கதறுகிறார்கள் எனத் தெரியவில்லை, ஃபெஃப்சி-யின் புதிய விதிகள் பற்றி மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். பவன் கல்யாண் அதை முழுமையாக, தெளிவாக படித்து விட்டுப் பேசவேண்டும்.

சிரஞ்சீவி இருக்கிறார். அவர் இங்கு வந்து படம் நடித்தால் எப்படியும் கார்களில் 30 பேர் கொண்ட குழு வரும். அவரைச் சார்ந்தவர்களையே தானே உடன் அழைத்து வருகிறார். அப்படித்தான் இதுவும். பவன் கல்யாண் முக்கியமான இடத்தில் இருக்கிறார். அவர் இப்படியெல்லாம் பொறுப்பற்று பேசக்கூடாது; சிந்தித்துப் பேசவேண்டும்,” என்றார்.

ஃபெஃப்சி அமைப்பு- பவன் கல்யாண்

பட மூலாதாரம்,S.R. PRABU

 
படக்குறிப்பு,

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வரும் “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”-இன் நிறுவனரான எஸ். ஆர். பிரபுவிடம் பவன் கல்யாணின் பேச்சு குறித்து பேசினோம்.

அதற்கு அவர், “ஃபெஃப்சி என்பது ஒரு தொழிலாளர் நலன் கருதும் அமைப்பு. அது தனது தொழிலாளர் நலனுக்காகத் தனது குரலை பதிவு செய்துள்ளது, அவ்வளவே. அதில் தவறு எதுவும் இல்லை. இதை சண்டையாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.

பவன் கல்யாண் ஃபெஃப்சி-யின் இந்தப் புதிய விதிகளை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். சாதி, மதம் தாண்டியது சினிமா என்றும், அனைவரும் ஒன்றாக உழைத்தால்தான் தமிழில் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

அப்படிப் பார்த்தால், “பொன்னியின் செல்வன் திரைப்படமும் தமிழில் தயாரிக்கப்பட்டதுதானே. அவர் ஃபெஃப்சி-யின் புதிய விதிகளை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கருத்தாகப் பார்க்கிறார். அது தவறு. இதை மாநில பிரச்னையாக மாற்றுவதோ, சண்டையாக மாற்றுவதோ தேவையில்லாத செயல்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c2x5k3122mno

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.