Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எண்ணூர் அம்மோனியா கசிவு
படக்குறிப்பு,

நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது.

கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது.

எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகம் வழியாக கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைனைப் பயன்படுத்தி கரையில் உள்ள கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம்,CCAG/X

படக்குறிப்பு,

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள்

நள்ளிரவில் கசிந்த அமோனியா

நேற்று இரவு 12.45 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. கசிவு ஏற்படத் தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து, கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமோனியா கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோரமண்டல் நிறுவனம் சார்பாக செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம்,CCAG/X

படக்குறிப்பு,

வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

அன்புமணி ராமதாஸ் கூறியது என்ன?

இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும்.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று கூறினார்.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை- பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர்"

"ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்"

"30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

"கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே வழங்க வேண்டும்" என்று அந்த இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cyxvww5e67go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமோனியா கசிவு: நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்? 8 கிராமங்களில் என்ன நடந்தது?

எண்ணூர் அமோனியா கசிவு

பட மூலாதாரம்,CCAG/X

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபாகர் தமிழரசு
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண், காது, மூக்கு, நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொழிற்சாலையில் உரம் தயாரிப்பதற்கான திரவ அமோனியம் நேரடியாக கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கடலுக்கு அடியில் உள்ள குழாய் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு, திரவ அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டதால் வாயு கசிந்துள்ளது.

இந்த திரவ அமோனியா, காற்றில் கலந்து , சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளது. காற்றில் பரவிய அமோனியா வாயுவால், தொழிற்சாலை அமைந்துள்ள பெரியகுப்பம் பகுதி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள சின்ன குப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி மூர்த்தி நகர், தாழங்குப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விஞ்ஞானிகள், உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசு, அந்தக் குழு தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கையளித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதுவரை, அந்த தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தள்ளார். தொழிற்சாலையை தற்காலிகமாக மூடவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோரமண்டல் நிறுவனம், கடற்கரையோரம் தங்களது அமோனியா இறக்கும் குழாயில் அசாதாரண சூழலை உணர்ந்ததாகவும், உடனடியாக தங்களது நிலையான செயல்பாட்டு முறையை கையாண்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் என்ன நடந்தது? மக்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்? அசம்பாவிதத்திற்கு யார் காரணம்?

 
மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்

நள்ளிரவில் 8 கிராமங்களில் என்ன நடந்தது?

செவ்வாய்க் கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் யாரோ சிலர் எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டியுள்ளனர்.

மிரண்டு எழுந்த மக்கள், மூச்சுவிட சிரமப்பட்டு, கதவுகளைத் திறந்துள்ளனர். கதவைத் திறந்ததும் சிலர் அங்கேயே மயங்கியுள்ளனர், சிலர் கண் விழிக்க முடியாமலும், சிலர் முக எரிச்சல் தாங்க முடியாமலும், சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் அலறித் துடித்து சாலையில் ஓடினர்.

“சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் திருவொற்றியூர் நோக்கி ஓடிச் சென்று என் குழந்தைகளை விட்டுவிட்டு, பின் மீண்டும் வந்து அக்கம் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மக்களையும் கதவைத் தட்டி வெளியேற்றினேன்,” என்கிறார் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா.

மீனவரான சுபத்ரா, தனது ஐந்து வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகளுடன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி உயிர் தப்பியுள்ளார்.

“எனக்கு மூச்சுவிட சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், எனக்கே அப்படி இருந்தால், எப்படி உணர்கிறோம் என்று சொல்லத் தெரியாத என் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டுதான், உயிரை கையில் பிடித்துக்கொண்டு அவர்களை காப்பாற்றினேன்,” என்றார் சுபத்ரா.

சுபத்ராவைப் போலவே, அந்தச் தொழிற்சாலை அமைந்துள்ள பெரியகுப்பம் பகுதி மக்கள் அனைவரும் தங்களது உடமைகளை விட்டு, ஓடிச் சென்றுதான் உயிர் தப்பியுள்ளனர்.

 

நள்ளிரவில் கதவைத் தட்டி காப்பாற்றியது யார்?

மருத்துவமனையில் உள்ள விஜயமூர்த்தி
படக்குறிப்பு,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயமூர்த்தி

இரவு 11.30மணிக்கு வாயு கசிவு நடந்திருந்தாலும், வீட்டிற்குள் இருந்ததால், மக்கள் ஆரம்பத்தில் எதுவும் உணராமல் இருந்துள்ளனர்.

“நாங்கள் மீனவர்கள். என் கணவர் பெரும்பாலும் இரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுவிடுவார். அதனால், இரவு கதவைச் சாத்தினால், அதிகாலையில் தான் திறப்போம். நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டி கூச்சலிட்டதால் முதலில் திறக்கவில்லை. பின்னர் தான் எனக்குத் தெரிந்தவர்களின் சத்தம் கேட்டு கதவைத் திறந்து வெளியேறினோம்,” என்றார் பெரியகுப்பத்தைச் சேர்ந்த ரோகிணி.

சுமார் 11.30 மணியளவில், பெரியகுப்பத்தை கடந்து மற்ற கிராமங்களுக்கு செல்லும் வழிப்போக்கர்கள்தான் இந்த அமோனியா வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன், அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதாகக் கூறுகின்றனர் பெரியகுப்பம் கிராம மக்கள்.

“இந்த ஆலையின் நிர்வாகத்தினரோ, காவல்துறையோ அல்லது அரசு அதிகாரிகளோ எங்களை மீட்கவில்லை. இந்த வழியாகச் சென்றவர்கள்தான் எங்களை வெளியே வரும்படி கதவைத்தட்டி வெளியேற்றினர். இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றதும்தான் அரசு பேருந்துகளும், ஆம்புலன்ஸ்களும் வந்தன. அங்கிருந்து தான் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றார் நந்தினி.

வழிப்போக்கர்கள் கதவை தட்டியபோது, பெரியகுப்பத்தில் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த விஜயமூர்த்தி, அடித்துப் பிடித்து வெளியேறி, தன் குடும்பத்தினர் மட்டுமல்லாது அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

இப்படி மக்களை மீட்டுக் கொண்டிருக்கும்போதே அமோனியா வாயுவைத் தொடர்ந்து சுவாசித்ததால், சாலையிலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி சரிந்திருக்கிறார் விஜயமூர்த்தி. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், தற்போது திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். அதனால், கிராமத்தில் ஆண்கள் குறைந்தளவிலேயே இருந்தோம். அதனால், அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டியிருந்தது. இப்போதும் சுவாசப் பிரச்னை இருக்கிறது. மருத்துவர்கள் முதலுதவி செய்து, எக்ஸ் ரே(X ray) மற்றும் பிற சோதனைகள் செய்துள்ளனர். முடிவு வந்த பிறகு தான் என்ன நிலை எனத் தெரியும்,” என்றார் விஜயமூர்த்தி.

 

அமோனியா சுவாசித்த மக்களுக்கு என்னவானது?

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகளும், உடல் உபாதைகளும் இருப்பதாக தனியார் மருத்துவமனையின் இயக்குனர் செல்வராஜ் பிபிசியிடம் கூறினார்.

“அமோனியா சுவாசித்ததாக எண்ணூரில் இருந்து அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மூச்சு விடுவதில் சிக்கல், நெஞ்சு எரிச்சல் மற்றும் கண், காது, மூக்கு மற்றும் தோள்களில் எரிச்சல் உள்ளது. அவர்களுக்கு முதலுதவி செய்து சிகிச்சையளித்து வருகிறோம். குறைந்த பாதிப்பு உள்ளவர்கள் இன்றே வீடு திரும்புவார்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் மட்டும் நாளை வரை மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பார்கள்,” என்றார்.

இன்று மாலை வரை எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களில், சுமார் 45 பேர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும், ஆறு பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தின் போது அமோனியா வாயுவை சுவாசித்தவர்கள் மட்டுமின்றி, நிலைமை சரியாகிவிட்ட பின் தங்களது வீடுகளுக்குத் திரும்பச் சென்றவர்களும் அந்த அமோனியா வாயு தாக்கத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று மதியம் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனர்.

ஒரு தனியார் மருத்துவமனையில், இன்று காலை 11 பேர் மட்டுமே அமோனியா வாயு சுவாசித்ததால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாலை 4 மணியளவில், அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தது.

பிபிசி, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் மூன்று பேர் சுவாசக்கோளாறால் மருத்துவமனைக்கு அவசரமாக அழைந்து வந்து அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இன்றே வீடு திரும்புவார்கள் என்றும் கூறினார். மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரியகுப்பம் பகுதியில் நடந்து வரும் மருத்துவ முகாம்
 

தொடரும் மக்கள் போராட்டம்

இதற்கிடையே, நேற்று நள்ளிரவு ஊரைவிட்டு வெளியேறிய மக்கள், இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து, கோரமண்டல் ஆலையின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பிபிசியிடம் பேசிய லட்சுமி ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்றார்.

“இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறினர். ஆனால், நாங்கள் காலை வீட்டிற்கு திரும்ப வந்து, கதவைத் திறந்ததும், அதே புகை வாசம் இருந்தது. தற்போதும், அந்த வாசம் காற்றில் உள்ளது. இப்படி இருக்கையில், நிலைமை இயல்பாகிவிட்டதாக எப்படிக் கூற முடியும்,” எனக் கேட்டார்.

மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதுவரையில், ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடரும் மக்கள் போராட்டம்
 

எண்ணூரில் நடக்கும் தொடர் விபத்துகளுக்கு என்னதான் தீர்வு?

போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலை

தொழிற்சாலைகள் நிரம்பியுள்ள வட சென்னையின் எண்ணூர் பகுதியில், விஷவாயு கசிவு, அமோனியா வாயு கசிவு, கடலில் எண்ணெய் கலப்பது, மழை நீரில் எண்ணெய் கசிவு என தொடர் விபத்துகளால் எண்ணூர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், எண்ணூர் பகுதியில் இனி எந்த ஒரு புதிய தொழிற்சாலையோ அல்லது இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கமோ அறவே கூடாது என்றார்.

“எண்ணூர் பகுதி தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கும் திறனை தாண்டிவிட்டதாக பல ஆண்டுகளுக்கு முன்னரே தேசிய பதுமைத் தீர்பாயத்தின் அறிக்கையில் கூறிவிட்டனர். ஆனாலும், அதனை யாரும் பொருட்டுத்துவதில்லை. அதனால், எண்ணூரை தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்,” என்றார்.

மேலும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளும் உயர்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

“நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அங்கேயே செல்பட்டு வருவதால், அவர்கள் அதே பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுகளை வெளியேற்றி வருகிறார்கள். தற்போதைய பாதிப்புகளை உணர்ந்து, அவர்கள் தங்கள் தொழில்நுட்பத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c0kyv4ee0rqo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமோனியா வாயுக் கசிவால் மூச்சுத் திணறும் எண்ணூர்: தொடர் பாதிப்புகளால் தவிக்கும் மக்கள்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

அமோனியா வாயுக்கசிவுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எண்ணூரை சேர்ந்த சூரியகாந்திக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகரின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் எண்ணூர் உண்மையாகவே மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கலந்து வந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூர் மீனவக் கிராமங்கள் உட்பட, குடியிருப்புப் பகுதிகளையும் நாசம் செய்து ஒரு மாதம் கடந்துவிட்டது.

அதன் சுவடு மறைவதற்குள் டிசம்பர் 26 நள்ளிரவு கோரமண்டல் உரத் தொழிற்சாலை அம்மோனியா குழாயிலிருந்து கசிந்த அம்மோனியா வாயு எண்ணூரையே கலங்கடித்தது.

இந்தப் பிரச்னை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், "தற்காலிகமாக கோரமண்டல் நிறுவனத்தை மூடி வைத்துள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வறிக்கை அடிப்படையில் விரைவில் முடிவு எடுக்கப்படும்," என்றும் தெரிவித்தார்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து காற்றிலும், நீரிலும் பெரும் அழிவைச் சந்தித்த எண்ணூர் மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய களத்திற்குச் சென்றது பிபிசி தமிழ்.

 

நெஞ்சை கிழிக்கும் எண்ணூர்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

11 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எண்ணூர் பகுதி மக்கள்

சூரியகாந்தி பாட்டிக்கு 70 வயதாகிறது. தினமும் மீன் விற்பது அவர் தொழில். அவருக்கு இரண்டு மகள்கள், இருவருமே திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள்.கோரமண்டல் நிறுவனத்தின் சுவர்களை ஒட்டியுள்ள பெரியகுப்பம் 1வது தெருவைச் சேர்ந்தவர் இவர்.

கடந்த 26.12.2023 அன்று நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த சூரியகாந்தி வெளியே சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறார். காற்றில் கந்தக நெடி மூக்கைத் துளைக்க, சுவாசிக்க சிரமப்பட்டு மற்ற மக்கள் ஓடும் திசைநோக்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளார்.

சூரியகாந்திக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோயும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அம்மோனியா புகையும் சேர்ந்துகொள்ள நெஞ்சடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அன்றிரவே திருவொற்றியூரில் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கே ஊசி மற்றும் மாத்திரை கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கிருந்து வந்த மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு கை, கால், வாய் என அனைத்து இடங்களும் காயமடைந்தன. இந்நிலையில் 28.12.23 அன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சூரியகாந்தி.

இந்த முறை அவருக்கு இதயத்தில் கோளாறு என்று கூறிய மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து அன்றிலிருந்து 4.1.2024 வரை அவரை மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் பிபிசி குழு அவரைச் சந்தித்தபோது தனக்கு இன்னமும் படபடப்பு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் தன்னால் வீட்டிற்குச் செல்ல முடியாது என்றும் கூறினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தங்களை இன்றே வீட்டிற்குச் செல்லச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். நாம் அவரைச் சந்தித்துவிட்டு வந்த சில மணிநேரங்களில் மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

 

தொடரும் ஆஞ்சியோக்கள்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

48 பேர் எண்ணூரில் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர்.

பெரியகுப்பம் கிராமத்தில் சூரியகாந்தி வசிக்கும் அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் 57 வயதாகும் தேசராணி. 26.12.23 ஆண்டு நள்ளிரவில் கழிவறை செல்ல எழுந்து வந்தவர் அம்மோனியா புகையின் நெடி தாங்காமல் தூங்கிக் கொண்டிருந்த தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எழுப்பி காப்பாற்றியுள்ளார்.

ஆனால், இவரும் சூரியகாந்தி பாட்டியைப் போலவே நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரைப் போல இவருக்கும் முதல் நாளில் மாத்திரை ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த பின்னர் ஒரு நாள் கழித்து மீண்டும் மயக்கம், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது.

தேசராணிக்கு இதற்கு முன்னரே சர்க்கரை நோய் மற்றும் லேசான இதய கோளாறு இருந்துள்ளது. ஆனால், அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட பிறகுதான் இதயத்தின் நிலை முன்பைவிட மோசமாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இவருக்கும் இன்னமும் பதற்றம், உடல் நடுக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. ஆனால், இவரும் நாம் சந்தித்து வந்த அடுத்த சில மணிநேரங்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இவர்களோடு சேர்த்து 48 பேர் எண்ணூரில் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இவர்கள் யாரிடமும் பணம் பெறக்கூடாது என்று முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மக்கள் யாரிடமும் ஆகாஷ் மருத்துவமனையில் பணம் வாங்கவில்லை.

அம்மோனியா வாயு ஆஞ்சியோவுக்கு காரணமாகுமா?

அம்மோனியா வாயுவால் ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை இருக்குமா என்று தெரிந்துகொள்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அணுரத்னா அவர்களிடம் பேசினோம்.

“இதுபோன்ற வாயு சார்ந்த பிரச்னைகள் நுரையீரலைத் தாக்கும். அதனால், மூச்சுத் திணறல், மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

அதற்காக 50 பேர் போகும்போது முதலில் அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சை அளிக்கப்படும். அதில் 48 பேர் சரியாகி, இருவர் குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னைகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

அதில் முதலில் பார்ப்பது பரிசோதிக்கப்படுவது இதயம்தான். அதில் பிரச்னை உள்ளது தெரியவந்த பின் ஆஞ்சியாவை பரிந்துரைப்பார்கள்,” என்கிறார் அவர்.

 

எண்ணூர் எப்படி இருக்கிறது?

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப 1 வருடமாவது.

அடுத்தடுத்து எண்ணெய் மற்றும் வாயுக் கசிவால் எண்ணூர் மூச்சுவிட முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட முகத்துவாரக்குப்பம், எண்ணூர்குப்பம் மற்றும் அதை ஒட்டியுள்ள ஆற்றோரப் பகுதிகளின் கரைகளில் இன்னமும் எண்ணெய்க் கழிவுகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

இதனால், தங்கள் படகுகள் மற்றும் மோட்டார்கள் சேதமடைந்த மக்கள் அவற்றை அரசு கொடுத்த நிவாரண நிதியோடு மேலும் கடன் வாங்கி சரி செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

"என்னதான் சரி செய்தாலும் மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாதம் முதல் 1 வருடமாவது தேவைப்படும். நேற்று பங்குனி ஆமைகளும் செத்து மிதந்திருக்கின்றன," என்கிறார் எண்ணூர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் எம். ராமன்.

 
மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

தங்கள் மீன்களை காசிமேட்டில் யாரும் வாங்குவதில்லை என்கிறார் மீனவர் ராமன்

அப்படியே சிறிது தூரமாகச் சென்று மீன்பிடித்து விட்டு வந்தாலும், எண்ணூர் பகுதியில் இருந்து வரும் மீன்களை காசிமேட்டில் யாரும் வாங்க முன்வருவதில்லை என்றும், அங்கிருக்கும் மீனவர்களே இவர்களை விற்க வேண்டாம் என்று சொல்வதாகவும் கூறுகிறார் மீனவர் ராமன்.

கடந்த 1990களில் நன்னீர் ஆறாக இருந்த இந்த இடம் அதற்குப் பின் பெருகிய நிறுவனங்களால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாழாகி விட்டதாகக் குறிப்பிடும் அவர், “மொத்தமா நாங்க அழிஞ்சி போயிட்டாக்கூட இன்னொரு பிறப்பு பிறந்து வாழலாம். ஆனால் இப்படியொரு வாழ்க்கை வாழவே கூடாது” என்று நொந்து கொண்டே தெரிவித்தார்.

 

எண்ணூரின் மூச்சை நிறுத்தும் வாயு

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

மழைக் காலங்களில் அம்மோனியா வாயு திறந்துவிடப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எண்ணூரில் 26.12.23 அன்று ஏற்பட்ட அம்மோனியா கசிவு விபத்துக்குப் பிறகு ஒரு சில காட்சிகள் மாறியுள்ளன. கோரமண்டல் நிறுவனத்தின் அம்மோனியா குழாய் கடலுக்குள் செல்லும் இடத்தில் புதிதாக ‘இது தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை போர்டு முளைத்துள்ளது. அதைச் சுற்றி எப்போதும் இரு காவலர்கள் இருக்கின்றனர்.

எண்ணூரில் இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே மழைக் காலங்களில் அம்மோனியா வாயு திறந்து விடப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழையோடு மழையாகத் திறந்து விடப்படுவதால் ஒன்றும் தெரியாது என்று கூறும் அவர்கள், தற்போது திடீர் குழாய் விபத்து எண்ணூரையே நிலைகுலையச் செய்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனால் அந்த கோரமண்டல் ஆலையை மூட வேண்டும் என்று கூறி எண்ணூர் பாதுகாப்புக் குழு என்ற ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கி 10 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசும்போது, இன்னமும் தாங்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு அதிகமாக தோல்சார் நோய்களும், சளி போன்ற நோய்களும் எப்போதுமே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதற்காக மருத்துவர்களிடம் சென்றாலும், முதலில் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் சரியாகும் என்று எச்சரிப்பதாகவும் எண்ணூர் மக்கள் கூறுகின்றனர்.

எண்ணூர் மருத்துவர்கள் கூறுவது என்ன?

எண்ணூர்
படக்குறிப்பு,

கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக எண்ணூர் மக்கள் 12வது நாளாக கொட்டும் மழையிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

எண்ணூர் பகுதி சென்னையில் இருந்தாலும்கூட இன்னும் 33 கிராமங்களாகவே இயங்கி வருகிறது. இதில் 8 மீனவ கிராமங்களும் அடங்கும். இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் நுரையீரல் தொடர்பான நோய்களாலும், தோல் நோய்களாலும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார் இதே பகுதியில் 30 வருடங்களாகப் பணியாற்றி வரும் மருத்துவர் உஷாதேவி.

பெரிய குப்பம், சின்னக்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சத்யவாணி முத்துநகர், உலகநாதபுரம், தாளாங்குப்பம், நெட்டுக்குப்பம், சிவன்படை வீதி உள்ளிட்ட எண்ணூரை சுற்றியுள்ள மக்கள் பலரும் இவரிடம் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக வருகின்றனர்.

அவர்களில் பலரும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், ஒவ்வாமை, தோல் நோய்கள், கண், தொண்டை, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்னைகளுக்காக வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

இதில் பலருக்கும் நீண்டகாலப் பிரச்னைகளாக ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்டவையும் இருப்பதாகக் கூறுகிறார். அதில் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் போதிக்கப்பட்ட அதிகமான மக்கள் வருவதாகக் குறிப்பிடுகிறார் மருத்துவர் உஷாதேவி. மேலும் இந்தப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் அதிகமாக நிம்மோனியா, சளி மற்றும் பிற நுரையீரல் சார் பிரச்னைகளுக்கு அதிகம் அவரிடம் வருவதாக நம்மிடம் தெரிவிக்கிறார்.

குறிப்பாக இந்த மக்கள் ஆண்டுதோறும் படை உள்ளிட்ட தோல் நோய்களுக்காக அதிகம் செலவு செய்வதாகத் தெரிவிக்கும் இவர் இதற்குக் காரணமாக இந்தப் பகுதியின் தொழிற்சாலை மாசுவை முன்வைக்கிறார்.

“இன்று நேற்றல்ல பல காலமாக இந்த வாயுக்களை திறந்துவிடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. காற்று எந்தத் திசையில் போகிறதோ அந்தத் திசையில் உள்ள மக்களை அது மெதுவாக தாக்கிக் கொண்டேதான் இருக்கிறது,” என்கிறார் அவர்.

“சமீபத்தில் வந்த எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதற்குக்கூட மீனவ கிராம மக்களையே தினக் கூலியாகப் பயன்படுத்தினார்கள். அவர்களும் அதன் ஆபத்து தெரியாமல் அந்த எண்ணெயில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால், அது மேலும் அவர்களுக்கு மோசமான நோய்களையே ஏற்படுத்தும் என்பது அந்த மக்களுக்குத் தெரிவதில்லை,” என்று கூறுகிறார் மருத்துவர் உஷாதேவி.

 

எண்ணூர் பாதுகாப்புக் குழு

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

11 நாட்களாக தொடரும் எண்ணூர் மக்கள் போராட்டம்

பல ஆண்டுகளாகவே எண்ணூரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தக் கோரியும், சில நிறுவனங்களை அகற்றக் கோரியும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த முறை கடந்த 11 நாட்களாக கோரமண்டல் நிறுவனத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து எண்ணூரை சேர்ந்த 33 கிராம மக்களும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களில் ஒருவரான மானுடவியல் ஆய்வாளர் முனைவர். அ.பகத் சிங்கிடம் பேசினோம்.

“எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் வந்து ஒரு மாதம் ஆகிறது. அம்மோனியா வாயு கசிந்து 10 நாட்கள் கடந்து விட்டது. ஆனால், மக்களிடம் முறையாக அதிகாரிகள் பேசுவதோ அல்லது அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோ நடக்கவில்லை.

இதுவே அடையாறு, அண்ணா நகரில் இதுபோன்று நடந்திருந்தால் தமிழ்நாடே ஆடிப் போயிருக்கும். ஆனால், இது எண்ணூர் என்பதால் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கே மெத்தனப் போக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறார் அவர்."

 
மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

பட மூலாதாரம்,BAGATH VEERA ARUN

படக்குறிப்பு,

எண்ணூர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முனைவர் பகத் சிங்

இத்தனை நாட்கள் கழித்து சமீபத்தில்தான் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டமே நடந்தது என்று குறிப்பிடும் அவர் அதனால் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்கிறார். "இதுவரை கோரமண்டல் நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வழக்குகள் பதியப்பட்டுள்ளதா, என்று எந்த விவரங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், போராடும் மக்கள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் பகத் சிங்.

இந்த போராட்டக்குழுவைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 353, 294B , 506 / 2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பகத்.

இதை காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணை ஆணையாளர் விஜயகுமார் அவர்களிடம் பேசியபோது, “முதல்நாள் மறியல் செய்ததற்காக மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாக” தெரிவித்தோர். ஆனால், என்ன பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை விசாரணை காரணங்களுக்காகச் சொல்ல மறுத்துவிட்டார்.

மேற்கொண்டு பேசிய முனைவர் பகத் சிங், "இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துறைகளான தொழில் துறை, சுற்றுச்சூழல் துறை, கடல்சார் துறை மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு ஆகிய துறைகள் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அதெல்லாம் நடந்ததா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, இந்த முறை கோரமண்டல் நிறுவனத்தை மூடும் வரை இந்த மக்களின் அறவழி போராட்டம் தொடரும் என்று முடித்தார் பகத் சிங்.

கோரமண்டல் நிறுவனம் மீது நடவடிக்கை?

இதுவரை கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அல்லது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் கேட்டோம்.

“ஜனவரி 8ஆம் தேதியே இறுதி அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

 
மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

கோரமண்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகள்

முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள்

கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததை அடுத்து அந்நிறுவனம் 27ம் தேதி தனது முதல் அறிக்கையை வெளியிட்டது. பின்னர் இரு நாட்கள் கழித்து 29.12.23 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அதில் அரசுக்குழு நிறுவனம் சோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும், பாதுகாப்பு சோதனைகளைச் செய்த பிறகு இயங்க அந்நிறுவனம் அனுமதி கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அடுத்த நாளே (30.12.2023) தங்களது முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அரசு சார்ந்த விஷயங்களை மறுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது கோரமண்டல் நிறுவனம்.

மேலும், 29.12.23 தேதியிட்ட அறிக்கையிலேயே அம்மோனியா வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேற்சொன்ன சூரியகாந்தி மற்றும் தேசராணி ஆகிய இருவரும் 4.1.2024 அன்றே மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி இந்த இருவருக்குமே உடல்நிலை மோசமடைந்து ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எண்ணூர் மக்களின் கேள்விகள்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்
படக்குறிப்பு,

எண்ணூர் பகுதிக்கு விரிவடைந்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

சூரியகாந்தி, தேசராணி ஆகிய இரு பெண்களும் அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்படவில்லை என்றும் இதயம் சார்ந்த பிரச்னைக்காகவே அனுமதிக்கப்பட்டனர் என்றும் ஆகாஷ் மருத்துவமனை நிர்வாகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தது. ஆனால், அம்மோனியா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட மற்ற 46 எண்ணூர்வாசிகளை போலவே சூரியகாந்தி, தேசராணி ஆகிய இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட இதயம் தொடர்பான சிகிச்சைக்கும் பணம் வசூலிக்கப்படவில்லை.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதனுடன் தொடர்பில்லை என மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்படும் இரு பெண்களுக்கும் அதே வகைப்பாட்டில் கட்டணம் வசூலிக்காமல் சிகிச்சை அளித்தது ஏன் எனக் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

மேலும், சில விடை கிடைக்காத வினாக்களை எண்ணூர் மக்கள் முன்வைக்கின்றனர்.

  • இந்த வாயுக்கசிவு எவ்வளவு தீவிரமாக எண்ணூர் மக்களைப் பாதித்துள்ளது?
  • கோரமண்டல் நிறுவனம் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அங்கு நடத்தப்படும் சோதனைகள் பற்றி இதுவரை அப்பகுதி மக்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாதது ஏன்?

சுகாதாரத் துறை செயலர் கூறுவது என்ன?

எண்ணூர்
படக்குறிப்பு,

கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக எண்ணூர் மக்கள் 12வது நாளாக கொட்டும் மழையிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மக்களின் உடல்நிலையை இந்த வாயுக்கசிவு எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, “ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எங்களுக்குக் கிடைத்த கடைசி அறிக்கையின்படி, அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். இந்தப் பகுதி மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் அந்த அதிகாரிகளை விழிப்போடு இருக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை புதிய தீவிரமான சுகாதார புகார்கள் எதுவும் வரவில்லை," என்று கூறினார்.

இந்த மக்களுக்கு ஏதேனும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பகுதிக்கு பிரத்யேகமான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுமா என்று கேட்டபோது, மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை வந்த பின்பே அதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு 'டிஸ்சார்ஜ் சம்மரி' கொடுக்கப்படாததன் காரணத்தைக் கேட்டபோது, 'அது தனியார் மருத்துவமனை எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டார் ககன்தீப் சிங் பேடி.

சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் பதில் என்ன?

"தற்காலிகமாக கோரமண்டல் நிறுவனத்தை மூடி வைத்துள்ளோம். தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் சோதனை செய்து அந்த நிறுவனம் இயங்கலாம் என்று கூறிய பிறகே அந்நிறுவனத்தை மீண்டும் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்," என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் குழு கோரமண்டல் நிறுவனத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும், விரைவில் அதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cyxv96v62p2o

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: அமோனியா கசிந்த ஆலையை மீண்டும் திறக்க பல கோடி ரூபாய் கைமாறியதா? திமுக எம்.எல்.ஏ. பதில்

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, 2023, டிசம்பர் 26 அன்று எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 ஆகஸ்ட் 2024, 07:34 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

"கோரமண்டல் உர ஆலைக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்று கூறி கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் ஆளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தனர். 'உயிரின் விலை 10 ஆயிரம் தானா?' எனக் கேட்டு அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்" என்கிறார் எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரவேல்.

கடந்த ஆண்டு, டிசம்பர் 26-ஆம் தேதியன்று சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி மக்களைப் போராட்டத்துக்கு திரட்டி, ஒருங்கிணைத்ததில் குமரவேல் முக்கியமானவர்.

கடந்த மே 21ஆம் தேதி நிபந்தனைகளுடன் கோரமண்டல் ஆலையை திறப்பதற்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆலையை திறக்கும் போது மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு காட்டக் கூடாது என்பதற்காக, கடந்த வாரம் நான்கு மீனவ கிராமங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதன் பின்னணி என்ன? என்ன நடந்தது?

கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு

கோரமண்டல் ஆலைக்கு அருகில் உள்ள தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், பெரியகுப்பம், சின்னகுப்பம் ஆகிய கிராமங்களில் பணம் வழங்கப்பட்டதாக 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆலை நிர்வாகத்துக்கும் மீனவ கிராமங்களுக்கும் இடையே திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ.வான கே.பி.சங்கர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததாகவும் 'தி நியூஸ் மினிட்' இணைய இதழ் கூறுகிறது.

"ஆலையை மீண்டும் திறப்பதில் மக்களுக்கு விருப்பம் இல்லை. பணம் வாங்குவதற்கு என்னிடம் கையெழுத்து கேட்டனர். நான் கையொப்பமிட மறுத்துவிட்டேன். திருவொற்றியூர் எம்.எல்.ஏ தரப்பில் இருந்துதான் இந்த வேலைகளைச் செய்கின்றனர்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமரவேல்.

 
கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, குமரவேல், நெட்டுக்குப்பம் மீனவ கிராமம்

கடந்த வாரம் ஆலைக்கு அருகில் உள்ள மீனவ கிராமங்களில் கிராம நிர்வாகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் ஒன்று கூடி கைகளில் ஒரு தாளை வைத்துக் கொண்டு அனைவரிடமும் கையெழுத்து வாங்கியதாக குறிப்பிடுகிறார், எண்ணூர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்புசெழியன்.

அந்த தாளில், ‘ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை, தன்னார்வ குழுக்கள் போராட வந்தால் அவர்களை விரட்டியடிப்போம்; காவல்துறையில் புகார் கொடுப்போம்’ என எழுதப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார்.

"இதன் பின்னர் மீனவ கிராமங்களின் ஒருவருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளது. இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மீனவ மக்களில் வெகு சிலரை தவிர பலரும் ஆதாயம் அடைந்துவிட்டதால், ஆலையின் முன்பு இனி போராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்கிறார் அன்புசெழியன்.

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, அன்புசெழியன், எண்ணூர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் கோரமண்டல் ஆலைக்கு எதிராக மீனவ மக்கள் போராடி வந்தனர். அப்போது, 'நாங்கள் வெற்றி பெற்றால் ஆலையை மூடுவோம்' என தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், அன்புசெழியன்.

"போராட்ட நாட்களில் நாங்களே உணவு சமைத்து சாப்பிட்டோம். பின்னர், 'நான் உணவு ஏற்பாடு செய்கிறேன்' என எம்.எல்.ஏ சங்கர் கூறினார். மூன்று நாள்களுக்குப் பிறகு, 'எனக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி வருகிறது. உதவி செய்ய முடியாது' என்றார். பின்னர், எங்களுக்கான தேவைகளை நாங்களே கவனித்துக் கொண்டோம்" என்கிறார் அன்புசெழியன்.

ஆனால் தற்போது திடீரென ஆலை திறக்கப்பட்டுவிட்டதாகவும் இதன் பின்னணியில் நடக்கும் பண விநியோகத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ சங்கருக்கு தொடர்பிருப்பதாகவும் அன்புசெழியன் குற்றம் சுமத்துகிறார்.

தி.மு.க எம்.எல்.ஏ கூறுவது என்ன?

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு, கே.பி.சங்கர், திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ

"எனக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் பரப்பும் அவதூறுகளில் இதுவும் ஒன்று" என்கிறார், திருவொற்றியூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான கே.பி.சங்கர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை நான் செய்து கொடுத்தேன். அதன்பிறகு வணிகர் சங்கங்கள் உதவி செய்தன. மக்களிடம் ஓட்டு தான் கேட்க முடியும். பணம் கிடைத்ததா என்று கேட்க முடியாது" என்கிறார்.

கோரமண்டல் ஆலை நிர்வாகம் கூறியது என்ன?

"இவை அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்குப் புறம்பானவை" என்று கோரமண்டல் நிறுவனம் கூறியுள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒழுங்குமுறை ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி எங்களது எண்ணூர் ஆலையில் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அந்த பணிகளை தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் முறைப்படி பெறப்பட்டுள்ளன.

எங்கள் நிறுவனத்தின் பெயரை தொடர்புபடுத்தி சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றமை, உண்மைக்குப் புறம்பானவை. எங்கள் நிறுவனம் எப்போதுமே மிக உயர்ந்த நிர்வாக தரத்தை பின்பற்றி வருகிறது. தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கோரிக்கை

'இந்த விவகாரத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்த வேண்டும்' என கூட்டு அறிக்கை ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரி பரந்தாமன், கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில், பின்னணி பாடகர் டி.எம்.கிருஷ்ணா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

 

பின்னணி என்ன?

கோரமண்டல் ஆலை மீண்டும் திறப்பு, திமுக எம்.எல்.ஏ.
படக்குறிப்பு,கடந்த வருடம், அமோனியா வாயுவைக் கையாள்வதில் ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஒவ்வோர் ஆண்டும் சுனாமி நினைவு நாளில் மீனவ மக்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில்லை. சுனாமியால் உயிரிழந்த தங்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாக பொழுதைக் கழிப்பது வழக்கம். அவ்வாறு அமைதியாக இருந்தவர்களை பெரிதும் துயரப்படுத்திய நிகழ்வாக, கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அமைந்தது.

அன்று நள்ளிரவு 1 மணியளவில் எண்ணூரில் கோரமண்டல் உர ஆலையில் அமோனியா வாயுவை கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆலையைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அமோனியா வாயுவை கையாள்வதில் ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த விவகாரத்தை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அமோனியா வாயு கசிவு குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.பி.சி.எல் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுவதாக, தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

25 ஆண்டுகளாக ஒரே குழாயில் அமோனியா வாயுவை எடுத்துச் சென்றதே கசிவுக்கு காரணம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. அதேநேரம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரமண்டல் நிறுவனம் எடுக்கத் தவறி விட்டிருந்ததாகவும் குறிப்பிட்டது.

ஆலை தரப்பில், 1996ஆம் ஆண்டு முதல் ஆலை இயங்கி வந்தாலும் இதுவரையில் விபத்து ஏற்பட்டதில்லை எனவும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 35 தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 21ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நிபுணர் குழு சார்பில் ஆய்வு செய்து உரிய அனுமதி பெற்ற பின்னர் கோரமண்டல் உர தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதாக உத்தரவிட்டனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.