Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இளையராஜா : பாடல்கள் யாருக்கு சொந்தம்? இசையமைப்பாளருக்கா? தயாரிப்பாளருக்கா?

பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM

7 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமான பாடல்கள் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் ஒட்டுமொத்த உலகத்தின் வாராந்திர சராசரி பாடல் கேட்கும் அளவைவிட, இந்தியர்கள் பாடல் கேட்கும் வாராந்திர சராசரி அளவு அதிகம்.

குறிப்பாக இந்திய பொழுதுபோக்குத் துறையில் அங்கம் வகிக்கும் இசைத் துறையின் வருடாந்திர வருமானமே பல ஆயிரம் கோடிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதே நேரம் இதே இசைத் துறையில் காப்புரிமை என்பது பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காப்புரிமை என்றால் என்ன? அது திரைப்படத் துறையில் எப்படி இயங்குகிறது? அதற்கான சட்டங்கள் என்ன? உண்மையில் இசை யாருக்குச் சொந்தம் என்பது குறித்து இங்கு காணலாம்.

 

இளையராஜா வழக்கு

காப்புரிமை

பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM

படக்குறிப்பு,இளையராஜா தனது நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என்றும்கூட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்திய இசைத்துறையில் முக்கியமான இசையமைப்பாளரான இளையராஜா 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர். இதுவரை பல்வேறு மொழிகளில் 7000த்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தாம் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் முதலில் படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பயன்படுத்தத் தடை இல்லை என்றும், அதேநேரம் அதன் மீது இளையராஜாவுக்கும் தார்மீக உரிமை உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு இளையராஜா இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, இந்த நிறுவனங்கள் அந்த பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது இருதரப்பின் வழக்கு விசாரணையும் உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது.

இளையராஜா இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு அவரது நீண்டகால நண்பரான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகர்கள் சித்ரா மற்றும் எஸ்.பி.பி.சரண் ஆகியோர் தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்றும்கூட வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் பிரச்னை அதற்குப் பின் சமரசத்தில் முடிந்து, இளையராஜா மற்றும் எஸ்.பி.பி ஒன்றிணைந்தனர்.

தற்போது இளையராஜாவுக்கு எதிரான மேல்முறையீட்டில், ஒரு தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றுவிட்டு இசையமைத்துக் கொடுக்கும் இசையமைப்பாளருக்கு அதற்குப் பின் அந்த இசையின் மீது எந்த உரிமையும் இல்லை என்று எதிர்தரப்பால் வாதிடப்படுகிறது.

இது சட்டபூர்வமாக எந்தளவுக்கு உண்மை? காப்புரிமை சட்ட விதிகள் சொல்வது என்ன?

 

காப்புரிமை சட்டம்

காப்புரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காப்புரிமை சட்டம் தனிநபருக்கு தனது படைப்பின் மீதான உரிமையைப் பாதுகாக்க உதவுகிறது.

காப்புரிமை சட்டம் என்பது 1957ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரின் படைப்பு அல்லது கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீதான அவரது உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

அதேநேரம் “எல்லா படைப்புகளுக்கும் காப்புரிமையைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. குறிப்பாக ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறோம் அல்லது நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்றால் அதைப் பதிவு செய்து அதற்கான உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர்.

ஆனால், இதுவே ஒரு ஓவியம் வரைகிறோம், இசையமைக்கிறோம், கதை எழுதுகிறோம் என்றால் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒருமுறை அது வெளியிடப்பட்டு விட்டாலே அது உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறுகிறார் கார்த்திகேயன்.

 

மேற்கத்திய கோட்பாடு

காப்புரிமை

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,காப்புரிமை கோட்பாடு பிறந்த இடத்திற்கும் நம் நாட்டுக்கும் உள்ள ஒரு அடிப்படை வேறுபாடுதான் இந்தக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

ஆனால், இந்தக் 'காப்புரிமை' என்கிற கோட்பாடே மேற்கத்திய உலகிலிருந்து வந்ததுதான். 'காப்புரிமை' என்பது கலைஞர்களுக்கும் அவர்கள் படைப்புகளுக்குமான வணிகப் பாதுகாப்பை உறுதி செய்கிற ஒரு விஷயம் என்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

இந்தக் காப்புரிமை கோட்பாடு பிறந்த இடத்திற்கும் நம் நாட்டுக்கும் உள்ள ஓர் அடிப்படை வேறுபாடுதான் இந்தக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

அங்கு இசை என்பது தனித்து நிற்பது; இங்கு திரைப்படங்களின் ஊடாக இணைந்திருப்பது. அந்த மாறுபாட்டை உணராமல் இயற்றப்பட்ட சட்டம் என்பதாலேயே அது பல முரண்களைக் கொண்டு வந்திருக்கிறது என்கிறார் அவர்.

இசை யாருக்கு சொந்தம்?

சமீப காலமாக தமிழ்திரைத்துறையில் இசையமைப்பாளர் மற்றும் இசை நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் உரசல்களில் அதிகம் எழும் வாதம் இசையமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இசை யாருக்கு சொந்தம் என்பதே!

இதுகுறித்து கார்த்திகேயனிடம் கேட்டபோது, “ஒரு இசையமைப்பாளர் தனி ஆல்பமாக உருவாக்கி இசையமைக்கிறார், அதை வெளியிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அப்படிச் செய்தால் அது முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம்."

ஆனால், ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட படத்தின் தன்மைக்கு ஏற்ப தனக்கு இந்தப் பாடல்கள் வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்காக "ஒரு குறிப்பிட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இசையமைப்பாளரும் இசை அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அந்த இசையின் மீதான மொத்த உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்கே உள்ளது,” என்கிறார் அவர்.

 
காப்புரிமை

பட மூலாதாரம்,KARTHIKEYAN.N

படக்குறிப்பு,"ஒரு குறிப்பிட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இசையமைப்பாளரும் இசை அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அந்த இசையின் மீதான மொத்த உரிமையும் அந்தத் தயாரிப்பாளருக்கே உள்ளது,” என்கிறார் கார்த்திகேயன்.

மேலும், “ஒரு படத்தில் வரும் பாடல் என்பது குறிப்பிட்ட இசையமைப்பாளரை மட்டும் சார்ந்தது கிடையாது. அதில் சவுண்ட் இன்ஜினியரில் தொடங்கி, பாடலாசிரியர் உள்ளிட்ட பலரும் பங்கு செலுத்துகிறார்கள். இதனால், ஒவ்வொருவரிடமும் ஒப்பந்தம் போட்டு அதன் அடிப்படையில்தான் அந்தப் பாடலை ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறார்,” என்று கூறுகிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

இதுவே அந்த இசையமைப்பாளர் எந்த ஒப்பந்தமும் இல்லாமல், அந்தப் பாடலை இலவசமாக உருவாக்கிக் கொடுக்கிறார் என்றால் அப்போது அவர் சொந்தம் கொண்டாடிக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

இந்தப் பிரச்னையை இரண்டு கோணங்களில் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அவரது கூற்றுப்படி, “சட்டம் என்பது ஒன்று; தார்மீகம் என்பது ஒன்று. சட்டம், அது இசையமைப்பாளருக்கே சொந்தம் என்று சொல்கிறது. தார்மீகப்படி அது தயாரிப்பாளருக்குத்தானே சொந்தம்?” என்று கூறுகிறார் அவர்.

ஆனால், அதை சட்டரீதியாக வாதிட்டு முடிவு செய்ய வேண்டுமே தவிர, கோயம்பேடு வணிகர்கள் போல வெறும் கடைநிலை விநியோகஸ்தர்களாக இருக்கும் இசை நிறுவனங்கள் ஒரு இசையமைப்பாளருக்கு அவரது பாடல் மீது உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

இளையராஜா : பாடல்கள் யாருக்கு சொந்தம்? இசையமைப்பாளருக்கா? தயாரிப்பாளருக்கா?

பட மூலாதாரம்,ILAIYARAAJA/ FACEBOOK

பாடலின் தன்மையை மாற்றும்போது யாருக்கு சொந்தம்?

இளையராஜா வழக்கில்கூட அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குழு, ஒரு பாடல் படத்திற்காக இசையமைக்கப்பட்டு வீடியோ காட்சிகளோடு இணைக்கப்பட்டு வெளியாகிறது.

அதன் மீது மட்டுமே அந்த தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. அதை ஆடியோ போன்று வேறு எந்த வடிவத்திலும் வெளியிட உரிமை கிடையாது என்று வாதிட்டது. ஆனால், வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் கருத்தோ அதற்கு எதிர்மாறானதாக இருக்கிறது.

அவரது கூற்றுப்படி, “ஒரு படத்தில் பாடல் அமைப்பதற்காக தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இடையே ஒப்பந்தம் போடும்போதே, அதில் ‘All Rights Reserved’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதன் அர்த்தம், குறிப்பிட்ட பாடலை எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. எனவே ஒரு பாடலை ஆடியோ, வீடியோ என எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ளவும் அந்த தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு.”

 

எத்தனை ஆண்டுகளுக்கு சொந்தம் கொண்டாட முடியும்?

காப்புரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரு இசையை ஒரு நிறுவனம் 60 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திய பிறகு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

ஒரு இசையமைப்பாளர் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டு ஒரு இசையை உருவாக்கித் தருகிறார் என்றால் அடிப்படையில் குறிப்பிட்ட தயாரிப்பாளர் அந்த இசையை தனது வாழ்நாள் வரை மற்றும் அவரது இறப்புக்குப் பிறகு அவரின் வாரிசுகள் 60 ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் கார்த்திகேயன்.

இதே ஒரு நிறுவனமாக இருந்தால் அந்நிறுவனம் அந்த இசையை 60 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பிறகு அந்தப் பாடல்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அது பொதுத்தளத்திற்கு வந்துவிடும். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

'குளிர்காயும் இசை நிறுவனங்கள்'

இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் குளிர்காய்வது, கொள்ளையடிப்பது இசை நிறுவனங்கள் மட்டுமே. அவர்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கும் சட்டம் வேண்டும் என்று அழுத்தமாக கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

“ஒரு வணிகத்துக்கு மூன்று நிலைகள் உண்டு. உற்பத்தியாளர், இடைத்தரகர், விற்பனையாளர். இங்கு இடைத்தரகர் என்பது தயாரிப்பாளர். இசை நிறுவனங்கள் மூன்றாவது நிலை. அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற விகிதத்துக்கு சட்டம் மாற்றப்பட வேண்டும்.”

“ஒரு படத்துக்குப் போடப்பட்ட இசையை வேறு படத்திற்கோ, தளத்திற்கோ பயன்படுத்த வேண்டுமென தயாரிப்பாளரோ, இசை நிறுவனமோ நினைத்தால் அதற்குரிய தொகையை அந்த இசையமைப்பாளருக்குக் கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை நிர்ணயிக்கும் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உண்டு” என்று வலியுறுத்துகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

 

சட்டத்தில் மாற்றம் வேண்டுமா?

காப்புரிமை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தக் காப்புரிமை சட்டத்தை திருத்தியமைக்காத வரை இந்த முரண்களும், மோதல்களும் தீரவே தீராது என்று கூறுகிறார் ஜேம்ஸ் வசந்தன்.

ஜேம்ஸ் வசந்தனை பொறுத்தவரை தற்போது இருக்கும் சட்டத்தை முறையாக வடிவமைத்தால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும். அதற்கு திரைப்பட இசையையும், தனி இசையையும் இரண்டாகப் பிரித்து சட்டத் திருத்தம் செய்யவேண்டும் என்கிறார்.

"தனி இசை உருவாக்கம் பாடகரை மையப்படுத்தியது. திரைப்பட இசை அந்தத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்போரின் அடையாளங்களை மையப்படுத்திய ஒரு புதுமைக் கலவை.

எனவே, இந்தக் காப்புரிமைச் சட்டத்தை இதற்கு ஏற்றாற்போல நாமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத வரை இந்த முரண்களும், மோதல்களும் தீரவே தீராது" என்று கூறுகிறார் அவர்.

ஆனால், தற்போது இருக்கும் சட்டமே போதுமானது. அதன்படி தனியாக ஆல்பமாக ஒரு இசையை வெளியிடும்போது அதற்கான காப்புரிமை வழங்கப்படுகிறது. இதுவே ஒரு படத்தைச் சார்ந்ததாக இசை உருவாகும்போது, அதில் பலதரப்பட்ட பங்குதாரர்களும் உள்ளதால் அதன் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது அவ்வளவுதான் என்கிறார் கார்த்திகேயன்.

எனவே குறிப்பிட்ட இசையமைப்பாளர்தான் ஒப்பந்தம் போடும்போதே அதற்கான தக்க சம்பளம் என்ன என்பதை நிர்ணயித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4n1ppkdyp2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.