Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி செய்திகள், டெல்லி

சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.

நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

இந்தியாவில் விண்வெளி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு இதுவே ஆகும். ஆனால் திட்டங்களின் அளவு மற்றும் அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டால், இது மிகவும் ஆடம்பரமான செலவு அல்ல. இதுவரையிலும் இந்தியா விண்வெளி திட்டத்திற்காக மிகவும் குறைவாகவே செலவு செய்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் சூரியனுக்கு எப்படி குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆய்வு பயணங்கள் மேற்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

 

செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப 74 மில்லியன் டாலர்களையும், கடந்த ஆண்டு சந்திரயான்-3 திட்டத்திற்கு 75 மில்லியன் டாலர்களையும் இந்தியா செலவிட்டது. இது சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான ‘கிராவிடியை’ தயாரிக்க செலவிடப்பட்ட 100 மில்லியன் டாலர்களை விட மிகக் குறைவானது.

நாசாவின் மேவன் விண்கலத்தை தயாரிக்க 582 மில்லியன் டாலர்கள் செலவானது. சந்திரயான் -3 விண்கலம் தரையிறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் மோதிய ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்திற்கு 133 மில்லியன் டாலர்கள் செலவானது.

குறைந்த அளவில் செலவு செய்தாலும் இந்தியா, முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சந்திரயான்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் உறுதி செய்தது; செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் அளவு பற்றி ஆய்வு செய்ய மங்கள்யான் ஒரு கருவியை கொண்டு சென்றது. சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய படங்கள் மற்றும் தரவுகள் உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன.

இந்தியா எப்படி குறைந்த செலவில் இவற்றை செய்கிறது?

 
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,SCREENSHOT FROM DOORDARSHAN

படக்குறிப்பு, ககன்யான் விண்கலம் திட்டத்தில் ஒரு பெண் மனித உருவத்தை விரைவில் விண்வெளிக்கு அனுப்புவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது

1960-களில் விஞ்ஞானிகள் முதன்முதலில் ஒரு விண்வெளித் திட்டத்தை அரசாங்கத்திற்கு முன்வைத்த போதிலிருந்து இந்த சிக்கனப்போக்கு தொடங்கியது என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ISRO-வின் நிதியை நிர்வகித்த அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சிசிர் குமார் தாஸ் கூறுகிறார்.

இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போது மக்களின் பசி போக்கவும், போதுமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டவும் இந்தியா போராடி வந்தது.

“ISRO-வின் நிறுவனரும் விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய், விண்வெளித் திட்டம் என்பது இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஒரு அதிநவீன ஆடம்பரம் அல்ல என்பதை அரசாங்கத்திற்கு நம்ப வைக்க வேண்டியிருந்தது. இந்தியா தனது குடிமக்களுக்கு சிறப்பாகச் சேவை செய்ய செயற்கைக்கோள்கள் உதவக்கூடும் என்று அவர் விளக்கினார்,” என்று பிபிசியிடம் சிசிர் குமார் தாஸ் கூறினார்.

ஆனால் இந்தியாவில் விண்வெளித் திட்டத்தை, மிகவும் குறுகிய பட்ஜெட்டுக்குள் செயல்படுத்த வேண்டியிருந்தது. 1960கள் மற்றும் 70களின் புகைப்படங்கள், விஞ்ஞானிகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை சைக்கிள்கள் அல்லது ஒரு மாட்டு வண்டியில் கொண்டு செல்வதைக் காட்டுகின்றன.

பல ஆண்டுகளுக்கு பிறகும், பல வெற்றிகரமான விண்வெளி பயணங்களுக்கு பிறகும், இஸ்ரோவிற்கான நிதி இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்காக 130 பில்லியன் ரூபாய் ($1.55 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் நாசாவின் இந்த ஆண்டு பட்ஜெட் 25 பில்லியன் டாலர்கள் ஆகும்.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதால் இஸ்ரோவின் பணிகளுக்கு மிகவும் குறைந்த செலவு ஏற்படுவதாக சிசிர் குமார் தாஸ் கூறுகிறார்.

1974 ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் அணுசக்தி சோதனையை நடத்திய பிறகு, இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இந்த கட்டுப்பாடுகள் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு மறைமுகமான நன்மையாக இருந்தன என்று அவர் கூறுகிறார்.

"இந்திய விஞ்ஞானிகள் அதை உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்க ஒரு ஊக்கமாக பயன்படுத்தினர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை விட இங்கு ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவினமும் மிகவும் குறைவாக இருந்தது”. என்றார் அவர்.

 
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு, சூரியனை பற்றி ஆராய்வதற்கான இந்திய விண்கலமான ஆதித்யா L1-னுக்காக வெறும் 46 மில்லியன் டாலர்களே செலவானது

"இஸ்ரோவைப் போலல்லாமல் நாசா தனது செயற்கைக்கோள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கிறது. அதன் பணிகளுக்கு காப்பீட்டையும் எடுத்துக்கொள்கிறது, இது அவர்களின் செலவுகளை அதிகரிக்கிறது" என்று கூறுகிறார் அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாக்லா.

நாசாவைப் போலல்லாமல், இந்தியா ஒரு திட்டத்தை சோதனை செய்ய பயன்படுத்தப்படும் பொறியியல் மாதிரிகளை உருவாக்காது. நாம் ஒரே ஒரு இயந்திரத்தை மட்டுமே உருவாக்குகிறோம், பின்னர் அதனை ஏவுகிறோம். இது ஆபத்தானது, விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது, ஆனால் இது ஒரு அரசாங்க திட்டம் என்பதால் அந்த ஆபத்தையும் அறிந்து நாம் செயல்படுகிறோம்”. என்று பிபிசியிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இவர் இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது நிலவு பயணங்கள் மற்றும் செவ்வாய் கிரக பயணத்தின் தலைவராக இருந்தார்.

இஸ்ரோ மிகக் குறைவான நபர்களையே வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் குறைந்த சம்பளத்தை வழங்குகிறது, இது இந்திய திட்டங்களை போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது”, என்று அவர் கூறினார்.

மயில்சாமி அண்ணாதுரை 10-க்கும் குறைவான நபர்கள் கொண்ட சிறிய குழுக்களை வழிநடத்தியுள்ளார். அந்த நபர்கள் பெரும்பாலும் கூடுதல் நேரம் பணி செய்ததற்கான ஊதியம்கூட இல்லாமல் பல மணிநேரம் வேலை செய்தார்கள் என்றும், செய்யும் பணியின் மீது அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

"திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டதால், சில சமயங்களில் அவர்கள் புதுமையான, எளிய வழிமுறைகளை யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர், இது புதுமையான திட்டங்களுக்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார்.

"சந்திரயான்-1 திட்டத்திற்கு, ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 89 மில்லியன் டாலர் மட்டுமே. இது அசல் கட்டமைப்பிற்கு வேண்டுமானால் போதுமானதாக இருந்தது. ஆனால் பின்னர், விண்கலம் நிலவை ஆய்வு செய்ய கூடுதலாக 35 கிலோ கொண்ட கருவியை எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது." என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

அப்போது, விஞ்ஞானிகள் முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, இந்த திட்டத்திற்கு கனரக ராக்கெட்டைப் பயன்படுத்துவது, ஆனால் இது செலவை அதிகரிக்கக் கூடும். மற்றொன்று சுமையை குறைக்க சில கருவிகளை நீக்குவது.

 
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விண்வெளித் திட்டங்கள் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது

"நாங்கள் இரண்டாவது முறையை தேர்ந்தெடுத்தோம். நாங்கள் திரஸ்டர்களின் எண்ணிக்கையை 16-இல் இருந்து 8 ஆகக் குறைத்தோம், மேலும் பிரஷர் டேங்குகள் மற்றும் பேட்டரிகளும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டன”.

பேட்டரிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்கலத்தை ஏவ வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார்.

"இது நீண்ட சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளமல் நிலவை சுற்றி வர விண்கலத்திற்கு இரண்டு ஆண்டுகள் கொடுக்கும், இந்த கிரகணம் பேட்டரியின் ரீசார்ஜ் செய்யும் திறனை பாதிக்கக்கூடும். எனவே விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் கடுமையான பணிமுறையை பின்பற்றினோம்”.

“சந்திரயான்-2 விண்கலம் ஏவுவதற்கு தாமதமானதால், நாங்கள் அதற்கு வடிவமைத்த இயந்திரங்களையே மங்கள்யான் விண்கலத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தினோம்”, என்று மங்கள்யான் செலவும் மிகவும் குறைவாக இருந்தற்கான காரணம் குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார்.

இவ்வளவு குறைந்த செலவில் வரும் இந்தியாவின் விண்வெளித் திட்டம் "ஒரு அற்புதமான சாதனை" என்கிறார் பல்லவ பாக்லா. ஆனால் இந்தியா திட்டங்களை மேம்படுத்தும் போது, செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.

தற்போது, இந்தியா விண்கலத்தை ஏவ சிறிய ராக்கெட்களை பயன்படுத்துகிறது. ஏனெனில் இந்தியாவிடம் சக்தி வாய்ந்த, கனரக ராக்கெட்கள் எதுவும் இல்லை. இதனால், இந்தியாவின் விண்கலங்கள் இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கும்.

சந்திரயான் -3 ஏவப்பட்டபோது, அது நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்வதற்கு முன்பு பூமியை பல முறை சுற்றி வந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு நிலவையும் சில முறை சுற்றி வந்தது. மறுபுறம், ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் ஒரு சக்திவாய்ந்த சோயுஸ் (Soyuz) ராக்கெட்டை கொண்டு ஏவப்பட்டதால் அது விரைவாக பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறியது.

"நாங்கள் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவை நோக்கி விண்கலத்தை ஏவினோம். இதற்காக நாங்கள் பல வாரங்கள் திட்டமிட்டோம். இஸ்ரோ இதுபோல பல முறை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது”. என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

ஆனால் 2040 ஆம் ஆண்டிற்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராக்கெட்டுகள் தேவைப்படும் என்று பல்லவா பாக்லா கூறுகிறார்.

இது போன்ற புதிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் 2032 ஆம் ஆண்டுக்குள் அது தயாராகிவிடும் என்றும் இந்திய அரசு சமீபத்தில் கூறியது. இந்த அடுத்த தலைமுறை ராக்கெட் (NGLV) அதிக எடையை சுமந்து செல்லக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனை தயாரிக்க அதிக செலவாகும்.

இந்தியா விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் வரவால் செலவுகள் மிகவும் குறையக்கூடும் என்றும் பல்லவ பாக்லா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.