Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"காதல் பரிசு"
 
 
இலங்கையின் பரபரப்பான நகரமான கொழும்பில், நெடுங்குழலி என்ற தமிழ் பெண்ணும் அஜந்தா என்ற சிங்கள வாலிபனும் பக்கத்து பக்கத்து வீட்டில் மட்டக்குழி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தனர். நெடுங்குழலி உயர் வகுப்பில் தமிழ் மொழியிலும், அஜந்தா சிங்கள மொழியிலும் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாலும், இருவரும் தாராளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருந்ததால், அவர்களுக்கிடையில் ஒரு நட்பு இலகுவாக எற்பட்டது. தங்கள் பாடங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அலசுவதுடன் நாட்டு நடப்புகள் பற்றியும் விவாதிக்க தவறுவதில்லை. அவர்களுக் கிடையில் மலர்ந்த புரிந்துணர்வுகள் அவர்களின் சமூகம் வெவ்வேறாக இருந்தாலும், அவ்வற்றைத் தாண்டி, நாம் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பின்னிப்பிணைந்து வலுவடைந்தன.
 
அஜந்தா இயற்கையாகவே கனவுகள் நிறைந்த இதயம் கொண்ட திறமையான இளம் கலைஞராகவும், அதேவேளை இரக்கமுள்ள ஒரு சமூக சேவகியாகவும் படிப்பில் திறமைசாலியாகவும் நெடுங்குழலி இருந்தாள். இருவரின் திறமைகள் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையை கொண்டு இருந்தாலும் அந்த வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை அவர்களிடம் காணப்பட்டது. இருவரும் தங்கள் பாதையை இன மத ஒற்றுமையை மையமாகக் கொண்டு செயல்பட்டதே ஆகும். ஆமாம் அவர்களின் உலகங்கள் தனித்தனியாக இருந்தன, ஆனால் விதி அவர்களுக்காக ஒரு அழகான திட்டத்தை வைத்திருந்தது.
 
"அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!"
 
அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கை நகரத்தின் கடற்கரை. அங்கே கிடைக்கும் முத்துகளைப் போன்றவை நெடுங்குழலியின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்ததுபோன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பதுபோன்ற இனிய சொற்களைப் பேசுவாள் இப்படித்தான் அஜந்தா தன் கலைத் திறன் களுக் கூடாக அவளைக் கண்டு தன் மனதை பறிகொடுத்தான். சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி, அதை அடிக்கடி கையால் 'ஸ்டைலாக' கோதிக்கொண்டு அஜந்தா ஆண்மை மிடுக்குடன் முறுக்கேறிய வல்லமைகொன்ட தசைகளும் நேர் கொண்ட கூரிய விழிகளும் சேர நடந்து போகும் அழகு, நெடுங்குழலியையும் கொள்ளை கொண்டதில் எந்த அதிசயமும் இல்லை. 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', கதைதான் அவர்களை இணைத்த காதல் கதை!
 
மெல்லிசைகளிலும் ஓவியங்கள் வரைவதிலும் இயற்கையாக கொண்ட ஆர்வத்தை அஜந்தா இன ஒற்றுமைக்காக அர்ப்பணித்து, சில சக மாணவர்களின் பங்குபற்றுதலுடனும், சில ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் தனது பாடசாலையில் ஒரு கலைக் கண்காட்சி நடத்தினான். அது கலை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தடன், முக்கியமாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள், அஜந்தாவை கௌரவித்து செய்தியும் விட்டனர். அந்த நிகழ்வில், தமிழ் பாடசாலை மாணவ மாணவிகளின் சார்பாக நெடுங்குழலி ஒரு பேச்சும் வழங்கினார்.
 
மகாவம்சத்தின் காலத்திற்கு முன்பே, இலங்கை தென்னிந்தியாவைப் போன்ற ஒரு கலாச்சாரத்தை அனுபவித்தது மற்றும் அந்த பழங்காலத்தவர்கள் தற்போதைய சிங்கள மற்றும் தமிழர்களின் முன்னோடிகளாக இருந்தனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தப் பழங்காலத்தவர்களுக்கு இன வேறுபாடுகள் இல்லையென்றாலும் கலாச்சார வேறுபாடுகள் மட்டுமே இருந்ததாக பேராசிரியர் சேனக பண்டாரநாயக்க கூறியுள்ளார் என்பதை அவள் எடுத்துக்காட்டியதுடன் இந்த வேறுபாடுகள் விஜயன் என்று மகாவம்சத்தில் அழைக்கப்படுபவர் இலங்கைத் தீவுக்குச் செல்வதற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார். பண்டைய கற்கால மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைப் பழக்கங்களை ஆராய்ந்தால், அவர்கள் தங்கள் பெயர்களையோ அல்லது மண் பானைகள் மற்றும் பாத்திரங்களை வடிவமைத்தவர்களின் பெயர்களையோ பொறிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்தப் பழக்கம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அன்றைய காலகட்டத்தில் இருந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பழக்கம் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. தமிழ்நாட்டிலும் அனுராதபுரத்திலும் மண் பானைகளில் இந்த எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அநுராதபுர பானைகள் 2750 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைச் சேர்ந்தவை. பானைகளில் உள்ள எழுத்துக்கள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தன் பேச்சை முடிக்கும் பொழுது, அஜந்தாவின் திறமையையும் போற்றி அவனுக்கு ஒரு பூக் கொத்தையும் வாழ்த்தி கொடுத்தார்.
 
இதுவரை கண்களும் கண்களும் சந்தித்த அவர்கள், பூக்கொத்து கொடுக்கும் பொழுது இருவரின் கைகளும் தெரிந்தோ தெரியாமல் சந்தித்தன. அப்பொழுது அவள் மனது கொஞ்சம் படபடத்தது, கண்கள் கூசி தரையை நோக்கினாள். 'நாமிருவர்‌ பூப்போல்‌ மணம்‌ போல்‌ இருள் மாற்றும்‌ இன்ப நிலாப்‌ போல்‌ குளிர்போல்‌ ஒருமித்தல்‌ வேண்டும்‌' என்று தனக்குள் முணுமுணுத்தாள். அவன் கூடத்தில் உள்ளவர்களையே மறந்து அவளையே, கண் வெட்டாமல் ஒரு கணம் பார்த்தான். அவளின் எழிலைத்‌ தன் மனதில் காணாக்கண்டான்.
 
"தேனைப்‌ போல்‌ மொழியுடையாள்‌; அன்றலர்ந்த
செந்தாமரை போல்‌ முகத்தாள்‌ கெண்டை
மீனைப்‌ போல்‌ விழியுடையாள்‌ விட்டதிர்ந்த
மின்னைப்போல்‌ நுண்ணிடையாள்‌! கொண்ட
வானைப்‌ போல்‌ உயர்வாழ்வு வாய்ந்தாள்‌"
 
என்று உவமைகள் சேர்த்து அதில் இன்பம் கண்டான்! அடுத்தநாள் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்திகளில் அவளின் பேச்சு முதன்மையாக இடம் பெற்றதுடன், சில செய்தி நிறுவனங்கள், மகாவம்ச புராணக் கதையை முதன்மை படுத்தி, நெடுங்குழலி கொழும்பில் இருந்து கொண்டு மகாவம்சத்தை அவமதிக்கிறாள் என்று திரித்து செய்திகளை பரப்பின. அவர்களின் உள்நோக்கத்துக்கு துணையாக சில மத தலைவர்கள், சில அரசியல்வாதிகள், சில குண்டர்கள் ஒன்று சேர்ந்து அவள் வீட்டை முற்றுகை யிட்டு, அவளுக்கு எதிராக முழக்கம் செய்தனர். நல்லவேளை அஜந்தா நேரத்துடன் அதை உணர்ந்து நடவடிக்கை எடுத்து, அவளையும் அவளின் குடும்பத்தையும் ஒரு பாதுகாப்பான இடத்தில், வீட்டின் பின்பக்கமூடாக கூட்டி சென்றுவிட்டான். என்றாலும் அவர்களின் வீடு தாக்கப்பட்டு உடைக்கப்பட்டன.
 
அஜந்தாவினதும் நல்ல இதயம் கொண்ட அயலவர்களின் வேண்டுதலுக்கும் செவிசாய்த்து, கொஞ்ச நாள், ஆரவாரம் அடங்கும் மட்டும் யாழ்ப்பாணம் போக முடிவு செய்தனர். அது தான் இருவரும் சந்திக்கும் கடைசிநாள் என்று அப்பொழுது அவர்களுக்கு தெரியாது. அஜந்தா தன் நினைவாகவும் காதல் பரிசாகவும் ஒரு அழகிய கவர்ச்சிகரமான பொம்மை கரடியை அவளுக்கு அன்பளிப்பாக கொடுத்து, பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தான்.
 
நெடுங்குழலியும் அவளின் குடும்பத்தினரும் யாழ் நகரில் தற்காலிகமாக இருக்கும் அந்த தருணத்தில், தந்தைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவும், நெடுங்குழலி உயர் வகுப்பில் அதி கூடிய சிறப்பாக சித்தியடைந்த மறுமொழிவரவும், லண்டனில் உள்ள பழமையானதும், பெரியதுமான, 1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இங்கிலாந்திலேயே முதன்முறையாக சுதந்திரமாக செயல்பட்ட கல்வி நிறுவனமான இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி அவளுக்கு புலமைப்பரிசும் கொடுக்கவும், அஜந்தாவுக்கு கடிதம் மூலம் அந்த செய்தியை அனுப்பிவிட்டு, கொழும்புக்கு போய், மீண்டும் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, நேரடியாக விமான நிலையம் யாழில் இருந்து சென்றார்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் அஜந்தா விமான நிலையம் வருவான் என்றே! ஆனால் அவன் வரவே இல்லை, ஏன், என்ன நடந்தது ஒன்றும் அவர்களுக்குப் புரியவில்லை. விசாரிக்கவும் நேரம் பெரிதாக இருக்கவில்லை. அவளின் கையில், அவளின் கண்ணீர் மழையில் நனைந்தபடி, அவனின் 'காதல் பரிசு' பொம்மை கரடி இன்னும் இருக்கிறது. அவளுடன் சேர்ந்து அதுவும் லண்டன் பயணம் சென்றது.
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
394201790_10224197498387940_8843108235536616294_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=QsLeX4iJ70EQ7kNvgGCHLWo&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AqlPww5xEmWXMVbHymmKrkX&oh=00_AYBDtk3PkrZ5OmhV9JMxSk3FcoXsk_WL0tEVdWiu7UHSnA&oe=67756B9E   394254975_10224197499267962_7541235277084588271_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jCvuva-qUnUQ7kNvgHUDkih&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AqlPww5xEmWXMVbHymmKrkX&oh=00_AYDwIBcLRdIFNiDbaQ100vV_vJQO0CQyvtD0n7jWlIk7ww&oe=67759705
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.