Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மு.க. ஸ்டாலின், இரும்பு காலம்

பட மூலாதாரம்,MK STALIN / DIPR

 

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்றும், 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடி - கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு இன்று (ஜன. 23) முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'இரும்பின்' தொன்மை என்ற நூலை வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என கூறினார். அவருடைய உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது.

 

5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற அகழாய்வுகள், காலக் கணக்கீடுகள் இரும்பின் காலத்தை 4,000 ஆண்டுகளின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புனே, ஆமதாபாத் ஆகிய இடங்களிலும் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வகங்களிலிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, கதிரியக்கக் காலக்கணக்கீடு அடிப்படையில், கி.மு. 3345ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி உள்ளது எனத் தெரிகிறது.

இந்த முடிவுகள் எல்லாவற்றையும் தொகுத்துதான் இன்று 'இரும்பின் தொன்மை' எனும் நூல் வெளியிடப்படுகிறது. தொல்லியல் அறிஞர்களின் கருத்துகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் ஆய்வுகளுக்கு இந்த முடிவுகள் சான்றாக இருக்கும்.

கொடையாக இந்த முடிவுகளால் தமிழகத்துக்கும் தமிழ் நிலத்துக்கும் பெருமை. மானுட இனத்துக்கு தமிழகம் வழங்கும் மாபெரும் இதை கம்பீரமாக கூறலாம்.

இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு' - மனித நாகரிக வளர்ச்சியில் இது ஏன் முக்கியம்?

சிவகளை , இரும்புக் காலம், மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

படக்குறிப்பு, சிவகளை தொல்லியல்தளத்தில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை காலக்கணக்குக்கு உட்படுத்தியதில் இது தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதாவது, சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்கு முன்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ் (Accelerator Mass Spectrometry - ஒரு மாதிரியில் உள்ள ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் நுட்பம்) என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது.

 

ஆகவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின் பயன்பாடு மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

'இரும்பின் தொன்மை' என்ற பெயரிலான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது வெளிவந்துள்ள காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இரும்பின் மீதான ஆர்வத்தின் தொடக்கம்

தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வில் இரும்பின் பயன்பாடு மீதான ஆர்வத்தைத் தூண்டியது, சேலம் மாவட்டம் மாங்காட்டில் கிடைத்த இரும்பு வாள்தான்.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளை காலக் கணக்கீட்டுக்கு உட்படுத்தியபோது, அதன் காலம் கி.மு. 1,604 முதல் கி.மு. 1,416 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.

அவ்வளவு தொன்மையான இரும்பு கிடைத்தது தமிழ்நாட்டில் அதுதான் முதல்முறை. இந்தக் கண்டுபிடிப்புதான் தமிழக தொல்லியல் வட்டாரத்தில், இரும்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது.

அதற்கடுத்ததாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கீழ்நமண்டியில் 2023ல் நடந்த அகழாய்வில் சில ஈமப்பேழைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஈமப் பேழைகளில் கிடைத்த இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றின் காலம் தோராயமாக கி.மு. 1769 முதல் 1615 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இரும்பின் தொன்மை

பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது

கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பின் காலமும் கி.மு. 2,172ஆக இருப்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, இரும்பின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில்தான் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களின் காலம் கி.மு. 2,600 முதல் கி.மு. 3,345 வரை இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை, அதன் வாழ்விடப் பகுதியில் 220 செ.மீ. ஆழத்தில் கிடைத்த இரும்புப் பொருளுடன் கிடைத்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், அவற்றின் காலம் சராசரியாக கி.மு. 2613ஆக இருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது.

ஆதிச்சநல்லூர், இரும்பு காலம், தமிழ்நாடு, மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொல்லியல் துறை

பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

படக்குறிப்பு, ஆதிச்சநல்லூர் தொல்லியல்தளத்தில் கிடைத்த இரும்புப் பொருட்கள்

ஹரப்பா நாகரீகமும் இரும்பு காலமும்

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திற்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சிவகளையில் நடத்தப்பட்ட அகழாய்வில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.

இதில் இருந்த கரிமப் பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த ஒரு கரிமப் பொருளின் காலம் கி.மு. 3,345 எனத் தெரியவந்திருப்பதாக தமிழக அரசின் அறிக்கை கூறுகிறது. ஆகவே, அந்தக் கரிமப் பொருளுடன் இருந்த இரும்பின் காலமும் அதுவாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை வேறொரு கோணத்தில் சுட்டிக்காட்டுகிறார், பிபிசி தமிழிடம் பேசிய தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம். "ஹரப்பா நாகரீகத்தை ஆரம்பகால ஹரப்பா நாகரீகம், முதிர்ந்த ஹரப்பா நாகரீகம், பிற்கால ஹரப்பா நாகரீகம் என பிரித்துப் பார்க்க முடியும். ஆரம்பகால ஹரப்பா நாகரீகம் என்பது கி.மு. 3,300வாக்கில் நிலவியது."

"தற்போது சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பும் அதே காலகட்டத்தைச் சேர்ந்தது. ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது. செப்பு தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு உருக்கி, பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வட இந்தியா செப்புக் காலத்தில் இருந்தபோது, விந்திய மலைக்கு தெற்கே இருந்த பகுதிகள் இரும்புக் காலத்தில் இருந்தன என்ற முடிவுக்கு வர முடியும்" என்கிறார் டாக்டர் ஆர். சிவானந்தம்.

ஹரப்பா நாகரீகம், இரும்பு காலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "ஹரப்பா நாகரீகத்தைப் பொறுத்தவரை அங்கே இரும்பு கிடையாது, செப்பு தான் பயன்படுத்தப்பட்டது"

இரும்புக் காலம் - ஏன் முக்கியம்?

மனிதர்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்பநிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது.

ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது.

இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கும்.

ஆகவேதான் இரும்புக் காலத்தின் துவக்கம் எப்போது ஏற்பட்டது என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்தியாவில் தொடக்ககால இரும்பு கிடைக்கும் இடங்களின் பட்டியல்.

பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

படக்குறிப்பு, இந்தியாவில் தொடக்ககால இரும்பு கிடைக்கும் இடங்களின் பட்டியல்

உலக அளவில் மிகப் பழமையான இரும்பு 1911ஆம் ஆண்டில் வட எகிப்தில் அல் - கெர்சே (Al - Gerzeh) என்ற இடத்தில் இருந்த கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கல்லறைகளில் இருந்து 9 மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் 3,100வரையாக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இவை இரும்புத் தாதை உருக்கி செய்யப்பட்டவையல்ல. மாறாக விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை.

இரும்புத் தாதை உருக்கி இரும்பு செய்யும் தொழில்நுட்பம் கி.மு. 1,300வாக்கில் அனடோலியா (தற்போதைய துருக்கி) பகுதியில் தொடங்கியதாக கருதப்பட்டுவந்தது.

அங்கிருந்தே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதாகவும் கருதப்பட்டது. ஆனால், இரும்பின் பயன்பாடு எப்படித் துவங்கி, எப்படிப் பரவியது என்பது தொடர்பான விவாதங்கள் இப்போதும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

எரிகல்லால் ஆன மணிகள், இரும்பு காலம்

பட மூலாதாரம்,TAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY

படக்குறிப்பு, வட எகிப்தின் அல் - கெர்சே என்ற இடத்தில் கிடைத்த எரிகல்லால் ஆன மணிகள்

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டவை

இந்தியாவைப் பொறுத்தவரை, கி.மு. 1,000வது ஆண்டுவாக்கில்தான் இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகமானதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் இந்தியா முழுவதும் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள், இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அதற்கு முன்பே இந்தியாவில் இருந்ததை உறுதிப்படுத்தின.

"உதாரணமாக உத்தர பிரதேசத்தின் அக்தாவில் கிடைத்த இரும்பின் காலம் கி.மு. 1,800 முதல் 1,450 வரை இருக்கலாம் எனத் தெரியவந்தது. தெலங்கானாவின் கச்சிபவுலியில் கிடைத்த இரும்பு கி.மு. 2,200ஐச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவந்தது.

இந்த நிலையில்தான், தற்போது ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2,500 முதல் கி.மு. 3,345வரை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்.

ஆர்.சிவானந்தம், தமிழ்நாடு தொல்லியல் துறை
படக்குறிப்பு, 5,300 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்கிறார், தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம்

ஆனால், இதுவே இறுதியானதல்ல என்பதையும் குறிப்பிடுகிறார் அவர். "எதிர்காலத்தில் இந்தியாவிலும் உலக அளவிலும் கிடைக்கும் இரும்பு தொல்பொருட்களும் அவற்றின் மீது நடத்தப்படும் ஆய்வுகளும் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் முறை எப்போது உருவானது என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கத்தைத் தரலாம்" என்கிறார் சிவானந்தம்.

வட இந்தியாவில் கிடைத்ததைப் போல தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால் இங்கு செம்புக் காலம் வழக்கத்திலிருக்கவில்லை. இருந்தபோதும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழிகளில் கி.மு. 15ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்த உயர்தர தகர - வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

அதேபோல, சாஸ்தாபுரம், அடுக்கம், சூலப்புரம், திருமலாபுரம், ஆரோவில் போன்ற இடங்களிலும் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் எவ்வளவோ அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உயர்தர தகர - வெண்கலப் பொருட்களின் உற்பத்தி மையம் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறது இந்த அறிக்கை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.