Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

June 23, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் —

உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில்  எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது.  இரு தரப்புகளுக்கும்  பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால்  ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை.  தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில்,  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது ஒற்றுமை. 

தேசிய மக்கள் சக்தியும்  அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய  உள்ளூராட்சி சபைகளை தவிர, கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனியான கட்சியாக விளங்கும் பெருவாரியான சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.  கடந்தகால  தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் பொறுப்பானவை என்று தாங்கள் அடையாளப்படுத்திய கட்சிகளுடன் சேர்ந்து நிருவாகங்களை அமைப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இருக்கிறது. ஆனால்,  சுயேச்சைக் குழுக்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் ஆதரவை இயன்றவரை நாடுவதில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லை.  தேர்தல் அரசியலில்  ‘பிரத்தியேகமான’ கட்சியாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பழைய போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் நாளடைவில் புரிந்துகொள்வார்கள்.

தேசிய மக்கள் சக்தி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையை  விடவும் எதிர்க்கட்சிகளும்  சுயேச்சைக் குழுக்களும் கைப்பற்றிய ஆசனங்களின் கூட்டு  எண்ணிக்கை அதிகமானதாக  இருக்கும் உள்ளூராட்சி சபைகளில்  சாத்தியமான அளவுக்கு ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு முக்கியமான எதிர்க்கட்சிகள் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்வாக, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு ஒரு இணக்கப்பாட்டை கண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் கடந்த வாரம் அறிவித்தன. 

 கடந்த வியாழக்கிழமை கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் இதை தெரிவித்த  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம், பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகிய வண்ண மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள ஆகியோர் நான்கு பிரதேச சபைகளில் ஏற்கெனவே நிருவாகங்களை அமைத்திருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல சபைகளை   தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் கூறினர். குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி நெறிகெட்ட வழிமுறைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக  அவர்கள் குற்றஞ்சாட்டுகிறாார்கள்.  

தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துநிற்க வேண்டும் என்பதை தவிர,  இந்த நான்கு கட்சிகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. கொள்கைகளைப் பொறுத்தவரை,  இவற்றுக்கு இடையில் குறைந்தபட்ச ஒற்றுமையாவது இருந்திருந்தால், தேர்தலிலேயே ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு எதிராக களமிறங்கியிருக்க முடியும். உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தரமான பொதுச்  சேவையை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே ஒன்றிணைந்திருப்பதாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூறுவதை மக்கள் நம்பவா  போகிறார்கள்? கூட்டு முயற்சியினால் இவர்களால் எத்தனை சபைகளின் நிருவாகங்களை கைப்பற்ற முடியும் என்பதை எதிர்வரும் நாட்களில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இதே போன்றே வடக்கு, கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள்  சக்தி எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நிருவாகத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் தமிழ்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. தென்னிலங்கையில் எதிரணி கட்சிகளுக்கு உள்ளதைப் போன்றே தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளுக்கும் பொது அரசியல் எதிரியாக விளங்குகிறது. ஆனால், அந்த கட்சிகள்  உள்ளூராட்சி  தேர்தல்களில் ஒன்றுபட்டு போட்டியிடுவதை அவற்றுக்கிடையிலான “பாரம்பரியமான” கட்சி அரசியல் வன்மம் தடுத்துவிட்டது. தலைவர்களுக்கு இடையிலான ஆளுமைப் போட்டியும் இதற்கு பங்களிப்பு செய்தது

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி  பெற்ற முன்னென்றும் இல்லாத வகையிலான வெற்றியை தங்களது அரசியல் இருப்புக்கான அச்சுறுத்தலாக நோக்கிய தமிழ்க்கட்சிகள்  உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது தனித்தனியாக போட்டியிட்டாலும் பிறகு சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படப்போவதாக தமிழ் மக்களுக்கு கூறின.   ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இந்த கட்சிகள்  மீண்டு வரக்கூடியதாக அந்த மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், மக்களுக்கு கூறியதைப் போன்று  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் பிரதான தமிழ்க் கட்சிகளினால் அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் வெளிக்காட்ட முடியவில்லை. 

உள்ளூராட்சிகளின் நிருவாகங்களை அமைக்கும் செயற்பாடுகளை தமிழ்க்கட்சிகள் இரு முகாம்களாக நின்று ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்படும் கூட்டணியுமே அந்த இரு முகாம்களுமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தனது பாரம்பரியமான போக்கை மாற்றி பொன்னம்பலம் கூட்டணி அமைப்பதில் நாட்டம் காட்டினார். (அவரது கடந்த கால அரசியலுடன் ஒப்பிடும்போது மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்று அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தில்  வரவேற்கத்தக்க அம்சம் ஒன்று நிச்சயமாக இருக்கிறது)  உள்ளுராட்சி தேர்தல்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்பட்ட அவர்களின் கூட்டணி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் சேர்த்துக் கொண்டது. 

பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் இதுநாள்வரை தாங்கள்  படுமோசமாக விமர்சித்து  வந்த (முன்னாள் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களின்)  கட்சிகள் சிலவற்றை  அரவணைப்பதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு அந்த கட்சிகளின் சார்பில் தெரிவான உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதே நடைமுறை ரீதியான உடனடி நோக்கமாக இருந்த போதிலும், தாங்கள் ஒரு “கொள்கை அடிப்படையிலான கூட்டணியை”  அமைத்திருப்பதாக ஒரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள். 

தமிழரசு கட்சியை பொறுத்தவரை,  அது தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அந்த கட்சிக்குள் அவருக்கு எதிராக இருக்கும் அணியினரால் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தமிழரசு கட்சி கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டவில்லை.  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் மாத்திரமல்ல, பொன்னம்பலத்துடனும் பேச்சுவார்த்தைகளைை  நடத்தினார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அவர்களினால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. 

இதையடுத்து தமிழரசு கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாடியது. சிவஞானம் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசுவதற்கு அவரது கட்சியின் அலுவலகத்துக்கு தானே நேரடியாகச் சென்றார். அது ஒரு “பாவச்செயல்” என்பது போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

போர்க்காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக வெவ்வேறு கட்டங்களில்  அரசாங்கங்களின் பக்கமாக நின்று அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் செயற்பட்ட வெவ்வேறு தமிழ்  இயக்கங்களை  (அவை இப்போது அரசியல் கட்சிகள்) “தீண்டத்தகாதவை” என்று அடையாளப்படுத்திய ஒரு அரசியல் கலாசாரத்தில் தற்போது ( அரசியல் அனுகூலங்களுக்காக)  ஒரு மாறுதல் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இவற்றில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேருவது, எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பது என்பதில் வேறுபாடுகளைக்  காண்பதற்கான அளவுகோல் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. 

அவர்கள்  தேசியவாதத்தின்  பக்கம் நிற்கிறார்கள்; இவர்கள் தேசியவாத நீக்க அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்கின்ற வகையிலான விமர்சனங்களை அல்லது சாக்குப் போக்குகளை  முன்வைப்பவர்கள் தாங்கள் கூறுகின்ற வியாக்கியானமே “உண்மையான தேசியவாதம்” என்று தங்களுக்குள் தாங்களே திருப்திப்பட்டுக்  கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலப் போராட்டங்களில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அரசியல்வாதிகள் போராளிகளின்   தியாகங்களை வெறுமனே உதட்டளவில் போற்றுவதன் மூலம் மாத்திரம்  ‘புடம்போட்ட  தேசியவாதிகளாக’ தங்களை உரிமை  கொண்டாடுவது எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்?

தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் அரசியல் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கைதான். அதை அடைவதற்கான வழிமுறைகள் என்று வரும்போது காலகட்டங்களையும் அகச்சூழ்நிலையையும் புறச்சூழ்நிலையையும் கருத்தில் எடுத்தே எந்தவொரு தேசமும்  தேசிய இனமும் அடிப்படை அபிலாசைகளை சமரசம் செய்யாமல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உலகில் அரசியல் சுதந்திரத்தை  அடைந்த  தேசங்களினதும் இனங்களினதும் வரலாறு இந்த உண்மையைப் போதிக்கிறது. சூழவுள்ள நிலைவரங்களை கருத்தில் எடுக்காமல் வெறுமனே கோட்பாடுகளில் வரட்டுப் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நினைவுகளுடன் மாத்திரம் மக்களைப் பிணைத்துவைத்திருக்க முயற்சிப்பதும் எந்தப் பயனையும் தராது என்பதே எமக்கு வரலாறு தந்த படிப்பினையாகும். 

இதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தங்களது  அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முதலில் மூன்று தசாப்தங்கள் அகிம்சைவழிப் போராட்டத்தையும் அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய இலங்கை தமிழ் சமுதாயம் இன்று எந்த இடத்தில் நிற்கிறது என்பதை எமது அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது அவசியமானது.

 தாங்கள் முன்வைக்கின்ற கோட்பாடுகள்,  கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயமும் இல்லாமல், கடந்த நூற்றாண்டின்  பின்னரைப் பகுதியில்  வெறுமனே உணர்ச்சிவசமான அரசியலைச் செய்த மிதவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிறந்த படிப்பினைகளாகும். அந்த மிதவாத தலைவர்கள் பாராளுமன்றத்திலாவது முன்னுதாரணமான பங்களிப்பைச் செய்தார்கள். 

தற்போது தமிழரசு கட்சி டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினதும் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கட்சியினதும் ஒத்துழைப்புடன் ஒரு முகாமாகவும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை இன்னொரு முகாமாகவும் நின்று கொண்டு வடக்கில் உள்ளூராட்சி நிருவாகங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கின்றன. 

உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

இன்று தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்காக செய்துவரும் விட்டுக் கொடுப்புக்கள் நாளடைவில் தேசிய இனப்பிரச்சினைக்கான குறுகியகால, நீண்டகால தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கு வழிவகுக்குமாக இருந்தால் பயனுறுதியுடையதாக அமையும். 

அரசியலில் விட்டுக்கொடுப்பு (Compromise)  என்பது எதிரெதிரான கட்சிகள் பரஸ்பரம் சலுகைகளைச் செய்வதன் மூலம் இணக்கப்பாடு ஒன்றை அடைவதற்கு தேவையான மிகவும் முக்கியமான செயன்முறையாகும். அது முழுநிறைவான கருத்தொருமிப்பை  சாதிப்பதாக அமையாது. அத்தகைய கருத்தொருமிப்பு மிகவும்  அரிதாகவே சாத்தியமாகும். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சிகளின்  நலன்களை ஓரளவுக்கேனும் நிறைவு செய்வதற்கு  உதவக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மாறுபட்ட  நோக்குகளையும்  முன்னுரிமைகளையும் அங்கீகரித்துக்கொண்டு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதே உண்மையான விட்டுக்கொடுப்பாகும்.

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைக்கும் விடயத்தில் தமிழ்க்கட்சிகள் அவற்றின் தனித்தனியான  நலன்களை மனதிற் கொண்டுதான்    விட்டுக்கொடுப்பு  அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த விட்டுக்கொடுப்பு தற்போது தெரிவாகியிருக்கும் புதிய உள்ளூராட்சி சபைகளின் நான்கு வருட பதவிக்காலம்  நிறைவு பெறும் வரை  நீடித்து தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை  பயனுறுதியுடைய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவினால் அதுவே பெரிய விடயமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதானே விட்டுக்கொடுப்பு அரசியலை பழகத் தொடங்கியிருக்கிறார்கள். 

https://arangamnews.com/?p=12111

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.