Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசும் அரசாங்கமும்

sudumanal

budha.jpg?w=1024

அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது.

அரசின் இனவாதத்தை செவ்வனே செயற்படுத்திய ராஜபக்ச பரம்பரையை ஆட்டங்காணச் செய்த காலிமுகத் திடல் போராட்டத்தின் போது ராஜபக்சக்களை கைவிட அரசு தயாராக இருந்தது. புதிதாக அந்த இடத்தை நிரப்ப அரசியல்வாதிகள் உண்டு என அரசுக்குத் தெரியும். அரசமாளிகையை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து விளையாடுற எல்லைவரை -தனது இராணுவத்தை வாபஸ் பெறச் செய்து- போராட்டக்காரரை அனுமதித்தது. தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்து அந்தக் காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதே போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தினுள் புக முயற்சித்த நேரத்தில், அந்த வன்முறை இயந்திரங்கள் கடுமையான தடுப்புகளைப் போட்டு வீரியமாக எதிர்கொண்டன. அதையும் உடைத்து அன்று போராட்டக்காரர் பாராளுமன்றத்தினுள் உள்நுழைந்திருந்தால் ஒரு படுகொலையோடு அந்தப் போராட்டம் முடிவடைந்திருக்கும் சாத்தியமே இருந்தது.

அரசாங்கங்கங்கள் தேர்தலின் மூலம் மாறலாம். அரசு கட்டமைப்பு அரசாங்க மாற்றத்தோடு சேர்ந்து மாறாது. அது தனது தொடர்ச்சியை பேணியபடி இருக்கும். அரசு என்பது புலப்படும் மற்றும் புலப்படாத (visible & invisible) கட்டமைப்பைக் கொண்டது. அதன் வன்முறை இயந்திரங்களான இராணும் பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம் போன்றவை புலப்படும் நிலையில் உள்ளவை. அரசின்; கருத்தியல் என்பது புலப்படாத நிலையில் இருப்பது. இந்த நிறுவனங்களில் பதவி மாற்றங்களை அரசாங்கம் நிகழ்த்தலாம். இந்த சில்லறை மாற்றங்கள் அரச கட்டுமானத்தையோ அதன் கருத்தியலையோ மாற்றாது. இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அரச கட்டுமானத்தைப் போலவே அரச கருத்தியலையும் கையாள்வதில் இதுவரை பிசகின்றி சேர்ந்தே நடந்திருக்கின்றன.

இந்த முட்டுச் சந்தியில்தான் என்.பி.பி அரசாங்கமும் விடப்பட்டிருக்கிறது. இதுவரையான அரசாங்கங்கள் இனவாதத்தைப் பேசிப் பேசியே ஆட்சியை அமைக்க இலகுவான வழியாக அதைத் தேர்ந்தெடுத்தார்கள். அரச கட்டுமானத்தின் கருத்தியல் பௌத்த மேலாதிக்கமாக கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. ஓர் அரசின் மிக முக்கிய அங்கங்கள் மக்கள் திரளும், நிலமும், கருத்தியல் நிறுவனங்களும், வன்முறை இயந்திரங்களும் ஆகும். இவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் நிறுவனமாக அரசாங்கம் இருக்கிறது என்றபோதும், அரசாங்கமானது அரசின் அதிகாரத்தை தடாலடியாக மீறிச் செயற்படுவது என்பது இலகுவானதல்ல.

அரசு தனது மக்கள் திரளை ஒன்றிணைத்து இந்த மீறல்களை சுலபமாக எதிர்கொள்ள கருத்தியல் ஆயுதத்தை பயன்படுத்தும். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவரை அதாவது சிங்கள மக்களை மொழி மற்றும் (பௌத்த) மத அடிப்படையில் ஒன்றிணைக்க இலகுவாக இருக்கிறது. சிங்கள மக்களில் மிகப் பெரும்பாலானோரும் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பது இன்னும் அதிகார சக்திகளுக்கு இலகுவாகப் போயிருக்கிறது. எனவே இனவாதம் என்பது மொழி, இனம் என்ற இரண்டு தளங்களிலும் செழிப்பாக இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை “இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி இருக்கிறது. தமிழ் அப்படியல்ல. இந்தியாவில் பல கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே சிங்கள மொழியைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு” என கிளம்ப ஒரு கருத்தியல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இலகுவாக மாறா நிலையிலுள்ள அரச கட்டுமானத்தை மாறும் நிலையிலுள்ள அரசாங்கங்கள் கையாள்வதற்கு அரசியல் யாப்புத்தான் ஒரு பாதையை திறந்து வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு மக்கள் நலன்மேல் அக்கறையுடைய ஓர் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு தன்னை முதலில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய என்பிபி அரசாங்கம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் என்பிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தும், அரசியல் சட்டத்தில் கைவைக்க தயங்குவதற்கான ஒரே காரணம் அரச வடிவத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல் வடிவம்தான். நீருக்குள் இறங்காமல் நீச்சல் பழக முடியாது. காலம் தேவைப்படலாம். முயற்சி அதைவிட முக்கியம் என்பதை என்பிபி அரசாங்கத்துக்கு சொல்லிவைக்கலாம்.

70 வருட இனவாத கருத்தியலில் கட்டப்பட்டு தொடர்ச்சியுறும் அரசாங்க பாரம்பரியத்திலிருந்து, தாம் சொல்வதுபோல தம்மை என்பிபி யினர் எவ்வாறு முறித்துக் கொள்ளப் போகிறார்கள். இதை அவர்கள் நேர்மையாக முன்வைக்கும் பட்சத்தில், அது அவர்களிடமிருந்து செயல் வடிவத்தைக் கோருகிறது. இனவாதமற்ற, மதவாதமற்ற ஓர் நாட்டை கட்டியமைப்போம் என்ற அவர்களின் குரல் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். இந்தக் குரலையும் மேவிய என்பிபி யின் குரலானது ஊழலையும் போதைவலையமைப்பையும் தகர்த்து இல்லாமலாக்குவோம் என்பது. அதுவே இன்று நடைமுறையில் பரபரப்பாக செயற்படுகிறது. இனவாத ஒழிப்புக்கான நடைமுறையல்ல.

அதிகாரப் பகிர்வு என்பது பற்றி பேசவே தயங்குகிற சூழல் அவர்களது. “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் சம உரிமை கொண்ட மக்கள், எல்லா பிரதேசங்களும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்” என்றெல்லாம் பொதுமையாகப் பேசுவது அரச இனவாதக் கட்டமைப்புக்கோ அதன் கருத்தியல் நிறுவனங்களுக்கோ எந்த அச்சத்தையும் விளைவிக்காது. இவற்றை நடைமுறைப் படுத்துகிறபோது தான், அவர்கள் சட்டையைக் கொழுவிக் கொண்டு களமாடப் புறப்படுவார்கள்.

உண்மையில் என்பிபி தான் பேசுபவற்றை நடைமுறையாக்க தயாராகுமானால், சிங்கள முற்போக்கு சக்திகளோடு தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் அதற்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் செயற்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை படிப்படியாக இனவாதத்துக்கு எதிரான செயல் வடிவத்துள் தள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எதிர்நிலையில் நின்று செய்வது சாத்தியமில்லை. வெளியில் அரசாங்கத்தை மீண்டும் இனவாத அலகால் கௌவிப் பிடிக்க அலையும் வல்லூறுகள் இந்த 70 வருடமும் மாறிமாறி ஆட்சி நடத்திய இனவாதிகள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதற்கான பக்குவமோ, முதிர்ச்சியோ, அரசியல் சிந்தனையோ, அணுகுமுறையோ தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளுக்குக் கிடையாது. அவர்களுக்கு அரசியல் என்பது பழக்க தோசம். அது பேரினவாதத்தை எதிர்க்கும் சிறுபான்மை (எதிர்)இனவாத மனக்கட்டமைப்பிலிருந்து எழுவது. அதுவே திருகோணமலை புத்தர் விவகாரத்தில் என்பிபி தமிழ் எம்பிக்களை பதவி விலக வேண்டும் என பழுத்த தமிழ் அரசியல்வாதியான சுமந்திரனை சொல்ல வைக்கிறது. இனப்படுகொலையை செயற்படுத்திய மகிந்த பரம்பரையோடு ஒத்துழைக்கக் கூட தயாராக இருக்கிறார்கள் அவர்கள். நாட்டின் இனவாத பிரச்சினையை இவர்கள் அணுகுகிற அழகு இது.

எனவே என்பிபி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்தான விடயத்துக்கு மட்டுமல்ல, இந்த பௌாத்த மேலாதிக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அரசியல்யாப்பில் திருத்தங்களை கொண்டுவர முயல வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை சட்ட நுணுக்கங்கள் மூலம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக சுவிஸில்ஒரு ஊரில் ஒரு பாதையை போட அல்லது பாலத்தைக் கட்டக் கூட அந்த பிரதேச மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் அபிப்பிராயம் பெறப்படுகிறது. அதை அங்கீகரிக்கவோ மறுக்கவோ அந்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதை மீறி அரசாங்கம் செயற்படாது. இவ்வாறான நடைமுறை மூலம் காணி ஆக்கிரமிப்புகள் புத்தர் பயிரிடல் என்பவற்றை -இன மத எல்லையைத் தாண்டி- சட்ட ரீதியில் அணுக முடியும்.

இதற்கு மதச் சார்பின்மையான அரசாங்கமாக இருத்தல் முக்கியமானது. மதம் எளிய மனிதர்களுக்கான ஆத்ம பலத்தைத் தரலாம். ஆனால் அதுவே ஆன்மீக நிலையிலிருந்து அதிகார நிலைக்கு மாறுகிறபோது பெரும் ஆபத்து நிகழ்கிறது. அதே எளிய மக்களை அதன் கருத்தியலால் ஒன்றிணைத்து மனிதவிரோத செயல்களை செய்ய முடிகிறது. இந்தியாவில் சங்கிகளும், இலங்கை மியன்மார் போன்ற இடங்களில் காவிகளையும் இந்த போர்க்களங்களில் காண முடியும். எனவே அரச கட்டமைப்பின் கருத்தியலாக இருக்கும் பௌத்த மேலாதிக்க கருத்தியலை என்பிபி அரசாங்கள் அரசியல் சட்ட திருத்தங்களினூடாக அணுக தயாராக வேண்டும். அதற்கு என்பிபி தயாராக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமனானது. தயாராகுமெனின், அதற்கு பக்கபலமாக தமிழ் முஸ்லிம் மலையக அரசியல்வாதிகளும் மக்களும், சிங்கள முற்போக்குவாதிகளும் செயற்பட வேண்டும். இச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடக் கூடாது.

பலஸ்தீனப் பிரச்சினை குறித்து மட்டுமல்ல, ட்றம்பின் வரிப்போர், நெத்தன்யாகுவின் மனிதவிரோதம் என்பவற்றுக்கு எதிராக உலக நாடுகளில் பலவற்றிலும் இளஞ் சந்ததி சளைக்காத போராட்டங்களையும் குரலையும் எழுப்பி வருகிறது. அவளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இளைஞர் சமூகத்திடம் மேலோங்குகிற உலக சூழல் தோன்றியிருக்கிறது. ஆனால் இவளவு காலமாக தொடர்ச்சியுறும் மக்கள் விரோத இனவாத செயற்பாடுகளை எதிர்க்க சிங்கள சமூகம் உட்பட எல்லா இன இளஞ் சந்ததிகளும் தயாராக இருக்கிறதா? இருக்குமெனின், இலங்கையில் இனவாதத்தை பலவீனமாக்கும் மாற்றத்தை நிகழ்த்த அரசாங்கங்கள் மறுபுறத்தில் நிர்ப்பந்திக்கப்படும் இயங்குநிலை உருவாகும். இதில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் பங்கு உண்டு என்பது மட்டுமல்ல முக்கியமாக, இளஞ் சந்ததியிடம் சிந்தனை மாற்றம் செழுமையுறுவதும் அவசியமானது.

சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட அரச வடிவமும் அதை செவ்வனே செய்து இனவாத்தை வளர்த்துவிட்ட அரசாங்கங்களும் என தொடர்ந்த இரு கட்சிகளின் மேலாதிக்க பாரம்பரியத்துக்கு வெளியே மூன்றாவது கட்சியாக ஜேவிபி யை மேலே கொணர்ந்ததும் இளஞ் சந்ததியின் காலிமுகத் திடல் போராட்டம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வரலாற்று முறிவை பழங்கஞ்சி அரசியலால் அணுக முடியாது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் இனவாத கும்பலோடு கூட்டுச் சேரும் அரசியல் களங்கள் நிராகரிக்கப்பட வேண்டியது.

https://sudumanal.com/2025/11/18/அரசும்-அரசாங்கமும்/#more-7497

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.