Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தை நொதிக்கச் செய்தல்: தமிழக நீக்கம்=தமிழ்த் தேசிய நீக்கம் ? - நிலாந்தன்

facebook_1768395615458_74171888035009062 

தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார். “இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி” எழுதப்பட்ட அக்கடிதத்தில், 1985இல் முன்வைக்கப்பட்ட திம்புக் கோட்பாடுகளின்  “கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்த ஒரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற  தன்மை தொடர வழிவகுக்கும் என்றும் இது மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ் நாட்டு முதலமைச்சர் அவ்வாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியமை என்பது தமிழ் தேசிய பேரவையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கடந்த மாதம் மேற்கொண்ட தமிழக விஜயத்தின் விளைவு என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவை மீறி இலங்கை இனப் பிரச்சினைக்கு எந்தவோர் வெளியேரசோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ தீர்வை தர முடியாது என்பதற்கு கடந்த 42 ஆண்டுகள் சான்று. இந்திய மத்திய அரசை அசைக்க வேண்டும் என்றால் தமிழகம் நொதிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே இந்தியாவை கையாள்வது என்பது ஈழத்தமிழ் நோக்கு நிலையில் முதலில் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வது தான். மிகக்குறிப்பாக கட்சி பேதங்களைக் கடந்து தமிழகத்தை கையாள்வதுதான்.

தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருக்கத்தக்கதாக ஈழத் தமிழர்கள் அனாதைகளாக கை விடப்பட்டிருக்கும் ஒரு நிலைமை காணப்படுகிறது என்று அண்மையில் கஜேந்திரக்குமார் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். கடந்த 13 ஆம் தேதி நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடந்த ஒரு அரசியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவைக் கையாள வேண்டும் என்று கூறிய விமர்சகர்களையும் செயற்பாட்டாளர்களையும் சிறுமைப்படுத்திய ஒரு கட்சியின் தலைவர், இப்பொழுது இந்தியாவைக் கையாள வேண்டும்; தமிழகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்திருப்பது திருப்பகரமான மாற்றம்தான். ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கிடையில் கடந்த 16 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன? அந்த மாற்றங்களின் விளைவாக தமிழ்த் தேசிய அரசியலானது அதன் பேர பலத்தை இழந்துவருகிறது. அனைத்துலக அளவிலும் அது பலமாக இல்லை; உள்நாட்டிலும் பலமாக இல்லை. அதன் விளைவாக தனக்கு தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கமானது தான் விரும்பிய ஒரு தீர்வை தமிழ் மக்களின் மீது திணிக்க கூடிய ஆபத்து அதிகமாக உள்ள ஒரு காலகட்டம் இது என்பதை தனது மேற்படி மேற்படி உரையில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

அதாவது ஈழத் தமிழர்கள் ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வதற்கிடையில் தாயகத்தில் தமிழ் மக்கள் தமது பேர சக்தியை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள்  என்பதுதான குரூரமான கள யதார்த்தம் ஆகும். இந்த யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தைக் கையாள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியானது அவ்வாறான முடிவை எடுத்திருக்கிறதா?

சிறீதரன் தமிழகத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் சென்று வந்திருக்கிறார். அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமந்திரன் போயிருக்கிறார். சாணக்கியன் போயிருக்கிறார். ஆனால் இவர்கள் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் பெருமளவுக்கு சந்தித்ததில்லை. அல்லது அவ்வாறு தமிழகத் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் கட்சியின் தூதுக்குழு ஒன்று தமிழகத்திற்குச் செல்லவில்லை.

தமிழகத்தை நீக்கும் ஓர் அரசியல் அணுகுமுறை தமிழரசுக் கட்சியிடம் இருந்தது என்ற பொருள்பட திவ்ய ஜீவனத்தில் நடந்த கருத்தரங்கில் கஜேந்திரக்குமார் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் பெரும்பாலானவர்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள். அவர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறிப் போகாமல் இருப்பதற்கு தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளத்தக்க விதத்தில் கஜனின் உரை அமைந்திருந்தது.

facebook_1766143770448_74077438809674807

இனப்பிரச்சினைக்கு ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வைப் பெறுவதற்கு தமிழகம் தேவையில்லை. இதை கஜனின் வார்த்தைகளில் சொன்னால், தமிழ்த் தேசிய நீக்கம் செய்ய விரும்பும் சக்திகளுக்குத் தமிழகம் தேவையில்லை. தமிழ்த் தேசிய நீக்கம் என்பது இனப்பிரச்சினை அரசியலைப் பொறுத்தவரை தமிழக நீக்கமும்தான்.

கடந்த 16 ஆண்டுகளில் குறிப்பாக சம்பந்தரின் காலத்தில் அவரிடம் இனப் பிரச்சினையை அனைத்துலக மயநீக்கம் செய்யும் ஒரு கொள்கை முடிவு இருந்தது. வெளித்தரப்புகளின் அழுத்தமானது சிங்கள மக்களை பயமுறுத்துவது. அதனால் உள்நாட்டுத் தீர்வு ஒன்றைப் பெற முடியாது என்றும் சம்பந்தர் நம்பினார்.

ஆனால் இனப்பிரச்சினை எனப்படுவது சாராம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினைதான். அதற்கு அனைத்துலக தீர்வுதான் உண்டு என்ற மிக அடிப்படையான ஓர் உண்மையை,சமன்பாட்டை சம்பந்தர் விளங்கிக் கொள்ளவே இல்லை. அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை. நிலை மாறு கால நீதியின் கீழான யாப்புருவாக்க முயற்சிகளில் அவருடைய நடவடிக்கைகள் அதை நிரூபித்தன. அந்த நடவடிக்கைகளை அவர் முழுக்க முழுக்க நம்பினார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் ஒவ்வொரு நல்ல நாள் பெருநாளுக்கும் தீர்வு வரும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.

ஆனால் மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இல்லாமல் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வுக்கு வர முடியாது என்ற கசப்பான யதார்த்தம் அவருடைய முகத்தில் அறைந்த பொழுது ஒரு தோல்வியுற்ற தலைவராக அவர் இறந்தார். அவருடைய யாப்புருவாக்க முயற்சியின் பங்காளிகளில் ஒருவராகிய மைத்திரியே அந்த முயற்சியை காட்டிக் கொடுத்தார். ஏனென்றால் மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தமோ கண்காணிப்போ அங்கே இருக்கவில்லை. நிலைமாறு கால நீதியின் கீழ் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையானது அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு தரப்பாக இருக்கவில்லை.

எனவே ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வை பெறுவதற்கான தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என்பது அதன் நடைமுறை அர்த்தத்தில் தமிழக நீக்கமும்தான். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்டு ஒரு நாடாளுமன்றம் தரக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஸ்டியாக இருக்காது என்பதே கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலான அனுபவம். அதை இன்னொரு விதமாகச் சொன்னால் தன்னை “சமஷ்டிக் கட்சி” என்று அழைத்துக் கொள்ளும் தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்றும் கூறலாம்.

எனவே இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கும் எந்த ஒரு தீர்வும் அப்படித்தான் இருக்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியே மூன்றாவது தரப்பொன்றின் அழுத்தம் இருக்க வேண்டும். அவ்வாறு மூன்றாவது தரப்பு ஒன்றும் அழுத்தம் இருந்த காரணத்தால்தான் இந்திய இலங்கை உடன்படிக்கை சாத்தியமாகியது. ரணில்- பிரபாகரன் உடன்படிக்கை சாத்தியமாகியது.

மூன்றாவது தரப்பு உள்ளே வர வேண்டும் என்றால் தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ் மக்கள் போராடினால்தான் ஒரு மூன்றாவது தரப்பை தமக்குச்  சாதகமாக அரங்கில் இறக்கலாம். தமிழகத்தைக் கையாள்வதற்கும் அதுதான் முன் நிபந்தனை. தமிழ் மக்கள் தாங்கள் கொந்தளிக்காமல்,தமிழகம் தங்களுக்காகக் கொந்தளிக்கவில்லை என்று கேட்பது பொருத்தமில்லை. தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்க் கட்சிகள் நொதிக்க வைக்கவில்லை என்றால் தமிழகம் எப்படி நொதிக்கும்?

எனவே முதலில் தமிழ்த் தேசிய பேரவையும் உட்பட தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தமிழரசியலை நொதிக்க வைக்கவேண்டும். பொங்கல் கொண்டாட்டத்துக்கு வந்த அனுரவோடு செல்பி எடுக்க முண்டியடித்த ஒரு பகுதி தமிழ் மக்களையும் நொதிக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தையிட்டியில் நொதிப்பதால் மட்டும் தமிழரசியலை தொடர்ச்சியாக நொதிக்க வைக்க முடியாது. அதற்குமப்பால் தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் அரசியலுக்கு வெளியே போராட்ட அரசியலாக நொதிக்க வைத்தால் மட்டும்தான் தமிழகம் நொதிக்கும். தமிழகம் நொதித்தால்தான் பிராந்தியம் நொதிக்கும். அப்பொழுதுதான் இந்திய மத்திய அரசின் வெளியுறவு முடிவுகளில் அது தாக்கத்தைச் செலுத்தும்.

இந்த ஆண்டு பிறந்தபோது அனைத்துலக அரசியலில் இரண்டு செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒன்று,உக்ரைன் பற்றியது. மற்றது,வெனிசுலா பற்றியது. கடந்த மாதம் 15ஆம் திகதி,உக்ரைன் நேட்டோவில் இணைவைதென்ற அதன் முன்னைய முடிவைக் கைவிடுவதாக அறிவித்திருந்தது. உக்ரைன் போர் எனப்படுவது பிராந்திய யதார்த்தத்தை மீறி உக்ரைன் நேட்டோவில் இணைய முற்பட்டதால் ஏற்பட்டது. அது ரஷ்யாவின் பிராந்தியம். ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் உக்ரைன் அந்த பிராந்திய யதார்த்தத்தை மீறி நேட்டோவுடன் இணைவது என்று முடிவெடுத்ததன் விளைவுதான் யுத்தம். இப்பொழுது உக்ரைன் பிராந்திய யதார்த்தத்தைச் சுதாகரித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனின் முடிவை மாற்றியதில் அமெரிக்காவுக்கும் பங்குண்டு.

இது நடந்து கிட்டத்தட்ட இரு கிழமைகளின் பின்  இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா தனது செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி அதன் அதிபரைக் கைது செய்து கடத்திச் சென்றிருக்கிறது. ஒரு பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் வாழும் பலவீனமான ஒரு நாடு அனுபவிக்க கூடிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அளவைக் குறிக்கும் ஆகப்பிந்திய உதாரணம் இது.

இவ்வாறு மிகக்குறுகிய காலத்துக்குள் இரண்டு வேறு பிராந்தியங்களில் பேரரசுகளின் செல்வாக்கு மண்டலத்தில் வாழும் பலவீனமான மக்கள் கூட்டங்களுக்குள்ள வரையறைகளை உணர்த்திய இரண்டு ஆகப்பிந்திய உதாரணங்கள் இவை.

இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துள் வாழும் சிறிய அரசற்ற மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள், தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான தீர்க்கதரிசனம் மிக்க உபாயங்களை வகுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் இரண்டு ஆகப்பிந்திய உதாரணங்கள் இவை. இந்த உதாரணங்களின் பின்னணியில்தான்,தமிழ் நாட்டின் முதலமைச்சர் இந்திய மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு உள்ள முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.

https://www.nillanthan.com/8072/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.