Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசாவதாரம் - உலக உயிர்கொல்லி நாயகனின் இந்திய அவதாரம்

Featured Replies

ஈராக்கில் ஸத்தாம் ஹஸைன் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட ‘பயாலஜிகல் வெப்பன்ஸ் - உயிர்கொல்லி ஆயுதங்களைக்’ கண்டுபிடிக்க ஈராக்கினுள் நுழைந்து அலைந்த ஐக்கிய நாடுகள் சபை சோதனையதிகாரியின் பெயர் பெலிக்ஸ் (Felix). ‘எப்’அவரது பெயரின் முதலெழுத்து. கமல்ஹாஸனின் தசாhவதாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நோக்கத்திற்கு மாறாக உயிர்கொல்லி ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் விற்க அலையும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் பெயர் பிளெச்சர் (Fletcher). பிளெச்சரின் முதல் எழுத்து ‘எப்’ எனவே துவங்குகிறது. பிளெச்சர்-பெலிக்ஸ். பிளெச்சர்-பெலிக்ஸ். பிலெ-பெலி-. பிலெ-பெலி. தொடர்ந்து மாற்றி மாற்றி உச்சரித்துப் பாதருங்கள். ஒன்று போலவே இருக்கிறது இல்லையா?

பெலிக்ஸ் அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்தவராகவும’ ஈராக் யுத்தத்திற்கு எதிரானவராக அதாவது அமெரிக்காவுக்கு ‘வில்லனாக’ ஆனவராகப் பரிமாணம் பெற்றார் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்வோம். இந்தத் தொடர்புபடுத்தலுக்கு கமல்ஹாஸன் பேசுகிற மாதிரி நமக்கு ‘பேரழிவுக் கோட்பாடு - கேயோஸ் (chaos theory) தியரி’ எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை. சமகால உலகு குறித்த குறைந்தபட்ச அறிவு இருந்தால் போதும்.

கமல்ஹாஸன் நிஜத்திலேயே புத்திசாலி. சகல கலா வல்லவன். கமல்ஹாஸன் படங்களிலேயே ‘அரசியல்’ எனும் அளவில் ‘படுகேவலமானதும், அருவருப்பானதுமான’ திரைப்படம் தசாவதாரம்தான்.

2

மனித உறவுகளில் செயல்படும் மொழி போன்றதல்ல அரசியல் மொழி. மனிதர்களுக்கிடையிலான உரையாடல்களில் இடம்பெறும் கூடார்த்தமும் (ambiquities), குழம்பிய இரண்டக மனநிலையும் (splitted mind) உறவுகளின் நிலையாமையிலிருந்து, நிலைத்த தன்மை நோக்க்pயது எனும் அளவில், அந்தக் குறிப்பிட்ட உறவுகளின் தன்மைகளை அவதானிக்க ஒரு படைப்பாளி மேற்கொள்ளும் அணுகுமுறையானது, அந்த படைப்பு முன்வைக்கும் வாழ்வு சார்ந்த கேள்விகளை அகலித்துச் செல்வதாகிறது. இந்த மனிதர்களுக்கிடையிலான உரையாடல்களிலும் நுண்தளத்தில் அணுகுகிறவன், மனிதர்களின் கருத்தியல் சார்புகளை அவதானிக்க முடியும்.

ஆனால், அரசியல் உரையாடல்களில் கூடார்த்தமும் இரண்டக மனநிலையும் செல்லுபடியாகாது. மொழி இங்கு நேரடியானது. செயல்படும் தர்க்கமும் நேரடியிலானது. மொழியை அரசியல் உரையாடல்களில் குழுப்புபவர், ஒரு வகையில் மறைத்துக் கொண்ட திட்டங்கள் (hidden agendas) கொண்டவர். கமல்ஹாஸன் தசாவதாரம் வழி முன்வைக்கும் அவரது ‘கலை’ அபிலாஷைகளும் அத்தகைய திட்டங்கள்தான் நோக்கியதுதான். இன்றைய பல்கலாச்சார - பன்னாட்டு மூலதன - உலகவயமாதல் (multicultural-multinational-globalised) உலகை எவ்வாறு ‘பாவிப்பது’ என்பதற்கான கமல்ஹாஸனது ‘முதல்’ சோதனைபூர்வத் திரைக்களம்தான் தசாவதாரம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் ஒரே சமயத்தில் உயில்கொல்லி ஆயுதங்களை உருவாக்க நிதி தருகிறார் என்று சொல்லிவிட்டு, அதே வாயால், உயிர் கொல்லி ஆயுதங்களுக்கு எதிராக உலகைக் காக்கும் பொருட்டு, சென்னைக்கு வந்து அவர் ‘அருளுரை’ வழங்குகிறார் எனவும் சொல்ல முடியாது. கமல்ஹாஸன் சொல்கிறார்.

கமல்ஹாஸனது படங்களில் அதனது ‘அரசியல் கூடார்த்தத்திற்காகவும் குழப்பத்திற்காகவும்’ இடதுசாரி விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முதல் படம் அவருடைய ஹேராம். இரண்டாவது படம் 2008 ஆம் வருடம் மத்தியில் வந்திருக்கிற தசாவதாரம். ஹேராம், மற்றும் தசாவதாரம் என இரண்டு திரைப்படங்களிலும், இநதிய மற்றும் உலக அளவில், அவரது ‘நிலைபாடு’ எடுக்க முடியாத அரசியல் தடுமாற்றம் அல்லது ‘குழப்பங்களின்’ அடிப்படையில்தான் திரைக்கதையில் ‘கூடார்த்தமாக’ அவரது பார்வை செயல்படுகிறது.

‘ஹேராம்’ படத்தில் அண்ணல் காந்தி அடிகளைக் கொன்ற ‘இந்துத்துவ வாதியின்’ சார்பு நியாயங்களை விசாரிக்கப் போன கதை, அவனை ஜனரஞ்ஜக சினிமாவின் கதாநாயகனாகனாகத் தேர்கிறபோதே அந்தக் கதையின் ‘விசாரணைத் தன்மை முற்றுப் பெற்றுவிடுகிறது’. ஏனெனில், இந்திய - தமிழ் - ஹாலிவுட் ஜனரஞ்ஜகப் படங்களின் கதாநாயகர்கள் பராக்கிரமசாலிகள். உத்தமர்கள். தீமையை வெல்பவர்கள். பார்வையாளனின் சார்பு நிலையையும் பரிதாபத்தையும் தமது சார்பாகக் கோருபவர்கள் இவர்கள். இந்தக் கதாநாயகர்களைக் குறித்த விமர்சனம் என்பதை ஒரு போதும் பார்வையாளன் மேற்கொள்வதில்லை.

அண்ணல் காந்தியைக் கொன்றவன், ஒரு இந்துத்துவவாதி, ஒருபோதும் இந்திய வரலாற்றின் ‘கதாநாயகன்’ ஆக முடியாது. கமல்ஹாஸனின் கருத்தியலின் ‘எதிர்புரட்சிகரத் தன்மை’ ஹேராம் படத்தினைப் பொறுத்து அவரது கதைத் தேர்விலும் கதாநாயத் தேர்வின் மூலமுமே அரங்கேறிவிடுகிறது.

கதாநாயகன் எப்படிக் ‘கெட்டவனாக’ இருக்கு முடியும்? இந்தக் குழுப்பம் பார்வையாளனது குழப்பம் மட்டுமல்ல, கமல்ஹாஸனதும் குழப்பம்தான். கமல்ஹாஸன் கதாசிரியன் எனும் அளவில் இதே குழுப்பம்தான் தசாவதாரத்திலும் செயல்படுகிறது.

தசாவதாரம் தயாரிப்பில் இருக்கும் வேளையில், தசாவதாரத்தில் தான் ஜோர்ஜ் புஸ் வேசம் போடுகிறபோது, அதனை சென்னையில் இயங்கும் அமெரிக்க தூதரக அதிகாரியை வரவழைத்துக் காட்டுகிறார் கமல்ஹாஸன். தசாவதாரம் படத்தினை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சுக்குப் போட்டுக் காட்ட அமெரிக்க வாழ் கமல் ரசிகர்கள் முயற்சிப்பதாகச் செய்திகள் வருகிறது. அது ஒன்றும் அவ்வளவு சிரமமான விசயமும் இல்லை. நடக்காதவொரு மந்திரம் - மாங்காய் சமாச்சாரமும் இல்லை.

ஆப்கானியரான கலீத் ஹஸைனியின் நாவலான ‘கைட் ரன்னர் (kite Runner) - பட்டம் விடுபவன்’ அதே பெயரில் திரைப்படமான போது, கலீத் ஹஸைனி உடனிருக்க, ஜோர்ஜ் புஸ் அப்படத்தைப் பார்த்துப் படத்தினை பாராட்டவும் செய்திருக்கிறார். ஜோர்ஜ் புஸ்ஸின் இலக்கிய அறிவினால்தான் அப்படத்தை அவர் பாராட்ட வேண்டும் என்பது இல்லை. அந்த நாவலின் அமெரிக்க சார்புத்தன்மையும் அதனது தலிபான் எதிர்ப்புத் தன்மையுமே போதும் ஜோர்ஜ் புஸ் அதனைப் பாராட்டுவதற்கான போதுமான கரரணமாக இருக்கும்.

(அரசியலுக்கு அப்பாலும், நண்பர்களுக்கிடையிலான நட்பு - துரோகம் - பாவவிமோசனம் என்பதாக நகரும் ஒரு அழகான நாவல் ‘கைட் ரன்னர்’ என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தலிபான் குறித்த திரைப்பட பாணியிலான சில விவரணைகளைத் தவிர்த்துவிட்டால், மிகநேர்த்தியாக எழுதப்பட்ட ஒரு நல்ல நாவல் ‘கைட் ரன்னர’). ‘பெலிக்சின்’ எதிரியும், அமெரிக்க நாயகனுமான ஜோர்ஜ் புஸ் இவ்வகையில், தன்னை உலக நாயகனாகவும் கொண்டாடுகிற தசாவதாரம் படத்தினைப் பார்க்க விருப்பம்; தெரிவித்தால், அவரது விருப்பமும் கமல்ஹாஸனது விருப்பமும் நிச்சயமாகவே பொருத்தமானதாவே இருக்கும்.

3

‘பேரழிவுக் கோட்பாட்டை’ முன்வைத்து ஒரு பல்கலாச்சார - பன்னாட்டுப் பார்வையாளருக்கான (multi cultutal and multinational audience) படத்தை கமல்ஹாஸன் வணைந்திருப்பதன் சாமர்த்தியத்தைப் பார்ப்பதற்கு முன்னால், கதையின் அடிநாதமாக இருக்கும் ‘அரசியல் கதையை’ப் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

(1) பன்னிரண்டாம் நூற்றாண்டின் வைணவர் - சைவர் மோதல் கதை,

(2) முகுந்தனை வழிபடும் பேரனைத் தொலைத்த பாட்டி மற்றும் ‘விவரமில்லாத’ பிராமணப் பேத்தியின் கதை

(3) இந்தியாவுக்குள் நுழைந்த உயிர்கொல்லி ஆயதக் கும்பலைத் தேடித்திரியும் தெலுங்கு உளவு அதிகாரியின் கதை

(4) மணல் திருட்டைக் கண்டுபிடிக்கப் போய் சுனாமிக்குப் பலியாகும் முன்பு, தன்னக்கொலை செய்யத் திட்டமிட்ட அயோக்கியர்களின் குழந்தைகளைக் காபபாற்றிவிட்டு ‘இறப்பில் மட்டும் சாதி கடந்துவிடும்’ மலையாள தலித் போராளியின் கதை

(5) தமது வாகனம் மோத நேர்ந்த காரணத்தால் விபத்துக்குள்ளாகி, காவல்துறையினரிடமும் சிக்கி அவஸ்தைப்படும் இஸ்லாமியக் குடும்பத்தவரின் கதை.

(6) தன் தங்கையின் சாவுக்குக் காரணமான சோகவிந்தாவைத் தேடி இந்தியா வந்து பார்த்த மாத்திரத்தில் கோவிந்தவை ‘நல்லவன்’ எனக் கொண்டு வில்லனை நையப்புடைக்கும் ஜப்பானிய கராத்தே வீரனின் கதை

(7) விபத்துப்போல் பிளெட்ச்சரின் கைத்துப்பாக்கிக் குண்டு நெஞ்சில் பாய்ந்ததால், தொடரந்து பாடுகிற ‘வரம்’ வாய்க்கப் பெற்ற சீக்கியப் பாடகனின் கதை

என ‘இந்த’ இந்தியாவில் நிகழ்கிற ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஏழு கதைகளும், அமெரிக்காவில் துவங்கி இந்தியாவில் முடித்து வைக்கப்பெறும் பிற மூவரினதும் ‘பிரதான கதையின்’ துணைக் கதைகள்தான்.

மூவர்தான் ‘பிரதான’ கதையின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் விரவி இருப்பவர்கள். இவர்களில், முதலாமவர் அமெரிக்க ஜனாதிபதியான ஜோர்ஜ் புஸ். இவர் ‘உலக’ உலகநாயகன். இரண்டாமவர் அமெரிக்க உயிர்கொல்லி ஆய்வில் செயல்படும் இந்திய விஞ்ஞானியான அப்பாவி கோவிந்த் ராமசாமி. இவர் ‘இந்திய’ உலகநாயகன். மூன்றாமவர் படம் முழுக்கக் ‘கலக்கும்’ அமெரிக்காவின் பழைய சிஐஏவும் இன்றைய தீவிரவாதிகளின் தோழனுமான வில்லன் பிளெச்சர். இவர் இந்திய ‘உலக’ வில்லன்.

கமல்ஹாஸனின் ‘பிரதான’ கதைதான் என்ன?

அமெரிக்காவில் உயிர்கொல்லி ஆயுதம் தொடர்பான அமெரிக்க நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருக்கிறார் கோவிந்த். இந்த உயிர்கொல்லி ஆய்வுக்கு மூன்று மில்லியன் டாலருக்கும் மேலாக நிதியளித்து ஆய்வை வளர்ப்பவர் அமெரிக்க ஜனாதிபதியான ஜோர்ஜ் புஸ். ஜனாதிபதி நிதிவழங்கும் செய்தியை தனது மேலதிகாரி சொல்லும் போது ‘அசட்டையாக ஆர்வமின்றிக்’ கேட்கிறார் கோவிந்த். அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றுவதை பிற விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் கேட்கிறபோது, கோவிந்த் அதனைச் ‘சோர்வாகவும் அக்கறையின்றியும்’ கேட்டபடி இருக்கிறார். அந்த உரையில் அவருக்கு அக்கறையும் இல்லை. பிற்பாடு கோதையுடனான உரையாடலில் இந்த மாதிரிச் சோதனைகளுக்கேல்லாம் காசு செலவிடுவதன் அறம் பற்றியும் பேசுகிறார் கோவிந்த்.

சோதனைக்கான குரங்கு உயர்கொல்லிக் கிருமிகள் நிறைந்த கையடக்க கொள்கலனைக் கடித்துவிட, ரத்தம் கக்கித் துடிதுடித்துச் சாகிறது. இந்தச் சோதனைகள் அனைத்திலும் இதனது ‘விளைவுகள் தெரிந்துதான்’ அதில் ஈடுபடுகிறான் கோவிந்த். அமெரிக்காவுக்கும் - தீவிரவாதிகளுக்கும் இருக்கும் ‘பகைமை’ யைக் காசாக்க நினைக்கும் பழைய சிஐஏ அதிகாரியும், இன்னாள் ‘மெர்சினரியும்’ ஆன பிளெட்சர், கோவிந்த்தினுடைய இந்திய மேலதிகாரியின் அனுசரனையுடன் அந்த உயிர்கொல்லி ஆயுதத்தைக் கடத்தி தீவிரவாதிகளுக்கு விற்க முனைய, அதற்கு கோவிந்த்தின் மேலதிகாரியும் உடன்படுகிறார். இதனை முன்கூட்டியே அறியும் கோவிந்த் அந்த உயிர்கொலலி ஆயுதத்துடன் இந்தியா வந்துவிடுகிறார். அதனோடு அதனைச் செயலற்றதாக்கும் வழிவகைகள் குறித்தும் அவர் செயல்படுகிறார்.

லாஸ்வேகாஸில் நடனக்காரியாக இருக்கும் இந்திய நடனமாது ஒருவரை இந்திய வருவதற்காக ‘கன்வீனியன்ட் மேரேஜில்’ நுழையும் பிளெட்சர், கோவிந்தாவைத் துரத்திக் கொண்டு இந்தியா வருகிறார்.

கோவிந்த் - பிளெட்சர் துரத்தலுக்கு ‘உள்ளேதான்’ ( ‘seven sub - plots’ happening inside the ‘main’ story) பிற ஏழு கதைகளும் நடக்கின்றன. (தசாவதாரத்திலேயே கமல்ஹாஸன் தெளிவாக ‘அடையாளம்’ தெரியக் கூடிய மூன்று பாத்திரஙகள் முறையே, கோவிந்த், பல்ராம் மற்றும் ஜோர்ஜ் புஸ் என்கிறார் இயக்குனர கே.எஸ்.ரவிக்குமார். பிற பாத்திரங்களில் கமல்ஹாஸன் அடையாளங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் அவர்).

பிளெட்சர் கடைசியில், இந்திய உளவுப் பிரிவினரிடமும், ஜப்பானியக் கராத்தே வீரனிடமும், கோவிந்த்திடமும் தான் ‘வசமாக’ அகப்பட்டுக் கொண்டோம் எனும் நிலைமைக்கு வருகிறபோது, உயில்கொல்லிக் கிருமிக் கொள்கலனைத் தன் வாயால் கடித்துக் கடலுக்குள் வீழ்கிறான். கடலில் கிருமிகள் பரவுகிறது. சுனாமி எழுகிறது. கடலின் உப்பு கிருமி நாசினியாகி, கிருமிகளின் பரவலாக்கத்தைச் செயலிழக்கச் செய்கிறது.

உலகுக்கு அழிவு வரும் போதெல்லாம் கப்பலிலும் (ஈராக் யுத்தம் முடிந்துவிட்டது எனும் புஸ்ஸின் பிரகடனம்) ஆகாயவிமான தளத்திலும் (ஹாரிஸன்போர்டு - பர்ஸ்ட் ஏர்போர்ஸ் அல்லது ‘இன’டிடபென்டன்ஸ் டே’ திரைப்பட உரை) படையின் மத்தியிலும் உரையாற்றும் அமெரிக்க ஜனாதிபதி, உலகை உயிர்கொல்லிக் கிருமிகளின் அழிவிலிருந்து காப்பாற்றியதால், தனது நாட்டில்வேலை செய்த விஞஞானியான, இந்தியரான கோவிந்த்துக்கு நன்றி அல்லது வாழத்துச் சொல்ல தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்களுக்கும் ‘மேலாக’ சென்னை நேரு ஸ்டேடியத்திற்கும் வருகிறார்.

கருணாநிதி - மன்மோகன் சிங் ஆகியோருக்குப் பிறகு ஜோர்ஜ் புஸ் பேச வேண்டிய தருணத்தில் ‘பாஸ்ட் கியரில்’ காலை வெட்டி அவர் எழும்பும் போது கே.எஸ்.ரவிக்குமார் ‘உலக நாயகனே’ எனும் பாடலின் அதிரடி இசையுடன் திரைக்குள் நுழைகிறார். கமல் 10 வேடங்களில் நடித்த பராக்கிரமம் இறுதி டைட்டில் சாதனைகளாக, படம் முடிவுக்கு வருகிறது.

ஆகமொத்தம், உலகைக் கிருமி ஆயுதத் தாக்குதலில் இருந்து பாதுகாத்த கோவிந்த்தை வாழ்த்தத்தான் கலைஞர் - மன்மோகன் - ஜோர்ஜ் புஸ் வந்திருக்கிறார்கள். கோவிந்த்தை சீக்கிரம் ஐக்கிய நாடுகள் சபையும் அழைத்துக் கௌரவிக்கும் என்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ‘உலக’ உலக நாயகன் ஜோர்ஜ் புஸ், ஈராக் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையையே தூக்கி அடித்தார். இந்திய உலக நாயகன் கமல்ஹாஸன், நிஜமாகவே ஐக்கிய நாடுகள் சபையை தசாவதாரம் மூலம் இனி தூக்கி அடிக்கப் போகிறார் என்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

4

தசாவதாரத்தின் இந்த அரசியலைப் பார்க்காதீர்கள், கமல்ஹாஸனின் 10 வேடத் திறமையைப் பாருங்கள் என்கிற மாதிரியான பிரச்சாரத்தை இந்தியாவில் -தமிழகத்தில் திட்டமிட்டுச் செய்தார்கள் கமல்ஹாஸனும், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனும், கே.எஸ்.ரவிக்குமாரும்; கலைஞரது ‘கலைஞர்’ தொலைக்காட்சி நிர்வாகிகளும். கலைஞர் தொலைக் காட்சியில் ஒலிபரப்பப்பட்டு அயலில்; குறுவட்டாகவும் கிடைத்த, ‘யூடியூபில்’ முழுமையாகக் கிடடக்கிற, தசாவதாரம் இசைத் தகடு வெளியீட்டுவிழா நமக்கு இதனைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது.

‘காதல்’ சந்தியா முதல், கிரேஸி மோகன்வரை, சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடம் செய்தார், தசாவதாரத்தில் கமல் 10 வேடம் செய்கிறார். இது ஒரு ‘உலக சாதனை’ என்கிறார்கள். கலைஞர் பிரம்மாணடம் என்றால் அதன் பெயர் தசாவதாரம் எனகிறார். ‘அரசு அதிகாரிக்கு லஞ்சமாகத் தொலைக் காட்சி, எனக்குத், தந்தையாகப் பாசமா?’ என்பார் இந்தியன் தாத்தா. தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் கமல்ஹாஸன் தருவது, 10 வேட மகாத்மியம். அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் மறுதலையில்; ஈராக்கிய மக்களுக்கும் மூன்றாம் உலகின் சமூகங்களுக்கும் கமல்ஹாஸன் தருவது என்ன?

ஜோர்ஜ் புஸ்ஸை உலகநாயகன் என்று சொல்லியிருக்கிறேன், அமெரிக்க மேற்கத்திய வெள்ளையினச் சமூகமே, சந்தோசப்படுங்கள். ‘பிறர்களே’ இதனை ஒப்புக்கொண்டுவாய் மூடிப் பாரத்துக் கொண்டிருங்கள். இதுதான் கமல்ஹாஸனின் தசாவதாரம் சொல்லும் செய்தி.

இந்தப் படம் எந்த வரலாற்றுத் தருணத்தில் வந்திருக்கிறது?

ஜோர்ஜ் புஸ், உயிர்கொல்லி இரசாயண ஆயதங்களைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என உலகுக்குப் ‘பொய்சொல்லி’ விட்டு, பல இலட்சக்கணக்கிலான ஈராக்கிய மக்களைக் கொன்றொழித்த பின்பு இந்தப் படம் வந்திருக்கிறது. ஈராக்கிய ஜனநாயகத்தைக் கொண்டு தருவேன் என்று சொல்லி ஆறு ஆண்டுகள் கடந்த பின், ஆயிரக் கணிக்கலான அமெரிக்க கறுப்பின மற்றும் தென் அமெரிக்க ஏழை இளைஞர்களும் யுவதிகளும் அமெரிக்க ராணுவத்தினராகக் கொல்லப்பட்டபின் இந்தப் படம் வந்திருக்கிறது. ஜோர்ஜ் புஸ் ஒரு அரக்கன். அமெரிக்கா ஒரு பிசாசு என ஹெரால்ட் பின்ட்டர் போன்ற நோபல் பரிசுபெற்ற கலைஞர்கள் சொன்ன பின்னால் இந்தப் படம் வந்திருக்கிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் மீதான, ஆதிக்கத்தின் மீதான எழுச்சிகள் உலகெங்கிலும் எழுந்துவரும் நேரத்தில், அமெரிக்காவுக்கு இந்திய இறையான்மையை விற்றுவிடக் கூடியதான வெளிநாட்டுக் கொள்ளையை மன்மோகன் சிங்கின் இந்திய அரசு கொண்டிருக்கிற நேரத்தில் இந்தப்படம் வெளியாகி இருக்கிறது.

உயிர்கொல்லி இரசாயன யுத்தத்தினைத் தடுப்பதற்காக உயிர்கொல்லி ஆயுதங்களை அமெரிக்கா உருவாக்குகிறதாம். உலகத்தில் தன் மீது தாக்குதல் வராமல் இருப்பதற்காக, அமெரிக்கா முன்கூட்டியே (pre-emptive strike) தாக்குகிறதாம். இந்தக் கொலைகார நடத்தையைக் கொண்ட ஒரு ஜனாதிபதியை ‘உலக நாயகன்’ என்கிறார் கமல்ஹாஸன்.

5

ஒரு சினிமாக் கலைஞனாக கமல்ஹாஸனின் இத்தகைய பாதைத் தேர்வுக்கான காரணம்தான் என்ன?

அமிதாப்பசன் முன்னின்று உலக நகரங்களில் (நியயார்க், லண்டன், யார்க்ஸயர், டோரன்டோ மற்றும் துபாய்) நடத்துகிற இந்திய - உலகத் திரைப்பட விழா விருதுகளின் (International Indian Film Awards) தோற்றம், உலகச் சந்தைக்காக இந்தியப் படங்களை வியாபாரமாக்கும் ‘ரிலையன்சின்’ திரைப்படப் பிரிவான ‘அட்லாப்பின்’ (Adlab) திரைப் பிரவேசம் இதன் பின்னணியாக அமைகிறது. வட இந்தியப் படங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போட்டு வந்திருக்கிற ஒரு சர்வதேசச் சந்தைக்குள்தான் கமல்ஹாஸன் ‘இப்போது’ நுழைந்திருக்கிறார்.

இன்று நிறைய இந்திய - மேற்கத்திய கதைக்களன்கள் கொண்ட தயாரிப்புக்களை இந்தியர்கள் மேற்கொள்கிறார்கள். சாருக்கான் நடித்த ‘ஸ்வதேஷ்’ படத்திலிருந்து, அமிதாப்பச்சன் நடித்த ‘சீனி கம்’ வரை இத்தகைய படங்கள் வருகிறது. அமெரிக்க வாழ் கதாபாத்திரங்களும், பிரித்தானியா வாழ் கதாபாத்திரங்களும், இந்த நாடுகளில் குடியேறிய அல்லது பணி செய்ய நேர்கிற இந்தியக் கதாநாயகர்களும் நிறைய இத்தகைய படங்களில் இடம்பெறுகிறார்கள்.

இவர்களது வாழ்க்கை திரைப்படங்களில் சித்திரிப்புப் பெறுகிற அதே பொழுதில், இந்த நாடுகளில் வாழும் இந்திய சமூகத்தவர்களின் அரசியல் பார்வைகளும் வெளியாகிறது. இந்தியாவையும் அமெரிக்கா போன்று வல்லரசாக்க வேண்டும் என்பது இவர்களது கனவு. அமெரிக்காவின் இஸ்லாமிய மக்களின் பாலன வெறுப்பில் இவர்கள் தமக்கான ‘பொதுப்புள்ளியைக் காண்பது’ இதில் இன்னொரு போக்கு. அமெரிக்காவின் பாலான இந்தியாவில் வாழும் மக்களின் பார்வைகளை வகுப்பதில், சமீபத்தில் அமெரிக்காவில் குடியேறி நிலை கொண்டு விட்டவர்களின் பாதிப்பு என்பது ஒரு பாத்திரம் வகிக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்களின் அழைப்பின் பேரில், அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்து, அமெரிக்கா தான் கனவு கண்ட கம்யூனிஸ சமூகம் எனப் பிதற்றிய ஜெயகாந்தன் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. கமல்ஹஸனின் ‘ஹாலிவுட் கனவுகள்’ அல்லது ‘பன்னாட்டுப் பல்கலாச்சாரக் கனவுகள்’ இங்குதான் மையம் கொள்கிறது.

ஒரு சர்வதேசிய அரசியல் உரையாடலில் - களத்தில் அவரது தசாவதாரம் கதை மையம் கொள்கிறது. உயிர்கொல்லி இரசாயண ஆயுதங்கள் - தீவிரவாதிகள் என்பது ஒரு சமகால அரசியல் உரையாடல். அமெரிக்கா அப்பட்டமாகத் தன்னுடைய பொருளியல் நலனின் பொருட்டு, இதன் வழி நாடுகளில் தலையிடுகிறது என்பது சமகால அரசியல். உலக நாடுகள் அனைத்தும், தத்துமது நாடுகளிலுள்ள சிறுபான்மையின மக்களதும், இனவேற்றுமை காரணமாகவும் வரும் எழுச்சிகளை, ‘தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்’ எனும் இதே கோசத்தின் கீழ் ஒடுக்கி வருகிறது என்பதும் நாமறிந்த சமகால அரசியல்.

உலகில் முதன்முதலாக இரசாயண அழிவு ஆயுதங்களை ஜப்பானிய மக்களின் மீதும், மூன்றாம் உலக நாடான வியட்நாமின் மீதும் பாவித்த நாடு அமெரிக்காதான். தம் மக்களின் உடல்நிலையைப பாதுகாக்க பிற மக்களின் மீது இரத்தப் பரிசோதனையைச் செய்து பார்க்கும் ‘ஆய்வுக் கூடங்களால்’ நிரம்பிய நாடுதான் அமெரிக்கா.

இந்த வரலாற்றுத் தருணத்தில்தான் ‘உயிர்கொல்லி இரசயான ஆயுதம் - தீவிரவாதம் - அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயம்’ என்பதாகக் கமல்ஹாஸனின் சமகாலக்கதை நகர்கிறது. எந்தவித்திலும் கமல்ஹாஸனது குரல் இன்றைய சுழலில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நலன்களுக்கோ அல்லது உயிர்கொல்லி இரசாயண ஆயதங்களை ஈராக்கிய குர்திஸ் மக்களின் மீது பாவித்த அதனது மனித விரோதக் கொள்கைக்கோ எதிரானது இல்லை.

நிஜத்தில் ‘பட்டாம்பூச்சி விளைவையோ’ (butterfly effect) அல்லது ‘பேரழிவுக் கோட்பாட்டையோ’ முன்வைத்துப் படமெடுக்க ஒரு பொறுப்புள்ள நபராகக் கமல்ஹாஸன் விம்பியிருந்தால், அதனது தொடக்கம் வியட்நாமாக அல்லது ஈராக்காக அல்லது இந்திய அளவில் வெண்மணிக் கொலைகளாக அல்லது குஜராத் கலவரமாகத் தான் இருந்திருக்கும்.

இதற்காக அவர் 12 ஆம் நூற்றாண்டுக்கு போயிருக்கத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டின் உயிரியல் ஆயுதம் குறித்தும் பேசுத் துவங்குவதற்கான ‘பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம’, குறித்த களம், நிச்சயமாகப் பனிரெண்டாம் நூற்றாண்டில் துவங்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ‘பாரிஸ் கம்யூன் எழுச்சியில்தான்’ அது துவங்குகிறது. ஈராக் யுத்தத்தில் அது இறுதியாக வந்து நிற்கிறது.

கமல்ஹாஸனின் தசாவதாரம் படத்தில் ‘பட்டாம்பூச்சி’ சுயாதீனமாகத் திரைக்காட்சிகளின் மீது பறந்துதிரிகிறது. 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் முழ்கவிடப்பட நிற்கும் வைணவ கமல்ஹாஸனிலிருந்து, சுனாமி வரையிலுமான பல்வேறு காட்சிகளில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டேயிருக்கிறது. பேரழிவுக் கோட்பாட்டையோ அல்லது அதனை விளக்க வந்த பட்டாம்பூச்சி விளைவையோ அறிந்தவர்களுக்கு, தசாவதாரத்தில் கமல்ஹாஸன் ஒரு குறியீடாகப் பாவிக்கும் பட்டாம்பூச்சியின் அர்த்தத்தை சாதாரணமாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

‘பட்டாம்பூச்சி விளைவு’ என்பதுதான் என்ன?

ஒரு ‘அமைப்பில்’ அதனது ‘ஆதாரமான’ தளத்தில் ஏற்படும் சின்னஞ்சிறு மாற்றம் கூட, தொடர்விளைவுகளாகி, மிகப் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதுதான் பட்டாம் பூச்சிவிளைவு.

பேரழிவுக் கோட்பாடு என்பதுதான் என்ன?

எடுத்துக் காட்டாக ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்பின் தொடர் விளைவாக ஒரு சுறாவளி கூட உருவாகலாம். அந்தச் சுறாவளியின் விளைவாக உலகம் அது வரை எதிர்கொள்ளாத பேரழிவுகளும், தட்பவெட்ப மாற்றங்களும் நேரலாம். இவ்வகையில் ஒரு குறிப்பிட்ட ‘வரையறையினுள்’, ஏற்படும் ஒவ்வொரு சிறு அசைவும், விளைவும், நிகழ்வும், பிறவற்றுடன் தொடர்புபட்டிருக்கிறது என்பதுடன், இவ்வகையில் சிறிதாக நிகழும் ஒரு மாற்றம் நேரடியிலாக அல்லாவிட்டாலும் தொடர்விளைவாகப் பேரழிவை உருவாக்கும் என்பதுதான் பேரழிவுக் கோட்பாடாகும்.

இந்தப் பேரழிவுக் கோட்பாடும், பட்டாம்பூச்சி விளைவுகளும் உலக சினிமாவில் ஏற்கனவே நிறையச் சொல்லப்பட்டிருக்கிறநது. அதற்கான மிகச் சிறந்த உதாரணங்கள் பின்வருவன. கீஸ்லாவ்ஸ்கி எனும் போலந்து இயக்குனரின் படமான ‘பிளைன்ட் சான்ஸ்’, பிற்பாடு அதனைத் தழுவி ஆங்கிலத்தில் வெளிவந்த இங்கிலாந்துப் படமான ‘ஸ்லைடிங் ஸ்டோர்ஸ்’, பிற்பாடு ‘ஸ்லைடிங் டோர்ஸ்’ படத்தைத் தழுவித் தமிழில் வெளியான ‘12பி’ எனும் திரைப்படம்.

‘பிளைன்ட சான்ஸ்’ படத்தில் ரயிலைத் தவறவிடும் ஒருவன் எதிர்கொள்ளும் தருணங்களும் விளைவுகளும், அவன் ரயிலைத் தவறவிட்டிருக்காத போது ஏற்படும் தருணங்களுக்கும் விளைவுகளுக்கும் முற்றிலும் வேறாக இருப்பதைப் அரசியல் ரீதியிலாகப் படம் சொல்கிறது. அதே போல, ‘ஸ்லைடிங் டோர்’ படத்திலும் ரயிலைத் தவறவிடும் ஒரு பெண்ணும், ரயிலைச் சரியான நேரத்தில் ரயிலைப் பிடிக்கும் அதே பெண்ணும் எதிர்கொள்ளும் தருணங்களும் விளைவுகளும் வேறு வேறாக அமைவதைப் பார்க்க முடியும். 12பி படத்தில் ஒரு நேர்முகத்திற்குச் செல்லும் நடிகர் ஸாம் அடையும் விளைவுகளும் தருணங்களும், அவர் அதே பஸ்ஸைத் தவிரவிடும்போது முற்றிலும் வேறாகி விடுகிறது. இந்த வேறு வேறான விளைவுகள் ஒன்றில் நேர்மறையாக இருக்கலாம், பிறிதொன்றில் எதிர்மறையானதாக அமையலாம். ஓன்றில் மரணமாகவும் பிறிதொன்றில் உயிர் ஜனிப்பாகவும் கூட அமையலாம்.

ஆகவே, பேரழிவுக் கோட்பாடும் பட்டாம்பூச்சி விளைவுகளுமான சித்திரிப்பு உலக சினிமாவுக்கோ அல்லது தமிழ் சினிமாவுக்கோ புதிது இல்லை. வேறாக, கமல்ஹாஸனின் தசாவதாரம் கதை சொல்லல் என்பது, கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஹாலிவுட்டிலும், உலக சினிமாவிலும் நடைமுறையில் இருக்கிற ஒரு கதை சொல்லல் ஆகும். அமரோஸ் பெரோஸ், டிராபிக், பல்ப் பிக்ஸன் மற்றும் பேபல் போன்ற படங்களில் நடைமுறையில் இருக்கும் கதை சொல்லல்தான் தசாவதாரம் கதை சொல்லல்.

தொடர்பில்லாமல், ஒரு சமூகத்தில் அல்லது ஒரு நாட்டில் அல்லது உலகில் நடக்கும் வேறு வேறு தளங்களில் நடக்கும் நிகழ்வுகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ஏதேனும் ஒரு புள்ளியில் இணைவு பெறுகிறது என்பதைத்தான் இந்த நான்கு படங்களினதும் திரைக்கதை அமைப்பு சொல்கிறது. தமிழில் இவ்வகையிலான கதை சொல்லலைத் தழுவிய படமாக இருப்பது, மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து.

கமல்ஹாஸனின் தசாவதாரம் உலக அளவில் பேசப்படுவதற்கான காரணம், அதனது உயிர்கொல்லி இராசயாயண ஆயுதப் பரிமாணமும், தீவிரவாதம் எனும் அரசியல் உரையாடலும், ஜோர்ஜ் புஸ்ஸை அவர் உலகநாயகனாக முன்வைக்கும் படுகேவலமான அரசியலும்தான்.

கமல்ஹாஸன் பேரழிவுக் கோட்பாடும், பட்டாம்பூச்சி விளைவுகளும் குறித்து என்ன சொல்கிறார்?

ஹைதராபாத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதுகுறித்து அவர் பேசுகிறார் : உலக நிகழ்வுகள் சுழல் பாதையிவல்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் அவர். சில விசயங்கள் திரும்பத் திரும்ப நிகழ்கிறது, பிரச்சினை என்னவென்றால், அந்த நிகழ்வுகளிருந்து உலகத்தவர் பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்கிறார் அவர். ஒரு வகையில் அவரது அவதானங்கள் நிஜம்தான்.

ஆனால், ‘அந்த’ நிகழ்வுகளுக்குத் தள வித்தியாசங்களும் கால முக்கியத்துவமும்தான் வேறுபடுகிறது. வைணவ - சைவ முரண்பாடுகளிலிந்து பாடம் கற்றுக் கொள்வதை விடவும், வியட்நாம் யுத்தத்திலிருந்தும், ஈராக் பேரழிவலிருந்தும், குஜராத் பேரழிவிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்வதுதான் இன்று முக்கியம். இந்தப் பேரழிவின் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாது மறுபடி மறுபடி பேரழிவுகளின் உறைவிடமாக இருப்பது அமெரிக்க‘அமைவு’ (system) என்பது ஏன் கமல்ஹாஸனுக்குப் புரியவில்லை? இந்துத்துவ ‘அமைவு’ என்பது ஏன் கமல்ஹாஸனுக்குப் புரியவில்லை?

‘இந்தியர்கள் அதிகமாக உண்பதால் உலகில் பற்றாக்குறை’ என்கிற அமெரிக்க ஜனாதிபதியின் நாட்டில்தான் அதிகம் கொழுத்தவர்கள் (obesity) அதிகமும் இருக்கிறார்கள் எனப் புள்ளி விவரங்கள் சொல்கிறது. அந்த நாட்டின் ஜனாதிபதிதான் உலகம் வெப்பமாகி வருவதைத் தடுப்பதற்கான உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கிறார் என்பது கமல்ஹாஸனுக்குத் தெரியாதா? கொடுங்கோவலர்களை விசாரிக்கிற உலக நீதிமன்ற முறையை அங்கீகரித்துக் கையெழுத்திடாதவர் அவர்தான் என்பது கமல்ஹாஸனுக்குத் தெரியாதா? உலகின் நுகர்வுக்கான குறைந்த உற்பத்தியினைக் கொடுத்து, அதிக உற்பத்தியை நுகர்பவர்களைக் கொண்டதாக அமெரிக்க சமூகம்தான் இருக்கிறது என்பது கமல்ஹாஸனுக்குத் தெரியாதா? தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில்தான் நிலை கொண்டிருக்கிறது எனக் கமல்ஹாஸனுககுத் தெரியாதா?

தன்னை ‘இந்திய’ சினிமாவின் உலக நாயகனாக நிலை நிறுத்தி கொள்ள, கொலைகாரக் கொள்கையுடைய ஒரு ஜனாதிபதியை உலகநாயகனாக நிறுத்த வேண்டிய தேவை எழுந்திருப்பதற்கான காரணத்தின் பின்னணியில் இருப்பது, கமல்ஹாஸனின் பன்னாட்டு, ‘ஹாலிவுட் நாயக’ ஆசைகளைத் தவிர பிறதொன்று இல்லை.

6

கமல்ஹாஸன் எப்போது சகலகலாவல்லவன் என அழைக்கப் பெற்றாரோ அப்போதே துவங்குகிறது அவரது ‘திரைநிறைப்புக்’ கலாச்சாரம். அந்தப் போக்கின் உச்சம் ஹேராம் திரைப்படம். இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்கள் எல்லோரும் கமல்ஹாஸனது திரை நிறைப்புக்காக அந்தப் படத்தில் ஓரங்கட்டப்பட்டார்கள். அதனது மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்ட படம்தான் தசாவதாரம்.

மணல் திருட்டைத் தடுக்கிற தலித் பாத்திரம், இந்திய உளவுஅதிகாரி வேடமேற்கிற தெலுங்கர் பாத்திரம் மற்றும் கோவிந்த் பாத்திரங்கள் தவிர, பிற கதாபாத்திரங்களுக்கு முகம் என்பதே இல்லை. அகத்தின் அழகு மட்டுமல்ல அசிங்கமும் வெளிப்படும் உடல் புலம் முகம்தான். முறுவலும் கோபமும் மட்டுமல்ல, உக்கிரமும் காதலும் வக்கிரமும் கனிவு கூட முகத்தில்தான் வரும். முன்னர் குறிப்பிட்ட மூன்று முகங்களில் தவிர பிற எவற்றிலும் இந்த உணர்ச்சிகள் அனைத்தும் சவத்தின் ‘ரசாபாசமாக’ ஆக்கப்பட்டிருக்கிறது.

களிமண்ணுக்குச் சாயம்பூசிக் கண்கள் வைத்துக், கமல்ஹாஸனது முகத்தில் அப்பியது போல இருக்கிறது தோல் முகமூடிகள். அந்த வேதனையின் உச்சத்தை ரசிகர்ளுக்கு வழங்கும் பாத்திரங்கள், இஸ்லாமியர், ஜப்பானியர் மற்றும் பாட்டி போன்றவர்களின் பாத்திரங்கள். எனது நண்பன் உதயகுமார் சொன்னது இங்கு ஞாபகம் வருகிறது : கமல்ஹாஸன் 10 வேசங்கள் போட்டது ஏன் என்கிற கேள்வியை, ஏன் திரைப்படத்தில் வருகிற அனைவரது வேடங்களையும் அவரே போடவில்லை என்பதோடு சேர்த்துத்தான் கேட்க வேண்டும்.

இந்தப் பாத்திரங்களுக்கு கமல்ஹாஸனது அவசியம் என்ன?

முகபாவம் எனும் அளவிலும், குரல் அசைவுகள் எனும் அளவிலும், இந்தப் பாத்திரங்களை ஏற்கக் கூடிய, பொறுத்தமான திறன் வாய்ந்த நடிகரகள் தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறார்கள். கமல்ஹாஸன், ஒருவகையில் அவர்களனைவரையும் அவமானப்படுத்தித் தன்னையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். கமல்ஹாஸன் படங்களிலேயே திரைக்கதைத் தர்க்க ‘ஓட்டைகள்’ அதிகமும் நிறைந்த படமாக தசாவதாரம்தான் இருக்கும்.

யாரால் அறிமுகப்படுத்தப்பட்டாரோ அதே விஞ்ஞானியைக் கொல்ல மல்லிகா செராவத்திற்கு, அப்போதூன் அவரை பிளெச்சர் சந்திக்கிறார், காதில் ஒரு கிசுகிசு போதுமானதாக இருக்கிறது அவரைக் கொல்வதற்கு. என்ன கொடுமை! கமல்ஹாஸனைத் தனது தங்கையின் சாவுககுக் காரணமாகத் தேடி இந்தியா வரும் ஜப்பானியர் கமல்ஹாஸனை நேரில் பார்த்த உடனேயே, கமல் நல்லவர் எனப் புரிந்து கொள்கிறார். பிளெச்சருக்கு இந்தியா வர ‘கன்வீனியன்ஸ் மேரேஜ்’ அவசியமா என்ன? டூரிஸ்ட் விசா போதுமானதாக இருக்காதா? இந்தியாவுக்கு வரும் ஜோர்ஜ் புஸ்க்கு ஒரு எதிர்பபும் இல்லாமல், இந்தியக் குடிமக்கள் அனைவரும் கோலாகலமாகக் கை அசைத்து வரவேற்க வருவார்கள் எனக் கமல்ஹாஸன் கருதுகிறாரா?

மிகப் பெரிய கொடுமை, கோவிந்தும் கோதையும் பாறையில் அமர்ந்தபடி, காதலுறும் இறுதிக் காட்சிதான். சுனாமியின் பின்பு எங்கெங்கும் மரண ஓலம். பிணங்களின் மீதான மனிதர்களின் கதறல். எங்கெங்கும் மரணவாடை. பேரழிவின் தடங்கள். ஓலத்தினிடையில் உறவுகளைத் தேடித் திரியும் மனிதர்கள். எவருக்கேனும், கொஞ்ச நஞ்ச மனிதாபிமானம் உள்ள எவருக்கேனும், காதலுணர்வு வருவதும், ஸ்பரிசம் பட்டு சொக்கிப் போவதும் சாத்தியம்தானா?

தமிழ் சினிமாவில் மிக வக்கிரமான காட்சிகளில் ஒன்றாக இந்தக் காதலுணர்வுக் காட்சி இருக்கும்.

இத்தனைக் குளறுபடிகளையும் தாண்டியதாக படத்தின் ‘வேகம்’ இருக்கிறது. ஒரு வகையில் காட்சியின் பின் காட்சியாக, பாத்திரங்களின் மீpது பாத்திரமாக அடுக்கப்பட்டதால் ஏற்படுத்திக்கொண்ட படத்தின் ‘செயற்யான வேகம்தான்’ இந்தக் குளறுபடிகள் அனைத்தையும் பார்வையாளனை நிதானமாக யோசிக்க முடியாது செய்து விடுகிறது.

கமல்ஹாஸனின் பத்துப் பாத்திரங்களை அடையாளம் கண்டுபிடித்து முடிவதற்குள்ளாகவே படம் முடிந்து கே.எஸ்.ரவிக்குமாரும் ‘உலக நாயகனே’ பாட்டுப் பாடி விடுகிறார். கமல்ஹாஸனின் சதிலீலாவதி திரைப்படம் பார்த்தவர்களுக்கு, அவர் இந்தியா வந்ததிலிருந்து கோதையுடன்; கடற்கரையில் அமர்வது வரையிலான ‘அமர்க்களத்தை’ அவர் எங்கிருந்து பெறுகிறார் என்று புரிந்து கொள்வதில் பிரச்சினையிருக்காது. ஒருமிக நீண்ட ‘துரத்தல்-சேஸிங்’ காட்சியாகவே முக்கால்வாசிப் படம் இருக்கிறது. படம் முடிந்த பின்னால் யோசித்துப் பாரபக்கக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது.

கமல்ஹாஸன் இந்தப் படம் குறித்துக் கூறுகிறபோது, தனது முழு சினிமா வாழ்க்கையிலும் இந்தப் படம்தான் அற்புதமான ‘திறப்பு’ என்கிறார். இந்தத் திறப்பைச் சாத்தியமாக்கியவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள், சீக்கியர்கள் மற்றும் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இவர்களுக்கு கமல்ஹாஸனது சினிமா அபிலாசைகளையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸையும் இணக்கமுற வைப்பதில் ஆர்வமும் அவர்களுக்கான அரசியல் நோக்கங்களும் இருக்கிறது. அது தசாவதாரத்தில் சரியான புள்ளியில் இணைந்திருக்கிறது.

7

கமல்ஹாஸன் தமிழ் சினிமாவில் மிகுந்த நம்பிக்கை அளிப்பவராக இருந்த காலங்கள் உண்டு. குணா, மகாநதி, தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்கள் வந்த காலங்கள் அவை. கமல்ஹாஸனது நகைச்சுவைப் படங்கள் எவரையும் புண்படுத்தாதவை. வர்க்கம், இனம், நிறம், மொழி, எனும் அளவில் எவரையும் அவமானப் படுத்தாதவை அந்தப் படங்கள். சிங்கார வேலன் தனக்கு ஒரு இழுக்கு என அவரே சொல்லியிருக்கிறார்.

அவரது அவமானமான பக்கங்கள் குருதிப்புனல் மற்றும் ஹேராம் போன்ற படங்களின் வழி வெளிப்பட்டது. குருதிப் புனலில் செயல்பட்டது அவருடைய அப்பட்டமான மத்தியதர வர்க்க மனிதாபிமானம். துரோகாலின் தமிழ் குருதிப் புனலில், இயக்குனர் கோவிந்த நிஹ்லானி தனது படமான துரோகாலில் வெளியிட்ட அரசியல் ‘சமநிலையைக்’ கமல்ஹாஸன் காப்பாற்றவில்லை. போராளிகள் தொடர்பான முன்மதிப்பீட்டிற்குக் கமல்ஹாஸன் தன் படத்தில் பார்வையாளர்களை உந்தித் தள்ளினார்.

ஹே ராமில் அவரது அரசியல் வலதுசாரி சார்புநிலையாகித் தடுமாறியது. அன்பே சிவம் படத்தில் உலகவயமாதலுக்கு எதிரான தெளிவான குரலை முன்வைத்த அவர், அதற்கு முற்றிலும் எதிர்திசையில் தசாவதாரத்தில் அப்பட்டமான அமெரிக்க ஆதரவு அரசியல் நிலைபாட்டை முன்வைத்திருக்கிறார்.

அங்கொன்றும் இங்கொன்றுமான சரித்திரப் பகைப்புலத்திலான வசனங்களை அவர் வைத்திருப்பது ‘பாத்திரங்களின் இடையிலான சமநிலையைக் கடைபிடிக்கும்‘ காரணம் கருதியதுதானே ஒழிய, அவற்றில் கருத்தியல் அல்லது அரசியல் தோய்வுகளோ கலா தரிசனங்களோ இல்லை.

மார்பின் குறுக்கில் பூணூல் நெளிந்தபடி தினவெடுத்து முறுக்கேறிய தோள்களுடன் அவர் தனது நிலைபாட்டை உறுதியாய் முழங்குகிற இரு பிம்பங்கள் மறுபடி மறுபடி எனக்கு ஞாபகம் வந்து கொண்டிடேயிருக்கிறது. முதல் பிம்பம், ஹே ராம் படத்தில் காந்தியின் கொலைகாரனாக வரும் நாதுராம் கோட்சேயின் இந்துத்துவ பிம்பம். இரண்டாவது பிம்பம் தசாவதாரம் படத்தில் அதே பூணூல் நெளிய, முறுக்கேரிய தோள்களுடன் ‘முகுந்தா முகுந்தா’ என அலறும் பிம்பம். இந்த இரண்டு பிம்பங்களும் ‘சமீபகால’ இந்திய அரசியலில் நிலைத்துவிட்ட பிம்பங்கள். ரதயாத்திரை வந்தபோது இந்துத்துவக் கொலை வெறியரான பிஜேபி அத்வானி இந்தப் பிம்பங்களை ஒத்தபடிதான் வந்தார். இரத்தத் தீற்றலென நெற்றியில் தீட்டப்பட்ட செஞ்சாந்து, நிமிர்ந்து அகன்ற தோள்களுடன்தான் விறைத்து நின்றபடி வந்த அத்வானியின் ரத யாத்திரை, இன்று வரையிலும் தொடர்ந்து, இந்திய நாடெங்கிலும் நரவேட்டை யாத்திரையாக நடந்துகொண்டிருக்கிறது.

கமல்ஹாஸனின் ‘வைணவத் தன்னிலை’ உக்கிரமாக அல்லது விகாரமாக வெளிப்பட்ட திரைப்படத் தருணங்கள், ஹேராம் மற்றும் தசாவதாரம் திரைத் தருணங்கள். அரசியல் அபத்தக் களஞ்சியமாக வந்திருக்கிற தசாவதாரத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பெரியாரின் பெயர் உதிர்க்கப்படுகிறது. பற்பல வரலாற்றுச் சம்பவங்கள் சுட்டிக் காட்டப்படுகிறது. இவையெல்லாம் ஜோர்ஜ் புஸ்ஸைச் சற்றிக் கட்டுப்படும், பார்வையாளனது தரிசனத்தை மறைக்கும் வெற்று புஸ்வானங்கள் அல்லது கண்ணை மறைக்கும் இருட்டு வஸ்திரங்கள்.

ஒரு சினிமாக் கலைஞனாக, பன்னாட்டுச் சந்தை நோக்கிய ‘ஹாலிவுட் அபிலாசைகளும்’, இந்திய எல்லைகள் தாண்டிய ‘ஜனரஞ்ஜக உலக நாயக’க் கனவுகளும்தான் அவரை இத்திசை வழியில் உந்திச் செல்கிறது எனும் தடங்களை, கமல்ஹாஸனின் இந்தத் தசாவதாரச் செயல் போக்கின் வழி நம்மால் உணரந்து கொள்ள முடிகிறது. கமல்ஹாஸனின் இந்தத் திரைப் பயணம் அவரது கருத்தியல் தேர்வுகளின் திசைவழியையும் நமக்கு எச்சரிக்கையுடன் சுட்டிக் காண்பிப்பதாக இருக்கிறது.

-யமுனா ராஜேந்திரன்-

--------------------------------------------------------------------------------

கமல் அடிப்படையில் ஒரு மொத்த வியாபார சினிமாக்காரன். கோடாம்பாக்கத்தில் பண பலமும் செல்வாக்கும் உள்ளவர். அவர் ஒரு “மேதையிலும் மேதை”, “சிறந்த படைப்பாளி” என்பவை உண்மை என்றால் வியாபார சக்திகளிலிருந்து முற்று முழுதாக விலகி அடூர் கோபால கிருஷ்ணனின் முகாமுகம் போன்றதான ஒரு படத்தையேனும் தமிழில் குறைந்த பட்ஜெட்டிலேனும் முதலிட்டோ நடித்தோ தந்திருக்க முடியும்.

அவரைப் பற்றிய இரண்டாவது மாயை அவர் ஒரு முற்போக்கான நடவடிக்கையாளர் என்பது. வெகுசன சாதனங்களுக் கூடாக இவ்வாறான பிரமையை இவர் கட்டி வைத்திருக்கின்ற போதிலும் அது உண்மையல்ல. அருந்ததி ராயைப் போல grass root level இல் சாதி அடக்குமுறை போன்ற எந்த முற்போக்கான போராட்டத்திலும் பங்கெடுக்காதவர்.

தசாவதாரம் படத்தில் பிராமண ஆதிக்கம், தலித் மக்களின் மீதான அடக்குமுறை என்பவற்றுக்கெதிரான முற்போக்கான பல விடயங்கள் வருகின்றன. இவை புதிய தலித் எழுச்சி நடைபெறுகின்ற தமிழ் நாட்டில் வியாபாரப்படங்களின் சூத்திரத்துக்கு அவசியமானவை. 2002 ம் ஆண்டு திக்விஜே சிங் என்பவரால் இயக்கப்பட்ட மாயா (http://www.sawnet.org/cinema/reviews.php?Maya) என்ற எவரின் ஆன்மாவையும் உலுக்கக்கூடிய ஒரு கிந்தி மொழிப்படம் வெளிவந்தது.

இன்றும் இந்தியாவின் சில கிராமப்புறங்களில் நடக்கின்ற ஒரு பிராமணக் கொடுமையைப் பற்றியது. (பெண் குழந்தை பூப்படைந்ததும் அவ்வூரின் கோயில் பிராமண அர்ச்சகர்களால் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் வைத்து இந்து தர்மத்தின் பெயரால் குழுவாக வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும் சடங்கு) இம்மாதிரியான ஒரு படத்தை கமலகாசன் நமக்கு தரட்டும்.

அதன் பிறகு நான் கமல் உண்மையிலேயே ஒரு சீர்திருத்தவாதி என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். போகிற போகிற போக்கில் இனி Hollywood படத் தயாரிப்பாளர்களும்; தங்களுடைய படங்களை இந்தியாவுக்கு outsourcing பண்ணினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

- நட்சத்திரன் செவ்விந்தியன்-

உக்காந்து யோசிப்பாங்களோ :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.