Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….- மணி.செந்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….- மணி.செந்தில்

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;

(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)

பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்.

.

முத்துக்குமார் .

இது வெறும் பெயர் அல்ல.

இது வெறும் பெயர் அல்ல.

இது ஒரு போர் முழக்கம்.

ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின்

விழிப்பின் உச்சம்.

.

முத்துக்குமார்.

இது வெறும் பெயர் அல்ல.

இது வெறும் பெயர் அல்ல.

இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை கண்டு கதறி கூட அழ முடியாத அளவிற்கு நம்மை நகர்த்தி வைத்திருந்த இந்தியத்தின் உச்சாணிக் கொம்பிற்கு விடுக்கப்பட்ட சவால்.

நாங்கள் கண்ணீர் விட்டு கதறியும் கண்டு கொள்ளாத

உலகத்தின் செவிகளுக்கு அடித்துக் கூறிய

பறை முழக்கம்.

.

முத்துக்குமார் .

இது வெறும் பெயர் அல்ல.

இது வெறும் பெயர் அல்ல

இன்னும் தமிழன் இருக்கிறானடா இந்த நாட்டில்- என

இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களின்

செறுமாந்த இறுமாப்பினை தகர்த்த

இடி முழக்கம்.

தன்னை தானே திரியாக்கி

ஊருக்கே வெளிச்சமாய் போன

ஒற்றைச் சுடர்..

.

சென்ற வருடத்தில் ஜனவரி 29 ஆம் தேதி நடுப்பகல் 12 மணி அளவில் அவசரமும், பதட்டமும் நிறைந்த ஒரு குரலின் மூலம் முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செய்தியை நான் அறிந்தேன். தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத ஒரு இளைஞன் தன்னையே எரித்துக் கொள்வதான மனநிலை என்னை முற்றிலும் சிதைத்துப் போட்டது. அன்றைய காலக் கட்டத்தில் நமது கையறு நிலையின் உச்சம் முத்துக்குமாரின் தியாகம்.அந்த சமயத்தில் மட்டுமல்ல..இப்போதும் கூட முத்துக்குமாரின் மரணம் எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக வலியினை கொடுக்கிறது. என் கண் முன்னால் நடந்த…நடக்கின்ற… வேதனைகளை..கொடுமைகளை சகிக்கும் என் மனநிலையின் மீது ஆறாத வெறுப்பாய் கவிழ்ந்திருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாட சுகங்கள் மீதான நுகர்வு கூட என்னை மிகுந்த பதற்றம் உடைய மனிதனாக..குற்ற உணர்வு கொள்பவனாக மாற்றி வைக்கிறது.

நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற தமிழின இளைஞர்கள் இவ்வாறு தான்

ஈழம் சிதைந்துப் போன வலியோடு..துயரோடு… வாழ்கிறார்கள்.

ஆனால் முத்துக்குமாருக்கு மட்டும் சுயநலத்தினை மீறிய இனநலன் சார்ந்த மனநிலை வாய்த்திருக்கிறது.

பாருங்கள்…உலகத்தீரே…

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஒரு தேசிய இனத்தின் வழி தோன்றியவன் …உலகத்திற்கு கலை, பண்பாடு, இலக்கியம், நாகரீகம், அரசு,வீரம் என அனைத்தையும் போதித்த இனத்தின் புதல்வன் … தன் சொந்த சகோதர, சகோதரிகள் தன் கண் முன்னால் அழிவதை கண்டு சகிக்க முடியாமல் தன்னை தானே எரித்து மரித்துப் போனான்.

உலகத்தின் மெளனம், இந்தியத்தின் வேடம், தமிழக அரசியல்வாதிகளின் துரோகம் ..இவைதான் எங்கள் ஈழத்தினையும் அழித்தன. எங்கள் முத்துக்குமாரையும் பறித்தன.

அறம் செய்ய விரும்பிய இனத்தின் பிள்ளையான முத்துக்குமார் தன் உளச் சான்றுக்கு நேர்மையாக இருந்து விட்டு போனார். …

ஒரு மரணத்திற்கு முன்னதான பொழுதுகளில் முத்துக்குமார் கடைப்பிடித்த நிதானம் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியது. ஒரு மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவல்ல என்பதனை முத்துக்குமார் நிறுவியுள்ளார்.

இத்தனைக்கும் அந்த மனிதன் சமூகத்தின் மிகச் சாதாரணப் பகுதியில் இருந்து தான் என்ன செய்கிறோம் என்பதனை முழுக்க ஆராய்ந்து..இனிமேலும் பொறுப்பதற்கோ, இழப்பதற்கோ ஏதுமற்ற நிலையில் தன்னையே ஒரு தீபமாக்கி கொண்டு ஊருக்கு வெளிச்சமாகிப் போனார் முத்துக்குமார்.

ஈழ அழிவின் கடைசிக் காலங்களில் தன் சொந்த சகோதர சகோதரிகள் தங்கள் கண்ணெதிரே அழிவதை கண்ட தமிழ்ச் சமூகம் என்ன செய்வது எனப்புரியாமல் கண் கலங்க நின்றது. நாமெல்லாம் ஏதாவது அதிசயம் நடக்காதா… ஏதோ ஒரு அற்புத நொடியில் நம் ஈழம் அழிவிலிருந்து மீளாதா என்ற பரிதவிப்பில் நின்றுக் கொண்டிருந்தோம். மனித சங்கிலியாக கொட்டும் மழையில் நின்றுப் பார்த்தோம். சாலை மறியல், தொடர்வண்டி மறியல், போராட்டம், உண்ணாவிரதம் என அனைத்தும் செய்தோம். இன்று அப்பட்டமான போலிகளாக நம் முன்னால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னமும் வேஷமிட்டு திரியும் வேடதாரிகளை நம்பிக் கிடந்து நாசமாய் போனோம்.உணர்வு மிக்க இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடக்கும் போது கண்கலங்க கடந்துப் போனார்கள். சீமான் அண்ணன், கொளத்தூர் மணி அண்ணன்,அய்யா மணியரசன் போன்றோர் தேசியத்தினை(?) பாதுகாக்க கைது செய்யப்பட்டனர். இறுதியாக திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலை என்ற முடிவோடு அமர்ந்தார். நாம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். என்ன நடந்ததோ, ஏது விளைந்ததோ தெரியவில்லை. சில பேருந்துகள் எரிந்ததை தவிர எவ்வித பலனும் இல்லை. மீண்டும் கலங்கி நின்றோம் . என்ன செய்வது என்ற தயக்கத்தின் ஊடான தேக்கம் நம் தொப்புள் கொடி உறவுகளை காப்பற்ற கடைசி முயற்சிகளையும் தளர வைத்தது.

அந்த நேரத்தில் தான் தமிழின இளைஞர்களின் உணர்வின் வெளிப்பாடாக முத்துக்குமார் உயிராயுதம் எடுத்தார். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகங்கள் வெகு சாதாரணமானவைதான் என்றாலும் முத்துக்குமாரின் தியாகம் தனிவகையானது. நின்று.. நிதானித்து .. அறிவின் ஊற்றாய் நிலை நிறுத்தப்பட்டு வழங்கிய ஒரு அறிக்கையின் மூலம் முத்துக்குமாரின் தியாகம் ஆவணப்படுத்தப் பட்டு விட்டது.

அது வெறும் அறிக்கையோ அல்லது மரண வாக்குமூலமோ அல்ல. தமிழனின் கடந்த ,நிகழ்கால வரலாற்றினை மீள் பார்வைக்கு உட்படுத்தும் நீதிமன்றக் கூண்டு. இவ்உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் உள் மன சான்றினை உலுக்கிய பேரிடியாக விளங்கிய அந்த அறிக்கை, பதவிக்காக எதையும் இழக்க துணியும் போலி அரசியல் ஒப்பனை முகங்களை கிழித்தெறிந்தது. அரசியல் வியாபாரம் செய்து ,தன்னை விற்று, தன் இனத்தினை விற்று..மிஞ்சி இருப்பதை விட்டு விட மனமில்லாமல் புறங்கையை நக்குபவர்களையும், ஓட்டு பிச்சைக்காக ராணுவம் அனுப்பி நாடு வாங்கித் தருவேன் என்று நாடகமாடிய நயவஞ்சக எதிரியையும், தமிழன்னையை மறந்து பதவிக்காக இத்தாலி அன்னையிடம் அனைத்தையும் இழந்த துரோகிகளையும் அந்த அறிக்கை மிகச் சரியாக அடையாளமிட்டுக் காட்டியது. இனி மக்களிடமிருந்து தமிழுணர்வு மிக்க தலைமை உருவாக வேண்டும் என புது திசை வழி காட்டியது.

இன உணர்வு மிக்க இளைஞர்களின் ஆழ் மன வெளிப்பாடாய் முத்துக்குமாரின் ஈகை விளங்கியது. தமிழினத்திற்காக தன்னையே அளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் நடக்கையில்…மனசாட்சியை , இன மாட்சியை தலைநகரில் அடகுவைத்து விட்டு ஈழ ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பிறந்தநாள் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் தலைவர்கள்.

சாப்பிட்டீர்களா தலைவர்களே… அதில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மாமிசமும் இருந்திருக்குமே… !

.

எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார் ?

ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும், 500 ரூபாய் நோட்டிற்கும் இனத்தினை அழித்தவர்களுக்கே மீண்டும் வாக்களித்து தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் இவர்களுக்காகவா..?

.

இனம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் .. மானடவும்,மயிலாடவும் கண்டு விட்டு.. தோற்பதன் துயரம் கூட உணராமல்.. சாதியால் பிளவுண்டு.. மதத்திற்கு முன்னால் மண்டியிட்டு சாதாரண வாழ்க்கையில் சாக்கடையாய் போன இவர்களுக்காகவா..?

.

பின் யாருக்காக ..எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார்..?

.

லட்சியவாதிகளின் மரணம் ஒரு துவக்கமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தார் முத்துக்குமார். தன் இரத்த உறவுகளுக்காக உயிரையும் கொடுப்போம்- என கொடுத்து ஈழ மக்களின் கண்களில் துயரத்தின் ஊடான கண்ணீரில் நன்றியாய் கசிந்தவர் முத்துக்குமார்.

தன் உடலைக் கூட துருப்புச் சீட்டாய் பயன் படுத்த கோரிய முத்துக்குமார் – தாயக தமிழகத்தின் தலைச் சிறந்த கரும்புலியாக நம் நினைவில் வலம் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்.

ஆயுதங்கள் பிணங்களை உருவாக்கின – ஈழத்தில்.

ஆனால் இங்கோ ஒரு பிணம் ஆயுதமாகிப் போனது.

முத்துக்குமார் சாதித்தார்.

முத்துக்குமார் முடிவல்ல. அது ஒரு தொடர்ச்சி.

எதுவுமே முடிந்து விடாது.முடிந்து விட்டது என நினைத்தப் போதுதான் முத்துக்குமார் என்ற துவக்கம் நிகழ்ந்தது.

முத்துக்குமார் – தான் வாழ்விற்கான முழுமையான பணியை தன் அறிக்கையின் வழியாக ஒவ்வொருவரின் ஆழ்மனதில் ஊடுருவி அறிவின் தெளிவாய்..இன மான உணர்வாய் வெளிப்பட்டு செய்து கொண்டே இருக்கிறார் . இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது முத்துக்குமாருக்கான உண்மையான அஞ்சலி.

.

ஆம்.

முத்துக்குமார்..என்பது

வெறும் பெயர்ச்சொல் அல்ல..

வினைச்சொல்.

……..

எம் அன்பார்ந்த ஈழ உறவுகளே…

முத்துக்குமார் பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறோம்.

உங்களின் வலியையும், உங்களின் இழப்பினையும் நாங்கள்

எங்கள் துயரமாக உணருகிறோம்.

எங்கள் மனதின் அடி ஆழத்திலும் தோல்வியின் வன்மமும், மீளுவதற்கான

கனவும் கசிந்துக் கொண்டுதான் இருக்கிறது.

நீங்களும் ,நாங்களும்..வேறல்ல..

ஒரு தியாகம் செறிந்த இனத்தின் மிச்சங்கள் நாம்.

நமக்கு பிறக்கும் பிள்ளைகளை முத்துக்குமாராக வளர்ப்போம்.

நாம் வாழ்ந்த கதையையும்…துரோகத்தின் ஊடாக வீழ்ந்த கதையையும்

சொல்லி வளர்ப்போம்.

உலகில் வாழும் தொன்மையான ஒரு இனத்திற்கான நாடு

தமிழீழ நாடு.

ஒரு கனவினை 24 கோடி விழிகள் சுமக்கின்றன.

காத்திருப்போம்.

வலியோடு.வன்மத்தோடு.

.

இன்றல்ல..ஒரு நாள்..ஈழம் மலரும்..

அன்றுதான் நம் காலை புலரும்.

.

அது வரை இருண்டு கிடக்கும் நம் வாழ்வில்

முத்துக்குமார் என்ற ஆன்ம ஒளி பிரகாசித்துக்

கொண்டே இருக்கும்.

.

தேசியத் தலைவர் நீடுழி வாழ்க.

.

----

மணி.செந்தில்.

http://meenakam.com/?p=4451

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.