Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பதக்கம்... நாளை உயிர்? புண்சேகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பதக்கம்... நாளை உயிர்?

புண்சேகா!

கடந்த 1995-ம் ஆண்டு... விடுதலைப் புலிகளின் கையில் இருந்த

யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் வீழ்த்திய நேரம்... 600-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி சுற்றி வளைக்கிறார் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த அந்தப் புள்ளி. காயங்களோடும் பசியோடும் கதறிய மக்களைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல், ''புதைகுழி தோண்டி இவர்களை உயிரோடு உள்ளே தள்ளுங்கள்!'' என உத்தரவிட்டார் அந்த அதிகாரி. சிங்கள ராணுவத்தின் வீரர்களே அதைச் செய்யத் தயங்க... தன் தலைமையில் அந்த வீரர்களை முடுக்கிவிட்டு அந்தக் கொடூரத்தை அரங்கேற்றினார்.

கொடூர இனக் கொலையாக உலகையே உலுக்கிய இந்த விவகாரம், இலங்கையிலும் பெரிதாக வெடித்தது. இலங்கை உயர் நீதிமன்றத்தில் அந்த அதிகாரிக்கு எதிராக வழக்கும் பதிவானது. தான் செய்த கொடூரத்தை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ செய்யாத அந்த அதிகாரி, ''எங்கள் நாட்டில் பெட்ரோல் வளம் குறைவு. இன்னும் 50 வருடங்களில் செம்மணி மண்ணில் நிறைய பெட்ரோல் கிடைக்கும்!'' என இதுபற்றிச் சொல்லி அதிர அதிரச் சிரித்தார்.

ஹிட்லரையே மிஞ்சும் அளவுக்கு நர்த்தனமாடிய அந்த அதிகாரி வேறு யாரும் அல்ல... பதவி, அந்தஸ்து, பதக்கங்கள், ஓய்வூதியம் போன்றவை பறிக்கப்பட்டு, தற்போது மரணத்தின் நிழல் நெருங்கிவிட்டதாகப் பதறிக்கிடக்கும் இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா!

இலங்கையின் ராணுவத் தளபதியாகவும் அதனைத் தொடர்ந்து கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்து... இறுதிப் போர் முடிந்த பின் ராஜபக்ஷேவை முறைத்துக்கொண்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர் அணியினரின் பொது வேட்பாளராகக் களம் இறங்கி, ராஜபக்ஷேவுக்கு ஷாக் கொடுத்தவர் ஃபொன்சேகா. அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வென்றதும் பழிவாங்கும் படலம் தொடங்கிவிட்டது. பலவிதமான வழக்குகள் பாய்ச் சப்பட்டு ஃபொன்சேகா உள்ளே தள்ளப்பட்டார்.

ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகச் சொல்லப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முதலாவது ராணுவ நீதிமன்றத்திலும், ராணுவ சட்டத்தை மீறி மோசடியான முறையில் ஆயுதக் கொள்முதல் செய்ததாக சொல்லப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் இரண்டாவது ராணுவ நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டன. இதில் முதலாவது நீதிமன்றம், கடந்த 13-ம் தேதி ஃபொன்சேகாவை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதன்படி, கடந்த 40 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பெற்றிருந்த அத்தனை கௌரவமான பரிசுகள், பதக்கங்களை ஃபொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்போகிறது சிங்கள அரசு. இதில் ரொம்பவே பதறிப்போய் இருக்கும் ஃபொன்சேகா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யத் தீவிரமாகி வருகிறார்.

இது குறித்துப் பேசும் ஜே.வி.பி பிரதிநிதிகள் சிலர், ''ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை நடந்தபோது, சிவில் நீதிமன்றங்களில் விடுமுறை காலம். அதனால், வேறொரு நாளில் விசாரணை நடத்தும்படி ஃபொன்சேகா தரப்பினர் போராடினார்கள். ஆனால், அதற்கு வழி இல்லாமல் போய்விட்டது. அப்போதே ஃபொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்புதான் வரும் என்று தெரிந்துவிட்டது. கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடந்த விசாரணையில் அவரது தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராணுவ நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்க முடிவெடுத்தாலும், அது குறித்து சிவில் நீதிமன்றங்களில் ஆலோசனை நடத்துவது பொதுவான வழக்கம். ஆனால், ஃபொன்சேகாவுக்கு எதிரான விவகாரத்தில் இந்த மரபும் பின்பற்றப்படவில்லை. இதுபோன்ற பல விவகாரங்களில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்ற வரலாறுகள் உள்ளன. அதன்படி ஃபொன்சேகா மேல்முறையீடு செய்தாலே, அவருடைய பதக்கங்களை அரசால் பறிக்க முடியாது!'' என்கிறார்கள் இன்னமும் குலையாத நம்பிக்கையுடன்.

ஆனால், சிங்கள அரசின் அடுத்தடுத்த 'மூவ்'களை அறிந்திருக்கும் புள்ளிகளோ, ''எத்தகைய சட்டப் போராட்டத்தை நடத்தினாலும் சிங்கள அரசின் பிடியில் இருந்து ஃபொன்சேகாவால் தப்ப முடியாது. இரண்டாவது ராணுவ நீதிமன்றத்தில் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஏராளமான ஆதாரங்களை வழங்கி இருக்கிறது அரசுத் தரப்பு. கடைசிக் கட்டப் போரின்போது, சரண் அடைந்த புலித் தலைவர்களை பாதுகாப்புச் செயலர் கோத்தபய உத்தரவின் பேரில் சவேந்தர் சில்வா என்ற அதிகாரி சுட்டுக் கொன்றதாக ஃபொன்சேகா பகிரங்கமாகச் சொன்னார். ஆனால், கடைசிக் கட்டப் போரில் அனைத்து உத்தரவுகளுமே ஃபொன்சேகாவால்தான் வழங்கப்பட்டன என ராணுவ நீதிமன்றத்தில் சொல்லி இருக்கும் அரசுத் தரப்பு, 'ஒருவேளை சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் அதற்குக் காரணமும் அவர்தான்!' எனச் சொல்லி உலகளாவிய குற்றச்சாட்டையும் மொத்தமாக அவர் மீது போட்டு தப்பிக்கத் தயாராகி வருகிறது. இதை உடைக்கும் விதமாக கடைசிக் கட்டப் போரின்போது, தான் சீனாவில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்களை ஃபொன்சேகா திரட்டினார். ஆனால், ராணுவத்தில் அவருக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளையே அவருக்கு எதிரான சாட்சிகளாக நிறுத்தப்போகிறது அரசுத் தரப்பு. ராணுவ ரகசியங்களை வெளியிட்டது, ஆயுதம் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்கியதில் கோடிக்கணக்கில் மோசடி செய்தது, புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை சர்வதேச ஆயுதக் குழுக்களிடம் விற்க முயன்றது என வெளியில் வராத பல குற்றச்சாட்டுகளை இரண்டாவது நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கப்போகிறது. அந்த வழக்குகளில் ஃபொன்சேகாவுக்கு மரண தண்டனை கிடைத்தாலும் ஆச்சர்யம் இல்லை!'' என்கிறார்கள்.

சிறையில் இருந்தாலும், போர்க் காலத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்களை எந்த நேரத்திலும் வெளியிடத் தயாராகி வந்தார் ஃபொன்சேகா. ஐ.நா. குழுவின் விசாரணை தீவிரமாகி வரும் நிலையில், போர்க் கொடூரம் குறித்து ஃபொன்சேகா எப்போது வாய் திறந்தாலும் அது சிங்கள அரசுக்கும் ராஜபக்ஷே சகோதரர்களுக்கும் தீராத சிக்கல்தான். இதற்காகவே, அவர் மீதான வழக்குகளில் ஏக வேகம் காட்டி, அவருக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க சிங்கள அரசு துடிக்கிறது. தற்போது, எம்.பி-யாக இருக்கும் ஃபொன்சேகா, ராணுவத்தில் நான்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர். ஆனால், அதற்குரிய மரபுகளோடு விசாரணை நடத்த வேண்டிய சிங்கள அரசு, சிறைக்குள்ளும் ஃபொன்சேகாவுக்கு பலவித இடையூறுகளையும் அவமானங்களையும் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. சிறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்கும் சிங்கள மீடியாக்கள், 'இங்கேயே அவருக்கு முடிவு கட்டப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை!' என்கின்றன.

க்ளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் அட்டாக் என போர் மரபுகளை அடியோடு புறந்தள்ளி, அப்பாவி மக்களையும் புலிகளையும் வீழ்த்தி வெ(ற்)றி வீரனாக வலம் வந்த ஃபொன்சேகா, ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேட்டு ''தீவிரவாதத்தின் பிடியில் இருந்து என் நாட்டைக் காப்பாற்றியதற்காகவா இந்தத் தண்டனை?'' எனப் புலம்பி இருக்கிறார்.

அப்பாவி ஆடுகளை வேட்டையாடிய ஓநாய்களில் ஒன்று வெளியிடும் அழுகையாகவே அது தொனிக்கிறது!

- இரா.சரவணன்

விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.