Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல மெல்ல தின்னப்படும் தமிழர்களின் தலைநிலம் திருக்கோணமலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல தின்னப்படும் தமிழர்களின் தலைநிலம் திருக்கோணமலை

03 மார்ச் 2011

தமிழர்களின் தலைநிலம் என்று முக்கியம் பெறுகிற திருக்கோணமலையின் பல பகுதிகள் சிங்களக்கு குடியேற்றங்களினால் அபாயங்களை எதிர் கொண்டபடியிருக்கிறது. தமிழ் மக்களின் புரதான நிலம் என்ற அடையாளத்தை சிங்களக் குடியேற்றங்கள் மெல்ல மெல்ல அழித்து வருகின்றன. சிங்களக் குடியேற்றங்களுடன் சிங்களப் பெயர்களைத் தாங்கி துயர முகத்துடன் திருக்கோணமலை நிலம் இருக்கிறது. ஈழத்தின் தலைநகரம் திருக்கோணமலை நகரத்தில் பார்த்த காட்சிகளும் சந்தித்த மனிதர்களின் வார்த்தைகளும் மிகுந்த நம்பிக்கையை தருகின்றன என்று குறிப்பிடும் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் திருக்கோணமலை மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். திருமலை நகரம், கந்தலாய் மற்றும் முதூர் பெருவெளிக்கிராங்களுக்கும் சென்றிருந்த கட்டுரையாளர் இந்தப் பகுதியில் சிங்கள பூமியாகி வரும் திருமலை மண்ணின் இன்றைய துயரங்களையும் அதன் காட்சிகளையும் விபரிக்கிறார்.

ஈழத் தமிழர்களின் மனதை உலுக்கும் நிலமையில் திருக்கோணமலை நிலம் இருக்கிறது. திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் திருமலை நிலத்தை மெல்ல மெல்ல தின்று கொண்டிருக்கிறது. வடக்கு கிழக்கு என்கிற தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் நில ஆக்கிரப்பு என்ற துயரத்தால் இன்று அதிகம் அவலமான கட்டத்தை திருமலை நிலம் அடைந்து கொண்டிருக்கிறது. திருக்கோணமலை நகரம் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் நகரமாகவே இன்னும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் திருக்கோணமலை மக்கள் தங்கள் நிலம் குறித்து அச்சத்துடன் கூடிய பெருந்துயருடன் இருக்கிறார்கள். வேலிகளை அரிக்கும் பேய்களை எப்படி எதிர்கொள்வது என்ற அன்றாடப் போராட்டங்களுடன் அவர்களின் வாழ்க்கை நகர்கிறது.

திருக்கோணமலையின் பயங்கரம் நிறைந்திருந்த காலங்களை பலர் நினைவு படுத்தினார்கள். திருமலை மக்களின் உணர்ச்சிகளை அழிக்கவும் எழுச்சிகளை ஒடுக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளின் இரத்தம் நிலத்திலிருந்து இன்னும் காயாமல் இருக்கிறது என்று பலர் நினைவு படுத்தினார்கள். திருக்கோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் மாமனிதர் விக்கினேஸ்வரன் (கொலை 07.04.2006), ஐந்து மாணவர்கள் படுகொலை (கொலை 02.01.2006), உட்பட பல கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள், நகர சபை உறுப்பினர்கள் என்று பலர் இப்படிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொலைகள் திருமலை மண்ணிலிருந்து எழும் குரல்களையும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரக்ஞையையும் கடுமையாக மிரட்டியிருக்கிறது. இலங்கை அரச படைகளினதும் துணை இராணுவக் குழுக்களினதும் கொலை நிலமாக இருந்த பயங்கரங்கள் நிறைந்த காலம் திருக்கோணமலையை கடுமையாக அச்சுறுத்தியது. இத்தனை துயரங்களைத் தாண்டியும் திருக்கோணமலை மக்கள் தங்கள் தேசியப் பற்றை வெளிப்படுத்துகிறார்கள். நெருக்கடி நிலையில் உள்ள அரசியல், இலக்கியம், சமூகம் போன்ற பல விடயங்கள் பற்றி நான் சந்தித்தவர்களுடன் உரையாடியிருந்தேன்.

வடக்கு கிழக்கு என்ற தமிழர் தாயகத்தில் வடக்கில் முல்லைத்தீவுடன் திருக்கோணமலை மாவட்டம் இணைந்திருக்கிறது. அழகும் வளமும் கொண்டு தலை நகரம் எனபதற்கான அத்தனை அடையாளங்களுடனும் சிறந்திருக்கிற இந்த நிலத்தில் காலம் காலமாக தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறார்கள். தனித்துவமான பேச்சுத் தமிழ் மொழி, வாழ்க்கைக் கோலங்கள் என்பன திருக்கோணமலை மக்களின் விசேட அடையாளங்களாகும். இலங்கையில் வெளிநாட்டு அந்நியர்களின் ஆட்சி முடிந்ததைத் தொடர்ந்து பல்வேறு இலங்கை அரசுகளால் அரசியல் ஆக்கிரமிப்;பு நோக்கங்களுக்காக சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று திருக்கோணமலை நகரின் முக்கிய இடங்கள் பலவற்றில் இராணுவ முகாங்களும் புத்தர் சிலைகளும் சமகாலத்தையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகின்றன. திருக்கோணமலைக் கோட்டை, துறைமுகம் போன்றவை இலங்கை இராணுவத்தின் கோட்டைகளாக மாறியுள்ளன. புத்தர் சிலைகள் திருக்கோணமலை மண் முழுவதும் குடியிருத்தப்பட்டுள்ளன. கன்னியா வெந்நீருற்று மற்றும் திருக்கோணேச்சரம் என்ற புகழ்பெற்ற ஆலயத்தின் சூழலிலுல் புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்து ஆட்சி நடைபெற்றதாக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஈழத் திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோணேச்சரம் என்ற ஆலயம்மீது திருஞானசம்பந்தர் பதிகம் பாடியிருக்கிறார். தனித்துவமான இலக்கிய கலைப் பின்னணிகளை திருக்கோணமலை மண் கொண்டிருக்கிறது.

சகல காலத்திலும் இனப்பிரச்சினையையும் வன்முறைகளையும் தூண்டும் விதமாகவே புத்தர் சிலைகள் நடப்பட்டிருக்கின்றன. அவை தமிழ் மக்களின் நம்பிக்கைகள் அடையாளங்கள்மீது குத்தி காயப்படுத்தும் வகையில் நடப்பட்டிருக்கின்றன. சமாதான காலத்தில் திருக்கோணமலை நகரில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் கடுமையான எதிரப்பை ஏற்படுத்தியிருந்தது. திருக்கோணமலை மக்களின் எதிர்ப்பின் பின்னர் இராணுவப் பாதுகாப்புடன் புத்தர் சிலை பாதுகாக்கப்படுகிறது. இன்று திருமலை நகரின் பல இடங்களில் புத்தர் சிலைகள் முளைத்திருக்கின்றன. திருக்கோணமலை நிலம் முழுமையாக சைவ சமய அடையாளங்களையும் ஈழத் தமிழ் இன அடையாளங்களையும் கொண்டிருக்கிறது. இந்த அடையாளங்களும் தமிழ் மக்களின் மனக்கனவுகளையும் அச்சுறுத்தும் வகையிலேயே சிங்களக் குடியேற்றங்களும் இராணுவமுகாங்களும் புத்தர்சிலைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. புத்தர்சிலைகளை குடிபெருக்குவதன் வாயிலாக திருக்கோணமலை நிலத்திலும் வரலாற்றிலும் பௌத்த மதத்தின் அடையாளங்களை திணித்து முழுச் சிங்கள பூமிமாக்க மாற்றும் நீண்ட கால அரசியல் உள்ளடங்கியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்துக் கொண்ட இந்த அரசியலை அரசும் இராணுவமும் மிகவும் திட்டமிட்டமுறையில் செய்து வருகிறது.

கந்தலாய் பகுதிக்குச் சென்ற பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. கந்தலாய்ப் பிரதேசம் மகாவலி குடியேற்றத் திட்டத்தின் மூலம் முழுமையாக சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டு மாறிப் போயிருக்கிறது. முன்னைய காலத்தில் தமிழர்கள் தனியாக வாழ்ந்த பிரதேசம் இன்று முழுச்சிங்களப் பிரதேசமாக மாறியிருக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கையும் வாழ்க்கைக் கோலங்களும் கலந்த இந்தக் கிராமத்தில் இன்று எங்கும் சிங்களப் பெயர் பலகைகளும் சிங்களக்குடிகளும்தான் நிறைந்திருக்கின்றன. கந்தலாய் நகரத்தில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் கூட நான்கு பக்கமும் புத்தசிலைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சிங்களப் பேரினவாத அரசியலை திணிக்கும் தேர்தல் சுவரொட்டிகளுமாய் இருக்கிறது கந்தலாய் நகரம். கந்தலாய் பிரதேசத்தின் வனப்புக்கு கந்தாய்குளம் உயிரூட்டிக் கொண்டிருக்கிறது. அழகான காட்சிகளும் விளைந்த வயல் நிலங்களுமாய் விரிந்திருந்தது.

கண்களற்ற அரசன் ஒருவன் இறை அருளால் உணர்த்தப்பட்ட கருத்தின் நிமித்தமாக கந்தலாய் குளத்தில் முகம் கழுவிய பொழுது அந்த அரசனுக்கு கண்கள் கிடைத்ததைத் அடுத்து கண் தளைத்த இடம் என்ற அர்த்தத்தில் கந்தலாய் என்ற பெயர் உருவானதாக அங்கு சந்தித்த முதியவர் ஒருவர் குறிப்பிட்டார். கந்தலாயில் கடும் சிங்கள ஆதிக்கத்தின் மத்தியிலுல் பல தமிழ் குடும்பங்கள் இன்னும் வசித்து வருகிறார்கள். நில ஆக்கிரமிப்பிற்காக எப்பொழுதும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தங்களுக்கு இருப்பதாக அந்த முதியர் சொன்னார். தமிழர்கள் குடியிருந்த பகுதியை தவிர காடுகளாக இருந்த கந்தலாய் இப்பொழுது பெரும் சிங்கள நகரமாக மாறியிருக்கிறது. பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் இப்பொழுது சிங்களக் குடிகள் அதிகரித்து பெரும் சிங்கள நகரமாக மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். சிங்களவர்களின் அச்சுறுத்தல்களால் பல தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்கள். தமிழ் நிலத்தை இரண்டாக்கும் சூழ்ச்சிகரமான அரசியல் பின்னணியுடன் திருக்கோணமலை மண் திட்டமிடப்பட்டு கொள்ளையடிக்கப்படகிறது என்றும் கந்தலாய் மக்கள் தெரிவித்தார்கள்.

திருமங்கலாய் எனப்பட்ட ஊர் இன்று முற்று முழுதாக சிங்கள பகுதியாக மாற்றப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது. திருமங்கலாய் என்கிற கிராமம் ஸ்ரீமங்கபுர என்ற சிங்களப் பெயருடன் அதிர்ச்சி தரும் கிராமமாக மாறியிருக்கிறது. அங்கிருந்த பல தமிழ் குடிகள் சிங்கள வன்முறையாளர்களின் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து சென்று விட்டார்கள். மாவிலாற்றுப் பகுதி பௌத்த விகாரையுடன் முற்றாக சிங்கள பூமியாக்கப்பட்டுள்ளது. விகாரையின் முன் வாசலில் மாவிலாற்றை வெற்றி கொண்டதன் நினைவாக படையினரை நினைவு படுத்தி கௌரவித்து வழிபடும் இரண்டு இராணுவ வீரர்களின் உருச்சிலைகள் ஆயுதங்களுடன் புத்தரை வணங்கியிபடி நிற்கிறார்கள். இங்குதான் புத்தமும் சிங்கள இனவாதமும் இராணுவப் போக்கும் ஒன்றாக இணைந்து நின்று ஈழத் தமிழர்களின் வாழ்வை அச்சுறுத்துகின்றன.

கிழக்கில் அண்மையில் பெய்த பெருமழையும் கொடும் வெள்ளமும் ஏற்படுத்திய தடங்கள் பல இன்னும் ஆறாத நிலையில் இருக்கின்றன. கந்தலாயிலிருந்து மூதூருக்குச் செல்லும் வழியில் இருக்கிற மகாவலி ஆறும் மாவிலாறும் இப்படித் தடயங்களால் ஆறாத நிலையில் உள்ளன. மகாவலி ஆறு மிகவும் அகலமான பெரும் ஆறு. ஆற்றை தாண்டி பல கிலோ மீறர் தூரத்திற்கு தண்ணீர் மேவிப் பாய்ந்திருக்கிறது. திருமலையின் பல வீதிகளும் இந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முற்றாக அழிந்த நிலையில் உள்ளன. மகாவலி ஆற்றினை அண்டிய பகுதிகளில் உள்ள வீதியில் சில இடங்கள் வெள்ளத்தால் முழுமையாக அரித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

சிவபுரம் மிகவும் அiகான கிராமம். மாவிலாற்றில் சிவபுரம் மக்கள் முகம் கழுவி குளித்துக் கொண்டிருந்தார்கள். வயல்களில் வேலை செய்பவர்களும் உல்லாசமாக நீரிலும் சேற்றிலும் திரியும் எருமை மாடுகளும் அந்தக் கிராம் எங்கும் பார்க்கக் கிடைத்த காட்சி. இன்று வரை அங்கு தமிழ்மக்கள் வாழ்கிறார்கள் என்பதை அங்கு பார்த்த காட்சிகள் சொல்லுகின்றன. தொடர்ச்சியான சிங்கள பேரினவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த பொழுதும் ஒரு தனித்துவமான தமிழ் கிராமமான சிவபுரம் உயிர் வாழ்கிறது. அங்கு 1980கள் முதல் தொடர்ச்சியாக வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. விடுதலைப் புலிகளிடம் தோற்கும் பொழுதெல்லாம் சிங்களக் காடையர்கள் வந்து மக்களை வெட்டிக் கொலை செய்வதும் சிங்கள இராணுவத்தினர் வந்து மக்களை சுட்டுக் கொல்லுவதுமாக இரத்தத்தில் நனைந்த கிராமம் என்ற வரலாற்றுத் துயரத்தை சிவபுரம் சுமந்திருக்கிறது.

சிவபுரத்தை அண்டிய சில கிராமங்களில் மக்கள் இன்று வரை அனுமதிக்கப்படவில்லை. அகத்தியர்சேனை என்ற இடம் தமிழ் மக்களின் வரலாறு மற்றும் சமயத்துடன் மிகவும் நெருக்கமான கிராமம். இந்தியாவில் அனர்த்தம் ஏற்பட்ட பொழுது அகத்தியர் ஈழத்திற்கு வந்து அகத்தியசேனை என்ற இடத்தில் தங்கியிருந்ததாகவும் அங்கு அவர் ஆயிரம் சிவ லிங்ககங்களை உருவாக்கி விட்டுச் சென்றிருப்பதாகவும் சனங்கள் சொல்லுகிறார்கள். இப்பொழுது அகத்தியசேனை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை என்று குறிப்பிடும் சிவபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியிருப்பதாகவும் மக்கள் செல்ல அந்தப் பகுதிக்கு அனுமதியில்லை என்றும் அவர் சொல்கிறார். அகத்தியர் சேனை அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

அத்தனை கிராமங்களின் அழகிய காட்சிகளின் நிழலுக்குப் பின்னால் இரத்தம் உறைந்த கதைகளும் வன்முறைக் காட்சிகளும் அச்சங்களும் படிந்திருக்கின்றன. இப்படித்தான் திருக்கோணமலையின் பல கிராமங்கள் ஆபத்தில் இருக்கின்றன. இலங்கை அரசுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் திருமலை மண்ணின் கிராமங்களை அபகரித்து வருகின்றன. தமிழர்கள் திருக்கோணமலை மண்ணில் அதிகமாக வாழ்கிறார்கள். திருமலை நகரிலும் தமிழர்களே அதிகமாக வாழ்கிறார்கள். அதுவே இலங்கை அரசுகளின் அரசியலை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இதனாலேதான் தமிழ் மக்கள் மிகவும் குறைவாக வாழும் பல பகுதிகளை அரசு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவித்து வருகிறது. காடுகளாக உள்ள பகுதிகளிலும் சிங்களக் குடிகளை ஊக்குவித்து முன்னெடுக்கிறது.

இதனால் முதலிக்குளம் என்ற தமிழ் பிரதேசம் மொரவௌ என்ற சிங்களம் பிரதேசமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதைப்போல குமரேசன் கடவை என்ற தமிழ் பிரதேசம் கோமரன்கடவல என்ற சிங்களக் பிரதேசமாக பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சேருவில, பதவிசிறிபுர போன்ற சிங்களப் பிரதேசங்களும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு முழுச் சிங்களக் பிரதேசங்களாக மாறிவிட்டன. இதைப்போல பல கிராமங்கள் சிங்களப் பெயர்களுடன் தனிச்சிங்களப் பெயர்பலகைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. 1921 முதல் 1948 முதல் பல்வேறு பின்னணிகளுடன் இந்தக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. புகையிரத வழி அமைப்பதற்காக திருமலைக்கு அந்நியராட்சிக் காலத்தில் வந்த பல சிங்களவர்கள் திருமலையில் நிரந்தரமாகக் குடியேறினார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து சிங்கள அரசுகளால் சிங்களக்குடியேற்றங்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அறிய முடிகிறது.

திருமலை என்று செல்லமாக அழைக்கப்படும் தமிழ் மக்களின் தலை நிலம்; திருக்கோணமலை நிலம் இப்படித்தான் ஆக்கிரமிப்பு அரசியலால் இன்று மிகுந்த துயரத்துடனும் நெருக்கடியுடனும் இருக்கிறது. தமிழர்களின் இந்தத் தலைநகரின் வளமும் அழகும் இலங்கை அரசை மட்டுமல்ல உலக வல்லாதிக்க அரசுகளின் கண்களிலும் பட்டு அரசியல் மற்றும் ஆதிக்கத்தின் கனவு நிலமாகியிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு திருமலை ஈழத் தமிழர்களின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருமலைக்கு நேரும் அபாயங்களும் அதனை சுற்றி நிற்கும் ஆக்கிரமிப்பு இலக்குகளும் வெறுமனே திருக்கோணமலை நிலத்தையும் அதன் வளத்தையும் மட்டும் குறி வைத்து நிற்பதல்ல., திருக்கோணமலை நிலத்தோடு அது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களின் வாழ் நிலக் கனவையும் இலக்கு வைத்திருக்கும் எமது அடுத்த தலைமுறைகளை தவிக்க வைக்கும் சூழ்ச்சிகரமான அரசியலலைக் கொண்ட அபயமான இலக்காகவே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.