Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொக்கச்சான்குளம் தமிழ் கிராமம் கலாபோவசேவ என பெயர் மாற்றம்- 165 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கச்சான்குளம் தமிழ் கிராமம் கலாபோவசேவ என பெயர் மாற்றம்- 165 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்!

Thursday, June 9, 2011, 18:26

தமிழீழம், முதன்மைச்செய்திகள்

நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராமசேவை அலுவலர் பிரிவைச்சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற தமிழ் கிராமம் இன்று கலாபோவசேவ என்ற சிங்களகிராமமாக மாறியுள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும் போது தெரிவித்தார்.

செழிப்பு மிக்க வயல் நிலங்களை உள்ளடக்கிய கொக்கச்சான்குளம் கிராமத்தில் இன்று சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.வவுனியா சேமமடு வழியாக ஊத்துக்குளம் சென்று அரியகுண்டான் கிராமம் அருகே அமைந்துள்ள கொக்கச்சான்குளம் தமிழ் கிராமத்தினை அடைய முடியும். இங்கிருந்து பதவியா வெடிவைத்தகல் வழியாக நெடுங்கேணியைச் சென்றடையலாம்.

கொக்கச்சான்குளத்தின் கீழ் சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்களை உரித்துடையது இப்பகுதியில் உள்ள வயல்காணி முழுவதும் தமிழ் மக்களுக்குச் சொந்தமானது. அங்கு சிங்கள மக்கள் அத்துமீறி குடியேற எடுத்த முயற்சி 1985ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்டது.

அண்மைய யுத்தம் முடிவுற்ற தன் பின்னர் 2010 டிசம்பர் மாதமளவில் இக்குளத்தின் அணைக்கட்டின் சேதமடைந்திருந்த 200அடி நீளமான பகுதி இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்டது. இக்கிராமத்தின் குளம் மற்றும் வயல் நிலங்கள் கமநல அபிவிருத்தித் திணைக்கள வவுனியா உதவி ஆணையாளர் நிர்வாகத்தின் கீழ் வருகின்றன.

இருந்தும் இதன் திருத்த வேலைகள் அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் ஆகியோரால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற வடக்கின் என்றெப் ((ENREP) இன் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டு , அவரின் உதவியில் ரூ.4.5மில்லியன் ஒதுக்கீட்டில் திட்டம் வரையப்பட்டு ஈரப்பொத்தானை கமக்காரர் அமைப்பிடம் பணி ஒப்படைக்கப்படடது. ஆனால் அணைக்கட்டு மற்றும் குளத்தின் நீரேந்து பகுதிகள் இராணுவத்தினராலேயே புனரமைக்கப்பட்டன.

ஈரப்பொத்தானை கமக்காரர் அமைப்பு வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச செயலாளர் பிரிவின்கீழேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்புனரமைப்பு வேலையை இராணுவத்தினர் மேற்கொள்வதை அறிந்த என்றெப் பணிப்பாளர் முதலாம்கட்ட நிதி (ரூ.8லட்சம்) வழங்கலுடன் நிறுத்திவிட்டார்.

இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட விடயத்தை வவுனியா மாவட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுகூட்டத்தில் கைத்தொழில் அமைச்சர் வினா எழுப்பினார். இதனைத்தொடர்ந்து அரசாங்க அதிபர்,மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திற்கும் என்றெப்பிற்கும் இவ்வேலையின் முன்னேற்ற மதிப்பீட்டினை மேற்கொண்டுவருமாறு பணிக்க அதன்படி நீர்ப்பாசனத் திணைக்கள எந்திரி ஒருவரும் என்றெப்பின் உதவிப் பணிப்பாளர் ஒருவரும் இராணுவ கேணல் ஜெயசேகர என்பவரால் நவம்பர் 2010இல் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களது மதிப்பீட்டின்படி ஈரப்பொத்தானை கமக்காரர் அமைப்பு இவ்வேலையை முன்னெடுக்காமல் இராணுவத்தினரே அணைக்கட்டு திருத்தம் மற்றும் குளத்திருத்தம் போன்றவற்றை மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவந்ததினால் ரூ.எட்டுஇலட்சம் மட்டும் எரிபொருள் செலவுக்காக அக்கமக்கார அமைப்பிடம் பின்னர் செலுத்தப்பட்டது.

கொக்கச்சான்குளம் அபிவிருத்தி தொடர்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினால் மார்ச் 2010 காலப்பகுதியில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதனடிப்படையிலேயே ரூ4.5 மில்லியன் இக்கிராமத்திற்கென என்றெப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இக்கிராமத்தில் சிங்கள மக்களை பூரணமாகக் குடியேற்றும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டு கொக்கச்சான்குளம் கலாபோவசேவ (இதன் தமிழ் மொழிபெயர்ப்பு: காட்டரசன்குளம்) என தனிச்சிங்களப் பெயராக மாற்றப்பட்டதுடன் இக்குளத்தின் கீழ்வரும் சுமார் 200ஏக்கர் வயல் நிலங்களிலும் மற்றும் குடியிருப்புக் காணியிலும் 165 சிங்களக் குடும்பங்கள் இராணுவத்தினரால் குடியமர்த்தப்பட்டுள்ளனர் .

மேலும் பிராந்திய உள்ளூராட்சி உதவியாணையாளர் (வவுனியா) அவர்களினால் இக்கிராமத்தினைச் சென்றடைய மகாகச்சக்கொடி தொடக்கம் கொக்கச்சான்குளம் வரையான 22கி.மீ நீளமான வீதியொன்றை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டு பண்டார என்னும் ஒப்பந்தகாரரிடம் மகாகொச்சக்கொடி-கலாபோவசேவ வீதி என்கின்ற பெயரில் வேலை ஒப்படைக்கப்பட்டது.

ஏப்ரல் 2011இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கிரவல்வீதி அமைக்கும் திட்டத்திற்கென ரூபா இருபது (20) மில்லியன் வழங்கப்பட்டது. 30அடி அகல காடு இதற்கென துப்புரவு செய்யப்பட்டு, அதல் 24 அடி வீதியமைக்கப்பட்டு, 12 அடி கிரவல் இடப்பட்டும் கல்வெட்டு மற்றும் ஹோஸ்வே என்பன நிர்மாணிக்கப்பட்டு, இவ்வேலை நடைபெறுகின்றது.

இவ்வீதியில் மகாகச்சக்கொடி கிராமத்திற்கும் கொக்கச்சான்குளம் கிராமத்திற்கும் இடையில் ஈரப்பொத்தானை ((Eropothana) குளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.திட்டமிட்ட இத்தனிச்சிங்கள குடியேற்றத்தினை அரசாங்கம் வவுனியா மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியாமலேயே சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கு வவுனியா தெற்கு (சிங்கள பிரிவு) பிரதேச செயலாளரால் தற்காலிக காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொக்கச்சான்குளம் மாகாண நடுத்தர குளம் என்னும் பதிவு வவுனியா கச்சேரியால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் புள்ளிவிபரயியல் கையேட்டில் காலகாலமாக இடம்பெற்று வந்துள்ளது. இறுதியாக 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரக் கையேட்டில் பக்கம் 56இல் மாகாணத்தின் கீழ்வரும் வவுனியா மாவட்ட நடுத்தர குளம் பட்டியலில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தொடரிலக்கம் 18இல் கொக்கச்சான்குளம் ((Kokkochchankulam) என்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இக்குளம் 1983,லேயே கைவிடப்பட்டது என்கின்ற பொய்யான தகவலின் அடிப்படையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வவுனியா கச்சேரிக்கு வழங்கப்பட்ட புள்ளிவிபரத் தரவில் பெயர் நீக்கப்பட்டுள்ளதோடு 2011ஆம் ஆண்டிற்குரிய மேற்படி தரவிலும் கொக்கச்சான்குளத்தின் பெயர் இடம்பெறவில்லை.

இப்பிழையான தரவின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரக்கையேடும் கச்சேரியால் வெளியிடப்பட்டுவிட்டது.

ஆனால் கைவிடப்பட்ட குளம் (Abandoned Tank)) என்ற அடிப்படையில் வடமாகாண நீர்ப்பாசணத் திணைக்களம் இக்குளத்தின் அடையாளத்தையே வரைபடத்திலிருந்தும் தனது தரவிலிருந்தும் நீக்கிவிட்டிருந்தாலும் 2010ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அரச அதிபர் மற்றும் வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச செயலாளர் ஆகியோரால் கையொப்பமிட்டு என்றெப் நிறுவனத்திடம் நிதிபெறப்பட்டு ஈரப்பொத்தானை கமக்காரர் அமைப்பினரிடம் பொறுப்பளிக்கப்பட்டு பின்னர் இராணுவத்தினரால் கையேற்கப்பட்ட புனரமைப்புப் பணி எக்குளத்திற்கு மேற்கொள்ளப்பட்டது?

இத்திருத்தவேலை கொக்கச்சான்குளத்திற்கே மேற்கொள்ளப்பட்டு அதற்கு கலாபோவசேவ என்னும் சிங்களப் பெயரும் சூட்டப்பட்டு 165 சிங்கள குடும்பங்களும் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள வடமாகாணத்தின் பெரும்பாலான காணிகளின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களில் பலருக்கு இன்னமும் தற்காலிக காணி அனுமதிப்பத்திரமோ அல்லது அவரவர் சொந்தக்காணிகளில் குடியேறவோ இதுவரை அரசால், அதன் நிர்வாகக் கட்டமைப்பால் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை பலரும் அறிந்த உண்மையே. இதனைவிட பாரம்பரிய பூர்வீக தமிழர் வாழ் நிலப்பரப்புக்கள் பல ஆயிரம் ஏக்கர்வரை செட்டிகுளம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு, அம்பலவன்பொக்கனை, கேப்பாபுலவு, திருமுறிகண்டி, மன்னார் முள்ளிக்குளம், மடு போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினரால் அத்துமீறி கையகப்படுத்தப்பட்டு இராணுவ கேந்திர தளம் அமைப்பதற்கும் அவர்கள் குடும்பங்களை நிரந்தரமாகத் தங்கவைப்பதற்கும் அரசாங்க அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உதாரணமாக செட்டிகுளம் நலன்புரி நிலயத்தின் நான்கு வலயங்களை உள்ளடக்கிய சுமார் 1500 ஏக்கர் காணியை வழங்குமாறு இராணுவம் அதிகாரிகளைக் கட்டாயப்படுத்துகின்றது.>இத்தகைய சோக நிகழ்ச்சிநிரலில் சமீபத்திய புதிய உட்சேர்க்கையாக எல்லைப்புற கிராமங்களுள் ஒன்றான கொக்கச்சான்குளமும் கலாபோவசேவ| எனப் பெயர்மாற்றம் பெற்று புதிய சிங்களக் குடியேற்றமாக உருப்பெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகச் சட்டதிட்டங்களுக்கு மாறாக அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகள் செயற்பட வைப்பது யார்? குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளை செய்வது யார்?

இனநல்லிணக்கம் பேணப்படுவதாகவும் இந்நாட்டில் எல்லோரும் சமவுரிமைப் பெற்ற பிரஜைகளே என்று உரத்த குரலில் தெரிவித்துக்கொண்டு தமிழ் மக்களின் கிராமங்கள் எல்லை மாற்றப்படுவதோடு நிலங்கள் அபகரிக்கப்பட்டுவரும் இத்திட்டமிட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இனநல்லிணக்கத்தைக் கொண்டுவரும்? இலங்கை வரலாற்றிலேயே கைவிடப்பட்ட குளம் என அரச நிர்வாகக் கட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கொக்கச்சான்குளம் பின்னர் அதே அரச நிர்வாகக் கட்டமைப்பால் கலாபோவசேவ என்று பெயர்மாற்றம் பெற்று புதிய வடிவம் பெற்றுள்ள இந்த வேடிக்கையான நிகழ்வு வேறெப்பொழுது நிகழ்ந்துள்ளது?

தேவையேற்படின் எமது கிராமங்களை சிங்கள நிர்வாகப் பிரிவின்கீழ் இணைப்பதற்கு முன்நிற்கும் அரசு எமது மக்கள் சொல்லொனாத் துயரங்களுடன் இடம்பெயர்ந்து மீள்குடியேறி நிம்மதியாக வாழ எவ்வகையிலும் கூடிய சிரத்தை காட்டவில்லை.

கனகராயன்குளம் பகுதியில் நான்கு தனிநபர்களுக்கு உரித்தான உறுதிக்காணிகளை அபகரித்துக்கொண்டு அதில் புத்தவிகாரை கட்டும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனைப் போன்றே வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் புத்தர்சிலை வைப்பதற்கு இடம் கேட்கப்பட்டுள்ளது.இவை எந்தவிதத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்?

ஒரு மதத்தினை வழிபடுவதும் அதனைப் பின்பற்றுவதும் மக்களின் விருப்பத்தைப் பொறுத்த விடயம். ஆனால் இங்கு பௌத்தம் வலிந்து தமிழ் மக்களின் மீது திணிக்கப்படுகின்றது. உங்களுடைய அரசியல் இருப்பின் அடையாளமாக பௌத்தமதம் விளங்குகின்றது. ஆனால் நாங்கள் எங்களது கொள்கைகளையும் உரிமைகளையும் வைத்தே எமது அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றோம்.

வன்னிப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது தேவைகளுக்குக்கூட மணல் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் செல்வாக்கு படைத்தவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மணல்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைப்போன்றே வன்னியில் உள்ள மக்கள் தங்களது வீட்டுக்கட்டுமானத்திற்குக் கூட மரம் வெட்டமுடியாத நிலையில் தென்பகுதியில் இருந்து வருகின்ற தரமற்ற தென்னை மரங்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதனால் பாரம் தாங்காமல் அவை வளைந்துவிடுகின்றன. ஆனால் வன்னியில் உள்ள பாலை, முதிரை போன்ற மரங்கள் செல்வாக்குள்ளவர்களால் தென்பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்கள் அனைத்தும் சில உதாரணங்கள் மட்டுமே. நல்லிணக்கம் குறித்து மேடைகளில் முழங்கப்படுகின்றது. ஆனால் யுத்தத்திற்குப் பின்னரே முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. எமது பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது பாரம்பரியப் பிரதேசத்தின் பெயர்கள் சிங்களமொழியில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கே தெரியாமல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.

எமது பிரதேச வளங்களை அனுபவிக்கும் உரிமை எமது மக்களுக்கு மறுக்கப்பட்டு தென்பகுதிக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. எந்தவிதத்திலும் எமது மக்களுடன் தொடர்பற்ற மதத்தினைத் திணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தென்பகுதிக்கு வருகின்ற தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் கைகோர்த்து சமமாக நடப்பதாகக் கூறப்படுகின்றது. இது உண்மை. ஆனால் கைகோர்த்து நடக்கவிரும்புகின்ற எம்மை விலக்கிவைத்து கைகோர்த்து நடக்க வாருங்கள் என்று அழைப்பது என்ன நியாயம்? எங்களைப் புறக்கணித்துவிட்டு நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள் இலங்கையர்கள் என்று சொல்வது என்ன நியாயம்? நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நல்லிணக்கச் செயற்பாடுகள் முக்கியமாகும். அதனைச் செய்துவிட்டு நல்லிணக்கம் பற்றிப் பேசுங்கள்.

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் நாங்கள் கோரியிருந்த தடுப்பிலுள்ளோரின் விவரத்தைக் கூடத் தரமுடியாத நிலையில் எந்தவிதத்தில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பப்போகிறீர்கள்?

இன்று பல்கலைக்கழகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட காணிகளை சிலர் சுவீகரிக்க முற்படுவது மிகுந்த வேதனையைத் தருகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்காக சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக பம்பைமடுவில் காணி ஒதுக்கப்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இப்பொழுதுதான் அங்கு கட்டடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. பல்கலைக்கழகச் செயற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாடகைக் கட்டடங்களில் நடைபெற்று வருகின்றன.

இவைகளை ஒரே இடத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும்படி நான் இதற்கு முன்பும் இந்த பாராளுமன்றத்தில் கோரியிருந்தேன். அவை நடைபெறாமையால் இன்று அந்தக்காணி பலரது கவனத்தையும் தன்னகத்தே ஈர்த்துள்ளது.

நேற்று முன்தினம் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் பம்பைமடுவிற்குச் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிட்டனர். அப்பொழுது பல்கலைக்கழகக் காணியில் சில மரத்தடிகள் போடப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தக்காணி பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டது என்ற பலகையை நன்கு தெரியும்படி நாட்டிவிட்டு வந்துள்ளனர்.அதன்பின்னர் அவர்கள் மறுபடியும் சென்றபொழுது அந்தக் காணியில் சாளம்பைக்குளம் சனசமூக நிலையத் தலைவர் முனாப் என்பவர் அந்த இடத்தில் நின்றுகொண்டு இது எனக்குரிய காணி. இதனை நான் ஒருபோதும் விடமாட்டேன் என்று பல்கலைக்கழக உத்தியோகத்தர்களிடம் உரக்கக்கூறியுள்ளார். உடனடியாக அவ்வுத்தியோகத்தர்கள் காவல்துறையினரிடமும் அரசாங்க அதிபரிடமும் முறையிட்டதுடன் என்னிடமும் முறைப்பாடு செய்தனர்.

அரச காணிகள் தனியார் காணிகள் என்பவற்றை ஒருபுறம் பாதுகாப்புத் தரப்பினர் தங்களது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழகக் காணியினையும் ஒரு தனியார் அபகரிக்கத் துடிக்கின்றார். இவரது பின்னணியைப் பற்றியும் இவரது நோக்கம் பற்றியும் நாம் ஆராயவேண்டியுள்ளது. எதுஎப்படியிருப்பினும் ஒரு தனிநபர் பல்கலைக்கழகக் காணியினை அடாத்தாகப் பிடிக்க முயல்வது தடுக்கப்பட வேண்டும்.

வன்னிக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று நான் பலமுறை இந்த மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். எனினும் இதுவரை எமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இருக்கும் காணியும் பறிபோகும் நிலையில் உள்ளது. எனவே உயர் கல்வி அமைச்சர் அவர்கள் இந்தவிடயத்தில் விரைந்து செயற்பட்டு அத்துமீறியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வவுனியா வளாகக்கட்டடத்தை உடனடியாகக் கட்டிமுடித்து பல்கலைக்கழகச் செயற்பாடுகள் அனைத்தும் அதன் சொந்தக் கட்டடத்தில் ஒரே இடத்தில் இடம்பெறுவதற்கு ஆவன செய்வதுடன் வன்னிப் பல்கலைக்கழகத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பம்பைமடு பகுதியில் வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி வளாகம் வரையிலும் உள்ள இடத்தை உள்ளடக்கி பம்பைமடு என பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் - என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது உரையில் தெரிவித்தார்.

http://www.tamilthai.com/?p=18814

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.