ஊர்ப்புதினம்

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு

3 days 2 hours ago

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு

01 Feb, 2026 | 09:36 AM

image

ஆர்.ராம்

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்றநிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலைங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்டடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிலில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/237510

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

3 days 2 hours ago

நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

Published By: Digital Desk 1

01 Feb, 2026 | 08:58 AM

image

(நமது நிருபர்)

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237504

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

3 days 2 hours ago

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

Jan 31, 2026 - 10:29 PM

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!

1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் "நீதிக்கான சாட்சி" என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. 

இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31வது ஆண்டை நினைவுகூரும் முகமாக இந்த நூதன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதன்போது, அவர்களது சிறைவாச ஆண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சி சித்தரிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை மெழுகுவர்த்தி போல தேய்வடைந்து செய்கின்றது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. 

இதில் அரசியல் கைதிகளின் உறவுகள் வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், சட்டத்தரணிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cml2k445m04ooo29ng9ox5cpd

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு மகத்தான வரவேற்பு!

3 days 16 hours ago

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு மகத்தான வரவேற்பு!

31 Jan, 2026 | 03:32 PM

image

இலங்கை கனடா வணிக கவுன்சில் மற்றும்  இலங்கை கனடா வணிக சபை இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகரை வரவேற்கும் நிகழ்வு  கடந்த வியாழக்கிழமை ( 29 )  கொழும்பில் மேரியட் ஹோட்டல் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்  இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றத்தின்  உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். 

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

7Q8A7165.jpg

7Q8A7114.jpg

 7Q8A7145.jpg

7Q8A6958.jpg

https://www.virakesari.lk/article/237482

📜  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்

3 days 20 hours ago

📜  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்:

adminJanuary 31, 2026

gazette.jpg?fit=650%2C433&ssl=1

இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Security Ordinance) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு (LP Gas) விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் (Nursing homes/Dispensaries) மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பான அனைத்து சேவைகள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள், புகையிரத போக்குவரத்து மற்றும் வீதிப் போக்குவரத்து சேவைகள்மற்றும் துறைமுகச் சேவைகள் மற்றும் உணவு விநியோகம் தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன.

இந்தச் சேவைகளை அத்தியாவசியமாக்குவதன் மூலம், இந்தத் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிப்புறக்கணிப்பு (Strike) செய்வதற்கோ அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்துவதற்கோ சட்டப்படி முடியாது. மீறினால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்குத் தடையில்லாச் சேவையை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும். தேவைப்படின், ஒவ்வொரு மாதமும் புதிய வர்த்தமானி மூலம் இது நீடிக்கப்படலாம்.

அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்கு சமூகமளிக்கத் தவறினால் அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்தினால், அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படவும், பிணையின்றி விளக்கமறியலில் வைக்கப்படவும் சட்டத்தில் இடமுண்டு. அத்துடன் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தங்களது ஜனநாயக ரீதியான போராட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பள உயர்வு அல்லது சீர்திருத்தங்கள் கோரி போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வந்த நிலையிலேயே, அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யச் சில தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.

https://globaltamilnews.net/2026/228028/

🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

3 days 20 hours ago

🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:

adminJanuary 31, 2026

earthquack-in-trinco.jpg?fit=1024%2C1024

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு கடலில் ஏற்பட்ட போதிலும், கடற்கரையோர நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் சிலருக்குச் சிறியளவிலான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், இது மிகச் சிறிய அளவிலானது என்பதால் சுனாமி (Tsunami) ஆபத்து எதுவும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடந்த சில காலங்களாக இதுபோன்ற சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2026/228035/

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

3 days 20 hours ago

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

adminJanuary 31, 2026

IMG-20260131-WA0065.jpg?fit=1170%2C658&s

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின்  திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20260131-WA0025.jpg?resize=800%2C450IMG-20260131-WA0026.jpg?resize=800%2C450IMG-20260131-WA0028.jpg?resize=800%2C450IMG-20260131-WA0029.jpg?resize=800%2C450IMG-20260131-WA0031.jpg?resize=800%2C450IMG-20260131-WA0032.jpg?resize=800%2C450IMG-20260131-WA0034.jpg?resize=800%2C450IMG-20260131-WA0036.jpg?resize=800%2C450IMG-20260131-WA0039.jpg?resize=800%2C450IMG-20260131-WA0040.jpg?resize=800%2C450IMG-20260131-WA0041.jpg?resize=800%2C450IMG-20260131-WA0042.jpg?resize=800%2C450IMG-20260131-WA0046.jpg?resize=800%2C450IMG-20260131-WA0047.jpg?resize=800%2C450IMG-20260131-WA0052.jpg?resize=800%2C450IMG-20260131-WA0053.jpg?resize=800%2C450IMG-20260131-WA0054.jpg?resize=800%2C450IMG-20260131-WA0060.jpg?resize=800%2C450IMG-20260131-WA0062.jpg?resize=800%2C450IMG-20260131-WA0065-1.jpg?resize=800%2C4IMG-20260131-WA0067.jpg?resize=800%2C450IMG-20260131-WA0070.jpg?resize=800%2C450

https://globaltamilnews.net/2026/228035/

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

3 days 23 hours ago

New-Project-8-1.jpg?resize=750%2C375&ssl

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

குற்றங்களைத் தீர்ப்பதில் காவல்துறை குற்றப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள கைரேகை அதிகாரிகள், குற்றப் பகுப்பாய்வு அதிகாரிகள் மற்றும் தடயவியல் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொழும்பில் இன்று (30) காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர்,

2026 ஆம் ஆண்டில் 2,500 பொலிஸ் அதிகாரிகள் ஓய்வு பெற உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 2,700 அதிகாரிகள் ஓய்வு பெறவும் உள்ளனர்.

எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கை காவல்துறையில் 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

https://athavannews.com/2026/1462356

கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம்

4 days 1 hour ago

கொழும்புத் துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம்

Published By: Vishnu

31 Jan, 2026 | 02:43 AM

image

இலங்கையும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவை துறைகளை மேம்படுத்துவது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரக தூதுவர் கலீத் நாசர் அல்அமேரிக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (29) அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது, சிவில் விமான சேவைத் துறையின் தலைவர்களுக்கான சர்வதேச நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 03 முதல் 06 வரை துபாயில் நடைபெறவுள்ளதுடன் அந்நிகழ்வில் பங்கேற்குமாறும், பெப்ரவரி 03 துபாயில் உலக அரச உச்சி மாநாடு மையத்தில் நடைபெறவுள்ள உலகளாவிய சேவை வழங்கல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலிலும் பங்கேற்குமாறு அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு தூதுவர் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்.

மேலும், கொழும்புத் துறைமுக அபிவிருத்திக்காக அபு தாபி துறைமுக நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யத் தயார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் காணப்படும் திறமையான விமான பொறியியல் மனித வளமும், குறைந்த செயற்பாட்டு செலவுகளும் விமான சேவை துறையை மேம்படுத்துவதற்கு சாதகமாக அமையும் எனவும், இலங்கையில் பிராந்திய விமான பராமரிப்பு மையம் ஒன்றை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விமான சேவை மற்றும் துறைமுக சேவை வழங்கல் துறைகளில் நடைமுறை மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை உருவாக்குவதற்கு தொடர்ந்து நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/237440

பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்

4 days 15 hours ago

பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்

Published By: Vishnu

30 Jan, 2026 | 07:51 PM

image

பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (30) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஷா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள்.

தங்களினுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப் படுத்துவதற்கா அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிராஜா சக்தி அமைப்பு.

இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும்.

கிராமங்களில் அவர்கள் பிராஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கை யாக நிற்பவர்களைத்தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை.

இங்கு ஜனாதிபதி வருகின்றபோது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிராஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்துவர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களினுடைய பணிகளை வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் மேற்கொள்வதற்கே இந்த அமைப்பு செயற்படுகிறது என்று சொல்லிவிடலாம். அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் npp உடைய தலைமை கட்சியான jvpயிடம் இருப்பதனால் அது அவர்களுக்கு இந்த இடத்தில் அதிகம் துணை புரிவது காணப்படுகிறது.

தமிழ் தேசிய சக்திகள் இதன்னுடைய அபாயத்தை சரியாக விளங்கிகொள்ள வேண்டும். தமிழ் தேசிய சக்திகளை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர தேச நிர்மான அரசியலில் கவனம் செலுத்தவில்லை.

எமது மக்களில் உதவிகளையும் தேவைகளையும் எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அகவே அந்த நலன்களை பேணவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய சக்திகளுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய சக்திகள் அதில் கவனம் செலுத்தமையால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற ஒரு நிலமையை நாங்கள் பார்க்கின்றோம். அகவே இது ஒரு அபாயமான விடயம். ஏனெனில் அடிமட்டத்தில் தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துகின்றது. உண்மையில் கிராமகளில் அடிமட்டமாக இருக்கின்ற அந்த அடிமட்ட மக்களை பலவீனப்படுத்துகின்ற ஒரு அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்க முனைக்கிறது. இது தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழுக செய்கின்ற ஒரு நிலமை.

இந்த விடயம் தொடர்பில் வலுவான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.

எதிர்ப்பு அரசியலில் மட்டும் கவனம் செலுத்தமல் தேச நிர்மான அரசியலிலும் கவனம் செலுத்துகின்றபோது இந்த விடயங்களை வெற்றிகொள்ளk கூடிய நிலமை உருவாகும். இது தொடர்பான பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அல்ல. தமிழ் தேசிய சக்திகள் அனைவருக்கும் இருக்கின்றது என நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/237433

இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: பேரனர்த்த மீட்சித் திட்டத்தில் புதிய முன்னெடுப்பு

4 days 16 hours ago

இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: பேரனர்த்த மீட்சித் திட்டத்தில் புதிய முன்னெடுப்பு

30 Jan, 2026 | 12:19 PM

image

டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து சுகாதார வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பிற அரச நிறுவனங்களைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மொன்டானா தேசிய காவல் படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவொன்றை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாரம் வரவேற்றது.

பேரனர்த்தத்திற்குப் பின்னரான மீட்சியினை நீண்டகால மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறனுடன் இணைத்து, மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்காவின் பங்காண்மை அடிப்படையிலான அணுகலை இவ்விஜயம் பிதிபலிக்கிறது. அமெரிக்காவில் இயற்கை பேரனர்த்தங்களுக்கு பதிலளிப்பதில் தமக்கிருக்கும் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, மீட்புத் திட்டமிடலுக்கு உதவி செய்வதற்காகவும் எதிர்கால அமெரிக்க மனிதாபிமான உதவி முடிவுகளைத் தெரிவிப்பதற்காகவும் கொழும்பு, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மொன்டானா தேசிய காவல் படை கள விஜயங்களை மேற்கொண்டது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரியும், சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலருமான லெஃப்டினன் கேணல் மெத்திவ் ஹவ்ஸ், “பங்காண்மைகள் மிக முக்கியமானதாக அமையும் களத்தில் அமெரிக்க-இலங்கை பங்காண்மை எவ்வாறுள்ளதென்பதை இவ்விஜயம் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார். “இலங்கை எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், தமது நாட்டில் இடம்பெற்ற மெய்யான பேரனர்த்தங்களின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களைக் கொண்ட மொன்டானா தேசிய காவல்படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைப் பயன்படுத்துவதன் மூலமும், நாங்கள் தற்போதய மீட்சிக்கு உதவி செய்வதுடன், எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் ஒத்துழைப்பினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், மொன்டானா தேசிய காவல் படைக்கும், இலங்கை பாதுகாப்பமைச்சிற்கும் இடையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்படுகிறது. மொன்டானாவில், காட்டுத்தீ மற்றும் வெள்ளம் முதல் கடுமையான குளிர்கால புயல்கள் வரை இயற்கைப் பேரனர்த்தங்களின் போது மாநிலத்தின் முதன்மை பதிலளிப்பாளராக தேசிய காவல்படை செயற்படுவதனால் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களுடனான அதன் பங்காண்மையானது வலுவான மற்றும் நடைமுறையில் பொருத்தமான ஒன்றாக அமைகிறது.

“சமூகங்களுக்கு மிகவும் அவசியமாக உதவி தேவைப்படும்போது பொதுமக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, எமது மாநிலத்தில் ஏற்படும் இயற்கையனர்த்தங்களுக்குப் பதிலளிப்பதில் மொன்டானா தேசிய காவல் படை ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது.” என மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்ட் கிப்சன் தெரிவித்தார். “இலங்கையுடனான இப்பங்காண்மையினை நாங்கள் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை அவ்வனுபவம் வடிவமைக்கிறது. நாங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய பண்புகளில் வேரூன்றிய உறவுகளையும் கட்டியெழுப்புகிறோம். பங்காளர்களாக மட்டுமன்றி, நண்பர்களாகவும் இலங்கையுடன் இணைந்து நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். அதுவே மொன்டானா பாணியாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செயற்பணியானது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நீடித்த உறவுகளை பேணி வளர்ப்பதற்காகவும் மொன்டானா தேசிய காவல் படையினை இலங்கையுடன் இணைக்கும் State Partnership Program (SPP) நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இடம்பெறும் பல வருட கால ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். மனிதாபிமான உதவி மற்றும் பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றினை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் ஒன்றிணைந்து அருகருகே பணியாற்றியதை ATLAS ANGEL 2024 மற்றும் PACIFIC ANGEL 2025 போன்ற சமீபத்திய ஈடுபாடுகள் வெளிப்படுத்தின. டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து பதிலளிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு இந்த உறவுகள் முக்கியமானவை என்பதை அவை நிரூபித்தன.

இவ்வொத்துழைப்பினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.

“நிஜ உலக பேரனர்த்தங்களின்போது மேற்கொள்ளப்பட்ட பதிலளிப்பு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க அனுபவங்களை இப்பங்காண்மை எடுத்து வருகிறது” என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட கூறினார். “மொன்டானா தேசிய காவல்படை வழங்கிய அறிவு நுட்பமான கருத்துக்களும் தொழிநுட்ப நிபுணத்துவமும் எமது மீட்பு முயற்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன், எதிர்கால அவசரநிலைகளை முகாமை செய்வதற்கான எமது தேசிய திறனையும் அவை பலப்படுத்தின. இவ்வொத்துழைப்பானது ஒரு முறையான மதிப்பீட்டை விட அதிகமானதாகும்; இது எமது நாடுகளுக்கிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மைக்கான ஒரு சான்றாகும்.” என அவர் மேலும் கூறினார்.

4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்க மனிதாபிமான உதவிகள், பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு மற்றும் அவசர விமானப் போக்குவரத்துத் திறன் ஆகியவற்றை பலப்படுத்துவதற்காக U.S. Excess Defense Articles நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து Bell 206 (TH-57) ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப் படைக்கு வழங்கியமை, முக்கியமான உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் மேற்கொண்ட நிவாரண வான் போக்குவரத்து உதவி உள்ளிட்ட டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து வழங்கப்படும் விரிவான அமெரிக்க உதவிகளின் தொடராக மொன்டானா தேசிய காவல்படையின் இவ்விஜயம் அமைகிறது. இம்முயற்சிகள் அனைத்தும் பங்காண்மை மற்றும் பகிரப்பட்ட திறன்கள் ஊடாக இலங்கையின் மீட்சிக்கும் நீண்டகால மீண்டெழும் தன்மைக்கும் உதவி செய்வதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

மொன்டானா தேசிய காவல் படையினைப் பற்றி: மொன்டானா மாநிலத்தின் ஹெலனா நகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல் படையானது, தமது மாநிலம் மற்றும் தமது நாடு ஆகிய இரண்டிற்கும் சேவையாற்றும், சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைக் கொண்டதாகும். சமஷ்டி அரசின் செயற்பணிகளுக்கான தயார்நிலையைப் பேணும் அதேவேளை, மொன்டானா மாநிலத்தினுள் நிகழும் இயற்கையனர்த்தங்களுக்கான முதன்மை பதிலளிப்பாளராக, சமூகங்களை பாதுகாப்பதில் இக்காவற்படை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நிலைபேறான, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பினூடாக பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறன்களை பலப்படுத்துவதற்காக 2021ஆம் ஆண்டு முதல் மொன்டானா தேசிய காவல்படை இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

Image_-_03.jpg

Image_-_02.jpg

https://www.virakesari.lk/article/237398

சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

4 days 16 hours ago

இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

Jan 30, 2026 - 05:40 PM

இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுழிபுரத்தில் 30 வருடமாக நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அந்த காணியின் உரியவர்களான பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைத்து இருக்கின்றோம்.

சங்கனை கிழக்கு பகுதியிலும் ஒரு இராணுவ முகாம் அமைந்திருக்கின்றது. அது தனியாரின் காணி. அந்தக் காணியையும் பொதுமக்களிடம் கையளிக்குமாறு நாங்கள் இராணுவத்திடம் கோரி இருந்தோம். அவர்கள் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார்கள்.

மேலும் இன்றைய கூட்டம் சமூகமாக நடைபெற்றது. சென்ற கூட்டமானது நடைபெற்றபோது கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. மேலும் இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். நாங்கள் அவற்றை சாதகமாக பரிசீலிக்கின்றோம்.

இங்கே தீர்வு காணப்படக்கூடிய விடயங்களுக்கு இங்கே தீர்வை கண்டு, மேலதிகமாக ஏதாவது விடயங்கள் இருந்தால் அவற்றை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என தெரிவித்தார்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cml0udcrw04mho29n6c8je0tg

மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை

4 days 16 hours ago

மார்ச் மாதத்தில் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எச்சரிக்கை

29 Jan, 2026 | 04:50 PM

image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தால் திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி தொகையைக் கொண்டு பயன்பாட்டுக்கு தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே மார்ச் மாதத்தில் பெரும்பாலும் மின் துண்டிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை  (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியை பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் தற்போது தமது ஆட்சியில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மறைப்பதிலேயே அவதானம் செலுத்தி வருகிறது.

இலங்கை நிலக்கரி சங்கத்தால் நாட்டுக்கு தரக் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் பல்வேறு காரணிகளை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலில் ஆரம்பித்து ஆரம்பத்திலிருந்தே மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அதாவது மோசடியை இலக்காக வைத்து தான் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமுறி கோரலுக்கு 48 நாட்கள் கால அவகாசம் வழங்குவதே வழமையான நடைமுறையாகும். ஆனால் அதனை 21 நாட்களுக்கு குறைத்து தான் இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்டு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் வலுசக்தி அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். எனினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் நிலக்கரி தரமற்றது என்பது நிரூபனமாகியுள்ளது. தொடர்ச்சியாக இவ்வாறு தரக்குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் மார்ச்சில் நிச்சயம் மின்துண்டிப்பு ஏற்படும்.

தரத்தில் குறைந்த இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இந்த நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மார்ச்சில் மின் துண்டிப்பு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. இது மத்திய வங்கி மோசடியை விட பாரிய மோசடியாகும். கடந்த ஆட்சி காலங்களில் கொள்ளையர்கள் மோசடி செய்தனர். ஆனால் தற்போது அரசாங்கமே நேரடியாக மோசடிகளில் ஈடுபடுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/237352

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல

4 days 16 hours ago

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல

Jan 30, 2026 - 01:00 PM

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம். 

இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தௌிவுப்படுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். 

அதேநேரம் பொலிஸ் துறையில் 32000 பொலிஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. 

இந்த வருடத்தில் 2500 பேரும், அடுத்த வருடத்தில் 2700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். 

எனவே அவர்களை யாரும் தடுக்க முடியாது. 

இந்நிலையில் பொலிஸ் துறையில் புதிதாக 10000 பேரை சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cml0kd9ri04lto29nk5lo24vj

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர்

4 days 17 hours ago

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் - ஜனாதிபதியின் செயலாளர்

Published By: Vishnu

30 Jan, 2026 | 04:29 AM

image

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரச சேவையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணங்க, உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ள 250 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (29) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.12.jp

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, 106 அரச நிறுவனங்களில் உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்பட்டு, இதற்கு முன்னர் பயிற்சிகள் நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டமாக, மேலும் 250 அரச நிறுவனங்களில் உள்ளக விவகார பிரிவுகளை நிறுவ அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.07.jp

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் தரவரிசையில் இலங்கை உயர் இடத்தில் இருந்தாலும், 2024 ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதுடன், இது ஏனைய துறைகளில் தரவரிசையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.06.jp

கடந்த மக்கள் எழுச்சியின் முக்கிய கோசம் ஊழல் அரசியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்து, அதன் பாதகமான விளைவுகளை மக்கள் அனுபவித்து வரும் நேரத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதாகவும், மக்கள் எழுச்சி ஒரு முறையான செயல்முறையின் இறுதி விளைவாகும் என்றும் குறிப்பிட்டார்.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.05.jp

இங்கு  மேலும் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,

மக்களின் எழுச்சியை   அற்பமானதாக கருத முடியாது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகளும் மக்களின் எழுச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அரச ஊழியர்களாக, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளின் தரத்தை மேம்படுத்த ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காகத்தான் நாம் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவியுள்ளோம்.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.02.jp

அரச அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது அவர்களின் நேர்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரச துறையில் ஊழல் கலாசாரத்தை மாற்ற முடியும். அரச சேவைக்குள் நேர்மையான கலாசாரத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையாகவும், அரச அதிகாரிகளின் நேர்மையை பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் ஒரு தளமாகவும் உள்ளக விவகாரப் பிரிவுகளைக் கருதலாம்'' என்றும் தெரிவித்தார்.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.04.jp

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக  சிரேஷ்ட விரிவுரையாளர் தரிந்து தனஞ்சய வீரசிங்க ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.

WhatsApp_Image_2026-01-29_at_20.01.01.jp

WhatsApp_Image_2026-01-29_at_20.01.00.jp

https://www.virakesari.lk/article/237370

யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு!

4 days 18 hours ago

30 Jan, 2026 | 11:52 AM

image

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார்.

பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது.

அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாய் உயிரிழப்பு! | Virakesari.lk

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

4 days 18 hours ago

30 Jan, 2026 | 04:46 PM

image

யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்களான உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (30) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

பலாலி விமான நிலையம் ஊடாக அவர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.

VID-20260130-WA0041_1_.jpg

VID-20260130-WA0040_4_.jpg

VID-20260130-WA0040_3_.jpg

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்! | Virakesari.lk

இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

4 days 18 hours ago

30 Jan, 2026 | 05:03 PM

image

(செ.சுபதர்ஷனி)

வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

குறித்த குறுஞ்செய்தியில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை காரணமாக உங்களது கடனட்டை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் செயற்படுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பிற்குள்  நுழைந்து தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரப்படுகிறது.

அவ்வாறு விபரங்களை வழங்கத் தவறினால் அட்டை இ ரத்து செய்யப்படும் என அச்சுறுத்தப்படுகின்றது.  இந்த இணைப்பினூடாக விபரங்களை வழங்குவோரைத் தந்திரமாகத் தொடர்பு கொள்ளும் மோசடிக்காரர்கள், அவர்களிடமிருந்து ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் ‘OTP’ இலக்கத்தைப் பெற்று வங்கிக் கணக்கிலுள்ள பணத்தை மோசடி செய்கின்றனர்.

அத்தோடு வாட்ஸ்அப்  செயலி மூலம் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்தி, பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் தோன்றி தன்னை ஒரு  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என அடையாளப்படுத்தி, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவர் , குறித்த நபரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பல வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்று மில்லியன் கணக்கில் மோசடி செய்துள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பலர் சட்ட மற்றும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளனர்.

ஆகையால் பொதுமக்கள் விபரமறியாத போலி இணைய இணைப்புகளில் உள்நுழைய வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.  மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் எனத் தெரிவிக்கும் நபர்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்.

அவ்வாறு சந்தேகத்திற்குரிய அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், உடனடியாக உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 இணையவழி ஊடாகப் பணமோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! | Virakesari.lk

சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை.

4 days 18 hours ago

Screenshot-2026-01-30-171004.jpg?resize=

சுமார் 60 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணம் என தெரியவந்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://athavannews.com/2026/1462376

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!

4 days 23 hours ago

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!

Mano ShangarJanuary 30, 2026 1:15 pm 0

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!

இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன.

பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் 14,986 புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தரவுகளின்படி, 19,500 பெண்கள் மற்றும் 16,400 ஆண்கள் புற்றுநோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தரவுகளின்படி, ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் ஆகும். அதே நேரத்தில் மார்பக புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவானது.

அடுத்ததாக மிகவும் பொதுவானது தைராய்டு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் 30-50% புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியவை என்று மதிப்பிட்டுள்ளதாக வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் மரபியல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும்.

அதிகரித்த மரபணு மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு நீண்டகாலமாக வெளிப்படுதல் காரணமாக இலங்கையில் புற்றுநோய் விகிதம் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

https://oruvan.com/40-people-die-of-cancer-every-day-in-sri-lanka/

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr