ஊர்ப்புதினம்

மட்டக்களப்பில் சிக்கிய இராட்சத திருக்கை

1 day 10 hours ago
மட்டக்களப்பில் சிக்கிய இராட்சத திருக்கை

e43b0d6a-759f-4105-8051-01d70534ea83-1-960x539.jpg?189db0&189db0

 

மட்டக்களப்பு – பூநொச்சிமுனை மீனவர்களினால் 500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் ஒன்று நேற்று (27) மாலை பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையில் அப்பகுதி மீனவர்கள் இம்மீனைப் பிடித்துள்ளனர்.

குறித்த மீன் கரைக்கு பெருமளவு மீனவர்களால் இழுத்து வரப்பட்டு வெட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் குறித்த மீனின் பூ மாத்திரம் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

https://newuthayan.com/மட்டக்களப்பில்-சிக்கிய-இ/

இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

1 day 10 hours ago
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

 

 

 by : Dhackshala

images-1.jpg

நாட்டில் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களை ஆன்மீக இறை வழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள  வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தாக்கத்தினிடையே பொருளாதார வளர்ச்சியின்பால் மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக பல தரப்பட்ட சேவைகளும் பொருளாதாரத் துறைகளும் சுகாதாரப் பிரிவினரின் வழிகாட்டுதல் கடப்பாடுகளைக் கடைப்பிடித்த வண்ணம் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அதனடிப்படையில் அரச தனியார் துறைகளும் பொதுப்போக்குவரத்தும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இயங்கத் தொடங்கியுள்ளன.

நிறுவன ஸ்தாபன மட்டத்திலும் உல்லாச விருந்தினர் விடுதிகள், உணவகங்கள், அழகுக் கலை நிலையங்கள், மேலும் மதுபானக்கடைகள்கூட திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பொழுது திருமண நிகழ்வுகளும் ஆகக்கூடியது 100 விருந்தினர்களுடன் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவை யாவும் வரவேற்கத்தக்க முன்னெடுப்புக்களாக இருந்தாலும் வழிபாடுகளில் ஈடுபட முடியாதவாறு அனைத்து மத வழிபாட்டிடங்களும் அனுமதியளிக்கப்படாமல் தொடர்ச்சியாக மூடப்பட்டே இருப்பது துக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் சன்மார்க்கக் கடமைகள், மத நிகழ்வுகள், சமயச் சடங்குகள் என்பனவற்றை அனுஷ்டிக்க முடியாமல் நொந்து போக வேண்டியுள்ளது.

நான் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி அர்ப்பணிப்போடு நடந்துகொள்ளும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில், இந்த கண்ணுக்குத் தெரியாத நெருக்கடியான கொரோனா வைரஸ் தொற்று ஒரு சாபமாக சூழ்ந்துள்ள இந்தத் தருணத்தில் மார்க்கக் கடமைகளைச் செய்து, பாவமன்னிப்பின் மூலம் இறையருளைப் பெற்றுக்கொள்வதனூடாகவே இந்த நெருக்கடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பாக மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றேன்.

அதற்கு மத மதவழிபாட்டிடங்கள் இறை பிரார்த்தனைகளுக்காகத் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு இறை வழிபாட்டிடங்களில் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றபொழுது, மக்கள் தாங்கள் நீண்ட காலமாக முடங்கலுக்கு உள்ளாகியிருந்தமையால் ஏற்பட்ட உளத் தாக்கத்திற்கும் குணப்படுத்தலை ஏற்படுத்திக்கொள்ள முடியும்” என அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/இறை-வழிபாடுகளில்-ஈடுபட-அ/

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு

1 day 10 hours ago
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு

 

 

     by : Dhackshala

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ். மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரும் சில பணிப்புரைகளையும் அறிவுறுத்தல்களையும் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் யாழில் முக்கியமான சந்தைகள் அமைந்திருக்கின்ற பிரதேச சபையினர், உள்ளூராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அதனடிப்படையில் தங்களுடைய சந்தை தொகுதிகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை மீளத் திறப்பது குறித்து நடவடிக்கை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இது அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் அதாவது ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு இவற்றை அந்த இடங்களிலே திறந்து செயற்படுத்தக்கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் சுகாதார ஒழுங்கு விதிகளை வியாபாரிகளும் அங்கு செல்லும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்

சில விடயங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையினருக்கும் கூறியிருக்கின்றோம் அந்தந்த பிரதேச செயலர்களுடன் அந்த பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல் அல்லது அவர்களுடைய கண்காணிப்பின் கீழும் இந்த சந்தையினை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தைகள் யாவும் வழமை போன்று மக்களுக்கு சேவையாற்ற திறக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்கள் சுகாதார நடைமுறையிணையும் சமூக இடைவெளியினையும் பின்பற்றி சந்தையினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுகின்றேன்” என தெரிவித்தார்.

http://athavannews.com/யாழ்-மாவட்டத்திலுள்ள-அன/

கிளிநொச்சி விபத்தில் தாய் பலி; மகள் படுகாயம்!

1 day 11 hours ago
கிளிநொச்சி விபத்தில் தாய் பலி; மகள் படுகாயம்!

paranthan-accident.jpg?189db0&189db0

 

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (28) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64-வயது) என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://newuthayan.com/கிளிநொச்சி/

 

யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

1 day 12 hours ago
யாழ்.மாவட்டத்தில் விடுதிகள்,திருமண மண்டபங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை -மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார்.

நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் இரண்டு மாதங்களாக ஊரடங்குச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிவந்தது.

தற்போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய, தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இத்தகைய நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாவட்டங்களை போலவே எமது யாழ்ப்பாண மாவட்டத்திலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பொலிஸாரினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/82905

அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி!

1 day 16 hours ago
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7-720x450.jpg அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி!

அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

தனக்கு முன்னோடியாக இருந்த தனது பாட்டனாரும் சிரேஷ்ட தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் மகத்தான பணியை முன்னெடுத்துச் சென்ற ஆறுமுகம் தொண்டமான், மலையக தமிழ் சமூகத்தின் மனக்குறைகளை தீர்ப்பதற்காக தைரியமாக செயற்பட்டார்.

தமிழ் சமூகம் முகம்கொடுத்த பிரச்சினைகளை சரியாக அறிந்திருந்த தொண்டமான், அதற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். அக்காலகட்டத்தில் செயற்பட்டுவந்த சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பினால் விடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார்.

நலிவடைந்த தொழிலாளர்களாக கருதப்பட்ட பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது பாட்டனாரின் முயற்சியை அவர் தொடர்ந்தும் முன்னெடுத்தார். சௌமியமூர்த்தி தொண்டமானினால் ஆரம்பிக்கப்பட்டு, ஆறுமுகம் தொண்டமானினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இன்று தோட்ட சமூகத்தினர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்துள்ளனர்.

அரசியல் கட்சிகளுடன் செயற்படும் போது அவர் மூலோபாய இடைவினையாற்றுதல் பற்றிய ஒரு தீவிர அவதானியாகவும் மாணவராகவும் இருந்தார். அவரது முக்கிய அக்கறை தன்னை அவர்களது மறுக்கப்படமுடியாத தலைவராக ஏற்றிருந்த சமூகத்தின் உரிமைகளை வெல்வதாகும். ஆறுமுகம் தொண்டமானின் செயற்திறமான அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு சமூகத்திற்கு பெரும் இழப்பாகும்.

மக்கள்நேய அரசியல்வாதியான ஆறுமுகம் தொண்டமானின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஆத்மா அமைதியடையட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

http://athavannews.com/அழுத்தங்களுக்கு-மத்தியி/

கொரோனா குறித்து போலிப்பிரசாரங்கள் – விசாரணைகளுக்காக விசேட குழு

1 day 16 hours ago
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.jpg கொரோனா குறித்து போலிப்பிரசாரங்கள் – விசாரணைகளுக்காக விசேட குழு

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் வைத்தியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/கொரோனா-குறித்து-போலிப்பி/

வெடிச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்

1 day 20 hours ago
வெடிச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்

வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவு, ஆண்டியார் புளியங்குளத்தை அண்டிய புதுக்குளம் கிராமத்தில் இன்று (27) மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப் பகுதியில் வீதியோரமாக கிடந்த வெடிபொருளை 14 வயது சிறுவன் ஒருவன் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொருளை சுத்தியலினால் உடைத்துள்ளார். இதன்போது அது வெடித்ததில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://newuthayan.com/வெடிச்-சம்பவத்தில்-இரு/

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்

1 day 20 hours ago
நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்

01-14.jpg?189db0&189db0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது.

ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் தற்போது நன்னீர் மீன் பிடியானது கோட்டைக்கல்லாறு ஆறு, கல்லாறு ஆறு, மட்டக்களப்பு ஆறு, கொக்கட்டிச்சோலை ஆறு, வாழைச்சேனை ஆறு உட்பட்ட பல ஆறுகள் மற்றும் பல குளங்கள் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகின்றது.

இதில் கோல்டன் மீன், செப்பலி, கணையான், கொய் கொடுவா, கெண்டை விரால், சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வீச்சு வலை மற்றும் மீன் கூடுகள் மூலம் தற்போது மீன்கள் பிடிபடுவது குறைவாகவே காணப்படுகின்றது. பல மணிநேரங்கள் சென்ற பின்னரே மீன்கள் பிடிபடுவதுடன், அதுவும் குறைவாகவே பிடிபடுகின்றது. (150)

  • 01-14.jpg?189db0&189db0
  • 01-12.jpg?189db0&189db0
  • 01-3-6.jpg?189db0&189db0
  • 01-1-3.jpg?189db0&189db0
 

யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு

1 day 20 hours ago
மரக்காலைக்கு தீ வைப்பு

received_685935858617021.jpeg?189db0&189db0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (27) இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே மேற்படிச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் இனால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://newuthayan.com/மரக்காலைக்கு-தீ-வைபபு/

நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்

2 days 1 hour ago
DSC09609-720x450.jpg நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமனம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,  இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இது விடயம் தொடர்பில் தொடர்ந்து பேசிய செந்தில் தொண்டமான், “தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, தொழிற்சங்க நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா எம்மிடம் பல தடவைகள் கூறியிருந்தார்.

இதன்படி காங்கிரஸின் உயர்மட்டக்குழு இன்றுகூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆராய்ந்தது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்துக்கு ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா காலமான பின்னர் கட்சி தலைமைத்துவம் சுமார் ஒருவருடம் வரை வெற்றிடமாக இருந்தது. எனவே, தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சியின் தொண்டர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அது சம்பந்தமாக தேசிய சபை முடிவெடுக்கும்.

தலைவரின் மறைவையடுத்து இரங்கல் தெரிவிப்பதற்காக பிரதமர் எம்மை இன்று அழைத்திருந்தார். இதன்படி சென்றோம். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் ஜீவன் தொண்டமானை போட்டியிட எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தோம். சிறந்த முடிவு என பிரதமரும் கூறினார்.

ஐயா சௌமியமூர்த்தி தொண்டமான், தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கொள்கைக

ளை முன்னிறுத்தி காங்கிரஸ் மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்கும்” – என்றார்.

DSC09562.jpg

DSC09593.jpg

http://athavannews.com/நுவரெலியா-மாவட்ட-வேட்பாள/

அரிசி விலை உயர்வு

2 days 4 hours ago

அரிசிக்கான உச்சப்பட்ச சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (27) நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நாட்டரிசி 96 ரூபாய்க்கும் சம்பா கிலோ ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. 

எனினும், 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கீரி சம்பா விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரிசி-விலை-உயர்வு/175-250982

தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு

2 days 10 hours ago
தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு

 

image_0171498787.jpg

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு, தேன் எடுக்கச் சென்ற சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் (19 வயது) என்ற மாணவன், நேற்று (26) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி, கைலேஸ்வரன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்த இவர், குடும்ப கஷ்டநிலை காரணமாக, விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில், மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார்.

16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது, மரத்தின் கிளை இவர் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். றூமி சென்று பார்வையிட்டதுடன், சடலத்தை, சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு, பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சடலம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/தன-எடகக-கடடககச-சனற-மணவன-உயரழபப/75-250964

ராஜிதவின் விளக்கமறியல் நீட்டிப்பு

2 days 10 hours ago
ராஜிதவின் விளக்கமறியல் நீட்டிப்பு  

 

 

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வெள்ளைவான் தொடர்பான ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை பரிசீலிப்பதற்காக, வேறொரு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான், இன்று(27) உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஜதவன-வளககமறயல-நடடபப/175-250963

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

2 days 10 hours ago
பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

 

 

     by : Dhackshala

Supreme-Court-720x450.jpg

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று ஏழாவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில், குறித்த விசாரணைகள் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 7ஆவது நாள் விசாரணை இன்று

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (பதன்கிழமை) ஏழாவது நாளாகவும் உயர்நீதிமனறில் இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புனவேக அலுவிஹார, சிசிர டி ஆப்று, பியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய உயர்நிதிமன்ற ஆயம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றபோது, கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி இரவு முதல் நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் நாட்டு மக்களினதும் மனுதார்களினதும் எந்தவொரு அடிப்படை உரிமையையும் ஜனாதிபதி மீறவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் தெரிவித்தது.

எட்டாவது நாடாளுமன்றத்திற்கு நான்கரை வருடங்கள் பூர்த்தியடைந்ததன் பின்னர், அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திக்கா தேமுனி டி சில்வா தெரிவித்தார்.

கலைக்கப்பட்டதன் பின்னர் மழுமையாக செயலற்ற நிலையில் உள்ள நாடாளுமன்றத்தை, மீள் செயற்படுத்துவதை சிறப்பு காரணங்களின் அடிப்படையில் மாத்திரமே ஜனாதிபதியினால் ஆற்ற முடியும் என்றும் மேலதிக மன்றாடியார் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தேசிய பாதுப்புக்கு தாக்கம் செலுத்தும் அவசர நிலை மற்றும் தேசிய பேரிடர் நிலையின்போது குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான தகைமை ஜனாதிபதிக்கு உள்ளது. அவ்வாறில்லாவிட்டால், நாடாளுமன்றத்தை மீள கூட்டுமாறு ஜனாதிபதியிடம் எவரும் கோர முடியாது என உயர்நீதிமன்றில் மேலதிக மன்றாடியார் நாயகம் இந்திக்கா தேமுனி டி சில்வா தெரிவித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு மனுதாரர்கள் கோருவதில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் உயர்நீதிமன்றில் தெரிவித்தார்.

சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் விசாரணைகளை இன்று முற்பகல் 10 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பொதுத்-தேர்தல்-திகதியை-ச-2/

38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

2 days 10 hours ago
38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

 

 

 

   by : Dhackshala

Ministry-Foreign-Affairs.jpg

கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு அமைச்சரவைக்கு அறிவித்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொராேனா வைரஸ் தாெற்று காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்தி 983 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிக்கின்றனர்.

இவர்களில் 27ஆயிரத்தி 84 5பேர் அந்த நாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர். அத்துடன் 3 ஆயிரத்து 527 மாணவர்கள், குறுகிய கால விசா பெற்றுக்கொண்ட 4 ஆயிரத்து 40 பேர், சார்ப்புடையவர்கள் 3 ஆயிரத்து 527 பேர், இரட்டை பிரஜா உரிமை பெற்றவர்கள் 480 பேரும் இவர்களில் அடங்குகின்றனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியில் இருந்து கடந்த வாரம்வரைக்கும் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் 3 ஆயிரத்து 938 பேர் 15 நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் அதிகமானவர்கள் மாணவர்களும் பயிற்சிகளுக்கு சென்றிருந்த அரச அதிகாரிகள் மற்றும் அவர்களின் சார்புடையவர்களாகும்.

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 33 மாணவர்கள் மற்றும் இந்தியாவுக்கு யாத்திரைக்காக சென்றிருந்து அழைத்துவரப்பட்ட 839 பேரும் இதில் உள்வாங்கப்படவில்லை’ என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/38-ஆயிரத்துக்கும்-அதிகமான/

உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்.

2 days 14 hours ago

சாக்கடைகளே உங்கள் அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யாதீர்கள்..! துயிலும் இல்லத்திற்குள் சுவரொட்டிகள், கிழித்தெறிந்து மக்கள் ஆவேசம்..

Theravil1.jpg

முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் ஒட்டப்பட்ட தேர்தல் சுவரொட்டிகளை கிழித்தெறிந்த மக்கள், சாக்கடை அரசியலை மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செய்யவேண்டாம் என கூறியிருக்கின்றனர்.

Theravil2.jpg

நாடாளுமன்ற தேர்தலுக்கான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சரவணபவன் ஆகியோரின் சுவரொட்டிகள் துயிலும் இல்லத்திற்குள் உள்ள இளைப்பாறு மண்டபத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது.

குறித்த விடயத்தை அறிந்த மக்கள் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என கூறியபோதும் அகற்றாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அவற்றை கிழித்தெறிந்துள்ளதுடன், மாவீரர்களின் தியாகங்கள் தொியாத முட்டாள்களின் இந்த செயலுக்கு கண்டிப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அரசியல் சாக்கடைகளை மாவீரர் துயிலும் இல்லங்களில் செய்யாமல் அதற்கு வெளியே செய்யுங்கள். எனவும் மக்கள் கூறியிருக்கின்றனர்.

https://jaffnazone.com/news/18097

யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

2 days 15 hours ago
Jaffna-2-1-720x450.jpg யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் இன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் வந்திறங்கியபோது, நிலத்தில் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததிலையே பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

அதேவேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வயர்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வெடிபொருள் மிதிவெடியாக இருக்கலாம் எனவும்  சட்டவிரோத மண் அகழ்வோர் பொலிஸாரை இலக்கு வைத்து அதனை அவ்விடத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Jaffna-3-640x480.jpg

Jaffna-4-640x480.jpg

Jaffna-1-1-640x480.jpg

http://athavannews.com/யாழில்-வெடிப்புச்-சம்பவம/

நந்திக்கடலும் வட்டுவாகல் கிராமமும் நான்கு முனைகளிலும் அபகரிக்கப்படுகின்றன- ரவிகரன்

2 days 17 hours ago
நந்திக்கடலும் வட்டுவாகல் கிராமமும் நான்கு முனைகளிலும் அபகரிக்கப்படுகின்றன- ரவிகரன்

நந்திக்கடலும் வட்டுவாகல் கிராமமும் நான்குமுனைகளாலும் ஆக்கிரமிக்கப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துiராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மகாவலி எல்வலயத்தின் ஊடாக எவ்வாறு முல்லைத்தீவில் உள்ள காணிகளும் அதனுடன் சேர்ந்த நிலங்களும் அபகரிக்கப்படுகின்றனவோ அதேபோன்று ஒரு சத்தமும் இன்றி வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் பறிபோகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ravikaran-300x169.jpg
முள்ளிவாய்க்கால் கிழக்கு என சொல்லக்கூடிய இடத்தில் 496 குடும்பங்களும் வட்டுவாகல் கிராமத்தில் 271 கிராமங்களும் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
2009ற்கு முன்னர் முல்லைத்தீவில் ஒரு விகாரை கூட இருக்கவில்லை ஆனால் 2010 இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது ஒரு சிங்கள குடும்பமும் இல்லாத தமிழ் கிராமமான வட்டுவாகல் கிராமத்தில் தனியாக பெரிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது எனரவிகரன் தெரிவித்துள்ளார்.vatuvakal-300x166.jpg
தொல்லியல் திணைக்களம் அதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடனேயே இதனை செய்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை சுற்றி 100 ஏக்கர் காணிகள் அமைக்கப்பட்டு படைமுகாமொன்றை அமைத்துள்ளார்கள் கடற்படை தளமொன்றை 617 ஏக்கர் நிலத்தில் அமைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ள ரவிகரன் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியினை சேர்ந்த மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு பாரிய கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.nadhikadal-1-300x149.jpg
இராணுவம் வனஜீவராசிகள் திணைக்களம் கடற்படை தொல்லியல் திணைக்களம் ஆகியவனவற்றினால் வட்டுவாகல் கிராமம் முற்றாக விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/43655

சரத் பொன்சேகாவை மிருகத்தை போல் அடித்து இழுத்து சென்ற இராணுவம்

3 days 3 hours ago

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கைது செய்யப்படும்வேளை அவருடன் இருந்த மனோ கணேசன் அப்போது நடந்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளிப்படையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.

"இதுவரை மனோ" என்னும் நூலை எழுதிவரும் மனோ கணேசன், கடந்த காலத்தில் இடம்பெற்று, வெளிவராத பல சம்பவங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றார்.

அந்தவகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறுமாறு சந்திரிக்கா கூறிய விடயம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது, சர்பொன்சேகா கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

புலிகளின் தலைவர் பிரபாகரனை தோல்வியடைய செய்து, கொன்று, விடுதலை புலிகளை நிர்மூலமாக்கி, நேற்று முன்தினம் வரை முழு நாட்டு சிங்கள மக்களாலும் தேசிய வீரன் என தோளில் சுமக்கப்பட்டு, உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என ராஜபக்ச சகோதரர்களாலே புகழப்பட்ட, போர் தளபதியை, அவர் தலைமை தாங்கிய அதே இலங்கை இராணுவ வீரர்கள், மிருகத்தை போல அடித்து இழுத்து சென்றனர்...”

இவ்வாறு, வெளிவராத பல விடயங்களை அந்த பதிவின் மூலம் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் மனோகணேசன்.

https://www.ibctamil.com/srilanka/80/144060?ref=home-imp-parsely

Checked
Fri, 05/29/2020 - 19:39
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr