பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை
Published By: Digital Desk 3
12 Dec, 2025 | 02:05 PM

மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், பேரிடர்களை வென்று முன்னேறலாம் என இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேரிடர்களுக்கு பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரலாறு முழுவதும், பல்வேறு பேரிடர்களை எதிர் கொண்டு நாம் ஒரு வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளோம். கடந்த சில தசாப்தங்களாக நாம் சுனாமி, நீண்ட கால உள்நாட்டு யுத்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்ற பல இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்களை எதிர் கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மீண்டெழுந்து ஒருவருக் கொருவர் ஆதரவளித்து, நமது தேசத்தை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பினோம். ஒருவருக்கொருவர் உதவுதல், தேவைப்படுபவர்களுக்கு செவி சாய்ப்பதன் மூலமும், இன்றைய நெருக்கடியையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முனைவோம். பாதுகாப்பான வீடுகள் மற்றும் வீதிகளை மட்டுமல்ல, வலுவான, புரிந்துணர்வுடைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவோம்.
பேரிடர்களுக்கு பின்னர் நீங்கள் மன அழுத்தம், கவலை, கோபம், பயம், பதட் டம், குழப்பம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது. உங்கள் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் பேரிடர் தாக்கங்களை வென்று முன்னேறலாம்.
உதவும் விடயங்கள்
1. உங்கள் பலங்கள் மற்றும் சிறிய, நிர்வகிக்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள்:
சுத்தம் செய்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், உறவினர்களின் சுகம் விசாரித்தல், அண்டை வீட்டாருடன் இணைதல் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்தல் ஆகியவை கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கும். இப்படியான சிறிய படிகள் மீட்சிக்கு வழிவகுக்கும்.
2. மற்றவருடன் தொடர்பில் இருங்கள்
பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனியுங்கள்: மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் ஆதரிக்கும்போது, முழு தேசமும் வலு வடைகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், முதியவர்கள் (குறிப்பாக தனியாக வசிப்பவர்கள்), உதவி தேவைப்படக் கூடிய குறைபாடுகள் உள்ளவர்கள், கூடுதல் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமூக உதவி பயனாளிகள், நீண்டகால நோய் அல்லது மனநோய் நிலைமைகள் உள்ள அனைவரையும் கவனியுங்கள்
3. சிறுவர்களை ஆறுதல்படுத்துங்கள்
சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பது முக்கியம். இன்றைய சூழ்நிலையை அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் எளிமையான அனைவரின் வார்த்தைகளில் பாதுகாப்பையும் விளக்குங்கள். பெரியவர்கள் உறுதி செய்வதில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.
4. ஆன்மீக மற்றும் கலாச்சார நடைமுறைகள் நன்மை பயக்கும்
பிரார்த்தனைகள், தியானம், கலாச்சார சடங்குகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் என்பன மனதிற்கு பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கும்.
5. வழக்கமான மருந்துகளைத் தொடரவும்
நீங்கள் ஒரு நீண்ட காலநோய் ஒன்று க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், அதற்கான தினசரி மருந்துகளை தொடர் ந்து தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் அருகிலுள்ள வைத்தியர் அல்லது வைத்தியசாலையின் உதவியை நாடுங்கள்.
தவிர்க்க வேண்டியவை
1. துயரமளிக்கும் செய்திகளைப் பார்ப்பது
அதிகமாக துயரமளிக்கும் செய்தி களைப் பார்ப்பது அல்லது கேட்பது பயத்தை அதிகரிக்கும். அதிகாரபூர்வமான அரசு மற்றும் சரிபார்க்கப்பட்ட செய்தி ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள்
2. தகவல்களைப் பகிரும்போது பொறுப்பாக இருங்கள்:
வதந்திகளைத் தவிர்க்க வும்: சரிபார்க்கப்படாத தகவல்கள், தனிப்பட்ட தரவு, அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் துயரமளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் மற்றவருக்குப் பகிர்வதைத் தவிர்க்கவும்
3. மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும்
பிரச்சினைகளைச் சமாளிக்க மது மற்றும் போதைப்பொருட்களை நாடுவதைத் தவிர்க்கவும். அவை பின்னர் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தேவைப்பட்டால் விரைவாக அதற்கான தொழில்முறை உதவியை நாடுங்கள். நீங்கள் ஏற்கனவே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றிலிருந்து விடுபட இதுவே சிறந்த நேரமாக இருக்கலாம்.
4. பேரிடர் சூழ்நிலையைப் தனிப்பட்ட நலத்துக்காக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்:
எந்தவொரு பேரனர்த்தத்திலும், மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை மற்றும் துன்பகரமான உணர்ச்சிகளை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அத்தகைய நேரங்களில் உதவியை நாட தயங்காதீர்கள். ஒருவர் உதவியை நாடுவது என்பது பலவீனத்தின் அல்ல, மாறாக அவரிலுள்ள பலத்தின் அடையாளம். தேசிய மனநல உதவி எண் 1926 க்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்வதன் மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேர இலவச ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறலாம். அத்துடன் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலை மூலமாகவும் உங்களுக்கான மனநல சேவைகளைப் பெறலாம்.
இந்த கடினமான நேரத்தில், பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதில் இலங்கை உளவைத்தியர்கள் சங்கமாக, நாம் உறுதியாக இருக்கிறோம்.
“நாம் ஒன்றாக மீண்டெழுந்திடுவோம்!" வலிமையாகவும், உறுதியுடனும்
https://www.virakesari.lk/article/233174