புதிய பதிவுகள்2
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி! யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் தொடர்பான விவாதத்தின் போது, செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் குறைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும் ஒரு இயக்கம் எனக் குறிப்பிட்டார். கடந்த 25 ஆண்டுகளில் செய்யப்படாத பல பணிகள் தற்போதைய குறுகிய கால ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட செம்மணிப் புதைகுழியில், 2024ஆம் ஆண்டு வரை 25 வருட காலப்பகுதியில் வெறும் 15 எலும்புக்கூடுகளே கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் இருந்தும், செம்மணி விவகாரத்தில் அவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த கடந்த 17 மாதங்களில் மட்டும் 239 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது முறையற்றது என்றார். செம்மணி அமைந்துள்ள தொகுதியில் மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில், நீதித்துறை பொறிமுறையூடாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது தவிர மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நீதி நிலைநாட்டப்படும் போது அதற்கான கால அவகாசம் தேவைப்படும் என்றும், சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1469481
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை!
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர், மருமகனால் அடித்து கொலை! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிசார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது. இந்நிலையில் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின் போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தவகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1469477
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா! ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தனது ‘Truth’ சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பயன்படுத்தும் ஏனைய நாடுகள், அதனைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார். அமெரிக்க – இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய ‘பொதுவான உரிமம்’ வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பெசென்ட் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, “சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெயை உலக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்காலிக எரிசக்தி தட்டுப்பாட்டை அமெரிக்கா சீர்செய்யும் , இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த உதவும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைத் தொடர்ந்து, ஈரான் மீதும் அமெரிக்கா தனது தடைகளைத் தளர்த்துவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1469471
காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண!
காணாமல் போனவர்களுக்கு நீதி: புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் தயார் - அமைச்சர் ஹர்ஷண! 20 Mar, 2026 | 04:34 PM (எம்.ஆர்.எம்.வசீம்) யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி அவசியமாகும். அந்த நீதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கை எடுக்கும். இதன்போது புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டிய தேவை எழுமாக இருந்தால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைமப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சாணக்கியன் எம்.பி தனது கேள்வியின்போது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் காணாமல் போனவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை என்ன? அது புதுப்பிக்கப்பட்டுள்ளதா? காணாமல் போனவர்களைப் பற்றிய ஒருங்கிணைந்த, நம்பத்தகுந்த தேசிய தரவுத்தளம் இன்னும் இல்லையென அரசு ஏற்றுக்கொள்கிறதா? அத்தகைய தரவுத்தளத்தை உருவாக்க எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்ன? உடற்கூறு ஆய்வு, அடையாளம் காணல் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கான கால அளவு என்ன? அத்துடன் யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன? இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான நடவடிக்கை என்ன? என்றார். இதற்க தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகையில், 2009 இறுதிக் கட்ட யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்த மதிப்பீடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு காலத்தில் மாறுபடுகின்றன. எவ்வாறாயினும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி அந்த எண்ணிக்கை 2,764 ஆகும். எவ்வாறாயினும் காணாமல் போனவர்களின் நம்பகமான ஒருங்கிணைந்த தரவுத்தளம் இல்லாதது ஒரு நீண்டகால சவாலாக இருந்து வருகிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனால் இது தொடர்பில் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பபடுகின்றன. குறிப்பாக நீண்ட காலத் தீர்வாகச் செயல்படும் வகையில், ஒரு விரிவான தரவுத்தள மேம்பாட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதேவேளை 2025ல் கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி விடயத்தில் தடயவியல் பரிசோதனைக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் நீதி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான நீதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றதத்தின் ஊடாக நடக்கும். நாங்களும் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வு காண வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். தடயவியல் பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இதற்கான கால அளவை கூற முடியாது. எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்கும் ஒரு அறிவியல் பூர்வமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்போம். அத்தடன் ஏனைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் காணாமல் போதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. யுத்தத்தில் எது சரி, தவறு என்று கூற முடியாது. ஆனால் எவராவது காணாமல் போயிருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனோர் விடயத்தில் இது வரையில் கவனம் செலுத்தப்படாத விடயங்கள் இருப்பின் அது தொடர்பில் கூறலாம். தேவையான நடவடிக்கைளை நாங்கள் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம். இதேவேளை, பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளி பொறிமுறையுடன் அரசாங்கம் இணங்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் கூறியுள்ளார். எமது தேசிய வேலைத்திட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதனால் இவ்வாறாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி தேவையான நீதியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம். எவராவது தவறு செய்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடாகும். இன பேதமின்றி தேசிய பொறிமுறையில் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம். இதற்காகவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைகிறது. காணாமல் போனவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அவசியமாகும். இதற்காக புதிய சட்டம் தேவையென்றால் அதனை கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக உள்ளது. இதற்காக எதிர்வரும் 3 வருடங்களில் தேவையான அவதானத்தை செலுத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/241486
அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?
அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு? பட மூலாதாரம்,Planet labs PBC and Airbus படக்குறிப்பு,அல் சாதர் மற்றும் அல் ருவைஸ் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகிய இடங்களில் உள்ள ரேடார் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் கட்டுரை தகவல் டேனியல் புஷ், வாஷிங்டன் செய்தியாளர் மற்றும் பால் பிரௌன் & அலெக்ஸ் முர்ரே, பிபிசி வெரிஃபை 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால், போரின் முதல் இரண்டு வாரங்களில் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக புதிய பகுப்பாய்வு கூறுகிறது. இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இரான் நடத்திய ஆரம்பகட்ட பதிலடி தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக, வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) ஆய்வறிக்கை மற்றும் பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வின்படி தெரியவந்துள்ளது. அப்பிராந்தியத்தில் அமெரிக்க சொத்துகள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட முழு சேதத்தின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பின்மீது 800 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, முன்பு வெளியான தகவலைவிட அதிகமாக உள்ளது, இது இந்த மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது. "அப்பிராந்தியத்தில் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை," என சிஎஸ்ஐஎஸ்-ன் மூத்த ஆலோசகரும் அந்த ஆய்வறிக்கையின் இணையாசிரியருமான மார்க் கேன்சியன் கூறுகிறார். "இது அதிகமானதாக தோன்றினாலும், மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை முழு தொகை குறித்து தெரியவராது." இதுகுறித்த கருத்தை பெற பிபிசி அமெரிக்க பாதுகாப்பு துறையை தொடர்புகொண்டது. அத்துறை இந்த போரை வழிநடத்தும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவிடம் கேட்குமாறு கூறியது. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர். ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் முழுவதிலும் உள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் - தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட மற்ற சொத்துகள் மீது இரான் குறிவைத்து பதிலடி தாக்குதலை நடத்திவருகிறது. ஜோர்டானில் உள்ள வான் பாதுகாப்பு தளத்தின் தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான அமெரிக்க ரேடார் மீது குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க பாதுகாப்பு துறையின் பட்ஜெட் ஆவணங்களை சிஎஸ்ஐஎஸ் மதிப்பாய்வு செய்ததன்படி, இந்த ரேடார் அமைப்பு சுமார் 485 மில்லியன் டாலர் மதிப்புடையது. நீண்ட தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதற்கு இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும் அமெரிக்க தளங்கள் மற்றும் ராணுவ தளங்களின் கட்டடங்கள், வசதிகள் மற்றும் மற்ற உள்கட்டமைப்புகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் மேலும் கூடுதலாக 310 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிபிசி வெரிஃபையால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, குறைந்தது மூன்று வான் பாதுகாப்பு தளங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரான் தாக்கியுள்ளது. குறிப்பிட்ட அமெரிக்க சொத்துகளை குறிவைக்கும் இரானின் முயற்சிகளை இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் குறித்து டெஹ்ரானுக்கு ரஷ்யா உளவுத்தகவலை வழங்கியதாக கூறப்படுகிறது. குவைத்தில் உள்ள அலி அல்-சலீம், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் ஆகிய மூன்று வான் பாதுகாப்பு தளங்கள் மீது இந்த மோதலின் வெவ்வேறு கட்டங்களில் புதிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. பிப்ரவரி 28 அன்று இரான் மீது தாக்குதல்களை தொடங்குவதில் இஸ்ரேலுடன் அதிபர் டொனால் டிரம்ப் இணைந்ததிலிருந்து, அமெரிக்கா ராணுவ சேவை உறுப்பினர்கள் 13 பேரையும் இழந்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை (Hrana) ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 1,400 குடிமக்கள் உட்பட 3,200 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இரானின் அணுசக்தி திட்டத்தை அழித்தல், அதன் ராணுவ வலிமையை சிதைத்தல் மற்றும் பிராந்தியத்தில் இரான் ஆட்சிக்கு ஆதரவாக உள்ள குழுக்களை முடிவுக்குக் கொண்டு வருதல் எனும் தன்னுடைய இலக்குகளை அடைவதில் அமெரிக்கா தொடர்ந்து பயணிக்கிறது என டிரம்ப் தெரிவித்தார். "நாங்கள் இரானில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்," என வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், கிட்டத்தட்ட மூடப்பட்ட ஹோர்மூஸ் நீரிணை, மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மோதலுக்காக டிரம்ப் துருப்புகளை தரையில் களமிறக்குவாரா என்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் உலக பொருளாதாரம் மீது தாக்கம் ஏற்பட்டது. பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026 படக்குறிப்பு,தாக்குதலுக்கு முன்பு பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026 படக்குறிப்பு,தாக்குதலுக்கு பின் அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய சேவை வழங்குநர்கள் செயற்கைக்கோள் படங்களை வெளியிடுவதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், அப்படங்களின் பகுப்பாய்வு தடைபட்டுள்ளது. ஆனால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ நலன்களுக்கு எதிரான இரானின் பதிலடி நடவடிக்கைகளில் சில குறிப்பிட்ட போக்குகளைக் கண்டறிய இயலும். பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது இரான் தாக்குதல் நடத்தியதிலிருந்தே, ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நவீன ராணுவ நடவடிக்கைகளின் மிகவும் முக்கிய மையமாக அவை திகழ்கின்றன. குறிப்பாக, செயற்கைக்கோள் படங்கள் இரு ரேடார் குவிமாடங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட சேதங்களை காட்டின - அவை மிகவும் முக்கியமான உபகரணங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகளாக உள்ளன. சேதத்தின் அளவைக் கணிக்க இயலாவிட்டாலும், அந்த அமைப்புகளே சேதமடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அரிஃப்ஜான் முகாம் மற்றும் சௌதி அரேபியாவில் அமெரிக்க விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளத்தில் உள்ள ரேடார் தளங்கள் தாக்கப்பட்டன. பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளம் குறித்த படங்கள், தாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ரேடார் பாகம் ஒன்றிலிருந்து புகை எழுவதைக் காட்டுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில், தாட் அமைப்புகளுக்கு மேலும் அதிகமான சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சேதத்தின் மதிப்பு குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த சேதங்களால், தாட் அமைப்புகளை தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்குக்கு அமெரிக்கா இடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இரானின் பதிலடித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், போருக்காக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்தச் செலவுகளில் ஒரு சிறு பகுதியாகும். போரின் முதல் ஆறு நாட்களுக்கு 11.3 பில்லியன் டாலர் செலவானதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. சிஎஸ்ஐஎஸ் (CSIS) தகவலின்படி, முதல் 12 நாட்களுக்கு 16.5 பில்லியன் டாலர் செலவானது. போருக்கு நிதியளிக்க மேலும் 200 பில்லியன் டாலரை அமெரிக்க பாதுகாப்பு துறை கோரியுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்சேத் அத்தொகை "மாறக்கூடும்" என தெரிவித்தார். "கெட்டவர்களை கொல்வதற்கு பணம் தேவைப்படுகிறது," என ஹெக்சேத் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg45g7jqlro
வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன? - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி
வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன? - முன்னாள் அமைச்சர் அலி சப்ரி 20 Mar, 2026 | 04:36 PM (நா.தனுஜா) இலங்கைக்கு சடுதியாக வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக நாம் இப்போது உலக வல்லரசுகளின் போட்டி எனும் ஈர்ப்பு விசைக்குள் இழுக்கப்பட்டு வருகிறோம். இது நாம் குழப்பத்தை அன்றி, தெளிவை வெளிக்காட்டவேண்டிய தருணமாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்கள் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி செய்திருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளுக்கான ஒரு களம் அல்ல. இதனை எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி தெளிவாகக் கூறவேண்டும். எமது நாடு, எமது துறைமுகங்கள் மற்றும் எமது கடற்பரப்பில் எந்தவொரு போர்வையிலும் வெளிநாட்டு இராணுவத்தின் அல்லது உளவுத்துறையின் கூறுகள் இருக்கக்கூடாது. நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதோ, நீர்த்துப்போகச் செய்யக்கூடியதோ அல்லது கட்டம் கட்டமாக சமரசம் செய்துகொள்ளப்படக்கூடியதோ அல்ல. எமது பிரத்யேக பொருளாதார மண்டலம், கடல் வழித்தடங்கள் உள்ளடங்கலாகத் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும். அவற்றை 'ஒத்துழைப்பு' எனும் பெயரில் முன்வைக்கப்படும் நீண்டகால மூலோபாய விளைவுகளைக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சகல நாடுகளுடனும் இணைந்து செயலாற்றுவோம். ஆனால் எவருடனும் அணிசேர மாட்டோம். இந்து சமுத்திரப்பிராந்தியத்தை ஒரு 'அமைதி நிலவும் மண்டலமாகப்' பேணுவதற்கு இலங்கை தொடர்ந்து முனைப்புடன் குரலெழுப்பி வருகிறது. இது வெறும் சொல்லாடல் அல்ல. மாறாக இது நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வழிநடத்தும் ஒரு கொள்கையாகும். இது பிற நாடுகளின் விவகாரங்களில் சிக்குண்டு தத்தளிப்பதற்கான நேரம் அல்ல. மாறாக இது நாம் உறுதியாக நிற்பதற்கும், எமது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், துணிச்சலுடன் செயலாற்றுவதற்குமான நேரமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/241487
இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா
இரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும். உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைகளில் நுழைய அனுமதிக்கும்" என்று கூறினார். இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் "பெறுவது கடினமாக இருக்கும்" என்று பெசண்ட் கூறினார். "இந்த அங்கீகாரம், ஏற்கெனவே வந்துகொண்டிருக்கும் எண்ணெய்க்கு மட்டுமே கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய கொள்முதல் அல்லது உற்பத்தியை இது அனுமதிக்காது. இதன் விளைவாக, எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருக்க, இரானின் பீப்பாய்களையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்," என்று பெசண்ட் கூறினார். போர் தொடங்கியதிலிருந்தும், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான இரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்தும், எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 112 டாலரை எட்டியுள்ளது. இரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம்
வடக்கு, கிழக்கில் 2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்: ரீ.பீ. சரத்
வடக்கு, கிழக்கில் 2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்: ரீ.பீ. சரத் 20 Mar, 2026 | 05:36 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இந்த வீடுகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிர்மாணித்து வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாண்போம் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ. பீ. சரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரனால், நல்லாட்சி காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வன்னி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் முழுமையடையமல் இருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளுக்காக எங்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடொன்றுக்காக இதுவரை காலம் 9 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி இந்த பிரதேச மக்கள் தொடர்பில் விசேட அவதானத்தை செலுத்தி வீடொன்றுக்காக 20 இலட்சம் ரூபாவை வழங்குமாறு கூறியுள்ளார். இதன்படி அந்தத் தொகை வழங்கப்படும். அத்துடன் அங்கு 2500 மீள்குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்கவும் எதிர்வரும் 3 வருடங்களில் அந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கில் இந்தப் பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/241499
அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!
அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி! Mar 20, 2026 - 09:37 PM ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உதவாத நேட்டோ கூட்டாளிகளை 'கோழைகள்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். "அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!" என்றும் டிரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் “அணுசக்தியால் இயங்கும் ஈரானைத் தடுக்கும் போராட்டத்தில் அவர்கள் சேர விரும்பவில்லை. இப்போது, அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்துடன், அந்தப் போராட்டம் இராணுவ ரீதியாக வெல்லப்பட்டுவிட்ட நிலையில், தாங்கள் செலுத்த நிர்பந்திக்கப்படும் அதிக எண்ணெய் விலைகளைப் பற்றிப் புகார் கூறுகிறார்கள். ஆனால், அந்த அதிக எண்ணெய் விலைகளுக்கு ஒரே காரணமாக இருக்கும் ஒரு எளிய இராணுவ நடவடிக்கையான ஹோர்முஸ் நீரிணையை திறக்க உதவ அவர்கள் விரும்பவில்லை. மிகக் குறைந்த ஆபத்துடன், இதைச் செய்வது அவர்களுக்கு மிகவும் எளிது. கோழைகள், நாங்கள் இதை நினைவில் கொள்வோம்!” என நேட்டோ உறுப்பு நாடுகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கைக்கு முன்பு, டிரம்ப் உதவுமாறு வலியுறுத்திய எந்த நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்துவிட்டன. இதனால் சமீப நாட்களாக நேட்டோ மீதான தனது விமர்சனங்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியம் முழுவதும் தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை தொடர்ந்துவருகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது. இதனால் உலகெங்கும் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmmz3drp1000b356pt06kl7ui
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீபத்தில், இராக்கின் பாக்தாத்தில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன (கோப்புப்படம்). இராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் (Islamic Resistance) என்ற ஆயுதக் குழு, கடந்த 24 மணி நேரத்தில் 27 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் “இராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிரி இலக்குகளுக்கு எதிரான" டஜன்கணக்கான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் அடங்கும் என்றும் கூறியுள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் தூதரக மற்றும் தளவாட மையத்தின் மீது குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்றாவது தாக்குதலுக்குப் பிறகு அந்தத் தளத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதை ஓர் அதிகாரி ஏஎஃப்பி-யிடம் உறுதிப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்புதான், இராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது பல ஆளில்லா விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; கடந்த வாரமும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை கூட்டணியாக சந்திக்கும் ராமதாஸ் & சசிகலா பட மூலாதாரம்,ANI நடக்கவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்" என்று கூறிய ராமதாஸ், தங்கள் கூட்டணியில் இணைய விரும்புபவர்கள் தன்னிடமோ அல்லது சசிகலாவிடமோ அதுபற்றி விவாதிக்கலாம் என்று கூறினார். "தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும் தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும்" என்று அவர்களின் கூட்டணி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை கூட்டணியாக சந்திக்கும் ராமதாஸ் & சசிகலா
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை! 21 Mar, 2026 | 10:08 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், மருமகனின் தாக்குதலின்போது உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது. அதன் பின்னர், விரிவுரையாளரின் சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கான தொடர் விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/241537
யாழில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி
யாழில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் பலி Mar 21, 2026 - 11:11 AM யாழ்ப்பாணம், சாவகச்சேரி - புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmzwgsp80005356p0iq9ac48
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
வடக்கு கிழக்கில் போர் நடக்கும் பொழுது இந்த தமிழர்கள் சிங்கள பெயர்களை வைத்து தப்பிபிழைத்திருப்பார்கள் ....அப்ப துணிவில்லை இப்ப துணிவாக இந்தியாவுக்கு சொல்லுயினம் தாங்கள் அங்கிருந்து வந்தவையல் என்று ....அப்ப தான் இந்தியாவும் சிங்களவர்களும். தமிழர்கள் வந்தெறிகள் என பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்...
உங்களுக்கு தெரியாத வட கொரியா
அனுரா அம்மானின் மூத்த அம்மான் (ரோகணா விஜய வீரா) வடகொரியாவுடன் நெருங்கிய உறவை பேணியவர் ..அவரின் புரட்சி வெற்றியடைந்திருந்தால் இன்று நாங்களும் வடகொரியாவுடன் சேர்ந்து ஈரானுக்கு உதவி செய்திருப்போம் ...புலம் பெயர்ந்தும் இருக்க மாட்டோம் Wijeweera also visited North Koreans in the country, who congratulated him.[2] He sent a JVP member to the Middle East to forge a link with the South Yemen National Liberation Front. The envoy returned with a letter from the government promising to ship weapons to the island if possible,[28] hinting at aid from South Yemen diplomats to the JVP. North Korea used revolutionary propaganda daily in newspapers; North Korean newspapers quoted Kim Il-Sung about the revolution, and the government of Sri Lanka was suspicious of the country's motives. JVP bases contained Juche literature distributed by the North Korean high commission in the country, which helped to develop the party. On 15 May 1971, 18 North Koreans affiliated with the JVP were arrested. Indian patrol boats deployed around the island stopped two North Korean vessels, capturing weapons, food parcels and literature; the vessels may have been headed to JVP-controlled territory to reinforce it against the Ceylonese army.[41][42][43] Aid may also have come through the Ceylon-North Korea Friendship Association, which had branches throughout the country.[44] அன்று நடந்ததும் அதே நிலா இன்று நடப்பதும்
பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்
உண்மைகளை பேசும் வைத்தியர்களுக்கு நன்றி.
‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப், ஓவரா கெத்துக்காட்டி வெனிசுலா மாதிரி, அயத்துல்லா அலி கொமெய்னியை கொலை செய்தவுடன் போர் முடிந்துவிடுமென தப்புக்கணக்கு போட்டு வாங்கிக்கொண்டதுதான் மிச்சம். போர் முடிந்தவுடனேயோ, இவர்களின் பதவிக்காலம் முடிந்தவுடனேயோ இரண்டு சாத்தான்களையும் சிறையில் அடைத்து, சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையேல் சர்வதேச குற்றப்புலனாய்வு நீதிமன்றம் இவர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும். இந்த நெத்தன்யாகு, ட்ரம்ப் ஐ விட இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் முட்டாள்கள், போர் வெறி பிடித்தவர்கள்.
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஐ எஸ் டபிள்யூ அறிக்கையின்படி தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் (சாம்) 85% அதிகமான ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டன, தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் 60% -80% வரை அழிக்கப்பட்டுவிட்டது. போரின் முதல் நாளிண் ஏவுகணைத்தாக்குதல் 90% ஆக குறைந்துள்ளதாக ஐ எஸ் டபிள்யூ அறிக்கை கூறுகிறது, இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில நாள்களில் ஈரானின் பதில் தாக்குதல் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இவ்வாறான நிலையில் ஒரு தரைத்தாக்குதல் எதற்காக? புஸ்ஸர் பகுதியில் அமைந்திருந்த இரஸ்சியாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது (இரஸ்சியாவிற்கான எச்சரிக்கை என கூறுகிறார்கள்), செறிவூட்டப்பட்ட யுரேனியத்தினை கைபற்றுவதனை விட அதனை அழிப்பது இலகுவாக இருக்கும் என கருதுகிறேன், ஏவுகணைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது (குறிப்பிட்ட தகவலினடிப்படையில்) யுறேனியத்தினை அழிப்பதற்கு தரை நடவடிக்கை தேவையில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு தரைப்படை நடவடிக்கை தேவையாக இருக்கும் என கருதுகிறேன் (அதற்கு ஒரு சிறிய தற்கொலை நடவடிக்கை சாதியமில்லை). ஆனால் இந்த அறிக்கைகள் எந்தளவிற்கு சரியாக இருக்கும் என தெரியவில்லை, ஆரம்பத்தில் ஈரான் பாவித்த ஏவுகணைகள் பழைய ஏவுகணைகள் அவற்றை செலுத்தும் செலுத்திகள் புதிய ஏவுகணைகளுக்கு பயன்படுத்த முடியாது என கூறுகிறார்கள், அதனால் புதிய ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள் இன்னமும் ஈரானிடம் இருக்கலாம். ஒரு நாட்டின் பலத்தினை இரண்டாக வகுக்கிறார்கள்; Military power, latent power. இராணுவ பலத்தில்; பொருள்சார் பலம், பொருள் சாரா பலம் என இரண்டாக வகுக்கிறார்கள், ஈரானின் புலப்படாத பலமாக பல விடயங்கள் அதற்கு துணை செய்கின்றது, பொருள்சாரா பலத்தில் நேரம் மிக முக்கியமாக அமெரிக்க இஸ்ரேல் கூட்டணிக்கெதிராக இருக்கின்றது அது ஒரு கையறு நிலையினை எதிர்காலத்தில் தோற்றுவிக்கலாம் எனும் அச்சத்திலும் இந்த தரை தாக்குதல் செய்ய முற்படலாம், அதனை அவர்கள் செய்தால் ஈரானின் திட்டத்திற்கு ள் மாட்டிக்கொள்ளக்கூடும். தரைத்தாக்குதல் நோக்கம் தெரியவில்லை, ஆனால் மேலும் மேலும் சிக்கல் நிலை தோன்றலாம். தரைத்தாக்குதலுக்கான சாத்திய கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளதாகவே தற்போதும் கருதுகிறேன்.
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
பெண்கள் சத்தமில்லாமல் நேர்த்தி வைத்துவிட்டு சமயம் வரும்போது கழுத்தில் தொங்குவார்கள்.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed