பாகம் ஒன்பது
வாசலை தாண்டி வந்து விட்டோம்.
வீதியோரம் இருந்த ஈருளியை நிமிர்த்தி சூப்பி போத்தலுக்குள் இருந்த பெற்றோலை கொஞ்சம் குழாயினுள் ஊற்றி, வாயை வைத்து ஊதினார் ரமணன் அண்ணா.
மிதியை இரண்டு மூன்று தடவை உதைத்தும் இயங்கவில்லை. மீண்டும் ஒருமுறை குழாயினுள் வாயை வைத்து ஊதினார்.
ஊ..ஊ..ஊ...
கூவிக்கொண்டு வரும் சத்தம் மட்டும் தான் கேட்டது என்னை விழுந்து படுக்க சொல்லி உதைந்துவிட்டு, அப்படியே குனிந்துவிட்டார் ரமணன் அண்ணா.
டொமம்ம்ம்ம் ...டொம்ம்மம்ம்மார்...
எங்களுக்குக்கு மிக அருகிலேயே வெடித்தன. காதை செவிடாக்கும் சத்தங்கள்.
இரும்பு துண்டுகளும் பிளாஸ்டிக் துண்டுகளும் சிதறிப்பறந்தன.
நாங்கள் போய்வந்த வீடுக்குள் இருந்து புகை மண்டலம் மேலெழுந்தது.
அம்மா..யாரவது காப்பாத்துங்க...என்ற கூக்குரல் விட்டு விட்டு கேட்டு கொண்டிருந்தது.
அந்த குரல் வந்த வீட்டை நோக்கி ஓடிய என்னை, பிடித்து இழுத்து மீண்டும் படுக்க சொன்னார் ரமணன் அண்ணா. அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும், ஒரு நிமிடதிலையே எனக்கு புரிந்துவிட்டது.
ஆம்.. எங்கே காயபட்டவர்களை காப்பாத்த யாரும் வருவாங்களோ என்று, சிங்கள கொலைவெறி ராணுவம், மீண்டும் அதே இடத்துக்கு ஐந்துக்கும் மேற்பட்ட செல்களை ஏவினார்கள்.
மீண்டும் பெரும் இடிச்சத்தங்கள்..
கூக்குரல் அடங்கி முனகல்களாயின..
இரண்டு நிமிட இடைவேளைக்கு பிறகு நாங்கள் இருவரும் அந்த வீட்டை நோக்கி ஓடினோம்.
இரத்தமும் சதைகளும்..ஆடை துண்டுகளும்..கைகள் கால்கள் வேறு வேறாக..தலைமுடிகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. சற்று முன்னர் பார்த்த அந்த அழகான குடும்பம் அங்கெ இல்லை.
ஐயா இருந்த பிளாஸ்டிக் கதிரை மட்டும் அல்ல..ஐயாவும் உருத்தெரியாமல் சிதறியிருந்தார். அவர் இருந்த இடத்தில் ஒரு கந்தக நெடியுடன் கருமையான குழி மட்டும் தான் இருந்தது.
அவர்கள் சமைத்த குழம்புடன், அவர்களின் இரத்தமும் கலந்து அங்கெ வடிந்து ஓடிக்கொண்டிருந்தது.
தம்பீ....மிகவும் மெல்லிதாக அந்த முனகல் கேட்டது.
ஓடிப்போனேன்..மரங்களுக்கும் உடைந்த சீட்டுகளுக்கும் நடுவில் அந்த அம்மா.ஒரு கால் சிதறி போய் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லை.
"தம்பி என்னை காப்பாத்துங்க.."
மரங்களை தூக்கி அவவை வெளியிலே எடுத்தோம். நான் தூக்கி கொண்டு ஓடிவர, ரமணன் அண்ணா ஈருளியை கஷ்டபட்டு உதைத்து கொண்டிருந்தார்.
எங்கள் அவசரம் அதுக்கு கூட புரியாமல் இருந்தது. அம்மாவின் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என் மேலங்கியை கழட்டி அதை சுத்தி கட்டினேன். அதற்கிடையில் புகையை கக்கியபடி ஈருளி இயங்க தொடங்கியது.
அந்த அம்மாவை நடுவிலே கிடத்தி நான் பின்னால் அமர்ந்தவாறு அவவை விழுந்து விடாமல் பிடிக்க, ரமணன் அண்ணா அந்த மழையால் சேறாகி வழுக்கும் வீதியில் தான்னால் இயன்ற அளவுக்கு வேகமாக ஓடினார்.
ஈருளியும் எங்கள் அவசரத்தை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. குளத்தடியால் சுத்திவாறது என்றால் அதிக நேரம் எடுக்கும் என்று, ஒரு குறுக்கு வழியால் வந்தோம். அங்கேயும் எங்களுக்கு விதி காத்திருந்தது.
வெள்ளம் இருந்த அந்த பள்ளத்தில், வேகமாக வந்த நாங்கள் தாண்டிடலாம் என்று நினைத்த போது, ஈருளி சறுக்கி நான், அந்த அம்மா, ரமணன் அண்ணா மூவருமே வெள்ளத்தில் விழுந்தோம்.
எழும்பிய ரமணன் அண்ணா, ஈருளியை உதைத்து இயங்க வைக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாவின் கால்களில் இருந்து குருதி வெள்ளத்துடன் கலந்து கொண்டிருந்தது. எனக்கோ என்ன செய்வது என்றே தோன்றவில்லை. என்னை பெத்த அம்மாவே என் கைகளில் இருபதாகவே உணர்ந்தேன்.
அண்ணே ..நீங்கள் இயக்கி கொண்டு வாருங்கள் நான் கொண்டு ஓடுறேன் என்று அம்மாவை தூக்கி கொண்டு, என்னால் இயன்றவரை ஓடினேன்.
தம்பி என்னை எப்படியும் காப்பாத்துப்பா..எனக்கு ரொம்ப வலிக்குதுப்பா ..என்று முனகி கொண்டிருந்தார்.
என்னுடைய அம்மாவே என்னை பார்த்து கெஞ்சுவது மாதிரியே இருந்தது.
அம்மா ஒண்டுக்கும் யோசிகாதீங்கள். உங்கள் மகன் நான் இருக்கிறேன் உங்களை எப்படியும் காப்பாத்துவேன். என்னால் இந்த வாய் ஆறுதலை தவிர எதையுமே செய்ய கூடிய நிலையில் நான் இல்லை.
ஓடினேன் ..ஓடினேன்..என்னால் முடியும் வரை ஓடினேன் ..யாரையும் கூட அந்த தெருவிலே காணவில்லை.
ஒரு இருநூறு மீற்றர் ஓடி இருப்பேன். இப்போ முனகல் சத்தம் கேட்கவில்லை. அந்த தெருவிலே அப்படியே உட்கார்ந்து, அந்த அம்மாவை என் மடியிலே கிடத்தி, மூச்சுக்கு பக்கத்தில் கையை வைச்சு பார்த்தேன். எதுவுமே இல்லை. கையை பிடித்து பார்த்தேன் நாடித்துடிப்பும் இல்லை.
கத்தி அழவேணும் போல இருந்திச்சு. அம்மா.. அம்மா.. என்று வாய் ஓயாமல் கூப்பிடும் எனக்கு கூட, சொல்லாமல் செத்து போனாவே, என்று கத்தி அழணும் போல இருந்திச்சு..
கொஞ்ச நேரத்துக்கு முதல் "தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்று சொன்ன அம்மா, இப்போ உயிரோட இல்லை. என்னை பெத்த அம்மாவின் கையால் சாப்பிடும் பாக்கியம் தான் எனக்கு இல்லை என்றால், இந்த அம்மா கையால் கூட சாப்பிடாமல் பண்ணிய விதியை என்ன செய்வது.
என் கோபம் எல்லாம் அந்த சிங்கள இன வெறியன் மேல் திரும்பியது. இந்த அம்மா அவனுக்கு என்ன பாவம் பண்ணினா ..?
சொல்லுங்கள் உறவுகளே..எதுக்காக எங்களுக்கு மட்டும் இந்த நிலை.இந்த கட்டத்தில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும்.
சொல்லுங்கள் வாய் விட்டு சொல்லுங்கள். இந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள். அதை தான் நானும் எடுத்தேன்.
இது தப்பா ..?? நான் செய்கிறது தவறா ..?? என்னையும் கொச்சை படுத்தி தான் பேச போறீங்களா..?? எனக்கும் வாழ தெரியாது..யதார்த்தம் புரியாது என்று தான் பேச போறீங்களா ..?? பேசுங்கள் ..நன்றாக பேசுங்கள் ..எனக்கு எந்த கவலையுமே இல்லை.
ஒரு மனுசனா ஒருத்தனுக்கு என்ன கோபம் வருமோ அது தான் எனக்கும் வருகிறது. ஒரு மகனாக அந்த அம்மாவுக்கு என்ன செய்யணுமோ அதை தான் நான் செய்ய போறேன்.
ரமணன் அண்ணா, வேகமாக ஓடிவந்தார் ஈருளியுடன். ராணி ஏறுடா, அந்த அம்மாவை தூக்குடா என்று கத்தினார்.
இல்லை அண்ணா, அம்மா செத்துட்டா..
நாங்கள் போவம் அண்ணா. இனி எனக்கு என்னுடைய அம்மாவும் வேண்டாம். சண்டையை முடிச்சு, எதிரியை எங்கட எல்லையில் இருந்து கலைச்சிட்டு வந்து பார்கிறேன். இது தான் நான் இந்த அம்மாவுக்கு செய்யும் கடன் அண்ணா.
இந்த அம்மாவின் கதி இனி எந்த அம்மாவுக்கும் வரகூடாது அண்ணா..கடைசி மட்டும் வாழவேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டா அண்ணா .
கண்கள் கலங்கின.
நாங்கள் போவம் அண்ணா ..
தூரத்தில் புள்ளியாக நம் அம்மாவின் உடல்..
நடுத்தெருவில் அனாதையாக ....
(தொடரும்)
பாகம் பத்து இங்கே அழுத்துங்கள்