• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11,257

  • Content Count

   50,148


 2. நவீனன்

  நவீனன்

  வரையறுக்கப்பட்ட அனுமதி


  • Points

   9,477

  • Content Count

   85,545


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6,178

  • Content Count

   28,462


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6,136

  • Content Count

   17,227Popular Content

Showing content with the highest reputation since 12/14/2009 in all areas

 1. 28 points
  அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுதுகளில் தான் வாழ்வின் நிதர்சனம் எனக்குள் புகுந்து கொண்டது... பெரும் மரமாய் சூறைக் காற்றாய் அலை எழும் கடலாய் நான் கண்ட அப்பாவின் உடல் தீயில் உருகிய தருணங்களி தான் வாழ்வின் வனப்பும் புரிபட்டது.. சாம்பலின் ஊடாக தேடி தேடி 'இது விலா எழும்பு 'இது மூட்டெழும்பு' என்று அவரது எலும்புகளை பொறுக்கிய அந்த வினாடிகளில்தான் வாழ்க்கையின் பரிமாணமும் பிடிபட்டது.. இப்பவெல்லாம் அடிக்கடி அவர் நினைவுகள் எழுகின்றன இறந்த நாட்களில் உயிரற்றுக் கிடந்த அவர் பற்றிய நினைவுகள் இன்று உதிரம் பாச்சிய காற்றாக மீண்டும் மீண்டும் எனக்குள் எழுகின்றன என் பிள்ளைகளை காணும் போதும் அவர்களை நெஞ்சாரத் தழுவும் போதும் தவறுகளைத் திருத்தும் போதும் கண்டிப்பின் உச்சியில் நிற்கும் போதும் அமைதியாக அவர்கள் உறங்கும் போதும் மீண்டும் மீண்டும் என் அப்பாவின் நினைவுகள் எழுகின்றன அவர்கள் இடும் முத்தத்தின் ஈரத்தில் அவர் கண்களில் தெரிந்த ஈரம் எனக்குள் தெரிகின்றது.... இப்படியான சில கணங்களில் நானே அவராக மாறிவிடுவம் இல்லை அவரே நானாக ஆகிவிடுவதும் நடக்கத்தான் செய்கின்றன.... மார்ச், 25 2013 ------------ இன்று என் அப்பாவின் 71 ஆவது பிறந்த தினம். காலையில் இருந்து மிதமிஞ்சி அருட்டிக் கொண்டு இருக்கும் அவர் பற்றிய நினைவுகளில் எழுதிய ஆக்கம் இது,
 2. 27 points
  ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீனாவின் இன்னொரு முகம் அவளின் எண்ணங்களில் ஓங்கி அறைந்து அறைந்து அவளை இயல்பாக்கத் துடித்தது. எப்படி ஆயிற்று? சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தக்கணம்….. எதிர்வு கூறும் கற்பனைகளை நொருக்கிவிட்டு, நிகழ்காலமாக வியாபித்து அவளைத்தூக்கி தட்டாமாலை சுற்றியது. வீடு தேடி வந்தவனை……… வாய் திறந்து வரவேற்க மாட்டாளா............, என்ற தவிப்பில் அந்த முதுமையைத் தொடத் தொடங்கியவனின் எதிர்பார்ப்பு விழிகளுக்குள்ளால் எட்டிப்பார்த்தது. வினாடிகள் கழிவது வருடங்கள் கழிவதான காலவிரயம்போல் தோன்ற….., சிவா…. அவளின் பெயரைச்; சொல்லி அழைத்தான். எங்கோ ஆழக்கிணற்றுக்குள் இருந்து அவலஒலி எழுப்புவதுபோல் குரல் ஈனசுரத்தில் சிக்குண்டு சேதத்தை வெளிப்படுத்தியது. அந்தக்குரலின் ஒலித்தளம்பல் அவளுக்கு தன்நிலை உணர்த்தியதுபோல் சட்டென்று மீனா மீண்டு கொண்டாள். அவனின் நரைத்த மீசைக்குக் கீழான உதடுகளுக்குள் விரித்த கலவரத்துடனான புன்னகை அவளைத் தாக்கியது. அவளின் பார்வையை எதிர்கொள்ளும் திராணியற்றதாக சிவாவின் பார்வை மெல்ல தாழ்ந்து வாசற்கதவினைப் பற்றியிருந்த மீனாவின் கரங்களில் படிந்தது. அந்தக் கைகளின் உலர்வையும்; சுருக்கங்களையும் நோக்கும் அக்கணம் அவனுக்குள் மெலிதாக வலித்தது. “வாங்க வாங்க உள்ளே வாங்க” என்ற அவளின் குரலில் வெளிப்பட்ட கரகரப்பும் அவளை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. எத்தனை ஆண்டுகள்…… கண்வழி ஆரம்பித்து, கனவுகளில் வாழ்ந்து, குதூகலிக்கும் பொழுதிற்குள்ளாகவே பாதைகள் பிரிபட்டு, பயணங்கள் மாறுபட்டு, கண்டங்கள் விலகி எல்லாம் முடிந்து தசாப்தங்களும் கடந்து நேற்றைய கனவாக வாழ்வு நெடுந்தூரம் கடந்து போய்விட்டது. “என்ன வீட்டுக்குள் வந்துவிட்டு உட்கார மாட்டீர்களோ?” என்ற அவளின் விருந்தோம்பல் அவனுக்கு ஆணையாக மாற, அந்த வரவேற்பறையில் கிடந்த சோபாவில் மெல்ல அமர்ந்தான். அவனின் சிறு அசைவையும் தவறாமல் உன்னிப்பாக கவனித்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்த அவளாலும் அதற்குமேல் பேச இயலவில்லை. கசியும் விழிகளையும், நடுங்கும் உதடுகளையும் கட்டுப்படுத்துவதற்காக அவள் தனக்குள் போராடுவதை சிவாவால் உணர முடிந்தது. தான் சற்றுத் திடமானவன் என்று நினைத்தபடி அருகில் சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவனின் காத்திரத்தை உடைத்துப் போட்டன கலங்கிச் சிவப்பேறிய அவன் விழிகள். இதுதான் காதலா? வாழ்க்கையின் முக்கால் கிணறு தாண்டும்வரை இருந்த உறுதி, இன்னும் தாண்ட இருக்கும் எதிர்காலத்தின் மீதான உறுதி… இன்னும் அசைக்கமுடியாததாகத்தான் இருக்கிறது…. எப்படி இந்தக்கணம் மட்டும் இப்படி?....... அவன், அவள், திடகாத்திரம் எதுவுமே இல்லாத ஆத்மவெளியில் உருவங்களைத் தொலைத்த இரண்டு ஆன்மாக்கள் மனித உடல்களின் ஐம்புலன்களையும் வைத்து பேசத் தொடங்கியதுபோல் இருந்தது அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் புலப்படவில்லை நேசிப்பு ஒன்றுதான் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்தது. இருப்பினும் நேற்றைய காதல்...... உணர்வுகளில் குவிய எண்ணங்கள் அந்நியப்பட்டு விலகிக் கொண்டன. “உனக்கு நான் எனக்கு நீ ” என்று என்றோ பேசிய வார்த்தைகள்...., காலவெளியில் அள்ளுண்டு காணாமல்போய் இருவரும் வேறு வேறு துணைகளுடன் எல்லாம் பகிர்ந்து, விதி போட்ட முடிச்சுக்குள் வாழ்ந்த பின்னால்..................................., எதிர்பாராத இந்தச் சந்திப்பு. விருந்தினனாக வந்தவனுக்கு தேநீர் தயாரிக்கும் சாக்கில் தளர்ந்த தன்னுணர்வுகளை இறுக்கிக் கொண்டாள் மீனா. தன் கணவன் , பிள்ளைகள் பற்றிப்பேசி, அவன் மனைவி பிள்ளைகள் பற்றி பேசி அவன் நிலையையும் தேற்றினாள். மன அதிர்வுகளை மறைத்தபடி அவனுக்கான திடத்தையும், வழிகாட்டலையும் நோகாமல், அவனைச் சிதைக்காமலும் மேற்கொண்டு நல்ல நட்புடன் அனுப்பிவிட்டு, கதவைத் தாழிட்டவள் ஓடிவந்து அவன் இருந்த சோபாவை வருடிக் குப்புற விழுந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள். பிரிக்கப்பட்ட காதல், திணிக்கப்பட்ட வாழ்வு பெண் என்னும் பிம்பத்தால் பிய்த்தெறிய முடியாத உறவுச் சங்கிலிகள், வரங்களாகச் சொல்லப்பட்டு மற்றவர்களால் திணிக்கப்பட்ட சாபங்கள், விடுபடமுடியாத மனச்சுமைகள்…… சிறகுகளும் வானும் இருந்தும் பறக்கமுடியாது… எத்தனை ஆண்டுகாளாய் அடக்கி வைத்த அழுகை. அவளைக் கொஞ்சம் அழவிடுங்கள் ஆறாய் பெருகும் கண்ணீரில் முற்றுப்பெறாத அவளின் நேசிப்பு நிறையட்டும்.
 3. 23 points
  http://eathuvarai.net/?p=1943 “சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன் அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை முழந்தாளிட்டு இரண்டு கைகளாலும் கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி கொண்டு வந்த இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு மேனகாவை பார்த்தான். தன்னை பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு குளிர் பானங்களை எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந்தாள். அவசரமாக சொக்கிளேற்றுக்களை உடைத்த இருவரும் அதற்குள் இருந்த பொருத்தப்படாத விளையாட்டு சாமான்களை எடுத்தார்கள். மாலதிக்கு ஒரு காரும் தமிழினிக்கு ஒரு பொம்மையும் கிடைத்திருந்தது. இருவரும் அதனை பொருத்தித் தருமாறு அமுதனிடம் கொடுத்ததும் அவன் ஒரு கதிரையில் அமர்ந்து பொருத்தத் தொடங்கினான். அவர்கள் இருபக்கமாக அமர்ந்து கொண்டார்கள். “அப்பா நீங்கள் ஏனப்பா இப்ப வீட்டை வாறேல்லை “இது தமிழினியின் கேள்வி. அவளின் தலையை தடவியபடியே “அப்பாக்கு இப்ப தூரத்திலை வேலை அதுதான் வாறேல்லை ஆனால் நேரம் கிடைக்கேக்குள்ளை நான் அடிக்கடி உங்களை வந்து பாப்பன் . நீங்கள் அச்சா பிள்ளையள் தானே ,குளப்படி செய்யாமல் அம்மா சொல்லுறதை கேட்டு நல்லபடியா படிக்கவேணும். அப்பா கெதியிலை திரும்பவும் விட்டு வந்துடுவனாம்.சரியா? “என்றதற்கு ஓமென்று தமிழினி தலையாட்டினாலும், சமாதானமடையாதவளாய் “அப்பா நீங்களெண்டால் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் காரிலை வந்து வீட்டை கூட்டிக்கொண்டு போயிடுவிங்கள். ஆனா இப்ப நாங்கள் அம்மா வரும்வரைக்கும் இங்கை இருக்கவேண்டியிருக்கு எனக்குப் பிடிக்கேல்லை “முகத்தை சுழித்தாள். “எனக்கும் தான் “என்றாள் மாலதி. ஆனால் மாலதி அவனிடம் அதிகம் கேள்விகள் எதனையும் கேட்கவில்லை அவள் கொஞ்சம் பெரியவள் என்கிற படியால் தனது தாய்க்கும் தந்தைக்குமிடையில் ஏதோ பிரச்சனை அதனாலதான் தந்தை வீட்டிற்கு வருவதில்லை என்பது புரிந்திருந்தது. தமிழினிக்கு இப்பொழுதுதான் நான்கு வயது அவள்தான் இருவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள். விளையாட்டு பொருள்களை பொருத்திக் கொடுத்தவன் ” அப்பாக்கு வேலைக்கு நேரமாகிது போகப்போறன் அப்பாக்கு உம்மா தாங்கோ ” எண்டதும் இருவரும் இரண்டு பக்க கன்னத்திலும் ஒரே நேரத்தில் முத்தத்தை பதிக்க அமுதனின் கண்கள் கலங்கி விட்டிருந்தது. “இனி எப்ப வருவிங்களப்பா” என்கிற தமிழினியின் அடுத்த கேள்வி. “அப்பா கெதியிலை திரும்ப வீட்டை வந்திடுவன் குளப்படி செய்யக் கூடாது ” என்று விட்டு புறப்பட தயாரானவனிடம் தமிழினி “அப்பா எனக்கு காரோடுற பார்பி பொம்மை வேணும்” என்றாள். மேனகாவை பார்த்தான் அவள் கவனிக்காதது போலவே நின்றிருந்தாள். அவளிடம் போய் நாளைக்கு வழக்கு முடிவு தீர்ப்பு சொல்கிற நாள். எப்பிடியும் எனக்கு சார்பாத்தான் தீர்ப்பு வரும் அதுக்கு பிறகு எங்களுக்குள்ளை உள்ள பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும் என்று சொல்லி விடைபெற மனம் தவித்தது. ஆனால் தான் வந்து நிற்கிறது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நிக்கிறாள் கல்நெஞ்சக் காரி , கிட்ட கதைக்கபோக ஏதாவது சத்தம் போட்டு விட்டாளெண்டால் ரெயில்வே ஸ்ரேசனிலை மரியாதை போயிடும், எதுக்கு வம்பு என்று நினைத்தவன் பிள்ளைகளை இன்னொரு தடைவை முத்தமிட்டு விட்டு நடக்கத் தொடங்கியவன் இடையில் நின்று பிள்ளைகளை ஒரு தடைவை திரும்பிப் பார்த்தவன் என்ரை பிள்ளையள் இப்பிடி பிச்சையெடுக்கிற பிள்ளையள் மாதிரி இரயில் நிலையத்திலை குந்தியிருக்கிதுகள். மனிசி திரும்பியும் பாக்கிறாள் இல்லை . ஏன் இந்த நிலைமை? நான் யாருக்கு என்ன பாவம் செய்தனான் ?ஏன்?? ஏன்?? போய்க்கொண்டிருந்தான்…………………………. போய்க்கொண்டிருந்த அமுதனையே மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. பாவம் மனுசன் மெலிஞ்சு போச்சுது கனக்க தண்ணியடிக்கிறார் போலை. காரிலையே திரிஞ்ச மனுசன் எந்த பஸ் எங்கை போகுதெண்டே தெரியாதவர் காரையும் வித்துப்போட்டு பஸ்சிலை ஏறி இறங்கி என்ன கஸ்ர படுறாரோ.எண்டாலும் என்னட்டை வந்து ஒரு வசனம் கதைக்காமல் போறார் போகட்டும். நாளைக்கு வழக்கு முடிவு தெரிஞ்சிடும். கடவுளே நல்ல முடிவா வரவேணும் என மனதிற்குள் வேண்டியவள். எவ்வளவு மகிழ்ச்சியா இருந்த எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை ஏன்??……………………… ௦௦௦ /நித்திரையா தமிழா நீயும் எழுந்து பாரடா…/ பாடல் சி டியில் ஓடிக்கொண்டிருக்க அதையே முணு முணுத்தபடி பாடசாலையால் கூட்டி வந்த பிள்ளைகளிற்கு உணவை தயாரித்துக்கொண்டிருந்தான் அமுதன்.வீட்டு அழைப்பு மணி சத்தம்.திறந்து பார்த்தான் அப்பாத்துரையும் பக்கத்தில் இன்னொரு புதியவர் அதுவரை அவன் பார்த்தேயில்லை. வரவேற்றவன் ஒரு நிமிசம் பிள்ளையளிற்கு சாப்பாடு குடுத்திட்டு வாறன் என்றவன் அவர்களிற்கு உணவை கொடுத்து விட்டு வந்து அமர்ந்தான். அப்பாத்துரையிடம் “சொல்லுங்கோ என்ன புதினங்கள். கிளிநொச்சியையும் விட்டாச்சு எண்டு செய்தியள் சொல்லுது எவ்வளவு கஸ்ரப் பட்டு கசை கொட்டி கட்டியெழுப்பின இடம் மனசுக்கு கஸ்ரமாயிருக்கு ஏன் அதை விட்டவை” என்று விட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தான். “இடங்களை விடுறதும் பிறகு பிடிக்கிறதும் இது முதல் தரம் இல்லைத்தானே இதுவும் தந்திரோபாயமான பின் வாங்கல்தான். இந்த தடைவை கொஞ்சம் கூடுதலாய் பின்வாங்கினம் ஏனெண்டால் இழப்புகளை குறைச்சு பலத்தை தக்க வைக்கவேணும்.தலைவர் பெரிய திட்டம் ஒண்டு வைச்சிருக்கிறார் அதுதான் கடைசி அடி. அதுக்கு இந்த தடைவை பெரிய தொகை ஒண்டு உடனடியா அனுப்ப சொல்லி கேட்டிருக்கினம். அது மட்டுமில்லை இதுதான் நாங்கள் சேக்கிற கடைசி நிதி அதாலை உங்களிட்டை இருந்து பெரிய பங்களிப்பை எதிர் பாக்கிறம். அதுக்காவவே இவரை நாட்டிலையிருந்து நேரடியா தலைவர் அனுப்பியிருக்கிறார். இவரின்ரை பெயர் விடுதலை ” என்று வலக்கை விரல்களை குவித்து விளக்கத்தை சொல்லி முடித்தான் அப்பாத்துரை. “பெரிய தொகையெண்டால் எவ்வளவு ” புருவத்தை உயர்த்தினான் அமுதன். “குறைஞ்சது பத்தாயிரம் பிறாங்காவது எதிர் பாக்கிறம்”. பத்தாயிரமா?..வாயை பிளந்தவன்.இரண்டு வருசத்தக்கு முதல் நீங்கள் கடனடிப்படையிலை வாங்கின நாலாயிரமே திருப்பி தரேல்லை ஆனாலும் நான் அதை கடனா நினைக்காமல் பங்களிப்பா தான் தந்தனான். மாத காசு வேறை தாறனான் ஆனால் பத்தாயிரம் கொஞ்சம் கஸ்ரம். அமுதன் நீங்கள் காசு தரத் தேவையில்லை கடன் மட்டும் எடுத்துத் தந்தால் போதும் நாங்கள் மாதா மாதம் காசை கட்டுவம். அவ்வளவுதான். என்ரை பாங்கிலை கடன் எடுக்கேலாது ஏற்கனவே வீட்டுக்கடன் ,கார் கடன் எல்லாம் எடுத்திட்டன்.அதுவும் பத்தாயிரம் கஸ்ரம்.தலையை சொறிந்தான் அமுதன். நீங்கள் ஒண்டும் கஸ்ரப் படவே தேவையில்லை இதிலை கையெழுத்து மட்டும் போட்டால் போதும் உங்கடை விசா போட்டோ கொப்பி ஒண்டு அவ்வளவுதான் என்றபடி சில படிவங்களை பையிலிருந்து வெளியே எடுத்தான் அப்பாத்துரை. ஆனாலும் அமுதனிற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இல்லை வந்து என்று இழுத்தான். அதை கவனித்த அப்பாத்துரை என்ன யோசிக்கிறீங்கள் நீங்கள் ஒரு மாவீரரின்ரை அண்ணன். அது மட்டுமில்லை எங்கடை பொறுப்பாளர் கஸ்ரோ அண்ணையே தன்ரை குரலிலை பதிஞ்சு ஒரு சி.டி அனுப்பியிருக்கிறார் கேட்டுப்பாருங்கோ என்றதும் பக்கத்தில் இருந்த விடுதலை ஒரு சிடியை எடுத்து நீட்டினான். பாடலை நிறுத்திய அமுதன் அந்த சிடியை ஓடவிட்டான். அதற்கு முன்னர் அவன் கஸ்ரோவின் குரலை கேட்டதே கிடையாது ஆனாலும் அது கஸ்ரோதான் என நம்பினான். சுமார் ஏழு நிமிடங்கள் ஓடிய சிடியை கேட்டவன் சரி எங்கை கையெழுத்து போடவேணும் என்றான். நீட்டிய பத்திரங்களில் கையெழுத்தை போட்டவன் தனது விசாவையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து கொடுத்தான். எல்லாவற்றையும் பத்திரப் படுத்திய அப்பாத்துரை இந்தாங்கோ புதிசா ஒரு சி.டி வந்திருக்கு ஏழு பிறாங் . எந்த பிரசுரமோ சி.டிக்களோ கலண்டர்களோ அமுதன் தவற விடுவதில்லை. சி.டி யை வாங்கியவன் பத்து பிறாங்கை நீட்டி விட்டு வைச்சிருங்கோ என்றான். அப்பொழுது வேலையால் வந்து நுழைந்த மேனகா இருவரிற்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமுதனிடம் வந்தவைக்கு ஏதாவது குடிக்க குடுத்தனிங்களோ என்றதும் தான் அமுதனிற்கு அந்த நினைவே வந்தது. இல்லையப்பா இனித்தான் .. அதற்குள் சமையலறைக்குள் போனவள் எனக்கு உங்களை பற்றி தெரியும்தானே ஊர் கதை எண்டால் உலகத்தையே மறந்திடுவீங்கள் என்றபடி தேனீரை தயாரிக்க தொடங்கி விட்டிருந்தாள்.அமுதனோ அதற்கிடையில் மேனகாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று அப்பாத்துரைக்கு சைகை காட்டி விட்டிருந்தான். அவர்கள் விடை பெற்று போனதும் அமுதனும் வேலைக்கு புறப்பட்டவன் புதிதாய் வாங்கிய சி.டி யின் பொலித்தீன் உறையை பல்லால் கடித்து பிரித்து எடுத்து காரில் ஓடவிட்டு காரை இயக்கினான். “இதுதாண்டா கடைசி அடி “செல்லப்பா பாடிக்கொண்டிருந்தார்………… 00000 வேலையால் வந்து தபால் பெட்டியை திறந்து கடிதங்களை எடுத்த அமுதன் முதலில் வங்கி கடிதத்தை பிரித்தவன் திடுக்கிட்டவனாய் வந்திருந்த தொகையை திரும்ப திரும்ப பார்தான் .கடைசியில் ஒண்டு ,பத்து, நூறு ,ஆயிரம்.,பத்தாயிரம், இலச்சம் எண்டு . கை விரல்களினாலும் எண்ணிப் பார்த்தான் ஆறாவது விரலில் வந்து நின்றது. அவசரமாய் கைத்தொலைபேசியை எடுத்து அப்பாத்துரையின் இலக்கங்களை அழுத்தியவன், “அப்பாத்துரை பாங்கிலை இருந்து கடிதம் வந்திருக்கு ஆனால் நீங்கள் பத்தாயிரம் தானே கேட்டனீங்கள் ஒரு லச்சம் வந்திருக்கு இப்ப என்ன செய்யிறது”. மறுமுனையில்” ஓ அப்பிடியா” என கேட்டவன். “தலைவர் கேட்ட தொகையை குடுக்கிறதுக்காக சில பேரின்ரை பெயரிலை கூடுதலா எடுத்தனாங்கள் அதிலை உங்கடை பேரும் வந்திட்டுது போலை…….. ம்.. ஒரு பிரச்சனையும் இல்லை நான் தாற எக்கவுண்டுக்கு மாத்தி விடுங்கோ ” என்றான் சாதாரணமாக. “இல்லை என்னட்டை ஒரு சொல்லு சொல்லியிருக்கலாமல்லோ நம்பி கையெழுத்து போட்டால் இப்பிடியா செய்யிறது ” கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான். “அமுதன் காசு எங்களிட்டையா வந்திருக்கு உங்களிட்டை தானே வந்திருக்கு ,ஏன் ரென்சன் ஆகிறீங்கள். உங்களுக்கே தெரியும் போராட்டத்துக்கு நிதி உதவி செய்யிறதிலை இண்டு வரைக்கும் சுவிஸ்தான் முதலாவதா நிக்கிது. சின்ன நாடு நாங்கள் கொஞ்சப்பேர் ஆனால் கூடுதலாய் குடுக்கிறம் . தலைவரே அதை தன்ரை வாயாலை புகழ்ந்து சொல்லியிருக்கிறார். அவசரம் எண்ட படியாலை எங்களாலை ஒவ்வொருத்தராய் தொடர்பு கொண்டு விபரம் சொல்ல முடியேல்லை கடனை நாங்கள் தானே கட்டப் போறம் பிறகெதுக்கு பயப்பிடுறீங்கள்”. ஆனாலும் சமாதானமடையாத அமுதன் “அதில்லை வந்து”….. என்று தொடங்கவும் குறுக்கிட்ட அப்பாத்துரை , “அமுதன் அவனவன் நாட்டுக்காக உயிரையே குடுக்கிறாங்கள் நீங்கள் காசை கடனெடுத்து குடுக்க யோசிக்கிறீங்கள். நீங்கள் யோசிக்கிறதை பாத்தால் நாட்டுக்காக போராடுற போராளியள் மட்டுமில்லை எங்களுக்காக உயிரை குடுத்த மாவீரர்களையும் அவமதிக்கிறமாதிரிக் கிடக்கு “, பதறிப்போன அமுதன் “ஜயையோ அப்பிடியெல்லாம் இல்லை என்ரை தங்கச்சியும் மாவீரர் தான் எனக்கும் அந்த வலி தெரியும் .எக்கவுண்ட் நம்பரை எஸ்.எம். எஸ் பண்ணி விடுங்கோ இப்பவே போய் காசை மாத்தி விடுறன்” என்று விட்டு தொலைபேசியை நிறுத்தினான். ஒரு நிமிடத்திலேயே எஸ்.எம். எஸ் . வந்திருந்தது. 00000 ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் செய்திகள் எல்லாமே குழப்பமானதாகவே வந்து கொண்டிருந்தது அமுதனிற்கும் ஒண்டும் புரியவில்லை. வங்கியில் அந்த மாதத்திற்கான கடன் பணமும் கழிந்து விட்டிருந்தது. ஆனால் அப்பாத்துரையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. போனடித்து காசு என்று கேட்கவும் அமுதனிற்கு சங்கடமக இருந்தது. அப்பாத்துரையிடம் காசு எண்டு கேக்காமல் நிலவரத்தை கேக்கிற மாதிரி அடிச்சு பாப்பம் என நினைத்து போனடித்து “என்ன புதினங்கள் சாலை கடற்கரையை பிடிச்சிட்டதாவும் புலிகளையும் தலைவரையும் முற்றுகைக்குள்ளை கொண்டு வந்திட்டதா செய்தியள்ளை சொல்லுறாங்கள்.உண்மையோ “என்றதும், சிரித்தபடியே அப்பாத்துரை தொடங்கினான் “இலங்கை அரசுதான் புலிகள் முற்றுகைக்குள்ளை அகப்பட்டிட்டினம் எண்டு சொல்லுது ஆனால் உண்மையிலை இலங்கை இராணுவம்தான் முற்றுகைக்குள்ளை சிக்கு பட்டு நிக்கிது.வன்னிக்குள்ளை முழு ஆமியும் போய் நிக்கிறாங்கள் ஆனால் திருகோணமலை மட்டக்கிளப்பிலை உள்ள எங்கடை படையணியள் அவங்களை சுத்தி வளைச்சு நிக்கிது. வடிவா பாத்தீங்கள் எண்டால் நாங்கள் தேள் வடிவத்திலை ஒரு தாக்குதலை நடத்தப் போறம்.தேள் எண்டால் தெரியும்தானே ? ” தட்டுத் தடுமாறிய அமுதன் “ஓம் தேள் எண்டால் நட்டுவாக்காலிதானே” என்றான். “ஓம் அதுதான் அது முன்னங்காலாலை கடிக்கிற நேரம் பின் வாலாலையும் குத்தும் வாலாலை குத்துறதுதான் மோசமாயிருக்கும். அதைப்பற்றி ஒரு பெரிய இராணுவ ஆய்வாளரே எழுதியிருக்கிறார் படிச்சனீங்களோ?” . “இல்லை படிக்கேல்லை” . “வெப்சைற்றுகளிலை இருக்கு படிச்சு பாருங்கோ அதைவிட நாங்கள் வாங்கின பிளேனுகளின்ரை படங்கள் உங்களுக்கு மெயில் போட்டு விடுறன் பாருங்கோ பிறகு சந்திப்பம் “என்று அப்பாத்துரை இணைப்பை துண்டித்தான். அமுதனுக்கு இன்னும் குழப்பமாயிருந்தது அவங்கள் இவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவங்கள் அவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவன் வேறை தேள் மாதிரி வாலாலை குத்தப் போறம் எண்டுறான். புலியள் புலிமாதிரி பாயாமல் எதுக்கு தேள் மாதிரி வாலாலை குத்துவான் என்றபடியே கணணியை போட்டு மின்னஞ்சலை திறந்தான். ஈழம் எயார் போஸ்(Eelam Air Force)என்று எழுதிய நவீன குண்டு வீச்சு விமானங்களின் படங்கள் வந்திருந்தது . அவனிற்கு தெரிந்ததெல்லாம் சியாமா செட்டியும். அவ்ரோவும் புக்காராவும் தான் ஆனால் இதுகள் ஒண்டு கிபீர் மாதிரி இருந்தது மற்றது மிராச்சா இருக்குமோ?? யோசித்தவன் எதுவாயிருந்தாலும் படங்களை பார்க்க அவனிற்கு புல்லரித்தது. இவ்வளவு வாங்கியிருக்கிறாங்கள் சரி ஒரு மாத காசு தானே போனால் போகட்டும் என்று நினைத்தவன். வேலையிடத்திலை எல்லாருக்கும் காட்டவேணும் என்று நினைத்தபடி கிறாபிக் குண்டு வீச்சு விமானங்களை பிறின்ற் எடுத்துக்கொண்டான். அடுத்த மாதக் காசும் கழிந்து விட்டிருந்தது. மகிந்தா நிலத்தை முத்தமிட்டு பயங்கரவாதத்தை அழித்து விட்டேன் என்று அறிவித்த அடுத்தடுத்த நாட்களில் அனைத்து செய்திகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக தலையின் வலப்பக்கம் காயமடைந்த படத்தினை திரும் திரும்ப போட்டுக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அமுதனிற்கு உடல் விறைத்து பைத்தியம் பிடித்ததை போல ஒரு உணர்வு பி.பி.சி…தொடங்கி சி.என்.என். என்று உள்ளுர் செய்தி அனைத்தையும் மாறி மாறி பார்த்தவன், அப்பாத்துரைக்கு போனடித்து விடயத்தை கேட்டான். பெரும் சத்தமாய் சிரித்த அப்பாத்துரை “பாத்தீங்களோ நீங்களும் ஏமாந்திட்டியள். இதுதான் எதிரிக்கு தேவை அவன் எங்களையும் சர்வதேசத்தையும் குழப்பிறதுக்கு செத்துப்போன ஒருத்தரின்ரை தலையிலை தலைவரின்ரை முகம் மாதிரி பிளாஸ்ரிக்கிலை செய்து வைச்சு படமெடுத்து போட்டிருக்கிறாங்கள்.ஆனால் தலைவர் ஆறாயிரம் போரோடை முல்லைத்தீவை விட்டு தப்பி காட்டுக்குள்ளை போட்டார்” என்றான் .உண்மையாவே என்று கேட்ட அமுதனிற்கு தலைவர் தப்பிட்டார் என்ற செய்தி கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது ,ஆனால் “வாங்கின பிளேனுகள் எல்லாம் எங்கை ? அதுகளை ஏன் பாவிக்கேல்லை “என்று கேட்டான். “அதெல்லாம் பத்திரமா எரித்தியாவிலை நிக்கிது. தலைவர் அடுத்த சண்டையை தொடங்கினதும் இவங்கள் எரித்தியாவிலை இருந்து போய் அடிச்சிட்டு வருவாங்கள் சரி நான் கொஞ்சம் அலுவலாய் நிக்கிறன் பிறகு கதைக்கிறன் “என்று தொடர்பை துண்டித்தான் அப்பாத்துரை. இந்த மாதமும் அமுதன் காசைப் பற்றி கதைக்கவில்லை. மாதம் மூன்றை தாண்டி அந்த மாத காசும் கழிந்து விட்டிருந்தது அமுதனின் நிலைமை கவலைக்கிடமாகி விட்டிருந்தது அப்பாத்துரையை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. மேனகா அன்று வழைமை போல் தனது காரிற்கு பெற்றோலை நிரப்பிவிட்டு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடன் அட்டையை நீட்டிளாள்.அது வேலை செய்யவில்லை அவசரத்திற்கு என வைத்திருக்கும் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, வீட்டிற்கு போகிற வழியில்தான் வங்கி ,போய் கேட்கலாமென நினைத்து வங்கிக்கு போயிருந்தாள். வீட்டின் வரவு செலகு கணக்குகள் அனைத்தையும் அமுதனே கவனிப்பதால் மேனகா அவற்றை கவனிப்து கிடையாது. வங்கிக்கு போய் நிலைமையை கேட்டதும் தான் அவளிற்கு புரிந்தது. அந்த மாத கடன் காசு கழியாமல் கடன் அட்டைகள் முடக்கப்பட்டிருந்ததோடு அனைத்து பண கொடுப்பனவுகள் வீட்டுக் கடன் உட்பட வங்கியால் திருப்பிவிடப் பட்டிருந்தது. இவ்வளவு நிலைமை மோசமாகியும் தனக்கு எதுவும் தெரியாமல் மறைத்த அமுதன் மீது ஆத்திரமாய் வந்தது. வீட்டிற்கு போனவள் நேரடியாக அமுதனிடம் போய் பாங்கிற்கு என்ன நடந்தது என்றதும் தான் மேனகாவிற்கு எல்லாம் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவன் தயக்கத்தோடு நடந்து முடிந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான். மேனகாவிற்கு கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. ௦௦௦௦௦௦ அன்றாடக் கடனை ஈடு செய்வதற்காக மேனகாவின் நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாக விலைபோய் தாலியும் இறுதியாக அடைவு வைத்தாகிவிட்டது.அமுதனிற்கும் மேனகாவிற்கும் சின்ன சின்ன பேச்சுக்கள் கூட பெரும் சண்டையாக மாறத்தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நாளென்றின் இரவில் பிள்ளைகள் இருவரும் நித்திரையாகிப் போன பின்னர் வேலையால் வந்த அமுதனிடம் ” அப்பாத்துரை தன்ரை மச்சானின்ரை பேரிலை ஒரு றெஸ்ரோரண் வாங்கிட்டானாம் தெரியுமோ?” ம்…என்றான். “அவனிட்டை காசு கேட்டினீங்களோ? ” அதற்கும். ம்…தான் பதிலாக வந்தது.மேனகா தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள் அமுதனிடமிருந்து ம்…மட்டுமே பதிலாக வந்துகொண்டிருக்க வெறுப்பின் உச்சத்தை மேனகாவும் கோபத்தின் உச்சத்தை அமுதனும் தொட்டுக்கொண்டிருந்த அந்த தருணங்களில் ” சே நீங்களெல்லாம் ஒரு மனுசன் ஏதாவது வாயை துறந்து கதையுங்கோ உங்களை ஒரு ஆம்பிளை எண்டவே வெக்கமாயிருக்கு ” எண்டவும் மேனகா என கத்தியபடி அமுதனின் கை அவள் கன்னத்தில் இறங்கியது மட்டுமல்ல எட்டி உதைத்தும் விட்டான். சத்தம் கேட்டு பிள்ளைகள் எழுந்து வந்து அழத் தொடங்கத்தான். தன்னிலைக்கு திரும்பிய அமுதனிற்கு ஆத்திரத்தில் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம் என்று புரிந்தது. பிள்ளைகளை சமாதானப்படுத்தி அவர்களை படுக்கைக்கு கொண்டு போய் விட்டான் . மேனகா அழுதபடியே படுக்கையறைக்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு விட்டாள்.கதவருகே வந்து நின்று மன்னிப்பு கேட்டுப்பார்த்தான் கதவு திறக்கவேயில்லை. அவள் ஏதாவது செய்து விடுவாளோ என்றும் அமுதனிற்கு பயமாக இருந்தது.போலிசிற்கு போனடிக்கலாமா என்றும் யோசித்தான். வேண்டாம் அவங்கள் வந்தால் சும்மா உள்ள பிரச்சனையையும் பெரிசாக்கிபோடுவாங்கள். எதற்கும் விடியட்டும் என நினைத்தவன் விஸ்கியை திறந்து கிளாசில் ஊற்றி குடித்தபடி படுக்கை அறை கதவையே பார்த்தபடி சத்தம் ஏதாவது கேட்கிறதா என கவனித்தபடி இருந்தான். காலை மேனகா பிள்ளைகளை பாடசாலைக்கு தயார்பண்ணிக்கொண்டிருக்கும் சத்தத்தத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் , சே கலியாணம் கட்டி இத்தினை வருசத்திலை ஒரு நாள் இப்பிடி மோசமாய் நான் நடந்ததேயில்லை.இண்டைக்கு அவளுக்கு பிடிச்ச சொக்கிலேற் கேக் வாங்கி கொண்டு போய் குடுத்து காலிலை விழுந்தாவது மன்னிப்பு கேட்கவேணும்.என்று நினைத்தவன். மாலை பாடசாலையால் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கேக்கோடு போயிருந்தான். வேலையால் மேனகா வந்ததும் பிள்ளைகளை அறைக்குள் அனுப்பிவிட்டு கேக் பெட்டியை கையில் எடுக்கும் போதே அவள் “உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும் கோபப் படாமல் ஆறுதலா கேளுங்கோ “,அவள் மேசையில் அமர எதிரே அவன். கேக் பெட்டியை இருவரிற்கும் நடுவில் வைத்தவன் சரி சொல்லு என்றான். நான் இண்டைக்கு வேலைக்கு போகேல்லை என்றபடி பையில் இருந்து சில காகிதங்களை எடுத்தவள் நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திட்டன் நாங்கள் பேசாமல் டிவோஸ் எடுப்பம் இதை தவிர வேறை வழி இல்லை. அதிர்ந்துபோனவன் என்ன கதை கதைக்கிறாய் பிள்ளையளையாவது கொஞ்சம் யோசிச்சியா? பிள்ளையளை யோசிச்சு அதுகளின்ரை எதிர் காலத்தை நினைச்சுத்தான் இந்த முடிவே எடுத்தனான். என்ன சொல்லுறாய்.? நாங்கள் கட்ட வேண்டிய காசுகளை கணக்கு பாத்தன் எங்கடை வருமானத்தை விட மூண்டு மடங்கு வருது. நாங்கள் இருபத்து நாலு மணித்தியாலமும் வேலை செய்தாலும் காணாது. நகைகளும் வித்தாச்சு தெரிஞ்சாக்களிட்டை கடனும் வாங்கியாச்சு இந்த மாதம் வீட்டு கடன் கட்ட முடியேல்லை இப்பிடியே போனால் வீட்டை பிடுங்கிபோடுவாங்கள். பிறகு நாங்கள் பிள்ளையளோடை சேர்ந்து தற்கொலை செய்யவேணும் இல்லாட்டி சூறிச் ரெயில்வே ஸ்ரேசனிலை தான் போய் படுத்திருந்து பிச்சையெடுக்கவேணும். இந்த இரண்டும்தான் தெரிவு இதிலை எதை செய்யலாமெண்டு நீங்களே சொல்லுங்கோ. பிள்ளையளோடை தற்கொலையா என்ன விசர் கதை கதைக்கிறாய் .டிவோஸ் எடுத்தால் எல்லாம் சரியாயிடுமா என்றவன் விவாதங்கள் தொடர்ந்தது .சண்டை பிடித்தபடி சேர்ந்து இருப்பதை விட பிரிந்து போவது நல்லதாகத்தான் தெரிந்தது.கடைசியில் மேனகா சொன்னவைகள் அவனிற்கு சரியாகப்படவே மன வேதனையுடன் விவாகரத்து எடுக்க சம்மதித்தான்.அவன் ஆசையாய் வாங்கி வந்த கேக் குப்பைக் கூடையை நிரப்பியிருந்தது. ௦௦௦ அப்பாத்துரையோ சிறிய தொகை கொடுத்தவர்களிற்கு தலைவர் கெதியிலை வருவார் வந்ததும் கணக்கு தரலாமென்று பதில் சொல்லிவிட்டிருந்தான். பெருமளவில் கடனெடுத்து கொடுத்தவர்களிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தான். அதுதான் கொத்து றொட்டித் திட்டம். சூரிச்சில் உள்ள அனைத்து தமிழர்களும் தினமும் தனது கடையில் கொத்து றொட்டி வாங்கவேண்டும். அதன் வருமானத்தை சேர்த்து மொத்தமாக்கி ஒவ்வொருத்தரின் கடனாக அடைக்கலாம். வேறு வழியின்றி கடன் கொடுத்தவர்களே சம்மதித்தும் இருந்தார்கள்.உணவு விடுதியில் வேலை செய்த அமுதனும் பசிக்காவிட்டாலும் கொத்து றொட்டி வாங்க தொடங்கியிருந்தான். வருடம் ஒன்றை தாண்டி விட்டதொரு நாளில் தற்செயலாக அவனைப் போலவே பெருந்தொகை கடன் வாங்கி கொடுத்திருந்த மோகனை சந்தித்த போது, அமுதன் உங்கடை கடனை ஒரு மாதிரி கட்டிட்டாங்களாம் என்று மோகன் சொன்னபோதுதான் தாங்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுப் படுவதை உணர்ந்தார்கள். அவர்களைப் போலவே பெருந்தொகை கடன் எடுத்துக்கொடுத்த அனைவரையும் தொடர்பு கொண்டார்கள். கடையிசில் ஆறு பேர் சேர்ந்து அப்பாத்துரைக்கு எதிராக வழக்கு போடுவது என முடிவு செய்து வழக்கும் தாக்கல் செய்திருந்தார்கள். அன்று வழக்கின் இறுதிநாள் ,வழக்கு போட்ட ஆறு பேரும் வந்திருந்தார்கள் . வழக்கில் நல்லபடியாய் தீர்ப்பு வந்தால் சூரிச் சிவன்கோவிலுக்கு அடுத்த திருவிழாவிற்கு காவடி எடுப்பதாக நேர்த்தி வைத்தபடி அமுதனும் போயிருந்தான். ஆனால் அவர்களில் ரமேஸ் மட்டும் நீதிமன்றத்திற்குள்ளே வராமல் வெளியேயே நின்றிருந்தான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாய் இருந்ததை கவனித்த அமுதன் அவனருகே போய் நேரமாகிது உள்ளை வாடா என்று அழைத்தான்.நான் வரேல்லை நீ உள்ளைபோ என்றான் . றமேஸ் நிறைய குடித்திருந்தான் என்றது அமுதனிற்கு புரிந்தது .என்னடா செய்யப் போறாய் என்றதற்கு தனது ஜக்கெற்ரை விலக்கி இடுப்பில் செருகியிருந்த கத்தியை காட்டியவன் இண்டைக்கு அப்பாத்துரையை போடப்போறன். டேய் விளையாடாதை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய்தான் வரும். அவசரப் படாதை… சும்மா போங்கோ அவனிட்டை காசு இருக்கு கிரிமினல் லோயரை வைச்சு வாதாடிட்டான் ,எங்கடை அரசாங்க லோயர் என்னத்தை கிழிச்சவன். அது மட்டுமில்லை காசையும் குடுத்திட்டு கையெழுத்து வைச்ச எங்களுக்கு விசரோ இல்லையோ எண்டு டெக்ரர் சேட்டிபிக்கற் வேறை எடுக்க வைச்சு கொத்து றொட்டி வேறை தீத்திட்டாங்கள். எனக்கு நம்பிக்கை இருக்கடா நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யேல்லை யாரையும் ஏமாத்தேல்லை கடவுள் ஒண்டு ஒருத்தர் இருக்கிறார் எல்லாம் நல்லபடி நடக்கும். சும்மா போங்கோ நீங்களும் உங்கடை கடவுளும் அவரே காசு உள்ளவன் ஏமாத்திறவன் பக்கம் தான் நிக்கிறார். டேய் உனக்கு இப்பதான் கலியாணமாகி ஒரு பிள்ளை வேறை பிறந்திருக்கு காசையும் குடுத்திட்டு நீ ஜெயிலுக்கு போனால் உன்ரை குடும்பத்தை ஒருக்கா நினைச்சு பார். என்ரை குடும்பம் நாசமா போனாலும் பரவாயில்லை பலபேரின்ரை குடும்பம் நிம்மதியா இருக்கும். காசை சுத்தினவங்களுக்கு லண்டனிலை குணத்துக்கும் பாரிசிலை யோகனிற்கும் ஆசை தீர அடியாவது போட்டாங்கள் நாங்கள்தான் காசை குடுத்திட்டு வாயை பார்த்துக்கொண்டு நிக்கிறம். அதற்கு மேல் அவனுடன் கதைத்து பிரயோசனம் இல்லையென நினைத்த அமுதன் மற்றவர்களிடம் போய் நிலைமையை விளங்கப் படுத்தி அவர்களை அழைத்து வந்ததும் அவர்கள் ரமேசை அமத்தி பிடிக்க அவன் செருகி வைத்திருந்த கத்தியை உருவி எடுத்தவன் அவனை விடவேண்டாம் என்றபடி ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு குப்பை கூடையில் கத்தியை கொண்டுபோய் எறிந்துவிட்டு வரும்போது ,புதிய AUDI கார் ஒன்றில் அப்பாத்துரை நீதிமன்ற பகுதிக்குள் நுழைந்துகொண்டிருந்தான். நீதி மன்றத்திகுள் அனைவரும் எழுந்து அமர்ந்ததும் நீதிபதி தீர்ப்பினை படிக்க ஆரமப்பித்தார். இதுவரை நடந்து முடிந்த விசாரனைகள் விவாதங்கள் பரிசோதனைகளின் அடிப்படையில் வழக்கை தொடர்ந்த ஆறு பேரும் கடன் பத்திரங்களில் அவர்களே கையெழுத்திட்டுள்ளனர். அவை போலியானவை அல்ல என்பதை பரிசோதனைகள் நிருபிக்கின்றது. அதே வேளை சம்பத்தப் பட்டவர்கள் மீது நடாத்தப்பட்ட உளவியல் பரிசோதனைகளில் அவர்கள் அனைவருமே எவ்வித உளவியல் தாக்கங்கள் பிரச்சனைகளுமற்றவர்கள் என்கிற அவர்களது மருத்துவ பரிசோதனை உறுதி செய்திருப்பதால் அவர்கள் அனைவருமே தங்கள் சுய விருப்பின் பேரில் சரியான மனநிலையில் இருந்தே கையெழுத்தை இட்டிருக்கும் சாத்தியம் தெளிவாகின்றது. ஆகவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்களிற்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆகின்றார்கள். அடுத்ததாக அவர்களை அப்பாத்துரை மோசடி செய்தார் என்பதற்கான சரியான வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அப்பாத்துரையின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் ஏதும் மாற்றம் செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அப்பாத்துரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் சுவிஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் அமைப்பு கடந்த காலங்களில் நிதி மோசடிகளில் ஈடு பட்டது காவல்துறையாலும் நீதிமன்றங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போல இந்த சம்பவத்திலும் நிதி மோசடிகள் நடந்திருக்கின்றதா என்பதனை காவல்துறையினர் கண்டு ஆராயவேண்டும். மேலதிகமாக அப்பாத்துரை நிதிகளை பெறுவதற்காக சம்பந்தப் பட்டவர்களை மிரட்டியோ அல்லது அழுத்தங்களை பிரயோகித்திருந்தாலோ சரியான ஆதாரங்களுடன் அவர்கள் மீண்டும் காவல்துறையின் உதவியுடன் இந்த வழக்கை மீளாய்விற்குட்படுத்தலாம். வழக்கு முடிந்தது என்றுவிட்டு நீதிபதி எழுந்து போய் விட்டார். அப்பாத்துரை அவர்களை பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை வீசி விட்டு காரில் ஏறி போய்விட்டான். அப்பவும் சொன்னான் இந்த கோட்டு கேசிலை எனக்கு நம்பிக்கையிலையெண்டு கேட்டியா. ஏதோ தர்மம் நியாயம், கடவுள் எண்டாய் எங்கை எல்லாம் போனது. போடா நீயும் உன்ரை சாமியும் என்று அமுதனை திட்டிவிட்டு ரமேஸ் போய்விட மற்றையவர்கள் எதுவும் பேசாமல் அங்கிருந்து போய் விட்டார்கள். சோர்வோடு பஸ் நிலையத்தில் வந்து இருந்தவன் சட்டைப் பையை தடவிப்பார்த்தான். வழக்கு நல்லபடியாய் முடிந்த பின்னர் தமிழினிக்கு கார் ஓடுற பார்பி பொம்மை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்தபடி ஒரு கடைக்குள் நுழைந்தவன் ஒரு விஸ்கி போத்தலை வாங்கி விட்டு ரமேசிடம் இருந்து பறித்த கத்தி எறிந்த குப்பைக் கூடை பக்கம் போய் கத்தியை தேடியெடுத்து இடுப்பில் செருகி விட்டு வந்த பஸ் ஒன்றில் ஏறிக்கொண்டான். ௦௦௦ அப்பாத்துரையின் கார் அதன் நிறுத்துமிடத்தில் நுழைந்து நிறுத்துமிட கதவு சாத்தப்படுவற்கு முன்னராக அவரசரமாக ஓடிப்போய் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைந்துகொண்டான். காரை விட்டு இறங்கிய அப்பாத்துரை அமுதனை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தாலும் தன்னை சுதாகரித்துக்கொண்டு .”என்ன அமுதன் இந்த நேரத்திலை அதுவும் இஞ்சை என்று வில்லங்கத்திற்கு ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான். எதுவும் போசாமல் அப்பாத்துரையை நோக்கி முன்னேறிய அமுதன் திடீரென அவனை நோக்கி பாய்ந்தவன் காரோடு அப்பாத்துரையை சாத்தி அழுத்திப் பிடித்தபடி இடுப்பில் செருகியிருந்த கத்தியை உருவினான் . அப்பாத்துரை பதறியவனாய் அமுதன் சொல்லுறதைக்கேள் சத்தியமா என்னட்டை ஒரு சதமும் இல்லை எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டன் என்னை நம்பு,அமுதன் அப்பாத்துரையின் அடிவயிற்றில் கத்தியை செருகி இழுத்தான். அடி வயிற்றை பொத்திய அப்பாத்துரை என்னை ஒண்டும் செய்யாதை உன்ரை காசு முழுக்க நான் திருப்பி தாறன் என்னை விட்டிடு என்றபடி அடிவயிற்றை பொத்தியிருந்த கைகளை எடுத்து கும்பிட்டான் அவனது கைள் இரத்தத்தால் நனைந்து போயிருந்தது. ” அட ஒரு குத்திலையே ஊருக்கு அனுப்பின காசு திரும்பி வந்திட்டுது” என்றபடி அமுதன் கத்தியை அப்பாத்துரையின் வயிற்றிக்கும் மார்பிற்கும் இடையில் ஓங்கி இறக்கினான். என்னை விட்டுடடா நான் பிள்ளை குட்டிக்காரன் கும்புடறனடா அவனது நாக்கு குளறி சத்தம் கம்மியது.. நானும் கூடத்தான் பிள்ளை குட்டிக்காரன் உன்ரை மனிசி பிள்ளையள் கடைசி வரைக்கும் சந்தோசமா வாழுறதுக்கு எங்கடை காசு உன்னட்டை இருக்கு ஆனால் எங்கடை பிள்ளை குட்டியளை பற்றி நீ யோசிச்சியா என்று கத்தியபடி அப்பாத்துரையை கீழே விழுத்தியவன் அவன் மீது செருகியிருந்த கத்தியை உருவிவிட்டு அவனது மார்பில் ஏறி அமர்ந்து ,கத்தியை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்து தலைக்கு மேலாக தூக்கி ஓங்கி அவனது நெற்றியில் குத்தினான். டக் என்ற சத்தத்துடன் ஒரு அங்குலமளவு மட்டுமே நெற்றியில் கத்தி இறங்கும்போதே அமுதனின் கைகள் வழுக்கி அவனது கையொன்று அறுக்கப்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. ஆனால் அவனது மது வெறியும் கொலை வெறியும் சேர்ந்திருந்தில் கை அறு பட்ட வலியை அவன் உணர்ந்திருக்கவில்லை. மெல்ல எழுந்தவன் அப்பாத்துரையின் நெற்றியில் குத்திநின்ற கத்தியின் அடிப்பாகத்து பிடியில் ” இது தாண்டா கடைசி அடி “என்றபடி தனது வலது சப்பாத்து காலால் ஓங்கி அடித்தான் சறக் என்கிற சத்தத்தோடு அப்பாத்துரையின் மண்டையோடு உடைந்து கத்தி மண்டைக்குள் இறங்கியது. தனது கைத்தொலை பேசியை எடுத்து காவல்துறையின் இலக்கங்களை அழுத்தினான். அவனிற்கு அருகாகா காவல்துறையின் வாகனங்களின் சைரன் ஒலிக்கத்தொடங்கியிருந்தது. எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள். ௦௦௦ யாவும் கற்பனை அல்ல. பிற்குறிப்பு. கடைசி அடி சிறுகதை கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னரே எழுவரை சஞ்சிகைக்காக எழுதி அனுப்பி விட்டிருந்தேன். எனவே இதனை அண்மைய பாரிஸ் சம்பவத்துடன் போட்டு குளப்பி கொள்ளதோவையில்லை. ஆனாலும் கதையில் கூறப்பட்டுள்ளது போல் நடப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை
 4. 23 points
  இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். சிறுவர்களுடன் பயணம், கடைசி மகளுக்கு 1 வயது, எப்படியும் பால் குடுக்க , பம்பர்ஸ் (நப்பி) மாற்ற என இரண்டு மூன்று தரிப்புகள் எடுக்க வேண்டி வரும், போக்குவரத்து நெரிசலும் ஒரு பெரிய பிரச்சனையாக வாய்ப்பு உள்ளது. எனவே பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும் எனத் திட்டமிட்டு காலை 4 மணிக்கு புறப்படுவதாகத் திட்டமிட்டோம், பயணத்திற்கு முதல் நாள் காருக்கு ஓயில், தண்ணீர், ரயரின் காற்றழுத்தம் எல்லாம் சரி பார்த்துக்கொண்டேன் . இத்தாலி யில் பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் பணமாகச் செலுத்தலாம், ஆனால் விடுமுறை காலங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும் என எனது வேலைத்தள இத்தாலி நண்பன் எச்சரிக்க ,கார்ட்டில் செலுத்த முடிவெடுத்தேன், எல்லா இடங்களிலும் கடனட்டை பாவிக்க விருப்ப மில்லாததால் . இங்கே TCS இல் இத்தாலி பெருந்தெருக்களுக்கு கட்டணம் செலுத்த வியாகாட்(VIA CARD) என ஒன்று விற்பதாக அறிந்து 50 யூரோவிற்கு ஒரு வியாகாட் வாங்கிக் கொண்டேன். திட்ட மிட்ட படியே காலை 4 மனிக்கு புறப்படக்கூடியதாக இருந்தது மனைவி தான் பாவம் அதிக வேலைச் சுமை நான் 11.00 மணிக்குப் படுக்கச் செல்ல , அவர் தான் கடைசி நேர ஒழுங்குகளை யெல்லாம் பூர்த்தி செய்து 12.00மணிக்குப் படுத்து 2.30 மணிக்கு எழும்பி பிரசாக பானெல்லம் அவனில் போட்டு தேனீர் போட்டு என்னை 3.15 க்கு எழுப்ப நான் குளித்து தேனீர் குடித்து பான் எல்லாம் ஒரு கட்டு கட்டி மனைவியுடன் சேர்த்து பிள்ளைகளிருவரையும் தயார் படுத்தி காரில் ஏற 4.15 ஆகியது கார் புறப்பட இரண்டு திட்டங்கள் மனதில் ஓடியது சுவிசின் டொச் மொழி மாநிலங்களையும் சுவிசின் இத்தாலி மொழி மாநிலமான டிச்சினோ (Ticino ) வையும் பிரிக்கும் அல்ப்ஸ் மலைகுகையான 17 Km நீளமான "கொட்டார்ட்" குகையையும் , சுவிஸ் - இத்தாலி போடரினையும் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கடப்பது , என்பதே அது மனைவியும் இரு பிள்ளைகளும் காரில் பின்னாலேயே இருக்க நான் தனியே முன்னே . மனைவியும் , கடைசி மகளும் கார் புறப்பட்டு 10 நிமிடத்திலேயே நித்திரைக்குச் செல்ல மூத்த மகள் என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தா. அவருடன் கதைத்துக்கொண்டே காரும் சுவிஸ் கிராமங்களை மெல்லிருட்டில் கடந்து கொண்டிருந்தது..., நேரமும் 5.00 மனியை நெருங்க சூரிய கதிர்களும் வெளியே கசியத்தொடங்கின சற்றே காரின் வேகத்தைக் கூட்டி ஹைவேயைத் தொட்டு "கொட்டார்ட்" குகையை நெருங்க டிரபிக்கும் கூடியிருந்தது . கொட்டார்ட் குகை 17 km நீளமானது தரையிலுள்ள வாகனப்போக்குவரத்திற்கான குகைகளில் உலகிலேயே நான்காவது நீளமானது (முதலாவது நீளமான குகை(24.5 km) நோர்வேயிலுள்ளது) கொட்டார்ட் குகை யினுள் இரு வழிப் பாதை மாத்திரமே உள்ளது போக ஒன்று வர ஒன்று , ஹைவே யில் இரண்டு ட்ரெக்கில் வரும் வாகனங்கள் குகைக்கு வெளியே நிறுத்தப்பட்டு ஒரு ட்ரெக்கினூடகவே உள்ளே அனுமதிக்கப்படும் இதனால் குகைக்கு வெளியே ட்ரபிக் அதிகமாகும் விடுமுறை கால மென்றால் சொல்லத் தேவையில்லை கொட்டார்ட் குகை எவ்வளவு முயற்சி செய்தும் ட்ரபிக்கில் மாட்ட வேண்டி வந்து விட்டது . மெதுவாக உருண்டு கொண்டிருந்த கார் இப்போது நிற்க வேண்டி வந்து விட்டது. வீட்டிலிருந்து புறப்பட்டதுக்கு 2 மணித்தியாலம் கழித்து முதன் முதலில் கார் நிற்கிறது. மெதுவாக காரின் முன் பக்க ஜன்னல்கள் இரண்டையும் திறக்கின்றேன் அல்ப்ஸ் மலைகளினூடே தவழ்ந்து வந்த மெல்லிளங் குளிர் காற்றலைகள் என் முகத்தில் அறைந்து களைப்பை அள்ளிச் செல்கின்றன...., அதிக நேரம் எடுக்கவில்லை ஒரு அரை மணித்தியாலமே டிரபிக்கில் நிற்க வேண்டி வந்தது. ... இப்போது மெதுவாக ஊரத் தொடங்கிய கார் வேகம் பிடித்து 80 km/h இல் "கொட்டார்ட்" குகையினுள் நுழைகிறது இனி 17 km தூரத்திற்கு குகை தான்.... குகையின் அரைவாசித் தூரம் கடந்ததும் சுவிஸ் சின் டொச் மொழி மாநில எல்லை முடிந்து சுவிஸ் இத்தாலி மொழி மாநில எல்லை வரவேற்கிறது.... குகை முடிந்து சிறிதுதூரம் செல்ல 80 km/h வேக எல்லை முடிய , காரும் சுவிஸ் ஹைவேயின் அதி கூடிய வேக மான 120 km/h இனைத்தொடுகிறது.. இடையில் ஒர் ஹைவே எரிபொருள் நிலையம் தென்பட ஒரு எஸ்பிரசோ குடித்தால் நல்லா இருக்குமென மனம் நினைக்க ...., சுவிஸ் எல்லையை விரைவில் கடக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்த 100 km இனையும் நிற்காமல் ஓடுவதென முடிவெடுத்து நான் வேகம் பிடிக்க மற்றய பெரும்பாலான கார்கள் வேகம் குறைத்து ட்ரக் மாற்றி ரெஸ்டுரன்டை நோக்கி நகர்ந்தன.... ,அவை பெரும் பாலும் ஜேர்மனி,நெதர்லாந்து, பெல்ஜியம் கார்களாகவே காணப்பட்டன....., அவர்கள் சில வேளை அதிகாலை ஒருமணி, இரன்டு மணிக்கு வெளிக்கிட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டிருக்கும், இப்போது காலை சூரிய வெளிச்சம் நன்கு பரவியிருக்க சுவிஸ் நாட்டின் ஒரெயொரு இத்தாலி மொழி பேசும் மாநிலமான டிச்சினோ இதமாக சூரியக்குளியல் செய்து கொண்டிருந்தது ஹைவேயில் அதிகளவில் வாகனங்கள் காணப்பட்டாலும் எல்லா வாகனங்களும் 120 km/h இலேயே போய்கொண்டிருந்தன இது மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. சுவிசிலுள்ள ஹைவே களில் டிச்சினோவிலுள்ள இந்த A2 ஹைவேயும் நல்ல அழகானது இரண்டு பக்கமும் கம்பீரமாய் நிற்கும் அல்ப்ஸ் மலைகளினூடு பயணிப்பது ஒரு இனிமையான அனுபவம் மகளுக்கும் நான் இடையிடேயே டிச்சினோ மாநிலத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே வந்தேன். இடையிடயே விழித்த மனைவி இப்போது நன்கு விழித்தெழுந்து தனது கால்களை hand break க்கு மேலால் முன்னால் நீட்டி லாவகமாக இருந்து கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டே சிறிது சிறிதாக செய்து கொண்டு வந்த சான்ட் விச்சுகளை பரிமாறினா எனக்கும் பசி யெடுக்க ஒவ்வொரு வாய்க்கும் ஒவ்வொரு சான்ட் விச்சுகளை அனுப்பி கொண்டிருந்தேன் , டிச்சினோ மாநில தலை நகரான பெலின்சோனா வினை கார் கடந்து சென்று கொண்டிருந்தது காலைக் கதிரவனின் கதகதப்பில் பெலின்சோனா பள்ளத்தாக்கு பளபளத்துக் கொண்டிருந்தது. அதனழகு என்னை வசியம் செய்து இடம் கிடைத்தால் காரை ஒரம் கட்டி சில நிமிடம் நின்று ரசிக்கச் சொன்னது ஆனால் ஹைவேயில் அதற்கான இடமும் இல்லை , எனக்கு நேரமும் இல்லை மனம் ரசனையில் இருக்க காரின் வேகமும் இயல்பாகக் குறைய வீதியும் சற்று ஏற்றமாக ஏறிக்கொண்டே போக PS குறைந்த எனது கார் சற்று சிரமப்பட கியரை 4க்கு மாற்றி முடியாமல் போக 3 க்கு மாற்றி வேகம் எடுத்து டிச்சினோ மாநிலத்தின் பெரிய நகரான அழகிய லுகானோவைக் கடந்து கொண்டிருந்தது சுவிசில் எனக்குப் பிடித்த நகரம் எது எனக் கேட்டால் லுகானோ எனத்தான் சொல்வேன் அவ்வளவு ரம்மியமானது அது . பெலின்சோனா (Bellinzona) லுகானோ(Lugano) இப்போது கார் சுவிசின் எல்லைப்பபுர நகரான கியாசசோவினை அடைந்திருந்தது.பெரிதாக வாகன நெரிசல் இருக்கவில்லை கஸ்டம்சினூடாக 20 km/h கார் ஊர்ந்து கொண்டிருந்தது , கியாசோ கஸ்டம் அதிகாரிகளும் பொலிசும் கொஞ்சம் கடுமையானவர்கள் மோசமான இத்தாலி மாபியாக்களை கையாள்பவர்கள், மற்றும் எல்லை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளையும் சமாளிப்பவர்கள்...., ஆனால் என்னை போகச் சொல்லி கையசைத்தார்கள் கூடவே மகளுக்கும் கையசைத்து bye சொன்னார்கள் , மிகவும் மகிழ்ச்சியாகவே சுவிசுக்கு ஒரு bye சொல்லி இத்தாலிக்குள் நுழைந்தோம் ....., பெரிதாக வாகன நெரிசலுக்குள் சிக்காமல் வந்தது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது 5 நிமிட ஓட்டத்தில் இத்தாலியின் கோமோ பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிலையம் மற்றும் ரெஸ்டுரன்ட் வர எனது காரும் அதனை நோக்கி சென்றது.... உள்ளே போனால் கார் விட இடமில்லை எல்லாம் நிறைந்து வழிந்தது பல கார்கள் தரிப்பிடம் தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு ஜேர்மன் இலக்கமுடைய BMW இன் பின்னே வெள்ளை லைட் தெரிய என் முகத்திலும் லைட் எரிய இப்போது எனது கார் அந்த இடத்தில், காரை அணைத்து, hand break ஐ இழுத்து , நான் கீழிறங்க எனது குட்டி மகளும் கண் விழிக்க எல்லாம் நலமே ....., கடைசி மகளையும் Bagஐயும்நான் தூக்க மனைவி பெரிய மகளை அணைத்த படி ரெஸ்டுரன்டினுள் நுழைய உள்ளே ஒரே சனக்கூட்டமும், கபே கப்புகளின் சத்தமும் பணியாளர்களின் இத்தாலி மொழி உரையாடலும் மனதுக்கு ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது.... பாத்ரூம் சென்று முகத்தில் குளிர் தண்ணீரை அடித்து தலைக்கும் கொஞ்சம் தேய்த்து வெளியே வந்து சில வினாடி காத்திருக்க மனைவியும் பிள்ளைகளை கூட்டிச் சென்று பம்பர்ஸ் எல்லாம் மாற்றி வந்தார். காரினுள் சாப்பிட்டதால் பெரிதாக பசி இல்லை ஏதாவது குடிப்போம் என முடிவெடுக்க , இல்லை பிள்ளைக்கு முதலில் பால் குடுக்க வேண்டும் என மனைவி சொன்னா(அது தான் தாயுள்ளம் ) நீங்களும் பெரிய மகளும் ஏதாவது குடியுங்கோ நான் பால் குடுத்திட்டு வாறன் என அவா சொல்ல பால் போத்தலினுள் பால் கரைத்தால் ,பால் சூடு ஆற கொஞ்சம் நேரம் எடுக்கும் போல இருக்கவே நான் நேரம் போகிறது என மனைவியை அவசரப்படுத்த நாம் எல்லாரும் கோபி குடிக்க முடிவெடுத்து ஒரு லத்தே மக்கியாத்தோவும் (எனக்கு), இரண்டு ஓவல் மாட்டினும் வாங்கி குடித்து முடிக்கவும் .சிறிய மகளின் போச்சி பால் ஆறவும் சரியாக இருந்தது. நான் காரில் போய் மகளுக்கு பால் குடுக்கிறேன் நீங்கள் இருவரும் ஒரு 10நிமிடம் கழித்து வாங்கோ எனக்கூறி விட்டு மனைவி சிறிய மகளுடன் சென்று விட்டா, நான் மீண்டும் ஒரு எஸ்பிரசோ வினை வாங்கிக் குடித்து விட்டு செல்ல , மகளும் பால்குடித்து ரெடியாக இருந்தா அவாவைத்தூக்கி முதுகில் மேல்நோக்கி சில தடவைகள் தடவி ஏவறை (birth) எடுக்கச் செய்து maxi cosi இனுள் இருத்தி பெல்ட் போட்டு விட்டு , பின்னால் சென்று காரைத்திறந்து எனது bag இனுள் ரீசேட் ஒன்றை எடுத்து மாற்றிக் கொண்டேன், இப்போது புத்துணர்வு இன்னம் கொஞ்சம் கூடியிருந்தது . நான் காரை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி நகர்த்தி திருப்பவம் இன்னுமொருவர் முகமெல்லாம் பல்லாகா எனது இடத்தில் கொண்டு வந்து தனது காரை விட்டு எனக்கு நன்றி சொன்னார் ( பாவம் அதிக நேரம் இடம் தேடி அலைந்திருப்பார் போலும்) ரெஸ்டுரன்டின் அருகிலேயே இருந்த எரிபொருள் நிலையத்தினுள் ஒரு புல் டாங் பெற்றோல் அடித்து விட்டு , காரை இத்தாலி ஹைவேயில் ஏற்றுகின்றேன் , மனதிற்குள் பயணத்திட்டம் ஓடுகிறது இனி மிலானோ( Milan ) நோக்கிச் சென்று அங்கிருந்து வெனிஸ் (Venice) நகரை நோக்கிச் செல்லும் ஹைவே யினுள் ஏறி ஜேசலோ exit எடுக்க வேண்டும் மிலானோ ஒரு 50km , அங்கால ஒரு 300 km ஒடினால் போதும்... கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்.....
 5. 23 points
  வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து இன்று வர நான் யாழில் பழகிய உற‌வுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கான‌ நேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்... (1) மச்சான் கரும்பு மாப்பிளை கலைஞன் யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பல‌ ஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன் இரண்டு நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒரு தருனம்...எந்த எந்த வீரருக்கு நல்ல எதிர் காலம் இருக்கு என்று கணிப்பிடுவதில் மச்சான் கிள்ளாடி..தொலை பேசியில் கதைக்கேக்க கூட புத்திமதி தான் கூட சொல்லிட்டு இருப்பார். வார வருடம் கனடா போர ஜடியா இருக்கு அப்படி போனால் மச்சானை கண்டிப்பாய் சந்திச்சிட்டு தான் வருவேன்... (2) சுண்டல் மூன்று வருடத்துக்கு முதல் என்ற தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திச்சு யார் என்று பார்த்தால் நம்ம சுண்டல்..மச்சி நான் சுண்டல் கதைக்கிறேன்டா நீஎனக்கு ஒரு உதவி செய்யனும் என்று சொன்னான்..சரி சொல்லு மச்சி என்ன உதவி நான் உனக்கு செய்யனும் என்று கேட்டேன் ( சுண்டலும் உதவியை சொன்னான் நீ இதை தான் செய்யனும் என்று..அவன் சொல்ல என்ற வீடு ஒருக்கா நில நடக்கம் வந்தது நடுங்கின‌ போல உனந்தேன்.அந்த கதையோடை சுண்டலுக்கு இன்னொரு பெயரும் வைச்சாச்சு முட்டை என்று …அதிலை இருந்து இரண்டு பேரும் அலட்ட வெளிக்கிட்டது தான் இன்று வர தொடருது எங்கள் நற்பு இடைக்கிடை ஸ்கைப்பில கதைப்போம் சுகம் விசாரிப்போம்...சுண்டல் பார்த்தது கேட்டது ரசித்தது என்ற திரியில் ஒரு வசனம் எழுதியிருந்தார் அதை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை அந்த வசனம் இதோ ( டாக்டர் டாக்டர் என்ற கணவர் பத்து லீற்றர் பெற்றோல் குடித்து விட்டார் டாக்டர் இப்ப என்ன செய்யலாம் டாக்டர் என்று..அப்ப டாக்கடர் சொல்லுவார் உங்கட கணவர பத்து கிலோ மீற்றர் ஓட சொல்லுங்கோ எல்லாம் சரியா வரும் என்று )சுண்டல் மச்சியிடமும் கதை கவிதை என்று எழுதுற திறமைகள் அதிகம் இருக்கு வாழ்த்துக்கள் மச்சி (3) ஜமுனா ஜமுனா என்றால் யாழில் தெரியாத் ஆட்கள் இருக்க மாட்டினம்...ஜம்மு பேபி யாழிழ் எழுதினது ஏராள‌ம்...கவிதை படக் கதை நாங்களும் கிரிக்கெட் விளையாடப் போறோம் என்று நகைச்சுவையாய் எழுதி யாழ் உறவுகளை சிரிக்க வைச்ச பெருமை ஜமுனாவையே சேரும்...நான் யாழில் இணைந்த காலத்தில் ஜமுனா கூட‌ ஜொல்லு விட்டு ஆளை ஆள் கிண்டல் அடிச்சசு பழகினது மறக்க முடியாத தருனம் அது..ஏதோ தெரியல இரண்டு பேருக்கும் எல்லா விசயத்திலும் நல்லா ஒத்துப் போக்கும்..யாழுக்கு வெளியில் நாங்கள் இரண்டு பெரும் நல்ல நண்பர்கள்...ஜமுனா கூட சேர்ந்து செய்த குழப்படி ஏராளம் அந்த நாட்களில் ...நான் யாழிழ் மனம் விட்டு பழகிய உறவுகளில் ஜமுனாவும் ஒரு ஆள்.... அப்ப நான் வரட்டா (4) குமாரசாமி தாத்தா குமாரசாமி தாத்தா யாழில் இருக்கும் நல்ல உறவுகளில் தாத்தவும் ஒரு ஆள்...குமாரசாமி தாத்தாவிடம் இருந்து தான் நிறைய பஞ்சு டையிலாக் கற்றுக் கொண்ட்டேன்...எதையும் பயப்பிடாமல் துனிந்து எழுதக் கூடிய ஒரு உற‌வு.....நானும் ஜமுனாவும் ஒரு திரியில் சும்மா அலட்டி புலம்பி எழுதி கொண்டு இருக்க..தாத்தா வந்து எழுதினார் வைரவருக்கு நாய் வாய்த்த மாதிரி நீங்களும் வந்து வாச்சியல் என்று...அதிலை ஆரம்பிச்ச எங்கள் நற்பு இன்றும் தொடருது....கால் பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்..நான் சந்திக்க விரும்பும் உறவுகளில் தாத்தாவும் ஒரு ஆள்..அடுத்த முறை ஜெர்மன் வரும் போது உங்களை கண்டிப்பாய் சந்திப்பேன் தாத்தா...... (5) தமிழ் சிறி அண்ணா யாழில் புதிய‌வர் முதல் பழையவர் வர தமிழ் சிறி அண்ணாவை தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...யாழின் தூண் என்று கூட சொல்லலாம் இவர‌ .....கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு ஆள்...யாழிழ் அறிமுகம் ஆகும் உறவுகளை அன்பாய் வர வேற்பார்.....கருணாநிதியை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள வேணும் என்றால் தமிழ் சிறி அண்ணாவை தொடர்பு கொண்டால் விளக்கமாய் அந்த மாதிரி சொல்லுவார்...ஒரு திரியில் கருணாநிதியை பற்றி எழுதி இருந்தார் அதை வாசித்து வியந்து போனேன்...தமிழ் சிறி அண்ணாவும் கால் பந்து விளையாட்டு மேல் தீவீர ஆர்வம் கொண்டவர்...2010 பீபா உலக கோப்பை கால் பந்து போட்டியில் சிறி அண்ணா கூட விளையாட்டு திரியில் கருத்தாடினது மறக்க முடியாத ஒன்று....யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒரு ஆள் (6) வாத்தியார் வாத்தியார் அண்ணா கூட விளையாட்டு திரியில் தான் என் கருத்தாடல் ஆரம்பம் மானது..வாத்தியார் மிகவும் அமைதியான ஒரு உறவு.....கூட அலட்டி எழுத மாட்டார்..மற்றவர்களை சீன்டி பார்ப்பதும் இல்லை.....எப்பவும் வெளிப்படை பேச்சு..மற்ற உறவுகளை கவனிப்பதிலும் வாத்தியார் அந்த மாதிரி..உறவுகள் 5000 அல்லது 10000 ஆயிரம் கருத்து எழுதி முடித்தால்..அவர்களுக்கு புது திரி திறந்து வாழ்த்து சொல்லி மற்றவர்களையும் வாழ்த்த செய்பவர்....வாத்தியாரும் ஒரு சில ஆக்கங்களை யாழிழ் எழுதி இருந்தார்..அதிலும் கோயில் சம்மந்தமாக்க எழுதி இருந்தார்....அடுத்த வருடம் நடக்க இருக்கும் பீபா உலக கோப்பை விளையாட்டில் யாழிழ் வாத்தியின் ஆதீக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்....மற்ற உறவுகளைப் போல் வாத்தியும் நல்ல ஒரு உறவு (7) டங்கு இசைக்கலைஞன் இசைக்கலைஞன் அண்ணா..யாழில்யார் தன்னும் இவருடன் சீன்டி பார்த்தால் கூட கோவப் படமாட்டார்..பொறுமையா பதில் அளிப்பார்...நான் கவனித்த மட்டில் இவர சீன்டிப் பார்க்கிற ஆக்கள் எல்லாம் 50 கருத்துக்கு உள்ளை எழுதின ஆட்கள் தான் இவர கூட சீன்டி பார்ப்பது ...இசைக்கலைஞன் அண்ணாவுக்கு யாழ்ழுக்கு வெளியிலும் ஒரு சில ரசிகர்கள் இருக்கினம் இவரின் எழுத்தை விரும்பி வாசிக்க...என்ர நெருங்கிய உறவு சொன்னது இது தான் இசைக்கலைஞன் அண்ணா நல்ல ஒரு கருத்தாளர் என்று (வாழ்த்துக்கள் அண்ணா... ) யாழிழ் நான் நேசிக்கும் உறவுகளில் இசைக்கலைஞன் அண்ணாவும் ஒரு ஆள்..... (8) தமிழ் அரசு தமிழ் அரசு அண்ணா...யாழின் புயல் என்று கூட இவர சொல்லலாம்...தீவிர ஈழ ஆதரவாளர்..ஒரு தருடனும் முரன் படுவது இல்லை தானும் தன்ர பாடும்...இவர் யாழிற்கு ஆற்றும் பணி பெரியது...உறவுகளை காணாட்டி கூட..காணவில்லை திரிக்கு சென்றும் ஆக்களை தேடுவார்..தெரியாத‌தை கேட்டால் பொருமையா சொல்லியும் குடுப்பார்.... (9) நிலாமதி நிலாமதி அக்கா...இந்த அக்காவை பற்றி கூட எழுதலாம்...எல்லாருடனும் நல்ல மாதிரி பழகும் ஒரு உறவு...ஆரம்ப காலத்தில் தனி மடலில் சுகம் விசாரிப்பா...நான் எழுத்துப் பிழை விட்டு எழுதும் தமிழை பார்த்து கவலைப் பட்ட ஆட்களில் நிலா அக்காவும் ஒரு ஆள்....ஒழுங்காய் எழுதனும் என்று ஊக்கம் தருவா.நான் அவாக்கு வைச்ச பெயர் டீச்சர் ….நிலா அக்காவை இப்ப பெரிதாக்க யாழிழ் காணக் கிடைப்பது இல்லை...யாழிழ் நான் எழுதின கதையை அடிக்கடி ஆரம்பத்தில் நினைவு படுத்துவா...நிலாக்க கூட கருத்தாடின அந்த நாட்கள் மிகவும் சந்தோசமான நாட்கள்..... (10) நெடுங்கால போவான் நெடுங்ஸ் அண்ணா...யாழின் அறிவாளி என்று கூட இவர சொல்லலாம்...நெடுங்ஸ் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கு...இவரும் தீவிர ஈழ ஆதரவாளர்...இவருடன் எதிர் அணியினர் கருத்து எழுதி ஜெயிக்கிறது ரொம்ப கஸ்ரம்....நல்ல ஒரு எழுத்தாளர்..யாழிழ் நான் அதிக பச்சை குத்தினது என்றால் அது நெடுங்ஸ் அண்ணாவின் கருத்துக்கு தான்...ஈழ விசயத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் நல்லா ஒத்துப் போக்கும்...நெடுங்ஸ் அண்ணாவுக்கு விஞ்ஞான ரீதியிலா பல‌ விடையங்கள் தெரியும் அதிலும் நாசா சம்மந்தமாய்.. உங்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்.... தொடரும் எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்
 6. 22 points
  ஒரு பிச்சைக்காறனின் வெட்கம்.... (சிறு கதை) ஒரு நாள் மனைவியுடன் புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன் கைத்தொலைபேசியில் முகநூலில் ஒன்றிப்போயிருந்த என்னை ஒரு தரிப்பிடத்தில் ஏறி பிச்சை கேட்கத்தொடங்கிய ஒருவரின் குரல் இடை மறித்தது அநேகமாக இவ்வாறானவர்களைக்கண்டால் வாகனத்தில் என்றால் ஐன்னல்களை மூடிவிடுவேன் புகையிரதத்தில் என்றால் தோழிலிருக்கும் துண்டால் மூக்கை மூடிக்கொள்வது தான் எனது வழமை புகையிரதத்தில் ஏறி பிச்சை கேட்பவர்கள் ஏதாவது ஒரு கதை சொல்வார்கள் இது வழமையானது தான் ஆனால் இவர் தனது வாழ்வு பற்றி சொல்லத்தொடங்கியது வித்தியாசமாக இருந்தது அவர் ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லும்போதும் அதன் வலியை உணர்ந்தது அதை சொல்ல மிகவும் சிரமப்பட்டது ஒவ்வொரு வார்த்தைக்கும் கண் கலங்கி வெட்கப்பட்டது அவர் இதை விரும்பவில்லை ஆனால் வேறு வழி இன்று தெரியவில்லை என்ற போது உடல் முழுவதும் கூசியது அந்த வலியை நானும் உணர்ந்தேன் இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது என்பதை வாழ்வில் முதன்முதலாக உணர்ந்தேன் பொக்கற்றுக்குள் கை வைத்த என்னை மனைவி கேட்டார் திடகாத்திரமான எவருக்கும் பிச்சை போடமாட்டீர்களே இன்று என்னாச்சு என்று? அவன் ரொம்ப வெட்கப்பட்டு பிச்சை கேட்கின்றான் எவருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று காசு போடும் போது தான் பார்த்தேன் நான் மட்டுமல்ல பலரும் கண்களில் ஒருவித கனிவுடன் பணம் போட்டபடி இருந்தனர். (இந்தக்கதையை எழுதத்தூண்டிய தம்பி நிழலிக்கு நன்றிகள்)
 7. 22 points
  பார்க்கும் கண்களே துடிக்கும் காட்சி பாலனின் மேனியில் பலதுளைகள் கொடுங்கோற் சிங்களம் செய்த கொடுமை கொலைக்களத்தின் அதி உச்சக்கட்டம் அவன் விழிகளில் தெரிகின்றது அவன் ஒரு வீரன் மகன் என்று அவன் விழிகளைக் கண்டு மிரண்டு அவன் மேனியில் துளைத்ததா குண்டு சிங்களம் செய்த கொலை வேள்வியில் எங்கள் குலவிளக்கை எரித்ததா ஈனம் இல்லாச் சிங்களம் ஆடிய கொலைவெறியில் தங்கள் இச்சையைத் தீர்த்ததா இச்சிறு வேங்கையின் பொற்திருவுருவில் பாரெங்கும் பரந்திருக்கும் நாமெல்லாம் கோர்த்திடுவோம் கரங்களைக் கொடுங் கோலனை ஒளித்திடக் கூடிடுவோம் ஒன்றாய் கொலைக்களத்தின் உச்சத்தைப் பரப்பிடுவோம் உலகமெங்கும் எடுத்திடுவோம் சபதம் எங்கள் பாலனின் பாதத்தில்
 8. 22 points
  தாண்டினேன்...தாண்டினேன் சாறம் கிழிய முட்கம்பி வேலி தாண்டினேன் மழையிருட்டிலும் உன்முகம் காண தாண்டினேன்...தாண்டினேன் அலம்பல் வேலி காலில் கீறுப்பட தாண்டினேன் உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க தாண்டினேன்...தாண்டினேன் காவோலை வேலி சரசரக்க தாண்டினேன் உன் வைடூரிய வார்த்தைகளுக்காக தாண்டினேன் தாண்டினேன் என்வீட்டு வீமனின் உறுமலையும் மீறி தாண்டினேன் உன் அழகுமஞ்சத்தில் அமைதியாக......... தாண்டினோம் தாண்டினோம் இருவரும் தாண்டினோம் இன்றோ நீ அங்கே நான் இங்கே உனக்கு நான்கு எனக்கு நான்கு இதில் யார் தாண்டவர்?
 9. 21 points
  அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை. கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது. எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம். எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள் அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது. ---------------- அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை. "என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை. அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர். அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர். எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர். ------------------------------------- வெளியில் நிற்கின்றோம். பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம். பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது. அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது. அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன். அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன். --------------------------------------------- இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது. இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார். அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார். சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது. ----------------- எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள். எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை. மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன். ---------------------------- அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார். இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது. அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார். --------------------------------------- அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது. இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார், கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன். மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார், அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை. நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை. ---------------------------------------------------------------------- மீண்டும் காலை உதறி விடுகின்றேன். திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு. அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன் வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன். என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா. செத்தே போயிருந்தான். நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது. உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம். அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை. அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார். ------------------ நான் இப்ப லண்டன் வந்து விட்டேன். அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது. இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது. பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது மறுமுனையில் இருந்தவர் அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார். என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது. அண்ணாவை புசித்த புழு. --------------------------------------------- மார்ச் 18, 2014
 10. 21 points
  அவர்கள் அவரை பீற்றர் என்று சத்தமாக அழைத்தமையால் தான் அவர் இருக்கும் திசையை நான் பார்க்க தொடங்கினேன். அதுவரைக்கும் நான் புத்தகம் வாசித்து கொண்டு இருந்தமையால் அவரை கவனிக்கவில்லை. அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தவர்களுக்கு அவர் நன்கு பரிச்சயமானவர் போல அவர்கள் தோழமையுடன் அவரை அணுகிக் கொண்டு இருந்தனர். இப்படியானவரை எப்படி இங்கு அனுமதிக்கின்றார்கள் என புரியவில்லை. மனசுள் கொஞ்சம் கோபமும் எழத் தொடங்குகியது. நேரம் நடு இரவு 10 மணியை தாண்டி சென்று கொண்டு இருந்தது. 8 மணிக்கே அருகில் இருக்கும் பொது மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்து விட்டேன். எல்லாம் பார்த்து என்ன பிரச்சனை என்று சொல்ல இன்னும் நான்கு மணி நேரமாவது செல்லும் சில வேளைகளில் என்னை மறிச்சு வைத்து சில நாட்கள் சிகிச்சை அளித்தாலும் அளிப்பார்கள். அப்படி தங்க வேண்டி வந்தால் லப் டொப்பை (Laptop) கொண்டு வர மனைவிக்கு சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் வேலையில் இருக்கும் போது பகல் 10 மணி இருக்கும், திடீர் என்று தலை சுற்றியது. கண்ணுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. உடல் தன் சமநிலையை தொலைத்து விட்டது போன்று இருந்தது. எல்லாம் மூன்று வினாடிகள் தான். பிறகு சரியாகி விட்டது. பிறகு பின்னேரம் 5 மணி இருக்கும் அதே மாதிரி ஒரு தலை சுற்றல், நட்சத்திரங்கள் பறப்பு, சமநிலை குழம்புதல்.. எல்லாம் மூன்று வினாடிகள் தான், பிறகு சரியாகி விட்டது அடுத்து வந்த சனி ஞாயிறு தினங்களில் தலை சுற்றல் வர வில்லை. இடையில் ஒருக்கால் பிரஷர் செக் பண்ண வேண்டும் என்று நினைத்தும் நேரம் கிடைக்கவில்லை. திங்கட் கிழமை வேலைக்கு வந்த பிறகும் பிரச்சனை ஒன்றும் இருக்கவில்லை. பின்னேரம் வேலையில் இருந்து வீட்டுக்கு காரில் ஹை வேயில் 120 கிலோ மீற்றர் வேகத்தில் போய்க் கொண்டு இருக்கின்றேன். திடீர் என்று மீண்டும் அதே தலை சுற்றல், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தமாதிரி இருக்கின்றது, வெள்ளிக் கிழமை வந்த அதே நட்சத்திரங்க்கள் திரும்பவும் வந்து மின்னிக்கொண்டு நின்றன.. பாதை ஒரு சுழட்டு சுழற்றியது...ஆனால் எல்லாம் மூன்று வினாடிகள் தான். அடுத்தது என்ன செய்வது என யோசித்தேன். காரை ஓரமாக நிப்பாட்டிட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்ப்பமா என நினைத்தேன். ஆனால் ஒரு அசட்டு தைரியம் (அல்லது முட்டாள் தனம்). காரை நிறுத்தாமல் வீட்டுக்கு அதே வேகத்தில் வந்து சேர்ந்து விட்டேன். வீட்டை வந்தும் ஒன்றும் சொல்லாமல் மனைவியை வோல் மார்ட்டுக்கு (Walmart) வா என்று கூட்டிக் கொண்டு போய் அங்கு பிரஷரை செக் பண்ணினால் அது தாறு மாறாக 182/120 என்று காட்டியது. அவ்வளவு தான் அடுத்த வினாடியே அவசர பிரிவுக்கு மனைவி அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கனடாவில் அவசர பிரிவுக்கு வந்தால் முதலில் தாதி வந்து பிரஷர் / இதய துடிப்பு, உடல் வெப்ப நிலை எல்லாம் செக் பண்ணி பார்ப்பார். ஒன்றும் பெரியளவு பயப்படும் படி இல்லை என்றால் மருத்துவர்களை சந்திக்க ஆகக் குறைந்தது 5 மணித்தியாலங்களாவது காத்திருக்க வேண்டும். சில வேளை 8 மணித்தியாலங்களும் எடுக்கும். இடையில் வருத்தம் கூடுவது போன்று இருந்தால் போய் சொன்னால் கவனிப்பார்கள். நேரம் கனக்க போகும் என்று தெரியும் என்பதால் தமிழ் நதியின் 'பார்த்தீனியம்' நாவலை வாசிக்க தொடங்குவம் என்று கையோடு கொண்டு போயிருந்தேன். இரவில் பிள்ளைகள் தனிய வீட்டில் விட கூடாது என மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஆஸ்பத்திரி கதிரையில் இருந்து அங்கும் இங்கும் நோட்டமிட்டேன். கண்ணுக்கு குளிர்ச்சியா ஒருத்தியும் இல்லை. எல்லா கதிரைகளும் நிரம்பி வழிந்தன. ஒவ்வொருவரது முகங்களும் ஒவ்வொரு விதமான வேதனைகளை கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருந்தன. ஒரு வயதான பெண்மணி தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார். ஒரு குழந்தை தன் அப்பாவுடன் மாத்திரம் வந்து அவரது மடியில் தலை வைத்து படுத்துக் கிடந்தது. என் மகளின் நினைவு வந்தது. நான் திரும்பி போகும் மட்டும் முழித்து இருக்க கூடிய சீவன் அது. ஒருவர் காலில் பெரிய காயத்துடன் வந்து இருந்தார். ஒரு சோடி தம்மை மறந்து முத்தமிட்டுக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த பெண்மணி இடைக்கிடை தான் முத்தம் கொடுப்பதை மற்றவர்கள் பார்க்கின்றனரா என்று நோட்டம் வேறு விட்டுக் கொண்டு இருந்தார். சுவாரசியமாக எதுவும் இல்லாமையால் பார்த்தீனியத்தை வாசிக்க தொடங்கி அதற்குள் மூழ்கி கொண்டு இருக்கும் போது தான் "பீற்றர் பீற்றர்" என்று அவரை கொஞ்சம் சத்தமாக அழைத்தது கேட்டது. யாரந்த பீற்றர் என நோட்டமிட்டேன். ஒன்றுக்கு மூன்று அழுக்கடைந்த உடுப்புகளை அணிந்து கொண்டு, தாடிக்குள் முகத்தின் முக்கால்வாசியை மறைத்துக் கொண்டு ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் எவரும் அமர்ந்து இருக்கவில்லி. ஒரு நைந்து போன ஸ்கூல் பாக் ஒன்றும் இருந்தது. அவர் வீடற்ற ஒருவர் என உடனே புரிந்து போனது. அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்தார். இடைக்கிடை அவர் பெரும் சத்தம் எழுப்பினார். அழுகின்றார் போன்றும் இருந்தது. திடீர் என்று தனக்கு முன்னால் இருந்த பெரும் இலையான் கூட்டத்தை கலைப்பது போன்று இரண்டு கைகளாலும் எதையோ விரட்டினார். கத்தினார், சத்தமிட்டார், அழுதார், சிரித்தார் பின் அமைதியானார். அவர் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டும் எதையோ / எவரையோ விரட்டிக் கொண்டும் இருந்தார். அப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் பாதுகாப்பு உத்தியோகத்தவர்கள் அவரை கொஞ்சம் கண்டிப்புடன் "பீற்றர் பீற்றர்" என அழைத்து அதட்டினர். ஒவ்வொரு அதட்டலின் பின்பும் அவர் அமைதியானார்.. ஏற்கனவே சனம் வருத்தத்துடன் வந்து இருக்கு, இவர்கள் ஏன் இவரை விரட்டாமல் உள்ளே வைத்து அனுமதிக்கின்றார்கள் என எரிச்சல் வந்தது. "ஏன் இப்படியானவர்களை விரட்டி விட்டு உன்னை மாதிரி ஆக்களுக்கு மட்டும்தானா இந்த உலகம் மிஞ்ச வேண்டும்" என்று இன்னொரு மூலையில் இருந்து புத்தி கேள்வி கேட்டது என்னால் அதன் பின் புத்தகம் மீது கவனத்தை செலுத்த முடியவில்லை. ஏதோ ஒன்று அவர் பால் ஈர்த்துக் கொண்டே இருந்தது. அவர் என்ன செய்கின்றார், எப்படி கண்களை மூடுகின்றார், எப்ப கைகளை ஆட்டி ஆட்டி விரட்டுகின்றார்" என அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். அதுவும் சுவாரசியமாக இருந்தது 'க்ளக்' என்று ஒரு சத்தம் அருகில் இருந்த சோடி தாம் ஆளாளுக்கு பருக்கிக் கொண்டு இருந்த கோப்பியை தவறுதலாக சிந்தி விட்டார்கள். தரையெல்லாம் கோப்பி. . 'ஒரு கோப்பியை கூட ஒழுங்காக ஆளாளுக்கு பருக்க தெரியவில்லை...உதுக்குள ஆளாளுக்கு முத்தம் வேற...மூதேசிகள்' சிந்திய கோப்பியில் இருந்து வந்த மணம் வயிற்றை புரட்டுவது போல இருந்தது. கொஞ்சம் அங்கால பார்த்தால் ஒருவர் தான் சாப்பிட்டுக் ககொண்டு இருந்த பொப் கோர்னை சிந்தி விட்டு இருந்ததும் தெரிந்தது. நடு இரவையும் தாண்டி பலர் காத்திருப்பதால் பலர் பசிக்கு ஏதாவது வாங்கி உண்டு கொண்டு இருந்தனர். சிந்திய உணவு பலரது இருக்கைகளின் கூழ் இருந்தது. 'சாப்பாட்டை கூட சிந்தாமல் சாப்பிட தெரியாத சனம்". நேரம் போக போக எதுக்கெல்லாமோ மனம் எரிச்சலடைந்து கொண்டு இருந்தது. பீற்றரின் இருக்கையின் கீழ் எதுவும் இருக்கவில்லை. சுத்தமாக இருந்தது. சில நிமிடங்களில் என் பெயரை சொல்லி உள்ளே அழைக்கின்றார்கள். டொக்டர் என்ன நடந்தது எனக் கேட்டு லைட்டை அணைத்தார் (ரேப் பண்ண போறாரோ) பின் கண்களை அங்கால இங்கால உருட்டி பிரட்டி பார்க்க சொன்னார் (மாறி கண் வைத்தியரிடம் வந்து விட்டேனா). மூக்குக்கு முன்னால் நேராக விரலை வைத்து அதையே உத்து பார்க்க சொன்னார். தன் தலையை சிலுப்பி கொண்டார். "பிரஷர் கூடவா டொக்டர்" எனக் கேட்டேன். "இல்லை, பிரஷர் கூடினால் ஒரு நாளும் தலை சுற்றல் வராது. நீ தலை சுற்றியதால் பயந்து போய் விட்டாய், அதுதான் உன் பிரஷர் கூடக் காட்டியது. ஆனால் 182/120 எல்லாம் அதிகமாக பயப்படும் அளவுக்கானது இல்லை." என்றார் (அப்ப பிரசர் கூடி நெஞ்சு பிளந்தால் தான் அடுத்த முறை வர வேண்டும் போல) "எதுக்கும் இரத்தம் சோதித்து பார்க்க வேண்டும்" என்று தாதியை கூப்பிட வந்த தாதியும் வஞ்சகம் இல்லாமல் நாலு சிறு போத்தல்களில் இரத்தம் எடுத்துக் விட்டு "ரிசல்ட்ஸ் வரும் வரைக்கும் வெளியே காத்திரு" என்றார் "எவ்வளவு நேரம் எடுக்கும்" "ஒன்றரை மணித்தியாலமாவது எடுக்கும்' மணி 12:30 தாண்டி விட்டு இருந்தது. மீண்டும் காத்திருப்போருக்கான வராந்தாவுக்கு வருகின்றேன். வராந்தா பளிச் என்று இருக்குது. கீழே கொட்டப்பட்ட உணவு, கோப்பி, பொப் கோர்ன் என்று எதுவுமே இல்லை. எல்லாம் துடைத்து துப்பரவாக இருந்தது. "இந்த இரவிலும் சுத்தப்படுத்தி இருக்கின்றார்கள்... கனடா கனடா தான்" என நினைத்து கொண்டு பீற்றர் இன்னும் இருக்கின்றாரா என பார்க்கின்றேன். அந்த சுத்தமான இடத்தில் ஒரு அழுக்கு மூட்டையாக அவர் அமர்ந்து இருந்தார். மீண்டும் எரிச்சலாக இருந்தது. "ஏன் இன்னும் இந்த மனுசனை விரட்டாமல் விட்டு இருக்கின்றார்கள்" கொஞ்சம் களைப்பாக இருந்தது. பாவி மகள் 4 போத்தல் இரத்தம் எடுத்ததால் இருக்குமோ என நினைத்து உள்ளே இருக்கும் கோப்பி கடைக்கு போய் ஒரு டபிள் டபிள் கோப்பி வாங்கி வந்து குடிக்க தொட்ங்கினேன் என் மொபைல் அடித்தது. மனைவி நிலவரம் அறிய தொலைபேசினார். கால்களுக்கு இடையில் கோப்பியை வைத்து விட்டு அவருடன் கதைத்து முடித்தேன். பின் நாளைக்கு வேலைக்கு லேட்டாக வருவன் என்று ஒரு மெயிலையும் மானேஜருக்கு அனுப்பி விட்டு கால்களை மாற்றி வைக்கும் போது கோப்பியை தட்டி விட்டேன். நிலத்தில் கோப்பி சிறு உலகப் படம் போல திக்குகள் நீள பரவியது "இவனுக்கு கோப்பியை கூட ஒழுங்காக குடிக்க தெரியவில்லை" என சனம் நினைக்கும் என்றெண்ணி பார்க்கின்றேன். ஆரும் என்னை கவனித்த மாதிரி தெரியவில்லை. அவரவருக்கான உலகில் அவர்கள் இருந்தனர். கனடா மக்களின் பொதுவான சுபாவம் அது. எல்லாரும் அமர்ந்த இடங்கள் சுத்தமாக இருக்க என் இருக்கையின் கீழ் கோப்பி சிந்தி அழுக்காக கிடந்தது. பீற்றர் என்னை பார்க்கின்றாரா என கவனித்தேன். அவர் மீண்டும் எதையோ காற்றில் கலைத்து கொண்டு இருந்தார். மெதுவாக எழும்பி இன்னொரு இருக்கைக்கு சென்று நல்ல பிள்ளையாக அமர்ந்து விட்டேன். ஒருவரும் கவனிக்கவில்லை. ஒரு மணித்தியாலம் கழிய என் பெயரை மீண்டும் அழைக்கின்றனர். இரத்த பரிசோதனையிலும் ஒரு பிரச்சனையும் இல்லை. "அப்ப ஏன் டொக்டர் தலை சுற்றியது"? "உனக்கு வெர்ட்டிகோ (Vertigo) பிரச்சனை.." என்றார் "அப்படி என்றா;..."? "காதுக்குள் உடலை சமனிலையில் பேணும் திரவம் இருக்குது..அது சில நேரம் குளம்பிவிடும் ..அதுதான் தலை சுற்றியது உனக்கு" "அப்ப இதுக்கு மருந்து ஏதும்" "ஒன்றும் தேவையில்லை..இதில் சொல்லியிருக்கிற இலேசான உடற்பயிற்சியை செய்..அதோட கொஞ்சம் உயரமான தலையணை போட்டு படு" என்றார் டொக்டர்'. அத்துடன் மீண்டும் பிரஷர் செக் பண்ணும் போது அது நல்ல பிள்ளை போல 132/90 என்று காட்டியது..." மனசு நிம்மதியானது. ஐஞ்சு மணித்தியாலம் காத்திருந்தது வீண் என நினைத்தாலும் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்று மனம் அறிந்து சந்தோசப்பட்டது. வாயில் "ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேகம் நீ தான் " எனும் பாடல் வந்து ஒட்டிக் கொண்டது. வராந்தாவுக்கு வந்து வெளியேறும் கதவை அடையும் போது தான் பீற்றரின் நினைவு வந்தது. மீண்டும் வராந்தவுக்குள் வந்து பீற்றர் அமர்ந்து இருந்த இடத்தை பார்க்கின்றேன் அதில் அவர் இல்லை எங்கே போயிருப்பார் என சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் பீற்றரை காணுகின்றேன்.. . நான் முன்னர் அமர்ந்து இருந்த இடத்தில் குனிந்து இருந்த படி ஏதோ செய்கின்றார் என்ன செய்கின்றார் என வடிவாக பார்க்கின்றேன் நான் கொட்டிய கோப்பியை ஒரு துணியால் துடைத்து விட்டு எழுந்து கொள்கின்றார் வராந்தா மீண்டும் பளிச் என்று ஆகின்றது .
 11. 21 points
  நடுவிலை நாலு நாளைக்காணோம் செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. :( :( 17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில் வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர் தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்திய சாலைக்கு போகலாமா என்று நினைத்தாலும் தலைச்சுத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போறதா என்று நினைத்துவிட்டு பேசாமல் படுத்து விட்டேன் சாமம்மதாண்டி இரண்டு மணியளவில் என்னை நித்திரையால் எழுப்பி என்னாலை முடியலை ஆஸ்பத்திரிக்கு பேவம் என்றதும் அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டு நான் வேலை செய்யும் இடத்திற்கு முன்னால் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் அவசர பிரிவில் சேர்க்கிறேன்.அதிகாலை என்பதால் பத்து நிமிடத்திலேயே வைத்தியசாலைக்கு போய்விட்டிருந்தேன். அவசரப் பிரிவில் வழைமைபோல குளுக்கோஸ் ஏத்திவிட்டு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து இரத்த பரிசோதனையோடு வந்த வைத்தியர் இரத்தத்தில் உப்பு (சோடியம்)அளவு பத்தவில்லை அதுதான் தலைசுற்றுகிறது என்றுவிட்டு தாதியிடம் உப்பை குளுக்கோசில் கலந்து ஏற்றச்சொல்லிவிட்டு போய் விட்டார். அட சாதாரண உப்புப் பிரச்சனை என நினைத்து படி போனில் கேம் விழையாடிக்கொண்டிருந்தேன் மனிசி திடீரென படுக்கையில் இருந்து எழுந்து இருக்க முயற்சி செய்ய எழும்பிப் போய் அவரை படுக்கும்படி சொல்லி படுக்கையோடு சரிக்க அவருக்கு திடீரென வலிப்பு வந்த மாதிரி கை கால்களை இழுக்க தாதிகள் வைத்தியர்எல்லாருமே ஓடிவவந்து அமத்திப் பிடித்தார்கள் ஒரு சில வினாடிகளில் மயக்க நிலைக்குப் போய் விட்டார். இப்பதான் மனதிலை லேசாய் ஒரு கலக்கம் வரத் தொடங்கியிருந்தது. வைத்தியரிடம் பிரச்சனை ஒண்டும் இல்லையா ??எண்டதும் இல்லை உடல் உப்புபை உடனடியாக ஏற்றுக் கொள்ள மறுத்ததால்தான் அப்படி வலிப்பு வந்தது சில மணித்தியாலங்கள் நன்றாக நித்திரை கொள்வார் அதன் பின்னர் எல்லாம் சரியாகி விடும் என்றார்.ஆனாலும் மனசிற்குள் ஏதோ ஒரு பயம் புதிதாய் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. இப்பொழுது காலை பத்துமணியாகியிருந்தது அதற்கிடையில் இரண்டு தடைவை மீண்டும் இரத்தப் பரிசோதனையும் ஒரு I.R.M மற்றும் Radiogramபரிசேதனையும் எடுத்து முடித்திருந்தார்கள்.எனக்கும் கடையை திறக்க வேண்டும் முதலேயே முதலாளிக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு கடையை திறந்து வேலையாட்களிடம் சொல்லி விட்டு மீண்டும் வைத்திய சாலைக்கு போயிருந்தேன். மனைவியோ மாலை மூன்று மணியளவில் கண்விழித்து என்னையும் சுற்றி வர பார்த்தார் அவரின் கையைப் பிடித்து என்ன செய்யிது?? என்று கேட்டேன் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்பது மட்டுமல்ல எதுவுமே நினைவில் இல்லை பொருத்தியிருந்த வயர்களை பிடுக்கி விட்டு எழுந்து போக முயற்சித்தார் உடனே நானும் தாதிகளும் ஓடிவந்து அமத்திப் பிடிக்க மருத்துவர் அவரிற்கு மயக்க ஊசி பேடச் சொல்ல ஒரு தாதி அவசரமாக மயக்க மருந்தை செலுத்தினாள். எனக்கோ இன்னமும் குழப்பமாகப் போய் விட்டது வைத்தியரைப் பார்த்தேன் அவரோ ஒன்றுமில்லை மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு விடுபட்டுப் போய் விட்டது அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் அதற்கு ஏற்ற வசதிகள் இங்கு இல்லை எனவே அந்த வசதிகள் உள்ள இன்னொரு வைத்திய சாலைக்கு அனுப்பப் போகிறோம் என்றார். என்னடா இவன் ஏதோ கரண்டு கட்டாயிட்டுது திரும்ப வரும் என்கிற மாதிரி சொல்லுறானே என்று யோசித்துக் கொண்டிருக்க மயக்க நிலையில் இருந்து கோமா நிலைக்கு சென்று விட்டிருந்தார். ஆனால் காரணம் என்ன என்று எதுவும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கவில்லை. மனைவியை அம்புலன்சில் இன்னொரு பெரிய அரச வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருந்தார்கள்.நானும் கடைக்குப் போய் விடயத்தை சொல்லி விட்டு அடுத்த வைத்தியசாலையை தேடிப் போய் கண்டு பிடித்து விட்டிருந்தேன்.. வைத்திய சாலைக்கு எதிரேயே இரண்டு சவப் பெட்டிக் கடைகள் இருந்தது . சே..இவங்கள் என்ன அப சகுனம் மாதிரி ஆஸ்பத்திரி வாசல்லையே கடையை வைச்சிருக்கிறாங்கள் எண்டு யோசிச் சாலும் வியாபாரம் எங்கு நடக்குமோ அங்கை தானே கடையை போடுவாங்கள் என்றபடி பல ஏக்கர் கணக்கில் பரந்து கிடந்த வைத்தியசாலையில் புகுந்து Re animation (மீள ஒழுங்கு படுத்துதல்)பகுதியை அடைந்து அங்கு இருந்த அழைப்பு மணியை அழைத்து மனைவியின் பெயரையும் விடயத்தையும் சொல்கிறேன் அங்கேயே இருந்கள் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று பதில் வந்திருந்தது.நேரத்தைப் பார்த்தேன் மாலை ஏழு மணி அது விசேட பிரிவு என்பதால் அவர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது அதனால் அங்கு இருந்த கதிரையில் நான் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தேன். அப்படி நடந்தால் சே..நடக்காது அடுத்தது என்ன செய்யலாம்?? என்னத்தை செய்ய என்று மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது நானே கேள்விகள் கேட்டு நானே பதில் சொல்லி எனக்கு நானே ஆறுதல் சொல்லியபடி இருந்தபோது சில நண்பர்களிற்கும் மனைவி வீட்டிற்கும் போனடித்து விடயத்தை சொல்லி விட்டு முகப் புத்தகத்திலும் யாழிலும் பதிவிட்டு விட்டு இருக்கும் போது தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தது. அதனால் நேரம் போனது தெரியாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி விட்ருந்தது யாரும் என்னைக் கூப்பிடுவதாயில்லை . என்னை மறந்திருப்பாங்களோ?? அல்லது என்னை காவலிருக்க சொன்னவன் வேலை முடிஞ்சு போயிருப்பானோ??என்று யோசித்தக் கொண்டிருக்கும்போதே ஒருவன் வந்து தன்னை அறிமுகம் செய்து நான்தான் உனது மனைவியை கவனிக்கிறேன் உள்ளே வா என்று அழைத்துப் போனான். ஒரு அறையில் மனிசியின் தலையில் கவசம் போல் போட்டு உடல் முழுக்க ஏகப்பட்ட வயர்கள் கொழுவிய நிலையில் அவதார் படத்தில் விண்வெளிக்கு போகும் ஒருத்தனை தயார் செய்வது போல வைத்திருந்தார்கள்.கணணித் திரையில் கோடுகள். புள்ளிகள்.இலக்கங்கள் என ஓடிக்கொண்டிருந்தது. என்னை அழைத்துப் போனவர் என்னைப் பார்த்து நாங்களும் பரிசோதனைகள் செய்து விட்டோம் பயங்கரமான பிரச்சனைகள் ஒன்றும் இல்லை ஒரு போத்தலிற்குள் கல்லைப் போட்டு குலுக்கியது போல மூளை குளப்பமடைந்திருக்கின்றது அதனை மீள ஒழுங்கமைக்கிறோம் அது ஒழுங்காக வருவதற்கு சில மணித்தியாலங்கள் ஆகலாம். அல்லது சில நாட்களும் ஆகலாம் அதை உறுதியாக சொல்ல முடியாது ஆனால் வரும் என்றார். வராமலேயே போய்விடுமா??என்று கேட்க நினைத்தாலும்.. சரி இதற்கு காரணம் என்ன என்று கேட்டேன். அதுதான் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருப்போம். நீ இப்போ வீட்டிற்கு போகலாம் நாளை மாலை வா அதே நேரம் கடந்த காலங்களில் என்னென்ன மருத்துவம் பெற்றார் என்கிற விபரங்கள் அவர் பாவிக்கும் மருந்துகள் அனைத்தையும் எடுக்கொண்டு நாளை வரவும் என்று சொல்லி விட்டு போய் விட்டார். அழகான தாதி ஒருவர் வந்து விசிட்டிங் காட் ஒன்றை நீட்டி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றதும் அப்படியே அவளை உற்றுப் பார்க்க மனதிற்குள் கவுண்டமணி வந்து நாயே..நாயே..இந்த நேரத்திலையுமா..என்று திட்ட அவள் உங்கள் மனைவியின் உடல் நிலையை போனிலேயே தெரிந்து கொள்ளலாம் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விட்டாள். மறுநாள் காலை வைத்தியர் கேட்ட விபரங்கள் மருந்துகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மயக்கம் என்ன படத்தில் தனுஸ் படிக்கும் ஓட ஓட தூரம் குறையலை.. என்கிற பாடலை முணு முணுத்தபடி ஸ்கூட்டரில் வைத்திய சாலைக்கு போய்க்கொண்டிருந்தேன் மனைவியின் உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை அதே நேரம் காரணமும் கண்டு பிடிக்கபட்டிருக்கவில்லை. நான் வேலைக்கும் வைத்திய சாலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தேன். அன்று நான்காவது நாள் சனிக்கிழைமை மதியமளவில் வைத்தியசாலைக்கு போயிருந்தேன் மனைவியின் செயற்கை சுவாசக்குளாய்கள் அகற்றப் பட்டு சாதாரணமாக சுவாசிக்க விட்டிருந்தார்கள்.அதே நேரம் நான் கொடுத்த மருந்துகள் எல்லாம் வைத்தியர் பார்த்து அதனாலும் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணங்கள் இல்லையென்றதோடு மனைவி இப்பொழுது கோமா நிலையில் இருந்து மீண்டு ஆழ்ந்த உறக்க நிலைக்கு வந்துள்ளார் இனி அவராகபழைய நிலைக்கு திரும்பவேண்டும்.இப்பொழுது நீங்கள் கதைப்பதெல்லாம் அவரிற்கு புரியும் எனவே அவராக கண்விழித்து பதில் சொல்லும் வரை கதைத்துக்கொண்டே இருங்கள் இன்றும் அவர் சுய நிலைக்கு திரும்பாவிட்டால் உடலில் செயலிழந்து போன செல்களையெல்லாம் செயற்பட வைக்கும் Cortisone என்கிற மருந்தை நாளை செலுத்துவோம் என்று விட்டு போய் விட்டார். நானும் மனைவின்கு பக்கத்தில் அமர்ந்திருந்து பழைய சம்பவங்கள் நகைச்சுவையான கதைககள் மகளைப்பற்றி என்று சொல்லிக் கொண்டேயிருந்தோடு அவரது தாயார் சகோதரிகளிற்கும் அவ்வப்போது போனடித்து அவரது காதில் வைத்துக்கொண்டேயிருந்தேன் .நேரம் ஒன்று இரண்டு என்று ஜந்தரை மணித்தியாலங்கள் ஓடிவிட்டிருந்தது இடையில் வைத்தியரும் ஒரு தடைவை வந்து சத்தமாக கூப்பிட்டு கன்னத்தில் தட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டிருந்தார் எந்த அசைவும் இல்லை அதே நேரம் தான் மனிசி ஆசையாய் வளர்க்கும் பூனை மீனுவை நான் ஒரு தடைவை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்தது நினைவிற்கு வரவே போனை எடுத்து அந்த வீடியோவை போட்டு இங்கை பார் மீனு வந்திருக்கு பசிக்குதாம் சாப்பாடு வேணுமாம் என்று அது கத்தும் சத்தத்தினை அவரது காதருகே பிடித்தபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியிருந்தது.ங்கொய்யாலை ...ஒருத்தன் சாப்பாடு தண்ணியில்லாமல் தொண்டை வறண்டு 5 மணித்தியாலாமா கதைக்கிறன் என்னைப் பற்றி கவலையில்லை பூனைக்கு சாப்பாடு இல்லையெண்டதும் அழுகை வருதா ??எழும்பு உனக்கு ஆறுலாய் இருக்கு என்று நினைச்சாலும்.ஒரு அசைவாவது தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து கதைத்துக்கொண்டேயிருந்தேன் ஒரு அரை மணித்தியாலம் கழித்து லேசாய் கண்விழித்தார் கடவுளே இந்தமுறை என்னை அவருக்கு அடையளம் தெரியவேணும் என மனது வேண்டிக் கொண்டது. என்னை பார்த்தவர் ''என்னங்க ஆச்சு?? ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயங்கி விட்டார். திரும்ப ஒரு பத்து நிமிடம் கழித்து கண்விழித்து அதே என்னங்க ஆச்சு?? நானும்.ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயக்கம் .இப்படியாக ஒரு பத்துத் தடைவை போய்க்கொண்டேயிருந்தது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டிருந்தது.இரண்டு கிழைமைக்கு முதல்தான் நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை திருட்டு வி.சி.டியில் பார்த்திருந்தேன் அதுக்கு தண்டனைதான் இரு என்று நினைத்தபடி வீட்டிற்கு போய் விட்டிருந்தேன். வீட்டிற்கு முன்னால் தனது நாயை மேய்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ஜோன் என்னைப் பார்த்ததும் மனைவியின் உடல் நலத்தை விசாரித்தார் இவரிற்கு வயது 81 ஒரு ஓய்வு பெற்ற பொது வைத்தியர். இன்று கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது சரிவராவிட்டால் நாளை Cortisone கொடுக்கப் போவதாக சொல்லியுள்ளார்கள் என்றதும்.முடிந்தளவு Cortisone குடுப்பதை தவிர் அதைக் கொடுத்தால் பின்னர் பக்க விளைவுகள் வரும் என்றபடி நாயை மேய்த்துக்கொண்டு போய்விட்டார். அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழைமை நான்கு நாளைக்குப் பின்னர் மனைவியின் நிலைமை வழைமைக்குத் திரும்பியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடந்தது அனைத்தும் அவரிற்கு நினைவு வரத் தொடங்கியிருந்தது.தொலைபேசியில் ஊரிற்கு அவரது குடும்பத்தோடு நன்றாக கதைத்தார்.அவரை விசேட பிரிவில் இருந்த சாதாரண அறைக்கு மாத்தியவர்கள் அவரது உடல் நிலை கொஞ்சம் தேறியதும் வீட்டிற்கு போகலாம் என்றார்கள்.பதினோராவது நாள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டிருந்தேன். ஆனால் அவர் கோமா நிலைமைக்கு போனதற்கான காரணம் இன்னமும் தெரிந்திருக்கவில்லை.அன்று மாலை மனைவியை பாரக்க ஜோன் வந்திருந்தார் அவரும் நானும் நேரம் கிடைக்கும் நேரங்களில் விஸ்கி அடித்தபடியே உலக விடயங்கள் அரசியல் என்று கிண்டிக் கிழறுவது வழைமை அன்றும் அவர் மனைவியை நலம் விசாரித்ததும் இருவருமாக வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து வழைமைபோல நான் இரண்டு கிளாசை எடுத்து விஸ்கியை பாதி நிரப்பி ஜஸ் கட்டிகளை போட்டேன் கையில் கிளாசை எடுத்தவர் இது உனது மனைவியின் உடல் நலத்திற்காக என்றபடி சியஸ் செய்தார் .அப்பாடா ....அன்று நாம் தண்ணியடிப்பதற்கான காரணம் கிடைத்து விட்டிருந்தது. ஒரு கிளாஸ் முடிந்ததுமே மனைவின் அனைத்து வைத்திய றிப்போட்டுக்களையும் கொண்டு வா..என்றார்.அனைத்தையும் கொண்டு போய் கொடுத்தேன் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தவர். இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டு மனைவி பாவிக்கும் குளிசைகளை கொண்டு வா..என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது .இரண்டு வைத்திய சாலையிலை பல வைத்தியர்கள் ஏகப்பட்ட பரிசோதனையள் செய்தே கண்டு பிடிக்க முடியாமல் போனதை பென்சன் எடுத்திட்டு நாய் மேய்த்துக்கொண்டு திரியிறது மட்டுமில்லாமல் ஓசி விஸ்கியை வேறை அடிச்சிட்டு கண்டு பிடிக்கப் போறானாக்கும் எண்டு நினைச்சாலும். வைத்திய சாலைக்கு கொண்டு போய் காட்டிய மருந்துகள் காரிலேயே இருந்ததால் அதனையும் கொண்டு வந்து அவர் முனால் வைத்தேன். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவர் அதில் இருந்த மருந்துகளை எடுத்தபடி படுத்திருந்த மனிசிடம் போய் அவற்றைக் காட்டி இதில் கடைசியாக நீ எடுத்த மருந்துகள் ஞாபகம் இருக்கா என்று கேட்டார்.. மனிசியும் தயங்கிய படி என்னை பார்த்தபடியே இரண்டு மருந்துகளை காட்டியபடி நடநததை சொன்னார்.கடந்த சில நாட்களாக ஊரில் அவரது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தவர் இரவில் நித்திரை கூட வராமல் தவித்திருக்கிறார்.இது பற்றி என்னிடமும் அதிகம் எதுவும் சொல்லவில்லை நித்திரை கொள்வதற்காக குடும்ப வைத்தியரிடம் குளிசைகள் வாங்கினால் அது எனக்கு தெரியவரும் என்பதால் அவர் கண்டு பிடித்தததுதான் அலர்ச்சி குளிசைகள்.அவருக்கு கோடை காலங்களில் மகரந்த அலர்ச்சி உண்டு அதற்கான குளிசையை போட்டால் கொஞ்சம் நித்திரை வரும் எனவே அலர்ச்சி குளிசைகளை போட்டு விட்டு நித்திரை கொள்ளத் தொடங்கியிருந்தார்.அன்றும் அலர்ச்சி குளிசையை போட எடுத்தபோது நான் வீட்டிற்கு வந்ததால் அவசரத்தில் எடுத்த குளிசையை வேறொரு மருந்து பெட்டியில் போட்டு விட்டிருக்கிறார்.நான் வேலைக்கு போனதும் ஒரு குளிசையை போட்டு விட்டு படுத்திருக்கிறார் நித்திரை வரவில்லை எனவே மீண்டும் ஒரு குளிசையை போட்டிருக்கிறார் ஆனார் அவர் இந்தத் தடைவை போட்ட இரண்டு குளிசைகளும் அலர்ச்சி குளிசைகள் அல்ல இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்.மாறிப்போட்டு விட்டார். எனவே இரத்தம் அழுத்தம் குறைந்து தலை சுற்றல் ஆரம்பித்திருக்கின்றது. நான் வைத்திய சாலையில் அவரை சேர்த்தபோது எனக்கும் அவர் குளிசைகள் போட்டது தெரியாதததால் அதைப்பற்றி சொல்லவில்லை இரத்த பரிசோதனையில் அவரது இரத்தத்தில் சோடியம் குறைவாக இருப்பதை கண்டு பிடித்தவர்கள் தலைச்சுற்றலுக்கு அதுதான் காரணம் என நினைத்து சோடியத்தை குளுக்கோசில் கலந்து ஏற்றியிருக்கிறார்கள் ஆனால் வேகமாக அதிகளவில் ஏற்றி விட்டார் இதனால் மனைவி கோமாவிற்கு போய் விட்டிருந்தார்.இங்கு இரண்டு தவறு நடந்திருக்கின்றது ஒன்று மனைவி குளிசைகளை மாறிப் போட்டது இரண்டாவது வைத்தியத் தவறு குறைந்த நேரத்தில் அதிகளவு சோடியத்தை செலுத்தியது.என்று சொல்லி விட்டு ஜோன் வெறும் கிளாசை என்னிடம் நீட்டினார். அவரது கிளாசை நிரப்பிவிட்டு வைத்தியத் தவறா?? நான் யார் ??இந்தா வழக்கு போடுறன் ..கோட்டுக்கு இழுக்கிறன்.நட்டஈடு கேக்கிறன் என்று காத்திலை வீடு கட்டத் தொடங்கவே ..சே பொத்திக் கொண்டு இரு என்னை அமத்தியவர். இங்கு ஒரு வைத்தியரின் தவறை இன்னொரு வைத்தியர் கண்டு பிடித்தாலும் அதனை நோயாளியிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லமாட்டார்கள் தவறை சரிசெய்து விடுவார்கள் இது பொதுவான நடைமுறை விதி.வைத்திய தவறு என்று உனக்கு தெரிந்தாலும் அதனை உன்னால் நிருபிக்க முடியாது நீ வழக்கு போட்டாலும் உனது மனைவியிடமும் தவறு உள்ளது எனவே எது எப்படியோ உனது மனைவி குணமடைந்து விட்டார் அந்தளவில் சந்தோசப்படு என்றவர் விடைபெற்றுக்கொண்டார். இப்போ மனிசி எதுக்காக கோமாவுக்கு போனார் எண்டு கண்டு பிடித்தாச்சு.ஆனால் இத்தனை வருசமா ஜேன் அடிக்கிற அதே விஸ்கியைத்தானே நானும் இத்தனை வருசமா அடிக்கிறன் ஆனா என்னாலை மட்டும் எப்பிடி காரணத்தை கண்டு பிடிக்கமுடியாமல் போனது??அதை கண்டு பிடிக்கும்வரை தொடர்ந்து தண்ணியடிக்கிறதைத் தவிர வேறை வழியில்லை....
 12. 21 points
  மதிப்பிற்குரிய நடுவர்களே, விசேட சிறப்பு விருந்தினராகச் சமூகமளித்து எமக்குப் பெருமையைச் சேர்க்கும் யாழின் மூலகர்த்தாவாகிய என்றென்றும் என் மதிப்பிற்குரிய மோகன் அண்ணா அவர்களே, சிறப்பு விருந்தினர்களான யாழின் நிர்வாகிகளான இணையவன், நியானி, நுணாவிலான் மற்றும் நிழலி அவர்களே, எம்மிடம் தோற்றுப் போகவிருக்கும் எதிரணியினரே மற்றும் எமக்கு ஊக்கமளிக்கப் போகும் பார்வையாளர்களே! அனைவருக்கும் கனடாவின் தைரியப்புயலின் அன்பு கலந்த வணக்கம்! புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமது ஊர் பற்றிய கவலையானது நாம் ஊரைவிட்டுப் பிரிந்திருப்பதே தவிர, சிறந்த வாழ்வியலை இழந்த கவலையல்ல. நாம் புலம்பெயர்ந்த காரணத்தினாலேயே எமக்கு இவ்வாய்ப்பைத் தந்த யாழ்களமே உருவாகியது. நாம் ஊரில் இருந்திருந்தால் எம்மில் பலர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க மாட்டோம். நாங்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சௌகரியங்களை நாம் அங்கு அனுபவித்திருப்போமா? எங்கள் பிள்ளைகள் அத்தனை பேரும் கல்வியில் சிறந்து விளங்கியிருப்பார்களா? இங்கு வளரும் பிள்ளைகளில் அதிகம் பேர் உயர்கல்வியைக் கற்று மிகச் சிறந்த வேலைகளில் அமர்ந்திருக்கிறார்கள். அமரப் போகிறார்கள். இவை நாம் ஊரிலிருந்திருந்தால் எத்தனை வீதம் சாத்தியப்பட்டிருக்கும்? ஊரிலிருந்திருந்தால் எம் பிள்ளைகளில் ஒரு பத்து வீதமானோர்தான் பல்கலைக்கழகம்வரை சென்று சிறந்து விளங்கியிருப்பார்கள். ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளிலோ அனைத்துப் பிள்ளைகளும் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்புள்ளது. அப்பிள்ளைகளின் பட்டமளிப்பின்போது பெற்றோர் படும் ஆனந்தம் இருக்கிறதே, அதனை வார்த்தைகளில் வடித்து விட முடியாது நடுவர்களே. ஆனால், நாட்டில் ஒரு வருடத்தில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அல்லது பாடசாலைகளிலிருந்தும் ஆகக்கூடியது பத்து மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருக்கிறதா? பொதுவாக, தாயகத்தில் ஒரு ஊரிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து ஓரிருவர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்வதைக் கண்டிருக்கிறோம். எத்தனை மாணவர்கள் படிப்பில் சுட்டியாக இருந்தாலும் ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாழ்வியலை இழந்திருக்கிறார்கள்? அவர்களிடம் திறமைகள் இருந்தாலும், சாதாரண வேலைகளையே செய்யும் நிர்ப்பந்தம் இருக்கிறது. அப்படிச் சாதாரண வேலையில் அமர்ந்தாலும் தொடர்ந்து அச்சாதாரண வாழ்வியலை வாழும் வாய்ப்பே அங்கு அதிகம். மேலதிகமாக முன்னேறுவது கடினம். ஆனால், இங்கோ ஒருவர் பல்கலைக்கழகம் செல்லாவிட்டாலும் வேலைத்தளங்கள் வாயிலாகத் தொடர்ந்தும் படித்து வேலையில் உயர்நிலைகளுக்கு வந்திருக்கிறார்கள். அங்கு சாதாரண வகுப்போடு படிப்பை முடித்த பலர் புலம்பெயர்ந்த பின்பு இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு பல நல்ல வேலைகளில் இருப்பது கண்கூடு நடுவர்களே. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்வியல் ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் வளமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தளவு சம்பளத்தைப் பெறுபவர்களும் அனைத்து வசதிகளோடும் வாழும் வாய்ப்பு புலம்பெயர் நாடுகளில் இருக்கிறது. நாம் கூடியளவு அனைத்துப் பொருட்களையும் நுகர்ந்து எமது வாழ்வை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதாரணமாக, இங்கு தொலைக்காட்சிப் பெட்டி முதற்கொண்டு இந்த வருடம் வந்த இலத்திரனியல் பொருட்கள் வரை எம்மவர் வீடுகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நடுவர்களே, இது தாயகத்தில் அனைத்து வீடுகளிலும் சாத்தியப்படும் ஒன்றா? நாம் ஊரில் இருக்கும்போது பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே இருந்த நெருக்கத்தைவிட, இங்கு வாழும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான நெருக்கம் அதிகம் மட்டுமின்றி நெருக்கமாக இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகம். நாம் அவர்களோடு அன்னியோன்யமாகப் பழகும் விதமும் இங்கு சிறப்பாகவே இருக்கிறது. இதனைவிட முக்கியமாகக் கணவன், மனைவி உறவுகள்கூட புலம்பெயர் நாடுகளில் மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே நாம் பாராட்டும் அன்பும் நட்பும்கூட புலம்பெயர் நாடுகளில் சிறப்பாகத்தான் இருக்கிறது. வாழ்க்கையை நாம் அனுபவிக்கக் கற்றுக் கொண்டதே நாம் புலம்பெயர்ந்த பின்புதான் நடுவர்களே. நடுவர்களே, இங்கு நாம் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்தாலும் இங்கிருக்கும் சுத்தம், சுகாதாரம் எமக்கு அங்கு இருக்கிறதா? எமக்கு இங்கிருக்கும் ஆரோக்கியமான வாழ்வு அங்கிருக்கிறதா? ஒருவர் இறந்து போனால் அதற்கான உரிய காரணம்கூட அறியாத நிலைதான் அங்குண்டு. இங்கோ, எத்தனை கொடிய நோய் வந்தாலும் குணப்படுத்தக்கூடிய வசதிகள் எமக்கு நிறையவே உண்டு. அங்கு சிறப்பாக இருப்பவர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே. ஒன்று அது பரம்பரையாக வந்ததாக இருக்கும். அடுத்தது சிறந்த கல்வி கற்று அந்த உத்தியோகத்தில் வந்ததாக இருக்கும். இன்னொன்று புலம்பெயர் மக்களின் உறவினர்கள். அங்கு அதிகம் சலுகைகளைப் பெறுபவர்களும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே. கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறுபவர்களும் அதிகம் இவ்வகையைச் சேர்ந்தவர்களே. பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு அங்கு முன்னேறும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எங்காவது ஓரிரு குடும்பங்களே இவ்வாறு முன்னேறியிருக்கிறார்கள். ஆனால், இங்கு நாம் அரச பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். அரச பணத்தைப் பெற்று வளர்ந்த பிள்ளைகள் பலர் இப்போது படித்து முன்னேறி நல்ல பதவிகளில் உள்ளார்கள். ஊரில் அவ்வாறு முன்னேற முடியுமா நடுவர்களே? இத்தனை சிறப்பாக வாழ்ந்து கொண்டு, அங்கிருந்திருந்தால் சிறப்பாக வாழ்வோமென்ற எதிரணியைப் பார்த்து நான் கேட்கிறேன். இத்தனை வசதிகளை அனுபவித்த பின்பு, உங்களால் இப்போது ஊரில் போய் வாழ முடியுமா? இல்லை ஊரிலிருந்திருந்தால் இவ்வாறான சிறப்புகளைப் பற்றியாவது நாம் இவ்வளவு தூரம் அறிந்திருப்போமா? புலம்பெயர்ந்திருக்கும் எமக்கான ஒரேயொரு கவலை ஊரில் எஞ்சியிருக்கும் எமது உறவினர்களே தவிர எமது புலம்பெயர் வாழ்வியல் அல்ல. அவ்வுறவினர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வரும் வசதிகள் எம்மிடம் உண்டு. தாயகத்தில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் செல்வதற்கே கணக்குப் பார்த்து செலவழிக்கும் நிலைதான் இன்றும் பலருக்கு அங்குண்டு. நாம் புலம்பெயராது இருந்திருந்தால் எம்மில் பலருக்கும் அந்த நிலைதான் இருந்திருக்கும். எதிரணியினர், இக்கரைக்கு அக்கரைப் பச்சைகள்தானே தவிர, யதார்த்தத்தை உணர்ந்தவர்களல்ல நடுவர்களே. இவர்கள் இன்னும் ஊரின் மாயையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நடுவர்களே. இந்தப் பட்டிமன்றத்தின் பின்னராவது இவர்கள் நிஜ உலகிற்கு வரட்டும் என்று கூறி எனதுரையை முடித்துக் கொள்கிறேன்.
 13. 20 points
  அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்காலக் கனவுகளுடன் நான்கு மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கிப் படிக்க இடம் தேடினோம். இறுதியில் பாடசாலைக்கு அண்மையாக ஓர் அம்மாவும் மகளும் குடியிருக்கும் ஓர் வீட்டின் அவுட் கவுஸில் இரண்டு அறை சமையலறை குளியலறை என சகல வசதிகளுடன் கிடைத்தது. நான்கு பேரும் வாடகையைப் பங்கு போடுவதென்றும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதென்றும் முடிவாகியது. ஏமக்கு எப்படியாவது படிப்பைத் தொடர்ந்தால் போதும் என்ற நிலை. அந்த அம்மா நாள் பார்த்து பால் காய்ச்சி நாம் குடிவர அனுமதி கொடுத்து அட்வான்ஸ் பணமும் பெற்றுக் கொண்டு திறப்பைக் கையளித்தார். நால்வரும் எமது பெட்டி படுக்கை மண்ணெண்ணை அடுப்பு சகிதம் கதவைத் திறந்து வலதுகாலை? வைத்து வீட்டிற்குள் பிரவேசித்தோம். நேரம் மதியத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அந்த அம்மாவின் அழகிய மகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திருமண நாளுக்காய் காத்துக்கொண்டிருந்தார். முன்பின் அறிமுகமில்லாத அந்தப்பெண் எமது குடியிருப்புக்கு முதன்முதலாக விஜயம் செய்திருந்தார். ஆம் பால் காச்சும் அந்த வைபவத்திற்கு அவர் வந்திருப்பது எமக்கு விளங்கியது. அவரை உபசரித்து அமரச் சொல்ல எம்மிடம் கதிரை இல்லை. எனவே வாசல் படியில் அனைவரும் இருந்து எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். எம்மில் ஒருவர் மெதுவாக சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணைக் குக்கரைப் பற்றவைத்து சோஸ்பேனில் தண்ணீரை வைத்துவிட்டு வந்தோம். சற்று நேரத்திற்கு ஒருவராக உள்ளே சென்று அடுப்பை பரிசோதித்து விட்டு வந்தோம். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அக்கா உள்ளே எட்டிப் பார்ப்பதும் எம்முடன் உரையாடுவதுமாக இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர பால் கிண்ணம் வந்தபாடில்லை. காரணம் அடுப்பில் பால் இ;ல்லை. அந்த புதிய இடத்தில் எங்குபோய் பால் வாங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் எமக்குத் தெரியாது. அடுப்பில் தண்ணீரும் வற்றிப் போனது. ஆந்த அக்காவும் என்ன நினைத்தாரோ தெரியாது “நான் போயிற்று வாறன்” என்று சொல்லிப் பார்த்தார். நாங்கள் அசடு வழிய தலையை ஆட்டி வைத்தோம். அதற்குமேல் ஏதாவது சொல்லவோ செய்யவோ எமக்கு வயதும் அனுபவமும் போதவில்லை. அதன் பின் அந்த அக்கா திருமணமாகிப் போகும்வரை எம்முடன் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொள்வார். இருந்தும் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை என்று விளங்கியது. அன்று நடந்த பால் இல்லாமல் பால் காய்ச்சும் வைபவம் இன்றும் மனதில் பசுமையாய் தினமும் பால் காய்ச்சும் வேளைகளில் மனதில் காயும். அந்த இளமைக்கால நினைவலைகள் இன்னும் இதயத்தில் ஈரமாய் ............
 14. 20 points
  நிழலாடும் நினைவுகள். வெளித்தெரியாத வேர். M.S.R சாத்திரி ஒரு பேப்பர். ஈழத்தின் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் தங்கள்அனுபவங்களை மையமாக வைத்து பலர் தங்கள் பதிவுகளை புத்தமாக்கியிருக்கிறார்கள். அவற்றில் .சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோருடைய பதிவுகள் முக்கியமானவை. ஆனால் இந்த மூவரது பதிவுகளிலுமே இந்த எம்.எஸ்.ஆர் என்கிற மனிதனைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. இந்த மூவரோடும் நெருங்கி பழகியவர்தான் எம்.எஸ். ஆர். சி. புஸ்ப்பராஜா எதற்காக தனது புத்தகத்தில் இந்த மனிதரைப்பற்றிய பதிவுகளை தவறவிட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கி. பி அரவிந்தனிடம் நான் ஒரு தடைவை கதைத்தபொழுது அதற்கான காரணத்தை கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய காரணம் நினைவுத் தேய்வுகள் காரமாண தவறவிட்டு விட்டேன் ஆனால் நீங்கள் எங்காவது அவரைப் பற்றி கட்டாயம் பதிவு செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.அண்மையில் வெளியான ஜயரின் பதிவுகளில் நிச்சயமாக ஏதாவது ஒரு தகவலாவது எம்.எஸ்.ஆரைப் பற்றி இருக்கும் என எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம். ஜயரின் ஊரான வடக்கு புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர்தான் எம்.எஸ்.ஆர் அதைவிட ஈழப் போராட்ட ஆரம்ப காலங்களில் ஜரோடு இணைந்தே பல உதவிகளையும் போராட்டக் குழுக்களிற்கு செய்தவர்.ஆயுதப் போர் என அறைகூவல் விடுத்த சத்தியசீலன் தொடக்கம். அதை அடுத்த பரிமாணத்திற்கு தள்ளிய பொன் சிவகுமாரன் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தத் தொடங்கிய உமா. பிரபாகரன்.சிறீசபாரத்தினம் மட்டுமல்ல தொண்ணூறுகளின் யாழ் இடப்பெயர்வு நடக்கும் வரை பலாலி இராணுவ முகாமை சுற்றி காவல் கடைமையில் நின்ற புலிகள் அமைப்பு போராளிவரை. இவரின் வீட்டில் ஒரு நாளாவது தங்கியிருந்து ஒரு வேளை உணவாவது உண்ணாதவர் கிடையாது. M.G.R என்றால் அனைத்து தமிழர்களிற்குமே தெரியும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அவர் என்னென்ன உதவிகள் செய்தார் என்பதும் அனைவரும் அறிந்தது ஆனால் அதேயளவிற்கு கொஞ்சமும் குறைவில்லாத உதவிகளை வெளியே தெரியாமல் செய்தவர் M.S.R . யார் இந்த . M.S.R??.....M.S..ராஜேந்திரன்.நெடிய கண்ணாடி அணிந்த உருவம். வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து குப்பிளான் செல்லும் வழில் இரண்டாவதாக இருந்த கேரளா பாணியிலான மிகப்பெரிய பழையகாலத்து வீடுதான் இவர்களது வீடு.எழுபதுகளில் பல லொறிகளை வைத்து கொழும்பிற்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வசதி படைத்த குடும்பம். M.S.R என்கிற எழுத்து பதித்த லொறிகள் பொதிகளை எற்றியபடி யாழ் கொழும்பு வீதியில் அன்றைய காலங்களில் யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்றே சொல்லாம்.எழுபதுகளின் இறுதியில் ஆயுதப் போர் என்று தொடங்கியபோது அனைத்து போராளிகளையும் அரவணைத்து பாதுகாத்த ஒரு முக்கியமான வீடு இவருடையது.எல்லாவற்றிக்கும் மேலால் பிரபாகரனிற்கு ஜய்யர் மற்றும் ராகவன் ஆகியோருடைய தொர்புகள் கிடைத்த பின்னர். அவரின் முக்கியமான மறைவிடம் இவரது வீடுதான். பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக்கொன்ற பின்னரும். பொன் சிவகுமரனின் கோப்பாய் வங்கிக் கொள்ளை தோல்வியடைந்து சிவகுமார் பிடிபட்டபோது அவருடன் வங்கிக் கொள்ளைக்கு போயிருந்த கி.பி அரவிந்தன் தப்பியோடி நேராக போய்ச் சேர்ந்தது. இந்த வீட்டிற்குத்தான். இப்படி ஆரம்ப காலங்களில் இயக்க பேதங்களற்று அனைவரரையும் போராளிகள் என்கிற நோக்கோடு அரவணைத்தவர்தான் M.S.R என்கிற மனிதன். பின்னை காலங்களில் இயக்க மோதல்கள் தொடங்கிவிட புலிகள்அமைப்பின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தார். M.S.R சரளமாக சிங்களம் கதைக்கத் தெரிந்தவர் என்பதால் வடக்கு கிழக்கிற்கு வெளியே புலிகள் அமைப்பு நடாத்திய தாக்குதல்களிற்காக பாவித்த அல்லது உதவிய சிங்களவர்களை இவரது வீட்டில்தான் கொண்டு வந்து தங்க வைத்து பராமரிப்பார்கள். அப்படியானவர்களிற்கு ஆடு அடித்து விருந்து வைப்பதில் இருந்து சாராயம் வாங்கி விருந்து வைப்பது வரை தனது செலவிலேயே செய்து முடிப்பார்.அப்படியான காலங்களில் 85 ம் ஆண்டு இறுதியில் பலாலி படை முகாமை சுற்றி காவல் நிலை அமைக்கும் பணிக்காக சென்றிருந்தவேளை எனக்கும் அறிமுகமாகிறார்.அதன் பின்னர் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுவரத் தொடங்கியிருந்தேன். எந்த நேரத்தில் யார் சென்றாலும் அவர்களிற்கு தேனீர் தயாரிப்பதற்காக அவர்கள் வீட்டு அடுப்பில் ஒரு பானையில் சுடுநீர் இருந்தபடியேதான் இருக்கும். எத்தனை பேர் போனாலும் சலித்துக்கொள்ளாமல். அவரது மனைவி றூபியக்கா இன் முகத்துடன் வரவேற்று சாப்பிடுறீங்களா தேத்தண்ணி குடிக்கிறீங்களா என்று வரவேற்றபடியேதான் இருப்பார். அவர்கள் வீட்டின் காணியில் இருந்த கழிவறையில் மேலே சீமெந்து தகடு(பிளாற்) போடப்பட்டிருந்தது அதனோடு ஒட்டியபடி ஒரு வேப்பமரம் அகன்று பரந்து கழிவறையின் மேல் பக்கத்தை நன்றாக மறைத்து வளர்ந்திருந்தது. அதற்குமேல் ஏறி நின்று பார்த்தால் வடக்கு புன்னாவை கட்டுவன் சந்தியில் இருந்து குப்பிளான் வீதி இரண்டு பக்கமும் நன்றாக பார்க்கலாம். அத்தோடு அவரது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி எதிரேயிருந்த ராகவன் வீடும் தெளிவாகத் தெரியும். டேய் இந்த பிளாற்றிலை உங்கடை அண்ணன் பதுங்கி படுத்திருக்கிறவர் என்று எனக்கு அடிக்கடி சொல்லுவார். 86 ம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியிருந்த தலைவர் பிரபாகரன். ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகளிற்கு திடீரென போய் பார்த்து அவர்களிற்கு நன்றி தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தக் கொண்டிருந்தார். அப்படி ஒரு இரவுப் பொழுதில் நான் M.S.R அண்ணரோடு அவரது வீட்டில் அரட்டையடித்தக் கொண்டிருந்தேன். றூபியக்கா இரவு உணவாக புட்டு அவித்துக்கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு முன்னால் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆயுதங்களுடன் குதித்த பலர் மளமளவென அவரது வீட்டின் நாலு பக்கமும் புகுந்து நிலையெடுத்தார். அவரது வீட்டிற்கு அருகேயே இரண்டு பக்கமும் புலிகள் அமைப்பின் காவல் நிலைகள் இருந்ததால் அங்கு வேறு யாரும் வரும் சந்தர்ப்பம் இல்லாததால் நாங்கள் அமைதியாக நடப்பதை கவனித்படி இருந்தோம். என்னைப்பார்த்து யாரே பெரிய தலைபோலை இருக்கு சிலநேரம் குமரப்பாவா இருக்கலாமெண்டார். காரணம் குமரப்பா அன்றைய காலங்களில் அந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தார். ஆனால் தலைவர் பிரபாகரன் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை கண்டதும் அட தம்பிவாறான் என்றார். அப்பதான் எனக்கு சங்கடமாயிருந்தது தந்த வேலையை விட்டிட்டு இங்கை என்ன செய்யிறாயெண்டு பேச்சு விழலாமென எதிர்பார்த்தேன். ஆனால் வந்தவர் M.S.R ரை கட்டித் தழுவி அண்ணை எத்தினை வருசமாச்சு என்றபடி நலம் விசாரித்து விட்டு என்னை பார்த்தவர் சிரித்தபடி டேய் உனக்கும் இவங்களை தெரியுமா ஆச்சரியமாக கேட்டவர் முழு இயக்கத்தையும் இவர்தான் வளக்கிறார் போலை என்று விட்டு. என்ன றூபியக்கா சாப்பாடு றெடிபோலை நல்ல நேரத்தக்குத் தான் வந்திருக்கிறன் என்றபடி குசினிக்குள் புகுந்து விட்டிருந்தார். அவருடன் மெய் பாதுகாவலர்கள் ஆறுபேர் வந்திருந்தார்கள். அனைவரிற்கும் றூபியக்கா அவித்த புட்டு போதாது என்பதால் மதியம் மிச்சம் இருந்த சோற்றையும் புட்டுடன் சேர்த்து பெரிய பாத்திரத்தில் போட்டு இருந்த கறிகளையும் ஊற்றி அவசரமாய் கலந்தவர். அதை கையில் உருட்டி பிரபாகரன் கையில் வைத்தவர் தம்பி மற்றவையையும் வரச்சொல்லுங்கோ என்றார். பெடியள் வாங்கோ அக்காவின்ரை கையாலை சாப்பிட குடுத்து வைக்கவேணும் என்று கூப்பிட்டார். ஆனால் விறைத்தபடி நின்றிருந்த பாது காவலர்கள் வரத் தயங்கினார்கள். அண்ணையின்ரை வீட்டிலை எனக்கு பாது காப்பு தேவையில்லை வாங்கோடா என்று மீண்டும் கூப்பிட்டதும்தான் ஒவ்வொருத்தராய் வந்து கையை நீட்டி சாப்பிட்டு முடித்ததும் M.S.R அண்ணன் செம்பில் தண்ணி அள்ளி அவர்கள் கைகள் கழுவ தண்ணீரை ஊற்றினார்.சாப்பிட்டு முடிந்து புறப்படும்போது அண்ணை எந்த உதவி தேவையெண்டாலும் எங்களிட்டை கேளுங்கோ எண்டு சொல்மாட்டன் உங்கடை உதவிதான் எங்களுக்கு தொடந்தும் தேவை என்று M.S.R ரிடம் விடை பெற்ற பிரபாகரன் என்னை பார்த்து டேய் இங்கையே படுத்து கிடக்காமல் அலுவல்களை கவனி என்றுவிட்டு போய் விட்டார்.அப்படி எந்தனை வருடங்கள் கடந்தாலும் தலைவர் பிரபாகரனால் மறக்கமுடியாத ஒரு மனிதராகவே M.S.R இருந்தார். இந்தியப் படையினரின் வருகை புலிகளோடு யுத்தம் தொடங்கியதும் பலாலியில் இருந்து புறப்பட்ட இந்தியப் படையினர் வடக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியில் இருந்த அனைத்து வீடுகளையும் இடித்து தரை மட்டமாக்கினார்கள். சந்தியில் இருந்த சாமியார் வீடு . ஸ்பீக்கர் மேகனின் வீடு ராசாத்தியக்கா வீடு அவரது எரிபொருள் நிரப்பு நிலையம் என்பவற்றோடு M.S.R அவர்களின் வீடும் அவரது நடக்க முடியாத வயது முதிர்ந்த தந்தை குட்டியப்பாவோடு சேர்த்து இந்தியப்படைகளால் இடித்து தரை மட்டமாக்கப் பட்டதோடு அவரது லொறிகளையும் கொளுத்தி விட்டிருந்தார்கள்.எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் மனிதர் அன்றோடு இடிந்து போனார். கடைசியாய் தப்பியிருந்த ஒரோயொரு லொறியை விற்று எல்லாத் தொழில்களும் செய்து பார்த்தார். பின்னை காலங்களில் அவரது மூத்த மகனும் இயக்கத்தில் இணைந்து சண்டையொன்றில் தலையில் காயமடைந்து மன நிலை பாதிப்படைந்தவனாகிவிட்டிருந்தான். நீண்ட காலங்களின் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டளவில் மீண்டும் தமிழ்நாட்டில் அவரது தொடர்பு கிடைத்போது என்னாலான சிறு உதவியினை செய்திருந்தேன். அது அவரது மகனின் மருத்துவ செலவுகளிற்கே போதுமானதாக இருந்திருக்கவில்லை. அவரும் மீண்டும் வன்னிக்கு போய்விட எங்கள் தொடர்பும் விடு பட்டு போய்விட்டது. இறுதியில் மிகவும் வறுமையான நிலையில் வவுனியா பூந்தோட்டப் பகுதியில் வசித்து வந்தவர் அண்மையில் இறந்து போய் விட்டார் என்கிற செய்திமட்டுமே எனக்கு கிடைத்தது. முன்னை நாள் போராளிகளிற்கும் இயக்க ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பு அவர்களது வாழ்வாதாரங்களிற்கு உதவிகளையும் பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்த காலகட்டங்களில் கூட தனக்காக உதவியென்று இயக்கத்திடம் போய் நிற்காமல் இறுதிவரை அவர்களிற்காக உதவி வெளியே தெரியாத வேராக உதவி செய்தே மரணித்துபோய் விட்ட அந்த மனிதனை இந்த மாவீரர் நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலிக்கிறேன்.
 15. 19 points
  முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு. போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்கம் இப்படி இன்னபிற காரணிகளின் துணைகொண்டு) என்று நிரூபிப்பதை வாழ்வின் அர்தமாகக் கொண்டிருந்தார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் போராட்டம் அர்தங்களின் விளைநிலமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு வெற்றிடம் சூழ்கிறது. போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் வளர்ந்தவர்களாக வாழ்ந்தவர்கள் யாரேனும் யாழில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அந்தக் காலம் தொன்றுதொட்ட பாரம்பரியம் சார்ந்ததாக, பாரம்பரியத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படுவதற்காக இருந்த கூறுகளின் பிடியில் இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே தெரியாது நகர்ந்திருக்கலாம்? தற்போது அர்த்தம் தேடுதல் மேட்டுக்குடிப் பிரச்சினை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பின்நவீனத்துவம் புரட்ச்சிகளைக் காலாவதியாக்கிவிட்டது. தொழில் நுட்பம் எல்லைகளைக் கரைத்து விட்டது. சந்தை பெறுமதிகளைப் புதைத்துவிட்டது. செல்வம் அனைவரிடம் நிறைந்து கிடக்கிறது. கல்வி என்ற பெயரில் கட்டழைகளால் மூளை நிறைகின்ற போதும் கல்வி தொலைந்து விட்டது, வீரம் அநாகரிகம் என்றாகிவிட்டது. மொத்தத்தில் கதாநாயகர்கள் கதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேற்படி நிலை உணரப்பட்டதும் பிள்ளைகளில் மனதைக் குவியப்படுத்தித் தியாகிகள் ஆகிவிடப் பலர் முனைகிறார்கள். தமது வெற்றிடங்களைத் தமது பிள்ளைகளின் வெற்றிகொண்டு நிறைக்கத் தலைப்படுகின்றனர். ஆனால், இம்முயற்சி முயல்கொம்பு. இவர்களின் வெற்றிடம் பலமடங்கு பெரிதாகப் பிள்ளைகளிற்குள்ளும் வளர்கிறது. இப்போது கனடாவில் மிகப்பொதுவாக, பிள்ளைகளின் பல்கலைக்களக செலவு மட்டுமன்றி ஆடம்பர திருமணங்கள் ஊடாக வீடுகளைக் கூடப் பெற்றோர் பிள்ளைகளிற்கு வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது, இதனால், நாற்பது வயதடைந்தபோது முன்னைய சந்ததி பெற்றுக் கொண்ட செல்வத்தின் சுதந்திரம் தற்போது இருபதுகளிற்கு வரப்பார்கக்pறது. ஒருவகையில் இது முன்னேற்றம் என்று பார்க்கினும், முன்னைய சந்ததி நாற்பது வயதில் சந்தித்த அர்த்தம் தேடல் தற்போது இருபதுகளில் ஆரம்பிக்கிறது. பேரன் பேத்தியில் மீண்டும் கதை ஆரம்பிக்கிறது. உத்தியோக உயர்வு, உயர்பதவிகளில் உட்காரல், அதிகாரம் போன்றன எல்லாம் இன்றைக்குத் தேடல்கள் அல்ல என்றாகிவிட்டது. ஏனெனில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. அதிவேக கார்கள் முதலான இதர பல அதிர்வுகள் அதில் நாட்டமுள்ள அனைவரிற்கும் கிடைக்கின்றன. நாம் வைத்திருக்கும் வாகனங்களின் உச்சப் பயன்பாட்டை அனுபவிக் அவற்றை றேஸ் திடலிற்கு எடுத்துச் சென்றே அனுபவிக்க முடியும் என்றளவிற்கு நாளாந்த தெருவிற்குச் சம்பந்தமற்ற வாசகனங்களைச் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கிறோம். ஐந்தாயிரம் வரை கொடுத்து சிறந்த நாய்க்குட்டிகளை ஆராய்ச்சி செய்து பெற்றுக்கொள்கிறோம். ஆடம்பரச் சுற்றுலாக்கள் சர்வசாதாரணம். காதலும் காமமும் தாராளம், ஆனால் வெற்றிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு முனையில் ஆன்மிக வியாபாரம் முதலியன மேற்படி வெற்றிடம் சார்ந்து எழுகின்றன. என்ன தான் எழுந்தாலும் அர்த்தம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. போதைகள் பலவிதம் ஆனால் அனைத்தும் தற்காலிகம். புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது. இசை, திரைப்படம், ஓவியம், சமையல் என்று எண்ணற்ற முனைகளில் ரசனையும் creativityயும் ஓடிக்கொண்டு நிறங்கள் தெரிந்து கொண்டும் இருப்பினும், ஒரு எல்லையினை வாழ்வு தாண்டியதும் வெற்றிடம் அறியப்பட்டுவிடுகிறது. அதன் பின்னால் கடிவாளங்கள் பலமிழந்து போகின்றன. இந்தவகையில், யாழ்கள உறவுகளின் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு…
 16. 19 points
  அம்மாச்சி மகள் (குறுங்கதை) ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள். சில தினங்களுக்குள் சடுதியாக எடுக்கப்பட்ட முடிவை ஏற்கும் திராணியற்ற நிலையில் நான். அம்மாச்சி மகளின் மீதான் நம்பிக்கை சரிந்த கடைசி நிலையில் பொருமும் நெஞ்சும், முடக்கிய அழுகையும் , உறவுகள் முன்பு கலங்காத வீராப்புமாக பெரு நடிப்பில்…. நேரமும் துரிதமாக நகர்ந்தது. பார்த்த எவருடனும் பேசப்பிடிக்கவில்லை. செயற்கை சிந்திய முறுவல், சூழலின் கலகலப்பில் மறைக்கப்பட்ட யதார்த்தமாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன.. இன்னும் சில மணித்துளிகளில் இந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும். புதிய பக்கம் எப்படி ஆரம்பிக்கும் என்ற எண்ணமே ஏற்பட மறுத்தது. அம்மா, அப்பாவின் காதல் திருமணம் எவ்வளவு பெரிய பிரளயத்தை உருவாக்கி களையப்படாத சோகமாக இன்றளவும்…..பாவம் அம்மா காதலை மறுத்த பெற்றோரை விட்டு அப்பாவை நம்பி வீட்டை விட்டு வெளியேறியபோது கனவில் கூட தனக்கு இப்படிப்பட்ட சாபம் வந்து சேரும் என்று நினைத்திருக்க மாட்டாள். அம்மா காதலுக்காக கதவைத் தாண்டியபோது. பாடையை விரித்துப் போட்டது பெற்ற வயிறு. ஒரு புறம் அழுகை ஒப்பாரி, மறுபுறம்திருமண நாதஸ்வரம் காதலுக்குக் கிடைத்த பரிசு ஏற்கமுடியாத பெற்றவள் பிணமானாள். முதல் அடி எடுத்து வைத்த திருமண வாழ்வு அன்னையின் பெருஞ்சாபம் சூழ… அடுத்தடுத்து , பெற்றவளின் கடைசிப்பயணத்தில் கூட ஒற்றைப்பிள்ளைக்கு முகங்காட்ட மறுத்து துரத்திய உறவுகளுக்கு முன்னால்…… இன்று பெருமிதத்தோடு அவள் தலை நிமிர்வாக நடந்தாள். அம்மா அப்பாவின் காதல் வாழ்வின் சாட்சியும் பொக்கிசமும் நான் மட்டுமே. உறவுகள் தள்ளி வைத்ததால் ஏற்பட்ட தனிமை, ஆதரவற்ற போராட்ட வாழ்வு இப்படியான வாழ்வில் இன்று வரைக்கும் மற்றவர்களிடம் கையேந்தாத வைராக்கியத்தோடு பெற்றவள் சாபம் முறியடித்து வெற்றிக் கனி பறிக்கும் சமயத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் அவள்…… என் மனதில் பறந்த பட்டாம்பூச்சி திருமணமேடையில் ஓதும் மந்திரத்துடன் அக்கினிக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தது. அம்மா அப்பாவின் காதல் மணம் என்னையும் ஆதரிக்கும் என்ற பெருநம்பிக்கை வெற்றிடமாகியது. அம்மாச்சி மகளை அதிகம் நேசித்துவிட்டேன். அக்கினி சாட்சியாக என் கழுத்தில் மாலை விழுந்தது. கலங்கிய விழிகளுடன் அம்மாவைப்பார்த்தேன். அம்மாச்சி மகள் பெற்றவள் சாபம் வென்ற பூரிப்பில் என் தலையில் அட்சதை தூவினாள்
 17. 19 points
  அறிமுகம் ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான சம்பவங்களின் தொகுப்பு அழிக்க முடியாத பதிவுகளாக மனதில் பதிந்து இருக்கும். நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், கசப்பு, வியப்பு, கடினம், வலி எனப் பல சம்பவங்களும், அந்த சம்பங்களின் உணர்வோட்டங்களும் ஆள்மனப்பதிவில் இருந்து கொண்டேயிருக்கும். அப்படி, எனது நினைவுகளில் அழிக்க முடியாமல் பதியப்பட்டிருக்கும் சில விடயங்களை, சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஒரு பொது வாழ்க்கையின் சம்பவத் தொகுப்புக்களாக என்னுடைய பதிவுகள் இருக்கப்போவதில்லை. சாதாரண மனித வாழ்வில் இருந்து வேறுபட்ட தடத்தில் பயணித்த எனதும் என்னுடைய நண்பர்களினதும் பதிவுகள் சில சம்பவங்களுக்கு வாய்மொழிச்சான்றாக அமையலாம் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில்தான் இந்தப் பதிவுகளை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன். தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு. கடினமான அந்த விடுதலைப்பயணத்தின் பசுமைகளையும் கனத்த நினைவுகளையும்தான் இங்கு பதிய விளைகின்றேன். முடிவு ஏதுமின்றிப் போயிருக்கும் போராட்டம், நிரக்கதியாய் நிற்கும் தாயகம், வெறுமையாகத் தெரியும் எதிர்காலம், என்பதை நினைத்தால் மனது நிம்மதியாக உறங்க மறுக்கின்றது. தாயகத்து நினைவுகளையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நினைவுகளின் சுழற்சி கனவுகளாக வெளிப்பட்டு தூக்கம் தொலைகின்றது. பாடசாலை நண்பர் வட்டத்தை இடப்பெயர்வு பிரித்துவிட்டது. எனக்கு அறிமுகமான, உருவாகிய நட்பு என்பது விடுதலைப்பயணத்தில் ஏற்பட்டது மட்டும்தான். அந்த நட்பின் ஆயுளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், பொய்யான நட்பு என்பதல்ல. நட்பு என்றைக்கும் சாகாமல் இருக்கும். ஆனால் நண்பன் இருக்க மாட்டான். சாவுக்கு அருகில்தான் எங்கள் நட்பு கட்டியெழுப்பப்டும். நண்பர்களாக நெருங்கி, ஒவ்வொருவருடன் பழகும் போதும் யுத்தத்திற்கு சென்று மீண்டும் சந்திப்போமா? என்ற விடைதெரியாக் கேள்வி மனதின் ஓரத்தில் பதிந்துதான் இருக்கும். ஆனால், பிரிந்து பின்னர் சந்திக்கும் போது இருக்கும் அந்த சந்தோசம்! அனுபவிக்கும் போதுதான் புரியும். ஒரு நாள், தீடீரென நிரந்தரமாகவே நண்பன் பிரிந்து போகும் போது ஏற்படும் மனநிலையைச் சொல்லில் அடக்க முடியாது. ஒரு வீரச்சாவடைந்த நண்பனின் வீட்டுக்குப்போகும் போது அவனது தாய் ”கடைசியா இரண்டு பேரும் வரக்கில்ல கிண்டலடிச்சு கிண்டலடிச்சு புட்டும் இறைச்சியும் சாப்பிட்டீங்களேடா, போகேக்கில, எப்ப இனிவருவீங்கள் என்டு கேட்க, அடுத்தமாதம் நாங்கள் கட்டாயம் வருவம், அப்ப அந்தக் கோழியைச் சமைச்சுத் தாங்கோ என்டு சொல்லியிட்டுப் போனிங்களே. இப்ப எங்க அவனை விட்டிட்டு வந்தனீங்கள்” என்று கதறும் தாயின் கண்ணீருக்கு விடைசொல்ல முடியாமற்போன தருணங்களும் உண்டு. சில இடங்களில் திடீர் மோதல் காரணமாக வீரச்சாவுகள் ஏற்படும். அவர்களின் வித்துடல்களை கொண்டுவர முடியாமல் அந்த இடத்திலேயே விதைத்திருக்கின்றோம். அதுவரை ஒன்றாக உண்டு, உறங்கி, அருகிலேயே நின்று களமாடிய நண்பனின் உடலை புதைத்துவிட்டுத் திரும்பும்போது இருக்கும் வலியை விபரிக்கமுடியவில்லை. பயணவழியில் தவிர்க்கமுடியாத வீரமரணங்களுக்கான விதைகுழிகள் அவ்விடத்திலேயே உருவாகும். பெற்றோர்களிடம் செய்தியும் புகைப்படமும் மட்டுமே போய்ச்சேரும். அந்தப்பெற்றோர்கள் எல்லாவற்றையும் விடுதலையின் பெயரால் ஏற்றார்கள். தாயகத்தின் ஒவ்வொரு அடிப்பரப்பிலும் மரணித்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் இறுதி மூச்சைச் சுமந்த காற்றும், இரத்தம் சிந்திய மண்ணும் விதைக்கப்பட்ட அவர்களின் கனவு நிறைவேறும் நாளுக்காகக் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்தனை கடினங்களைச் சுமந்து, இத்தனை தியாகத்தை எதற்குச் செய்தார்கள்? ஈழ விடுதலைக்காகவும், அந்த இலட்சியத்திற்காகவும்தான். போரின் வெற்றிகளைக் கண்டு, அதைக்கேட்டு பெருமையும் பேருவகையும் அடைந்திருக்கின்றோம். வெற்றிகளைக் கொண்டாட ஆடிப்பாடி, இனிப்பு வகைகளை பரிமாறிக்கூட புளகாங்கிதம் அடைந்திருக்கின்றோம். ஆனால் அதற்காக எத்தனையோ ஆத்மாக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கும். அந்த ஆத்மாவின் தாய் கண்ணீரோடு கதறிக்கொண்டிருப்பாள் என்ற யதார்த்தம் எத்தனை பேருக்கு அந்தநேரம் நினைவிற்கு வரும். போர் வெற்றியையோ அன்றி தோல்வியையோ தரலாம். ஆனால் அதற்காகப் பட்ட கடினமும் சிந்திய வியர்வையும், சந்தித்த ஆபத்துக்களும், தியாகங்களும் என்றைக்குமே மறக்க முடியாதவை. அவைதான் தொடரப்போகும் பயணத்தின் படிக்கற்கள். ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஒரு போராளி எத்தனை கடினங்களைச் சந்தித்திருப்பான்?, எவ்வளவு வியர்வையை, குருதியைச் சிந்தியிருப்பான்? எத்தனை சந்தோசங்களைத் துறந்திருப்பான்? என்பதெல்லாம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. அது ஒரு தியாகப்பயணம், அது ஒரு வேள்வி, அது ஒரு விடுதலைக்கான துறவறம். தனது வாழ்க்கையின் சந்தோசங்களைத் துறந்து, உயிரை அர்ப்பணித்து, உயிரை அர்ப்பணிப்பதற்காகவே கடினங்களைச் சந்தித்தவர்கள் மாவீரர்கள். வெற்று வீரப்பிரதாபங்கள், வீரமுழக்கங்கள், தமிழ்தேசியத்தை காக்க வந்த பிதாமகர்கள் நாங்கள் தான் என வீரவசனம் பேசி கதையளந்த, கதையளக்கும் ஆத்மாக்கள் அல்ல அவர்கள். விடுதலையைச் சுவாசமாகக் மட்டும் கொண்டு செயற்பட்ட செயல்வீரர்கள். இப்படிப்பட்ட புனிதப்பயணத்தில் எங்களுடன் பயணித்த, எங்களை விட்டு நிரந்தரமாக உறங்கிவிட்ட எமது நண்பர்களின் நினைவுகளையும், அவர்களுடன் நின்ற களத்தையும், எனது நண்பர்களிற்குத் தெரிந்த, நடந்த சம்பவங்களின் தகவல்களையும் உள்வாங்கி; ”நினைவழியாத் தடங்கள்” என்ற தலைப்பில் பதிவாக்கவுள்ளேன். நினைவழியாத் தடங்கள் - 01 தேசியத்தலைவர் பற்றி.....!
 18. 18 points
  நெரிசலில் ஓர் மோகம் மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து மணி தாண்டிவிட்டதால் எல்லா ரயில், பஸ் நிலையங்களும் எள்ளுப் போட்டால்கூட கீழே விழமுடியாதபடி வேலைமுடிந்து வரும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துவிடும் என்பது நினைவுக்குவர அசதியுடன் எரிச்சலும் சேர்ந்துகொண்டது. படிக்கும் காலங்களில் இப்படியான நெரிசல் மிக்க காலைகளிலும் மாலைகளிலும் இலண்டனின் புறநகர் பகுதியில் இருந்து மத்திய இலண்டன் பகுதிக்கு பல வருடங்கள் பயணித்து அனுபவம் இருந்ததால் நான் மத்திய இலண்டன் பகுதிக்கு நெரிசல் நேரங்களில் வருவதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதற்காகவே படித்து முடித்து தொழில்வாய்ப்புக்களைத் தேடும்போது கூட கவனமாக மத்திய இலண்டன் பகுதி வேலைகளைப் புறக்கணித்திருந்தேன். ஆனாலும் இன்று தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாய சூழல் இருந்ததால் தவிர்க்கமுடியவில்லை. புறநகரப் பகுதிகளில் இருந்து ரியூப் பயணத்தை ஆரம்பித்தாலும் நெரிசல் மிக்க காலை மாலை வேளைகளில் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டே இருப்பதால், ஒரு போதும் ஆசனங்களில் இருந்து பயணங்களை மேற்கொள்ள முடிந்ததில்லை. நெரிசல்கள் நிறைந்த பிரயாணங்களில் இருந்து தப்பிக்கவேண்டும் என்பதாலும், எஸ்கலேற்றர்களின் வலது பக்கத்தில் நின்று பயணிப்பதை வயது போனவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்று மனம் கணித்து வைத்திருந்ததாலும், பரபரப்பான இலண்டன் வாழ்வில் இயைபாக்கம் அடைந்துள்ளதாக என்னையே நான் நம்பச் செய்யவேண்டியிருந்ததாலும், வேகமாக ரஜினிகாந்த் போன்று படிகளைப் பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டு தடதடவென ஓடுவது காலைவேளை உடற்பயிற்சியின் ஒரு கூறு என்று நினைத்திருந்ததாலும் குறுகலான நகரும் படிகளில் பாரமான தோள் பையுடன் ஓடுவது எனக்கு வழமையான ஒரு பொழுதுபோக்கு. சில நிமிடங்களுக்கு ஒன்றென இலண்டனின் சகல திசைகளிலிருந்தும் குறுக்கும் நெடுக்குமாக பல சுரங்கத் தடங்களில் ரியூப் ரயில்கள் அகிளான்கள்போல் நிலத்திற்குக் கீழ் பெருந்தொகையான மக்களைச் சுமந்து ஓடிக்கொண்டிருந்தாலும், சிலவேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ரியூப்பில் ஏற முடியாமல் போகும் என்பதால், அவற்றின் வருகைக்காக பிளாற்ஃபோமில் கதவுகள் திறக்கப்படும்போது முதலாவதாக ஏறிக் கொள்ளவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக நிற்கவேண்டிய இடத்தை தெரிவு செய்து, கதவு திறக்க்கப்பட்டதும் உள்ளிருந்து இறங்கும் பயணிகளுக்கு ஒன்றிரண்டு செக்கன்கள் வழிவிட்டு, இறுதியாக இறங்கும் பயணியும் நானும் ஏறும் தருணத்தை ஒன்றாக ஒழுங்குபடுத்திக் கொள்வதும் ஒரு சுவாரசியமான விடயம். என்னதான் முண்டியடித்து ரியூப்பின் உள்ளே நுழைந்தாலும், சக பயணிகளுடன் முட்டுப்படாமல் நிற்பதற்குக் கூட இடம் இருக்காது. அப்படியிருந்தும் ஒருவருக்கு ஒருவர் நூலிழை இடைவெளியில் பயணிப்பது மிகவும் சவாலானதுதான். சுரங்கத்தினூடான பயணம் என்பதால் வெளியே வேடிக்கை பார்க்க எதுவுமில்லை என்பதாலும், பிறருடன் பேசாமல், பார்க்காமல் பயணிக்கவேண்டிய நியதியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதாலும், இந்த நெரிசலுக்குள்ளும் கிடைக்கும் சிறு வெளிகளுக்குள்ளும் பத்திரிகைகளை அல்லது புத்தகங்களைப் படிப்பது பலருடைய வழக்கம். இப்போதெல்லாம் ஸ்மார்ட்ஃபோனிலும், ஈ-ரீடர்களிலும் எதையாவது படிப்பது/பார்ப்பது அல்லது அங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவழிப்பதுதான் அதிகம். ஆயினும் நின்றுகொண்டே பயணிக்கும்போது படிப்பது அல்லது கட்ஜற்றை நோண்டுவது எனக்குப் பழக்கமில்லையாதலால், உலகத்தின் பெருநகர்களில் ஒன்றாக விளங்கும் இலண்டனில் பல்வேறு வகை மனிதர்கள், விதவிதமான கலாச்சார, நடையுடை பாவனைகளில் பயணிப்பதை வேடிக்கை பார்ப்பதில் எனது பயண நேரத்தைச் செலவழிப்பேன். நெரிசல் மிகுந்த வேளைகளில் மிக இள வயதினர்களைவிட வேலைக்குச் செல்லும் வயதினரே அதிகம் பயணிப்பார்கள். ரியூப் ரெயினில் திரளாக பயணிகள் நிறைந்திருந்தாலும், தமது குடும்பத்தின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, கவலை ரேகைகள் தெரிய முகத்தை மலச்சிக்கல் உள்ளவர்கள் கடுமையாக வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்லுபவர்களில் அநேகர் zombie (நடைபிணங்கள்) களாகத் தோற்றம் அளிப்பார்கள். இந்த நிலை குத்திய வெறித்த பார்வையுடனான நடைபிணங்கள் ஒரு நாட்பொழுதைப் பாழாக்கிவிடுவார்கள் என்பதால் ஏறிக்கொள்ளும் பயணிகள் பெட்டியில் கவலைகள் அற்ற மலர்ந்த முகத்துடனான இளமை பொங்கும் சக பெண் பயணி யாராவது ஒருத்தியாவது இருக்கின்றாளா என்று கண்கள் வலைவீசித் தேடும். ஒவ்வொரு நாளும் மலரும் பூவைப் பார்த்து இரசிப்பதுபோல தினம் தினம் பயணிக்கும்போது ஒரு இளம் பெண்ணின் அழகான முகத்தை, பிளவுகள் சற்றே தெரியும் திரண்ட வெளிர் மார்புகளை, குட்டைச் சட்டையின் நீக்கல்களூடு தெரியும் வாளிப்பான தொடைகளை பார்த்துக் கொண்டு பயணிப்பது நெரிசலிலும் சந்தோஷத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும். இப்படியான தருணங்களில் பட்டினத்தாரின் “நித்தம் பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்” என்ற வரிகளின் தத்துவம் பரிபூரணமாக விளங்கும். ஒரு பெண்ணை விழுங்குவது போலத் தொடர்ந்து உற்று நோக்குவது மனதில் தீய எண்ணங்கள் உள்ளவன் என்ற தோற்றப்பாட்டைப் அவளுக்கும் பிறருக்கு உண்டாக்கலாம் என்பதால் இடையிடையே கண்கள் சுழன்று நடைபிணங்களாக இருப்பவர்களையும் அவதானிக்கும். ஆனாலும் சில நொடி ஆவர்த்தன இடைவெளிகளில் மீண்டும் பெண் மீது பார்வை படரும். மாலை நேரத்தில் பறவைகள் கூடுகளை நோக்கி பறப்பதுபோன்று வேலையை முடித்துக் கொண்ட மக்கள் கூட்டம் லண்டன் பிரிட்ஜ் ரியூப் ஸ்ரேசனை நோக்கி சிற்றெறும்புகள் சாரி சாரியாக தமது புற்றை நோக்கிப் போவதுபோன்று படையெடுத்துக் கொண்டிருந்தனர். ரியூப் ஸ்ரேசனை அண்மித்தபோது ஊசிகளாகக் குத்தும் பனிக்காற்று வீசும் சப்தத்தையும் மீறி கட்டட இடுக்குகளில் வசிக்கும் வெளிர்சாம்பல் வர்ணப் புறாக்களின் படபடப்போடு கூடிய குறுகும் சப்தம் கேட்டது. பாதசாரிகள் மற்றும் பயணிகள் திரளினுள் ஒரு எறும்பு போன்று நானும் சுரங்க வாயிலிலிருந்து கீழிறங்கும் அகல அகலமான படிகளில் வேகமாக இறங்கி, பயணச்சீட்டை ரிக்கற் மெசினில் அழுத்தி நான் போகவேண்டிய பிளாற்ஃபோம் இலக்கத்தை தொடர்ந்து நடந்துகொண்டே கண்களால் துழாவினேன். சரியான பிளாற்ஃபோமைக் அடையாளம் கண்டு அதற்குரிய எஸ்கலேற்றர் படிகளில் நின்றபடி பயணம் செய்யாமல், தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நெரிசலில் இருந்து விடுவிக்கும் என்று எண்ணியவாறே தட தடவென கீழே நோக்கி ஓடத் தொடங்கினேன். என்னைப் போலவே அதிகமானவர்களும் ஒவ்வொரு நொடியின் பெறுமதியை உணர்ந்தவர்களாக படிகளில் ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது. பிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது. --தொடரும்--
 19. 18 points
  அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம் வீங்கித் தான் தனது இரண்டு பையன்களையும், தனது ஒரே மகளையும்..யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில்,,,விடுதிகளின் வைத்துப் படிப்பித்து வருகிறார்! காலையில் பள்ளிக்கூடம் போபவர்...மாலையில் நாலு மணிக்குச் சைக்கிளில் ஏறித் தனது மிளகாய்த் தோட்டத்துக்குப் போய் விடுவார்! பிறகு வீட்டுக்கு வர...பின்னேரம் ஏழு மணியாகும்! இரண்டு பிள்ளைகள் ஒரே இடத்தில் படிப்பதால்….எவருடைய வசதிக் கட்டணத்தை எப்போது கட்டியது என்பது அவருக்கு நினைவில் இல்லை! இருந்தாலும் அதே கல்லூரியில் படிப்பிக்கும்...தன்னுடன் ஆசிரிய கலாசாலையில் ஒன்றாகப் படித்த பொன்னம்பலம் மாஸ்ரரிடம் பணத்தைக் கொடுத்ததாக அவருக்கு நினைவுண்டு! அதனால் தான் அவருக்கு அந்த எரிச்சல் வந்திருக்க வேண்டும்! அப்பா..அம்மாவுடன்...அளவளாவுவது...அவனுக்குக் கேட்டது! பின்னர் அம்மா...அப்பாவுக்குத் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்த தனது சேமிப்பிலிருந்து ….நூறு ரூபாவை எடுத்து என்னிடம் தந்து...தம்பி..ஒருத்தரிட்டையும் குடுக்காமல்...நீயே நேர போய்க் கவுண்டரில கட்டிப்போட்டு, றிசீட்டை வாங்க்கி கொண்டு வரவேணும் எண்டு கடுமையான கட்டளையும் போட்டு விட்டுச் சென்று விட்டார்! கொடுத்த காசைப் பொன்னம்பலம் கட்டாமல் விட்டது ..அப்பாவுக்குப் பெரிய கவலையாகப் போய் விட்டது! வாத்திச் சீவியம் என்றால் இப்படித் தானே! அவனுக்கும் என்ன பிரச்சனையோ என்று நினைத்தவாறே….தம்பி 'துலாவைக் கொஞ்சம் எட்டி மிதி அப்பு 'என்று துலா மிதிக்கும் மூத்த மகனுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்! அம்மாவும் அப்பாவைப் போலத் தான்! வளவுக்குள் இருபது தென்னை மரங்களும், சில பனை மரங்களும் உண்டு! பள்ளிக்கூடத்தால் வந்த பிறகு...அம்மா...என்றுமே பகல் நித்திரை கொண்டதை ...அவன் கண்டதில்லை! அப்பா முதல் நாள்...நனைத்துப் பிழந்து போட்ட தென்னோலைகளைப் பின்னுவதும், பனையோலைகளின் நாரிலிருந்து வெங்காயக் கூடை, மற்றும் பனையோலையில் இருந்து பாய் போன்றவை பின்னுவதும் அம்மாவின் பின்னேர வேலைகளாக இருந்தது! சனி ஞாயிறுகளில் பிள்ளைகளும் இந்த வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுமுண்டு! இப்படியான வேலைகளிலிருந்து அம்மாவுக்கு வரும் பணத்தை ...அப்பா கண்டு கொள்வதில்லை! அதற்காக அம்மாவும் தேவையில்லாமல் செலவழிப்பதுமில்லை! இந்தப் பணத்தை வைத்து...அம்மா பல வேளைகளில்...எங்கள் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறாள்! எங்களிடம் ஒரு பழைய ரேடியோ ஒன்று இருந்தது! அதன் பின் பக்கத்தில் பெரிய..பெரிய பல்புகள் மாதிரி வால்வுகள் இருக்கும்! ஒரு இரவில்..அந்த றேடியோவின் பின பக்கத்தைத் திறந்து விட்டால்...அந்த வால்வுகளின் வெளிச்சத்தில்..ஒரு புத்தகம் கூட வாசிக்கலாம்! இவை அதிகம்...பற்றரிகளை உபயோகிப்பதால் நீண்ட நேரம் வானொலி கேட்க முடியாது! காலைச் செய்திகளும்..மாலைச் செய்திகளும் தான் கேட்பதுண்டு! ஐக்கிய தேசியக் கட்சி...அல்லது சுதந்திரக் கட்சி என்று எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ அதற்கேற்ப யானை வரும் போது ஒலிக்கும் மணிச்சத்தமோ அல்லது..யானை கலைக்கும் போது பறை தட்டும் சத்தமோ மாறி ...மாறி வரும்! ஒரு நாள்.. எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...அடுத்த அறையிலிருந்து சல்லல்லாஹு சலையும் அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து கொண்டிருந்த போது ...வீதியில் ஒரு கல் கிடந்தது! அவர் அதனை ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டுத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் என்று நபிகளின் போதனை போய்க் கொண்டிருந்தது! ஆனால் எமது ஆஸ்தான ரேடியோ ..தன்ர பாட்டில் 'சிவனே' என்று பேசாமல் குந்திக்கொண்டிருந்தது! அது கடைசியாக வாய் திறந்து கதைத்து.. ஆறுமாதங்கள் முடிந்திருந்தது! அப் போது தான் எல்லோருக்கும் தெரிந்தது...அம்மா..எங்களுக்குத் தெரியாமல் ஒரு ற்றானசிஸ்ரர் ரேடியோ வாங்கியிருக்கிறாள் எண்டு! அதன் பெயர் 'எலையிற்' என்று இப்போதும் நினைவில் உள்ளது! சரி...கதையை விட்டுக் கன தூரம் போய் விட்டோம் போல உள்ளது! மூத்தவனும், அக்காவும் ஒரு மாதிரி அரசாங்க வேலையில் சேர்ந்து..அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கை கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்! ஆனால் அப்பாவும்..இதுவரை தோட்டம் செய்வதை விடவுமில்லை…! அம்மாவும் கிடுகு பின்னுவதை நிறுத்தவுமில்லை! அவை இரண்டும் ..அவர்கள் பணத் தேவைக்காகவன்றி..ஒரு ஆத்ம திருப்திக்காகச் செய்வது போலத் தோன்றியது! கடைசி மகனால் தான் ....அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கொஞ்சம் பிரச்சனை தோன்றியது! அவனுக்கும் படித்து வேலை செய்யும் நாட்டம் இருக்கவில்லை! அவனது நண்பர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து பணம் அனுப்பத் துவங்கியிருந்தனர்! அவனுக்கும் அந்த ஆசை பிடித்து விட்டது! அப்பாவும் ...தனது மிளகாய்த் தோட்டத்தைக்..குத்தைகைக்கு விட்டு..அந்த பணத்தை வைத்து அவனை ஒரு ஏஜன்சி மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்! தம்பி...எனக்குக் கலியாண வயசில ஒரு பொம்பிளைப் பிள்ளையிருந்தும்...நான் உன்னைச் செலவழிச்சு அனுப்பிறன்! போற இடத்தில ..ஏதாவது செய்து வாழ்க்கையில முன்னேறப் பார் அப்பு! வேற எதுவும் எங்களுக்கு நீ செய்யவேண்டாம்! அவனுக்கும்...வெளி நாடு போன பின்னர் தான்..அந்த வாழ்வின் உண்மையான உருவம் தெரிந்தது! தனது நண்பர்கள் அனுப்பிய படங்களையும், அவர்கள் அனுப்பிய ‘பிறை' நையிலோன் சேட்டுக்களையும், வைத்து அவன் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்றும் அவனுக்குப் புரிந்தது! மூன்றே வருடங்களில் அவன் திருப்பி அனுப்பப் பட்டிருந்தான்! அவன் திரும்பி வந்து...இரண்டு மாதங்க கழித்து..! "அம்மா...கொழும்பில ஒரு கொம்பியுட்டர் கோர்ஸ் ஒண்டு செய்தால்...நான் இதுவரை படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலை எடுக்கலாமாம்! ஆனால் கொஞ்சம் ...காசு தேவைப்படும்!" அம்மாவிடம் இருந்து அமைதியாகப் பதில் வந்தது! அடுத்த பென்ஷன் வரட்டும்! ( யாவும் கற்பனை)
 20. 18 points
  “அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு நேரம் போதுமானது. அலாரம் 'டிங்' 'டிங்' 'டிங்' என்று இனிமையாகத்தான் ஒலிக்கும். ஆனாலும் அவன் அன்பு மனைவியின் இனிய "அத்தான்" என்ற குரல் ஒலி கேட்காது எழுந்ததே இல்லை. பல் துலக்குவதிலிருந்து பாதணி போடும்வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் நேர்த்தியாக வழங்கிக் காலை உணவையும் அருந்த வைத்து, ஏழரை மணிக்கு அவனை வேலைக்குப் புறப்படத் தயாராக்கி விடுவாள். அதுமட்டுமின்றிப் பாடசாலைக்குப் போகும் மூத்தவனையும் பளிச்சென்ற உடைகளுடன் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பித்து அவனுடன் மகிழுந்தில் ஏற்றிவிடும்போது டாண் என்று அருகேயுள்ள கோவில் மணி ஒலிக்கும். பாலர்வகுப்புக்குச் செல்லும் இளையவனை அவளே கூட்டிச் செல்வாள். அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும் ஆட்டும் கடைக்குட்டியை அவன் அணைத்துக் கொஞ்சும்போது அம்மாவுக்கும் ஒன்று அழுந்தக் கிடைக்கும். மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!! பணி தொடரும்.
 21. 18 points
  France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அன்பார்ந்த உறவுகளே 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை என யாழ்களத்தில் நேசக்கரத்தின் பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH மற்றும் பொருளாளர் Logeswaran KANDASAMY ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன். செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான பத்திரங்களை தயார் செய்தபடியிருக்க பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது அதைக்கவனித்த அவரது மகன் Logeswaran சந்துரு (பட்டதாரி - கணக்காளர்) மக்களுக்கு தண்ணீர் தானே நானே செய்கின்றேன் என அதை தனியே செய்ய ஒத்துக்கொண்ட விடயம் இன்று எமது செயலாளரால் நிர்வாகக்கூட்டத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதும் உடனடியாகவே அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இங்கு அறியத்தருவதில் France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பெருமகிழ்வு அடைகிறது. ஒரு குளாய்கிணறு அமைக்க – 20000ரூபாய். 12 கிணறுகளுக்கும் – 240000.00ரூபாய் (அண்ணளவாக 1400€) இவ்வகையான பெரும் மனம் கொண்ட பிள்ளையை சமூகத்துக்கு உருவாக்கித்தந்த திரு. Logeswaran கந்தசாமி திருமதி. Logeswaran சசிகலா தம்பதிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.. செல்வன் Logeswaran சந்துருவை France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வாழ்த்தி நிற்கிறது வாழ்க வளமுடன். சாந்தியக்காவுடன் France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் தொடர்பு கொண்டு பணத்தை அனுப்புவதற்கு தேவையான ஒழுங்குகளை கவனிப்பார். நன்றி. http://www.yarl.com/forum3/index.php?showtopic=142802
 22. 18 points
  முகவரி தொலைத்த முகங்கள். மலைகள் இதளிற்காக.. சாத்திரி..பிரான்ஸ் ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள் பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு இறந்து போயிருந்தாள். இப்போ இந்த வீட்டில் வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை வரதன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது மகள் ரைகர் என்று வைப்போம் என்றாள். அதென்ன ரைகர் பேசாமல் தமிழில் புலி என்றே வைப்போம் என்றார் வரதன்.நாயைப்போய் புலி எண்டு கூப்பிட ஒரு மாதிரி இருக்கு என்றாள் அவரது மனைவி.அப்போ ரைகர் என்று கூப்புடேக்கை மட்டும் ஒரு மாதிரி இருக்காதா என்று விட்டு புலி என்றே பெயரை வைத்து விட்டிருந்தார். அன்று காலைநித்திரையில் இருந்தவரை அவரது மகளின் தொலைபேசி அழைப்பு எழுப்பிவைக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றுவிட்டு வைத்துவிட்டாள் அப்போதுதான் அவருக்கு தனது பிறந்தநாளே நினைவிற்கு வந்தது ஆனால் அதைப்பற்றி அவரிற்கு மகிழ்ச்சியோ கவலையோ எதுவும் இல்லை நேற்றிலிருந்து லேசாய் விட்டு விட்டு நெஞ்சு வலிக்கிறது இண்டைக்கு வைத்தியரிட்டை போகவேணும் என் நினைத்தபடி கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டதுமே அவர் எழுந்து விட்ட சத்தத்தைக் கேட்ட புலி வாலை ஆட்டிக்கொண்டு அவரிடம் ஓடிவந்து குழைந்து கொள்ள அதனது பாத்திரத்தில் உணவை நிரப்பி விட்டு தேனீரை தயார் செய்து கொண்டு வரவேற்பறைக்கு வந்த வரதன் தனது வழைமையான வேலைகளில் முதலாவதை தொடங்கியவர் தனது மனைவியின் படத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு அடுத்த படத்திற்கு மாறினார்.அவரிடமிருக்கும் அரிய படங்களில் அதுவுமொன்று அதனை பெரிதாக்கி வரவேற்பறையில் மாட்டியிருந்தார் ஒரு தீவின் கடற்கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றில் இரண்டு கைகளையும் கட்டியபடி மாலுமி உடையில் கம்பீரமாக நடுவே வரதன் நின்றிருக்க அருகில் பலர் நின்றிருந்தார்கள்.குட்டி மட்டும் பெரியதொரு மீனை இரண்டு கைகளிலும் ஏந்தியபடி தேவாலயத்தில் மன்றாடுபவனைப்போல வரதனிற்கு முன்னால் முட்டுக்காலில் நின்றிருந்தான்.அந்தப் படத்தில் இருப்பவர்களில் குட்டி மட்டுமல்ல றோகன்.பத்தன் .ராஜன். ஆகியோரும் இப்போ உயிருடன் இல்லை.ஆனால் வரதன் மீன் குழம்பு சாப்பிடும் போதெல்லாம் குட்டி கட்டாயம் நினைவிற்கு வருவான் காரணம் அவனது கைப் பக்குவம் அப்படி.. குழம்பே தனி ருசியாக இருக்கும்.அந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு இன்னமும் கொஞ்சம் அதிகமாக வலிப்பது போலிருக்க சோபவில் அமர்ந்தவர் அப்படியே அன்றைய நாளின் நினைவுகளிற்கு பயணிக்க ஆரம்பித்திருந்தார். ........................................... ....................................................................... 1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம்23ம் திகதி மலை நேரம் வங்கக் கடலின் தெற்குப்பக்கமாக இந்து சமுத்திரத்தில் சர்வதேசக் கடல் எல்லையில் அலைகளின் தாலாட்டல்களோடு நங்கூரமிட்டிருந்தது றெஜினா என்கிற கப்பல். அன்று காற்று கொஞ்சம் அதிகமாகவே வீசிக்கொண்டிருந்தது லோசான குளிரும் அடித்துக் கொண்டிருந்ததால் வேலைகளை வேகமாக முடித்தவர்கள் தங்கள் கைகளில் இருந்த கறுப்பு பெயின்ரை முடிந்தவரை ரின்னரில் தேய்த்து கழுவி விட்டு விட்டு கப்பலின் முதலாவது தளத்தில் அமைந்திருந்த சமையலறையில் ஆறுபேரும் குழுமியிருந்தார்கள். அனைவரது உடைகளிலும் கைளிலும் இன்னமும் கொஞ்சம் பெயின்ற் ஒட்டியிருக்கத்தான் செய்தது. குட்டியும் ராஜனும்..சித்தாவும் அன்றைய இரவுச் சமையலிற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்க றோகனும் அன்ரனும் அன்றைய இரவு இசை நிகழ்ச்சிக்காக அவர்கள் பல நாடுகளிலும் வாங்கியிருந்த வாத்தியக் கருவிகளான மத்தளம் கித்தார்.உடுக்கு என்பனவற்றை கீழ் தளத்திலிருந்து சமையலறைக்கு கொண்டு வந்து தரையில் வட்ட வடிவமாக அடுக்கி வைத்தார்கள். அவர்களிடம் ட்ரம் வாத்தியக் கருவி இல்லாததால் வழைமை போல நான்கு அலுமினிய சாப்பாட்டுக்கோப்பைகளை எடுத்து கவிழ்த்து வைத்தான் அன்ரன்.இரண்டு விஸ்கிப் போத்தல்களை மார்போடு கட்டியணைத்தபடி வந்த பத்தன் .அப்பாடா ஒருமாதிரி பெயின்ற் அடிச்சு முடிச்சாச்சு ஒரு நாளைக்கு நல்லா காய விடவேணும் நாளைக்கு கனக்க வேலையிருக்காது அதாலை என்ஜோய் பண்ணுவம் என்றபடி அதனை கீழே வைத்து விட்டு தனது பாக்கெற்றிலிருந்து சிகரற் பக்கற் இரண்டையும் எடுத்து கீழே போட்டு விட்டு அமர்ந்தான். அன்றிரவிற்கான சமையலை தயார் செய்து விட்டு ராஜனும். குட்டியும் .சித்தாவும் வந்து அமர றோகன் கித்தாரில் சுருதி சேர்க்கத் தொடங்கியிருந்தான் அன்றிரவு அன்ரன் தான் ட்ரம்மர். எந்த வாத்தியத்தை யார் வாசிப்பபது என்கிற ஒழுங்கு முறையெல்லாம் அங்கு கிடையாது யார் எதை வேண்டு மானாலும் வாசிக்கலாம் ஏனெனில் யாருமே முறையாக வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் கிடையாது. சித்தா கொஞ்சம் நன்றாக மத்தளம் அடிப்பான். றோகனும் பத்தனும் இயற்கையாகவே நன்றாகப் பாடுவார்கள்..பத்தன் அங்கிருந்த பிளாஸ்ரிக் கோப்பைகளிற்குள் விஸ்கியை ஊற்றத் தொடங்க அவர்களது பாட்டுக் கச்சேரி ஆரம்பமானது ..................................... ....................................................... இவர்களோடு சேராமல் வழைமைபோல கப்பலின் மேல் தளத்தில் இருந்த தனது மாலுமிக்கான அறைக்கு சென்ற வரதன் சிகரற் ஒன்றை எடுத்து பற்றவைத்து இழுத்து விட்டபடியே.தொலைத் தொடர்பு கருவின் சத்தத்தை குறைத்து வைத்து விட்டு கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் REGENA என்கிற பெயரோடு இதுவரை கடலில் பயணம் செய்துகொண்டிருந்த இந்தக் கப்பல் இன்று அதன் பெயர் அழிக்கப்பட்டு பெயரற்ற கப்பலாக வங்கக் கடலின் மேற்காக சர்வதேசக் கடல் எல்லைக்குள் ஏழு பேருடனனும் உள்ளே நவீன ஆயுதங்கள் ஏராளமான எறிகணைகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் வெடிபொருட்கள் . இராணுவத் தொழில் நுட்ப உபகரணங்களோடும் . அடங்கியகொள்கலன்களை தாங்கியபடி நங்கூரமிட்டிருந்தது. . கப்பலின் தலைமை மாலுமி வரதன் . அந்தக் கப்பலில் மற்றையவர்களை விட வயதில் அதிகமானவர் இவர்வர்தான் அதனாலேயோ என்னமோ மற்றவர்களுடன் அதிகம் பேசவும் மாட்டார். பெரும்பாலும் தானுண்டு தன் வேலையுண்டு என்று தனியாகவே இருப்பார் நிறைய சிகரற் புகைப்பார் அவர் மது அருந்தியதை இதுவரை யாரும் கண்டதில்லை அதே நேரம் கண்டிப்பானவரும்கூட.அடுத்ததாக உதவி மாலுமி பத்தன்.றோகனும் சித்தாவும் கப்பலின் பொறியியலாளர்கள் கப்பலின் இயந்திரம் தொடக்கம் தொலைத் தொடர்புக் கருவி சமையல் அடுப்பு திருத்துவது தொடக்கம் சுட்டுப் போன பல்ப்பு மாற்றுவது வரை அந்தக் கப்பலின் அனைத்து திருத்த வேலைகளும் அவர்களுடையதுதான்.மற்றும் இவர்களிற்கு உதவியாகவும் சமையல் போன்ற பணிகளை செய்பவர்களாக ராஜன். அன்ரன்.குட்டி ஆகியோர் இருந்தார்கள்.ஆனாலும் அனேகமாக அவைருமே அனைத்து வேலைகளையும் செய்யக் கற்றுக் கொண்டிருந்தனர். வரதனும் சித்தாவும் கப்பலை எப்படி திசை பார்த்து செலுத்துவது என்று மற்றவர்களிற்கு சொல்லிக் கொடுப்பார்கள். றோகன் திருத்த வேலைகளை சொல்லிக் கொடுப்பான். நெருக்கடியான காலங்களில் கையிலிருக்கும் அல்லது கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி ருசியாக சமைக்கலாம் என்று குட்டிசொல்லிக் கொடுப்பான். கப்பல் ஓட்டுவதை விட குட்டியின் சமையலை கற்றுக் கொள்வதுதான் கடினமாகவும் அதே நேரம் அனைவரிற்கும் ஆர்வமான ஒன்றாகவும் இருந்தது. கப்பலின் இரு பக்கமும் நைலான் கயிறுகளும்.கயிற்று ஏணிகனும் தொங்க விடப் பட்டு பலகைகளை இணைத்து கட்டி அதில் தொங்கிக் காண்டு நின்றபடியே மூன்று நாளாக அனைவரும் சேர்ந்து அதில் எழுதப் பட்டிருந்த றெஜுனா என்கிற பெயரில் R எழுத்தை மட்டும் விட்டுவிட்டு மற்றையவற்றை காஸ் லாம்பு மூலம் சூடாக்கி அழித்து அவற்றின் மீது கறுப்பு பெயின்ரை அடித்து முடித்திருந்தார்கள்..நாளை ஒருநாள் பெயின்ற் நன்றாக காய்ந்ததும் ஸ்ரிக்கர்கள் போல வெள்ளைக் கலரில் தயாரிக்கப் பட்டிருக்கும் புதிய பெயரை அதில் ஒட்டிவிட்டு லோக அதன் மேல் வெள்ளைப் பெயின்ரை அடித்து முடித்து விட்டு கப்பல் முல்லைத் தீவை நோக்கி தொடர்ந்து பயணிக்கவேண்டும்.எல்லாமே நன்றாக நடந்து முடிந்து விட வேண்டும் என்கிற தவிப்பு வரதனிற்கு இரண்டாவது சிகரற்றையும் பற்றவைத்து இழுக்கத் தொடங்கியிருந்தார். ................................................... ........................................................ ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாடலை வரிசையாய் பாடி முடித்து றோகன் தனது அபிமான பாடலான சுறாங்கனியை படித்து முடித்திருந்தான்..இப்போ குட்டியின் முறை .குட்டி தனது கரகரத்த குரலில் தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..டெய்ங் டொய்ங்....என்று பாடத் தொடங்க யாரும் இசையமைக்ககாமல் குட்டியை பாத்து கையெடுத்து கும்பிட்ட படி இருந்தார்கள்..தயவு செய்து நீ பாட்டு படிக்கக் கூடாது எண்டு எத்தனை தரம் சொல்லியிருக்கிறம்.அதுவும் இந்தப் பாட்டுக்கு எப்பிடியடா மேளம் அடிக்கிறது ராசா.. பாடாதை ராசா என்றான் றோகன். சரி பாட்டுத்தானே படிக்கக் கூடாது பொறுங்கோ வாறன் என்றபடி மடமடவென படிகளில் கீழ்த் தளத்திற்கு இறங்கி அவனது அறைக்கு போய் மடித்த ஒரு கடதாசியை கொண்டு வந்தவன் இது என்ரை ராசாத்திக்காக எழுதின கவிதை ஒண்டு வாசிக்கிறன் எல்லாரும் கேட்டிட்டு எப்பிடியிருக்கு எண்டு சொல்லுங்கோ என்றவன் தொண்டையை செருமி சரி செய்தபடியே நான்காய் மடித்திருந்த கடதாசியை பிரித்து படிக்கத் தொடங்கி னான். அவ்வப்போது வட்டமிடும் மீன் கொத்திகளிடமும் அலையிடையை துள்ளிப்போகும் மீன்களிடமும் தூரத்தே மிதிதந்து போகும் கடல் செடிகளிடமும் சிறு புள்ளியாய் ஆகாயத்தில் அவ்வப்போது பறந்து போகும் விமானத்திடமும் உன் மூக்குத்தியைப் போலவே இரவில் மின்னும் நட்சத்திரங்களிடமும் ஆழ்கடலில் அவ்வப்போது நான் செய்து போடும் கடதாசிக் கப்பல்களிடமும் உனக்காக ஒரு சேதி சொல்லியனுப்பியிருக் கின்றேன் அவை உனக்கு கிடைக்காது என்று தெரிந்திருந்தும் கூட ஏன் தெரியுமா?? என்னைப் போலவே அவைகளிடம் நீயும் எனக்காக சேதிகள் சொல்லியனுப் பியிருப்பாய் என்று எனக்குத் தெரியும். என் ..ராசாத்தி.. படித்து முடித்து நிமிர்ந்த குட்டியின் கண்கள் நிரம்பியிருந்தது.மற்றைய அனைவரிடமும் ஒரே மெளனம் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.அந்த சில செக்கன் மெளனத்தை உடைப்பதற்காக சாப்பாட்டுக் கோப்பைகளில் ட்ரம் வாசித்துக் கொண்டிருந்த அன்ரன் ஒரு ட்ரம் வாத்திய கலைஞனைப் போல மடமடவென அவற்றில் தட்டிவிட்டு .குட்டியின் ராசாத்திக்கான கவிதையை தொடர்ந்து இப்பொழுது றோகன் அவர்கள் எங்கள் சமையல் சக்கரவர்த்தி குட்டிக்காக ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்கிற பாடலைப் பாடுவார் என்று அறிவித்ததும் றோகன் கிட்டாரை தட்டியபடி பாடத் தொடங்கியிருந்தான்.பாடலின் முடிவில் அங்கு வந்த வரதன் பாடல் முடியும் வரை காத்திருந்து விட்டு ..பெடியள் எல்லாரும் சாப்பிட்டு படுங்கோ நாளைக்கு கப்பலை கொஞ்சம் துப்பரவு செய்யவேணும் என்றபடி ஒரு கோப்பையை எடுத்து தனக்கான சாப்பாட்டை போட்டவர் பத்தனைப் பார்த்து நீ இரவுக்கான சென்றியை பிரிச்சக் குடு என்றபடி சாப்பாட்டோடு தனது மாலுமி அறைக்கு ஏறிப் போகத் தொடங்கியிருந்தார். இந்த உலகத்திலேயே நடுக் கடலிலை நிக்கிற கப்பலுக்கு சென்றி போடுறவர் நம்ம வரதன் அண்ணை மட்டும்தான். இவருக்கு முதல்லை தண்ணியடிக்கப் பழக்கவேணும் அப்பதான் நாங்கள் நிம்மதியாய் இருகக்லாம் என்றபடி றோகன் கித்தாரை அதன் உறைக்குள் போட மற்றவர்களும் சிரித்தபடி வாத்தியக் கருவிகளை ஒழுங்கு படுத்தி விட்டு சாப்பிடத் தயாரானார்கள். ....................................................................... அன்று வானிலை கொஞ்சம் மோசமாகவே இருந்தது அலைகள் பெரிய மலைப்பாம்புகள் போல வளைந்து நெளிந்து கப்பலில் மோதி அசைத்துக்கொண்டிருக்க வரதன் கப்பலை அலைகளின் போக்கிற்கு ஏற்ப திசை திருப்பி அதன் அசைவை குறைத்துவிட்டு வரும்போது மற்றையவர்கள் கப்பலிற்கு புதிதாக ஒட்டுவதற்காக ஸ்ரிக்கர்கள் போல தயாரிக்கப்பட்டு வைத்திருந்த R.SAMIR என்கிற பெயரை கப்பலின் மேல் தளத்தில் வரிவையாக அடுக்கிமுடித்திருந்தார்கள்.அதனை வரதன் ஒரு தடைவை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. சரி நான் முதல் இறங்குறன் என்றபடி கயிற்று ஏணியில் குட்டி இறங்கத் தொடங்கியிருந்தான் .ஜயோ என்கிற சத்தத்தை கேட்டு அனைவரும் ஓடிப்போய் கீழே எட்டிப் பார்த்தபோது கடல் நீரில் மெல்லிய வட்ட வடிவ நீர்த்திவலைகளில் சிகப்பு நிறம் விரிந்து சென்று கொண்டிருந்தது.வட்டமாய் சுற்றிவைக்கப் பட்டிருந்த கயிற்றை இடுப்பில் கட்டி விட்டு கடலில் குதிக்கத் தயாரான பத்தனை தடுத்து நிறுத்திய வரதன் ராஜனோடு சேர்ந்து கயிற்றைப் பிடித்து மெதுவாக கடலில் இறக்கியதும்.கை கால்களை அடித்து தத்தளித்தபடி கடலின் மேல் மட்டத்திற்கு வந்த குட்டியை எட்டிப் பிடித்த பத்தன் அவனது கைகளை தனது தோளில் போட்டு முதுகோடு இணைத்து வரதன் எறிந்த இன்னொரு கயிற்றால் கட்டிக்கொள்ள அனைவருமாக சேர்ந்து அவர்களை கப்பலிற்குள் இழுத்த எடுத்து கப்பலின் மேல் தளத்தில் குட்டியை கிடத்தினார்கள்.அவன் முனகியபடியே மயக்க நிலைக்கு போய்க்கொண்டிருந்தான். அவசரமாக முதலுதவிப் பெட்டியை துக்கிக் கொண்டு ஓடிவந்த றோகன் குட்டியை புரட்டிப் போட்டு இரத்தம் வழிந்துகொண்டிருந்த அவனது பிடரிப் பகுதியில் ஒரு துணியை வைத்து அழுத்திப் பிடித்துக்கொள்டிருக்க அன்ரன் காயப்பகுதியை சுற்றியிருந்த தலை முடிகளை மள மளவென கத்தரிக்கோலால் வெட்டியபடியே டேய்..சேவிங் றேசர் ஒண்டு கொண்டு வாங்கோ என கத்த கப்பலின் படிகள் வழியே கீழே ஓடிப்போன பத்தன் தனது தாடி வழிக்கும் சேவிங் றேசரை கொண்டு வந்து நீட்டினான்.தலைமுடி குட்டையாய் வெட்டிய பகுதி முழுவதையும் மெதுவாக ராஜன் வழித்து முடித்ததும் காயத்தில் அழுத்திப் பிடித்திருந்த துணியை விலக்கிய றோகன் காயத்தின் மீதும் இருந்த முடிகளை வெட்டிவிட்டு இரண்டு அங்குலம் அளவிற்கு கிழிந்து போயிருந்த அவனது காயத்தை விரல்களால் அழுத்தி இணைத்துப் பிடித்து தையல் போடத் தொடங்கியபோது அவனது பெரு விரல் குட்டியின் தலையில் உள்ளே அமிழ்வதை உணர்ந்தவன் நிமிர்ந்து வரதனைப் பார்த்து மண்டையோடு உடைஞ்சிருக்கு கீழை விழேக்குள்ளை தலை பலகையிலை அடிபட்டிருக்கு என்றபடி தைத்து முடித்து அதன் மீது மருந்து போட்டு துணியால் தலையை சுற்றி கட்டுப் போட்டு முடிக்கும் போதே குட்டி முழுவதுமாய் மயங்கிப் போயிருந்தான். ........................................... ........................................................ குட்டி மோசமாக காயமடைந்த விடயம் உடனடியாக தாய்லாந்திலிருந்த தலைமையகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. கப்பல் தரித்து நிற்கும் திசையை சரியாக கேட்டு அறிந்துத கொண்டவர்கள் அடுத்ததாக என்ன செய்யலாமென்பதை மீண்டும் அறிவிப்பதாக சொல்லியிருந்தார்கள்.அன்று பகல் முழுதும் ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக்கொள்ளாமலேயே ஒரு பக்கம் முழுதுமாக பெயர் மாற்றும் வேலையை முடித்திருந்தார்கள். அன்ரிரவு குட்டி கண் விழித்துப் பார்த்தான் தலையை அசைக் முயன்றான் முடியவில்லை கழுத்திற்கு மேலே தலை வீக்கமடைந்திருந்தது .என்ன செய்யுதடா என்று அவனது முகத்திற்கு நேரே குனிந்து கேட்ட றோகனிடம். முடியேல்லையடா..தலை சரியா வலிக்குதடா.என்றபடி எழுந்திருக்க முயன்றான் அவனால் முடியவில்லை டேய்..காலை அசைக்க ஏலாமல் இருக்கடா கை மட்டும் அசைக்கிற மாதிரி இருக்கடா வலிக்குதடா என்று சத்தமிடத் தொடங்க அவனது தலையில் போடப் பட்டிருந்த துணிக் கட்டையும் மீறி காயத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.றோகன் அவசரமாக முதலுதவிப் பெட்டியில் இருந்து வலி மருந்து ஊசியை எடுத்து குட்டிக்கு ஏற்றிவிட்டு அவனது கைகளை இறுக்கமாக பிடித்தக் கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் குட்டிக்கு வலி குறைந்திருக்கவேண்டும் டேய் எல்லாரும் சாப்பிட்டிங்களாடா யார் சமைச்சது என்று கேட்டதும். நான் தான் சமைச்சனான் சாப்பிடவேண்டியது இவங்கடை தலைவிதி என்று சொன்ன ராஜனிடம் டேய் என்ரை உடுப்பு பையிலை ஒரு பர்ஸ் இருக்கு அதை ஒருக்கா எடுத்துத்தாடா என்றான் குட்டி. ராஜன் எடுத்துக் கொடுத்த பர்சை சிரமப் பட்டு வலக்கையால் வாங்கி பிரித்துப் பார்த்தவன் கண்களில் ஒரு மகிழ்ச்சியோடு இத்தனை நாளா நீங்கள் கேட்ட என்ரை ராசாத்தி இதுதான்ரா என்று காட்டினான் பாஸ்போட் அளவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் இரட்டைப் பின்னலோடு சிரித்துக்கொண்டிருந்தாள்..அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தக் கொண்டிருந்தவன். டேய் ஆறு வருசமா காதலிக்கிறம் இந்த வருசம் கப்பல்லை இருந்து இறங்க அனுமதி கேட்டிருக்கிறன் அப்பிடி அனுமதி கிடைச்சால் என்ரை ராசாத்தியை கலியாணம் கட்ட முடிவெடுத்திருந்தனான். சில நேரம் நான் செத்துப் போயிட்டால் தயவு செய்து பாரமான பெரிய இரும்பு ஒண்டோடை என்ரை பிணத்தை கட்டி கடல்லை போட்டு விடுங்கோடா.ஏனெண்டால் என்ரை பிணம் மிதந்து போய் சில நேரம் இலங்கை கரையிலை கிடந்து அது செய்தியா வந்து நான் செத்திட்டன் என்கிற செய்தி அவளிற்கு தெரியவேண்டாம் அவள் தாங்கமாட்டாள் என்றபோது கன்னங்கள் வழியே வழிந்த கண்ணீர் படுக்கையில் விழத் தொடங்க . சே .. உனக்கு ஒண்டும் இல்லையடா கெதியா சுகமாயிடும் திரும்பவும் நீ சமைச்ச சாப்பாட்டை நாங்கள் சாப்பிடவேணும் என்று றோகன் ஆறுதல்படுத்தினான். மீண்டும் குட்டிக்கு வலியெடுக்கத் தொடங்க இந்தத் தடைவை றோகன் மயக்க மருந்தை செலுத்தினான். ........................................... ............................................................ கப்பலில் இருக்கும் உதவிப் படகு ஒன்றின் மூலம் மேலும் பர்மாவின் ஒரு கரையோர நகரத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அங்கு வைத்தியத்திற்கான ஏற்பாடுகள் செய்து விடுவதாகவும் அதே நேரம் குறித்த நாள் குறித்த நேரத்திற்கு கப்பல் முல்லைத் தீவுக் கடலிற்குள் நுளைந்து விடவேண்டும் என்கிற உத்தரவோடு அன்றிரவு தாய்லாந்திலிருந்து பதில் வந்திருந்தது.மறுநாள் சித்தாவும் றோகனும் படகு மூலம் குட்டியை பர்மாவிற்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டு வருவதாக முடிவெடுத்திருந்தார்கள்.அன்றிரவு ஒருவரோடு ஒருவர் பேசாமல் மெளனமாகவே கழிந்து கொண்டிருந்தது.ராஜனே குட்டிக்கு பக்கத்திலிருந்து கவனித்தக்கொண்டிருந்தவன் அசதியில் தூங்கிப் போய் விட்டிருந்தவன் அதிகாலையளவில் திடுக்கிட்டு கண்விழித்தவன் குட்டியை பார்தவன் திடுக்கிட்டவனாய் அவனது மூக்கில் கையை வைத்துப் பார்த்துவிட்டு இதயத்தில் காதையும் வைத்துப் பார்த்தவன் அடுத்த அறையில் நித்திரையிலிருந்த றோகனை அவசரமாக தட்டியெழுப்பிக் கூட்டி வந்தான். ஓடிவந்த றோகன் குட்டியின் கையில் நாடி பிடித்துப் பார்த்து விட்டு கைகளை குறுக்காக அவனது இதயத்தில் வைத்து பலமாக பலமுறை விட்டு விட்டு அமுக்கியவன் ராஜனைப பார்த்து தலையை மெதுவாக இடம் வலமாக அசைத்தான். குட்டி இறந்து விட்ட செய்தியை தாய்லாந்து தலைமையகத்திற்கு வரதன் அறிவித்தார் உடலை கடலில் விசி விட்டு பயணத்தை தொடருமாறு கட்டளை வந்திருந்தது.குட்டியின் உடலைச் சுற்றி நின்றவர்களிடம் வந்த வரதன் விடயத்தை சொன்னதும் றோகனும் சித்தாவும் எதிர்த்ததோடு கப்பல் பயணிக்கின்ற வழியில் கப்பலை நிறுத்தி படகில் உடலை எடுத்துச் சென்று எங்காவது ஒரு நாட்டுக் கரையில் அல்லது தீவில் புதைத்துவிடலாமென்று வாதிட மற்றையவர்கள் மெளனமாக நின்றிருந்தனர்.கப்பலில் உள்ள பொருட்களின் பெறுமதி என்பது மட்டுமல்லாமல் அது குறித்த நேரத்திற்கு கொண்டு போய் சேர்க்கவேண்டிய கட்டாயம் கப்பல் சர்வதேச எல்லையில் இருந்து விலகி வேறு பாதையில் பயணித்தால் இந்திய இலங்கை கடற்படையால் வரக்கூடிய ஆபத்துக்கள் என்ன என்று எல்லாமே வரதன் சொல்லிப் பார்த்தார்.ஆனால் றோகனும் சித்தவும் விடுவதாக இல்லை பொருட்களை இறக்கி விட்டு திரும்பும்வரை 12 நாட்களிற்கு குட்டியின் உடலை சமையலறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாக்கலாமா என்றும் ஆலோசித்தார்கள் ஆனால் அவை ஒரு உடலைப் புகுத்த முடியாத சிறிய சதுரவடிவங்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது.அப்போதுதான் ஏதோ யோசித்தவனாக சித்தா அனைவரையும் மாலுமி அறைக்குள் அழைத்துப் போனவன் அங்கிருந்த கணணியில் கப்பலின் பயணப் பாதையை வரதனிற்கு காட்டியபடி அண்ணை இங்கை பாருங்கோ நாங்கள் போற பகுதியிலை இந்தப் பக்கமா நிக்கோபர் தீவுகள் இருக்கு கப்பலை கிழக்குப்பக்கமா E 51 கோட்டிலை கொஞ்சம் நகர்த்தினால் போதும் இந்த இடத்திலை இருந்து நாங்கள் வழக்கமா போற நாவல்த்தீவு கிட்டத்தான் இருக்கு நாங்கள் படகிலை உலலைக் கொண்டுபோய் இங்கை புதைச்சிட்டு வந்திடுவம் கப்பலும் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்திற்கு போய் சேர்ந்திடும் ஒரு பிரச்சனையும் இல்லை . குட்டியை வைத்தியத்திற்கு பர்மாவிற்கு கொண்டு போறதுக்கும் நாங்கள் இவ்வளவு தூரம் போய் இதேயளவு றிஸ்க் கட்டாயம் எடுத்திருக்கத்தான் வேணும் நீங்கள் மனம் வைச்சால் செய்யலாமண்ணை என்று மடமடவென்று பேசிவிட்டு அனைவரையும் பார்த்தான். தனது குறுந்தாடியை சில வினாடிகள் சொறிந்தபடி யோசித்த வரதன் சரி ..கெதியா பேர் மாத்திற வேலையளை முடிப்பம் சித்தா சொன்ன இடத்திற்கு போறதுக்கு மூன்று நாள்பயணம் செய்யவேணும் உடலைக் கொண்டு போய் புதைச்சிட்டு வாறதுக்கு ஆறு மணித்தியலம் தரலாம் அதுக்குள்ளை எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்திடவேணும் அதே நேரம் குட்டியின்ரை உடலை நாலு நாளைக்கு இப்பிடியே வைச்சிருக்க ஏலாது அதை ஒரு போர்வையாலை நல்லா சுத்தி அதுக்கு மேலை பொலித்தீன் ஒன்றாலையும் முழுதா மூடி சுத்திக்கட்டி கப்பலின்ரை அடித்தளத்திலை கொண்டு போய் வையுங்கோ அங்கை குளிரா இருக்கும் அதாலை லேசிலை பழுதாகாமல் இருக்கும் என்று சொன்னதும் அனைவரும் ஒரு நிம்மதிப்பெமூச்சோடு மிகுதி வேலைகளைத் தொடருவதற்காக அங்கிருந்து கிழம்பிப் போனார்கள். கப்பல் பெயர் மாற்றும் வேலைகளை முடித்துக்கொண்டு தொடர்ந்த பயணத்தின் நான்காவது நாள் அதிகாலை சூரியன் லேசாய் சோம்பல் முறித்து கடற்போர்வையை விலக்கி எழத் தொடங்கியிருந்த நேரம் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் உதவிப் படகில் குட்டியின் உடலும் பள்ளம் தோண்டுவதற்கு வேண்டிய உபகரணங்களும் ஒரு நீலக் கலர் பிளாஸ்ரிக்பேப்பரால் மூடப்பட்டிருந்தது. சித்தாவும் .றோகனும்.அன்ரனும் படகில் போய் குட்டியின் உடலைப் புதைத்துவிட்டு வருதாக முடிவெடுத்திருந்தார்கள். சித்தா உதவிப் படகில் எரிபெருளை சரிபார்ததோடு மேலதிகமாகவும் இரண்டு எரிபொருள் கேன்களை எடுத்து வைத்து விட்டு திகை காட்டி தொலைத் தொடர்புக் கருவி பைனாக்குலர் என வேண்டி அனைத்தையும் தயார் செய்து வைக்க கப்பலின் சமயலறைப் பகுதிக்கு சென்ற றோகனும் அன்ரனும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கிகளை எடுத்து சரிபார்த்து இடுப்பில் செருகிக் கொண்டு படகில் ஏறி அமர்ந்தார்கள். படகு மெதுவாக கடலில் இறங்கியதும் கப்பலுடனான அதன் இணைப்பை அன்ரன் எடுத்துவிட சித்தா படகை இயக்கினான் கப்பலில் நின்றவர்களைப் பார்த்து றோகன் கை கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் படகு நாவல்த்தீவை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தது. .................................................................. நாவல்த் தீவு என்பது அதன் உண்மையான பெயர் அல்ல நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் மனிதர்கள் வாழாத ஒரு அழகான தீவு.மலைக்குன்றுகளோடு ஒரு ஏரியும் காடுகளையும் விலங்குகளையும் பறவைகளையும் கொண்ட இந்தப்பூமியில் உள்ள சொர்க்கம் என்று அந்தத் தீவைச் சொல்லலாம். கடற்கரையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் காட்டினூடாக பயணம் செய்தால் அந்த அளகான ஏரியை அடையலாம். அந்தத் தீவு நாவல் மரங்களை அதிகமாகக்கொண்டுள்ளதால் அதற்கு இவர்களாகவே வைத்தபெயர்தான் நாவல்த்தீவு.வேலைகள் எதுவும் இல்லாத தருணங்களில் கப்பலை பாதுகாப்பான சர்வதேசக்கடல் பகுதியில் நங்கூரமிட்டுவிட்டு படகு மூலம் இந்தத் தீவிற்கு வந்து ஏரிக் கரையோரம் கூடாரம் அமைத்து தங்கி மனப் பாரங்கள் அனைத்தையும் இறக்கி வைத்து உலகத்தையே மறந்து அங்குள்ள தென்னை மரங்களின் இளநீரும் வழுக்கையும் சூரை நாவல் பழங்களை ரசித்தும் .மிருகங்களை வேட்டையாடி சமைத்துண்டு சில நாட்கள் மகிழ்ச்சியாய் இருப்பது இவர்களது வழைமை. அந்தத் தீவிற்கு இவர்களைத் தவிர வேறு யாருமே வந்து போனதற்கான தடயங்கள் எதனையும் அதுவரை அவதானித்திருக்கவில்லை. அந்த நாவல்த்தீவில் ஏரிக்கரையோரம் பரந்து விரிந்து வளர்ந்திருந்த ஆலமரத்தடியில் குட்டி சமைத்த உணவை இரசித்து உண்டு அவனோடு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த இடத்திலேயே அவனது உடலைப் புதைப்பதாக முடிவெடுத்திருந்தான் றோகன். படகு சுமார் இரண்டு மணி நேரப் பயணத்தின் பின்னர் சித்தா துல்லியமாக அவர்கள் வழைமைபோல் நாவல்த்தீவில் கரையிறங்கும் இடத்திற்கு படகினை கொண்டு வந்து சேர்த்திருந்தான் யாருடையதாவது நடமாட்டம் இருக்கிறா எனக் கவனித்தவர்கள் படகை தள்ளி கரையில் ஏற்றியதும் குட்டியின் உடலைத் தூக்கி கடற்கரையில் கிடத்தினார்கள் அதிலிருந்து துர் நாற்றம் வீசத்தொடங்கியிருந்தது எனவே அதனை அப்படியே தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் அன்ரன் பெரியதொரு தடியை வெட்டி எடுத்துவர அந்தத் தடியோடு குட்டியின் உடலை சேர்த்துக் கட்டி சித்தாவும் அன்ரனும் தோழில் தூக்கிக் கொள்ள றோகன் மற்றைய பொருட்களை தூக்கியபடி ஏரிக்கரையை அடைந்திருந்தார்கள். அங்கு நின்றிருந்த குரங்குகள் அவர்களைக் கண்டு பயந்தபடி ஓடிப்போய் மரங்களில் ஏறிக் கொள்ள உடலை ஆலமரத்தின் அடியில் வைத்து விட்டு அன்ரனும் சித்தாவும் கிடங்கை வெட்டியபடியே எகிப்திய மம்மி போல் சுற்றிக் கட்டப் பட்டிருந்த குட்டியின் உடலையே வெறித்துப் பர்த்தபடி நின்றிருந்த றோகனிடம்..டேய் அங்கையே நிக்காமல் சாப்பாட்டிற்கு ஏதாவது வழிபண்ணு பண்டி முயல் எதையாவது கொண்டுவா என்றதும். பார்வையை விலக்கிய றோகன் பண்டி முயல் தேடிப் பிடிக்க நேரமாகும் இண்டைக்கு தொங்குமான்தான் தான் என்றவன் இடுப்பில் செருகியிருந்த துப்பாக்கியை உருவியபடி பயந்தோடிப்போய் மரங்களில் ஏறியிருந்த குரங்கு ஒன்றை குறிபார்த்தான் அதன் மடியில் ஒரு குட்டி கட்டிப் பிடித்திருந்ததை கவனித்தவன் கையை தாழ்த்தி மறுபக்கம் சலசலப்பு வந்த இன்னொரு மரத்திற்கு பார்வையை திருப்பியிருந்தான் அங்கு இரண்டு குரங்குகள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தன இரண்டையும் மாறி மாறி குறிபார்த்துக் கொண்டிருந்தான் சண்டை பிடித்துக் கொண்டிருந்த குரங்குகளில் ஒன்று மற்றொன்றை அடித்து அதன் காதினை கடித்து விட்டு பல்லை இழித்து உறுமி மரக் கிழையை வேகமாய் உலுப்பிக் கொண்டிருக்க அடி வாங்கிய குரங்கு காது பிய்ந்து இரத்தம் ஒழுகியபடி ஓடிப்போய் மரக்கிளைக்கு பின்னால் பதுங்கியபடியே வழிந்த தனது இரத்தத்தை கையால் தொட்டு நக்கிக் கொண்டிருக்க அந்தக்குரங்கை நோக்கி றோகன் குறிவைத்தான். டுமீல் என்கிற வெடிச் சத்தத்தை கேட்ட குரங்குகள் பறவைகள் பற்றைகளிற்குள் இருந்த ஊர்வன என அனைத்துமே அந்தத் தீவையே அதிர வைக்கும் அளவிற்கு சத்தமிட்டபடி எல்லாப் பக்கமும் சிதறியோடின. எதுக்கடா அடிச்ச குரங்கை விட்டிட்டு அடிவாங்கின குரங்கை சுட்டனி என்கிற ராஜனின் கேள்விக்கு என்னைப் பொறுத்தவரை தோற்றுப் போனதுக்கு பிறகு உயிர் வழுறதிலை அர்த்தம் இல்லை அது குரங்காயிருந்தாலும் சரி என்றபடி குண்டடிபட்டு தெப்பென விழுந்த குரங்கை போய் எடுத்து வந்த றோகன் ஒரு மரக் கிளை இடுக்கில் அதன் தலையை செருகிவிட்டு அதற்கு கீழே நிலத்தில் சவளால் கிடங்கை தோண்டியவன் இடுப்பு பட்டியின் கூட்டில் மடித்து செருகி வைக்கப் பட்டிருந்த கத்தியை எடுத்து விரித்து குரங்கை உரித்து அதன் தோல் குடல் அனைத்தையும் அந்தக் கிடங்கிற்குள் போட்.டு மூடி முடித்தான்.அங்கு எழுத்த பெரும் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்திருந்தது. உரித்து முடித்த குரங்கு பார்ப்பதற்கு அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப்போல இருந்தது. காட்டு இலைகளை வெட்டி அதன் மீது வைத்து விட்டு காய்ந்து போயிருந்த தடிகளைப் பொறுக்கி ஒருஇடத்தில் குமித்து நெருப்பை மூட்டியவன் ஒரு தடியை வெட்டி அதன் ஒரு முனையை சீவி கூராக்கி அதில் குரங்கை குத்தி நெருப்பில் பிடித்து வாட்டத் தொடங்கியிருந்தான். கிடங்கை வெட்டி முடித்திருந்த சித்தாவும் அன்ரனும் றோகனையும் அழைக்க மூவருமாகச் சேர்ந்து குட்டியின் உடலை கிடங்கில் போட்டு மண்ணால் மூடிவிட்டு குரங்குகள் மீண்டும் அந்தக் குழியை தோண்டி விடாமல் இருக்க அதன் மீது அங்கிருந்த கற்களையும் மரக் கிழைகளையும் எடுத்து அதன் மீது அடுக்கினார்கள்.அதன் பின்னர் தென்னையில் ஏறிய அன்ரன் சில இளம் தேங்காய்களை உதைந்து வீழ்த்தினான்.குடிப்பதற்கு வசதியாக சீவியிருந்த ஒரு தேங்காயையும் வாட்டிய குரங்கின் ஒரு தொடையையும் குட்டி புதைக்கப்பட்ட குழியின் கால்பகுதியில் ஒரு இலையில் சித்தா வைத்ததும்.மூவருமாக அங்கு தலை குனிந்து சில வினாடிகள் மெளன அஞ்சலி செலுத்தியவர்களின் கண்கள் கலங்கியிருந்தது. அதன் பின்னர் ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல் வாட்டிய குரங்கு இறைச்சியை உண்டு இளநீரை குடித்து விட்டு நாவல்த்தீவை விட்டு புறப்படும்போது டேய் ..நேரம் கிடைக்கிற ஒரு நாளைக்கு குட்டியை புதைச்ச இடத்திலை ஒரு சமாதி கட்டவேணும் என்று விட்டு கடலையே வெறித்தக்கொண்டிருந்தான் றோகன்.தீவு அவர்களை விட்டுத் தூரமாகிக் கொண்டிருந்தது. .................................................... ..................................................... அன்றிரவு கப்பலின் மேல்தளத்தில் றோகன் கையில் விஸ்கி போத்தலை வைத்தபடி சிகரற்றை புகைத்தபடியிருந்தான்.மாலுமி அறைக்குள் சென்ற ராஜன் வரதனிடம் மெதுவாக அண்ணை..றோகன் கனக்க குடிச்சிருக்கிறான் சொன்னாலும் கேக்கிறான் இல்லை நீங்கள் கொஞ்சம் போய் சொல்லிப் பாருங்கோ..என்றான்.றோகனின் அருகில் வந்த வரதன் கையிலிருந்த பிளாஸ்ரிக் கிண்ணத்தை நீட்டினார்.போதையில் சுருங்கியிருந்த றோகனின் கண்கள்ஆச்சரியமாக விரித்தபடி என்ன ?..விஸ்கி வேணுமா என்றதும். தலையை மெதுவாக மேலும் கீழுமாக ஆட்டிய வரதன் றோகன் கிண்ணத்தில் ஊற்றிய விஸ்கியை தண்ணீர் கலக்காமலேயே ஒரு மடக்கில் குடித்தவர்.நானும் தண்ணியடிக்கிறனான்தான் ஆனால் எங்கடை வேலையளை முடிச்சிட்டு ஓய்வா இருக்கிற நேரத்திலை மட்டும். இந்த தண்ணியடிக்கிறது மட்டுமில்லை உணர்ச்சிவசப்படுறது.பாட்டுப் படித்து கும்மளம் அடிக்கிறது.அழுகிறது.எல்லாமே எனக்கு தந்த வேலையை முடிச்சிட்டுத்தான்.இதுகளிலை கவனத்தை சிதற விட்டால் எங்கடை வேலை செய்ய முடியாமல் போயிடும் இப்ப கப்பல்லை இருக்கிற பொருள்களையெல்லாம் பத்திரமா கொண்டு போய் சேர்க்கவேண்டியதுதான் எங்கடை முதல் வேலை பிறகுதான் மிச்சமெல்லாம் ..நல்லா பழகிட்டு இப்பிடி இழப்பு வரேக்கை கஸ்ரமாயிருக்கும். அதாலைதான் நான் உங்களோடையே அதிகமா கதைக்கிறேல்லை. இதெல்லாம் உனக்கும் போகப் போக பழகிடும் போய் படு என்று றோகனின் தோழில் தட்டி விட்டு வரதன் மீண்டும் மாலுமி அறைக்குள் போய்விட எதையே நினைத்த றேகன் அவசரமாய் கீழ்தளத்திற்கு சென்று படுக்கையறையில் குட்டியின் பயணப்பையை திறந்து ஆராய்ந்தான் அதற்குள் எதுவுமே எழுதப்படாத வெற்று டயறி ஒன்றும் அவனது கடவுச்சீட்டு கப்பலில் வேலை செய்வதற்கான ஆவணங்கள் அடையாள அட்டை என்பனவற்றை எடுத்துப் பார்த்தான்.அவற்றில் எழுதப் பட்டிருந்த பெயர் விலாசங்கள் எல்லாமே போலியானதாகத்தானிக்கும் என்பது றோகனிற்கு தெரியும் அவனது பர்சை திறந்து பார்த்தான் ராசாத்தியின் சிரித்த கறுப்பு வெள்ளை புகைப் படமும் மடித்து வைக்கப் பட்டிருந்த குட்டி எழுதிய கவிதையும் இருந்தது அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் கப்பலின் மேற்தளத்திற்கு வந்தவன் போத்தலில் கொஞ்சமாய் மீதமிருந்த விஸ்கியையும் குடித்து முடித்துவிட்டு அந்தப் போத்தலிற்குள் குட்டி எழுதிய கவிதைக் கடதாசியில் ராசாத்தியின் புகைப் படத்தையும் சுருட்டிபோத்தலிற்குள் போட்டவன் அதனை நன்றாக இறுக்கி மூடிவிட்டு கடலிற்குள் வீசியெறிந்தான்..குட்டியின் கவிதை வரிகளைப் போலவே அந்தக் கவிதையும் ராசாத்தியின் கைகளிற்கு போய் சேராது என்பதும் றோகனிற்கு தெரியும் முழங்கால்களை மடித்து தலையைத் தொங்கப் போட்டபடி அங்கேயே அமர்ந்திருந்தான் வரதன் கப்பலை முல்லைத் தீவுக் கடலை நோக்கி செலுத்திக்கொண்டிருந்தார். ............................................................... ....................................................................... தொலைபேசி மணியடித்துக் கொண்டிருந்தது வரதன் அதனை எடுப்பதற்கு முயற்சித்தார் முடியவில்லை புலி வழமைக்கு மாறாக அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்தது.இப்பொழுது வரதனிற்கு நெஞ்சு வலி இல்லை அவர் பஞ்சைப்போன்று அந்தரத்தில் மிதப்பதைப் போன்றதொரு உணர்வு ஒரு ராக்கெற்றின் வேகத்தை விட அதிகமாய் காற்றைக் கிழித்தக் காண்டு வானத்தில் பறந்தார் இன்னொரு சூரியகுடும்பம் முன்னாலும் நட்சத்திரக் கூட்டங்கள் அவர் பின்னாலும் தெரிந்தது அதேயளவு வேகத்தில் மீண்டும் கீழே இறங்கினார் அந்தப் படத்தில் இருந்த அதே தீவின் கடற்கரையோரத்தில் பெரிய பாறை ஒன்றின் முன்னால் அவரது மனைவியும் றோகன்.சித்தா.குட்டியுடன் வேறு நண்பர்களும் அவரைப்பார்த்து கையசைத்தனர்.கடற்கரையோரத்தில் தடிகள் நடப்பட்டு கலர் கலராக பலூன்கன் பறக்கவிடப்பட்டு அங்கு ஒரு மேசைமேல் வர்ணக்கலரில் ஒரு கேக்கும் வைக்கப்பட்டிருந்தது அந்தரத்தில் பறந்துகொண்டிருந்த வரதன் அவர்களருகே சென்று தரையிறங்கினார்.மனைவி அவரை அழைத்து கேக்கை வெட்டவைத்து ஒரு துண்டினை அவரிற்கு ஊட்டிவிடும்போது சுற்றி நின்று அனைவரும் கைதட்ட றோகன் தனது கித்தாரை வாசித்தபடி "பிறந்தநாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்" என்று படிக்கொண்டிருந்தான். ஆனால் வரதனின் காதுகளில் புலி குரைக்கும் சத்தம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
 23. 18 points
  மாவீரர் மலரடிகள்பணிந்துகொண்டு.. யாழை அழகாக உருவாக்கி எம் கைகளில் தவழவிட்டிருக்கும் மோகன் அண்ணாவே,அயராது யாழுக்காய் உழைக்கும் இணையவன் அண்ணாவே,நிழலி அண்ணாவே,நியாணி அண்ணா/அக்காவே,நுணா அண்ணாவே..உங்களுக்கு தலைவணங்கி.. பட்டிமன்றத்துக்கு முட்டிமோதிவந்து முன்னால் உட்காந்திருக்கும் யாழ்கள ரசிகர்களே..உங்களுக்கே முதல் வணக்கம்..பின்னால் மேசையில் கண்ணைகட்டும் நித்திரையயும் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரமும் குத்தென கதிரையில் உட்காந்திருக்கும் நடுவர்களே..எண்ணிலடங்கா வெற்றிபெருமிதத்துடன் கண்ணில் மகிழ்ச்சி பொங்க கால்மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் எனதணியினரே...எதிரே தலையை கவிழபோட்டுக்கொண்டு எப்படியே வெளியே போவது பட்டிமன்றம்முடிய என்று வெட்கத்தில் நாடியில் கைவைத்திருக்கும் எதிரணியினரே...எல்லோருக்கும் வணக்கம்.. முன்னாடி உரையாற்றும்போது வாத்தியார் அவர்கள் சொன்னார் "புலம்பெயர் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா..?வெறும் இயந்திர வாழ்க்கை என்று"..நடுவர் அவர்களே..நீங்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும்..இயந்திரமில்லாமல் மனிதன் இந்தப்பூமி பந்தில் இவளவுதூரம் முன்னேறி இருக்க முடியுமா என்பதை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்..ஏன் கனக்க வேண்டாம்..இங்கிருக்கும் நடுவர்களில் பெண் நடுவர் புட்டவிப்பதற்கு கூட ஒரு மெசின் வாங்கி தரும்படி தனது கணவனிடம் கேட்டிருப்பதாக அறிகிறோம்..இப்படி இயந்திரம் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொன்றிலும் பின்னிப்பிணைந்துள்ளது..அப்படிப்பட்ட வாழ்க்கையில் மனிதன் இயந்திரம் போல் வேகமாக தனது வாழ்க்கை முறையை மாற்றிகொண்டிருக்கிறான்..அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறான்..வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையில் சமப்படுத்தி வாழத்தெரியாதவர்கள்தான் இப்படிப்புலம்புவவர்கள் நடுவரே..இந்த வாழ்க்கை ஏன் ஊரில் மட்டும் இல்லையா..? வாத்தியார் அவர்கள் சொல்கிறார் "புலம்பெயர் நாடுகளில் காலையில் கணவன் ஒருபுறமும் மனைவி இன்னொரு புறமும் வேலைக்குச் சென்றால் இரவு வீடு திரும்பும் வரை கைத்தொலைபேசியில் தான் அவர்கள் குடும்பம் நடாத்துகின்றார்கள்" என்று...ஊரில் எனது ஒன்றுவிட்ட அண்ணண் வீட்டில்,மச்சான் வீட்டில்,நல்லூரில் இருக்கும் பெரியப்பா வீட்டில்,வெள்ளவத்தையில் இருக்கும் சித்தப்பாவீட்டில்,வவுனியாவில் இருக்கும் ஒன்றுவிட்ட சகோதரிவீட்டில் என்று எங்கள் குடும்பத்தை சுற்றி இருக்கும் முக்கால்வாசிப்பேர் வீட்டிலும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில்,பள்ளிக்கூடத்தில்,இன்சுரன்ஸ் கம்பனியில்,தனியார் வங்கியில்,சிங்கர் காட்சி அறையில்,மென்பொருள் நிறுவனம் ஒன்றில் என்று வீட்டில் இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கிறார்கள்...அவர்களிடமும் தொலைபேசிதான் இருக்கிறது..வேலை நேரங்களில் தொலைபேசியில்தான் பேசிக்கொள்கிறார்கள்..காலையில் வேலைக்கு போவவர்கள் மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள்.. இப்படித்தான் எல்லாரை சுற்றியும் மாற்றங்கள் அங்கு...வாழ்க்கை முறை அங்கும் மாறிவிட்டது..பிள்ளைகள் தாங்களே பள்ளிக்கு போகிறார்கள்..சிலர் வீட்டு வேலைக்கும் பிள்ளை பராமரிப்புக்கும் கூட ஆக்களை வைத்திருக்கிறார்கள்..உலகம் மாறிக்கொண்டிருக்கிறது..இதில் ஊர் மட்டும் அப்படியே இருக்கிறது என்று வெளியபோக குளிருக்கு பயந்து இங்கு கீற்றருக்கு பக்கத்தில் உடகாந்துகொண்டு வெட்டியாக பொழுதுபோக பேசுபவர்கள் பேசலாம்..ஆனால் உண்மை அதுவல்ல...அவர்கள் வேகமாக பாய்ச்சலை நிகழ்த்துகிறார்கள்...நாங்கள் புலம்பெயர் நாடுகளில் மாறிக்கொள்ள எடுத்த கால அளவை விட மிகக்குறிய காலத்துக்குள்ளாகவே அவர்கள் உலகமயமாகலுடன் வாழப்பழகிவிட்டார்கள்.. நடுவர் அவர்களே...என் முன்னால் நண்பண் ஒருவன் அண்மையில் ஊர்போய் வந்தான்..போகாதே போகாதே என்று அவனை தடுத்தும் போனான்...நீ ஊருக்கு போனால் எம்மக்களின் போராட்ட நியாயங்களை சத்தமில்லாமல் உடைப்பவர்களில் நீயும் ஒருவன் ஆகிவிடுவாய் என்றபோதும் போனான்...சரி இப்படி போபவன் எல்லாம் இனிமேல் என் நண்பண் என்று சொல்லிக்கொள்ளமாட்டேன் என்று காட்டமாக சொல்லி அவன் உறவையும் முறித்து விட்டிருந்தேன்.. எனக்கு தெரியும் அவன் எதுக்கு போனான் என்று..அங்கிருக்கும் சனத்துக்கும்,சொந்தக்காரருக்கும்,பெட்டையளுக்கும் விலாசம்காட்டவே அவன் போயிருந்தான்..போனவன் ஊரில் இருந்து அவன் திரும்பி வந்தபின் ஒரு நாள் இங்கு வீதியில் கண்டேன்..கண்டவன் வலிய வந்து கதைத்தான்..கதைத்தவனிடம் கதைக்காமல் போக முடியவில்லை..சும்மா ஒப்புக்கு எப்படி ஊர் இருக்கிறது என்று கேட்டேன்...பெடியின் முகம் ஒரே நொடியில் மாறிவிட்டது..முன்னர் இவர் போனபோது வெளி நாட்டுக்காரன் என்று காலைச் சுத்திய பொடியள் யாரும் இவரை கண்டுக்கவே இல்லயாம்..எல்லாரும் தனியார் கமபனிகளில் வேலையாம்..எப்படா வந்தனி என்று கேட்டுவிட்டு சரி இரு வேலைக்கு போகணும் பின்னர் நேரம் இருந்தால் சந்திப்பம் என்று விட்டு எல்லோரும் அவரவர் வேலைக்கு என்று பிஸியாகிவிட்டார்களாம்...காலையில் பிசியாகும் வீதிகள் பின்னர் மீண்டும் மாலையில்தானாம் பிஸியாகிறது...வாழ்க்கை அங்கு இயந்திரத்தைவிட வேகமாக ஓடுகிறதாம்..வயாதனவர்களை தவிர வேறு யாருக்கும் நின்று பேசக்கூட நேரம் இல்லையாம்..சம்பளம்தான் பலருக்கு பிரச்சினையே அன்றி ஆணோ பெண்ணோ எல்லோரும் ஏதோ ஒரு வேலையில் பிசியாம்..பெடியின் பந்தா இந்தமுறை அங்கு யாரிடமும் எடுபடவே இல்லையாம் என்று மிகவும் நொந்துபோய் இருந்தார்..இனிமேல் ஊருக்கு போற ஜடியா இல்லையாம் என்று புறுபுறுப்பு வேறு... நிலமை இப்படி இருக்கும் போது வாத்தியார் அவர்கள் இன்னமும் தன் பள்ளிக்கூடக் கால நினைப்பில் ஊர் இருக்கும் என்று பேசிக்கொண்டிருப்பதை பார்க்க அவருக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும் நடுவர்களே..என்ன நடுவர் சுமோ அவர்கள் வாத்தியாருக்காக சில துளி கண்ணீர் விடுவதுபோல் தெரிகிறது..ரொம்ப அழாதீர்கள்..உங்கள் உடம்புக்கு ஆகாது நடுவரே..இரவைக்கு புட்டவைக்கும்போது எப்படியாவது அந்த புட்டு மெசினை மறக்காமல் கணவனிடம் நினைப்பூட்டி வாங்கி விடுங்கள் நடுவரே.. "புலம்பெயர் நாடுகளில் நாம் சுவாசிக்கும் காற்றில் விசமாம்,உணவில் நஞ்சாம்,அத்தியாவசியப்பொருட்கள் மாசுபடுகின்றனவாம்" என்று வாத்தியார் அண்ணா அவர்கள் ஊரிலை இவை ஒன்றும் இல்லை என்பதுபோல் புலம்புகிறார்..உண்மையாகவே வாத்தியார் அண்ணா இன்னமும் தனது ஊர்ப்பள்ளிக்கூட காலத்தில்தான் இப்பவும் ஊர் இருக்கிறது என்ற கற்பனையில் வாழ்கிறார் என்பதை அடுத்தடுத்து நிரூபிக்கிறார்..இதற்கு எனது கட்சி நண்பன் ஜீவா அருமையாக தனது விளக்கத்தை எடுத்துவைத்திருந்தார்..அதனுடன் அவிண்ட வாத்தியாரின் வேட்டியை வாத்தியார் அண்ணா இன்னமும் கட்டவில்லையாம் என்று மேடைக்கு பின்புறம் பேசிக்கொள்கிறார்கள்... இங்காவது இது ஓர்கானிக் உணவு இது இன்னோர்கானிக் உணவு என்று வெளிப்படையாக சொல்லி விற்கிறார்கள்..அதனால் நல்ல இயற்கை உணவை விரும்புபவர்கள் காசு கொஞ்சம் கூட என்றாலும் இயற்கையான உணவை வாங்கி சாப்பிட்டு பல்லாண்டு நோய் நொடி இன்றி வாழக்கூடியவாறு இருக்கிறது..எமது யாழ்கள உறவு விவசாயி விக் கூட கனடாவில் இயறகை உணவுப்பண்ணை வைத்திருக்கிறார்..இயற்கை உணவு இல்லை என்று புறுபுறுக்கும் வாத்தியார் தனது முகவரியை தந்தார் என்றால் விவசாயி விக் மூலம் வீட்டுக்கு இயற்கை உணவுமூட்டைகளை டிலிவரி பண்ண நாம் தயாரக இருக்கிறோம் என்பதை நடுவர் அவர்களுக்கு ஒரு சவாலாகவே விடுக்கிறோம்.. ஊரில் எதுவும் சொல்லாமல் பொல்லாத கிருமி நாசினிகளையும் பயங்கர செயற்கை உரங்களையும் விளைச்சல் அதிகம் பெறவேண்டும் என்ற பேராசையில் விவசாயிகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமா பாவித்து பல்லாயிரம் விவசாய நிலங்கள் இன்று தரிசுக்காடுகளாய் கிடக்கின்றன..நிலங்களுக்கே இந்த நிலை என்றால் அவற்றை உண்ட மனிதர்க்கு என்ன நிலமை..? இந்த நிலமையை வெளி நாடுகளில் நாம் இயற்கை உணவு என்று தெளிவாக விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதன் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்..ஆனால் ஊரில்..? சொந்த ஊரில் வீசும் தென்றல்தான் தென்றல் என்று ஒப்பாரிவைக்கும் வாத்தியார் அவர்களே....எந்த ஊரில் வீசினாலும் வீசும் காற்று ஒன்றுதான் நடுவர் அவர்களே...அது தென்றல் என்றால் என்ன புயல் என்றால் என்ன..தென்றலை அனுபவிக்க இங்கும் கிராமங்களும் அழகான பூங்காக்களும் ஆற்றங்கரைகளும் கடற்கரைகளும் அழகாக அமைந்திருக்கின்றன..மக்டொனால்சையும்,கே.எப் சியையும் சுற்றிவிட்டு வாழ்வதற்காக நகரங்களுக்கு வந்து இருந்து கொண்டு தென்றல் இல்லை,திங்கள் இல்லை என்றால் தப்பு உங்களது வாத்தியார் அவர்களே... நீங்கள் வசதியாகவும் வாழவேண்டும் தமிழ்சனம் இருக்கும் ஏரியாவிலும் இருக்கவேணும் என்று தலைநகர்களை அண்டி வீட்டை வாங்கி இருந்துகொண்டு புலம்பினால் அந்த தலைவிதிக்கு முதல் சுழி போட்டவர்கள் நீங்களே வாத்தியார்..புலம்பெயர் நாடுகளில் பல்லாயிரம் அழகான பசுமையான கிராமங்கள் இருக்கின்றன...தலைநகரங்களில் இருந்து தள்ளி தொலைவில் மனிதர்களால் மாசுபடாத நிலவைப்போல பளிச்சென்று சுத்தமாய் இருக்கும் கிராமங்களை புலம்பெயர் நாடுகளில் நீங்கள் தரிசிக்கவே இல்லையா..? ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அமைதி நிலவும் அந்தக்கிராமங்களில் வாழ்ந்து செத்துவிடனும் போல இருக்கும் அவற்றின் எழில்..சும்மா தீக்கோழிபோல் தலையை சுடுமணலில் புதைத்துக்கொண்டு தென்றலுக்கும் அமைதிக்கும் ஏங்கினால் அங்கு அது கிடைக்காது..சுடுமணலில் வெம்மைதான் கிடைக்கும்.. நடுவர் அவர்களே..வாத்தியாருக்காக உங்கள் கண்மை கரைவதை பார்க்க எனக்கு நெஞ்சுவெடித்துவிடும்போல் இருக்கிறது..பாவம் வாத்தியார்..அவருக்கு வெளிநாட்டை காட்டிய கபோதி அங்கிருக்கும் அழகிய கிராமங்களை பற்றி சொல்லவே இல்லைபோல..அந்த கயவனை எங்கு கண்டாலும் கல்லால் அடித்து கடும்தண்டணை கொடுக்கும்படி அல்லாவின் கூட்டத்தை கேட்டுக்கொள்கிறேன்... வாத்தியார் அவர்களே..அங்கு ஆலமரம்,ஆற்றங்கரை,கேணிக்கட்டு அவற்றில் அரட்டை என்று புலம்புகிறீர்களே....அங்கு ஆலமரம் என்றால் இங்கு பைன் மரம்..அங்கு ஆற்றங்கரை என்றால் இங்கும் ஆற்றங்கரைதான்...அங்கு ஆற்றுக்கு கரையே எங்கிருக்கென்று தேடணும்..இங்கு ஆற்றங்கரைகளையே ஒரு கவிதைபோல் அழகாக்கிவைத்திருப்பார்கள்...அங்கு கேணிக்கட்டு என்றால் இங்கு கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பெஞ்சுகள்..மாலைநேர மெல்லியவெயிலில் இங்கிருக்கும் ஆற்றஙகரை பெஞ்சுகளில் இருந்து நினைவுகளை அசைபோடுவதே அழகுதான்...நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கி இருக்காமல் நன்றாக வெளியே எட்டிப்பாருங்கள் எதிரணியினரே..உங்கள் முன்னால் அற்புதமான் அழகான வசதி வாய்ப்புக்களால் நிரம்பிய உலகம் இருக்கிறது..அந்த உலகத்தில் பசி இல்லை,பட்டிணி இல்லை,பஞ்சம் இல்லை..இல்லை என்று எதுவுமில்லா எல்லையில்லா ஆனந்த வாழ்வு எமக்கிங்கு..அதைவிடுத்து அக்கரைக்கு இக்கரை பசை என்பதுபோல் அங்கலாய்க்கும் எதிரணியின் சலனப்புத்தியை என் சொல்ல... பணம் மட்டுமே குறியாக பாழாய்ப்போகிறதாம் புலம்பெயர்ந்த வாழ்க்கை என்று புலம்புகிறார் வாத்தியார்...பணம் இல்லாமல் ஊரில் மட்டும் வாழ்ந்துவிடமுடியுமா என்ன வாத்தியார் அவர்களே..? அந்தபணத்தை கட்டிதானே இங்கு உங்கள் சொந்தங்களை உயிர்வாழ எடுத்துவிட்டிருக்கிறியள்..?பணம சேர்க்க சாதாரணமாக உழைப்பவர்கள்தான் அதிகம்..அது ஊரில் என்றால் என்ன இங்கு என்றால் என்ன..உழைத்தால்தான் மனிதன் உயிர்வாழமுடியும்..உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழக்கூடாது..எனவே பிறந்த ஒவ்வொரு மனிதனும் உரிய வயது வரும்போது உழைக்க ஆரம்பிக்கிறான்..இதுதான் இந்த உலக ஒழுங்கு..அது புலம்பெயர்ந்தால் என்ன ஊரில் இருந்தால் என்ன..ஆனால் அதற்குள்ளும் சில பணப்பேய்கள் காசு சேர்க்கும் வெறியில் நாயாய் அலைகிறார்கள்..இந்தப்பேய்களை மட்டும் உதாரணமாய் எடுத்து வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த புலம்பெயர் மனிதர்களையும் எடைபோடுவது தப்பு நடுவர் அவர்களே..இப்படிப்பேய்கள் ஊரிலும் இருக்கிறார்கள்..இவர்கள் எங்கிருந்தால் என்ன..அவர்கள் அடிப்படைக்குணம் மாறாது... ஆனால் பல்லாயிரம் புலம்பெயர் மனிதர்கள் வரவுக்கு ஏற்ப செலவு செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை நிம்மதியாக புலம்பெயர் நாடுகளில் வாழ்கிறார்கள்..அவை உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை என்பது வேதனையே..எப்பொழுதும் கஞ்சலை வடிகட்டும் பண்ணாடைகளாய் இருக்காதீர்கள் எதிரணியினரே...பண்ணாடையூடு கீழே வடிந்துபோய்விட்ட பெருமளவு சுத்தமான நீரை மறந்துவிடாதீர்கள்... அடுத்து பேரில் பகலவன் என்று வைத்துக்கொண்டு இருளுக்குள்ளையே வாழ்பவர்போல் நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே புலம்பெயர்ந்தவர்களுக்கு இருப்பதாக நியாயப்படுத்தி பேசிப்போயிருக்கும் பகலவனின் விவாதத்துக்கு வருகிறேன்... புலம்பெயர்ந்த நாட்டில் கல்வி வியாபாரம் என்பவர் ஊரில் இலவசக்கல்வியால் எத்தனைபேர் ஒவ்வொருவரிடமும் பல்கலைக்கழகம் போக பின்னால் எத்தனை லட்சம் மாணவர்கள் செய்வதறியாது வீதியில் விடப்படுகிறார்கள் என்பதை மறந்து போய்விடுகிறார்..இங்கு கல்வி காசென்றால்கூட அதையும் அரசாங்கம் பல இலகு கடன்கள் மூலம் முழுப்பணச்செலவையும் தானே ஏற்றுக்கொண்டு மாணவர்களை படிக்க சொல்கிறது..அந்தக்கடனுக்கு வட்டிகூட இல்லை..அதைக்கூட மாணவர்கள் பல்கலைக்கழகம் படித்து முடிந்து ஒரு வேலையில் சேரும்போது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தினால் போதும்...பல்கலைக்கலகங்களில் மாணவர்களுக்கு மிகத்தரமான கல்வி கிடைக்கிறது...ஊரில் இருந்துகூட பல்லாயிரம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படை எடுக்கிறார்கள் கல்விக்காக... ஊரில் படிக்க வசதி இருந்தால் ஏன் இத்தனை ஆயிரம் மாணவர்கள் படை எடுக்கவேண்டும் வெளிநாடுகளுக்கு..?ஊரில் உயர்தரம் முடிய பல்கலைக்கு தெரிவாகாத மாணவர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீதியில் நிற்கிறார்கள்..இங்கு எமக்கு அப்படி ஒரு நிலை இருக்கா..? அந்தப்பயம் இன்றி நின்மதியாக கல்வி கற்க முடிகிறது அல்லவா..? கல்வி என்பதே ஒரு மாணவண் ரசித்து மனம் விரும்பி படிக்க வேண்டியது..அதையே சோதனையில் பெயிலானால் அடுத்து வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்று பயந்து பயந்து சோதனைக்காக நிம்மதியின்றி படித்தால் அதற்கு பெயர் படிப்பா..? இங்கு எமக்கு அந்தப்பயம் இருக்கா..? இல்லைதானே..அதனால் நிம்மதியாக நமக்கு பிடித்த பாடத்தை ஆறுதலாக பயமின்றி படிக்கலாம்..ஒருமுறை தவறி விட்டால்கூட அடுத்த முறைகளில் விட்ட இடத்தை பிடித்துவிடலாம்..மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு உத்தரவாதம் இருக்கிறது இங்கு..அந்த உத்தரவாதம் அங்கிருக்கிறதா..? நடுவர்களே சிந்தியுங்கள்...ஊரில் இருந்திருந்தால் இந்த நிலையை உங்கள் பிள்ளைகள்கூட எதிர்கொண்டிருப்பார்கள்..இன்று அந்த மனப்பயம் இன்றி நீங்கள் நின்மதியாக இருக்கிறீர்கள் என்றால் அது இந்த புலம்பெயர் வாழ்வு உங்களுக்கு கொடுத்த நின்மதிதானே..இப்ப சொல்லுங்க உங்களுக்கு ஊரில் இருந்திருந்தால் நியமாகவே சந்தோசமாய் இருந்திருப்பியளா இப்படியான மனக்கவலை இன்றி..? அடுத்து புலம்பெயர் நாடுகளில் நிற ஏற்றத்தாழ்வு என்று புலம்புகிறார்...இங்கு நிற ஏற்றத்தாழ்வுகள் எங்காவது ஒன்றிரண்டு இலைமறை காயகத்தான் உள்ளது..அவைகூட உரிய இடங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டால் மிகக்கடுமையான தண்டணைகள் அவற்றுக்கு கிடைக்கின்றன..சட்டத்தால் நிறவேற்றுமைகாட்டப்பட்டால் மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது..ஆனால் ஊரில் இதைவிட பெரிய கொடுமை..சொந்த சகோதரனாலேயே நிகழ்த்தப்படுகிறது சாதி என்ற பெயரில்.. அதற்கு சட்டத்தில்கூட எந்த தண்டணையும் இல்லை..சாதியால் புறக்கணிக்கப்படுகிறவர்களுக்கு அங்கு எந்த நீதியுமே கிடைப்பதில்லை..நிம்மதியும்தான் கிடைப்பதில்லை..ஆனால் புலம்பெயர்ந்து வந்ததால் அந்த தொல்லை இன்றி எல்லையற்ற சம உரிமையை அவர்கள் இங்கு அனுபவிக்கிறார்கள்..சாதியின் நிழல்கூட அவர்களை தீண்டமுடியாது..இந்த நின்மதியை அவர்களுக்கு கொடுத்தது எது..? ஊரா..? இல்லையே..புலம்பெயர் வாழ்வுதானே.. இப்ப சொல்லுங்கள் நடுவர் அவர்களே..இப்படி நிலமையில் யாராவது ஊரில் போய் இருக்கணும் என்று அந்த வாழ்க்கையை வாழணும் என்றும் கவலைப்படுவார்களா? வெறும் பிரிவால் வாடுவார்கள்..அவ்வளவே.. அடுத்து சில ஏரியாக்களில் வீட்டுவாங்க முடியாதம்..பொருளாதார ஏற்றத்தாழ்வாம் என்று புலம்புகிறார்... வாழ்வதற்கே வீடு இல்லை என்பதற்கும் அத்தியாவசிய வசதிகளான மின்சாரம்,குடிநீர் என்பவற்றுடன் ஒரு சாதாரண வீடு சகலருக்கும் கிடைக்கும் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள் எதிரணியினரே..உங்களையார் விலைஉயர்ந்த ஏரியாக்களில் வீடுவாங்க சொன்னது..அளவுக்கு மீரிய ஆசை என்பது உங்கள் பிரச்சினை..அதற்கெல்லாம் நாம் கவலைப்பட முடியாது.. ஊரில் காணிகள் வீடுகள் இராணுவத்தால் சூறையாடப்பட,கண்ணிவெடிகளால் நிரப்பபட, வாழ்வதற்கே வீடின்றி இரவல் வீடுகளில் கறண்டின்றி மண்ணெண்ணெய் விளக்கில் ஒவ்வொரு நாளையும் வறுமையுடன் அனுப்பும் வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு புலம்பெயர் நாட்டில் எல்லா அடிப்படை வசதிகளுடனும் வாழக்கிடைத்தது பொருளாதார ஏற்றம்தானே...நடுவர் அவர்களே சொல்லுங்கள் ஊருக்கு போய் திரும்பவும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ எவனாவது விரும்புவார்களா இங்கிருக்கும் வசதிகளை துறந்து..? அடுத்து உழைப்பு சுரண்டல் என்று கூச்சலிடுகிறார் எதிரணிக்காறர்..வேடிக்கை..விநோதம்..வெட்ககேடு..ஊரில் தொழிலாளார்களுக்கு என்ன பாதுகாப்பு சட்டம் அமுலில் இருக்கு..? யாரு,எந்த கொம்பனி அரசாங்கம் சொன்ன சட்டங்களை பின்பற்றுகிறார்கள் அங்கு..? இங்கு மூன்று மாதமோ ஆறுமாதமோ வேலை செய்தால் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப அவனை எந்த ஒரு காரணமுமின்றி நிற்பாட்ட முடியாது..காரணத்துடன் நிற்பாட்டினால் கூட அவன் அடுத்த வேலை பெறும் வரை உரிய காப்புறுதி பணம் வழங்கப்படும்...வேலையில் ஒரு விபத்து நிகழ்ந்தால் கம்பனியே முழு செலவையும் ஏற்கவேண்டும்.. மகப்பேறு விடுமுறை என்று விடுமுறை மற்றும் வருடத்தில் இவ்வளவு நாள் தொழிழாலர்களுக்கு கட்டாய விடுமுறை என்று கொடுக்கப்படுகிறது..இப்படி எத்தனை எத்தனை சலுகைகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது புலம்பெயர் நாடுகள் தொழிலாளர்களுக்கு..இப்ப சொல்லுங்க நடுவர் அவர்களே இத்தனை வசதிகளையும் துறந்து ஊரில் போய் அடிமைபோல் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு சட்டமும் இல்லாத இடத்தில் நாளைக்கே உங்களை எந்த ஒரு அறிவித்தலும் இன்றி வேலையை விட்டு தூக்கலாம் என்ற இடத்தில் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து நிம்மதியற்று கலங்காமல் வாழமுடியுமா..? அடுத்து இங்கு பெற்றோர் பிள்ளைகளை சரியாகக் கவனிப்பதில்லையாம்..அதற்கு நோர்வேயில் கையால் உணவூட்டினார்கள்(http://www.thinakkathir.com/?p=31525)என்ற ஒரு சப்பை பிரச்சினைக்காக பிள்ளைகளை பிடித்துகொண்டுபோன கவுன்சில் கதையை இழுக்கிறார்...அப்படி பார்த்தால் ஊரில் ஒரு பிள்ளையும் வீட்டில் இருக்கமுடியாது எல்லாருமே கவுன்சிலில்தான் இருப்பார்கள்..இப்படி எத்தனை பேரின் பிள்ளைகளை புலம்பெயர் நாடுகளில் கவுன்சில் தூக்கி சென்றிருக்கிறது..எத்தனை ஆயிரம் பேர் இருக்கும் புலம்பெயர் நாடுகளில் எங்கையோ ஒரு சில கேஸ்களில்தான் பிள்ளைகளை கவுன்சில் தூக்கிபோயிருக்கு...நெல்லுமூட்டைக்குள் எங்காவது ஒன்ரிரண்டு பதர் இருக்கும்..அது இயற்கை...அதற்கு எதுவும் செய்ய முடியாது..நாங்கள்தான் பதரை விலத்த வேண்டும்... அடுத்து தான் ஊரிலே சுதந்திரமாக உரிமையுடன் வாழக்கூடிய அரசிய சூழல் ஏற்பட்டால் அங்கே போய் வாழுவேன் என்று சபதம் இட்டதன்மூலம் எதிரணிக்காறர் ஊரில் நாம் நிம்மதியாக வாழமுடியாதென்பதை மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார்...எந்த உரிமைகளும் இல்லாத இடத்தில் யாராவது போய் வாழ்ந்தால் இன்னும் நன்றாக வாழலாம் என்று கவலைப்படுவார்களா நடுவர் அவர்களே..? அதனால்தான் நாம் சொல்கிறோம் புலம்பெயர்ந்தவர்களின் கவலை வெறும் பிரிவுகளின் கவலையே அன்றி ஊரில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருப்போம் என்பதெல்லாம் வெறும் நடிப்பே..அது உள்ளத்தில் இருந்து வரவில்லை என்பதே உண்மை..உள்ளத்துக்குள் யாருக்கும் அந்த நரகத்துக்குள் மீண்டும் போக விருப்பம் இல்லையே என்பதே உண்மை..அதனால்தான் அரசியல் தீர்வு வரட்டும்,சம உரிமை வரட்டும் போகிறோம் என்றெல்லாம் பம்மாத்துக்கதை சொல்லி காலத்தைகடத்துகிறார்கள்..போகவேணும் அங்கு வாழவேணும் என்று நினைப்பவர்கள் பேசமாட்டார்கள்..எப்பவோ போய் செயலில் காட்டி இருப்பார்கள் நடுவர் அவர்களே..இவர்கள் வார்த்தை எல்லாம் வெறும் நாவில் இருந்து வரும் பொய்களே அன்றி உள்ளத்துக்குள் இருந்து வருபவை இல்லை என்பதே உண்மை நடுவர் அவர்களே.. இவ்வளவையும் தப்புதப்பாக பேசியதால் சப்பா கண்ணைக்கட்டுதே என்று இடையில் ஆலபனை வேறு தனது பொய் ராகத்துக்கு சேர்த்திருந்தார் எதிர்க்கட்சிகாறர்...அவரை உண்மையிலையே கண்ணைக்கட்டிதான் வெளிநாட்டில் விட்டிருக்கிறார்கள் போலும்..அதனால்தான் அவருக்கு புலம்பெயர் நாட்டின் அருமைகள் புரியாமல் இருக்கிறாரோ தெரியவில்லை... அடுத்து எதிரணிக்காறர் ஜீவாவுக்காக எழுதிய மறுப்பில் தானே தனக்குள் பல இடங்களில் முரண்படுகிறார்..அவர் இல்லையா இல்லையா என்று கேட்பதெல்லாம் தன்விவாதத்தில் தானே நம்பிக்கை இல்லாமல் கேட்பதுபோல் உள்ளது...முதல் பந்தியில் ஜீவாவின் விவாதத்தை முறியடிக்கவேணும் என்பதற்காகவே எல்லோரும் உயிர்ப்பயத்தில் வந்திருப்பதாக சொல்லும் எதிரணிக்காறர் உடனடியாகவே அடுத்த பந்தியில் சீதனம் உழைக்க வெளிநாட்டுக்கு வந்ததாக தனது வாதத்தை வெல்ல வைப்பதாற்காக பொருளாதார அகதிகள்தான் என்று ஒரே வசனத்திலேயே பல்டி அடித்துவிட்டார.... என்னே ஒரு அந்தர் பல்டி எதிர்க்கட்சிகாறர் அடித்தது...கனம் நடுவர் அவர்கள் இதை குறிப்பெடுத்து வைக்கும்படி கேட்டுகொள்கிறேன்... அடுத்த பந்தியில் ஊரில் இருக்கும் தங்கச்சி மாரை வாழவைப்பதற்கா இங்கு மூன்று சிப்ற் உழைக்கிறார்களாம்..அப்படியானால் அந்த தங்கச்சிகளை ஊரில் இருந்தபடி உழைத்து வாழவைக்க முடியாது என்பதுதானே யதார்த்தம்..இப்படி ஒரு ஊருக்கு எவன் ஒருவன் போய் இருக்க விரும்புவான்..நாளை அவனுக்கு மகள் பிறக்கும் போதும் இப்படித்தானே உழைக்கவேண்டும்...அப்படியானால் ஊரில் இருந்தால் எப்படி அது சாத்தியமாகும்..அப்புறம் மகளின் பிள்ளைகளுக்கு மகள் எப்படி உழைப்பது..? இப்படி சங்கிலிதொடராக கேள்விக்குறிகள் வருகிறதே ஊரில் போய் வாழ்வதென்றால்..? இப்படி ஒரு எதிர்காலமே தெரியாத கேள்விக்குறியாய் வளைந்துபோய் கிடக்கும் ஊர் வாழ்க்கையை எவன் ஒருவன் தன் பிள்ளைகளுக்கு முழுமனதோடு கொடுக்க விரும்புவான்..? எவனும் தன் பிள்ளை அப்படி ஒரு எதிர்காலம் நிச்சயமில்லா சூழலில் வாழவைக்க விரும்பமாட்டான்..எனவே ஊருக்கு போனால் சிறப்பாக வாழலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறோம் என்று சொல்வதெல்லாம் வெறும் உதட்டுப் பொய்களே நடுவர் அவர்களே..உண்மை இவர்கள் ஊரைப்பிரிந்த பிரிவால் கவலைப்படுகிறார்கள் என்பதே.. அடுத்து தனது விவாதம் என்று சொல்லி கொஞ்சம் எழுதியிருந்தார் பகலவன் அவர்கள்..அவரது முதல் இரண்டு பந்திக்கும் விவாதத்தின் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை நடுவர் அவர்களே..சம்பந்தத்தை நீங்களே கண்டு பிடித்துக்கொள்ளுங்கள்.. அடுத்த பந்தியில் சுயமரியாதையைப்பற்றி கதைப்பவரிடம்...ஊரில் உள்ளதுபோல் இங்கு தொழில்ரீதியாக யாரையாவது பிரித்து சாதி என்று சொல்லி வேறுபடுத்தி பார்க்கிறார்களா என்று கேட்கிறேன்..?பொறியியல் படித்தவன் டாய்லட் கழுவக்கூடாதென்று எந்த விதியில் இருக்கிறது..?இதுவே ஒருவித ஆதிக்க மனதின் வெளிப்பாடுதான்...இப்படியான மெண்டாலிட்டி உள்ளவர்கள்தான் ஊரில் அதிகம்..இப்படி ஏற்ற இறக்கம் பார்ப்பவர்களின் ஊரில் இப்படி ஒரு சம உரிமை கொடுக்கும் நாட்டில் வாழ்ந்துவிட்டு எவன் போய் வாழவிரும்புவான் நடுவர் அவர்களே..? அடுத்த பந்தியில் முதியவர்கள் ஊரில் போய் சாகவேணும் என்று சொல்கிறார்கள் என்கிறார்..நாமும் இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் எந்த முதியவர் அப்படி செய்கிறார்கள்? யாரும் போவதில்லை மிக சிலரை தவிர..இங்கு கிடைக்கும் மிக உயர்ந்த மருத்துவ வசதிகள்..போன் அடித்தால் வீட்டுக்கு வரும் வைத்திய வசதிகள்,உயர்ந்த சத்தான உணவு வகைகள் என்று இவற்றில் ஏதாவது அங்கு கிடைக்குமா..? அதனால்தான் யாரும் போவதே இல்லை..எல்லோரும் ஊரை பிரிந்து வந்த கவலையில் சும்மா புலம்புவார்களே ஒழிய யாரும் மனமுவந்து அங்கு போய் இருக்கமாட்டார்கள் நடுவர் அவர்களே.. அடுத்து மணமுறிவை பற்றி சொல்கிறார்..இங்காவது மணமுறிவு என்று நேர்மையாக டைவேர்ஸ் எடுத்துவிட்டு போய் விடுவார்கள்..ஆனால் அங்கு..? எல்லாரும் அசமடக்கு கள்ளர்கள்..ஊர் முழுக்க கள்ளதொடர்பு கேசுகளும் பிரச்சினைகளும்..சீரழிவான வாழ்க்கை..பெண்களுக்கு ஒரு பாதுகாப்பில்லை... அடுததடுத்த பந்திகளில் ஊர் , யூதன், வெள்ளைக்காரன் என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகாறர் எதற்காக ஊரை விட்டு இங்கு ஓடி வந்து பேசணும்..? அதை ஊரிலே நின்றுகொண்டு பேசி இருக்கணும்..எதிர்க்கட்சி காரரிடம் ஒரு நேர்மை இல்லை..எங்களிடம் நேர்மை இருக்கிறது..நாம் ஒத்துக்கிறோம் ஊரைவிட வளமான வாழ்க்கை இங்கு என்று..சும்மா பிரிந்து வந்துவிட்டோம் என்ற கவலைதான் எங்களுக்கு என்று.. ஆனால் எதிர்ணிக்காறர் பொய்யாக தங்களுக்கு ஊரில் போனால் சிறப்பாக வாழலாம் என்ற கவலை இருப்பதாக வளமான நாட்டில் வளமாக வாழ்ந்துகொண்டு நன்றிகெட்டதனமாக பேசுகிறார்கள் நடுவர் அவர்களே..இவர்களின் இந்த நன்றிகெட்டதனத்தை நினைத்து நீங்கள் கவலைப்பட்டு உடம்பை மெலிக்காதீர்கள் நடுவர்களே..இபடி இருந்தால்தான் நீங்கள் பயங்கரமாக அழகாக இருப்பீர்கள் நடுவர்களே.. அடுத்த பந்தியில் சைக்கில் பெடலும்,எண்ணெய் தோசையும்,பிள்ளையார் கோயிலும்,ஓட்டை பஸ்ஸும் தரும் சுகம் பென்சும்,பிசாவும்,5ஸ்டார் கோட்டலும்,விரைவுப் புகையிரதமும் தரவில்லை என்று புலம்புகிறார்...நடுவர் அவர்களே இதெல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற மனநிலையே அன்றி ஊரில் போனால் வழமாக வாழலாம் என்ற மனநிலை அல்ல..இவர்களே கொஞ்சகாலம் ஊரில் போய் இருந்தால் பின்னர் பிசாவுக்கும்,பென்சுக்கும்,விரைவுப்புகையிரதத்துக்குமாக புலம்புவார்கள்.. மனிதமனமே இப்படி விசித்திரமான ஒன்றுதான்...இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது..அதையும் ஊரில் போய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்ற விவாதத்துக்கும் முடிச்சுபோடுவது காளைமாட்டை கட்டிவச்சு கட்டையால் அடித்து பால்கறக்க முயல்வது போன்றதே...நடுவர் அவர்களே..இந்த கெட்டபயல்களின் சகவாசம் உங்களுக்கு இனியும் வேண்டாம்..ஏனென்றால் இவர்கள் தங்கள் உள்ளமறிய பொய் சொல்கிறார்கள்..இவர்கள் ஆபத்தானவர்கள்..எனவே எப்பபவும் நடுவர்கள் இவர்களிடம் இருந்து இரண்டடி தள்ளி இருக்குமபடி நயமாக வேண்டிக்கொள்கிறேன்.. அடுத்து இந்த பட்டிமன்றத்தில் வெல்லமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட எதிரணியினர் கடைசி ஆயுதமாக தமது கதைகள் என்று கதைகளை சொல்லி நடுவர்களின் அனுதாப ஓட்டை பெற நயமாக முயற்சித்து இருக்கிறார்கள்..இதற்கு கனம் நடுவர்கள் பலியாக வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுகொள்கிறேன்..ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கைக்குள்ளும் இதைவிட ஓராயிரம் சோகம்கள் புதைந்துகிடக்கின்றன..ஏன் என் வாழ்க்கைக்குள்ளும் இதைவிட ரத்தக்கண்ணீரை வரவைக்கும் கதைகள் இருக்கின்றன..அதை அறிந்த ஒரு சில யழ் உறவுகளே அதற்கு சாட்சி..அப்படி இருந்தும் நான் யாரிடமும் எனது கதையை சொல்லி மற்றவர்களின் அனுதாபத்தை பெறணும் என்று நினைத்ததில்லை..என்னைப்பார்த்து இன்னொருவர் அனுதாபப்படுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை...அதனால் இங்கு சொல்வதற்கு கதை இருந்தும் அதை சொல்லாது கடந்துபோய் அடுத்த பந்தியில் என் வாதத்தை வைக்கிறேன்... அடுத்து எனது கருத்துக்களுக்கு வருகிறேன்...நான் சொல்வதற்கு எதுவுமில்லாமல் எனக்கு முன் வந்த எனது கட்சிக்காரர்கள் எம்பக்கம் உள்ள நியாயங்களை அற்புதமாக எடுத்து சொல்லி இருந்ததால் நான் அதிகம் முறியடிப்பு தாக்குதல் பக்கமே கவனம் செலுத்துகிறேன்..இருந்தும் என் கருத்துக்கள் சில கீழே.. என்னதான் சுத்தமான காற்றும் பச்சையான நிலமும் அங்கிருக்கு என்று புலம்பினாலும் எம்மவர்கள் எல்லோரும் இங்கு எப்படி விரைவாக குடிஉரிமைக்கு அப்ளை பண்ணலாம் என்றே சிந்திக்கிறார்கள்..இங்கு விசா பெற்றவர்களில் முக்கால்வாசிக்கும்மேல் நாசனாலிற்றி ஒற்றைக்காலில் நின்றாவது பெற்றுவிட்டார்கள்..உண்மையில் ஊரில் அரசியல்பிரச்சினை தீர போய் அங்கு செற்றிலாகணும் என்ற ஜடியா இருக்கும் எவனும் இந்த நாட்டின் குடியுரிமை பெறணும் என்று சிந்திக்கமாட்டன்... இருக்கும் நிரந்தரவிசாவுடன் இருக்கும் வரை இருந்துவிட்டு ஊருக்கு ஓடிடணும் என்றே சிந்திப்பான்.. மெல்ல மெல்ல கட்டி எழுப்பிய இந்த புலம்பெயர் வாழ்வை,மிக தரமான போக்குவரத்து வசதியை,விரல் நுனியில் உலகை கொண்டுவரும் தொழில்நுட்பங்களை தன் பிள்ளையும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் எந்த ஒரு இளைஞனும் யுவதியும் சிந்திப்பான்/ள்..இனி ஊருக்குபோய் அந்த காய்ந்த வாழ்வை,பிண் தங்கிய மூன்றாம் உலகில் தன் குழந்தை வளருவதை இந்த நவீன உலகில் வாழ்ந்த எந்த இளைஞன் அல்லது யுவதி விரும்புவாள்..? தமிழச்சி அக்கா சொன்னதுபோல் ஊரில் சிறப்பாக இருப்பவர்கள் உண்மையில் பரம்பரை பணக்காரர்களே..அங்கு சிறந்த சலுகைகளை பெறுபவர்களும் பொருளாதாரத்தால் மேம்பட்டவர்களே..ஏழைகள் அங்கு இன்னும் இன்னும் ஏழைகளாகப் போய்கொண்டிருக்கிறார்கள்..கண்மண் தெரியாமல் ஏறும் விலைவாசியும் அதற்கு ஏற்ப உயர்த்தப்படாமல் இருக்கும் சம்பளமும் ஏழைகள் இனி அடுத்து எப்படி வாழ்வது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..இதனால் அங்கு களவு விபச்சாரம் என்று சமூக சீர்கேடுகள் தலைவிரித்தாடுகிறது..ஒரு நாகரீகமன சமூகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றுவது பொருளாதாரமே..அந்த பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில் இப்படியான சீர்கேடுகள் தலைவிரித்தாடுவது சர்வ சாதாரணமே..இப்படி ஒரு உயர்ந்த நாகரீமான பொருளாதார வசதிகளால் தன்னிறைவுகண்ட சூழலில் வாழ்ந்துவிட்டு அப்படி ஒரு இருண்ட உலகத்தில் தாமும் தம் பிள்ளைகளும் வளர்வதை எவர்தான் விரும்புவார்கள் நடுவர் அவர்களே..? இப்பொழுது யாழிலேயே பாருங்கள் நேசக்கரத்துக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை..எத்தனை ஆயிரம் மக்கள் அங்கு ஒருவேளை சோற்றுக்கே துடிக்கிறார்கள் என்பதற்கு நேசக்கரமே சாட்சி..அப்படி ஒரு அதல பாதாளத்தில் இருக்கிறது ஊர் நிலமை..எதிரணியினர் புலம்பெயர் வாழ்வு தந்த வசதிவாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு ஊரில் போய் வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக வாழலாம் என்று புளிச்சல் கதை பேசுகிறார்கள் நடுவர்களே..இதைதான் பணம் மெத்தினால் பொழுதுபோக பேசும் திண்ணைக்கதைகள் என்பது...வசதியாக வாழ்ந்துகொண்டு வம்பழக்கிறார்கள் நடுவர் அவர்களே..ஆனால் இவர்கள் யாரும் ஊருக்கு போகப்போவது இல்லை என்பதே யதார்த்தம்.. எல்லோருக்கும் ஊரைப்பிரிந்த வலி..அந்த நினைவுகள் உள்ளே இருக்கும்தான்...ஆனால் அதற்காக எவனும் இவ்வளவு வளமான வாழ்வை உதறி எறிந்துவிட்டு மீண்டும் சைபரில் இருந்து தொடங்கும் ஊர் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமாட்டான் என்பதுதான் யதார்த்தம்.. எனவே " புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே அதுதான் யதார்த்தமும் உண்மையும்..அங்குபோய் வாழ்ந்தால் சிறப்பாக வாழலாம் என்று சொல்வதெல்லாம் ரைம்பாஸ் கதைகளே என்று சொல்லி என் சிற்றுரையை முடிக்கிறேன்..எதிரணி வெட்டிப்பசங்கள் தங்கள் வெறும் வாயை மெல்ல இனியும் இந்த பட்டிமன்றத்தை ஒரு இடமாக்கி விடாதீர்கள் என்று முடிக்கிறேன்.. நன்றி வணக்கம்..
 24. 17 points
  மனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது. சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார். இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும்.
 25. 17 points
  வேலாயுததத்தின் வீடு. வீட்டை சுற்றி பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு வீட்டு நாய்களும் படுத்திருக்கும் கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். முன்பக்கம் சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும் பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும் திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நேர முன்னுக்கு பலாமரம் முற்றத்தை நிழலாக வைத்திருக்கும். வேலாயுதத்துக்கு ஒரு பொடியன் பதினொரு வயதிலிருக்கின்றான். வைரவநாதன். வீட்டுப்பெயர் நாதன். நாதனின் நண்பன் அடுத்ததெருவில் இருக்கும் சிவன் என்கின்ற சிவனேசன். சிவன் அன்று பள்ளியால் வந்ததும் கழுசானைக் கழட்டி ஒருகாலை வெளியே எடுத்து அடுத்தகாலால் தூக்கி எத்திவிட்டான் கழுசான் கணக்காக உடுப்பு போடும் கொடியில் விழுந்தது. அனேகமாக ஒற்றைக் காலால் எத்திவிடும் கழுசான்கள் சரியான இடத்தில் விழும். அன்றும் அப்படிஎத்திவிட்டு வீட்டுக்கு போடும் கழுசானை மாற்றிக்கொண்டு குசினிக்குள் போய் அம்மா போட்டு மூடிவைத்த சாப்பட்டை அவசரமாக விழுங்கிவிட்டு நாதன் வீடு நோக்கி விழையாட வெளிக்கிட்டான். வழமையாக நாதன் வீட்டை போனதும் திண்ணையில் கொஞ்ச நேரம் இருந்து வைரவநாதன் வந்ததும் அவனோடு போய் பிள்ளையார் கோயில் மரத்தடியில் விழையாடுவார்கள். அன்று படலையை துறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் திண்ணையில் வேலாயுதம் கையில் உழவுமாட்டுக்கு அடிக்கும் துவரம் கேட்டியுடன் உரத்த குரலில் கததுகின்றார். முன்னால் ஊமையன் பிலாமரத்தடியில் நீ அடித்தாலும் பரவாயில்லை என்று ஏட்டிக்கு போட்டியாக கத்துகின்றான். ஊமையனின் குரல் ஆ.. ஊ. என்று மட்டுமே வரும் முகபாவனைகளும் கை அசைவுகளும் பதில் வார்த்தைகளை விட ஆவேசமாக இருக்கின்றது.. கடும் காற்றில் கமுக மரங்களின் அசைவுகள் முறிந்துவிடும போல் இருக்கும் ஆனால் முறியாததை காற்று நின்ற பின்தான் உணரமுடியும். அதுபோல் ஊமையன் சொல்வது இரவு நித்திரைக்கு பாயில் படுக்கும் போது ஒருவேளை உணரமுடியும். வேலாயுதத்துக்கு பின்னால் அவரின் மனிசி தெய்வானையக்க வாசல் கதவு நிலைக்கு முண்டுகொடுத்துக்கொண்டு நிற்கின்றா. வழமையாக அந்நேரத்துக்கு தேசிமரத்தடியில் படுத்திருக்கும் நாய் ஊமையனுக்கு அருகில் நின்று புரியாத புதிராக வேலாயுதத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றது. படலையை துறந்துகொண்டு போன சிவன் வீடடு படலைக்கும் முற்றத்துக்கும் இடையில் நின்ற செவ்வரத்தம் பூ மரத்தோடு நின்றுவிட்டான்..வேலாயுதத்தை பார்க்க அவனுக்கும் பயமாய் தான் இருந்தது.. துவரம் கேட்டியால் தனக்கும் அடித்துவிடுவாரோ என்ற பீதி சம்மந்தமில்லாமல் வந்தது. ஊமையனுக்கு வயது 45 க்கு மேலிருக்கும். அவருடைய குடும்பம் எங்கிருக்கின்றது என்று யாருக்கும் தெரியாது. நாலுவருடத்திற்கு முன்பு எங்கிருந்து வந்தார் என்றும் தெரியாது. ஊரில் முக்கால்வாசிப்பேர் அவர் பால் அன்பாகவே இருப்பார்கள்.ஒருவித இரக்கத்துடன் கூடிய அன்பு. பக்கத்தில் பிள்ளையார் கோயிலில் பொங்கினாலும் சரி, அயல் வீடுகளில் அந்தியோட்டி துவசம் பாறணை என்றாலும் அயலவர்கள் கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பார்கள். தோட்க் காவலில் நின்றால் சிலர் சைக்கிளில் சாப்பாடு கொண்டுபோய் கொடுப்பார்கள். தெய்வானையக்க சற்று உரத்த குரலில் அவன்தான் நாலுவருசமா இங்க தோடடக் காவிலில் நிக்கிறானே அவன்ர சம்பளததை கொடுத்துவிடுங்கோவன். இந்த பாவம் எல்லாத்தையும் எங்கபோய் கழுவிறது.... வேலாயுதம் அண்ணை இப்படி இருந்து ஒருபோதும் பார்த்ததில்லை. ஊமையன் எங்கள் ஊருக்கு வந்ததில் இருந்து அவருக்கு சாப்பாடு கொடுத்து உதவ பலர் இருந்தாலும் இருப்பிடம் வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. வேலாயுதமண்ணை முன்வந்தார். தன் கூடவே வைத்திருந்தார். கழிவாற்றங்கரையில் உள்ள அவரது தோட்டக் கொட்டிலில் தங்கவைத்து தோட்டக் காவலுக்கும் வைத்துக்கொண்டார். அவர் வீட்டில் உள்ளவர்கள் என்ன உண்டு குடிக்கின்றார்களோ அதையே ஊமையனுக்கும் கொடுத்தார்.. என்ன நடந்திருக்கும்...? சிவன குழம்பியபடியே அவனுள் பல கேள்விகள்.. ஊமையனுக்கு மலேரியா வரும்போதெல்லாம் சைக்கிளில் பின்னுக்கு ஏத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு மருந்தெடுக்க பலமுறை போனதை பார்த்திருக்கின்றான்.. ஒருமுறை பிள்ளையார் கோயிலடியில் கிளித்தட்டு விழையாடிய பொடியள் ஊமையனோடு சேட்டை விட்டு ஊமையன் குழம்பியடித்தபோது அந்த இடத்தால் வந்த வேலாயுதமண்ணை கோபத்துடன் உறுமினார்.. யாராவது ஊமையனோடு சொறிராத்தினால் துவரங்கேட்டியல் விளாசுவன்.... அதற்கு பிறகு ஒருவரும் சொறிச்சேட்டை செய்வதில்லை. என்னமோ பெரிய பிரச்சனை.. நாதன் வெளியில் வந்தால் தான் அறியலாம் அவன் என்னும் குசினிக்குள்ள தின்னுறான் போல கிடக்கு.. திண்ணையை கடக்க சிவனுக்கு தைரியம் இல்லை. முதல்ல இந்த கம்ப அங்கால வையுங்கோ..தெய்வானையக்க துவரம்கேட்டியை இழுத்து கதவுக்கு பின்னால் வைத்துவிட்டா அப்பாடா என்று சிவனுக்கு கொஞ்சம் நிம்மதி.. கொஞ்ச நேரம் கழித்து நாதன் வண்டியை தடவிக்கொண்டு வெளிய வந்தான். அம்மா கோயிலடிக்கு போட்டு வாறன் என்று பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்.. போறவளியில் சிவன் கேட்டான் .. என்ன பிரச்சனை? ஊமையன் வேணுமென்று தோட்டத்து கண்டாயத்தை திறந்து விட்டுட்டான். இரவு மாடு பாய்ஞ்சு எல்லாத்தையும் சுத்தமா துடைச்சு மேஞ்சுட்டுது.. அப்பா வேலையை விட்டு போக சொல்லிட்டார் அவன் காசு கேட்டுக்கெண்டு நிக்கின்றன். குடுக்க வேண்டியதுதானே ? பயிர் அழிஞ்சதுக்கு சம்பளக்காசு தான் மிச்சம் எண்டுறார் அப்பா.. ஏன் வேணுமெண்டு துறந்து விட்டவர்? யார் கண்டு பிடிச்சது ? சிங்கமண்ணை கருக்கல்ல வயலுக்கு போகேக்க மாட்ட உள்ள விட்டு கண்டாயத்த சாத்தியிருந்தத பார்த்து ஊமையன எழுப்பி மாட்ட விரட்டினதெண்டு மூர்த்தியண்ணைக்கு சொன்னவராம். அப்படி இருக்காது என்றான் சிவன் டேய் எனக்கும் ஊமையனை பாரக்க பாவமாய் இருக்கு ஒண்டு சொல்லவா ? யாரெட்டையும் சொல்லாத ம்.. இரவு சாப்பாடு கொடுத்திட்டு வரேக்க நான்தான் கண்டாயத் தடியை கொழுவ மறந்துட்டன்.. டேய்... ஓமெடா ...... உமையன் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இரண்டு மாடுகள் உள்ள போட்டுது.. சாப்பிட்டு கொஞ்ச நேரத்தால ஊமையன் படுக்க போகேக்க கண்டாயத்த பாத்து மாடு உள்ளுக்கு இருக்கிறது தெரியாம சாத்தி விட்டான்.. நீதான் மறந்திட்ட எண்டுறது அவருக்கு தெரியுமே ! ஓம் ஆனா சொல்ல மாட்டார்.. அப்பா என்க்கு துவரம்கேட்டியால அடிச்சுப்போடுவார் என்று ஊமையனுக்கு பயம்.. டேய் பாவமெடா பேசாம சொல்லிவிடடா.. அடிச்சே சாக்காட்டிபோடுவார்.. நீ இந்த பத்தேக்க ஒளிஞ்சிரு நான் தண்ணி குடிக்கிறது போல போய் கொம்மாட்ட சொல்லுறன்.. கொப்பற்ர கோவம் போனதும் பொழுதுபடேக்க வீட்ட போவம்.. எங்கட அப்பாவ கூட்டிக்கொண்டு போவம்... ஒருமாதிரி சம்மதித்தான் நாதன் சிவன் பயத்துடன் நாதன் வீட்டை போனான் தெய்வானையக்க தண்ணி வேணும் குசினிக்க கிடக்கு எடுத்துக் குடி.. தெய்வானையக்காவை குசினிப்பக்கம் வர வைக்கோலாது போல கிடக்கே ! கையெல்லாம் மண்.. வாத்து தாங்கோ.. தெய்வானையக்க பின்பக்கம் போக அவ பின்னாலயே போய் குசினிக் கதவடியில் வைத்து நாதன் சொன்னதை சொன்னான் சிவன் எங்க அந்த கழுசடை ? பயத்தில எங்கட வீட்டை போறான் இரவு வாறானாம் சொன்னது தான் சிவன் முன்பக்கமாக போகாமல் பின்பக்கம் வேலிக்குள்ளால பூந்து கோயில் நோக்கி விரைந்தான்.. சிவனும் நாதனும் பத்தைக்குள்ள மறைந்திருந்து தகப்பன் துவரம் கேட்டியுடன் வருகின்றாரா என்று பதபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்... ஏன்டா கொம்மா சொல்லியிருப்பாவே.. என்னும் கொப்பர காணேல்ல அதுதாண்டா நானும் யோசிக்கிறன்.. ஒரு மணித்தியலத்தின் பின் படலையை திறந்துகொண்டு வேலாயுதத்தின் சைக்கிள் வயல்பக்கம் புறப்பட்டது.. பின்னால ஊமையன் இரண்டு கைகளையும் கரியரில் இறுக்க பிடித்தபடி இருந்தார் ... ஊமையனும் தகப்பனும் சமாதானமாகினது பெரும் நிம்மதியாய் இருந்தாலும் இரவு என்ன பூசை நடக்கும் என்ற பீதி நின்றபாடில்லை.. டேய் கொம்மாட்ட முதல் போவம்.. என்று பிள்ளையார் கோயிலடி பத்தையை விட்டு தெய்வானையக்காவிடம் நாதனை இழுத்துக்கொண்டு போனான் சிவன்.. தெய்வானையக்க அடுப்பு ஊதுற குழலால குசினிக்குள்ள புகைக்கிற அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா.. நீ குசினிக்குள்ள போடா என்றான்.. நாதன் திண்ணையோட நின்றுவிட்டான்.. முதல் ஒருக்கா பயித்தங்கொடியை பாரடா என்று நாதனிடம் சொல்லிவிட்டு உரமெடுக்க போய்வாறதுக்குள்ள ஆற்றங்கரை கூழா மரத்தில் ஏறி குழம்பழம் தின்ன குரங்குகள் பயித்ததங்கொடிகளை மொட்டை அடிச்சுபோட்டுது. அண்டைக்கு தகப்பன் துவரங்கேட்டியால் இழுத்த குறி என்னும் குண்டியில இருக்கு. குறுக்க வந்த தெய்வானையக்காவுக்கும் முதுகில ஒண்டு விழுந்தது. நாதன் தகப்பன் வாறாரோ என்று படலையும் பார்த்தபடி திரும்ப அகப்பைக் காம்போடு தாய் குசினிக்குள்ளால வாரவோ எண்டு இரண்டுபக்கமும் மாறிமாறி பார்த்து முழுசிக்கொண்டிருந்தது சிவனுக்கு பாவமாக இருந்தது. பொழுதுபட்டுவிட்டது. இனி சிவனும் நிக்கேலாது.. நாதனை விட்டு போறது பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்யேலாது.. நான் போறன்டா என்றுவிட்டு சிவன் வெளிக்கிட்டான். படலைதாண்டி சொட்டு தூரத்தில் நாதன் அம்மா அம்மா என்று குழறுவது கேட்டது.. இனி செய்யமாட்டன் அம்மா என்று குழறுவது கேட்டது.. விடிய நாதன் பம்மிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்டு வந்து சிவன் வீட்டு படலையடியில் சிவனுக்கு காத்துக்கொண்டிருந்தான்.. சிவனின் தகப்பன் சிற்றம்பலத்தார் ஆத்திப் பட்டைகளை காலில் உழக்கி கையால் ஆத்திநாரை உரித்துக்கொண்டிருந்தார்.. நாதனைக் கண்டதும் என்னடா இரவு நல்ல பூசைபோல கிடக்கு.. நாதன் முழுசிக்கொண்டு நிண்டான் ஏண்டா கொப்பன் கஸ்டப்பட்டு பயிக்கொடி வளர்த்தா அதன மாட்டுக்கும் குரங்குக்கும் தின்னக் குடுத்தா என்னத்த உருப்படுறது ? அத்தோட சிற்றம்பலத்தார் உரித்த ஆத்தி நாரை எடுத்துககொண்டு பின்பக்கம் போய்விட்டார்.. சிவனும் நாதனும் பள்ளிக்கூடத்துக்கு நடந்துகொண்டே ஏன்டா காலம கோயில்கு போய் வாறியோ? திருநூறு எல்லம் வைச்சிருக்கு இல்லடா அம்மா பூசிவிட்டா.. ஏன்டா கொப்பரும் அடிச்சவரோ ? இல்லை.. அம்மா அடிச்சதோட அழுகொண்டு சாப்பிடாம நித்திரயாபோனன்.. அப்பா ஆத்திரத்தோட தான் வந்தவர் ஆனா அம்மா அடிச்சு ஆழுதுகொண்டு படுத்திட்டதால அப்பா இரவு பத்துமணிபோல எழுப்பி சாப்பிட வைச்சார்.. ஒண்டும் சொல்லேல்ல.. ம்.. என்றான் சிவன் எதிர்பார்த்தது போல..
 26. 17 points
  என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவளே...! தோற்றத்தில்…, நீ கொஞ்சம் பெரிசு தான்! அதுவும் நல்லது தானே! அதிலும்,,, ஒரு வசதி தெரியுமா? எந்த தேசத்தின் பணமானாலும், உனது ஆடைகளுக்குள் இரகசியமாக, மறைத்து விடலாமே! உன்னை அடைவதற்கு.., நான் பட்ட பாடு…, உன்னைத் தொடுவதற்கு, நான் கடந்த தடைகள், அப்பப்பா..! இப்போது நினைத்தாலும், இதயத்தில் இலேசாக வலிக்கிறதே! விதானையிடம் கூட…, கையெழுத்துக்கு அலைந்தேன்! விதானையின் விடுப்புக்களுக்கு…, விடை சொல்லிக் களைத்தேன்! பாம்புகள் போல நீண்ட வரிசைகளில், பல பகல் பொழுதுகள்..,, பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்! நாளைக்கு வந்திருவாள் என்றார்கள், நாலு நாட்கள் எடுத்தது! சில வேளைகளில்.., உனது அழகிய மேனியில்.. அன்னியர்கள் சிலர், ஓங்கிக் குத்துவார்கள்! அந்த வேளைகளில்.., உன்னை விடவும், எனக்குத் தான் வலிக்கும்! ஒரு நாள்…, உன்னை அந்நியர்களின் வீட்டில், அனாதரவாய்க் கை விட்டேன்! எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா? உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்! எனக்கோ, இரவு முழுவதும் தூக்கமேயில்லை! எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்.., இமைகளை மூட முடியவில்லை! விடிந்ததும்.., ஓடோடி வந்தேன் உன்னிடம்! உன்னைக் காணவில்லை என்றார்கள்! இதயத்தின் துடிப்பே,,,. அடங்கிப் போன உணர்வு! இரண்டு நாட்களின் பின்னர்.., அந்த உத்தியோகத்தரின், 'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,, உனது சக தோழிகளுடன்.., நாலாவது காலாகி..... நீ மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்! அப்போதும் கூடப் பார்..! உனது கறுப்பு நிறம் தான்…, உன்னை மீட்டுத் தந்தது! பத்து வருடங்களின் பின்னர்…, இன்னொரு காதலி வந்தாள்! நீ எனது முதல் காதலியல்லவா? உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை! கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்! வஞ்சகர்கள் அவர்கள்! இரண்டு லட்சம் கேட்டார்கள்! இரண்டு லட்சத்தை.., எங்கே தேடுவேன்! அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்! என் சொந்தங்கள் மீது,,,, எரி குண்டுகள் போடவாம்! ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்! உனது முகம் வாடியது தெரிந்தது! இறுக்கமாய் மனதை வரித்து, உன்னிடம் சொன்னேன்…! சரி தான் …. போடி! (உருவகக் கவிதை)
 27. 17 points
  ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா? ஆம்.... என்று, சொல்வேன் நான். இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!? மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால், என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்.... எனது மனைவி வயிற்றில் உருவாகிய... (ஆறு கிழமை ஆன) மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன். அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு. உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து...... மூன்று மாதம், ஆகி விட்டது. இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று..... அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம், அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... நடையை நினைத்தால்... மனம் இப்போதும் கலங்கும். சிறிது பேசியும், உற்சாகம் கொடுத்தும்.... கருக் கலைப்பு நிலையத்துக்குச் சென்று.... எல்லாச் சோதனைகளும், கேள்விகளும் முடித்து.... என்னை.... வெளியே... அனுப்பி, ஊசி போட, ஆரம்பிக்கும் போது... ஊசியை.... தட்டி விட்டு, மனைவி.... பச்சை உடுப்புடன், என் முன் வந்து, நின்று, நான்.... என், குழந்தையை கொல்ல... அனுமதிக்க மாட்டேன், என்று கத்தினார்........ (தொடரும்)
 28. 17 points
  25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...! இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை.. அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்.. நலமுடன் வாழிய பல்லாண்டு.! - ( உடனடியாக அருமையான கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! )
 29. 16 points
  உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம். எச்சரிக்கை இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். குறிப்பு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை. உடலுக்கான சக்தியின் தேவை பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 1. முதலாவது காபோஹைதரேட் இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும். அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும். ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 2. இரண்டாவது கொழுப்பு. முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும். ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும். வரலாற்றுக் குறிப்பு ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. ஒப்பந்தம் கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ? இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை. என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சமன்பாடு கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 150 கிராம் கோழி = 350 கி.கலோரி ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம் . அனுகூலங்கள் கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம் கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும் (triglycerides) இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம். சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும் ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும். இன்னும் பல… தீமைகள் உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும். படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும். இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன். தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தொடரும்.
 30. 16 points
  ஓ...மானிடனே ! ஒவ்வொரு ஆண்டு கழிகையிலும்.., உனது பொலிவு கொஞ்சம் குன்றுகின்றது! எட்டிப் பார்க்கும் நரை முடி ஒரு பக்கம்,,, எள்ளி நகையாடும்...சுருக்கங்கள் மறு பக்கம்...! அடி வயிறு கொஞ்சம் முன்னுக்கு வர..., உள்ளே இருக்க வேண்டிய மூக்கின் முடிகள்..., கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க.., அதை மறைக்க ... நீ படும் பாடு..., சொல்லில் வடிக்க இயலாது! யாழ்.., என்ற கள்ளியைக் கொஞ்சம் பார்! காலம்.., அவளைத் தின்று விடவுமில்லை! அவளின் இளமையைக், கொன்று விடவுமில்லை! மாறாக..., இன்னும்...இன்னும்..., வளம் பெறுகிறாள்! சத்தியமாய்ச் சொல்கிறேன்! அவள் மீது எனக்குப் பொறாமையில்லை! ஆசை மட்டும் தான் ! களக் கட்டமைப்பில் பங்கெடுத்த அனைவருக்கும்....வாழ்த்துக்களும்...வணக்கங்களும்!
 31. 16 points
  துருச்சாமி... தொடர்கிறது ! 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். காலை 09 : 00 மணி. அந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில் சற்றுத் தள்ளி இருந்த பூவரசமர நிழலில் சிலர் கூடி நிக்கிறார்கள். சூசை சயிக்கிளில் மீன் கொண்டுவாற நேரம்.அங்கு நின்ற காமாட்சி மற்றவர்களைப் பார்த்து பர்வதம் வீட்டில் ஒரு சாமி வந்திருப்பதைத் தான் பார்த்ததாக மெதுவாய் சொல்கிறாள்.அது சிறிது நேரத்தில் அந்தக் கிராமம் முழுக்க காதோடு காதாகப் பரவுகின்றது. அதேநேரம் சூசையும் அந்த பல்பு போல இருக்கும் ஹாரனை பீப்...பீப் என கையால் அமுக்கி அமுக்கிக் கொண்டு அங்குவந்து இறங்குகின்றான். எல்லோரும் மீன் பெட்டிக்குள்ளிருந்து தங்களுக்கு இசைவான மீன்கள் , றால்கள், நண்டு கணவாய், சுறா என்று பொறுக்கி எடுக்கினம். செண்பகமும் மோகனாவும் கதைத்துக் கொண்டே வந்து சேருகினம். காமாட்சி : சூசை நீ ஊரெல்லாம் நல்ல மீன்களை வித்துப் போட்டு உள்ள நாறல் மீனெல்லாத்தையும் கடைசில கட்டியடிக்க இங்கு கொண்டு வாராய். சூசை: இல்லையக்கா உங்களுக்கு நான் அப்படி செய்வேனா. இப்பதான் கடற்கரையிலே ஏலம் எடுத்துக் கொண்டு இங்கால வாறன். அவரவர் முன்பே பத்தியம் அதுக்கு இதுக்கு என்று சொல்லி வைத்த மீன்களைத் தனியாக எடுத்து அவரவர்களிடம் கொடுத்து சிலருக்கு கொப்பியில் கணக்கும் எழுதிக் கொள்கிறான். காசு கொடுத்தவர்களுக்கு மிச்சத்தை தனது சாரத்தின் சண்டிக்கட்டை தூக்கி உள்ளிருந்த காற்சட்டைப் பையில் இருந்து காசை எண்ணிக் கொடுக்கிறான். எல்லோரும் கலைந்து போனபின் செண்பகமும் அவனுடன் உரசினாப் போல் நின்றுகொண்டு மீன்கள் எடுக்க சூசையும் தனியாக வைத்திருந்த நல்ல மீன்களைப் பெட்டியில் போடுகின்றான். அவளும் எடுத்துக் கொண்டு கிளம்ப அவனும் "செம்பு" இன்னும் இரண்டு தெருவுக்குப் போட்டு வீட்டுக்கு வாறன் என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே அந்த பல்பு ஹாரனை அமுக்கிக் கொண்டே சயிக்கிளில் ஏறிப் போகிறான். (கிராமத்தைக் கொஞ்சம் பார்ப்போம். அது ஒரு மிகச் சிறிய கிராமம்.சுமார் ஐம்பது வீடுகள் வரை இருக்கும். ஒரு சில வீடுகளே ஓடு போட்டதும் பெரிய வீடுகளுமாய் இருக்கின்றன.கிராம எல்லையில் ஓரிரு கோயில் குளங்கள் இருக்கின்றன. ஆனால் நல்ல செழிப்பான கிராமம். இயற்கை வளத்தை அள்ளிக் கொடுத்திருக்கு. அது அங்குள்ள ஆண்களிடம் வலிமையாகவும் பெண்களிடம் வனப்பாகவும் வாளிப்பாகவும் குவிந்து கிடக்கு. ஆங்காங்கு ஊருக்குள் நடக்கும் கொண்டாட்டங்கள் திருவிழாக்களுடன் சேர்ந்து கிசுகிசுக்களும், கசமுசாக்களும் தாராளமாக நடக்கும். எல்லாம் ஓரிரு வாரந்தான். பின்பு பழையபடி வேறொரு கிசுகிசு கசமுசா. ஒரு வெள்ளந்தியான கிராமம்.) சாமி திண்ணையில் தியானத்தில் இருக்குது. அந்த வீட்டுக்காரர் கதிரவேலு படலையை சயிக்கிளை விட்டு இறங்கி ஸ்ராண்ட் போட்டு விட்டு உள்ளே வாரார்.வாசலில் கிளுவமர நிழலில் திருகணியில் இருந்த மண்பானையில் இருந்து கிண்ணத்தில் நீர் மொண்டு அண்ணாந்து குடித்து விட்டு உள்ளேபோய் சற்று நேரத்தில் வெளியே வந்து எதிர் திண்ணையில் அமர்கிறார். சாமியும் அரவம் கேட்டு கண்திறந்து பார்க்குது. கதிவேழு குசலம் விசாரிக்கிறார். கதிரவேலு: கும்புடுறேன் சாமி. சாமியை எப்படிக் கூப்பிடுறது. சாமி: ஒரு தெய்வீகப் புண்ணகை சிந்தி சொல்லுது. என்நாமம் "துருச்சாமி" . ( சாமியின் பூர்விகப் பெயர் துரைச்சாமி. அவரது பால்ய காலத்தில் அவருடன் இருந்த கஞ்சாச்சாமி, அபின்சாமி,கள்ளுச்சாமி எல்லாம் அவரை துருச்சாமி ...துருச்சாமி என்று அழைத்து இப்ப சாமியே தன்நாமம் கெட்டு, தானே மறந்து துருச்சாமியாய் கிராம வலம் வருகுது). கதிரவேலு: சாமியின் பூர்வீகம் அறியலாமோ. சாமி: மூச்சை நன்றாக இழுத்து வீட்டுக் கொண்டு ம்.... அது ஒரு ஆடி அமாவாசை. அறியாப் பருவத்தில் கீரிமலையில் நீராடப் போய் அங்கு கூட்டத்தில் ஐயா அம்மாவைத் தவறவிட்டு அங்கிருந்த சாமிமார்களுடன் அலைந்து,திரிந்து கால்நடையாய் கதிரமலை சென்று மாணிக்க கங்கையில் மூழ்கி மாங்குளத்தில் எழுந்து பின் இப்படியே கிராமம் கிராமமாய் அலைந்து ம் ....! சாமி மோனத் தவத்தில் மூழ்குது. "கூடுமறை யட்சரக் கோணமெல்லாம் காவல் கொண்டண்டம் பூத்த தேவே" அது ஒரு நாற்சார் வீடு. உள்ளே அடுக்களையில் பெண்டுகள் சிலர் சேர்ந்து சமையல் செய்ய தொடங்கிட்டினம். சிலர் நெல்லு எடுத்து வந்து மரஉரலில் போட்டு உலக்கையால் கைமாற்றி குத்தினம். ஒருவர் இருவராய் பலர் வாசலாலும் பின் வளவாலும் வந்து சேருகினம். சாமியும் திண்ணை விட்டு வெளியே வந்து முற்றத்து மாவின்கீழ் நிக்க பர்வதத்தின் பேரன் கண்ணன் ஒரு வாங்கை எடுத்து வந்து அங்கு வைக்கிறான்.சாமியும் அதில் மான்தோல் போட்டு அமருகின்றது. மறக்காமல் தூளிப் பையையும் கையேடு எடுத்து வந்து பக்கத்தில் வைத்திருக்கு. கதிரவேலுவும் மீண்டும் சயிக்கிளில் வெளியே போகிறார். செண்பகம் மீனோடு வந்து படலையைத் திறக்க சயிக்கிளில் வந்த கதிரவேலுவும் உள்ளே சயிக்கிளை நிப்பாட்டிப் போட்டு செண்பகத்திடம் எனக்கு கொஞ்சம் வாழை இலை வேணும் செம்பு என்கிறான். செண்பகம்: என்ன கதிரு உனக்கில்லாததா! தேவையானதை நீயே எடுத்துக்கொள். குருத்திலை எல்லாம் விரிஞ்சு கிடக்கு காத்தில என்கிறாள். கதிரும் கத்தியுடன் வளவுக்குள் சென்று நல்ல இலைகளாய்ப் பார்த்து பார்த்து வெட்டுகிறான். மீனை சட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வந்த செண்பகம் என்ன கதிர் உன் வீட்டுக்கு யாரோ சாமி வந்திருக்காமே ! கதிரவேலு: ஓம் செம்பு. அதுதான் கானபேர் வருகினம், மத்தியானம் சோறு ஆக்கிப் போடுறம் நீயும் வா என்ன. செண்பகம்: சும்மா போ கதிரு, உன் பொஞ்சாதி பொன்மணி பார்க்கிற பார்வையே சரியில்லை. ( பழனி வேற்ரூருக்கு வேலைக்கு போன இடத்தில் அவனுடன் பழக்கமாகி செண்பகம் அவனது ஆசைநாயகியாய் இங்கு வந்துவிட்டாள். ஊருக்குள் கிசுகிசு இல்லாத நேரங்களில் செண்பகம்தான் அவள்). என்று சொல்லிக் கொண்டே அதோ அந்த மொந்தன் குலையை வெட்டி ரெண்டு காயை எனக்குத் தந்திட்டு மிச்ச இலையையும் கொலையையும் நீ எடுத்துக் கொண்டுபோ என்கிறாள். இந்நேரம் வாசலில் வந்த சூசை வேலியால் எட்டிப் பார்த்துவிட்டு யாரோ நிக்கினம் போல என்று அப்பால் போகின்றான். கதிரும் அதை வெட்டி அவளுக்கும் குடுத்து விட்டு வாழை நாரால் எல்லாத்தையும் சயிக்கிளில் கட்டி விட்டுத் திரும்ப நில்லு கதிரு இந்தா இந்த ரெண்டு பொத்தியும் உனக்குத்தான் என்று வாளைப் பொத்தி இரண்டைக் கொடுக்கிறாள்.கதிரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு போகிறான். சாமி வாங்கில் இருந்து அங்கிருந்த பிள்ளைகள் பெரியவர்களுக்கு சில பல சிரிப்புக்கு கதைகள் சொல்லிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு ஒரு பெண்மணி ஒரு பையனைக் கூட்டி வந்து சாமி இவனுக்கு மாலையில் இரவில் காச்சலாய்க் கிடக்கு. உன் கையாள கொஞ்சம் துண்ணுறு பூசிவிடு. சாமியும் விபூதிப் பொட்டலத்தை எடுத்து சிறிது விபூதியை அள்ளி இடது உள்ளங் கையில் பரப்பி ஒரு குச்சியால் ஏதோ யந்திரம் கீறி மந்திரிச்சு அந்தப் பையனது உச்சியிலும் நெத்தியிலும் பூசி சொடக்குப் போட்டு அனுப்பி வைக்குது. மற்றவர்களுக்கும் திருநீறு தந்து குழந்தைகளுக்கு தன்கையாலே பூசி விடுகுது. அந்தத் திருநீறும் ஒரு தனித்துவமான வாசனை வீசுது. வேறொரு பெண் கையில் ஒருமாதக் குழந்தையுடன் தனது மாமியாரோடு வந்திருக்கு. அவள் சாமியிடம் சாமி நீங்கள்தான் என்பிள்ளைக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி சாமியின் காலடியில் குழந்தைய கிடத்துகிறாள். சாமியும் பிள்ளையை அல்லி எடுக்க அது சாமியின் மார்பில் "உச்சா" போகின்றது. அப்பெண்ணும் அவசரமாய் தன் முந்தானையை எடுத்து சாமியின் மார்பைத் துடைக்கப் போக சாமி அதை கையால் தடுத்து தனது சால்வையால் துடைத்துவிட்டு விபூதி எடுத்து மாமிக்கும் தாய்க்கும் பிள்ளைக்கும் பூசிவிட அங்கிருந்த பர்வதாக கிழவியும் சின்னப் பிள்ளை யாரிடம் உச்சா போகுதோ அவர்களிடம் உறவு அதிகம் என்று சொல்லுறாள். சாமியும் அந்தக் குழந்தையின் குஞ்சை பாசத்துடன் தடவிக் கொண்டே அதன் காதில் மெல்ல குஞ்சிதபாதம்... குஞ்சிதபாதம்...குஞ்சிதபாதம் என்று மூன்று முறை சொல்லிவிட்டு கையை ஆகாயத்தில் ஆட்டி ஒரு சங்கிலி எடுத்து அதன் கழுத்தில் போட எல்லோரும் வியக்கின்றார்கள். பின் துருச்சாமிக்கு அரோகரா என்றும், குஞ்சிதபாதம் வாழ்க என்றும் கோரஸ்சாய் கோஷம் போடுகின்றார்கள். சாமியும் பிள்ளையைத் தாயிடம் குடுத்து குளிக்கும்போது மறக்காமல் சங்கிலியைக் கழட்டிவிடு , தண்ணி பட்டால் சாயம் போய்விடும் என்று சொல்லுது. எல்லோரும் போடும் சத்தத்தில் அது சக்தி போய்விடும் என்று அவளுக்கு விளங்குது. அப்படியே செய்கிறேன் சாமி என்று சொல்கிறாள். அவர்களுக்கு தண்டம் தூக்கி ஆசிவழங்கி அனுப்புது. அந்தப் பெண்ணும் திரும்பத் திரும்ப சாமியைப் பார்த்துக் கொண்டே செல்லும்போது மங்கலாய் பழைய நினைவொன்று பொறி தட்டுது. போனவருடமளவில் தனது மாமியார் தன்னிடம் கலியாணம் கட்டி நாலு வருடமாகுது இன்னும் ஒரு புள்ளை பெறக் காணேல்ல என்று திட்டிப் பேசி மகனிடம் சொல்லி அவளை அயல் கிராமத்திலிருக்கும் அம்மா வீட்டுக்கு அனுப்பியதும், அடுத்தடுத்த நாள் இரவு தான் தோட்டத்துக்குள் இருந்து வரப்பில வரும்போது யாரோ தன்னை இழுத்து விழுத்தியதும் அவனிடம் இருந்த தண்டத்துக்கு பயந்து தான் பேசாமல் இருக்க அப்போதும் இதே மாதிரி வாசனைத் திருநீறு தன்னை மூடியதும், அதையும் வீட்டில சொல்லப் பயந்து பேசாமல் இருக்க அடுத்தடுத்து வந்த இரண்டு மாதத்தில் தான் சத்தி எடுக்க இது மசக்கை என்டு கண்டு புருஷன் வீட்டுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வாடகைக்கு சிவதாற்ற காரோடு வந்து தன்னைத் தாங்காத குறையாய் இங்கு அழைத்து வந்ததும்,பின் சீராட்டிப் பாராட்டி இந்தக் குஞ்சிதபாதம் பிறந்ததும் நினைவில் வர "இவர் அவனாய் இருக்குமோ என ஐயப்பட்டு அவர் கையில் தண்டத்தையும் கண்டு அவன்தான் இவர்" என்று தெளிந்து மாமியிடம் குழந்தையைக் குடுத்துவிட்டு சற்று நில்லுங்கோ மாமி வாறன் என்று திரும்பிப் போய் சில ரூபாய் தாள்களும் கையில் கிடந்த காப்பையும் கழட்டி சாமியின் மடியில் போட்டு வாஞ்சையுடன் அவர் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு போகிறாள். அற்புதங்கள் தொடரும்....!
 32. 16 points
  வா…… என்னை வருடு! குளிர் பூச்சியத்திற்கு கீழே 15 ஆக இருந்தது. காற்று தாறுமாறாக வீசிக்கொண்டிருந்தது. அக்காற்றில் அலைக்கழியும் பனிப்பூக்கள் பூமியைத் தொட நிமிடங்களைக் கரைத்தன. அறையின் யன்னல் ஓரமாக எவ்வளவு நேரத்திற்குத்தான் இவற்றை இரசிப்பது? எனக்கு அலுத்து விட்டது. வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் அவள் மட்டும் இன்னும் சமையல் கட்டில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களின் தொடுகைக்காக மனதிற்குள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன. அவளின் பாராமுகமும் அலட்சியமும் என்னைத் தினம் தினம் அவமானப்படுத்துகிறது. அடி போடீ என்று வெறுக்கும் சக்தியை இன்னும் உயிர்மை கொடுக்கவில்லை. அந்தக்கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் கதகதப்பிற்காக ஒவ்வொரு மணித்துளியும் எதிர்பார்ப்புடன் கரைகின்றன. இன்றாவது அவளின் வருடல் கிட்டாதா?...ம்… சமையல் அறையில் விளக்குகள் அணைக்கும் ஒலி கேட்கிறது..வருகிறாள்…..என்னுடைய பார்வையை தீனமாக வைத்துக் கொள்கிறேன்…தன்னுடைய பூரண திருப்திக்காகவே தேடி என்னைத் தேர்ந்தெடுத்தவள்… அவளின் அதரங்களுக்குள் எத்தனை தடவைகள் அலைமோதியிருப்பேன்… ஏன்?....ஏன்? என்னை அவள் தள்ளி வைக்கிறாள்? ஊமையின் வேதனைபோல உள்ளுக்குள்ளேயே எண்ணங்கள் குமைந்தன. அவளின் தொடுகை மட்டுமே என்னை உயிர்ப்பிக்கும்.முன்பெல்லாம் என்னை வருடும் அந்த நீண்ட வெண்டைக்காய் போன்ற விரல்களின் கதகதப்பில் போதையேறி என்னை மறந்து எத்தனை இலாவகமாக அவளோடு அவளின் இழுப்பிற்கும் இறுக்கமான பிடிப்பிற்குள்ளும் கட்டுண்டு கிடந்திருக்கிறேன்…. இப்போது மட்டும் அவளுக்கு என்ன ஆயிற்று? அவள் என்னை நெருங்காத அளவிற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன்? …….என் தேவதை வருகிறாள் அவளின் வருகையை என் மனம் உணர்கிறது. படுக்கை அறைக்கதவைச் சாத்தியவள் என்னைக் கவனியாததுபோல குளியல் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்…..குளிக்கிறாள் போலும்..குளித்து வரட்டும். ஈரம் சொட்டச் சொட்ட அந்த அழகான கூந்தலை இரவின் மெல்லிய ஆடையில், அவள் அள்ளி முடிந்திருப்பதை இரசிப்பதே தனி சுகந்தான்….ம் வந்து விட்டாள் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன். “வா…. என்னை வருடு.” அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.
 33. 16 points
  1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம். மூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் வயிற்றிற்கு ஏதுமில்லை. வீடு போவதைத் தவிர வேறு தெரிவில்லை. அங்கன திரியாமல் பஸ்ஸில வீட்டை வா என்று அம்மா தந்த பழைய இரண்டு ரூபாய் நோட்டை கைகள் தன்னிச்சையாய் பொக்கற்றுக்குள் தடவி நின்றது. பஸ்ஸுக்கு ஒரு ரூபாய் போதும். அதுவும் 12 வயதில் எனது உடல்தோற்றத்திற்கு கண்டக்டர் அரை ரிக்கற் தானாகவே தருவார். அம்மாவுடன் போனால் இல்லை இவனுக்கு 12 வயது என சொல்லி முழு ரிக்கற் வாங்குவா. அரிச்சந்திரன் பரம்பரை என்ற நினைப்பா அல்லது தன்ரை கடைக்குட்டிக்கு 12 வயது என்பதில் பெருமையா தெரியாது. மனம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தது 13:50 க்குப் போகும் ரயிலில்தான் பயணம் என்று. ரயிலிற்கு மாதாந்த பிரயாணச்சீட்டு இருந்ததால் ஒரு ரூபாய் மிச்சம். மனம் ஒரு ரூபாய்க்கு என்னசெய்யலாம் என கணக்குப்போட்டுக் கொண்டது. பஸ்ரான்டிற்குப் போனால் ராஜா கூல்பார் அருகில் உள்ள புத்தகக்கடையில் பி டி சாமியின் பேய்கதை, தமிழ்வாணனின் சங்கரலால் அல்லது முத்து கொமிக்ஸ் சிஜடி மூசாவின் சித்திர துப்பறியும் நாவல் வாங்கலாம். பத்தகத்தை நாளைக்கு வகுப்பிற்கு கொண்டுவந்தால் நான்தான் ஹீரோ. பாடசாலைக்கு மனதார ஆசையுடன் செல்லும் நாட்கள் பரீட்சை முடிந்ததிலிருந்து ரிப்போட் தரும் நாள்வரைதான். படிப்பு கொஞ்சம் மண்டையில் ஏறுவதால் ரிப்போட் பற்றிய பயமில்லை. முதலாவதாக வந்தால் அது போணஸ் வராவிட்டாலும் 75% சராசரிக்கு மேலிருந்தால் வீட்டில் கும்பாபிஷேகம் இல்லை. இந்தமுறை செவ்வாய் முதல் வெள்ளி வரை ஜாலிதான். அம்மாவும் இந்நாட்களில் 25 சதம் தருவா கணக்கு கேட்கமாட்டா. ஜீவா டேய்! குரல் என்னை நிஜத்துக்குள் தள்ளியது. அந்த வயதிலும் வாட்ட சாட்டமான நண்பன். மாபிள் விளையாட்டில் விண்ணன் ஆனால் அவனால் மாபிள்களை பாடசாலைக்கு கொண்டு வரமுடியாது வென்றதை வீட்டிற்கு கொண்டு போகவும் முடியாது. எனது மாபிள்களில் விளையாடி வென்று தருவான். என்னிடம் அப்போது 300க்கும் மேல் மாபிள்கள் இருந்ததின் சூத்திரன் கண்ணன் இவனே. தன் உடல்வாகுவை வைத்து வாக்குவாதங்கள் முற்றி அது குருஷேத்தரமாகும் தருணங்களில் எல்லாம் என்னை காப்பாத்தும் நண்பர்கள் இருவர்களில் ஒருவன். மற்றவர் இரு வகுப்பு கூட ரயில் சிநேகிதம், அவர் ஜெயசிக்குரு போன்ற பெரிய தாக்குதல்களிற்கு மட்டும். வாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை சின்னத்தம்பி (மன்னிக்கவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது பிழையிருந்தால் பதிவிடவும்) சுடச்சுட கடலட் தருவார் என்றான். பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்) ரீ வாங்க மட்டுமே இதுவரை தனிய கன்ரீனுக்கப் போன நான் முதல்முறை எனக்காக. மனம் ஏங்கியது அதுவும் கையில் ஒரு ரூபாயுடன். சரி என்றேன். எமது பாடசாலையின் கன்ரீனை மக்டொனல் மாதிரி கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. விளையாட்டிற்கு கூட ஒதுங்காத பாழ் மண்டபம். அது 100 வருடத்திற்கும் மேலானது. தொல்பொருள் ஆராட்சியாளர்கள் கண்டால் தோண்டி விடுவார்கள். 3ம் வகுப்பிருக்கும் என ஞாபகம் அண்ணனுடன் அந்த கன்ரீனுக்குள் முதல் தடவையாக போனது. அம்மா சுகயீனம் காரணமாக அண்ணாவிடம் காசு கொடுக்க நானும் சேர்ந்து இடியப்பம் சம்பல் சொதியுடன் சாப்பிட்ட நினைவு. அண்ணனும் மறக்காமல் கடைசி தம்பியை வெருட்டி விட்டே போனர். வீட்டில் கழியலறைக்கு குசினியையும் தாண்டிப் போகவேண்டும். லைற் சுவிட்ச் கூட விராந்தையின் முடிவில்தான். அம்மா குசினி அலுவல் முடிந்து லைற் ஒவ் பண்ணினால் மூத்திரம் போக கூட உதவி தேவையான வயது. இது பத்தாது என்று எலி ஓடினாலே பேய் என பயமுறுத்தும் அண்ணன்மார். கடைசியாகப் பிறந்தாலே இதுதான் தங்கள் பயமெல்லாத்தையும் என் தலைமேல் போட்டுவிட்டு தாங்கள் பயமில்லாதவர்கள் போல நடிப்பார்கள். அப்போதுதான் கன நாட்களின் பின் மழை, லயிக்கத் தெரியாத வயதில் கூட புழுதி மணம் மனதை வருடவே செய்தது. கால்கள் பேய்குகை நோக்கி நண்பனின் தைரியத்தால் நடந்தன. இருண்ட குகை மாதிரியே இருக்கும் எங்கள் கன்ரீன். அண்ணன் வேறு இரவில் பழைய இறந்த அதிபர்கள் வந்திருந்து கதைப்பார்கள் என்று சிறுவயதிலேயே பயமுறுத்தியிருந்தான். பூதத்திற்காக (ஜெயரட்ணம் மாஸ்டர் மன்னிக்கவும்) பாதாளகுகைக்குள் போனதை தவிர தனிய போனதில்லை. முழு வகுப்பின் முன் "ஜீவா கன்ரினில் எனது பெயரைச் சொல்லி ரீ வாங்கி வா" என்றால் ட்டனென்றா சொல்லமுடியும். பயம் என்று சொன்னால் எனது மரியாதை என்னாவது. நாங்களெல்லாம் அப்ப கவரிமான் மாதிரி. பயப்படாத மாதிரி உள்ளே போய் ரீ சொல்லிவிட்டு வெளியே வந்து நிப்பன். அப்ப உள்ளே சின்னத்தம்பி தவிர யாரும் இருக்க மாட்டார்கள். சின்னத்தம்பி சூழலுக்கேற்ற நிறம் தனியாக தேடிப்பிடிக்க வேண்டும். கூப்பிட்டதும் போய் வாங்கி வருவேன். இந்தப் பேய்குகைக்குள் நானும் நண்பனும். மனதில் நண்பனின் உடல்வாகுவின் மீது மிகுந்த நம்பிக்கை. ஆபத்தாந்தவன் அவனே. இப்போது பேய்குகைக்குள் நாங்கள் மற்றும் சின்னத்தம்பி மட்டுமே. சின்னத்தம்பி வெளிச்சத்தில் மட்டும் தெரிவார். யார் பணம் செலுத்துவது என்ற சண்டையில் நான் வென்றுவிட, கம்பீரமாக ஓடர் செய்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தோம். நாற்காலி கூட ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்கின் பேய் படங்களில் வருவது போல கிரீச் என்ற சத்தத்துடனேயே இருக்க விட்டது. பயம் சிறிதளவாக குறையவே சின்னத்தம்பியின் மேல் நோட்டம் போனது. அவர் கட்லட் செய்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் ஆயத்தமாக குழைத்து வைத்திருந்தார். உருட்டி கொதித்த எண்ணையில் போட்டார். மணத்தில் பத்தடி தூரத்திலிருந்த மூக்கு துள்ளியது. அகப்பையின் பின்புறத்தால் முதுகையும் சொறிந்து கொண்டார். மணத்தில் லயித்திருந்த மனம் முதுகை சட்டை செய்யவில்லை. தம்பீங்களா! மறுபடியும் நிஜத்தில். அவர் முதுகு போலவே பல மேடு பள்ளங்களுடன் ஒரு அலுமீனியத்தட்டு அதில் இரண்டு கட்லட். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. நான் பார்த்த சுவைத்த கட்லட்கள் வடையை விட சிறியன ஆனால் இது போண்டா அளவில் இருந்தது. மனதில் சிறு சந்தேகம் போண்டாவா என்று. கொதிக்க கொதிக்க வைத்த முதல் வாய் கட்லட்தான் என்றது. இப்போது பேய்குகை பயம் போயிருந்தது. உருசி நாக்கில் இருந்தது. டேய் நாளைக்கும் வருவோம் என்ரை முறை என்றான் நண்பன். சரி என்றேன் மனதுக்குள் இருந்த பயத்தை வென்றது இந்த உலகையே வென்றது போலிருந்தது. ஒரு கட்லட் 20 சதம் இருவருக்கும் 40 சதம். மிகுதி 1.60 இல் அம்மா ஒரு ரூபாவை எப்படியும் புடுங்கி விடுவா. 60 சதம் இன்னுமிருக்கு 3 கட்லட்டிற்கு. பி.டி.சாமி, சிஜடி மூசா, தமிழ்வாணனின் சங்கர்லால் எதுவுமே பாதாளக் குகை சின்னத்தம்பியின் கட்லட் அனுபவத்திற்கு இணையாகுமா. மறுபடியும் நாளைய கட்லட்டிற்கு மனது ஏங்க பாடசாலையிலிருந்து வெளியேறினோம். இது எனது அனுபவத்தின் பதிவு யார் மனத்தையும் புண்படுத்தவல்ல. வேலும்மயிலும் என்ற பெயர் சின்னத்தம்பியாக மாற்றப்பட்டுள்ளது.
 34. 16 points
  யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவனிக்கு உரை. வீராப்புக் கொள்ளும் வேழமாய் வளர் வேதனைகள் தீர்க்கும் ஞாயிராய் ஒளிர் கனிவுன் உடனிருத்தி காதல் நெய் கடிதகற்றும் போதெல்லாம் மோதல் செய் இனியேதும் உன்போல் இருக்காதென்பேன் இணையவெளி உன்னிருக்கை உடையாதென்பேன் தனிமையிலே நின்றாலும் தமிழால் போற்றி அமிழ்தினிய பாட்டால் வாழ்த்துச் சொல்வேன் இனியனே இளையனே இசைதரும் யாழனே – நான் பாயிரம் பாடுவேன் வாழ்க நீ பல்லாண்டு.
 35. 16 points
  வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ? சக்தியின் பெருவடிவே சங்காரத் திருவுருவே சிம்ம வாகனியே சிங்காரப் பெருந்தேவி சும்மா கிடக்கிறாயே.... உன் சுயம் எங்கு போனது? வேட்டை ஆடுகிறாய், வீதியுலா வருகிறாய் பாட்டம் கிடந்துழலும் பிள்ளைகளைப் பாராமல் மாற்றாரை உன் மண்ணில் மகிழ்ந்துலவ வைக்கிறாய் உனக்கென்ன கொலுவிருக்கும் இடமெல்லாம் கொண்டாடப் பெருங்கூட்டம் பட்டுப்பளபளப்பும், தங்கத் தகதகப்பும், பளிச்சென்று ஒளிவீசும் வைரச்சிலுசிலுப்பும், வெள்ளிக் கொலுசும், – வீரத் திருவாளும் , அள்ளி முடித்த கார்கொண்டை அலங்கரித்த வெள்ளி, பிறையும், துள்ளிக் குதித்தொளிரும் மின்னி மிடுக்கும் காணக்கண் போதாது அம்மையே….- ஆயினும்........ கள்ளச் சிரிப்பொளிரும் – உன் வதனக்கோலம் முள்ளாய் உறுத்துதடி முத்துமாரியம்மையே முன்னே குறி சொல்வாய் மூத்தோர் வழி உரு வருவாய் ஊர் காப்பாய் உலைக்களப் பிள்ளைகளின் நெஞ்சக்கூட்டுக்குள் நிமிர்ந்திருப்பாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனைத்தும் ஆனவள் நீ தர்மத்தின் தலை காக்கும் உக்கிர வடிவே – இன்று அதர்மம் கூத்தாடுதடி உலக மகாதேவி ஊமைத்தனம் ஏனடி? ஆதிசிவனையே... காலடியில் மிதித்தவள் நீ - உன் பிள்ளையர் ஊழிப்பெருந்துயரில் உயிர் கிழிந்த பொழுதில் சாந்த சொரூபியாய் சாய்மனை கொண்டதேன்? பழிகாரி, மலைநீலி, காக்கும் குணம் கைவிட்ட கருமாரி பார்க்கும் உன் ஒரு பார்வை தீர்க்கும் துயர் கோடியென்று பூசித்த சனத்தையெலாம் சதிமேவித் தின்னப் பார்க்காதிருந்தவளை ஆத்தா என்றழைக்க அழுகைதான் எழுகிறது. வேதப் பொருளே! வெற்றுச் சிலையா நீ காதிறுக்கிக் கட்டிய கசாப்புக் கடையினளா? மீதியிருக்கிறோம் இன்னும் நாதியற்று…. உலகத்தாயே ஒளிகாட்டு. சோதிப் பெருவெளியை எம் இருள் களைய ஏவி விடு. வெளிச்சத்தைப் பாய்ச்சிவிட்டு – நீ ஒய்யார ஊஞ்சலாடு. வெற்றிப் பூக்கள் கொய்து வீரப்பாமாலை கட்டி – உன் மஞ்சத் தாலாட்டில் மனமுருகப் பாடுகிறோம்.
 36. 16 points
  வணக்கம் உறவுகளே மல்லயூரானின் கவதை வரிகளை நண்பர் சுண்டலும்,மல்லயூரானும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதை பாடலாக இசையமைத்து இங்கு இணைக்கிறேன் .......... அத்துடன் இதுதான் முதல் முதல் நான் இசையமைத்த [சினிமா] காதல் பாடல் .இது வரை சில எம் தேசம் சம்பந்தமான பாடல்களுக்கே இசை வழங்கி இருந்திருந்தேன் ... நெடுக்ஸ் அண்ணா மன்னிக்கவும் உங்கள் வீடியோ காட்சிகளை என்னால் டவுன்லோட் பண்ணமுடியவில்லை .........அதை டவுன்லோட் செய்யும் முயற்சியில் இருக்கிறேன் ........பின் வீடியோ வடிவமாக இங்கே இணைப்போம்..........நன்றி பாடகர்;- ராஜீவ் ஒருங்கிணைப்பு;- சுண்டல் வரிகள் ;-மல்லையூரான் இசை ;- தமிழ்சூரியன்
 37. 16 points
  ஓ... காலனே, இந்த வேசம் போடாத வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன் அதுவரைக்கும்....
 38. 15 points
  ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். சில மாதங்கள் கழித்து........ ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க.. அது ஒன்னுமில்ல.. எங்க பார்ப்பம்.. அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ.... ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. (இது ஒரு உண்மையின் தரிசனம்)
 39. 15 points
  இந்த உலகம் தொழிநுட்பத்தில் வளர்கிறது நாமும் அதன் போக்கில் காலத்துக்காலம் அதில் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈர்க்கப்பட்டு அதன் பின்பே சென்று கொண்டிருக்கிறம் என்பத விட ஓடிக்கொண்டிருக்கிறோம். நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி நம்மை எவ்வாறு அடிமையாக்கிறது நமது வாழ்வை அது எப்படி விளையாடுகிறது என்பதே இந்த கதை. இலங்கை போக்குவரத்துசபை பஸ் மட்டும் கைபோட்டால் நிற்குமா என்ன? நிற்கவில்லை அந்த கொழுத்தும் வெயிலில் மீண்டும் அடுத்த பஸ்ஸ்சுக்காக காத்திருந்தேன் அந்த மொபலை நொண்டிக்கொண்டே இந்த போணும் இல்லையென்றால் நமக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் சாமி. என்ற நினப்பில் பஸ் கோர்ண் சத்தம் கேட்டது நிற்பானா ?மாட்டானா? என்று கைய போட்டாலும் அங்கே இறங்கும் பயணிக்காக நிற்பாட்டினான். உடனே ஏறிவிட்டன் பஸ் மெதுவாக நகர தொடங்கியது நான் ஏறியவுடனே என்னவோ நமக்கும் மட்டும் எல்லாம் மெதுவாத்தானே நடக்குது. என்ற நினைப்பு அடிக்கடி வந்து போகும் இருந்தாலும் பஸ்ஸுக்க அடிக்கடி என்னை ஒரு நிலைப்படுத்துவதென்றால் அந்த ஹெட்போணும் பாட்டுத்தான் இல்லையென்றால் ஆயிரம் கதைகளை காதில் வாங்கி போட்டுக்கொள்ள வேண்டி வரும். இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளினால் என்பதற்க்காக அதை ஏறிய உடன் தூக்கி மாட்டிக்கொள்வேன். பக்கத்தில் பெண்கள் இருந்தால் எங்கே கைபட்டாலும் குற்றம் என்று சொல்லும் பெண்கள் எழுந்து சீற் கொடுத்துவிட்டு நின்றாலும் உரஞ்சுகிறான் என்ற குற்றம் வேறு என்ன செய்வது எங்கேயாவது ஒரு மூலையில் சுவரில் ஒட்டிக்கொள்ளும் பல்லி போல உட்கார்ந்து வேலைக்கான பயணத்தை தொடர்வது வழமையாகும். அன்றைய நாளும் பக்கத்திலிருந்தவர் அந்த நேர காற்றின் சுழற்ச்சிக்கு நித்திரை செல்ல அடிக்கடி வந்து முட்டுக்கொடுத்துவிட்டு போனார் தலையால். நமக்கு மட்டும் இரண்டு பக்கமும் அடிதானே என நினைத்து அவரை சாய்த்து விட்டு திரும்பும் போது செல்வியை அந்த வங்கியில் கண்டேன். அது பாதையோரம் என்பதால் அவளை முழுமையாக பார்க்க கிடைத்தது இருந்தாலும் சந்தேகம் இவள் லண்டன் போனவள் மீண்டும் எப்படி வந்தாள்? திரும்பவும் என்ற யோசனை ஓடிகொண்டு போனது மறக்க முடியாமலும் நினைக்காமல் இருக்க முடியாமாலும் என் மனதில் இருக்கும் அவள்முகம். அவளைக்கண்டதும் அவளைப்பற்றி கேட்க ஆசை தோன்றியது. அவளது வங்கியில் வேலை செய்யும் இன்னொரு அக்கா லதா. லதா அக்காவை அழைத்தேன் தொலைபேசியில் வணக்கம் அக்கா வணக்கம் சொல்லுங்க ஜெய் என்றார் அவரும் அக்கா செல்வியை போல ஒருவளை உங்க வங்கியில மற்ற கிளையில பார்த்தான் வந்துவிட்டாளா அவள்? இல்லை வேற யாருமா அக்கா?? அவள் தான் தான் தம்பி வந்துட்டாள் வந்து ரெண்டு மாசத்துக்கு மேலாகுதே உனக்கு தெரியாதா என்ன? இல்லை அக்கா எனக்கு தெரியாது இன்று அவளை போல ஒருத்தியை கண்டேன் சந்தேகம் அதான் உங்களிடம் கேட்டேன் ஓகோ நாளைக்கு நேரம் இருந்தால் வீட்டுக்கு வா முழுவதும் விபரமாக சொல்கிறேன் என்றார் அவரும் ஒரு பெண்ணைப்பற்றி அறிவதென்றால் ஒரு பெண்ணிடம் கேட்டால் தானே முடியும். அவரின் அடுத்தநாள் சந்திப்புக்கு காத்திருந்தாலும் அவளைக் முதன் முதலாக கண்ட நாள் கண்முன் பிரள நினைவு முன்நோக்கி சுழன்றது எனது தொழிலுக்கு வங்கி தேவைப்பட்டது காசுகள் அறவிட்டால் அதனை வைப்பு செய்ய வங்கியை நாடுவது வழமை அன்று சரியான கூட்டம் வேறு. வரிசை வரிசையாக ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் வங்கியில் வரிசையில் நிற்கலாம் தற்போது வங்கியில் அத்தனையும் தேர்வு செய்து எடுத்த அழகிய பெண்கள் அவர்களும் அழகாக குட்டை பாவடை வங்கியின் ரீ சேட் அணிந்து இன்னும் பல வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் தலையை ஆட்டாத ஆடு போல் வரிசையில் நின்றேன் அன்று தான் பார்த்தேன் அவள் நெஞ்சில் அங்கே அவளது அழகான பெயர் அன்புச்செல்வி என்ற பெயரும் பதவியும் பொறித்த அடையாள அட்டை மாலையாக தொங்க அப்படியே அவள் போண் நம்பரும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை இருந்தாலும் அன்று அவளை பார்த்த பின்பு ஓர் ஆசை. எத்தனை பெண்களைப்பார்த்தாலும் கூட ஒரு சில பெண்களைப் பார்த்தவுடன் இவர் நம்க்கு வாழ்க்கை துணைவியாக இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். அந்த உணர்வே என்னை தினமும் அந்த வங்கிக்கு அழைத்து சென்றது சில நாட்களில் அவள் இருப்பாள் கவுண்டரில் சில நாட்கள் அவளை வேறு பிரிவில் இருப்பாள் எப்படியாவது அவளிடம் விருப்பம் கேட்க வேணும் என்ற ஆசை இருந்தாலும் ஒரு வங்கியில் வேலை செய்கிற பொண்ணுடன் நான் எப்படி கேட்கிறது என்ற தாழ்வு மனப்பாண்மை என்னிடம் குடிகொண்டே இருந்தது இருந்தாலும் அவளும் ஓர் பெண்தானே கேட்டால் என்ன பிரச்சினை என்றும் தோன்றியது யாரை தூது விட்டு கேட்கலாம் என்று பார்த்தால் எந்த முகமும் தெரிந்த முகமாய் இல்லை. அப்போது லதா அக்கா என்ற ஒருவரைக்கண்டேன் அவர் என்னுடன் வேலைசெய்யும் நண்பனின் அக்கா ஆஹா நல்ல சந்தோஷம் அவர் வேற பிரிவில் அங்கேயே இருந்திருக்கிறார் அவரைக்கண்டதும் அக்கா என்ன இங்க இப்ப பிரான்ச்ஞ் மாற்றிப்போட்டானுகள் தம்பி ஒரு வங்கியில ஒழுங்கா வைக்கமாட்டானுகள் குறிப்பிட்ட காலம் காலம் வேலை செய்த்து மாற வேண்டியதுதான் என்றார் அக்கா ஆர் அந்த பிள்ளை? ஓ அதுவா உனக்கு செட்டாகாது அது லண்டன் போகப்போதாம் என்று சொல்லி திரியுது தம்பி ஓ அப்ப வெளிநாட்டு பார்ஷல் என்று சொல்லுறியள் என்ன?? உங்கபாஷையிலாடா அது? ம்ம்ம்ம் நாங்க இப்ப அப்படித்தான் சொல்லுற வெளிநாட்டுக்கு போற பிள்ளைகளை. பேஷ்புக்கு லவ்வாம்டா ஓ அப்படியா சரி அக்கா நான் வாரன் பிறகு சந்திக்கிறன். என்று எனது தொலை பேசி தொல்லை கொடுக்க நான் அந்த வங்கியை விட்டு நகர்கிறேன். காசுகளை அறவிட இப்படி நாழும் பொழுதும் போனது அவளை மறப்பதா விடுவதா என ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் விருப்பம் இல்லாவளை தொடவே கூடாது அதிலும் அவள் இன்னொருவனை விரும்பும் போது நாம் அவளை நினைக்கவே கூடாது என்று அந்த வங்கி கிளையை அவளுக்காக மறந்தேன் . பல மாதங்கள் கழிந்து விட்டன அவளை மறந்து .அடுத்த நாள் காலை லதா அக்கா வீட்டுக்கு சென்றேன் அக்கா அவள் கதையை முழுமையாக சொன்னார் லதா அக்காவிடம் முழுமையாக சொல்லி இருக்குறாள் அவள். அது அவள் மனச்சுமையை குறைத்து வைத்திருக்கும் போல். முகநூலில் அவன் போடும் படங்களையும் இடங்களையும் பார்த்து ரசித்த அவளுக்கு அங்கு செல்ல ஆசை வந்திருக்கிறது அவன் போடும் படங்களுக்கு இவளும் லைக் , கொமன்ஸ் போட்டு வந்திருக்கிறாள்டா ஒரு நாள் அவன் இவளுக்கு மெசேச் போட்டு இருக்கிறான் ஆனால் இவள் ரீப்பிளே பண்ணல அவனும் நாள்தோறும் மெசேச் போட்டு வந்திருக்கிறான் ஒரு நாள் இவளும் ஏன் எனக்கு மெசேச் பண்ணுறீங்கள் நாம் நண்பர்களாக இருப்போமே முகநூலில் என்று சொல்லி இருக்கிறாள். இவளும் மெசேஞ்சில் ம் நண்பர்களாக இருக்கிறோம் தான் ஆனால் நான் உங்களை நான் படத்தில் பார்த்தேன் மிக அழகாக இருக்குறீர்கள் வங்கியில் வேலைபார்க்கிறீர்கள் ஆனாலும் உங்கள் குரலை கேட்கவில்லையே ஏன் என்னுடன் கதைத்தால் என்ன பிரச்சினை. நான் ஒன்றும் கெட்டவன் இல்லையே என்று சொல்லி இருக்கிறான் பதிலிற்கு உவள் நான் உங்களை கெட்டவன் என்று சொல்லவில்லையே என்று சொல்லி இருக்கிறாள். இவள் அதன் பிறகு தொடர்பு எடுக்கவில்லை. அவனும் பிறகு ஓர் நாளில் அவன் குடும்ப போட்டோவை அனுப்பியிருக்கிறான் இவளுக்கு இது என்னுடைய குடும்பம் எனக்கு பெண் தேடுகிறார்கள் உனக்கு விருப்பம் என்றால் நான் உன்னை கல்யாணம் கட்டலாமா? அதுவும் நம்ம இலங்கை தமிழ் பெண்ணைத்தான் நான் கல்யாணம் கட்ட விரும்புறன் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் கூடியளவு விரைவாக பதிலை சொல்லு என்றும் அனுப்பியிருந்தான் அந்த தகவலை பார்த்த அவளுக்கு நம்ப முடியவில்லை அந்த செய்தியை என்ன செய்வதென்ற யோசனை ஓடியது அவளது அம்மாவிடம் சொல்ல அம்மாவோ ஆள் எப்படி ஒருக்கா காட்டு என்று பார்த்தாள் பார்த்தால் நல்ல பொடியன் மாதிரித்தான் இருக்கிறான் ஆரும் ஆட்களிட்ட விசாரிக்கணுமே விசாரிக்காமல் எப்படி பதில் சொல்ல்வது ஆ.. ஆ கொஞ்சம் பொறு அப்பாவும் வரட்டும் அவரிட்டயும் கேட்பமே ஐயோ எனக்கு பயமா இருக்கிறது சும்மா இரடி பயப்படாத வெளீநாடு என்றால் சும்மாவா அங்க போய் நல்லா இரு இப்ப ஊருக்க வெளிநாட்டில் ஆராவது சொந்தக்காரர்கள் இருந்தால் தான் ஊரில மதிக்கிறாங்கள். மாலை நேரம் அப்பா வருகிறார் இஞ்சாருங்கோ என்ன சொல்லு நம்ம செல்வியை ஒரு பொடியன் போணில பாத்திருக்கான் கல்யாணம் கட்ட கேட்டிருக்கான் என்ன சொல்லுற அதான் இப்ப புதுசா பேச்சு புக்கு என்று இருக்காமே அதுல பழகினவனாம் . உனக்கு லூசா? உன்ற மகளுக்கும் லூசா? ஆள் ஆரெண்டு தெரியாது என்ன சாதியெண்டு தெரியாது ஊர் தெரியாது குலம் என்ன கோத்திரம் என்ன என்று தெரியாது இங்க நல்ல வேலையில் இருக்கும் போது என்னத்துக்கு வெளிநாடு கேட்குதாம். நாளைக்கு எதுவும் நடந்தால் யார் அங்க போய் பார்ப்பது சொல்லு ?? ம்ம் ஆனால் அவளுக்கும் வெளிநாடு என்றால் விருப்பம் தானே ம் அதுக்காக அவங்களை விசாரிக்காமல் எப்படி பிள்ளையை கட்டிக்கொடுப்பது ? விசாரிப்பம் விசாரிச்சு சரி வந்தால் கட்டிகொடுப்பம் எதுக்கும் அவளிடம் ஒருக்கா கேழு நீ சரியா ம் கேட்கிறன் ஏன்டி பிள்ளை உனக்கு சம்மதம் தானே ம் சம்மதம் பிறகென்ன. நம்மட ஆட்களிட்ட அவங்கள் போட்டோவை காட்டி ஆட்கள் எப்ப்டியென்று விசாரியுங்கள் அப்பா போட்டோவ காட்டு அப்படியே என்ற போணுக்கு அத அனுப்பு அவள் அப்பாவோ போட்டோவை எடுத்துக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். சகல விசாரிப்பின் பிறகு அவரும் ஓகே சொன்ன பிறகு அவனுக்கு இவள் எனக்கு சம்மதம் என சொல்லி இருக்கிறாள் அதன் பிறகு பேச்சுக்கள் ஆரம்பமாகின புதிதாய் வருகை தந்த வட்ஸப்பும் வைப்பரும் குரல்களை பரிமாறி ஆசைகளை நாடுகடத்தி அழைப்பில் உருகிநின்றார்கள் இருவரும் கல்யாண நாளை எதிர்பார்த்து நாள் நெருங்கியது குடும்ப அங்கத்தவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஊருக்கெல்லாம் சொல்லாமல் இந்தியாவில் கல்யாணம் நடத்தி முடித்து வைத்தார்கள் ஆனால் அங்கு குடியுரிமைக்கான சட்ட அங்கீகாரம் கிடைத்த பின்பே இவளை எடுக்க முடியும் என்று சொல்லி போனவர்கள் ஒரு வருடம்முடிந்த பின்பே அவளை எடுத்தார்கள் அங்கு இவளும் வேலையை தற்காலிகமாக விட்டு விலகுவதாக வங்கிக்கு கடிதம் கொடுத்து விலகிவிட்டு போனவள் தான் பிறகு அங்கு போனவளுக்கு நடந்தது !!!! செல்பி வரும் ........................................
 40. 15 points
  அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை. அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை. கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட. எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி. நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம். பத்து வயசிலையே அந்த அம்மன் கோவிலில் வைத்து "சிவ தீட்சை" எடுத்துவிட்டேன். ஐயர் பூசையாக்கும் போது கேட்டுக்கேட்டே எனக்கும் சில மந்திரங்கள் அத்துப்படி. அந்தளவுக்கு அம்மாளாச்சி என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டா. ஆனால் அப்பாவுக்கு அப்படியல்ல, அப்பாவின் முன்னோர்கள் வழி வந்த கோவில் என்று அப்பாவும்,அவர் சகோதரர்களும் சொல்லுவார்கள். பிற சாதியினர் செல்வதற்கு எல்லாம் தடைவிதிக்கப்பட்டிருந்த காலங்கள் அவை வெளியில் இருந்து தான் கும்பிடலாம், கோவிலுக்குள் நுழைவதோ,சுவாமி தூக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்தது, மீறினால் தண்டனைகளும் வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பிறகாலத்தில் இயக்கங்களின் வருகையோடு பல மாற்றங்கள் நடந்தது அப்படித்தான் இங்கும் "கிரகப்பிரவேஷம்" என்ற பெயரில் புலிகளால் அனைத்து சமூகத்தவர்களும் கோயிலுக்குள் செல்லவும், திருவிழாவின் போது ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு திருவிழாவும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இதை முன்னின்று செய்தது கூட ஒரு வகையில் எமக்கு பெரியப்பா முறை தான், அவர்களே திரும்பவும் கோவில் நிர்வாகத்தை பொதுச்சபையைக் கூட்டி திர்ம்ப வந்தது போன்ற பல சம்பவங்களால் அப்பா கோவிலுக்குள் போவதே இல்லை. எப்போதாவது வாசலில் நின்று கும்பிட்டு விட்டு வந்திடுவார். ஆனால் என்ரை அம்மாளாச்சியும் கன ஷெல்லடியளை எல்லாம் தாங்கினவாவாம். எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை தானாம் இருந்ததுகள், அப்ப ஆமிக்காரன் ஆட்லறி அடிச்சு எவ்வளவோ சனம் உடல்சிதறிப்பலியானார்களாம். எல்லாற்றை சடலமும் பக்கத்திலை இருந்த பள்ளிக்கூடத்திலையும், கோயில் மடத்திலையும் தான் புதைச்சாங்களாம். அந்த கொடுமையுக்குள்ளையும் கனக்கச் சனம் கொண்டுவந்த நகையள், பிணங்களிலை இருந்த நகையளைக் கூட கொள்ளையடிச்சதுகளாம். அப்படி அம்மாளச்சியும் தன்ரை வாசல்லை கனக்க கண்டுபோட்டா. அதே போல அம்மாளாச்சியைப் பற்றிய கதைகளுக்கும் கூடக் குறைவில்லை. அதுக்காக நான் வரலாறுகளை எல்லாம் சொல்ல வரேல்லைப் பாருங்கோ. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இளைஞர்களிடம் தான் கோயில் நிர்வாகம் இருந்தது. அப்ப தான் பொடியள் கனகாலத்துக்குப் பிறகு கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்வதற்காக பல திட்டங்கள் போட்டிருந்தார்கள். கேணிகட்டுவது பூங்காவனம் கட்டுவது சித்திரத் தேரும்,மணிமண்டபமும். அன்னதான மடம் இப்படிப் பல.. கும்பாபிசேகத்துக்காக இரவு,பகலா பொடியள் வேலை செய்துகொண்டிருந்த காலம். ஒருநாள் எல்லாரும் கோயிலடியிலை படுத்திருந்திருக்கிறாங்கள். விடிய எழும்பிப் பார்க்க குகனை மட்டும் காணேல்லையாம். தேடிப் பார்க்க கனக்கத் தூரம் தள்ளி ஒரு கடை வாசலிலை ஒவ்வொரு படியிலையும் தலை மேலை,கால் கீழை இருக்கிற மாதிரி கிடத்தி இருக்காம். அவன் நல்ல நித்திரையாம். "அம்மாளாச்சி தான் அங்கை தூக்கிக் கொண்டுபோய் போட்டிட்டா" என்று சொல்லுவாங்கள். அதை விட சாமப் பூசை முடிஞ்சதும். கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன் நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள். சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான். ஆனால் எனக்கு அப்பவே இது உண்மையா என்று பார்க்க வேணும் என்று ஆசை. என்னை அக்கா தான் எப்பவும் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவாள். ஒரு நாள் கோயில் திருவிழா நேரம் நான் அண்ணாட்டை கடைக்குப் போறேன் என்று சொல்லிப்போட்டு சுவாமி வெளிவீதி வர நான் ஓடிப்போய் உள்ளை படுத்திட்டன். "அம்மாளாச்சி வருவா வருவா என்று பார்த்தால் வரவே இல்லை, சலங்கை சத்தம் கூடக் கேட்கவே இல்லை" பிறகு என்ன நடந்தது என்றே தெரியலை படுத்திட்டன். யாரோ என்னை எழுப்புற மாதிரி இருந்திச்சுது அம்மாளாச்சி தான் வந்திட்டா "வரம் கேட்டிட வேண்டியது தான்" போல என்று பயந்து, நடுங்கி எழும்பிப் பார்த்தால் அண்ணாவும்,அக்காவும், கோயில்லை மணி அடிக்கிறவனும் நிக்கிறாங்கள். தொடரும்..
 41. 15 points
  என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே என்ன மாயம் நீ செய்தாய் நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா தமிழைத் தாயென்று போற்றுதனால் உனையும் நான் பெண் என்பேன் அழகிய பெண்ணே நீ இத்தனைநாள் என்முன்னே உன் முகம் காட்டாது எங்கே மறைந்திருந்தாய். இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார் உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால் உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய் திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால் உலகில் பிறந்திட என்ன தவம் செய்தோமடி உலகில் நாம் உள்ளவரை உன்னை மறவோமடி
 42. 15 points
 43. 15 points
  போக்குவரத்து, நீங்கள் கனக்க யோசிக்கிறீங்கள்... புரிந்து கொள்கின்றேன். ஆனால்... சொன்ன வார்த்தை, தவறப் படாது. நீங்கள் அறிவித்த பரிசில்களை கொடுத்தே... ஆக வேண்டும். மீறி, யாரும் எதிர்ப்பு தெரிவித்தால்.... யாழ் களமாளுமன்றம் தனது, நடவடிக்கையை... (கீ) போட்டில் எடுக்கும்.
 44. 14 points
  அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை....... எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017 (ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்) என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது. இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்கனடா விமானம் எம்மைச் சுமந்தபடி மேலெழும்பியது. எம் பிரயாணத்தை வழிநடத்தும் பொறுப்பாளர் திரு. அன்ரன் பிலிப் அவர்கள் வழி நடத்துதலுடன் 48 யாத்திரிகர்கள் பயணமானோம். நாம் சென்ற விமானம் பிராங்பேட் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தரித்து லூத்தான்சா விமானமூலம் மாலை 7 மணியளவில் அம்மான் விமான நிலையத்தை வந்தடைந்தோம். புனித பூமியில் கால் பதிக்கும் பொழுதே எமக்குள் கிளர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாது. எமக்கென ஆயத்த நிலையிலிருந்த வாகனம் மூலம் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு தயார் நிலையிலிருந்த உணவை உண்டு ஏற்கெனவே எமக்கென பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் இருவர் இருவராக உறங்கி ஓய்வெடுத்தோம். மறுநாள் 25ம் திகதி காலை 5 மணிக்கே தொலைபேசி அலாரம் எம்மை துயிலெழுப்பியது. 6 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக 7.30க்கு அனைவரும் வாகனத்துள் இருந்தோம். ஒவ்வொரு முறையும் வாகனத்துள் ஏறும்பொழுதும் இறங்கும் பொழுதும் எமைக் கணக்கெடுத்து எமக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் இருந்து மதிய உணவு, திருப்பலிகள், செபமாலை, மன்றாட்டு என்று அனைத்தையும் தன் 11 வருட அனபவத்தின் மூலம் எவ்வித குறையுமின்றி திரு. அன்ரன் பிலிப் அவர்கள் பார்த்துப் பார்த்து செய்திருந்தார். எம்முடன் பயணித்த ஒவ்வொரு சகோதரர்களும் அன்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்து கொண்டனர். வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்குமிடமெங்கும் மலைக் குன்றுகளும் பள்ளத்தாக்குகளுமாக உயிரினங்களற்ற பாறைத் தொடர்களே காட்சியளித்தன. உலகத்தின் அதிசயங்களுள் ஒன்றான அதிசய நகரம் பெற்றா. இதைச் சிவப்பு நகரம் என்றும் அழைப்பர். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான இந் நகரம் காலத்துக்குக் காலம் பல அரசுகளால் சுவீகரிக்கப்பட்டு வரலாற்றின் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் அரசுகளின் வீழ்ச்சியினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கைவிடப்பட்டு இன்று உலகின் அதிசயங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரு புறமும் பிரமாண்டமான பாறைப் பிளவுகளுக்கூடாக ஊடறுத்துச் செல்லும் பாதையில் நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டும். அந்த பாதையின் இருமருங்கும் பல சிற்பங்கள், கல்லறைகள், சிதைந்த மண்டபங்கள் என பல அடையாளச் சின்னங்கள் பற்றியும் புராதன கல்வெட்டுக்கள் பற்றியும் எம்முடன் வந்த ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த வழிகாட்டி விளக்கமாக எமக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து தமிழில் திரு. அன்ரன் பிலிப் அவர்களும் அதற்கான விவிலிய குறிப்புப்களையும் விளக்கங்களையும் கூறியது எமக்கு அவ்வப்போது ஆன்மிகத்தின் பக்கங்களையும் விளங்க வைத்தது. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பார்க்க வேண்டிய 28 முக்கிய இடங்களில் ஒன்றான இந்த அதிசய நகரை நாம் பார்க்கக் கிடைத்தது பெரும்பேறு. அங்கிருந்து யோவான் அருளப்பரின் தலையை ஏரோது மன்னனிடம் நடனமாடி பரிசாகக் கேட்டுப் பெற்ற அந்த புனித இடம். மன்னனின் அரண்மனை தூர்ந்து போனாலும் சிதிலமான மண்குன்றான அந்த புனித இடத்தில் இறைவார்த்தை தியானித்து செபித்தோம். ஜோர்தான் பள்ளத்தாக்கின் அழகை அங்கிருந்து பார்த்து ரசிக்கக்கூடியதாக கண்முன்னே மலைச்சரிவுகள் பரந்து கிடந்தன. மதிய உணவை பயண ஒழுங்கு செய்தவர்களே ஒழுங்கு படுத்தி இருந்ததால் எமது நேரத்தை சரியான முறையில் மேற்கொள்ளவும் திட்டமிட்டபடி இடங்களைச் சென்றடையவும் மிக உதவியாக இருந்தது. இரவு தங்குமிடம் திரும்பியதும் சுவையான போசாக்கான உணவு, வசதியான படுக்கை, உடல் அலுப்புத் தீர குளித்து சுகமான நித்திரை. அதிகாலை தொலைபேசி அழைப்புமணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததால் பதட்டமின்றி நித்திரை செய்தோம். 26ம் திகதி காலை புறப்பட்டு நெபோ மலை என அழைக்கப்படும் மலைக்குச் சென்றோம். இறைவனால் வாக்களிக்கப்பட்ட கானான்; தேசத்துக்குள் நுழைய முடியாமல் இம் மலையிலுருந்தே மோயீசன் இஸ்ரவேல் நாட்டைப் பார்த்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குதான் மோசே அடக்கம் பண்ணப்பட்டதாக நம்பப்படுகிறது. அம் மலையில் வெண்கலப் பாம்பு என அழைக்கப்படும் ஓர் இரும்பினால் ஆன கோலில் பாம்பு சுற்றி இருப்பதுபோல் செய்யப்பட்ட அடையாளச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுத்து செபித்தோம். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடம் தொடர்பான நற்செய்தி வாசகங்களும் வாசித்து தியானித்தோம். அங்கிருந்து யேறாஸ் நகரம் சென்றோம். கிரேக்க ரோம சாம்ராச்சியங்கள் அங்கு அமைக்கப் பட்டிருந்ததன் அடையாளமாக கிரேக்க ரோம மன்னர்கள் நிர்மாணித்த விசாலமான மண்டபங்கள், மாபெரும் தூண்கள், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்ற அரங்குகள், அங்காடிகள், வீதி வளைவுகள் என்று இன்னும் பல சிதைந்த சீரழிந்த சின்னங்கள் உச்ச நிலையிலிருந்த சாம்ராச்சியங்களின் எச்சங்களாகக் காட்சியளித்தன. அன்றிரவே இஸ்ரவேல் நாட்டுக்குள் ஜோர்தான் எல்லையைக் கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு இஸ்ரவேல் எல்லையை அடைந்தோம். அங்கு நாம் எம் பயணப் பொதிகளுடன் நாம் பயணித்து வந்த வாகனத்தையும் சாரதியையும் வழிகாட்டியையும் பிரிந்து எல்லைக் கடவை ஊடாக பலவித பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சொந்தமான வாகனம், சாரதி, வழிகாட்டியுடன் எமக்கென ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தங்குமிடம் சென்றடைந்தோம். வழியெங்கும் மலைச்சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கியதுபோல அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மின்ஒளியில் பளபளத்தன. இஸ்ரவேல் என்னும் இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அழகிய நாடு செழிப்புடனும் வளமுடனும் காட்சியளித்தது. எங்கும் வளமையும் செழுமையும் மிக்க ஆற்றுப் பள்ளத் தாக்குகளும் ஒவிவத் தோட்டங்களும் கூடாரங்களில் மூடி அமைக்கப்பட் வாழைத்தோட்டங்களும் தோடை முந்திரி என பலவகை பழத்தோட்டங்களும் வீதியின் இருமருங்கும் அழகூட்டின. உலகின் பல பாகங்களிலுமிருந்தும் அலை அலையாக இன மத மொழி வேறுபாடின்றி இறைமகன் இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, புதுமைகள் பல புரிந்து, மரித்து, உயிர்த்த அந்த புனித பூமியை தரிசித்து இறை உணர்வில் பெலனடைய வந்துகொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்களையும் ஆலயங்களையும் சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களையும் வீடுகளையும் காணும்போது எம் மண்ணின் ஞாபகம் அடிக்கடி மனதில் நிழலாடியது. இன்னும் சில நூற்றாண்டுகளின் பின் எமது எதிர்காலச் சந்ததியினரும் எமது வாழ்விடங்களையும் இப்படித்தான் வழ்காட்டிகளின் உதவியுடன் வந்து பார்த்து எமது வரலாற்றை அறிந்து கொள்வார்கள் என மனத்திரையில் வந்து போனது. என்றோ ஒருநாள் எம் வேர்களைத் தேடி எம் விதைகள் புறப்படும்போது அவர்களின் தேடல் இன்றைய நிகழ்வுகளாக இருக்கலாம். இன்றைய திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவரின் அருளுரையும் இத் தேடல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. நசரேத்தூரில் மரியாளுக்கு மங்களம் சொன்ன இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம், இயேசு மறுரூபமான தபோர் மலை, மரியாளின் கிணறு, இவற்றை தரிசித்து விட்டு கானாவூரில் இறைமகன் இயேசு முதல் புதுமை செய்த இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினோம். அங்கு எம்முடன் தம்பதிகளாக வந்தவர்கள்திருமண வாக்குத்தத்தம் புதுப்பித்தார்கள். விவிலியத்தின் முக்கிய இடங்களில் வழிகாட்டி மிகத் தெளிவாக விளக்கங்களை அளித்தார். இறைவழிகாட்டலுடன் எமது பயணத்தைத் தொடர திரு.அன்ரன் பிலிப் அவர்கள் உதவியாக இருந்தார். திருக்குடும்பம் வாழ்ந்த வீடு, செசாரியா பிலிப் எனப்படும் ஜோர்தான் ஆறு ஆரம்பமாகும் இடம்.(இது சிரிய எல்லையில் அமைந்துள்ளது). பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்றிரவு நாம் தங்கிஇருந்த கொட்டலில் ஒரு ஒன்றுகூடல் வைத்தோம். அந்த ஒன்றுகூடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்த இரு குருவானவர்களும் பங்குபற்றினர். அன்று எம் மாவீரர் தினமென்பதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செய்ய மறக்கவில்லை. அதன்பின் அனைவரும் தத்தமது பயண அனுபவங்களைப் பரிமாறி மகிழ்ந்தனர். திராட்சை ரசமும் பரிமாறப்பட்டது. மறுநாள் இயேசு மலைப்பொழிவு செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். அப்பம் பலுகியஆலயம், கர்ப்பநாகூம் செபக்கூடம், பேதுருவின் வீடு, முதலான புராதன இடங்களைப் பார்த்து செபித்து நற்சிந்தனையுடன் கலிலேயாக் கடலில் படகுப் பிரயாணம் மேற்கொண்டோம். படகுப் பிரயாண ஆரம்பத்தில் படகு ஒட்டுனர்கள் கனடிய கொடி ஏற்ற நாம் அனைவரும் இசையுடன் கனடிய கீதமிசைத்து கை தட்டி எமது மகிழ்வைத் தெரிவித்தோம். தொடர்ந்து இறைமகன் இயேசு பயணம் செய்து புதுமைகள் செய்த அக் கடலில் பயணம் செய்வது மிகவும் ஆசீர்வாதமாக எண்ணி இறைவனைத் துதித்து பாடல்கள் பாடி இறை வார்த்தைகளை வாசித்து இறை உணர்வுடன் பயணம் செய்தோம். படகுப் பிரயாணம் முடிந்ததும் கடலோரமாக உள்ள உணவு விடுதியில் பேதுருவின் மீன் உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் சுவையான அந்த உணவை உண்டு மகிழ்ந்தோம். தொடர்ந்து கலிலேயாக் கடலில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன ஓடம் வைக்கப்பட்டுள்ள காட்சிச் சாலைக்கு சென்று படகைப் பார்வையிட்டோம். அங்கிருந்து இராயப்பர் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம் சென்றோம். அனைத்து இடங்களையும் கைத்தொலை பேசிகளிலும் ஒளிப்படப் பெட்டிகளிலும் பதிவுசெய்தபடி எம் பயணம் தொடர்ந்தது. 7ம் நாள் எமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதற்காக ஜோர்தான் நதிக்கரைக்கு செல்ல ஆயத்தமாக அனைவரும் வெண்ணிற ஆறை அணிந்து புறப்பட்Nhம். அங்கு பல இன மக்களும் வெண்ணிற ஆடைகளுடன் கூட்டம்கூட்டமாக பரிசுத்த ஆவியின் பாடல்களைப் பாடி துதித்தபடி தம் திருமுழுக்கினைப் புதுப்பித்தபடி இருந்தனர். நாம் அங்கு திருப்பலி நிறைவேற்றி எம் திருமுழுக்கை புதுப்பித்தோம். எமக்கு திருப்பலி நிறைவேற்ற குருக்களை ஆயத்தம் செய்திருந்தார்கள். அதிலும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்பான அம்சம். மசாடா மலை. விசாலமான இம் மலையின் மேற்பகுதி தட்டையாகவும் பக்கங்கள் செங்குத்தாகவும் உள்ளன. இம் மலையின் மேல் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டதற்கான எச்சங்களாக சிதைவடைந்த நிலையில் பல அறைகள், குளியலறைகள், மண்டபங்கள், என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இங்கு செல்வதற்கு கம்பி மூலம் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. எமது வழிகாட்டி அதன் சரித்திரப்பின்னணியை விபரித்தார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் அவர்களிடம் மண்டியிடுவதைவிட மடிவதே மேல் என்று முடிவெத்த யூத இனத்து விடுதலைக்குழு போராளிகள ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக தம்மையே அழித்துக் கொண்டனர். அம் மாவீரர்களின் கதை கூறியபடி இம் மலை தலை நிமிர்ந்து நிற்கிறது. சாக்கடலில் குளியல். இது ஒரு இனிய அனுபவம். இக்கடலின் அதிக கனவளவு உப்பு கலந்த நீர் இருப்பதால் எந்த உயிரினமும் இதில் உயிர்வாழ முடியாது. இக் கடலில் ஒருவரும் தாள முடியாது. பலர் மிதந்தபடி குளிப்பதைக' காணக்கூடியதாய் இருந்தது. தொடர்ந்து எலிசபேத் அம்மாள் ஆலயம், திருமுழுக்கு யோவான் இல்லம், கிறீஸ்து பிறப்பு ஆலயம் சென்றோம். தினமும் வரிசை வரிசையாக மக்கள் கூட்டம் இப் புனித தலத்தைத் தரிசிக்க காத்திருப்பர். நாம் அங்ு போன நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக உள்ளே நுழைந்து இறைமகன் இயேசு பிறந்த புனிக இடத்தை தரிசிக்கக் கிடைத்தது இறைவனின் அரிய செயலன்றி வேறில்லை. தொடர்ந்து தேவதூதன் இடையர்களுக்கு சேதி சொன்ன மலைக்குகை, மரியாளின் பால் துளியில் பரிசுத்தாகிய வெள்ளை குறோற்றா ஆலயம், ஆகிய புனித தலங்களைத் தரிசித்து அவ்விடத்தில் திருப்பலியும் நிறைவேற்றி இறை உணர்வுடன் எம் இருப்பிடம் திரும்பினோம். தினமும் காரம் மசாலா தவிர்ந்த அனைத்து உணவு வகைகளும் தரமான முறையில் பரிமாறப்பட்டன. சுவையான கலப்படற்ற பேரீச்சம் பழங்கள், திராட்சைரசம் என்பன குறைந்தவிலையில் பெறக்கூடியதாய் இருந்தது. மறுநாள் மார்கழி 1ம் திகதி இயேசு விண்ணம் சென்ற இடம், பரலோக மந்திர ஆலயம், மரியாள் அடக்க ஆலயம், முதலியவற்றுடன் ஒலிவத் தோப்பு என அழைக்கப்படும் ஜெத்சமெனிப் பூங்காவையும் தரிசித்தோம். பழமைவாய்ந்த அந்த ஒலிவ மரங்கள் இன்றும் பரிசுத்தமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இறைமகன் தனது சீடருடன் இரவுணவு உண்ட ஆலயம், தாவீதின் கல்லறை, இராயப்பர் இயேசுவை மறுதலித்த இடம், மரியாள் உறங்கும் ஆலயம் என பல பரிசுத்த இடங்களையும் தரிசித்தோம். ஆங்காங்கு அந்த இடத்தின் சிறப்புக்களை அறிந்து கொண்டதுடன் அந்த இடத்திற்குரிய இறைவார்த்தைகளையும் செபமாலையையும் தியானிக்கத் தவறவில்லை. சில இடங்கள் ஓத்தடைஸ் எனப்படும் யூதஇன மதக்குழுவினராலும் இன்னும் சில கத்தோலிக்க பிரிவினராலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியாய் இருந்தது. யூத மக்களால் புனிதமாக மதிக்கப்படும் புலம்பல் மதில் முன் ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒருபகுதியிலுமாக மதிலில் தலையை முட்டி செபித்துக்கொண்டிருந்தனர். மதிலுக்கு அப்பாலுள்ள தம் வணக்கத்தலம் முஸ்லிம் பிரிவினரின் பகுதிக்குள் இருப்பதால் இவர்களால் அங்கு சென்று வணக்கம் செய்ய முடியாது. நாமும் அம் மதிலுக்கு முன் சென்று அதற்கு மரியாதை செலுத்தி வி;ட்டு வந்தோம், அவ் இடத்தை மிகவும் புனிதமாகப் பேணி வருவதால் அங்கு செல்வதற்கு மிகவும் பாதுகாப்பு செய்துள்ளனர். மறுநாள் மரியாள் பிறந்த வீடு, அதைத் தொடர்ந்து பெத்சாயிதாக் குளம் சென்றோம். அக் குளம் நீரின்றி சிதைவடைந்த நிலையில் இருந்தாலும் இறைமகன் புதுமைகள் செய்த புனித நினைவுடன் இறைவார்த்தை வாசித்து செபித்து தியானித்தோம். அதைத் தொடர்ந்து போஞ்சு பிலாத்துவின் அரண்மனை, இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிட்ட இடம், சித்திரவதைக் கூடம், அங்குதான் அவரது சிலுவைப் பாதை ஆரம்பித்த அந்த துக்க நிகழ்வுகளின் ஆரம்பமாக இருந்தது. சித்திரவதைக் கூடங்கள் நிலக்கீழ் அறைகளாக மிக ஒடுங்கிய வாயில்களுடன் அமைந்திருந்தன. அவற்றைப் பார்த்தபொழுது அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் விழிகளில் நீர்வழிய விம்மி அழுதோம். எம் கண்முன் இறைகனின் பாடுகளுடன் எம் இன இளைஞர்களின் பாடுகளும் மனக்கண்ணில் நிழலாடி மனப்பாரத்துடன் அவ்விடத்தில் இறைவார்த்தை வாசித்து செபித்து இறைவனை மகிமைப்படுத்தினோம். சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் சிறுசிறு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் ஒவ்வொரு நிலையிலும் முழங்கால் படியிட்டு தியானித்து செபித்து பாடல்கள் பாடி ஒருங்கிணைந்து இறை உணர்வுடன் ஒன்றித்தோம். பதினான்கு நிலைகளையும் தாண்டி இயேசுவின் சிலுவை நிறுத்திய இடமான கல்வாரி மலையின் குன்றை அடைந்தோம். அப் பரிசுத்த தலத்தில் உட்புகுவதற்கு மிகுந்த நீளமான வரிசையில் நின்று போகவேண்டி இருந்தது. உலகின் பல நாட்டு மக்களும் குழுக்களாக அங்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாய் இருந்தது. இயேசுவின் சிலுவை நிறுத்திய அந்த பரிசுத்த இடம் ஒருவர் ஒருவராக வணக்கம் செலுத்தக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இயேசுவின் உடல் அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையையும் தரிசித்தோம். எம் பாவம் போக்க மனுவுருவாகி மரணத்தை ஏற்று உயிர்த்த கிறீஸ்துவின் அருள் பெற்றவர்களாய் திருப்பலி ஒப்புக்கொடுத்தோம். கல்வாரித் திருப்பலிக்கு ஆயத்தமாக முதல்நாள் இரவு குருவானவரை எம் தங்குமிடத்திற்கு அழைத்து நாம் பாவமன்னிப்புப் பெற ஒழுங்கு செய்த எம் ஒழுங்கமைப்பாளர் திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இறுதி நாளான 3ம் திகதி காலை எமது பயணப் பொதிகளுடன் ஆயத்தமாக நின்ற வாகனத்தில் ஏறி எம்மாவுஸ் நகருக்குச் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. எம்மாவுசில் உள்ள குருமத்தில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டபின் இயேசு மரணத்தை வென்ற பின் எம்மாவுஸ் சீடருடன் உணவருந்திய அந்த இடத்தை தரிசித்தோம். அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறந்த நேரக் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைப்புடனும் செப உணர்வுடனும் எம்மை வழி நடத்திய திரு.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அவருடன் கூட இருந்து உதவி புரிந்த நெறிப்படுத்திய திருமதி.அன்ரன் பிலிப் அவர்களுக்கும் அனைவரும் மனம் நிறைந்த நன்றி சொன்னோம். இறைவனால் கூடாதது ஒன்றுமில்லை என்ற கூற்றுக்கிணங்க இவர்களைபப் பயன்படுத்தி எம்மை காத்து வழிநடத்திய இறைவனுக்கு நன்றி கூறி இஸ்ரவேலின் தெல்அவி விமான நிலையத்தில் புனித பூமிக்கு விடை கொடுத்து ரொறன்ரோவுக்கு புறப்பட்டோம். எம் வாழ்நாளில் மறக்க முடியாத மகத்துவமான இப் புனித பயணத்திற்கு வழிவகுத்த இறைவனுக்கும் எம் பயண ஒழுங்கமைப்பினருக்கம் எம் இதயம் நிறைந்த நன்றிகள். அத்துடன் இத் திரு யாத்திரையில் பங்குபற்றிய அனைவரும் அன்புடனும் நட்புடனும் சகோதரத்துடனும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொண்டனர். எமது குழுவில் சில வாலிபப் பிள்ளைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சம். எம்மோடு பயணித்து நட்புடன் பிரிந்து சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். இறை வழியில் தொடர்ந்தும் பயணிப்போம். காவலூர் கண்மணி
 45. 14 points
  எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது. அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது. இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின் வீட்டில் ஆடைகள் கொண்டுவந்து நாகரிக ஆடைகளை மாற்றிக் கொண்டு தான் வந்தது எனினும், சீற்றில் வந்து அமர்ந்ததுமே, என்னடா வகுப்பைக் கட் பண்ணிவிட்டு வந்திட்டியோ என்று பின் வரிசையில் இருந்து ஒருவன் கூறுவது கேட்டது. கட்டாயம் கட் அடித்துவிட்டுத்தான் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்றில்லை. சில நேரம் அம்மாவைக் கேட்டிருந்தால் அவவே கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம். ஆனால் கமலகாசனின் வாழ்வே மாயம் படத்தை அம்மாவோட வந்து பார்த்தால் ரசிச்சே இருக்கும் ??? அந்த வயதில் எந்த ஹீரோ என்றாலும் கற்பனை செய்து கொண்டு, மற்ற நண்பிகளுடன் அவர்களைப் பற்றி அரட்டை அடிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லைத்தான். படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல. இடைவேளையின் போது நான் பயத்தில எழும்பி எதுவும் வாங்கப் போகவுமில்லை. குனிஞ்ச தலையை நிமிர்த்தவுமில்லை. மாலியும் ரதியும் தான் துணிவாப் போய் ஒறேஞ் பார்லியும் உறைப்புக் கச்சானும் வாங்கிக் கொண்டு வந்தது. எப்பிடித்தான் அவர்களுக்கு அந்தத் துணிவு அங்கே அப்பவே எண்டு எத்தனையோ நாட்கள் வியந்தும் இருக்கிறன். படத்தின்ர கடைசிக் கட்டத்தில படம் எண்டு தெரிஞ்சும் லேன்சி நனையும் அளவு அழுததும், இனிமேல் கமலகாசன் திரும்பி வரமாட்டார் என்ற அளவில் பீல் பண்ணியதும் இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு. படம் முடிஞ்சு உடன எழும்ப கேமாதான் இழுத்து இருத்தினவள். எல்லாரும் போகட்டுமடி என்று. களவு செய்த ஆட்கள் மாதிரி ஏனடி வாறாய் இயல்பாய் இரு என்று மாலி சொன்னாலும் யாழ்ப்பாணம் பஸ்டாண்டுக்கு வந்து பஸ் எடுத்து நெஞ்சிடியோட வீட்டை போய்ச் சேர்ந்த பிறகும் பயம் போகவில்லை. அம்மா ஏன் லேட் என்று கேட்கவில்லை. ஏனென்றால் முதல் நாளே பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி என்று சொல்லி வச்சதில் தப்பினது. அடுத்த நாள் டீச்சர் கேட்டதுக்கு முதலே பிளான் பண்ணினபடி ஒரே சாட்டுச் சொல்லாமல் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொன்னதை டீச்சர் நம்பினாவோ இல்லையோ ஒன்றும் கதைக்கவில்லை. ஒரு வாரம் செல்ல ஒரு சனிக்கிழமை. எங்கள் ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் இருக்கும் பத்மா அக்கா, நான் டியூசனுக்குப் போகும் போது சில நேரங்களில் நின்று அவவுடன் கதைத்துவிட்டுப் போவேன். அன்றும் வழமைபோல கதைத்தபோது என்ர தம்பி உம்மை தியேட்டறால வெளியில வரேக்குள்ள கண்டவனாம் என்றவுடன் நெஞ்சு உடனே திடுக்கிட்டதுதான். ஆனாலும் சமாளிச்சுக் கொண்டு, ஓமக்கா நானும் இன்னும் மூண்டு பெட்டையளும் போனனாங்கள். நல்ல படம் அக்கா என்று எந்த விதப் பதட்டமும் இல்லாமல் கூறியதில் அவரின் வாய் அடைபட்டுப் போனது. அத்தோடு அடுத்த முறை எங்களோட நீங்களும் வாங்கோவன் என்று விட்டு நான் சென்றதை அவர் வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருப்பா என்பதிலும சந்தேகம் இல்லை. இரண்டு நாள் போக அவவின் தம்பி ரமேஸ், என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி கடந்து போனான். நான் கூட சிரித்து வைப்போமா என்று ஒருகணம் எண்ணிவிட்டு மறுகணம் வேண்டாம் என்று மனம் சொல்ல சிரிக்காமலே அவனைக் கடந்து போனேன்.
 46. 14 points
  இத்தாலி ஹைவேகள் 3 ட்ரக்குகளைக் கொண்டது அதி கூடிய வேகம் 130 km/h, சுவிஸ் ஹைவேகளைப் போலவே இங்கும் பல நாட்டுக் கார்களைக் காண்கிறேன் ஜேர்மன், பிரான்ஸ், மெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து .... ஏன் டென்மார்க், நோர்வே கார்களையும் காணக்கூடியதாக உள்ளது, சுவிசை விடக் கொஞ்சம் வித்தியாசமாக அதிகளவில் GB கார்களைக் காண்கிறேன் இத்தாலி ஒரு அழகான நாடு, அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லும் நாடுகள் வரிசையில் ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பயினுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் வரும் நாடு. உலகின் முன்னனி உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டது இத்தாலியின் மிலான், ரோம் போன்ற நகரங்கள் உலகின் ஆடை அலங்கார( fashion world) வரைபடத்தில் தவிர்க்க முடியாத நகரங்கள், சிறந்த இயந்திர தொழில் நுட்ப ஆற்றல் கொண்ட நாடு உலகப் புகழ் பெற்ற பராரி(ferrari), லம்போர்கினி (lamborghini) போன்ற கார்களினதும், டுகாட்டி (ducati) ,ஜிலேரா(gilera) போன்ற மோட்டார் சயிக்கிள்களினதும் தாயகம் மற்றும் பல தொழிற்சாலை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நாடு எனினும் ஊழல் ஆட்சிகளாலும், ஒழுங்கற்ற திட்டங்களினாலும் சரிவைச் சந்திக்கும் நாடு இத்தாலி ஹைவே சிறிது தூரம் ஹைவேயில் செல்ல கட்டணம் செலுத்துமிடம் வருகிறது....... எதிர்பார்த்த படியே கூட்டம் கும்மி யடிக்க சிறிது தாமதத்தின் பின்னர் கட்டணம் கட்டி வெளியேறுகிறேன், மிலானோவை அண்மித்ததும் மீண்டும் ஒர்முறை கட்டணம் கட்டுகிறேன். இப்போது மிலானோபிரதேசத்தில் , மிலானோ இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரம் இத்தாலியின் வர்த்தக தலை நகரம். அழகிய மிலான் டொமோ பேராலயம் உள்ளது, சொப்பிங் போகலாம் மற்றபடி பார்க்க பெரிதாக இடங்கள் இல்லை என நினைக்கிறேன். மிலான் டொமோ பேராலயம் (Milan Cathedral , Mailänder Dom ) (படம்:cheapflightslab.com/direct-return-flights-from-new-york-to-milan-italy) இத்தாலியில் கணிசமான இலங்கையர்கள் வசிக்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள். மிலானோ , ரோம், ஜெனோவா, நாப்போலி , பலோர்மோ என பரவலாக இலங்கையர் வாழ்கிறார்கள் பெரும் பாலும் சிங்களவர்கள் அதிலும் பலர் நீர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் , இதனால் தான் நீர்கொழும்பை குட்டி இத்தாலி என அழைக்கின்றனர் போலும். இத்தாலியில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் அதிக தூரத்திலுள்ள சிசிலியா தீவினுள் (பலோர்மோ நகரை அண்டி) போய் அடைந்து விட்டார்கள் என்ன காரணம் எனத் தெரியவில்லை. இப்போது ஒரு சில ஹைவே சந்திப்புக்கள் வர எனக்குரிய சரியான வெனேச்சியா நோக்கிய ஹைவே யினை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு , சில வளைவுகளில் கீழே போய் , பின்னர் மேலே வந்து ஒருவாறு மிலானோ ஹைவே நெரிசலில் இருந்து வெளியேறி வெனேச்சியாவுக்குரிய ஹைவேயினுள் வருகிறேன் இப்போது 3வது கட்டணத் தரிப்பிடத்தில் ரிக்கற் எடுக்கிறேன் . இனி ஒரு 250 க்குநொச்டொப் ஓட்டம் தான். ஜேசலோ exit எடுக்கும் போது ரிக்க்கெற்றை போட்டு காசு கட்டினால் போதும். இப்போது சூரியன் மெதுவாக தனது மென்நிலையிலிருந்து வன்நிலைக்கு மாறுகிறார், வெளிச்சம் கூடிக்கொண்டு வர , வெப்பமும் மெதுவாகக் கூடுகிறது. இப்போது காரின் AC யும் வேலைசெய்யத் தொடங்க என் மூக்கின் மேல் குளிர் கண்ணாடியும் அமர்ந்து கொள்கிறது. வீதியில் வாகனங்களும் அதிகரித்து காணப்படுகிறது பெருமளவில் wohnwagen (caravan)களும் காணப்படுகின்றன, இத்தாலி camping க்கும் ஒரு பெயர்போன இடம், ஜேசலோவில் மட்டும் 3000 பேருக்கு camping வசதியுள்ளதாக வாசித்தேன். இப்போது சற்றுத் தாகமெடுக்கவே மனைவியிடம் orange juice கேட் கிறேன், மனைவி cool bag இலிருந்து பெட்டியெடுத்து அதில் ஒரு ஸ்ரோவினை வைத்து தருகிறா அமிர்தமாக இறங்குகிரது...., cool bag இனுள் வேறு என்ன இருக்கிறது என் கிறேன் , அப்பிளும், பியர்சும் வெட்டி box இல் போட்டுள்ளேன் என்றார் அப்பிளைத் தாங்கோ என்றேன், cool bag இப்போது free யாக இருந்த முன் சீட்டிற்கு இடம் மாறுகிறது, இதுக்குள்ள உங்களுக்கு தேவையானதெல்லாம் இருக்கிறது, சும்மா என்னை தொந்தரவு பண்ணாமல் எடுத்துச் சாப்பிடுங்கோ...., ok , good night என்று விட்டு duty க்கு போய் விட்டா , பாவம் அவர் இரவும் நித்திரை இல்லை, நித்திரை கொள்ளட்டும். மூத்த மகளும் நித்திரைக்கு போய்விட்டா அது தான் கொஞ்சம் கவலை , அவா விழித்திருந்தால் அப்பா, அப்பா என கனக்க கேள்விகள் கேட்டுக் கொண்டே வருவா எனக்கும் நேரம் போவது தெரியாது....., பாவம் பிள்ளை தூங்கட்டும் காலையில் வெளிக்கிட்டதிலிருந்து என்னுடன் கதைத்துக் கொண்டே வந்தவா......எல்லோரும் உறக்கதிற்கு செல்ல இளையராஜாவை உதவிக்கு அழைக்கிறேன் இளையராஜா hits இசைத்தட்டு உள்ளே போக மீண்டும் உற்சாகம் பிறக்கிறது இத்தாலி ஹைவே யில் உள்ள Autogrill ரெஸ்டுரண்ட் பிரசித்தமானது , நல்ல இத்தாலி சாப்பாடுகளும், கபே களும் மிகவும் நல்லா இருக்கும் என நண்பன் சொல்லியிருந்தார் , எனக்கும் இந்த ஹைவே இல் stop எடுப்பது மிகவும் பிடிக்கும், விடுமுறைக் காலங்களில் உள்ளே போனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் உல்லாச பயணிகள் வருவார்கள் சுறுசுறுப்பான ,மகிழ்ச்சியான மனிதர்களை காணலாம் அதுவே ஒரு புத்துணர்வைத் தரும் . இப்போது ஒரு பெரிய Autogrill ரெஸ்டுரண்ட் வந்தது உள்ளே போகும் ஐடியா இல்லை பின்னால் எல்லோரும் நித்திரை ,சிறிய மகளின் பால் நேரமும் இது இல்லை, அவா எழும்பி அழும் போது பால் குடுக்க ஒருமுறை நிறுத்தினால் போதும் என மனதில் நினைத்துக் கொண்டே வேகமெடுக்கிறேன் Autogrill ரெஸ்டுரண்டின் வெளிப்புற ,உட்புற தோற்றம் , (படம் : dalluva.com ,bbc.com/autos/story/20131001-road-food-italy) சில ஹைவே சந்திப்புகளை கடந்து செல்கையில் சிறிய மகளின் முனகல் கேட்டு சிறிது நேரத்தில் அழுகையாக அது மாற்றங்காணவும் ஒரு சிறிய ஹைவே ரெஸ்டுரண்ட் ஒன்று வரவும் சரியாக இருந்தது..... ஒரம் கட்டி உள்ளே போனால் கார் விட இடமில்லை ஒரு ஒரமாக காரை நிறுத்தி பாலைகரைத்து மகளுக்கு கொடுத்து விட்டு, மீண்டும் ஜேசலோ நோக்கி வேகமெடுத்தேன் ...... பின்னால் இருந்தவர்கள் மூவரும் மீண்டும் தமது கடமையைத் தொடர்ந்த்தார்கள். ஹைவேயின் இரு பக்கங்களும் பெரும்பாலும் சிறு நகரங்களும், குடியிருப்புக்களுமே காணப்பட்டன, டொஸ்கானா போல் ஒரு அழகிய இடம் வந்தால் எப்படியிருக்குமென மனம் எண்ணியது , டொஸ்கானா புளோரன்ஸை தலைநகராகக் கொண்ட இத்தாலியின் ஒரு பிராந்தியம் (Region) மிகவும் அழகான பிரதேசம் , இந்த பிரதேசத்திற்குள் தான் பிசா/பைசா சாய்ந்த கோபுரம் வருகிறது. உங்களுக்கு இயற்கை காட்சிகளை ரசிப்பதில் விருப்பம் இருந்தால் கூகிளில் Toskana (ஆங்கிலத்தில்Tuscany) எனக் கொடுத்து படங்களைப் பாருங்கள்.சிலிர்த்துப் போவீர்கள்.....! டொஸ்கானாவின் படங்கள் சில miriadna.com/preview/tuscany-landscape குளிர் கண்ணாடியினூடாக இத்தாலியின் பெருந்தெரு கண்முன்னே விரிய .....இளையராஜாவின் இசயில்"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்......" பாடல் உயிரை வருட...., cool bag box இலிருந்து அப்பிள் ஒன்றைக் கடிக்கிறேன் gala அப்பிளின் வாசனை நாசித்துவாரங்களை தென்றலாய் வருட , அதன் சுவை அமிர்தமாக உள்ளிறங்க தெய்வீக ராகம் பாடலின் இடையிசை முடிந்து தழுவாத தேகம் ஒன்று தணியாத மோகம் கொண்டு.... என இளசின் இசை செவிப்பறைகளில் அருவியாய் பாய ஆகா அற்புதம் ஆனந்தம், பேரானந்தம் ,பரமானந்தம் , பரம பேரானந்தம் ........... போங்கப்பா வர்ணிக்கத் தெரியவில்லை....., இந்தப்பயணத்தின் போது இளையராஜாவின் பாடல்கள் தன்னை ஒரு படி மேலே என்னுள் நிலை நிறுத்தியது என்றால் மிகையாகாது.... ஆரம்பத்தில் நான் பெரிதாக இளையராஜா பாடல்களைக் கேட்பதில்லை , ஆங்கில pop music , fast music தமிழ் பாடல்கள் தான் எனது தேர்வு...., பிதாமகன் படத்தின் இளங்காற்று வீசுதே பாடல் மூலம் இளையராஜா படிப்படியாக என்னுள் ஊடுருவி முழுமையாகக் கட்டிப் போட்டுவிட்டார் இப்போது அவர் கட்டவிழ்த்து விட்டாலும் எனக்குப் போக விருப்பமில்லை அதனுள் கட்டுண்டு கிடக்கவே மனம் விரும்புகிறது ..... , இப்போதும் pop music பிடிக்கும் ஆனால் இளையராஜாவை ரொம்பப் பிடிக்கும்.... (யோவ் பயணக் கட்டுரையில் இளசு வைப் பற்றி எழுத வைக்காதையுங்கோ..... அதுக்குத்தான் களத்தில் சசிவர்ணம், இசை,ரகுநாதன்..... என பல ஜாம்பவான்கள் இருக்கினம் ) இப்போது ஹைவே சந்தி ஒன்று வர (Padua என நினைக்கிறேன்) , பல வாகனங்கள் பிரிந்து வெளியேற எனது பாதை சற்று வாகனங்கள் குறைந்து வெளிக்கிறது, பாடல்கள் தரும் உற்சாகத்தில் கண் முன்னே சற்று வெறுமையான ஹைவே .... மனமோ ஒடு மச்சி ஒடு......, 130 , 140 ஆகி 145 ஆகி 150 km/h ஆக..... வேண்டாம் கடந்த மாதம் தான் சுவிஸ் பொலிசுக்கு 250 பிராங் அழுதது (அது நான் கட்டிய இரண்டாவது 250 தண்டம்) நினைவுக்கு வரவே காலை மெதுவாக வெளியில் எடுக்கவும் , மனைவி பின்னாலிருந்து ஏனப்பா வீட்டில ஏதும் காசு அடிக்கிற மெசின் வைச்சிருக்கிறீங்களோ என குரலெழுப்பவும் சரியாக இருந்தது.... cool box இலிருந்த பொருட் களும் தீர்ந்து கொண்டு வர GPS (navi) இல் போகவேண்டிய தூரமும் நன்கு குறைந்திருந்தது. ஜேசலோ exit இட் வர பணம் கட்டி ஹைவே யிலிருந்து வெளியேறுகிறேன். இப்போது பின் சீட்டும் கலகல எல்லோரும் விழித்து விடடனர் , இன்னும் ஒரு 25km கள், கிராமங்கள் ஊடாகப் பயணிக்கிறேன் சில பழைய கட்டிடங்களைக் கடந்து செல்கிறேன் இப்போது ஒரு பெரிய camping பிரதேசம் வருகிறது, மிகவும் அழகாக இருக்கிறது , தூரத்தில் இரண்டு கட்டிடங்களின் நடுவே நீல நிறத்தில் கடல் மினுமினுக்க உள்ளூர உற்சாகம் தொற்றிக் கொள்கிறது . சில அழகான கட்டிடங்கள் கடந்து செல்கின்றன அவற்றில் ristorante, pizzeria கள் என போர்டுகள் தெரிகின்றன, மிகவும் புதிய பிரதேசம் ஒன்றில் நன்கு பழகிய ஒருவரைக் காண்பது போல lidl கடையின் விளம்பரம் கண்ணில் படுகிறது (இவர்கள் ஒரு இடத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் போல) வீதியின் இரண்டு பக்கமும் பைன் மரங்கள் வரிசையாக வரவேற்க ஜேசலோவினுள் நுழைகிறோம் அழகிய கடற்கரை நகரம் எமது வருகையைப் பதிவு செய்கிறது படிப் படியாக நெரிசல் கூடிக் கொண்டு போகும் வீதிகளினூடாகப் பயணித்து எமது Hotel இருந்த தெருவை அடைகிறோம். கிடைக்கும் நேரத்தினைப் பொறுத்து மிகுதியை தொடர்கிறேன்..... கருத்திட்ட கள உறவுகளுக்கும் , பச்சையிட்ட கள உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி உங்கள் ஊக்கம் தான் இதை எழுதத் தூண்டுகிறது, ஆனால் இப்படி நீளும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை எழுத்தனுபவம் புதிது என்பதால் editing இல் கனக்க பிரச்சனை. (இந்த கட்டுரை அணைத்திலும் வந்த வர இருக்கின்ற படங்கள் அணைத்துமே நானெடுத்தவை அல்ல , எல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை)
 47. 14 points
  அன்னதானமும் பிள்ளையாரின் அற்புதமும். 06 நவம்பர் 2016 செல்லப்பிள்ளையார் கோவிலில் முதல் முறையாக அமுது சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது வழமையானது என்று நீங்களும் நினைக்கலாம், ஆனால் பிள்ளையார் எங்களை எப்பவும் கைவிட்டதேயில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை ஆட்டோவில் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தபோது மல்லாகத்தில் அடைமழை காரணமாக மேற்கொண்டு செல்லவிடாமல் வருண பகவான் தடுத்து நிறுத்தினார். வருணபகவானின் சீற்றம் குறைந்து பிரயாணம் தொடர்ந்தபோது தெல்லிப்பளைக்கு பின்னர் மழையைக் காணவேயில்லை. அமுது ஆக்கி அன்னதானம் ஆரம்பமாகி இனிதே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு பஸ் வந்து நின்றது. அதிலிருந்து குபு குபு என்று குதித்தது மாணவர் குழாம். அனைவரும் கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள். நேரே கோவிலுக்கு வந்தவர்களினை எதிர்கொண்டபோது கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். கேள்விகள் அரசியல் முதல் சமயம் வரை தொடர்ந்தது. காங்கேசன்துறையில் இன்னமும் இராணுவம் இருப்பதும், இன்று வெறும் கட்டாந்தரையாய் காட்சி அளிக்கும் வீதியோரங்கள் ஒரு காலத்தில் வீடுகளும் கடைகளுமாக இருந்தன என்பது போன்ற விடயங்களை விளக்கியபோது ஆச்சரியப்பட்டார்கள். சாப்பிடலாமே என்று அழைத்தபோது சந்தோசமாக வந்து குந்தியிருந்தார்கள். வயிறு நிறைந்ததோ இல்லையோ மனம் நிறைய சாப்பிட்டார்கள். ஆமா இதுக்குள்ள எங்க பிள்ளையாரின் அருள் என்றுதானே யோசிக்கிறீர்கள்! செல்லப்பிள்ளையார் கோவிலை ஜாதி, மத, இன, மொழி வேறுபாடற்ற ஒரு அன்பான மக்கள் கூடுமிடமாகவும், அமைதியான ஒரு வழிபாட்டுத்தலமாகவும் உருவாக்க முயற்சி செய்துவரும் நிர்வாக சபைக்கோ இரட்டிப்பு சந்தோசம். இந்தக் கோவிலை ஒரு மாதிரி கோவிலாக்கி முன்னுதாரணமாக திகழவைக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படவைக்க பாடுபடும் நிர்வாகசபைக்கும் பிள்ளையாருக்கும் நன்றிகள். இந்து, கிரிஸ்துவர், முஸ்லீம், தமிழ், சிங்களம் என்று வேறுபாடில்லாமல் அனைவரும் அன்பால் இணைந்த இந்த நிகழ்வும் பிள்ளையாரின் அருளே.
 48. 14 points
  கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்னும் கொஞ்சம் இவ்வுலகில் அனுபவித்து வாவன் -என தள்ளி விட்டு போகிறது. மனிதர்க்கு வராத இரக்கம் இளவயது என்பதனால் இயமனுக்கு என்னுள் இருக்குப் போலும். நவீன வசதி கொண்டதுவாம் கனடா அந்த நவீனம் தந்த வாகனங்கள்-கூட பனியைக் கண்டால் ஓட மறுத்து விழுந்து படுத்துவிடுகின்றன... அந்த தொழில் நுற்பமும் நவீனம் - கூட சில வேளைகளில் வாழ்க்கையை பனிக்குள் புதைத்து சென்றது.. சில்லென்றுவீசிய காற்றில் சிறுபொறியாய் என் உயிர். அன்றாட வாழ்வை நகர்த்துவதற்காக நான் படும்பாடு நாய் படாத பாடு வீடு உறவுகள் என வீட்டோடு, கிடந்து படித்தபடிப்பை நல்ல... வாய்ப்புக்களை நொடிப்பொழுதுகளில் விட்டு விட்டு - ஒரு கூலித் தொழிளாளியைப் போல், ஊதியம் இன்றி சேவகம் செய்கின்றேன். ஆனாலும் திங்களும் புதனும் வந்தால் தித்திக்கும் நாட்கள் -அவை இரண்டும் என் சேவை நாட்கள். நாகரீகம் என்ற போர்வையில் நாலுநாள் பழகிவிட்டு நாசுக்காய் களட்டிவிடும் உறவுகள். நான் மட்டும் மூச்சை உள் இழுத்து விட்டபடி சர்வாங்கமும் அடங்கி விக்கித்து நிற்கையில்- இதுவும் கடந்து போகட்டும் என ஓர் அசரிரி. அண்மையில் தந்தை ஒருவர் ஆதங்கப்பட்டார், பார்ப்பவர் கண்களுக்கு அழகியாம்-அறிவாளியாம் இன்னும் நிறையப் பெற்றவளாம் ... ஆனால் வேண்டாத பெண்ணாம்-ஏன் காரணம் கேட்டுவிடாதீர்கள்- கண்ட இடத்தில் திருமணப் பேச்சு நான் அல்ல பெண்..
 49. 14 points
  உலகத்தமிழர்கள் வழங்கும் தமிழினப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களின் 59வது பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் குரல் : நாதன் (நெதர்லாந்து) வரிகள் : கவி அஜய்(இந்தியா) இசை :தமிழ்சூரியன் [ சேகர்] (நெதர்லாந்து) படத்தொகுப்பு: கவி அஜய் வெளியீடு: Multi Screen Entz
 50. 14 points
  அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்களை, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அட, இதைத் தான், மரணம் என்று சொல்லுகின்றார்களோ என்ற சிந்தனையிலும், அவருக்கு ஒரு சிரிப்பு வந்தது. ஆனால், அருகிலிருப்பவர்களிடம் இருந்து ஒரு விதமான சத்தமும் வராததால், தனது ‘உதடுகள்' உண்மையில் சிரிப்பை வெளிப்படுத்தவில்லை ன்று அனுமானித்துக் கொண்டார். அப்போது பரியாரின் விளக்கம் தெளிவாகக் கேட்டது. இஞ்சை பாருங்கோ, வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூண்டிலையும், வாதமும், பித்தமும் விழுந்து போச்சு. இப்ப தனியச் ‘சிலேட்டுமத்தில' மட்டும் தான் ‘உயிர்' தொங்கிக்கொண்டிருக்கு. போன முறை, அடங்கேக்க, வாதம்' விழுந்து போகப் ‘பித்தம்' கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது. பரியாரிக்கு வாணரில கனகாலத்துக் ‘கறள்' ஒண்டு இருக்குது எண்டு வாணருக்குத் தெரியும். பெரிசா ஒண்டுமில்லை. அவன் சின்னப் பெடியனா இருக்கேக்கை, ஒரு கலியாண வீட்டுக்கு வாணர் கூட்டிக்கொண்டு போய், அங்கை வடிவாச் சாப்பிட்ட பிறகு, வாசல்ல போற ஆக்கள் ‘மொய்' எழுதிறதைப் பாத்த பரியாரியும்,அதென்ன எண்டு கேக்க, வாணரும், ஆக்கள் சாப்பிட்டதுக்குக் காசு குடுக்கினம் எண்டு சொல்லவும், பொக்கற்றில்லாத காச்சட்டையோட நிண்ட பரியாரியாரும், காவோலை வேலிக்கிள்ளால பூந்து வெளியால ஓடேக்கிள்ள, முதுகில வேலிக்கருக்குப் பிளந்து போட்டுது. வடுவா, இவ்வளவு காலமும் அதை மறக்காம வைச்சிருக்கிறான் எண்டு கறுவிக்கொண்டார். வாணருக்குத் தாய், தகப்பன் வைச்ச பெயர் அம்பலவாணர். அந்தக்காலத்திலேயே கொஞ்சம் நவீனமான சிந்தனையுள்ளவர் எண்ட படியால, அம்பலத்தைத் தூக்கி வெளியால போட்டிட்டார். அதோட, அவர் நிரந்தரமாய்ச் செய்த தொழிலும், ஊரில உள்ள ஆக்களிட்டை, ஆட்டுக்குட்டியள வாங்கி, மாதத்தில ஒருக்கா வாற முஸ்லிம் வியாபாரியளின்ர லொறியில. மொத்தமா ஏத்தி அனுப்பறது தான். அந்தத் தொழிலையும் செய்துகொண்டு, அம்பலத்தின் பெயரையும் காவிக் கொண்டு திரியிறது, அவ்வளவு பொருத்தமாக அவருக்குப் படவில்லை. ‘அப்புவை நினைச்சாப் பெரிய கவலையாக்கிடக்குது, என்று மகன் சொல்வது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. நான் காசைக் கையில குடுக்கிற நேரமெல்லாம், அப்புவும் ‘வேண்டாம், மகனே, எனக்கென்னப்பு குறை?, நீ தான் வச்சுக்கொள்ளு' எண்டு வாங்கவே மாட்டார் என்று சொல்லிக்கொண்டிருந்தான். மகன் ஒரு முறை திருவிழாவுக்கு வந்த நேரம், அவன் கோவிலுக்குக் கட்டிக்கொடுத்த ‘மணிக்கூண்டுக் கோபுரம்’, அம்பலவாணர் உபயம், என்று சிவப்பு நிற எழுத்துக்கள் சூரிய ஒளியில் மின்னிய படி நின்று கொண்டிருந்தது் . வாணருக்கும் ஆட்டு லொறி வரப்பிந்தினதாலும்,, ஊரில கொஞ்சம் முன்பணம் கொடுத்து ஆடுகளை ‘புக்' பண்ணி வைச்சிருந்ததாலும், கொஞ்சம் காசு தேவைப்பட்டது. ஊருக்கிள்ள ஆரிட்டையும் கொஞ்சக்காசு கடன் கேட்கலாம் எண்டாலும், மகனின்ர ‘கௌரவமும்' அந்தக் கடனில் தொங்கிக்கொண்டிருந்த படியால் ஒருவரிடமும் வாய் திறந்து கேட்க முடியவில்லை. எனவே, துணிந்து மகனிடம் ‘தம்பி, கொஞ்சம் காசு தேவைப்படுகுது, லொறி வந்த உடன கொழும்புக்கு அனுப்பி விடுகிறன் என்று கேட்டுப்பார்த்தார், அப்பு, இப்ப தான் கோவில் காசு குடுத்திட்டு நிக்கிறன். நீங்கள் லொறியைக் கொஞ்சம் கெதிப் பண்ணி வரச்சொல்லுங்கோ, என்று சொன்னபடி போய் விட்டான். அப்போது, யாரோ மூக்கைச் சீறி எறியும் சத்தம் கேட்டது.மகன் அழுகிறான் போலும். மீண்டும் தனக்குள் சிரித்துக்கொண்டார். யாரோ அருகில் சுருட்டுப் பிடிக்கும் வாசம் வந்தது. அவருக்கும் ஒண்டைப் பத்தவைச்சால் நல்லம் போல கிடந்தது. ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ ௦௦௦௦௦௦ உடனேயே தான் இப்போது ‘அடங்கிப்போய்' இருப்பது் நினைவுக்கு வரவும், கொஞ்சம் மூச்சை இழுத்து ஆழமாக விட்டுக் கொண்டார். சுருட்டுப் புகை, உள்ளே போனதோ இல்லையோ, உடம்பில் கொஞ்சம் 'புத்துணர்வு' திடீரெனப் பாய்ந்த மாதிரி இருந்தது. தனது புத்தியை நினைக்க அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த 'நரிப்புத்தி' அவருக்குப் பல விதங்களில், பல தடவைகளில் உதவியிருக்கின்றது. . ‘மனுசனுக்குச் சமைக்கவே தெரியாது. நான், இரண்டாவதை வயித்தில வைச்சிருக்கிற நேரம், மனுசன் கறி வைக்க வெளிக்கிட்டு,கறிக்குள்ள போட்ட மீனெல்லாம் கரைஞ்சு போய்த் தனிய முள்ளு மட்டும் தான் கறியிக்கை மிஞ்சிக்கிடந்தது. அதுக்குப் பிறகு மனுசனை அடுப்படிப்பக்கம் நான் விடறதேயில்லை. இப்ப கூட, சாரதாக்கா வீட்டிலையிருந்து தான் மனுசனுக்குச் சாப்பாடு போறது' எண்டு வாணரின் மனுசி, அங்குள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. அட, நான் திரும்ப எழும்பவே மாட்டன் எண்டு எல்லாரும் நினைச்சுக்கொண்டினம் போல கிடக்கு. இந்த முறை, முழிச்சு எழும்பட்டும். எல்லாருக்கும் செய்யிறன் வேலை, எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார். வாணரும் அந்த நாளையில லேசுப்பட்ட ஆளில்லை. பழி வாங்கிற குணம் அவரோட கூடப்பிறந்தது. வாணரின்ர மனுசி, எப்ப சமைக்கிறதை நிப்பாட்டினது எண்டு வாணருக்குச் சரியாக நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது மகளின் கலியாணம் முடிஞ்ச கையோடையா அல்லது மூத்த மகளுக்குக் பேரன் பிறந்த கையோடையா என்று கண்டு பிடிக்கக் கொஞ்ச நேரம் முயன்று, பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டார். திடீரென ‘அம்மாவுக்கு' எல்லாப் பிள்ளையளின்ர வீட்டிலையும், திடீர் கிராக்கி ஏற்பட்டதும், ‘இனி, அப்புவுக்குத் தனிய உலை வைக்கிறதா? வீட்டை வந்து சாப்பிடுவார் தானே என்ற சமாதானமும் கூறப்பட்டது நினைவிருக்கின்றது. கொஞ்ச நாள், பிள்ளையளின்ர வீட்டை போய்ச் சாப்பிட்டுப் பார்த்தார். பல நாட்களில்,அவரது ஆடு பிடிக்கிற தொழிலால், அவருக்குச் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்குப் போக முடியாமல் போய்விடும் அல்லது ஆரோடையும் தவறனைக்குள்ள உள்ளிட்டால், நேரம் போறது தெரியாமல் போய்விடும். அவ்வாறு போகும் போது, மக்களின் பார்வையில், பல அர்த்தங்கள் தெரிவதாக அவர் உணர்ந்தார். தன்னால, இனிப் பிள்ளையளுக்குக் ‘கரைச்சல்' வரக்கூடாது என்று தானே சமைக்கத் துவங்கியது நன்றாக நினைவிருக்கின்றது. பிறகு பேரப்பிள்ளையளும் வளர, மனுசியும் கொழும்புக்காறியாப் போச்சுது. அவருக்கும் கொழும்புக்குப் போய்ப் பிள்ளை குட்டியளோட இருக்க இடைக்கிடை ஆசை வந்து போகும். ஆனால், ஒரு பிள்ளை கூட, அப்பு, என்னோட வந்து இருக்கலாம் தானே, என்று இதுவரை வாய் திறந்து கேட்கவில்லை. அது மனுசியின்ர பிழையா, பிள்ளையளின்ர பிழையா, தன்ர வளர்ப்புப் பிழையா, அல்லது மொத்த ஆண்குலத்தின்ர பிழையா என்ற கேள்வியைப் பல தடவைகள் தன்னைத் தானே கேட்டிருப்பார்! இரவு நேரங்களில், நாய் குலைச்சு, நித்திரை முறிஞ்சிட்டுது எண்டால், இப்படியான நினைவுகள் வந்து மனதை அரிப்பதுண்டு. மனித உடலுக்கு வயது போனாலும், மனித உணர்வுகளுக்கு வயது போவதில்லை என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டார். இந்தக் கண்றாவியைக் காணப் பொறுக்காமல் தான் ‘சாரதாக்கா' தனக்குச் சமைக்கிறதில கொஞ்சத்தை அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கிறது. வாணரும், இடைக்கிடை மீன், மரக்கறி எண்டு வாங்கிக் கொடுப்பதுண்டு. இந்தக் கதைக்குத் தான் வாணரின் மனுசி, கை, கால், மூக்கெல்லாம் வைச்சுத் தனது குற்றவுணர்வில் இருந்து விடு படுகிறதுக்குக் கதை புனையுது என்று அவருக்குப் புரிந்தது. நாங்கள் அப்புவோட இருந்த காலத்திலை, ஒரு நாள் கூடக் கடைக்குப் போய், அரிசி வாங்கினது கிடையாது. அப்புவின்ர வயல்ல இருந்து, மூட்டை, மூட்டையாத் தான் நெல்லு வாறது. மனுசனும், நெடுக ஏதாவது ஒரு முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கும். இல்லாவிட்டால், எங்க இரண்டு பேருக்கும், சீதனமும் தந்து, ‘முதலாளி' மாப்பிள்ளையளாப் பாத்துக் கட்டி வைச்சிருக்க ஏலுமே. கடைசிக் காலமெண்டு, எங்களோட வைச்சிருந்து பாக்க எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கேல்ல. அவரைக் கொழும்புக்கு வாங்கோ, வாங்கோ எண்டு ஒவ்வொரு முறை வரேக்கையும் அவரிட்டைக் கேக்கிறனாங்கள். பிள்ளை நான் ‘காம்பறாக்குள்ள' இருந்து எப்படிச்சீவிக்கிறது எண்டு சொல்லி மாட்டனெண்டு சொல்லிப்போடுவார். ஒருவரும் கேட்காமலே, இரண்டு மகள்மாரும் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதும் வாணரின் செவியில் விழுந்தது. இப்போது ஏறத்தாள ஒரு ‘மரத்துப் போன' நிலைக்கு அவர் வந்திருந்தார். காரணமில்லாமல், பட்டினத்தார் நினைவில் வந்து வந்து போகத் தொடங்கினார். அந்த நேரம் பார்த்துப் பரியாரியார் கிட்ட வந்து அவரது கையைத் தூக்கிப் பாத்தார். இப்ப ‘சிலேட்டுமமும்' விழுந்து போச்சுது போல கிடக்கு. இனி, ஆள் தப்பாது. மகனோட ஒருக்காத் தனிய கதைக்கவேணும் என்று சொல்வது தெளிவாக வாணருக்குக் கேட்டது. பின்னர், பரியாரி எதையோ மகனிடம் சொல்லவும், மகனும் மூண்டாந்தரமாய் , கடை, கிடை எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறம். இனியும் , அப்பு எழும்புவார் எண்டு எங்கள்ள ஒருத்தருக்கும் நம்பிக்கையில்லை. ஏதோ, நீங்க செய்யிறதைச் செய்யுங்கோ எண்டு சொல்வது கேட்டது. பிறகு பரியாரியும், உரத்த சத்தத்துடன் ‘நல்லா ஆண்டு அனுபவிச்ச மனிசன். எல்லா நாடியும் விழுந்துபோன பிறகும், மனிசன்ர உயிர் என்னும் போகாமல் இருக்குதெண்டால், ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். நான், என்ர அனுபவத்தில, இப்பிடிக் கன பேரைக் கண்டிருக்கிறன்.’ மண் ஆசை' மட்டும் மனுசன்ர உயிரைப் போகவிடாமல் பிடிச்சுக் கொண்டிருக்கு. பாலுக்குள்ளை, கொஞ்சம் மண்ணைப் போட்டுப் பிள்ளையள் பருக்கி விடுங்கோ! மனிசன் சந்தோசமாய்ப் போயிரும்' ஒரு நீதிபதியின் உத்தரவைக் கேட்டது போல, எல்லோரும் திடீரென அமைதியாகியது போல இருந்தது. பின்னர் மகன், ஒரு மூக்குப் பேணிக்குள்ள, கொஞ்சம் பாலைக் கொண்டுவரப் பரியாரியார், கொஞ்சம் மண்ணையள்ளி அதனுள் போட்டு, அவரது வாயைத்திறந்து, ஒரேயடியாக, அவ்வளவத்தையும் வாணரது வாய்க்குள் ஊத்தினார். அது மட்டுமல்ல, அவரது மூக்குத் துவாரங்களையும் தனது விரல்களால் இறுக்கமாகப் பொத்தியிருந்தார். வாணரின் உடல் அசையவேயில்லை. அவரது கண்கள் மட்டும் திடீரெனத் திறந்து கொண்டன! அந்தப்பார்வை, அவர் ஆட்டுக்குட்டிகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பும்போது அவற்றின் கண்களில் தெரிந்த ‘இயலாமையுடன் கெஞ்சும்' பார்வையைப்போலவே இருந்தது. (அனுபவங்களுடன் கலந்த கதை)