பாகம் இருபது
மே மாதம் பதினைந்தாம் திகதி ....
இரவு ஏழு மணியை தாண்டி இருந்தது....
எங்கும் மரண ஓலங்களும் செல் விழுந்து வெடிக்கும் சத்தங்களும்..
தெருவோரம் எங்கும் உடலில் இருந்து நீர்வடியும் பிணங்கள்.... இறந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்....
அந்த இடமெங்கும் புகை மூட்டமும் சாவின் மணமும் தான்.
உயிரோடு இருந்த மக்கள் கூட பிணமாக தான் நடமாடினார்கள். எங்கே போவது என்று கூட தெரியாமல் வட்டுவாகல் பக்கம் ஒரு கூட்டமும் நந்திக்கடல் பக்கம் ஒரு கூட்டமுமாக மாறி மாறி ஓடினார்கள்..
தங்கள் பாச உறவுகளை தொலைத்துவிட்டு அந்த இடமெங்கும் பெயர் சொல்லி கத்தி கத்தி அலைந்தார்கள்...
அந்த இடத்தில் அந்த கணத்தில் இருந்த எந்த ஒரு மனுசனும் நூறு முறை செத்த அனுபவத்தை கொண்டிருப்பார்கள் ..
அவர்களின் மனசை உலகத்தில் இருக்கும் எந்த மனோதத்துவ வைத்தியனாலும் ஆறுதல் படுத்த முடியாது..
அந்த தெருவோரத்தில் நாய் ஒன்று ஒரு பிணத்தின் (தமிழனின்) குடல்களை தின்று கொண்டிருந்தது.. அதை பார்த்தும் உணர்வற்று மக்கள் அந்த நாயை கூட துரத்தாமல் ஓடி கொண்டிருந்தார்கள்..
எங்களுக்கு தான் உணவே இல்லை அந்த நாயாவது சாபிட்டு பசியாறட்டும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை ..
அதை கூட காண சகிக்காமல் ஒரு முதியவர் தனது ஊன்று தடியால் அந்த நாயை துரத்தினார்..அது நாளைக்கு தேவையான குடல்களையும் கவ்வி கொண்டு ஓடியது..
இன்னுமொரு நாய் யாரோ ஒரு இறந்த குழந்தையின் கையை வாயில் கவ்வியபடி மக்களை போலவே அந்த தெருவெங்கும் அலைந்தது..
அந்த முல்லை - பரந்தன் சாலையில் தெருவோரம் அடையாளம் காணபட்ட பிணங்களை சுற்றி உற்றவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.. அவர்களால் கூட ஒப்பாரி வைத்து அழ முடியவில்லை ..
பசியினால் அவர்களின் வயிறு மட்டுமல்ல நாக்கும் வறண்டு போய் இருந்தது ..
கத்தி கத்தி வறண்டு போன தங்கள் தொண்டையை ஈரபடுத்த தண்ணீர் கூட இல்லாமல் ..ஒரு கிடங்கில் தேங்கி இருந்த நீரும் குருதியும் கலந்த அந்த செந்நீரை பருகிவிட்டு மீண்டும் ஓலமிட்டு கத்தினார்கள்..
நாளை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு அனுப்பி வைப்பதற்காக காயமடைந்த போராளிகளை தூக்கி கொண்டு வந்து அந்த சாலையோரமாக கிடத்தினார்கள் ஏனைய போராளிகள்..
வட்டுவாகல் முன் காவலரணில் இருந்து ஒற்றை பனையடி வரை ஆண் பெண் பேதமின்றி காயமடைந்த போராளிகள் சாலையோரத்தில் வரிசையாக காவலிருந்தார்கள் நாளைய நாளுக்காக..
அவர்களுக்கு ராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு போக விருப்பம் இல்லை என்றாலும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தங்கள் உடல் மற்றும் மன வேதனையோடு காத்திருந்தார்கள்..
மக்கள் சிலர் அவர்களை பார்த்து தூற்றி கொண்டும் , காறி துப்பியும் , சிலர் மனசுக்குள் வேதனை பட்டும், சிலர் விடுப்பு அறியவும், சிலர் அவர்களுக்கு நடுவே தங்கள் உறவுகள் இருக்கிறார்களா என்று அறியவும் அந்த போராளிகளை ஒரு வினோத பிராணிகளாக சுற்றி சுற்றி வந்தார்கள்..
அந்த போராளிகள் ஏற்கனவே மனசளவில் இறந்து போய் இருந்தாலும், இந்த மக்களை இப்படி விட்டுவிட்டு போகிறோமே என்ற எண்ணம், அவர்களை அப்பவும் கொன்று கொண்டிருந்ததை இந்த மக்கள் அறிய வாய்ப்பு இல்லை..
ராணியம்மாவும், சுபாவும் அந்த காயமடைந்த போராளிகள் மத்தியின் தன் மகன்/அண்ணா இருப்பானோ என்ற நப்பாசையில் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள்.
மாலையில் கேட்ட அந்த மிக பெரும் வெடி சத்தத்தை தொடர்ந்து பல மணி நேரமாக வடக்கு பக்கத்தில் எந்த மோதலும் இடம் பெறவில்லை..
பெடியள் சக்கை விட்டு அடிச்சிருகிறாங்கள் என்று தெருவோரத்தில் மக்கள் பேசியதை கேட்ட ராணியம்மா ..."யார் பெத்த பிள்ளையோ ..அந்த மகராசி நல்லா இருக்கனும் " என்று மனசுக்குள் வேண்டி கொண்டாள்..
அது தான் பெற்ற பிள்ளை என்று கூட தெரியாமல் ..
நேசன் ..நேசன் ...நேசன் அண்ணா ...
ராணிமைந்தன் ..ராணி அண்ணா ..
என்று எந்த பெயரை சொல்லி தேடுவது என்று தெரியாமல் தாயும் மகளும் மாறி மாறி பெயர்களை உச்சரித்து தேடினார்கள் ..அழுதார்கள் ..அந்த இரவில் இராணுவம் ஏவிய பரா வெளிச்சத்தில் மகனின்/அண்ணனின் முகத்தை ஒத்திருந்த அனைவரின் பின்னாலும் ஓடி ஓடி போய் பார்த்தார்கள் ..
அண்ணா என்று கூப்பிட்டு வேறு யாரோ என்று ஏமாற்றத்துடன் அலைந்தார்கள் ..
சொல்லுங்கள் உறவுகளே ..இவர்களை பெற்ற மண்ணை நாங்கள் ஒரு முறையாவது தொட்டு கும்பிட வேண்டாமா ..
அந்த மண் எதிரியிடம் நாசமடைவதை பார்த்து கொண்டு சும்மா தான் இருக்க போறீங்களா ..?
அந்த காயமடைந்த போராளிகளில் ஒருவன் ..இவர்களின் தவிப்பை பார்த்து விட்டு சொன்னான் ..
"அம்மா ஒரு அணி ..நந்தி கடல் கரையை நோக்கி நகர்கிறது ..அதில் சில வேளைகளில் உங்கள் மகன் இருக்கலாம் ..போய் பாருங்கள் அம்மா "..
அவனின் கைகளை கண்ணில் ஒற்றி கொண்ட ராணியம்மா ..மகள் சுபாவையும் கூட்டி கொண்டு ..வேகமாக நந்தி கடல் கரையை நோக்கி நடந்தாள்..
வழியில் தனது கணவனையும் மகள் மதியையும் ..ஒரு மரத்தடியை அடையாளமாக சொல்லி அங்கெ காத்திருக்கும் படி கூறிவிட்டு , சுபாவுடன் வேக வேகமாக நடந்தாள்.. இல்லை இல்லை ஓடினாள்...
புலிகளின் பாரிய அணி ஒன்று நகர்வினை தொடங்கி இருந்தது ..அவர்கள் அமைதியாக வரிசையாக நந்தி கடல் முள்ளிவாய்க்கால் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்..
சிவப்பு கீலங்களாக வரும் சன்னகளை பார்த்தும் பயபடாதவர்களாக நேரிய வரிசையில் முதுகிலே சுமைகளுடன் விடுதலைக்காக தங்கள் உயிரை கொடுக்க நிதானமாக நடந்து கொண்டிருந்தார்கள்..
பரா வெளிச்சமடிக்கும் போது வேவு விமானத்தின் கண்ணில் படகூடாது என்று அவர்களின் அணித்தலைவர் மாறி மாறி கத்தி கொண்டிருக்க, வெளிச்சத்தை பார்த்ததும் அந்த சேற்று மண்ணில் விழுந்து படுத்து, வெளிச்சம் ஓய்ந்ததும் எழுந்து நடந்தார்கள் ..
அவர்களுக்கு நடுவே ராணியம்மாவும் சுபாவும் அண்ணா ..அண்ணா ..என்று கத்தி கொண்டு அலைந்தார்கள் ..இவர்கள் மட்டும் அல்ல.. அங்கே மகனை, தம்பியை, தங்கையை , கணவனை தொலைத்தவர்கள் என்று நிறைய பேர் ..அவர்களின் உறவுகள் பெயர் கூறி அழைத்து அழுதபடியே அலைந்தார்கள்..
வரிசையில் சென்ற போராளிகள் இறுகிய முகங்களுடன் யாருக்குமே பதிலளிக்காமல் தங்கள் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். மூத்த காயமடைந்த தளபதிகளை ஒரு கைதாங்கியில் சுமந்து கொண்டும் சென்றார்கள்.
அனைவரும் அமைதியாக நந்திக்கடல் கரையில் அந்த சேற்று நிலத்தில் ஆயுதங்களை அருகில் வைத்துவிட்டு சரியான நேரத்துக்காக காத்திருந்தார்கள்..
எதிரின் பக்கத்தில் ..திருவிழாவுக்கு போட்ட மாதிரி கரை முழுக்க வெளிச்சம் பாய்ச்சியபடி டியுப் லைட்டுகள் மின்னி கொண்டிருந்தன.
கறுப்பு உடை அணிந்த ஆண்கள் பெண்கள் கலந்த சில போராளிகள் முதுகிலே வெடிமருந்துகளை சுமந்தபடி , மெதுவாக கரையை தாலாட்டிய நந்தி கடலைன்னையினுள் இறங்கி எதிரின் திசையை நோக்கி நகர தொடங்கினார்கள்..
கரும்புலிகள் இறங்கிட்டான்கள் கொஞ்ச நேரத்திலே பெரிய சண்டை நடக்க போகுது என்று சனம் அந்த இடத்தை விட்டு வேகமாக நகரதொடங்கினார்கள்..
மகனை தேடியபடி அலைந்த ராணியம்மவையும்.." அங்காலே போகாதீங்க..இவங்கள் அடிக்க தொடங்க அவன் கட்டாயம் செல்லடிச்சே கொன்று போடுவான் ..இஞ்சாலே வாங்கோ " என்று ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி ராணியம்மாவின் கையை பிடித்து இழுத்தபடி நகர்ந்தார்..
அந்த இடத்தை விட்டு நகர மனசில்லாமல் ..திரும்பி திரும்பி பார்த்தபடியே ராணியம்மா அந்த இழுத்த இழுப்புடன் நகர்ந்தார் அந்த மூதாட்டியுடன்..
தூரத்தில் புள்ளிகளாக கையசைத்தபடி அந்த கரும்புலிகள்...
கழுத்தளவு தண்ணீரில் கரைந்தார்கள் ..
(தொடரும்)
பாகம் இருபத்தொன்று இங்கே அழுத்துங்கள்