* 1986 யூலை, மல்லிகையில், புதுவை இரத்தினதுரையால் எழுதப்பட்ட நீண்ட கவிதையின் ஒரு பகுதி ....செந் தோழர்களின் செவியில் விழவேண்டும்.. பாலைவனம் கடந்து வந்த மக்களின் பாதங்களை ஆறவைப்பீர்களா..!?
——————
தென்னிலங்கைத் தோழனுக்கு
நண்பா!
நெடுங்காலம் நாங்கள் முகம் கண்டு
முன்பு
வருடத்தில் மே மாத முதல் நாளில் சந்திப்போம்.
'புதிய நகரசபை முன்றலிலே'
செங்கொடிகள் தாங்கித் திரிவோம்
தலைவர்கள்,
எங்களுக்கு தெரியாத எத்தனையோ சொல்வார்கள்
கைதட்டி ஆர்ப்பரித்து களிப்போம்.
பிரிந்திடுவோம்.
பொய்யில்லா இந்த 'புரட்சிக் கனவு' களில் மெய்மறந்து தூங்க மேமாதம் வரும்
அப்போ...
மீண்டும் சந்திப்போம்.
வடக்கிருந்து பஸ்சில் வருவார்கள் தமிழர்கள்
கிழக்கிருந்து பஸ்சில் வருவார்கள் சோனகர்கள்
தெற்கிருந்து பஸ்சில் வருவார்கள் சிங்களவர்
எல்லோரும் சேர்ந்து
மேமாத முதல் நாளில்
'வர்க்கப் போர்' பற்றி வாதிடுவோம்.
புரட்சி பற்றித்
தர்க்கங்கள் செய்வோம்
'சமவுடமைச் சமுதாயம்'
பற்றிப் பறைவோம்,
பஸ்சேறித் திரும்பிடுவோம்
கற்பனையில் மீண்டும் களிப்போம்.
இது வழக்கம்.
வடக்கே....
மாவலியின் வருகைக்கு காத்திருந்து துடக்காகிப் போனோம்.
தோழா! உன்முகத்தைக்
கண்டு கனகாலம்
கவிதையிலே..... தேசிய நீர்
மொண்டு குடித்ததுவும்,
மேதினத்திற் கூடியதும்,
உண்டன்றி,
வர்க்க உறவெல்லாம் கற்பனையா?
வந்து பார்.
எங்கள் வடக்கும், கிழக்கதுவும்
எந்தவிதமான இருள் சூழ்ந்து கிடக்கிறது
அரச படைகளென்ற
அரக்கர்களின் பிடியினிலே
கரையும் தமிழ் நிலங்கள்
கண்ணீரில் மிதக்கிறது.
வெள்ளம் போற் பாய்ந்தார்கள்
வெறியர்கள்.
நாங்களதில்
அள்ளுண்டு போனோம்.
அடக்கு முறைக் குள்ளானோம்
பிச்செறியப்பட்ட பிரேதங்கள்
எங்களது
குச்சொழுங்கையெங்கும்
குடல் சரிந்த சடலங்கள்.
பல்லாற் கடித்துப் பதம்பார்த்த முலைகளுடன்
எல்லாம் இழந்துவிட்ட இளம் வயதுக் கன்னியர்கள்
சொன்னால் விளங்காது
செவிக்குள் அடங்காது
என்னென்று இதையெழுதி
எப்படித்தான் புரியவைப்பேன்.
சீனாவில் இருந்து வந்த 'சிவப்புப் பிரசுரங்கள்'
'லெனினின் சிந்தனைகள்'
'மார்க்ஸின்' கட்டுரைகள்
என்னிடத்தில் இப்போது இல்லை
வீடெரிந்த,
அந்நேரம்.... அவையும் அனலிற் கருகியன
உன்னிடத்தில் எல்லாம் உண்டு
என எண்ணுகிறேன்....//
- புதுவை இரத்தினதுரை -