சாயங்காலம் சாயும் நேரம்
மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம்.
ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர்.
அடிவானம் வெளுக்கும் அந்த விடிகாலைப் பொழுதில் வாகனத் தரிப்பிடத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவுகள் இயல்பாய் வாய் திறக்கும் அந்த பெரிய கடடிடத்தினுள் நுழைந்தாள் பிரியா. வரவேற்பு மேசையிலுள்ள நீளமான புத்தகத்தில் தன் வருகையைப் பதிவு செய்தபின் தினமும் பார்த்து பழக்கப்பட்ட பலவேறு முகங்களுக்கும் காலை வணக்கம் சொல்லியபடி தன் குளிர்க்கோட்டை கழற்றி அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொழுவினாள்.
அந்த அதிகாலையிலும் தூக்கம் கலைந்து எழுந்த பல முதியவர்கள் சிலர் பத்திரிகை படித்தபடி, வேறு சிலர் உடற்பயிற்சி மண்டபத்தை நோக்கி நடந்தபடி, வேறு சிலர் சக்கர நாற்காலிகளிலும், கைத்தடி, நடைவண்டி உதவியுடனும் நடமாடிக்கொண்டிருந்தனர். புpரியா எலிவேற்றரில் நுழைந்து நான்காவது மாடிக்குச்செல்லும் எண்ணை அழுத்தினாள். எலி;வேற்றர் நாலில் வாய்பிளக்க 410 இலக்க கதவில் இருமுறை தட்டிவிட்டு காத்திருந்தாள்.
சில நிமிடங்களின் பின் நடைவண்டியின் உதவியுடன் மெல்ல மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்தார் குளோடியா. அவரது வயது 85. இத்தாலிய பெண். இருவரும் காலை வணக்கம் பரிமாறிக் கொண்டனர். அவரோ தன் மனக்குறைகளை சொல்ல யாருமற்ற நிலையில் பிரியாவிடம் கூறுவார். ஆங்கிலம் முழுமையாக தெரியாவிட்டாலும் ஓரளவு பேசக்கூடியவர். அவரது மூன்று மகன்களது குடும்பப் படங்களும் பேரப்பிள்ளைகளினது போட்டோக்கள் அனைத்தும் அழகாக பிரேம் செய்யப்பட்டு மேசையில் இருந்தன.
கணவனோ சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை அருகிலிருந்து கவனிக்கவோ சென்று பார்க்கவோகூட முடியாத நிலையில் தான் இருப்பதான ஆதங்கம் அவரது பேச்சில் தொனிக்கும். அவரது இருகால்களும் வீக்கமாக இருப்பதால் எழுந்து நடமாடுவதுகூட அவருக்கு சிரமமாக இருந்தது. ஆனாலும் அவரது அன்பான பேச்சும் அமைதியான குணமும் பிரியாவை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.
சில நாட்களில் தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கக்கூட நேரமில்லையே என பிரியாவிடம் சொல்லுவார். சொல்லும் போது அவரது தாயுள்ளம் படும் வேதனையை பிரியா உணரத் தவறவில்லை.
ஒருநாள் ‘எனக்கு குளியலறையில் விரிப்பதற்கு கால் வழுக்காத ஒரு விரிப்புத் தேவை உன்னால் வாங்கித் தர முடியுமா? ஏன்று பிரியாவிடம் கேட்கவும் பிரியாவும் ‘நிச்சயமாக அடுத்தமுறை வரும் போது வாங்கி வருகிறேன்” என்று சொன்னதோடு மறக்காமல் அடுத்ததடவை செல்லும்போது கால் வைத்தால் வழுக்காத நல்ல விரிப்பு ஒன்றை வாங்கிக் கொண்டு போனாள்.
‘மிகவும் நன்றி என்று சொல்லி கலங்கிய விழிகளுடன் அதற்குரிய பணத்தையும் உடனடியாகவே கொடுத்தார்.
மார்கழிமாதம் எங்கும் வண்ண விளக்குகளும் அலங்கார கிறிஸ்மஸ் மரங்களுமாக சந்தோச ஆரவாரங்களாக காட்சியளித்தது. ஓவ்வொரு முதியவர்களின் அறைகளிலும் கிறிஸ்மஸ் பரிசுப் பொதிகளும் இனிப்புக்களும் ஒரு இனிமையான சூழலை உருவாக்கியிருந்தது. ஆனால் குளோடியாவின் அறையினுள் எந்தவிதமான மகிழ்வான சூழ்நிலையும் இல்லாதிருப்பதை பிரியா கவனித்தாள். மறுநாள் குளோடியாவின் அறைக்குச் செல்லும் போது தனது வீட்டிலிருந்து கேக் எடுத்துக் கொண்டு போனாள். கேக்கை மேசையில் வைத்துவிட்டு தன் வேலைகள் முடிந்ததும் குளோடியாவின் நன்றியுடனும் நத்தார் வாழ்த்துடனும் வீட்டிற்கு சென்றாள்.
இருதினங்களின் பின் மீண்டும் குளோடியாவின் அறைக்குச் செல்ல வேண்டிய தினம். பல முறை தட்டியும் அறை திறக்கப்படாததால் நர்சிடம் தகவல் சொல்லிய பொழுது நர்ஸ் வந்து தனது சாவியால் கதவைத் திறந்து அறைக்குள் குளோடியா கட்டிவில் படுத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சென்று விட்டார்.
அறையினுள் நுழைந்த பிரியா குளோடியா அருகில் சென்று பார்த்தாள். குளோடியாவால் கை கால்களை அசைக்க முடியவில்லை. வுpழிகளால் பிரியாவை வரவேற்றார். உதடுகள் காய்ந்து நா அசைக்க முடியாமல் கிடந்தாள். இன்றுகாலை கோப்பி குடித்தாயா? ஏன்று கேட்டதற்கு இல்லை என்று தலை அசைத்து பதில் சொன்னார்.
புpரியா குளோடியாவிற்கு கோப்பி கலந்து ஒரு சிறு கேக் துண்டும் எடுத்து ஊட்டி விட்டாள். குளோடியாவால் ஒரு சிறு துண்டு கேக்கிற்கு மேல் உண்ண முடியவில்லை.
கோப்பியை பருக்கியபொழுது இரண்டு மூன்று கரண்டிகள் ஆவலுடன் பருகினார். நன்றி அவரது விழியோரம் கண்ணீராய் வழிந்தது. அவரால் அதிகம் பருக முடியவில்லை. புpரியாவால் அதிகநேரம் குளோடியாவுடன் நிற்க நேரம் போதாததால் மிகுதிக் கோப்பியை பக்கத்தில் வைத்து விட்டு நர்சிடம் அறிவித்துவிட்டு குளோடியாவிடம் விடை பெற்று விட்டாள். அது தான் கொடுக்கும் கடைசிப் பிரியாவிடை என்பது பிரியாவிற்கு அப்போது தெரியவில்லை.
தனது கையினால் அன்போடு ஊட்டப்பட்ட கோப்பி அந்த அன்னைக்கு தான் ஊற்றிய கடைசிச் சொட்டு பானம் என்று மறுநாள் அறிந்தபோது பிரியா அதிர்ந்து போனாள். இருந்தும் ஓர் ஆதரவற்ற தாயின் அந்திம காலத்தில் அவரது தாகம் தீர்க்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் தந்த வரமாக எண்ணி பிரியா இறைவனுக்கு நன்றி கூறினாள்.