Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"உயிர் காக்கும் கடவுள்கள்”
எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பெரிய புராணத்தில் இருந்து ... நல்ல நாள் சோதிடம் எவ்வளவு தூரம் ஆட்சி செலுத்தியது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஒன்று பெரிய புராணத்தில் காணப்படுகிறது. உதாரணமாக, பக்தி காலம் என போற்றப்படும் நாயனார் காலத்தில், சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள். அவ்வாறு ஒருநாளிகை கழித்து, அந்த நல்ல நாளில் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என அழைத்தார். இவரே பின்னாளில் ”கோச்செங்கட் சோழ நாயனார்” என்று புகழப்பெற்றார் என்கிறது புராணம். மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச் செக்கர் நெடும் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ் அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய. கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்பம் நாள் நிரம்பி, விழைவு ஆர் மகவு பெற அடுத்த வேலை அதனில், காலம் உணர் பழையார் 'ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும்' என்ன ஒள் இழையார். 'பிறவாது ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் உற ஆர்த்து எடுத்துத் தூக்கும்' என, உற்ற செயல் மற்று அது முற்றி, அறவாணர்கள் சொல்லிய காலம் அணையப் பிணிவிட்டு, அருமணியை இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து' என் 'கோச்செங் கண்ணனோ' என்றாள். எல்லோருக்கும் நன்றிகள்
-
"மரியாதை" [அந்தாதிக் கவிதை] & "சூடினாள் மல்லிகை"
"மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை" "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில் ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள் கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள் தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க பாடினாள் கவிதை இனிமை கொடுக்க ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!" "வேதம் சொல்லா பாசம் வேண்டி பாதம் பார்த்து கைகள் கோர்த்து இதமான வாழ்வில் காமம் சேர்த்து பதமாய் குழைத்து ஊட்டினாள் உறவை!" "காதல் மலர கனிவு துளிர மோதல் அற்ற புரிந்துணர்வு பூக்க இதழ் இரண்டும் தேன் பருக கூதல் காற்று இரண்டை ஒன்றாக்கியது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025] "பெப்ரவரி இரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய இளையமகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "அன்னை வளர்ப்பில் அறிவோடு வளர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து உன்னை அறிந்து பிறரை உணர்ந்து இன்று கொண்டாடுகிறாய் அகவை நாளை!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும், மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பிறந்த நாள் இன்று உனக்காம் பிரகாசமாய் வாழ்வு ஜொலிக்க என பிரபஞ்சம் எல்லாம் அதிரும் ஒலியில் பிரியம் உடன் வாழ்த்து கூறுகிறோம்!" "எங்கள் இளைய மகளுக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "On this second of February, under the sky so blue, We celebrate the wonder that is you! Our youngest, our pride, a beacon so bright, Mum's greetings are ringing in the sky!" "With steady hands and a heart so kind, Healing smiles, bringing comfort to all! Three little ones and a husband you cherish, In their laughter and love, you truly flourish!" "Wishing our daughter a wonderful birthday filled with love and joy!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 11 நல்லநாள்: மனிதனுக்கு தான் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை. ஆனால் செய்யும் செயல்கள் தோல்வியாய் / பிழையாய் போய்விடுமோ என்ற ஐயம் அவனை பல விடயங்களில் அலைக்கழித்து வருகிறது. கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதுவே இப்படியான நாள் நாள் / நல்ல நேரம் நம்பிக்கைகளை ; வலுபடுத்துகிறது என நினைக்கிறேன். எனவே கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது. காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது! அகநானூறு 86 "கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக், கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென, உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்" திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது.. அகநானூறு 136 "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்," இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது. போர் செய்யப்போகும் மன்னன் நல்ல நாளில் குடையையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான். வாள்நாள் கோள், குடநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார். நெடுநல்வாடை ,பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள [பழங்காலத்தில் நாடாண்ட மன்னர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய காலத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு சாதனமே 'நாழிகை வட்டில்' என்றழைக்கப்பட்டது.] இரு கோல்களின் நிழல்களும் ஒரே நேர் கோட்டில் விழும் நாளில் [இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் / கதிரவன் நேர்மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்] அந்த அரண்மனைக்குக் கால்கோள் [foundation /தொடக்கம்] நடத்தினர் என்று கூறுகிறது. ”விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘ பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (72 – 78)” அதாவது,"சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை" என்கிறது நெடுநல்வாடை. தலைவியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ சந்திக்கச் செல்லும் தலைவன் ‘இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை?’ என்று நாள், கிழமை, சகுனம் பார்த்துப் போவதைத் தொல்காப்பியர் அழகாகச்சொல்வார். "மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை" (133 களவியல்) "ஓரை"யை இக்காலத்தில் "முகூர்த்தம்" என்கிறோம். எனது வயது போன அயலவர் ஒருவர் எமது வீட்டிற்கு ஒரு வெள்ளி கிழமை அன்று வரும் போது, நான் இரண்டு நீண்ட தடிகளை இணைத்த கொக்கத்தடி ஒன்றினால், சிலந்தி வலைகளையும் தூசுகளையும் சிலிங் அற்ற கூரையில் இருந்து அகற்றி கொண்டு இருந்தேன். இன்று வெள்ளி. துப்பரவு செய்ய கூடாது. இது துடக்கு என்று என்னை நிறுத்த சொன்னார். அது மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் பணம் கொடுப்பனவோ அல்லது சொத்துகள் விற்பனைவோ அல்லது வீட்டை காலியோ செய்ய மாட்டார்கள். அது போல வியாழக்கிழமை முதற் தரம் வரும் விருந்தாளிக்கு பொருத்தம் அற்றது என்பார்கள். அது போல செவ்வாய் கிழமையும் ஆகும். பண்டைய காலத்தில் ஒரு ஆசிரமம் (ashram) இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு கொடுத்தது, குரு சீடர்களிடம் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடப்பட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா? அங்கே தான் இருக்கு ஒரு கதையே, ஒருநாள் அந்த பூனை செத்து விட்டது, விடுவார்களா சீடர்கள், வேறு ஒரு பூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் என்றால் பாருங்களேன்! ஏன் செய்கிறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும் என்று கருதுகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 12: "கனவுகள்" தொடரும்
-
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்"
"நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] & "முத்துக் குளிப்போம்" "நண்பர்கள்" [தன்முனைக் கவிதை] "புரிந்துணர்வு மலர நண்பர்கள் தழைத்து ஓங்கும்! பொறாமை சூழ எதிரிகள் வளர்ந்து பெருகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................. "முத்துக் குளிப்போம்" "ஆழத்தில் மலரும் முத்து சிற்பிகள் அழகு கோலத்தில் வண்ணக் கற்கள்! ஈழ நாட்டின் சிலாபத் துறையில் அலைகளுக்கு அடியில் பலபல இரகசியம்!" "ஓடுகளின் அரவணைப்பில் ஆழமாக கிடக்குது வண்ணவண்ண நிறத்தில் கண்களைக் கவருது! தூங்கும் புதையலை வெளியே எடுக்க வாருங்கள் நாம் முத்துக் குளிப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பாசம்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 10 பயணம்: அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர். இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:பூக்களை, சுமங்கலியை அல்லது நீர் நிறைந்த குடத்தை பார்ப்பது ஒரு பயணத்தின் போது நல்ல குறி / நற்சகுனம் என நம்புகிறார்கள். ஒரு கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், சிறப்பு [விசேஷ] பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைப்பதை பார்த்திருப்பிர்கள். ஆனால் ஒரு பூனை, ஒரு துறவி, ஒரு தனி பிரமணன், ஒரு அம்பட்டன் [முடி வெட்டுனர்], ஒரு விதவை [கைம்பெண்] அல்லது ஒரு குழவி ஈனாத பெண் [மலடி] குறுக்கே போனால், பயணம் வெற்றி தராது. ஆகவே வீடு திரும்பி, நீர் பருகி விட்டு, சிறிது நேரத்தின் பின் மீண்டும் பயணத்தை தொடரலாம். இப்படி பல நம்பிக்கைகள் உண்டு. அது மட்டும் அல்ல ராகு காலத்தில் நீண்ட பயணம் செய்ய மாட்டார்கள் . அது போல நீண்ட பயணம் போய் சில காலத்தின் பின்பே திரும்ப உள்ளவர்கள், வெள்ளி கிழமை தமது பயணத்தை ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படி போனால் எப்பவும் திரும்பாமல் விட சந்தர்ப்பம் கூடவாம். அதனால் தான், புதிதாக கல்யாணம் செய்த மண மக்கள், தமது கல்யாண விழாவிற்கு பின் முதல் முறை வெள்ளி கிழமை வீட்டை விட்டு வெளிச்செல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல இறந்த உடலை [பிணத்தை] கூட தகனம் செய்ய, வெள்ளி கிழமை வெளியே எடுக்க மாட்டார்கள். நிமித்தம் [சகுனம்], செல்வவளம் [அதிருஷ்டம் ] இவைகளின் காட்சியே உள்ளங்கை / பாதம் அரித்தல் எனவும் நம்புகிறார்கள். உங்கள் பாதம் ஓயாமல் அரித்து கொண்டு இருந்தால், தோல் வறண்டு [ உலர்ந்தது] போய் இருக்கலாம் ? அது சிவப்பாய் மாறி இருக்கலாம் அல்லது சினமூட்டுவதாக [எரிச்சற்படுத்துவதாக] வும் இருக்கும். ஆகவே மருத்துவர் ஒருவரை நாடுவது நல்லது. ஆனாலும் நீங்கள் மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்தால் இது, இந்த பாத அரிப்பு, நீங்கள், இன்பம் தரக்கூடிய நீண்ட பயணம் ஒன்று போகப் போவதை குறிக்கும். இது வலது உள்ளங்காலாக இருந்தால், உங்களை வரவேற்கக் கூடிய நாடாக அது இருக்கும் அல்லது அங்கு ஒரு முயற்சி செய்து, அதில் பெரு வெற்றி அடைய கூடியதாக இருக்கும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி/Part 11: "நல்லநாள்" தொடரும்
-
"பாசம்"
"பாசம்" "பாசம் ஒரு மென்மையான நீரோடையோ காற்றை சூடாக்கும் ஒரு புன்னகையோ இனிய வார்த்தைகளின் குளிர்ந்த தொடுதலோ உள்ளம் வெளிப்படுத்தும் அன்பின் கனிவோ இருண்ட இதயத்துக்கு கலங்கரை விளக்கமோ ஆன்மாவைப் பார்க்கும் பார்வையின் ஒளியோ?" "பாசம் என்றும் கருணையின் வடிவோ காதல் என்பதும் ஆசையின் ஈர்ப்போ பழகபழக முளை விடுவது நேசமோ உள்ளங்கள் கூடி சேருவது நட்போ அனைவர் மேலும் தோன்றுவது அன்போ பலபல வடிவில் எல்லாம் ஒன்றோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை"
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 04 “நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர். மீண்டும் ஒரு சிலப்பதிகார வரிகளை பார்ப்போம். ‘உழவர் ஓதை, மதகோதை, உடைநீர் ஓதை தண்பதங் கொள் விழவர் ஓதை, சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவிரி! [சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம் – கானல் வரி] அதாவது, உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை … என இரு மருங்கும் ஒலிக்க .. அந்த ஓசையோடு நடக்கும் காவிரிப் பெண்ணே! நடந்தாய் வாழி காவேரி! என்கிறார். பன்னிரண்டாம் திருமுறையில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் 23 ம் பாடலும் நீரின் சிறப்பை இப்படிக் கூறுகிறது. "அனைய வாகிய நதிபரந் தகன்பணை மருங்கில் கனைநெ டும்புனல் நிறைந்துதிண் கரைப்பொரும் குளங்கள் புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய் வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ வியன்கால்." அதாவது அவ்வாறாகிய பாலியாற்று நீர் பரந்து, அகன்ற வயல்களின் பக்கலில் இரைந்து பெருகவரும் திண்மையான பெரிய குளக்கரையில், அங்குள்ள சிறந்த அழகுபடுத்தப்பட்ட காவல் மதகுகள் வாய்திறந்திட, வெளியே சென்று பெருகும் தன்மை கண்டு, அவ் விடமுள்ள வீரராய உழவர்கள் தம் மகிழ்வால் ஒலிசெய, பெருவாய்க் கால்கள், நீர் பெருகி வரும் என்கிறது. இறுதியாக மூத்த சங்க இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம். "வருவிசை புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்" -தொல்காப்பியம், பொருள்:65. விசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை (அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள். கி.மு.5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, கட்டுப் படுத்தி பாசனத்துக்குப் பயன் படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. பாறைகளயும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடல்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் பல வகை நீர் நிலைகளை தமிழ் மொழியில் காண்கிறோம் அவை: "இலஞ்சி , கண்ணி, எரி, மடு, வாவி, வட்டம், நளினி, குட்டம், குளம், கயம், கோட்டகம், மலங்கன், ஓடை, சலந்தரம், தடாகம், பொய்கை, கிடங்கு, கற்சிறை ,கிணறு, கேணி, துரவு. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறை கிணறு, ஊருணி, ஊற்று, கட்டு கிணறு, கண்மாய் (கம்மாய்), கலிங்கு, கால், கால்வாய், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை, தடம், தளிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக் குளம், தொடு கிணறு, நடை கேணி, நீராவி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு, மடை, மதகு, மறு கால், வலயம், வாய்க்கால்" என 50 இற்கு மேற்பட்ட சொற்களை காண்கிறோம். எந்த ஒரு மொழியில் ஆவது இத்தனை சொற்கள் நீர் நிலைக்கு உண்டா? அப்படி என்றால் தமிழில் மட்டும் எப்படி இத்தனை சொற்கள் வந்தன? இது தான் நாம் கவனிக்க வேண்டியது. அதாவது தமிழனின் வாழ்வு, நாகரிகம் ஆதியில் இருந்து இன்றுவரை நீர் வளத்துடன் அமைந்ததே இதற்கு காரணம் என நாம் இலகுவாக கருதலாம். அதனால் தான், நீர்பாசனம் அங்கு முக்கியம் அடைகிறது. அந்த நீர்பாசன முறை பொறி முறையாக்கப்பட்டது தான் ஆதித் தமிழரின் அதி உன்னத வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பதே உண்மை. அதனால் தான் இத்தனை சொற்கள் போலும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று
-
"உறங்காத உணர்வுகள்"
"உறங்காத உணர்வுகள்" வலவன் ஒரு காலத்தில் வளமான வன்னிப் பிரதேசத்தின் மையப் பகுதியில், ஒரு பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தின் தலைவராக இருந்தவர். அவரது பண்ணை ஏக்கர் பரப்பளவில் இருந்தது, அங்கு அவர் தென்றலில் நடனமாடும் நெல் வயல்களையும், ஏராளமாக காய்க்கும் பழத்தோட்டங்களையும் பயிரிட்டார். அவருடைய செல்வம், அவரது கிராமத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவருக்கு வழங்கியது - வராந்தாவுடன் [முன்தாழ்வாரம்] கூடிய ஓடு வேயப்பட்ட பெரிய கல்வீடு, வறண்டு போகாத தோண்டப்பட்ட கிணறு மற்றும் அறுவடையால் நிரம்பி வழியும் தானியக் கிணறு எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது. அவருடைய பிள்ளைகளான அருண் மற்றும் மீரா, அழகான சமீபத்திய வடிவமைப்பு செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள சிறந்த பள்ளிகளில் படித்து வந்தனர். ஆனால், போர் கண்ணுக்குத் தெரியாத பாம்பைப் போல வன்னிக்குள் நுழைந்து, அதன் மக்களின் வாழ்க்கையைப் பயமுறுத்தியது. ஒரு நாள் காலை, இராணுவத்தினர் கிராமத்திற்கு வந்து, அவர்களின் நிலத்தையும் - வீடு, வயல், தோட்டம் உட்பட எல்லா நிலப்பரப்பையும் - பாதுகாப்பு வலயமாக அறிவித்தனர். "உடனடியாக வெளியேறு" என்று அவர்கள் கட்டளையிட்டனர். அவர்கள் எல்லோரும் காவி இருக்கும் துப்பாக்கி முனை போல அவர்களின் வார்த்தைகள் எந்த இரக்கமும் இன்றி கூர்மையாக இருந்தன. அதில் எந்தவித கருணையையும் அவர்கள் காட்டவில்லை. வலவன் தனது முற்றத்தில் இருந்த தன் தாய்மண்ணின் ஒருபிடியை கைகளில் பற்றிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தான், ஆனால் அவனது வேண்டுகோள் ஏளனச் சிரிப்புடனும் அலட்சியத்துடனும் அவர்களால் நிராகரிக்கப்பட்டது. இறுதியில், ஒன்றும் செய்ய முடியா நிலையில், வலவனின் குடும்பம், தங்களால் எடுத்துச் செல்லக் கூடிய விலையுயர்ந்த பொருள்கள், உடைகள் மற்றும் சில பாத்திரங்களைக் மூட்டையாகக் கட்டிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த, உழைத்த பூமியை விட்டுவிட்டு அகன்றனர். பக்கத்து அயல் கிராமத்தில் குடியேறிய பிறகு, குடும்பம் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. வலவன் ஒரு சிறிய நிலத்தை வாடகைக்கு எடுத்தான், ஆனால் போரின் நிழல் அங்கும் பெரிதாகத் தெரிந்தது. ஒரு இரவு, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, தொலைதூர வெடிகளின் சத்தம், அவர்களின் தற்காலிக வீட்டைநோக்கி நெருங்கியது. திடீரென்று, காதை செவிடாக்கக் கூடிய பெரும் சத்தம் [கர்ஜனை] காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது. ஒரு போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட பல குண்டுகள் அருகில் இருந்த ஒரு தெருவில் அமைந்திருந்த வீடுகளின் வரிசையை அழித்தது. சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட, ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறுசிறு குண்டுகளைக் கொண்ட, முறையில் வடிவமைக்கப்பட்ட, ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும் தன்மையினைக் கொண்ட, கொத்துக் குண்டுகளுக்கு அங்கு பஞ்சம் இல்லை. எனவே மக்களுக்கிடையில் பயமும் பீதியும் வெடித்தது. இருளில் ஒருவரையொருவர் இறுகப் பற்றிக் கொண்டு, புகையின் வாசனையையும், அங்கு எரியும் உடல் பாகங்களின் சதையையும், அரைகுறை உயிரில் கதறும் மக்களின் சத்தத்தையும் முகர்ந்தும், கண்டும், கேட்டும், தம் உணர்வுகளையும் திணறடித்தபடி அங்கிருந்து ஓடினர். அவர்களில் வளவனும் அவன் குடும்பமும் கூட இருந்தது. வலவனின் மனைவி, அஞ்சலை, தன் மகன் அருணுக்கு மிக அருகில் பட்டும் படாமலும் குண்டு அல்லது எறிகணையின் வெடிப்பினால் வெளியே வீசப்பட்ட துண்டுகள் பாய்வதைக்கண்டு கதறி அழுதாள். அவர்கள் இரவை ஒரு தரையில் வெட்டப்பட்ட ஒரு நீண்ட குறுகிய பதுங்கு குழியில் [அகழியில்] பதுங்கி இருந்தனர். அந்த பயங்கர நேரத்தில் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். காலை வந்தபோது, அவர்கள் தற்காலிகமாக இருந்த வீடும் இடிந்து விழுந்ததைக் கண்டனர். மீண்டும் இடம்பெயர்ந்த வலவன் தனது குடும்பத்தை காடுகளுக்குள்ளே தற்காலிகமாக அழைத்துச் சென்றான். ஆனால் நீதியற்ற போருக்கு எல்லைகள் இல்லை. ஒரு நாள் "விசாரணை" என்ற சாக்குப்போக்கில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல படை வீரர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எனோ வலவனை விட்டுவிட்டார்கள். வலவன் முழங்காலில் விழுந்து கெஞ்சினான், ஆனால் அவர்கள் அவரை துப்பாக்கியின் பிடியால் தாக்கி அவரது குடும்பத்தை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நாட்கள் வாரங்களாக மாறியது, எந்த வார்த்தையும் படை வீரர்களிடமோ அல்லது அரசிடம் இருந்தோ வரவில்லை. வலவன் தான் அறிந்த, கண்ட ஒவ்வொரு தடுப்பு மையத்தையும், ஒவ்வொரு முகாமையும் தேடினான், ஆனால் அவருடைய குடும்பம் பற்றி எந்த செய்தியையும் அவனால் அறியமுடியவில்லை. போர் தீவிரமடைந்த நிலையில், அவரது அயலவர்களின் கதைகள் வன்னியின் பகிரப்பட்ட சோகத்தை அவருக்கு பிரதிபலித்தன. படையினர் வீசிய கொத்துக் குண்டுகள் தொடர்சியாக வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றிட பலர் உடல் கருகி கொல்லப்பட்டார்கள். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன. படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த பகுதிகளில், ஏராளமான மக்களின் உடலங்கள் சிதறிக் கிடந்தது எனவும் பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டார்கள் எனவும் இதில் காயமடைந்தவர்கள் ஏராளமானோர் அந்த நேரத்தில் அதிகளவில் இறந்து கொண்டார்கள் எனவும் கொல்லப்பட்டவர்களை அங்கு புதைத்துவிட்டு படுகாயமடைந்தவர்களை தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கிருந்த மருத்துவமனை மரண ஓலம் நிறைந்திருந்ததாக எனவும் பள்ளிப் பேருந்து மீதும் கூட எறிகணை வீசியது எனவும் மோதலில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர் எனவும் குடும்பங்கள் பல தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் எனவும் வேகவைத்த இலைகள் மற்றும் சேற்று நீரில் பலர் உயிர் பிழைத்தனர் எனவும் வான்வழித் தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் பதுங்கு குழிகளில் பிரசவித்தார்கள் எனவும் அவர் அறிந்துகொண்டார். "மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச் சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப உழவர் ஓதை மறப்ப விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப" முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள்நடைபெற வில்லை. அப்படியான ஒரு நிலையில் தான் வலவனும் மற்ற ஊர்மக்களும் அவ்வேளையில் இருந்தனர். வலவன் தற்காலிகமாக தங்கி இருந்த அகதி முகாம்களில் பட்டினி மற்றும் நோயினால் மக்கள் இறப்பதை வளவன் கண்டான். ஒரு சிறுவன், தன் கையில் ஒரு பிஸ்கட் துண்டை கையில் வைத்துக்கொண்டு, தன் தாயின் உயிரற்ற உடலைப் பார்த்து அழுவதை அவர் பார்த்தார், பெயர் தெரியாத மற்றும் புதைக்கப்படாத உடல்கள் நிறைந்த வயல் வெளிகளை அவர் பார்த்தார், அங்கு அப்போது காட்டு விலங்குகள் பிணம் தின்னிகளாக சுற்றித் திரிவதைக் கண்டார். மணிமேகலை (6-11-66-69) "சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்" பிணங்களைச் சுடுவோரும், வாளா இட்டுப்போவோரும் [பிணத்தை அங்கு அழுகிக் கெட அல்லது சிதைவடைய எறிந்து விட்டு போவோரும்], அங்கு அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக தோண்டப்பட்ட குழியில் பிணத்தை இடுவோரும், தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போருமாய்ப் [பிணத்தை நறுமணமூட்டி இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பானையுள் வைத்து அதன் வாயை மூடுவோரும்] பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்தார்கள் தமிழர்கள் அன்று என்று சொல்கிறது. இதில் வாளா இட்டுப்போவோரும் என்ற இரண்டாவது முறை, அதாவது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட் பாண்டத்தில் இட்டுப் புதைத்தது, வலவனுக்கு ஞாபகம் வந்தது. இங்கும் இந்த வயல் வெளியில் சிதறிக் கிடைக்கும் உடல்களுக்கும் இந்த நிலையே தான் என்று அவனின் உள்ளுணர்வு கூறியது. அப்படித்தான் அந்த புதைக்கப்படாத உடல்கள் நிறைந்த வயலும் காட்டு விலங்குகள் பிணம் தின்னிகளாக சுற்றித் திரியும் காட்சியும் வலவனுக்குத் தெரிந்தது. வலவனுக்கு, செல்வத்திலிருந்தும் அன்பு மனைவி பிள்ளைகளிலிருந்தும் ஒன்றுமில்லாத ஒரு நிலைக்கு வீழ்ச்சி என்பது வலியும் நெகிழ்ச்சியும் நிறைந்த ஒரு பயணமாக இருந்தது. ஒரு காலத்தில் அவர்களின் செழுமைக்காக பெருமைபட்ட அவரது குடும்பம், வீடு, பண்ணை, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கிராமம் கிராமமாக அலைந்து, ஒவ்வொன்றாக இழந்து இப்போது, வலவன் தன் கைகளால் கட்டிய மண் குடிசையில், அதன் சுவர்கள் பருவக்காற்றுக்கும் வெள்ளத்துக்கு இடிந்து விழக்கூடிய நிலையில், தனிமையில் திண்ணையில் குந்தி இருந்தான். அவரது ஆடம்பரமான கடந்த காலம் போரின் கொடுமையால் அழிக்கப்பட்ட தொலைதூரக் கனவு போல் அவனுக்குத் தோன்றியது. என்றாலும் வலவன் ஒரு நம்பிக்கையில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தார். வயல்களை உழுதல், வேலிகளைச் சரிசெய்தல் அல்லது பொருட்களை எடுத்துச் செல்வதில் என கிடைக்கும் எந்த வேலையும் செய்து, சம்பாதித்த ஒவ்வொரு நாணயத்தையும் அவரது குடும்பத்தைத் தேடுவதற்காக சேமித்தார். இரவில், அவர் நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து, இன்று அருகில் இல்லாத மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏதேதோ பேசினார். ஒரு நாள் மாலை, அவர் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் சென்ற சில உடைமைகளுக்கு இடையே தனது குடும்பத்தின் பழைய புகைப்படத்தைக் கண்டார். அது மங்கி இருந்தது, ஆனால் அவர்களின் முகத்தில் புன்னகை தெளிவாக இருந்தது. அவர் அதை இதயத்தில் தொட்டு தொட்டுப் பார்த்தார், அவரது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. "ஒரு நாள்," அவர் கிசுகிசுத்தார், "நான் உங்கள் எல்லோரையும் கண்டுபிடிப்பேன், அல்லது குறைந்தபட்சம் உங்களுக்கு என்ன ஆனது என்பதை அறிவேன்." தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். வலவனின் கதை எண்ணற்ற வன்னி வாழ் மக்களின் கதைகளில் ஒன்றாகும், இது போரினால் ஒடுக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிரதிபலிப்பாகும், ஆனால் அதன் மக்களின் நெகிழ்ச்சியால் இன்னும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் வலவனின் உடலுக்கு வயதாகிவிட்டாலும், அவரது இதயம் சரணடைய மறுத்தது. அன்பு, இழப்பு மற்றும் நம்பிக்கை போன்ற அவரது உணர்வுகள் ஒருபோதும் தூங்கவில்லை. அவன் இதயத்துக்குள் "உறங்காத உணர்வுகள்" எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொண்டு, அவன் இன்னும் தன் மனைவி அஞ்சலை, மகன் அருண், மகள் மீராவை தேடிக்கொண்டு இந்த சின்ன மண் குடிசையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 09 வேலன் வெறியாட்டம் & தாயத்து இன்னும் ஒரு திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படியும் கூறப்படுகின்றது. "திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும் பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும் கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே." [திருவருட்பா] திருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால், அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும் நீங்கும்; பிறவித் துன்பங்கள் கெட்டொழியும்; இவ்வுலகம் மேலுலகமாகிய இரண்டிலும் புகழ் பரந்து நிலைபெறும்; கவச மணிந்தது போலத் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் கண்ணேறுகளும் துன்பம் செய்யா. ஐங்குறுநூறு 247 – கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது "அன்னை தந்தது ஆகுவது அறிவென் பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி முருகென மொழியும் ஆயின் அரு வரை நாடன் பெயர்கொலோ அதுவே". உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில் தாயத்தைக்கட்டி, முருகனின் கோபத்தை தணிப் பதற்கான சடங்குகளைச் செய்ய, உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ? இப்படி "தாயத்து" பற்றிய செய்தியையும் சங்க பாடல் ஒன்றில் காணக்கூடியதாக உள்ளது. வேலனின் வெறியாடல் பற்றிப் பல சங்க இலக்கியப் பாடல்கள் பேசுகின்றன. தலைவியின் காதல் அறியாத் தாயும் செவிலியும் [foster-mother, வளர்த்த தாய்] தலைவியை வாட்டுவது எதுவென்றறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றே வெறியாடல். இந்த வெறியாடலை வேலன் செய்ததாகவே இலக்கியங்கள் பேசுகின்றன. அங்கே தலைவியின் நோய்க்குக் காரணம் அறிய வெறியாட்டு நிகழ்ந்தது. நடத்தியவள் தாய். முன்னர் பௌர்ணமி நாளன்று நடு இரவில் வெறியாட்டு நிகழும். முருகாற்றுப்படுத்த வேண்டி நடு நாள் களத்தில் நின்று வேலன், முருகனை தன் மீது வரும்படி அழைப்பான். இவ்வாறு வேலன் அழைக்கையில் அச்சம் தருகின்ற முறையில் முருகன் அவன்மீது வந்திறங்குவான். அவ்வாற்றலால் வேலன் வருங்காலம் உணர்த்துவான் என்று சங்க பாடல்கள் கூறுகின்றன. ஐங்குறுநூறு 241 – கபிலர், குறிஞ்சி திணை - தோழி தலைவியிடம் சொன்னது "நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தாள் ஆயின் அவ் வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே." நான் படும் துயரத்தை நோக்கி என் தாய், வேலனை அழைத்தாள், ஆனால் அந்த வேலன் மிகுந்த நறுமணம் கமழும் நாடனுடைய, நட்பு அறிவானா இல்லையா? திருத்தமான பற்கள் உடையோளே! என்று இப்பாடல் கூறுகிறது. இப்படி பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காணலாம். பழைய சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதாவது ஒன்றை நாம் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில், அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை கைவிடாமல் இருக்கின்றோம். அவை தேவையற்றது / பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் நாம் கடைபிடிக்கின்றோம். எனவே, நாங்கள் செய்வது சரியானதா / தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் மட்டுமே, இன்றைய நிலையில், தேவையற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும். அப்படி என்றால் தான் காலத்தின் தேவைக்கு ஏற்றவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும். மற்றவை கைவிடப்படும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 10: "பயணமும் நல்ல நாளும்" தொடரும்
-
"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே"
"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே" "களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே ஒளிரும் அன்பிலே துள்ளுதே கவர்ச்சி எளிய நடையும் அன்னநடை ஆகுமே துளி துளியாய் கொட்டும் மழையிலே!" "கள்ளி இவளின் இடை அழகில் அள்ளி வீசுது கொள்ளை இன்பம் உள்ளம் நாடுது கட்டி அணைக்க வெள்ளம் போல பாசம் பொங்குதே!" "விழிகள் இரண்டும் எதோ பேசுது ஆழி முத்துக்களும் ஈர்ப்பு இழக்குது தோழியாக்க மனது எனோ துடிக்குது அழியாத உறவு இது ஒன்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"மனமும் மனிதனும்"
"மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை"
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 03 தென் இந்தியாவின் விவசாயமும் மிகவும் சிறப்புவாய்ந்ததாக மெசொப்பொத்தேமியா, சிந்து சம வெளி போன்றவற்றுடன் ஒப்பிடும் அளவிற்கு பண்டைய இந்தியாவில் இருந்தது. அங்கு தமிழ் மக்கள் பரவலாக, பல வித பயிர்களைப் பயிரிட்டார்கள். உதாரணமாக, நெல் [அரிசி], கரும்பு, தினை, கருப்பு மிளகு, பலதரப்பட்ட தானியங்கள், தென்னை [தேங்காய்], பயிறு வகைகள் [அவரை], பருத்தி, வாழை, புளி, சந்தன மரம், பலா [பலாப்பழம்], பனை, கமுகு [பாக்கு] போன்றவை ஆகும். அது மட்டும் அல்ல, அங்கு ஒரு முறைப்படுத்தப் பட்ட உழவு, உரம், களை யெடுத்தல், நீர்பாசனம், பயிர் பாதுகாப்பு [ploughing, manuring, weeding, irrigation and crop protection] போன்றவை நடை முறை படுத்தி அதை ஒழுங்காக பின்பற்றினார்கள். இளங்கோவடிகள் புகார்க் காண்டத்தில் பத்தாம் [10] காதையில் காவேரியைப் பற்றிய சிறப்புகளை விவரமாக தரும் போது, அங்கு ஒருவகை நீரிறைக்குங் கருவிவகை, நீர் இறைக்கும் கூடை [இறை கூடை], தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம் [துலா] போன்ற முறையையும் அல்லது கருவியையும் கூறுகிறார். சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். இனி அந்த குறிப்பிட்ட பாடல் வரிகளை பார்ப்போம்: "சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக் குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கு மொலியேயல்லது ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும் ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக" [சிலப்பதிகாரம்/நாடுகாண் காதை 105-111] அதாவது, "கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய மேகங்களின் கூட்டம் மழை பொழிதலால், அக் குட மலையில் தோன்றிய ஆற்று வெள்ளம், கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தி யிடிக்கும் கடுகி [விரைவாக] வருதலையுடைய காவிரியின் புதுநீர் வாய்க்காலின் தலைப்பில் [தொடங்குமிடத்தில்] உள்ள கதவின் [வாய்த் தலைக்கண் கதவின்] மீதெழுந்து விழும் ஒலியல்லாது, பன்றிப்பத்தரும் [ஒருவகை நீர் இறைக்கும் கூடையும் / இறை கூடையும்] பூட்டைப்பொறியும் [நீரிறைக்குங் கருவிவகையும்] ஒலி மிகுந்த ஏற்றமும் [கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஏற்றமரமும்] நீர்மிகும் இறை கூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;" என்கிறது. இந்த வரிகள். கட்டாயம் நீர்பாசனத்திற்கும் பயிர் செய்கைக்கும் அங்கு "ஒருவகை நீரிறைக்குங்கருவி" இருந்ததை சுட்டிக்காட்டுகிறது என எவரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம். மேலும் பல பருவக்காற்று குறைபாடுகள், சரிசமமற்ற மழை வீழ்ச்சி, சிலவேளை நீரின் பற்றாக்குறையும் சிலவேளை நீரின் மிகுதியும் போன்ற தடங்கல்கள் பண்டைய தமிழக தமிழர்களை முன்னைய மெசொப் பொத்தேமியா குடியிருப்பாளர்கள் போலவே, செயற்கை நீர்த்தேக்கம் அல்லது கால்வாய் மூலம் நீர்பாசனம் செய்யத் தூண்டியது. அது மட்டும் அல்ல மன்னன் ஹம்முராபி போலவே வரலாற்று ரீதியாக, சங்க கால மன்னன் கரிகாலன் இதில் முன்னோடியாக உள்ளான். இவன் மண்மேடு எழுப்புதல் [அணை கட்டுதல்], குளம் வெட்ட காடுகளை அகற்றுதல், கால்வாய் தோண்டுதல் போன்ற திட்டங்களை செயலில் வகுத்தான். இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில், "காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி" (பட்டினப்பாலை, 283-284) என்கிறார்.அதாவது கரிகாலன் காட்டை அழித்து, குளம் கட்டி, விளைநிலங்களைப் பெருக்கினான் என்கிறார். இதில் இருந்து நாம் அறிவது, அக்கால மன்னர்கள் ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளில் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நிலைகளில் பாய்ச்சி நாட்டை வளப்படுத்தினர் என்பதாகும். கரிகாலனின் இந்த வழிகாட்டலின் பின், எல்லா மன்னர்களும் பின்பற்றி நீர்த்தேக்கம் மூலம் நீரை சேமித்து நீர்பாசனத்திற்கு பாவித்தார்கள். அங்கு இருக்கும் வாய்க்கால்களை புறக்கணிக்கும் மன்னர்கள் பொதுமக்களால் வெறுக்கப்படுவதுடன், அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் கொந்தளிப்புகளையும் எதிர்நோக்க நேரிட்டது. இப்படியான ஒரு நிலைப்பாட்டை சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். உதாரணமாக புறநானூறு 18 இப்படி அறைகூவுகிறது. "வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே அதனால் அடு போர்ச் செழிய இகழாது வல்லே நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளாதோரே." அதாவது, ‘வயவேந்தே! நீ மறுமைப் பேறாகிய சொர்க்க இன்பம் வேண்டினும், இம்மையில் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் - நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம் - வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாக’ என வற்புறுத்துகிறார். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 04 தொடரும்
-
"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே"
"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே" "அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே வெள்ளம் போல பாசம் அழைக்குதே குள்ள நரிகளும் பின்னால் தொடருதே வெள்ள மச்சான் துணைக்கு வாராயா?" "கிள்ள கிள்ள குறையாத அன்பே துள்ள துள்ள இன்பம் பெருகுதே பள்ளிப் பருவத்தில் பின்னால் அலைந்தவனே உள்ளம் துடிக்குதே காதல் மெய்யே?" "இளந்தாரிப் பெடியனே கட்டிளம் காளையே இளவட்டப் பொண்ணு காத்திருப்பது தெரியாதா மேளம் கச்சேரி வைப்பமா கல்யாணத்துக்கு தாளம் தப்பாமல் முத்தம் போடுவோமா?" "பொய் பறையாதே கண்டு கனகாலம் பொருத்தம் இருவருக்கும் அயத்துப் போனாயா பொம்பிளை இங்கே காத்து நிக்குதே பொறுத்தது போதும் சங்கதி சொல்லையா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 08 கண்ணேறு [திருஷ்டி]: தீய கண்பார்வை, பிறர் பொறாமை, வயிற்றெரிச்சல், முதலியன கொண்டு பார்க்கும் கண்பார்வையால், ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும் தீங்கை 'கண்ணேறு' என்று கூறுவர். ”கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” ‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’ “ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.” என்று முன்னோர்கள் பழமொழிகள் கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது. ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ கணித்துக் கூற முடியாது என்பார்கள். மேலும் ‘கண்ணேறுபடுதல்’ என்ற செய்தியை நாட்டுப்புறப்பாடல் ஒன்றும் பதிவு செய்துள்ளது. "சீலம் பலகையிலே செவ்வந்திப் பூ மெத்தையிலே சீமானும் செல்வியும் சேர்ந்து விளையாடையிலே எந்த சண்டாளி பார்த்தாளோ. . . எப்படித்தான் கண்ணூறு போட்டாளோ. . . சீலம் பலகைவிட்டு செவ்வந்திப் பூ மெத்தைவிடர் சீமானையும் தப்பவிட்டு - இப்போ செல்வியவள் வாடுறாளே. . .!" என்பதுதான் அப்பாடலாகும். பெரியவர்களை விட குழந்தைகளைத் கண்ணூறு [திருஷ்டி / evil eye] குற்றம் [தோஷங்கள் / blemish] நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன என நம்பப்படுகிறது. நமக்கு அறிமுகமில்லாத பிறர் அடிக்கடி குழந்தையை பார்க்க அல்லது தொட்டு தூக்க, திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றும் மனதளவில் மாசும், பொறாமை உணர்வும் கொண்டவர்கள் சிசுக்களைப் பார்க்கும் போது கண் திருஷ்டி தோஷம் ஏறபட வழிகளுண்டு எனவும் நம்மவர்கள் எனோ நம்பத் தொடங்கி விட்டார்கள் . அது தான் எமக்குள்ள பிரச்சனை. மற்றும் படி மற்றவர்களின் பார்வையல்ல. உண்மையில் திருஷ்டி என்பது என்ன? த்ருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். எல்லாருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாக கூட இருக்கலாம் அல்லவா? அந்த தீயதை போக்கும் விதமாக பல்வேறு திருஷ்டி கழிக்கும் பழக்கங்கள், ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிவிட்டது. நான்கு காய்ந்த மிளகாய், அத்துடன் கல்லுப்பு சேர்த்து வலது கையில் எடுத்துக் கொண்டு தாய்க்கும் குழந்தைக்கும் தலையில் இருந்து கால் வரை உடல் முழுவதும் முன்னும் பின்னும் தடவிய பின், முதலில் வலது பின் இடது பக்கமாக தலையை மூன்று சுற்று சுற்றி, மிளகாய் + உப்பு இரண்டையும் அடுப்பில் போட வேண்டும் அல்லது வீட்டுத் தோட்டத்திலே ஏதாவது ஒரு மூலையில் தீ இட்டு அதில் போடவேண்டும். அது தான் அந்த முட்டாள் தனமான செய்கை. மேலும் குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண் திருஷ்டியும் அண்டாது எனவும் நம்புகிறார்கள். இப்படி பல முறைகளை கண் மூடித் தனமாக பின்பற்றுகிறார்கள் நம்மவர்கள். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும் போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும் என்று நம்புகிறார்கள். கண்ணேறு பொம்மை என்பது சில தமிழர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொங்கவிடப்படும் ஒரு வகைப் பொம்மை அல்லது பொம்மைத் தலை ஆகும். பார்ப்பதற்கு அசுரர்கள் போல் இருக்கும். இவை அந்த இடங்களை கண்ணூறில் இருந்து அல்லது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிலரால் நம்பப்படுகிறது. பிற இனத்தவர்கள் மத்தியிலும் இவ்வாறான பொம்மைகள் தொங்கவிடப்படும் வழக்கம் உள்ளது. ‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணையீதோ.' [திருவருட்பா / வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) பாடிய பாடல் இது.] இசையமைந்த சொன்மாலை மொழியும் அடியார்கள் [புலவர்கள், ஞானிகள்] நாளும் தொழுது வாழ்த்தும் நின் திருவடி யழகைப் பாவியாகிய யான் பார்ப்பேனாயின் கண்ணேறு படுமென நினைத்துக் கனவிலேனும் காட்டுக என்று வேண்டினாலும் காட்டாதொழிகின்றாய்; இது தான் நின் கருணையோ, கூறுக என வள்ளலார் பாடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 09 "வேலன் வெறியாட்டம் & தாயத்து" தொடரும்
-
"பனியில் நனைந்த சூரியன்"
"பனியில் நனைந்த சூரியன்" "பனியில் நனைந்த சூரியன் தெரிவதில்லை பணியில் நேர்மை காட்டியவன் வாழ்ந்ததில்லை குனிந்த இனம் என்றும் பிழைத்ததில்லை இனித்த பலகாரம் ஆரோக்கியம் தருவதில்லை!" "நனைந்து நடுங்கும் குளிரில் உடல் கனைத்து அதிர்க்கும் பொங்கு கடல் அனைத்து உயிர்களும் விரும்புவது கூடல் தினைப் புனம் காப்பது மடவரல்!" "சூரியன் உதிப்பது உலகம் வாழ நரி ஊளையிடுவது இரவில் மட்டுமே திரி எரிவது வெளிச்சம் கொடுக்க அறிந்தால் இவை சமூக நீதியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கனைத்து = ஒலித்து அதிர்க்கும் = அதிரும்
-
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை"
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 02 பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மனிதன் தோண்டிய கிணறுகள் இன்னும் ஒரு நன்னீர் வழங்கும் முக்கிய இடமாக, குறிப்பாக வட சமவெளியில் இருந்தது. அங்கு டைக்ரிஸ் நதியை கட்டுப்படுத்துவது கடினமாகவும் மண் அடர்ந்தும் இருந்தது. தொடக்கத்தில் கிணறுகள் நிலத்தில் ஒரு செங்குத் தான குழியாக இருந்தது. இங்கு ஒருவர் கயிறு ஒன்றில் வாளியை நீருக்குள் குழியின் அடியில் இறக்குவார். பின் அது நீரை எடுத்ததும் மேலே இழுப்பார். இந்த செய்முறை கி மு 1500 ஆண்டளவில் கப்பியின் அறிமுகத்தால் எளிதாக்கப்பட்டது. மேலும் இன்றைய பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் அமைந்த பண்டைய நாகரிகமான சிந்து சம வெளியும், அதிநவீன நீர்பாசனத்தையும் சேமிப்பு முறையையும் மேம்படுத்தியது. உதாரணமாக கி மு 3000 ஆண்டளவில் கிர்னாரில் நீர்த் தேக்கங்களையும் கி மு 2600 ஆண்டளவில் கால்வாய் நீர் பாசனத்தையும் கொண்டிருந்தது. பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகள் விசாலமான கால்வாய் தொகுதிகளை இப்பொழுது கொண்டிருந்தாலும், அவை பண்டைய சிந்து சம வெளி நாகரிகத்தில் காணப்பட்ட கால் வாய்களுடன் ஒத்து இருக்கின்றனவா என்பது எமக்குத் தெரியாது. எப்படியாயினும் கி மு 1700 ஆண்டு அளவில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர் நீர்பாசன கலையை இந்தியாவிற்குள் கொண்டுவர கட்டாயம் வாய்ப்பு இல்லை. சிந்து சம வெளியில் காணப்பட்ட வடிகால் அமைப்பு, கழிவு நீர் அமைப்பு போன்றவற்றை முற்றிலுமாக ஆய்வுகள் செய்யப்பட்டு இருந்தாலும் நீர்பாசன அமைப்பை பற்றிய எந்த ஒரு தரவுகளும் அல்லது பண்டைய கால் வாய்களுக்கான எந்த ஒரு தடயமும் அங்கு காணப்பட வில்லை. வறண்ட காலத்திற்கான எந்த ஒரு ஆயத்தமும் வெளிப்படையாக செய்யாததும் மற்றும் முத்திரைகளில் காட்டு மிருகங்கள் காணப்படுவதும் சிந்து, பஞ்சாப் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகம் என்பதை எமக்கு எடுத்து காட்டுகிறது. இந்தியாவில் இயந்திரத்தின் உதவியால் இயக்கிய முதல் சாதனம் நீராலைச் சக்கரம் ஆகும். மொகெஞ்சதாரோ. ஹரப்பா போன்ற இடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போது மண்ணுக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பழமைச் சின்னங்கள் பண்டைய நீர் தூக்கும் சாதனங்களுக்கு சான்றாக உள்ளன. மொகெஞ்சதாரோ மட்பாண்டங்களை ஆய்வு செய்த சார் ஜான் மார்ஷல், நீராலைச் சக்கரத்திற்கு இவை பாவித்திருக்கலாம் என தனது கருத்தை தெரிவித்துள்ளார். அங்கு கண்டு எடுக்கப்பட்டு "குழப்பம் தந்த சாடிகள்" என அழைக்கப்பட்ட பண்டைய சிந்து சம வெளி காலத்து சாடிகள், இன்றைய கிழக்கு அருகே அல்லது மத்திய கிழக்கு பகுதிகளில் நீரை தூக்க பாவிக்கப்படும் நீராலைச் சக்கரத்தை போன்ற ஒரு கருவியில் அன்று இணைப்பதற்காக தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என வாதிடுகிறார். அவருடைய இந்த கருத்து, எர்னெஸ்ட் மக்கியின் குறிப்பு மூலம் மேலும் உறுதிப்படுத்தப் படுகிறது. அவரின் குறிப்பு இப்படி கூறுகிறது: "சிந்து சம வெளி மக்களுக்கு நீராலைச் சக்கரம் தெரிந்தது இருந்தது என்பதற்கான நேரடியான சான்றுகள் இல்லாவிட்டாலும், அந்த குறிப்பிட்ட சாடிகளின் வடிவமும் அதன் அமைப்பும் அது உறுதியாக அப்படி ஒரு நீராலைச் சக்கரத்தில் பாவித்திருக்கலாம் என்பதை பரிந்துரைப்பதுடன், அது மேலும் ஏன் பல எண்ணிக்கையான அவ்வகை சாடிகள் செய்யப்பட்டு பின் உடைந்து உள்ளன என்பதையும் விளக்குகிறது" என்கிறார். இது அங்கு தொழில் நுட்பத்தில் முன்னேறிய சாதனங்கள் பாவனையில் இருந்திருக்கலாம் என்பதை தெட்ட தெளிவாக உணர்த்துகிறது. ஆகவே நாம் மொகெஞ்சதாரோ. ஹரப்பா மக்களுக்கு அன்றே நீராலைச் சக்கரம் தெரிந்து இருக்க வேண்டும் என்றும், அதை நீர்பாசனத்திற்கு அவர்கள் பாவித்திருக்க வேண்டும் என்றும், முடிவு எடுக்கலாம். எனினும் "Month for raising the Water Wheels" என்ற சுமேரியன் குறிப்பில் இருந்து அது ஒரு தொடக்க கால நீராலைச் சக்கரமாக இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு. ஆனால் வேறு ஒரு சான்றும் இல்லை. மொகெஞ்சதாரோ. ஹரப்பா பகுதிகளில் அகழ்வு ஆராச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆழமான நீள் சதுர கட்டிடம் அதிகமாக இந்தியாவில் கட்டப்பட்ட முந்தய குளமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். பிரமான வேதத்திலும் கிணறு, கால்வாய், அணை குறிக்கப்பட்டுள்ளன. ரிக் வேதம் "KULYA" என்ற சொல்லை குறிக்கிறது. இதன் நேரடி கருத்து மனிதனால் செய்யப்பட்ட ஆறு - அதாவது கால்வாய். அதேபோல "AVAR" என்ற சொல்லையும் அடிக்கடி குறிக்கிறது. இதன் கருத்து கிணறு ஆகும். மேலும் அதே வேதத்தில் ஒரு ஆழமான, நேர்த்தியான கிணற்றில் இருந்து ஒரு பொறி அமைவு மூலம் நீர் எடுப்பதையும் எடுத்து உரைக்கிறது. வேதங்கள் சிந்து சம வெளி மக்களை வென்ற பின் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் எமக்கு எடுத்து காட்டுவது என்னவென்றால் நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே நீர்பாசனம் நன்றாக அடையாளங் கண்டுகொள்ளப் பட்டுள்ளது என்பதே. இந்த மெசொப்பொத்தேமியா [சுமேரியர்], சிந்து சம வெளி மக்கள் தமிழர்களின் மூதாதையார் எனக் கருதப்படுகிறது. கி மு 1700-1500 ஆண்டு அளவில் சிந்து சம வெளி நாகரிகம், முற்றாக நிலைகுலைந்த பின், அங்கு இருந்து தென் இந்தியா குடியேறிய பொழுது, அந்த மக்கள் தங்களுடன் நீர்பாசனம் பற்றிய அறிவையும் அதன் முக்கியத்தையும் எடுத்து சென்று இருக்கலாம் என நாம் கருதலாம். என்றாலும் சங்க இலக்கியம் நீராலைச் சக்கரம் போன்ற சாதனங்களின் பாவனைகளின் ஆரம்ப இடத்தைப் பற்றி தெளிவாக ஒன்றும் கூறவில்லை. எப்படி ஆயினும், நீரை தூக்கும் கருவிகள், அது போன்ற மற்றும் எளிமையான கருவிகளை தெளிவாக அகநானுறு, மதுரை காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் போன்றவற்றில் குறிப்பிட்டு உள்ளது. இதைத் தவிர தமிழ் கல் வெட்டுகளிலும் துலாவை பற்றியும் பனை ஓலை கூடை / வாளி பற்றியும் குறிக்கப்பட்டு உள்ளது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 தொடரும்
-
"உயிர் காக்கும் கடவுள்கள்”
"உயிர் காக்கும் கடவுள்கள்” முல்லைத்தீவில் ஒரு இரத்தச் சிவப்பு நிறம் கொண்ட அடிவானத்தின் பின்னால், சூரியன் அன்று மூழ்கியது. தொலைத்தூர எறிகணையிலிருந்து எழும் புகையால் மாலைக் கதிரவனின் ஒளி மறைக்கப் பட்டிருந்தது. காடுகளை அண்டிய ஒரு சிறிய, தற்காலிக மருத்துவமனையில், அண்மையில் திருமணம் செய்த கணவன் மனைவியான, மருத்துவர் மேன்மன் மற்றும் மருத்துவர் தாரகை அருகருகே வேலை செய்தனர். அவர்கள் தங்கள் இளமைக் குடும்ப வாழ்வை மற்றும் அதில் புதைந்து இருக்கும் இன்பத் துளிகளை அனுபவிக்காமல், தம் மக்கள் படும் வேதனைக்கும் துன்பத்துக்கும் ஆதரவாகக் கைகொடுத்து, மருத்துவ உதவிகளை தன்னலமற்று, தங்களால் இயன்றவரை செய்ய முடிவெடுத்து, இன்று அங்கு கடமையாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியாது. தாரகை என்றால் கூட்டமாக ஒளிர்பவை அல்லது விண்மீன்கள் என்று பொருள்படும். அதேபோல மேன்மன் என்பது மேன்மையான ஆக்கம் நிறைந்தவன். இரண்டு பேரின் கூட்டும் சேவையும் அவர்களின் பெயருக்குளே அடங்கிவிட்டன. அவர்கள் இருவரும் யாழ்ப்பாண மருத்துவப் பீடத்தில் தான் முதல் முதல் சந்தித்தனர். நோய்களைக் குணப்படுத்துவதற்கான பகிரப்பட்ட ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புகளுக்கு [அபிலாஷைகளுக்கு] மத்தியில், அவர்களின் காதல், பல்கலைக்கழக வளாகத்திலும் பண்ணைக்கடல் ஓரத்திலும் நூலகத்திலும் மலர்ந்தது. அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, அமைதியான வீடு மற்றும் குழந்தைகளின் கனவுகள் அவர்களின் உரையாடல்களை நிரப்பின. ஆனால் அவர்களின் தாய்நாட்டில் போர் வெடித்தபோது, எண்ணற்ற அப்பாவி உயிர்கள் சிதைந்தபோது, மேன்மன்னும் தாரகையும் உன்னதமான முடிவை எடுத்தனர். "தாரகை, போரின் கொடூரத்தால், அப்பாவிக் குழந்தைகள் இறக்கும் போது, தாய்மார்கள் தங்கள் மகன்களை இழக்கும் போது, நாம் மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு குளிரூட்டிய அறையில், எல்லா வசதிகளுடனும் இருந்து சேவை செய்யமுடியாது. எம் மக்களை, நாம் எம்மால் இயன்றவரை, எப்படியும் உதவி செய்யவேண்டும்" என்று மேன்மன், குரலில் உறுதியுடன் அவளுக்குச் சொன்னான். ஆனால், தாரகை தயங்கினாள், அவளுடைய இதயமே உடைந்தது. திருமணம் செய்து சில மாதங்களே, இன்னும் ஒரு குடும்பவாழ்வு துளிர்விடவில்லை. அவளின் கனவுகள், ஆசைகள் ... ஒரு கணம் திகைத்தாள், என்றாலும் அவள் தலையசைத்தாள். ஒன்றாக, அவர்கள் கட்டியெழுப்ப நினைத்த வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு புது அடியெடுத்து வைத்தனர். ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் வன்னியையும் முல்லைத்திவையும் கைவிட்ட நிலையில், வான்படையும் கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாலையையும் விட்டுவிடாமல் தாக்கிய அந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் மேன்மன்னும் தாரகையும் தமது உயிர்களைச் துச்சமென மதித்து, மக்களுக்காக பணியாற்றிட இருவரும் அங்கு புறப்பட்டனர். மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகில் தான், அதே மருத்துவர்களும் பல இடர்களையும் ஆபத்துகளையும் அங்கு சந்தித்தனர். எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவையாக, அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையும் மக்களின் வலிகளையும் கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, அங்கு இன்னும் சில மருத்துவர்கள், குறிப்பாக சத்தியமூர்த்தி, வரதராஜா, ஷண்முகராஜா, இளம்செழியன் ஆகிய மருத்துவர்கள் கடமையாற்றிக்கொண்டு இருப்பது மேன்மன்னுக்கு மேலும் தெம்பு கொடுத்தது. அவர்கள் இருவரும் முல்லைத்தீவிற்கு கடமையாற்ற சென்ற பொழுது, இடிந்து விழுந்த சுவர்கள் மற்றும் குண்டுகளால் துளைக்கப்பட்ட மேற்கூரைகளால் அந்த மருத்துவமனை இருந்தது. மின்சாரம் இல்லை, மண்ணெண்ணெய் விளக்குகள் மட்டுமே இரத்தக்கறை படிந்த தரையில் ஒளிரும் நிழல்களை வீசியது. மருந்து மற்றும் மற்ற பொருட்கள் குறைவாக இருந்தன; நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அங்கு ஒரு ஆடம்பரமாகவும், சுத்தமான நீர் அங்கு ஒரு புதையல் [பொக்கிஷம்] போலவும் இருந்தது. நோயாளிகள் பாய்கள் அல்லது வெற்று தரையில் படுத்துக் கொண்டு, தாழ்வாரங்களுக்குள்ளும் நிரம்பி வழிந்தனர். ஒரு நாள், ஏழு வயதுக்கு மேல் இல்லாத ஒரு சிறுவன், அவனது உடம்பில் வெடிகுண்டு அல்லது பிற சாதனம் வெடிக்கும் போது சிதறிய சிறிய உலோகத் துண்டுகளால் துளைக்கப்பட்ட காயங்களுடன் அனுமதிக்கப் பட்டான். தாரகை அவனைக் குணப்படுத்த தன்னால் இயன்ற எல்லா வழியிலும் ஈடுபட்டாள், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தாலும் அவள் கைகள் உறுதியாகச் சிகிச்சை அளித்தது. மேன்மன் அவளுக்கு அருகில் இருந்து சிகிச்சைக்கு உதவினான். அவன் அமைதியான குரலில் அவளுக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்தாலும், அவன் கண்கள், எதோ ஒரு பயத்தில் இருந்தது. சிறுவனின் தாய் வெளியில் காத்து நின்றது மட்டும் அல்ல, தன் மகனின் புகைப்படத்தை கண்ணீருடன் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டு நின்றாள். தாரகையும் மேன்மன்னும் கூட தங்களுக்குள் பிரார்த்தனை செய்தார்கள். அங்கு அப்பொழுது இருந்த வசதியில் அவர்களுக்கு ஒரு உறுதியையும் வலிமையையும் கொடுக்க அது ஒன்றே துணை புரிந்தது. அன்று இரவு அந்தச் சிறுவன் உயிர் பிழைத்தான். அவனது தாய் நன்றியுடன் அழுது கொண்டு, மருத்துவர்கள் இருவரினதும் கைகளை முத்தமிட்டாள். ஆனால் தாரகையும் மேன்மன்னும் தங்கள் அறைக்குத் திரும்பிச் செல்லும்போது, தம்பதிகளின் புன்னகை எனோ மறைந்தது. "அவனைப் பற்றி நினைப்பதை இன்னும் என்னால் நிறுத்த முடியாது, மேன்மன்," தாரகை அவனின் கையைப் பிடித்துக்கொண்டு கூறினாள். “நான் காப்பாற்றும் ஒவ்வொரு குழந்தையும் ... என் கண்களில், நமக்கு இன்னும் பிறக்காத, அந்த வாய்ப்பு இல்லாமல் போன குழந்தையாகத் தான் பார்க்கிறேன்." என்று கவலையுடன் தெரிவித்தாள். "படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக் குறை இல்லை தாம் வாழு நாளே." பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டுத், தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும். அது தான் தாரகையின் கவலை. மேன்மன் அவளை அருகில் இழுத்துக் கொண்டான். “எனக்குத் தெரியும் தாரகை. ஒவ்வொரு முறையும் நீ சோர்வாக இருப்பதைப் பார்க்கும்போது, நான் உன்னிடம், உன் ஆசையை அறியாமல், என்னுடன் வந்து இந்தச் சேவையை செய்யும்படி கட்டாயப்படுத்தி விட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்றான். ஆனால் அவளுக்கு நன்றாகத் பதில் தெரியும். அவர்களின் வாழ்க்கை, ஒரு உன்னத நோக்கத்துக்கா அர்ப்பணிக்கப் பட்டுள்ளது என்பது! என்றாலும் அவளின் மனம் மற்றும் இளமை இன்னும் எதோ ஒன்றைத் தேடிக்கொண்டு தான் இருந்தது. என்றாலும், தியாகங்கள் எப்பவும் கனமானவை என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். அவர்களின் குடும்பத்தினரின் கடிதங்கள் இன்னும் படிக்கப்படாமல் ஒரு மூலையில் இருந்தது. அவர்களால் ஆற்ற முடியாத காயம் போல், அவர்களின் பெற்றோரிடமிருந்து தூரம் வளர்ந்தது கொண்டே போனது. "அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம் அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்" என்று ஆரம்பித்த உலகநாதரின் உலக நீதி: 11, "வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை ஏதேது செய்வானோ ஏமன் தானே!" என்று முடிவடைகிறது. இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை போற்றிப் பாடுவதுடன், அதில் குறிப்பாக குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய் தீர்த்த மருத்துவன் அடங்கி இருப்பதைக் காண்க. மருத்துவம் புரிந்தவர்கள் மருத்துவர்கள் அல்லது வைத்தியர்கள் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டார்கள். இதில் திறன் பெற்ற மருத்துவர்கள் தொல்காப்பியத்தில் “நோய் மருங்கறிஞர்” (தொல்காப்பியம் சொல்: 183) என்று சிறப்பாக அழைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியான சேவையைத்தான் இருவரும் போர்சூழலிலும், தங்கள் தனிப்பட்ட ஆசைகளை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு, தங்கள் புனித சேவையை அங்கு அர்பணித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு வைத்தியசாலையில் பல தட்டுப்பாடுகள் நிலவிய போதிலும், நெருக்கடிகள் இருந்த போதிலும், அவர்களின் கடமையும் நம்பிக்கையும் மற்றும் முடிவில்லாத அவர்களின் ஏக்கமும் குறைந்தபாடில்லை. ஒரு நாள் மாலை, கடும் துப்பாக்கிச் சூட்டு சத்தத்திற்கும் மத்தியில், பிரசவ வலியில் ஒரு பெண் வந்தாள். தாரகையும் மேன்மன்னும், அங்கு இருந்த ஒரே ஒரு மண்எண்ணெய்யில் எரியும்அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், இடிபட்ட குப்பைகளிலிருந்து மீட்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை செய்தனர். பல மணிநேர முயற்சிக்குப் பிறகு, குழந்தையின் முதல் அழுகை அங்கு, துப்பாக்கிச் சூட்டு சத்தத்தையும் குண்டு சத்தத்தையும் மீறிக் காற்றை நிரப்பியது. அந்த பெண், பிறந்த குழந்தையின் தாய், நன்றிக் கண்ணீருடன் தாரகையைப் பார்த்தாள். “நீங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்து, என் குழந்தையைக் காப்பாற்றிய உங்களுக்கு என்றென்றும் என் நன்றியும் வாழ்த்துகளும்” என்றாள். ஆனால், இது போன்ற தருணங்கள் தான் அவர்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியது. ஆனால் இத்தனை அவலங்களுக்கும் மத்தியில் போர் நின்றபாடில்லை. ஆசியாவிலே மிகப் பெரிய இரத்தம் நிரம்பிய சேரியாக, கொலையும் மரணமும் மலமும் கண்ணீரும் மிதக்கும் சேரியாக மாறிக்கொண்டு இருந்தது. முப்பதாண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக தமிழ் மக்களின் துயரம் நீண்டுகொண்டே இருந்தது. இது இறுதி போரல்லவா! எனவே அதற்குத் தகுந்த மாதிரியே அழிவும் துயரமும் மிகவும் உச்சத்தில் இருந்தது. ஒரு மோசமான நாள், மருத்துவமனையும் எறிகணைகளால் தாக்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காட்டுக்குள் ஓடினர். மேன்மன்னும் தாரகையும் தங்களால் இயன்ற மருத்துவப் பொருட்களை எடுத்துக் கொண்டு, காயமடைந்த குழந்தைகளையும் மற்றவர்களையும் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அந்தநேரம் வேறுவழி ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், பாதுகாப்பு வலயங்களாக அரசு அறிவிக்கப்பட்ட இடங்களிலும் எந்தப் பாதுகாப்பும் அங்கு இருக்கவில்லை. உதாரணமாக, பாதுகாப்பு வலையத்திற்குள் சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களைக் காட்டும் படம் ஒன்றை, இலண்டனிலிருந்து வெளிவரும் ‘த டைம்ஸ்' எனும் ஆங்கில நாளிதழ் எலிகாப்டரில் இருந்து மே 23, 2009 அன்று எடுத்துள்ளது. சிக்குண்ட மக்கள் மணல் மூட்டைகள், சாக்குப் பைகள், தலையணை உறைகள் மற்றுமுள்ள வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைக் கொண்டு ஏவுகணை, பீரங்கித் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காலிகப் பதுங்குக் குழிகளை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதை விளக்குகிறது. எரிபொருள் அல்லது ராணுவக் கருவிகள் இல்லாதிருப்பது, முகாம் மற்றும் அதிலுள்ள வசதிகளில் உள்ள, தற்காலிகத் தன்மையின் மூலம், அது பொதுமக்களின் வாழ்விடமே என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளது. அன்று இரவு முழுவதும் ஒரு பதுங்கு குழியில் தாரகை மற்றும் மேன்மன் மறைந்திருந்தனர். அப்பொழுது, "எவ்வளவு காலம் இப்படியே இருக்க முடியும்?" என்று தாரகை கிசுகிசுத்தாள். "இங்கு அவலப்படும் மக்களுக்கு, நாங்கள் தேவைப்படும் வரை," என்று மேன்மன் பதிலளித்தான், இருப்பினும் அவனது குரல் சந்தேகத்தால் நடுங்கியது. முல்லைத்தீவில் மேன்மன்னும் தாரகையும் மருத்துவர்களை விட அதிகமாக மக்களால் நேசிக்கப் பட்டார்கள். காயமடைந்தவர்களுக்கு, அவர்கள் தேவதைகள். துக்கமடைந்த தாய்மார்களுக்கு, அவர்கள் நம்பிக்கை விண்மீன் [நட்சத்திரம்]. அனாதைக் குழந்தைகளுக்கு, அவர்கள் குடும்பம். "பேர்ஆ யிரம்பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப் பானை, மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்துஅருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானை, புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே, ஆற்றநாள் போக்கி னேனே." என்று திருநாவுக்கரசு சுவாமிகள், தான் வணங்கும் கடவுளை "மருந்துமாகித் தீராத நோய்களைப் போக்கியருள வல்லானாய்" என்று, ஒரு வைத்தியநாதராகப் பாடுகிறார். அதாவது ஒரு "உயிர் காக்கும் கடவுள்" என்கிறார். மருத்துவர்கள் மேன்மன் மற்றும் தாரகை, அவர்களின் இந்தப் புனித சேவையால், அவர்கள் உயிர்காத்த ஒவ்வொருவர் இதயத்திலும் வைத்தியநாதர்களாகவே, கடவுளாகவே இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 07 வீடும் சமையல் அறையும்: பல நூறு ஆண்டுகளாக பழங்கதைகளும் மூட நம்பிக்கைகளும் சமையல் அறை பற்றி மலர்ச்சியுற்று இன்னும் மக்கள் இடையில் இன்று வரை தங்கியிருகிறது. சமையல் அறை பண்டைய தமிழர்கள் மத்தியில் ஆலயம் மாதிரி கருதப்பட்டதுடன், அங்கு அதி கூடிய சுகாதாரமும் பேணப்பட்டது. அவர்கள் காலணியுடன் [சப்பாத்து, மிதியடி] அங்கு நுழைய மாட்டார்கள். அப்படி சென்றால் கடவுளின் சீற்றத்துக்கு உள்ளாவார்கள் என நம்பினர். மாதவிடாய் கொண்ட பெண்கள், அந்த காலங்களில் தம்மை துப்புரவுக்கேடான தோற்றம் என கருதி, சமையல் அறைப் பக்கம் போக மாட்டார்கள். இப்படியான நம்பிக்கைகள் மண் அடுப்பு ஒரு மூலையில் அமைந்த பாரம்பரிய சமையல் அறை இருந்த பொழுது உண்டாகின. தரையில் வைக்கப்பட்ட இலையிலோ அல்லது தட்டிலோ குடும்பம் இருந்து சாப்பிடுவது அப்ப வழக்கமாக இருந்தது. ஆகவே இது சமையல் அறை மிக துப்பரவாக இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இன்னும் ஒரு பழக்கமும் அப்போது இருந்தது. அதாவது சாப்பிட ஆரம்பிக்கும் முன், தமது முன்னோரை நினைவு கூர்ந்து தண்ணீரை தமது தட்டையோ இலையையோ சுற்றி தெளிப்பது. உண்மையில் அப்படி தெளிப்பது, தடுப்பு அரணாக தரையில் ஊரும் எறும்பு மற்றும் பூச்சிகள் சாப்பாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்க்கே. மேலும், ஒரு பயணத்தின் போது, பூனை குறுக்கே போவது அன்று விரும்பப்படவில்லை. ஒரு பூனை ஒருவரின் வீட்டிற்கு பக்கத்து பாதையின் குறுக்கே கடந்து போகுது என்றால், அவர் தனது சமையல் அறையை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மாறாக வீடிற்கு திரும்பி மீண்டு சற்று நேரத்தின் பின் பயணம் தொடர்பது அல்ல. மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் தோன்றிய காலத்தில் நகராண்மைக் கழகமோ அல்லது அது போன்ற நிர்வாகமோ கட்டிட அமைப்பை மேற்பார்வை பார்க்க இருக்கவில்லை. மற்றும் புறம்போக்கி அமைப்புகளோ [exhaust fans] இருக்கவில்லை. வாஸ்து என்ன கூறுகிறது என்றால் சமையல் அறை ஒரு வீட்டின் காற்றுச் செல் திசைப் பக்கம் [leeward direction] இருக்க வேண்டும் என்கிறது. அப்பத்தான் புகை வீட்டிற்குள் பரவாமல், காற்று அதை எடுத்து செல்லும் என்பதால் ஆகும். மேலும் தெற்கு பக்கம் ஒரு குடித்தனத்திற்கு [establishment] வாசல் அமையின் அது தீயசகுனம் உடையது என்றும் அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் கூறுகிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை [The White House in Washington DC ] தெற்கு வாசலையே அதுவும் சுவரின் நடுப்பகுதியிலே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே மாறிய இன்றைய கால கட்டத்தில் பொருத்தமானதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். அன்றைய கால கட்டத்தில் கதவுகளும் யன்னல்களும் ஒரு நேர் கோட்டில் குறுக்கு காற்றோட்டத்திற்கு [cross ventilation] உதவின. மேலும் நேர் வடிவமைப்பு, அந்த காலத்தில் நாணமுடன் உள் வசித்த பெண்கள் தூர இருந்து கதைப்பதற்கு உதவியது. நிழல் மரங்கள் மேற்கில் இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது. இதன் காரணம் சூரியனில் இருந்து ஒரு மறைவைத் தேடுவதே. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம்,மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். இது அந்த காலத்தில் தேவைபட்ட ஒன்றாகும். திருமணமான பெண் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கோ, பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கோ, செல்லக்கூடாது என்றும் நம்புகின்றனர். வீட்டு வாசலில் கோலமிட்டால் அவ்வீட்டில் வளம் சேரும் என்றும், நீர்க்கோலம் [மகளிர் நீர்விளையாட்டிற் கொள்ளும் கோல வகை / தண்ணீரால் இடப் படும் அசுபக்குறியான கோலம் / அசுபம் = அமங்கலம் / inauspiciousness] அழிவைத் தரும் என்றும் நம்புகின்றனர். வீட்டு வாயிற்படியில் எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது. அவ்வாறு உட்கார்ந்தால் லட்சுமி அவ்வீட்டை விட்டு வெளியே போய் விடுவாள் என்று கூறுகின்றனர். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி திடீரென விழுந்து உடைந்தால் அவ்வீட்டில் ஏதாவது துக்க நிகழ்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. கடுகை வீட்டிற்குள் தூவக்கூடாது. அவ்வாறு தூவினால் அக் கடுகு வெடிப்பதைப் போன்று அவ்வீட்டில் பலத்த சண்டை நிகழும் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் விருந்தினர்கள் சென்றதும் வீட்டைப் பெருக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர். அத்துடன் வீட்டு வாசலுக்கு எதிரே சுவர் இருந்தால் பாதிப்பு என்றும் நம்புகிறார்கள். மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும், மந்திரவாதிகளும், பழமை வாதிகளும் இந்த மூட நம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். உதாரணமாக சிலை பால் குடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டு, இப்படி எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்காட்டி, பணம் கறக்கும் மனிதர்களால், இந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன. தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூட நம்பிக்கை என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 08:" கண்ணேறு [திருஷ்டி], வேலன் வெறியாட்டம் & தாயத்து தொடரும்
-
"ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே!"
"ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே!" "ஈர விழிகள் என்னை ஈர்க்கிறதே பாரமாய் அன்பு இதயத்தை தாக்குதே வீர மொழிகள் இனி வேண்டாம் தூர விலகாதே என்னிடம் வருவாயா?" "ஆற அமர்ந்து முடிவு எடுக்காயா கூற நினைப்பதை நேராய் சொல்லாயா சிறந்த பெண்ணே சீற்றம் வேண்டாம் நிறம் மாறலாம் காதல் மாறலாமா?" "கோரமான எண்ணம் அழிந்து போகட்டும் அரசியல் ஒழிந்து ஒற்றுமை பெருகட்டும் அரங்கத்தில் பார்க்கும் நாடகம் இதுவல்ல தரமான செயல்கள் கூட்டாதோ நட்பை?" "அறம் தரும் இன்பம் மலரட்டும் புறம் பேசும் பழக்கம் அழியட்டும் உரம் சேர்க்கும் பாசம் துளிரட்டும் விறலியே விரைந்து என்னைத் தழுவாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அடைமழை" [அந்தாதிக் கவிதை]
"அடைமழை" [அந்தாதிக் கவிதை] "அடைமழை தொடர்ந்து ஐப்பசியில் பெய்யுது பெய்த நீரோ வெள்ளமாய் நிற்குது நிற்கும் தண்ணீரில் கழிவுகள் மிதக்குது மிதக்கும் எண்ணங்கள் தேடுது கடுதாசி கடுதாசி கப்பலாக அங்கே ஓடுது ஓடும் மீன்கள் அதைத் துரத்துது துரத்தும் மீனைப் பறவை கொத்துது கொத்தும் பறவை பசியைத் தீர்க்குது தீர்க்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்குது இருக்கும் வடிகாலும் முடங்கிக் கிடக்குது கிடக்கும் குப்பைகள் ஒட்டத்தை தடுக்குது தடுக்கும் எதையும் உடைக்குது அடைமழை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]