Search the Community
Showing results for tags 'யதீந்திரா'.
-
தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா April 23, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா வழங்கிய நோ்காணல். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலில் இம்முறை ஜே.வி.பி. அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. பிரதான வேட்பாளா்கள் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை இது ஏற்படுத்திவிடலாம் எனக் கருதப்படுகின்றது. இது குறித்து உங்கள் பாா்வை என்ன? பதில் – ஜனாதிபதித் தோ்தல் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இந்தத் தோ்தலில் யாா், யாா் களமிறங்கப்போகின்றா்கள்? என்பன எல்லாம் குழப்பகரமானதாகத்தான் இருக்கின்றது. மே மாதத்துக்குப் பின்னா் இவை குறித்து தெளிவாகத் தெரியக்கூடியதாக இருக்கும். ஆனால், இப்போது தெளிவாகத் தெரியப் போவது அநுரகுமார திஸாநாயக்க ஒரு பிரதான வேட்பாளராகப் போட்டியிடப் போகின்றாா். அதில் சந்தேகம் இல்லை. அதேவேளையில், சஜத் பிரேமதாஸவும் போட்டியிடப்போகின்றாா் என்ற நிலையில்தான் அவரது கருத்துக்களும் அமைந்திருக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அவா் என்ன அடிப்படையில் போட்டியிடப் போகின்றாா் என்பது இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை. அவா் ஒரு பொது வேட்பாளராக நிற்பாா் எனச் சொல்லப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு சாா்பான அணியில் நிற்பாா் டின்றும் செய்திகள் வெளிவருகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவரைத்தான் பொது வேட்பாளா் என்று சொல்ல முடியும். 2015 இல் அவ்வாறுதான் இடம்பெற்றது. அப்போது ராஜபக்ஷ எதிா்ப்பு அணியினா் அனைவரும் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்தனா். அவ்வாறான ஒரு சூழல் மீண்டும் ஏற்படக்கூடும் என்ற ஒரு கணிப்பும் இருக்கின்றது. இவை எவ்வாறு இடம்பெறும் என்பதையிட்டு தெளிவாக – உறுதியாகச் சொல்லக்கூடிய ஒரு நிலை இல்லையென்றாலும், மேலே குறிப்பிட்டவா்கள் தோ்தலில் போட்டியிடுவாா்கள் என்பது தெரிகின்றது. பொது வேட்பாளா் என்று சொல்லக்கூடிய வகையில் இரண்டு வேட்பாளா்கள்தான் இப்போது உள்ளாா்கள். ஒருவா் ரணில் விக்கிரமசிங்க. மற்றவா் சஜித் பிரேமதாஸ. ஏனென்றால், இவா்கள்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவுடன் தோ்தலில் நிற்கக்கூடியவா்கள். இவ்வாறான ஒரு நிலையில் அநுதகுமார திஸாநாயக்க இல்லை. அவா் பொதுவாக இலங்கையை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்று கூறுகின்றாரே தவிர, ஏனைய மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. அந்த நிலையில், சிறுபான்மையின மக்கள் அவரை ஆதரிப்பாா்களா என்பது கேள்விக்குறிதான். இந்த நிலையில்தான் ஜனாதிபதித் தோ்தல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. நிச்சயமாக இந்த ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெறப்போவது யாா் என்பது இப்போது எங்களுக்குத் தெரியாவிட்டாலும், இந்தப் போட்டிக்களம் ஒரு மும்முனைப் போட்டிக்களமாகவே தெரிகின்றது. அது ஒருவாறு இருமுனைப் போட்டியாக மாறினால் இந் 50 வீத பிரச்சினை உருவாகும் வாய்ப்பு இருக்காது. ஆனால், மும்முனைப் போட்டியென்றால், ஐம்பது வீதத்தை யாரும் பெறமுடியாத நிலை வரும்போது, இரண்டாவது நிலை வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், இவ்வாறு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தோ்தலை நோக்குகின்ற போக்கு பொதுவாக மக்கள் மத்தியில் இல்லை. உங்களுடைய இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கு அளிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை கட்சிகள் முன்னெடுத்தால் மட்டுமே, மக்கள் அவ்வாறு வாக்களிப்பாா்கள். எப்படியிருந்தாலும், இது ஒரு குழப்பகரமான தோ்தலாக அமையலாம். கேள்வி – ஜே.வி.பி. இந்தத் தோ்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவாா்கள் என்று கணிப்புக்கள் சொல்கின்ற போதிலும், சிறுபான்மையின மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஜே.வி.பி. போதிய அக்களையைக் காட்டவில்லை. இதற்கு என்ன காரணம்? பதில் – ஜே.வி.பி.யின் ஆரம்பகால வளா்ச்சிக்கும் இப்போது அவா்கள் தொடா்பாகத் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. கடந்த ஜனாதிபதித் தோ்தலில் 4 வீதமான வாக்குகளைப் பெற்றவா்கள், திடீரென்று 50 tீதமான வாக்குகளைப் பெறக்கூடியவா்களாக இருப்பதாக கணிப்புக்கள் சொல்கின்றன. இந்தக் கணிப்புக்கள் தொடா்பாகவும் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ஆனால், ஏனைய பிரதான கட்சிகளைப் பொறுத்தவரையில் அவா்கள் அச்சப்படும் அளவுக்கு ஜே.வி.பி.யின் செல்வாக்கு இருக்கின்றது. இந்த ஜனாதிபதித் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தை நெருங்கிச் செல்லக்கூடிய ஒரு கட்சி என்ற வகையில் ஒரு பரிசோதனைக் களத்துக்குள் ஜே.வி.பி. செல்கின்றது. இந்தநிலையில் அவா்களுடைய பிரதான இலக்கு சிங்கள மக்களுடைய ஆதரவைப் பெறுவதுதான். பிரதான சிங்களக் கட்சிகளைப் போலவே அவா்களுடைய மனப்போக்கும் உள்ளது. இதனால், தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான அரசியல் தீா்வைப் பற்றிப் பேசினால், அது சிங்கள மக்கள் மத்தியில் வளா்ந்துவரும் தமது செல்வாக்கைப் பாதித்துவிடும். அல்லது எதிா்த் தரப்புக்கள் அதனைப் பயன்படுத்தி தமது பிரசாரங்களை முன்னெடுக்கலம் என்ற அடிப்படையில்தான் அவா்கள் திட்டங்களை வகுப்பது போன்று தெரிகின்றது. அதனால்தான் ஏனைய மக்களுடன் அவா்கள் சந்திப்புக்களை மேற்கொண்டாலும்கூட, எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்குபவா்களாகவோ அல்லது அவா்களுக்காக சில திட்டங்களை முன்வைப்பவா்களாகவோ அவா்கள் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் அவா்கள் மிகவும் நிதானமாக, இலங்கையா் என்ற நிலையை உருவாக்குவோம் எனப் பொதுவாகச் சொல்கின்றாா்களே தவிர, தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்பவா்களாகவோ, அதற்கான ஒரு தீா்வை வழங்க வேண்டும் என்பதில் அக்கறை இருப்பவா்களாகவோ எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவா்கள் இருக்கின்றாா்கள். அவ்வாறு சொன்னால், தென்னிலங்கையில் தமக்கு இருக்கும் செல்வாக்கை அது பாதித்துவிடும் என்ற அச்சத்திலிருந்துதான் அந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளல் என்ற விடயத்தில் ஜே.வி.பி.யும் ஏனைய கட்சிகளும் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டவையாகத்தான் உள்ளன. கேள்வி – பொதுஜன பெரமுனவும் தமது கட்சியின் சாா்பில் ஒருவா் களமிறக்கப்படுவாா் எனக் கூறியிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ கூட அண்மையில் இவ்வாறு தெரிவித்திருந்தாா். அதற்கான வாய்ப்புக்கள் எவ்வாறு இருக்கின்றது? பதில் – கோட்டாபயவின் வெளியேற்றத்தையடுத்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவா்கள் என்ற நிலையிலிருந்து ராஜபக்ஷக்கள் பெருமளவுக்கு கீழறங்கிவிட்டாா்கள். இந்த சரிவிலிருந்து மேலெழுவதற்கு அண்மைக்காலத்தில் அவா்களுக்கு வாய்ப்புக்கள் இல்லை. அதனால், இந்தத் தோ்தலைப் பொறுத்தவரையில் தமக்கு நெருக்கடிகளைக் கொடுக்காத அல்லது தமக்கு சலுகைகளை வழங்கக்கூடிய ஒருவா் ஜனாதிபதியாக வருவதைத்தான் அவா்கள் முதலில் விரும்புவாா்கள். அவ்வாறு அமையாவிட்டால், தமக்கு இருக்கின்ற செல்வாக்கை ஏதாவது ஒரு முறையில் தக்கவைத்துக்கொள்வதற்கு முனைவாா்கள். அந்த வகையில்தான் அவா்கள் ஒரு வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்ற ஒரு கணிப்பு இருக்கின்றது. அவா்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒருவா் என்றால், அது நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். ஏனெனில் சஜித் பிரேமதாஸவுடனோ, அநுரகுமாரவுடனோ அவா்கள் இணக்கப்பாட்டுக்குச் செல்ல முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால், ரணிலுக்கும் சஜத்துக்கும் இடையில் ஒரு உடன்பாடு இறுதிக்கட்டத்தில் அவா்கள் ஒரு தரப்பாக நிற்கின்ற கட்டத்தில், ராஜபக்ஷக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்காது அவா்கள் நிச்சயமாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டியிருக்கும். அவ்வாறில்லாவிட்டால் அவா்கள் வேட்பாளா்களை நிறுத்தமாட்டாா்கள். https://www.ilakku.org/தோ்தல்-களநிலையில்-ஜே-வி-ப/
-
எல்லாவற்றுக்கு பின்னாலும், யாரோ இருப்பதாக கூறுபவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் ? - யதீந்திரா 2009இற்கு பின்னரான அரசியல் என்பது, அடிப்படையிலேயே, ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியலாகும். ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியல் போக்கானது, கடந்த காலத்தை, ஒரு ஆசானாகக் கொண்டே நகர்த்தப்பட வேண்டும். ஏனெனில் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் சரியென்றால், ஒரு போதுமே தோல்வி ஏற்;பட்டிருக்காது, எனவே ஒரு தோல்வி நிகழ்கின்றது என்றால் – அங்கு ஏராளமான தவறுகள் நடந்திருக்கின்றது என்பதே பொருளாகும். ஆனால் நமது சூழலிலோ, கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ள எவருமே முயற்சிக்கவில்லை. சுயவிமர்சனம் சார்ந்து சிந்திப்பதற்கு அனைவருமே அஞ்சினர். அதனை மறுப்பதற்கு புதிய விளக்கங்கள் புனைந்தனர். ஒரு பெரும் தோல்வியின் பின்னர், எழுந்துநிற்க முயற்சிக்கும் ஒரு சமூகம் செய்ய வேண்டியது சுயவிமர்சனமாகும். சுயவிமர்சனமின்றி எழுந்து நிற்பதை பற்றி யோசிக்கவே முடியாது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், யுத்தத்திற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியலில், முதல் நகர்விலேயே தமிழ் தேசிய அரசியல் ஒரு முள்ளில் சிக்கிக்கொண்டது. அந்த முள்ளின் பிடியிலிருந்து, இன்றுவரையில் தமிழ் தேசிய அரசியலால் அசைய முடியவில்லை. யுத்தம் முடிவுற்று பதின்நான்கு ஆண்டுகளாகிவிட்ட பின்னரும் கூட, இன்றுவரையில் முன்னோக்கி நகர்வதற்கான பாதை தெரியாமலேயே தமிழர் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் எவருமே தங்களை தனித்துவமானவர்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்வதில் அனைவருமே தோல்வியாளர்கள்தான். அனைவருமே பொறுப்பாளிகள்தான். இந்த விடயத்தில் தமிழ் சமூகத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு. இந்த பின்புலத்தில் நோக்கினால் இரண்டு கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒன்று, ஏன் முன்நோக்கி நம்மால் பயணிக்க முடியவில்லை? இரண்டு, இந்த இடத்திலிருந்து நாம் எங்கு செல்ல முயற்சிக்கின்றோம்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழ் சூழலில் நிர்திடமான பதில் இல்லை. இதன் காரணமாகவே எராளமான பதில்களும், அந்த பதில்களை நியாயப்படுத்துவதற்கான வாதங்களும் எட்டிப்பார்க்கின்றன. அரசியல் எப்போதுமே சாத்தியங்களின் கலையாகும். சாத்தியங்களை கையாளுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்ற போது மட்டும்தான், அரசியல் நம்பிக்கையளிக்கும். வாய்ப்புக்களை தவறவிட்டால் அதன் பின்னர் முன்னைய வாய்ப்புக்கள் கிடைப்பதற்கு உத்தரவாதங்கள் எதுவுமில்லை. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால், பேருந்தை தவறவிட்டுவிட்டு பின்னாலிருந்து கையசைப்பதில் எந்தவொரு பயனுமில்லை. தற்போது தமிழ் தேசிய அரசியல் சூழலில் நடைபெறும் அனைத்து விவாதங்களும் இந்த அடிப்படையைக் கொண்டதுதான். வாய்ப்புக்களை தவறவிட்டால் ஒரு சமூகத்திற்கு என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம்தான் ஈழத் தமிழ் சமூகத்தின் இன்றைய நிலைமை. இந்த பின்புலத்தில்தான் தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்ப விடயங்களை கையாள வேண்டும். இருப்பவற்றை கொண்டுதான் சமைக்க வேண்டும் என்றவாறான கருத்தை என்னைப் போன்றவர்கள் – தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றோம். தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எவரெல்லாம் சிந்திக்கின்றாரோ, அவர்கள் வந்தடைய வேண்டிய இடம் இது ஒன்றுதான். இப்போது இதனை பலரும் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அரசியலமைப்பிலுள்ள விடயங்களை முதலில் கையாள வேண்டுமென்று நாம் கூறிவருகின்றோம். தமிழ் தேசிய கட்சிகளில் பெரும்பாலானவை இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றன. யுத்தத்திற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியல் என்பது, அடிப்படையிலேயே, வெளிநாடுகளின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான். மனித உரிமை சார்ந்த அழுத்தங்களின் ஊடாக, இலங்கை அரசாங்கத்தை இறங்கிவரச் செய்வதுதான், தமிழர் அரசியலின் பிரதான இலக்காக இருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவை நோக்கி கோரிக்கைகளை முன்வைப்பதில், தமிழ் தேசிய கட்சிகள் பெரியளவில் ஆர்வம் காண்பித்திருக்கவில்லை. புலம்பெயர் சமூகத்தால் மேற்கு நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்த முடியுமென்னும் தவறான நம்பிக்கையே மேலோங்கியிருந்தது. கடந்த ஆண்டுதான், முதல் முதலாக, தமிழ் தேசிய கட்சிகள், இந்தியாவை நோக்கச் சென்றிருந்தன. ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. கடந்த பதின்நான்கு வருடங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, தமிழ் கட்சிகள் ஒரு நகர்வை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுதான். 2015இல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவை முற்றிலுமாக மறந்தே செயற்பட்டது. எவ்வாறு இந்தியாவின் உதவியில்லாமல் தனிநாடு ஒன்றை தங்களால் அடைய முடியுமென்று விடுதலைப் புலிகளின் தலைமை கருதிச் செயற்பட்டதோ, அவ்வாறானதொரு அணுகுமுறைதான், சம்பந்தனிடமும் இருந்தது. அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் பற்றி எவருமே பேச வேண்டியதில்லை என்று சம்பந்தன் சூழுரைத்தார் – நாங்கள் அதனைத் தாண்டி அதிக தூரம் சென்றுவிட்மோம் என்றார். ஆனால் இன்றோ, மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தமிழர் அரசியல் தேங்கிக்கிடக்கின்றது. சம்பந்தன் இன்னொரு வரலாற்று தவறையும் இழைத்தார். அதாவது, பிராந்திய சக்தியொன்றின் தலைவரும், உலகின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவருமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை கைநழுவிட்டார். தமிழ் மக்களின் புத்திக் கூர்மையை பரிகசிக்கும் வகையில் அதற்கு பதிலளித்தார். தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதியின் மகனுக்கு திருமணம், அதனால் பிறிதொரு நேரத்தை தருமாறு இந்திய தூதரகத்திற்கு அறிவித்தார். இவ்வாறானவர்களை தங்களின் அரசியல் தலைவர்களாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு, வெளிநாடுகள் எவ்வாறு உதவ முடியும்? அவ்வாறிருந்த போதும், இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களின் நியாயங்களுக்காக குரல் கொடுத்துவருகின்றது. இந்தியா ஒன்றுதான், வடக்கு கிழக்கை வரலாற்று வாழ்விடமாகக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நியாயமானது என்று வலியுறுத்திவரும் ஒரேயொரு நாடாகும். இந்தியா போதிய அழுத்தங்களை கொடுக்கவில்லை, என்றவாறான – ஒரு தவறான கருத்தை சிலர் முன்வைக்க முயற்சிக்கின்றனர். அத்துடன், இந்தியா தமிழ் மக்களின் நலன்களை 13வது திருத்தச்சட்டத்திற்குள் திணிக்க முயல்வதாகவும் அதற்காக பல முகவர்களை பயன்படுத்துவதாகவும் பொய்யான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றனர். 2009இற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியல் போக்கில் இது ஒரு நோயாகவே தொடர்கின்றது. யதார்த்தமாக சிந்தக்க வேண்டுமென்று எவரேனும் கூறினால் அவர்களுக்கு பின்னால் இந்தியா இருக்கின்றது. இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய போதும், அதனை விரும்பாதவர்கள், இது இந்தியாவின் நிகழ்ச்சிநிரலென்றே கதைகளை புனைந்தனர். இவ்வாறு எல்லாவற்றுக்குப் பின்னாலும் யாரோ ஒருவரது கை இருப்பதாக கூறுபவர்களின் பின்னாலும் யாரோ ஒருவரது கை இருக்க வேண்டுமல்லவா? ஏனெனில் இவ்வாறான பொய்யான கதைகளை பரப்ப முற்படுபவர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமையுண்டு. அனைவருமே இந்தியாவை சாடுபவர்களாக இருக்கின்றனர். அத்துடன், 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று வாதிடுபவர்கள். அவ்வாறாயின் இவர்களுக்கு பின்னாலுள்ள, அந்த திரைமறைவு சக்தி எது? இலங்கையின் வடக்கு கிழக்கு வரலாற்று ரீதியாக தென்னிந்தியாவுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்கும் பகுதியாகும். ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்குமான பிணைப்பு மிகவும் வலுவானது. இவ்வாறானதொரு பின்புலத்தில், அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுக்குள் சீனாவும் ஆங்காங்கே மூக்கை நுழைக்கின்றது. சீனாவின் ஊடுருவும் அணுகுமுறைகளில் ஒன்று, சென்று ஆடுவதாகும். இதில் முதலாவது செல்வது, பின்னர் ஆடுவதா அல்லது இல்லையா என்பது இரண்டாவது. தற்போது, வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பொருட்களுடன் சீனா வட்டமிடுகின்றது. இவ்வாறானதொரு சூழலில், இந்தியாவை சாடும் கருத்துக்கள் வெளிவருவதை எவ்வாறு சந்தேகிக்காமல் இருக்க முடியும்? சீனாவை தமிழ் தேசியவாத சக்திகள் எதிர்க்க வேண்டுமா , இல்லையா என்னும் புதிய வாழைப் பழமொன்றில், ஊசி ஏற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிகின்றது, இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமானவர்கள். ஆனாலும் வாழைப்பழத்தில் ஊசியிருப்பதை அறியாது, சிலர் விழுங்கிவிட்டால், அது மிகவும் ஆபத்தானது. சீனா எந்தக் காலத்திலும், தமிழர் விவகாரத்தை கருத்தில் கொண்ட நாடல்ல. அவ்வாறு கருத்தில் கொள்வதற்கான எந்தவொரு கடப்பாடும் அதற்கில்லை. தவிர, யுத்தத்திற்கு பின்னரான, தமிழர் கோரிக்கைகளான மனித உரிமை மற்றும் நீதி என்னும் சொற்களானது, சீனாவின் கொள்கைக்குள் என்றுமே அடங்காதது. இவ்வாறான பின்புலத்தில், இந்தியாவிற்காக சீனாவை எதற்காக எதிர்க்க வேண்டும் என்னும் கேள்வியே தவறானது. உண்மையில் இது எவரையும் எதிர்ப்பது பற்றியதல்ல மாறாக, தமிழ் மக்கள் முன்னிறுத்தும் அரசியலின் அடிப்படையில், எவருடன் பேசலாம், எவருடன் பேச முடியாது என்பதாகும். இந்தியா அதன் வரலாற்றுப் பொறுப்பை, சரியான தருணங்களில் நிறைவேற்றிய ஒரு நாடு. ஆனால் அன்றைய சூழலை, தமிழர் தரப்போ வாய்ப்புக்களை புத்திசாதுர்யமாக கையாளவில்லை. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டு, இந்தியாவின் மீது, குற்றம்சாட்டுவதில் எவ்வித பயனுமில்லை. இந்தியா ஒரு பிராந்திய சக்தி. அதே வேளை உலகின் முக்கிய சக்தி. அவ்வாறான ஒரு நாடு, அதன் நீண்டகால நலன்களை கருத்தில் கொண்டுதான் சில தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். நமக்கு சுடுகிற போதெல்லாம், மடியை பிடியுங்கள் – என்றவாறு, நாம் நாடுகளை நோக்க முடியாது. ஒரு காலத்தில், இந்தியா அதன் தோள்களை நமக்காக தந்தது. ஆனால் தமிழர் தரப்பு சந்தர்ப்பத்தை புத்திசாதுர்யமாக கையாளவில்லை. அதற்காக இப்போது எல்லாமே, முடிந்துவிட்டது என்பதல்ல அர்த்தம். இப்போதிருக்கும் வாய்ப்புக்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வது எப்படி, அதற்காக இந்தியாவை எவ்வாறு அணுகுவது என்று சிந்தித்தால், சில வாய்ப்புக்கள் தென்படலாம். http://www.samakalam.com/எல்லாவற்றுக்கு-பின்னாலு/
-
சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யும் யோசனையும் அதிலுள்ள பேராபத்தும் - யதீந்திரா யாழ் வடமாராட்சி மீனவர்கள் சம்மேளணம் அண்மையில் தீன்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. அதாவது, சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் யோசனையை கைவிடுங்கள். அதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அத்துடன் காலப்போக்கில் எங்களுடைய உள்ளுர் மீன்பிடியே இல்லாமல் போய்விடும். சீனா அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித் துறையின் மீது அதிக ஈடுபாட்டை காண்பித்துவருகின்றது. பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் தொழில்களை இழந்திருந்த சந்தர்ப்பங்களில், மீனவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கியது அத்துடன், இலவசமாக டிசல் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. சீனா தீடீரென்று ஏன் வடக்கு கிழக்கு மீனவர்கள் மீது அக்கறை காண்பிக்கின்றது? இந்தக் கேள்விக்கு எவரிடமும் பதில் இருக்கவில்லை. ஆனால் இப்போது அந்த பதில் கிடைத்திருக்கின்றது. நீண்டகால நோக்கில் வடக்கு கிழக்கின் மீன்பிடித்து துறைக்குள் உள்நுழையும் நோக்கத்துடன்தான், சீனா மீனவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது. அண்மையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவில் இடம்பெற்ற ஒரு பட்டி – ஒரு வலயம் மகாநாட்டில் பங்குகொண்டிருந்தார். இதன் போது, ஜனாதிபதியுடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தார். இதன் போது, சீனாவின் ஒரு பட்டி – ஒரு வலயம் திட்டத்தின் கீழ், 1500 மில்லியன் ரூபா முதலீட்டை, வடக்கு கிழக்கு மீன்பிடித்து துறையில் செய்யவுள்ளதாக சீனா வாக்குறுதியளித்திருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் ஆலோசனையும் வெளிப்பட்டிருக்கின்றது. வடமாராட்சி மீனவர்கள் சம்மேளணத்தின் அறிக்கையின்படி, இந்த விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் பிரத்தியேக ஈடுபாட்டை காண்பிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வடக்கில் கடலட்டை பண்ணைகள் பெருகிய போது, அதனால் உள்ளுர் மீன்பிடித் துறை நீண்டகாலத்தில் பாதிக்கப்படும் என அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன. மீனவர்கள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவ்வாறான எதிர்ப்புக்களையும் மீறியே கடலட்டைப் பண்ணைகள் பெருகின. கடல் உயிரியல் மற்றும் சுற்றுச் ச10ழலியல் நிபுனர்களின் கருத்தின்படி, கடலட்டை பண்ணைகளின் பெருக்கம் நீண்டகால அடிப்படையில் உள்ளுர் மீன்பிடியை வலுவிழக்கச் செய்யும் – காலப்போக்கில் உள்ளுர் மீன்பிடியே இல்லாமலும் போகலாம் என்று கூறகின்றனர். இவ்வாறான கடலட்டை பண்ணைகள் அதில் முதலீடு செய்யும் சிலருக்கு மட்டுமே நன்மையளிக்கும். தற்போது அவ்வாறான எதிர்வு கூறல்கள் உண்மையாகிவருகின்றனவா என்னும் கேள்வி எழுகின்றது. ஏனெனில் சீனாவிலிருந்து உள்ளுர் நுகர்விற்காக, மீன்களை இறக்கு மதிசெய்யும் யோசனை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கை ஒரு வளமுள்ள கடல்பகுதியை கொண்டிருக்கும் நாடு. இவ்வாறானதொரு நாட்டில் உள்ளுர் மீன் தேவைகளுக்காக சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய முற்படுவதானது அடிப்படையிலேயே தவறான பொருளாதார அணுகுமுறைகளின் விளைவாகும். மீன்களை ஏற்றுமதி செய்வதில் சீனா முன்னணி வகிக்கும் நாடு ஆனால் சட்டவரம்புகளை மீறி, மீன்களை பிடிப்பதில் முன்னணி வகிக்கும் நாடும் சீனாதான். சர்வதேச மீன்பிடி நியமங்களை வரையறைக்கும் ஜ.யு.யு வின் ((Illegal, unregulated and Unreported (IUU) கணிப்பின்படி, மீன்பிடியில் சீனா ஒரு மோசமான நாடாகும். அமெரிக்க காங்கிரஸ் சேவைகள் அறிக்கையின்படி, மீன்பிடி கப்பல்களை கையாளுவதில் சீனா ஒரு சடவிரோத நடாகும். அதே வேளை உலகிலேயே இராணுவ மற்றும் அரசியல் நலன்களுக்காக மீன்பிடிக் கப்பல்களை பயன்படுத்தும் ஒரேயொரு நாடும் சீனாதான். இந்த அடிப்படையில் நோக்கும் போது, சீனா அதன் பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச சட்டவிதிகளை பெருமளவில் பொருட்படுத்துவதில்லை என்பது தெளிவாகின்றது. உலகில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஆயுத அமைப்பொன்றை வைத்திருக்கும் ஒரேயொரு நாடும் சீனா மட்டும்தான். இந்தப் பின்புலத்தில்தான் சீனாவின் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடப்படும் போது, பாதுகாப்பு கரிசனைகள் அதிகரிக்கின்றன. இந்திய ஊடகங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. சீனாவின் மீன்பிடி நடவடிக்கைள் அனைத்துமே, குறித்த மீன்பிடி இராணுவ கட்டமைப்பினால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களின் விலை, ஒப்பீட்டடிப்படையில் குறைவானது. இதன் காரணமாகவே பல ஆபிரிக்க நாடுகள் சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்கின்றன ஆனால் தற்போது காலப்போக்கில் முற்றிலுமாக சீனாவில் தங்கியிருக்கும் நிலை ஏற்படலாம் என்னும் அச்சத்தினால் ஆபிரிக்க நாடுகள் சீனாவிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றன. இதற்கு கிழக்காபிரிக்க நாடான கென்யா ஒரு சிறந்த உதாரணமாகும். உள்ளுர் நுகர்வுக்காக சீனாவிலிருந்து, அதிகளவில் மீன்களை இறக்குமதி செய்யும் நாடாக கென்யாக இருந்தது. ஆனால் 2021இல், உள்ளுர் மீன்பிடித் துறையின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சீனாவலிருந்து, மீன்கள் இறக்குமதிசெய்வதற்கு தடைவிதித்தது. 2018இல், இந்த தீர்மானத்தை எடுத்த போது, ஒரு புகையிர பாதை நிர்மானத் திட்டத்திற்கான நிதியை நிறுத்திவிடுவதாக சீனா எச்சரித்தது. கடனுதவின் இறுதிப் பகுதியை விடுவிக்கும் உடன்பாட்டிலிருந்தும் வெளியேறியது. இது ஒரு சிறந்த உதாரணம். சீனாவுடனான, ஒப்பந்தங்களிலிருந்து, ஒரு நாடு வெளியேற முற்படும் போது, சீனா எவ்வாறு கடனுதவிகளை அச்சுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்துகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இதற்கப்பால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களின் தரமும் சந்தேகத்துக்கு உரியதாகவும், கென்ய அரசாங்கத்தினால் இனம்காணப்பட்டது. மீன்கள் ஏற்றுமதிக்காக பதனிடப்படும் போது, பின்பற்ற வேண்டிய உலக சுகாதார நிறுவனத்தின் தராதரங்கள் சரியாக பின்பற்றப்படவில்லையென்று, கிழக்காபிரிக்க ஆய்வுகூட தெரிவுக்குழு இனம்கண்டது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களின் பாகங்களை ஆய்வு செய்த, நைரோபி பல்கலைகழக்கத்தின், பொது சுகாதார, மருந்தியல் மற்றும் நச்சியல் துறையின் தலைவர், பேராசிரியர் ஜேம்ஸ் மபரியா இவ்வாறு கூறுகின்றார், சீன மீன்களில் உலோகத்தின் கூறுகள் இருக்கின்றன, இவ்வாறான மீன்களை தொடர்சியாக உட்கொள்ளும் போது, அது மனித உடலை பாரதூரமாக பாதிக்கும் என்கிறார் மபரியா. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டின் உள்ளுர் மீன் நுகர்விற்கு இறக்குமதி செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. ஆனாலும் சீனாவிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்படுகின்றதென்றால், அந்தளவிற்கு சீனா அதன் பிடியை இலங்கையில் இறுக்கிக் கொண்டு செல்கின்றது என்பதே பொருள். சீனாவின் சந்தைக்கான கடலட்டைகளை உள்ளுரில் ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபம் சீனா, மறுபுறமாக அதன் விளைவாக உள்ளுர் மீன்பிடி பாதிக்கப்படும் போது, உள்ளுர் நுகர்விற்காக சீனாவின் மீன்களை இறக்குமதி செய்ய தூண்டுகின்றது. வடக்கு கிழக்கின் மீன் நுகர்வு தேவைகளுக்காக சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் யோசனையானது அடிப்படையிலேயே தவறானது. இது நிச்சயம் உள்ளுர் மீன்பிடியை முற்றிலுமாக இல்லாமலாக்கும். அடுத்து, மீன்பிடித் துறைக்குள் சீனாவின் ஊடுருவல் அதிகரிக்கும் போது, காலப்போக்கில் உள்ளுர் தேவைகளுக்காக முற்றிலும் சீனாவில் தங்கியிருக்கும் நிலைமையும் உருவாகும். தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்த வேண்டும். மீனவர்களின் அச்சம் மிகவும் நியாயமானது. வடக்கு கிழக்கின் உள்ளுர் மீன் தேவைகளுக்காக சீனாவிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படும் திட்டத்தால், வடக்கு கிழக்கின் மீன்பிடியே நீண்டகால அடிப்படையில் இல்லாமல் போகும். http://www.samakalam.com/சீனாவிலிருந்து-மீன்-இறக்/
-
சனல் 4, ஜ.எஸ்.ஜ.எஸ் தாக்குதலை மடைமாற்றுகின்றதா? - யதீந்திரா சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது. பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான ஆசாத் மௌலானா என்பவரால் கூறப்படும் விடயங்கள்தான், குறித்த காணொளியின் பிரதான விடயமாகும். அவரது கூற்றின்படி, இந்தக் தாக்குதலானது, ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகும். இதில் பிள்ளையானும் தொடர்புபட்டிருக்கின்றார். பிள்ளையானுடன் இருந்த ஒருவர் என்னும் வகையில் பிள்ளையானுடன் தொடர்புடுத்தியே, மௌலானா விடயங்களை கூறுகின்றார். அப்படிக் கூறும் போதுதான் தனது பேச்சு எடுபடுமென்றும் அவர் கருதியிருக்கலாம். காணொளியின் இலக்கு மிகவும் தெளிவானது. அதாவது, ராஜபக்சக்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது. இந்த ஒரு நோக்கத்தின் அடிப்படையில்தான் குறித்த கானொளி வெளியிடப்பட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் செல்வாக்கு ஏற்கனவே சரிவுநிலையில்தான் இருக்கின்றது. பின்னர் எதற்காக ராஜபக்சக்கள் இலக்கு வைக்கப்பட வேண்டும்? கோட்டபாய ராஜபக்சவோ அல்லது ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவருமே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் இல்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கும் போது, இந்தக் காணொளிக்கு பின்னால் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம். ஒன்று, ராஜபக்சக்கள் மற்றும் ராஜபக்சக்களின் நிழலிலிருந்த கடும்போக்குவாதிகள் எழுச்சியடைவதற்கான வாய்ப்புக்களை தடுப்பது. அண்மைக்காலமாக அவ்வாறானதொரு தோற்றம் தென்பட்டது. இரண்டு, இவ்வாறான தடைகளையும் மீறி, ஒரு வேளை, ராஜபக்சக்கள் எழுச்சியடைந்தாலும் கூட, அவர்களை இறுக்குவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்துவது. ஏனெனில், இதில் இலங்கையர்கள் மட்டும் கொல்லப்படவில்லை. ஜரோப்பியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே குறித்த காணொளிக்கு உடனடி இலக்குமுண்டு அதே வேளை, நீண்டகால இலக்கும் உண்டு. ஜரோப்பியர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பில் தலையீடு செய்வதற்கான நியாயபூர்வமான உரிமை ஜரோப்பிய ஊடகம் ஒற்றிற்குண்டு. அந்த வகையில் சணல் 4 இதில் தலையீடு செய்திருப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று எண்ணுவதும் நியாயமானதுதான். ஆனால் ஒரு சாதாரண நபரது வாக்குமூலத்தை மட்டும் முன்வைத்து, இவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டிருப்பதுதான் சிக்கலானது. தவிர, இந்தக் காணொளி தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுகொள்ளவில்லை. இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல். இந்தக் தாக்குதல் இடம்பெற்று, இரு தினங்களின் பின்னர், எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.எஸ்.ஜ, இந்தக் தாக்குதலுக்கு உரிமைகோரியிருந்தது. அதன் உத்தியோகபூர்வ செய்தி அமைப்பான அமாக், இதனை உறுதிப்படுத்தியதுடன், தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளை, அமைப்பின் போராளிகளென்றும் அறிவித்திருந்தது. அதே வேளை, ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் வாராந்த வெளியீடான அல் நபா, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் மூலம், சிலுவை யுத்தக்காரர்களுக்கான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இந்தக் தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்தே, ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி சில வருடங்களுக்கு பின்னர் தனது இருப்பை வெளிப்படுத்தியிருந்தார். சுமார் ஜந்து வருடங்களுக்கு பின்னர் பாக்தாதியின் முகம் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. ஜ.எஸ்.ஜ.எஸ், அமெரிக்காவினால் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது, அதன் சர்வதேச வலையமைப்புகள் முற்றிலுமாக, வீழ்சியுற்றுவிட்டது என்னும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்தான், இலங்கையில் இந்தக் தாக்குதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்தே அல் பாக்தாதி உற்சாகமாக தனது இருப்பை வெளிப்படுத்துகின்றார். அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமான ராண்ட் அப்போது, பாக்தாதி வெளியிட்ட காணொளியின் பொருள் என்ன என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. இலங்கையில், இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்திய உளவுத்துறை, இலங்கை புலனாய்வு பிரிவை எச்சரித்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் இந்தக் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அப்போது, இலங்கையின் முப்படைகளின் தலைவராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. அவ்வாறாயின் இது தொடர்பான முதல் குற்றவாளிவாக மைத்திரிபால சிறிசேனவைத்தான் குறிப்பிட வேண்டும். இந்த அடிப்படையில் ஏற்கனவே மைத்திரியால நீதிமன்றத்தினால் குற்றவாளியாகவும் இனம்காணப்பட்டிருக்கின்றார். இந்தக் தாக்குதலில் ஜந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க உள்ளக உளவுத்துறையான எப்.பி.ஜ விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இரண்டு வருட விசாரணைகளின் விளைவாக 2020 டிசம்பர் மாதம் 11ம் திகதி, லொஸ்ஏஞ்சல் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கொன்றையும் தாக்கல் செய்திருந்தது. இந்தக் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் மற்றும் தாக்குதலுக்கான உதவிகளை செய்தவர்கள் என்னுமடிப்படையில் மூன்று முஸ்லிம் நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. நிலைமை இவ்வாறிருக்கின்ற போது, மூன்று வருடங்களின் பின்னர், ஆசாத் மௌலான என்னும் ஒரு நபரின் வாக்குமூலத்தை முன்வைத்து, ஈஸ்டர்தின தற்கொலைக் தாக்குதலானது, உள்ளுர் அரசியலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக சணல் 4 ஒரு புதிய கதையை கூற முற்படுகின்றது. விடயங்களில் இலங்கை புலனாய்வுத் துறை கவனக் குறைவாக இருந்திருக்கின்றது என்னும் குற்றச்சாட்டை முன்வைக்கலாம். ஆனால் எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.எஸ்.ஜ அமைப்பின், தொடர்பை முற்றிலும் நிராகரிக்கும் வகையில், இவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டிருப்பது, சணல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட காணொளிகள் தொடர்பான நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கின்றது. கோட்டபாய ராஜபச்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக பிள்ளையானின் உதவியுடன், தற்கொலை குண்டுதாரிகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தர்க்கரீதியில் நம்பக் கூடிய கதையாக இல்லை. ஆசாத் மௌலானா என்னும் நபர் தனது சொந்த தேவைகளுக்காக அல்லது வேறு எவருடைய தேவைகளுக்காகவோ, சில விடயங்களை வலிந்து புனைவதான தோற்றமே தெரிகின்றது. கோட்டபாய ராஜபக்ச முஸ்லிம்கள் தொடர்பில் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவரல்லர். இது முஸ்லிம்களுக்கும் தெரிந்த விடயம்;. இந்த நிலையில் கோட்டபாயவின் தேவைக்காக, பிள்ளையானின் ஆதரவுடன், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் வெடித்து சிதறியிருக்கின்றார்கள் என்பது விடயத்தின் கனதியை மலீனப்படுத்துவதாகவே இருக்கின்றது. பிள்ளையானால் முஸ்லிம்களை தற்கொலை குண்டுதாரிகளாக்க முடியுமா? கோட்டபாய மற்றும் பிள்ளையான் தொடர்பில் அரசியல்ரீதீயில் பலவாறான அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஜனநாயக தளத்தில் அதனை வெளிப்படுத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அது வேறு விடயம். கோட்டபாய ராஜபக்ச தமிழ் மக்களை பொறுத்தவரையில் முற்றிலும் எதிர்மாறானதொரு சிங்கள அரசியல்வாதி. தன்னையொரு சிங்கள பௌத்த தலைவன் என்று பிரகடணம் செய்த ஒருவர். இப்படியான பல்வேறு சிக்கல்கள் கோட்டபாயவின் பக்கத்திலுண்டு. அடிப்படையில், கோட்டபாய போன்ற ஒருவர் ஆட்சிக்கு தகுதியான ஒருவருமல்ல. கோட்டபாய தொடர்பில் இந்த அடிப்படையில் ஒருவர் விவாதித்தால் அதில் முரண்பட ஒன்றுமில்லை. ஆனால் ஒரு எல்லைதாண்டிய பயங்கரவாதத் தாக்குதலை வெறும் உள்ளுர் விவகாரமாக சுருக்குவது ஆபத்தானது. இது மீண்டும், இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகள் எழுச்சிகொள்வதற்கான களத்தை இலகுபடுத்தவே பயன்படும். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே, கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் வேர்கொண்டுவருவது தொடர்பில், பல்வேறு தகவல்கள், ஆங்காங்கே வெளியாகியிருந்தன. அதே வேளை, ஜ.எஸ்.ஜ.எஸ் கருத்தியலால் ஈர்க்கப்படும் போக்கும் துளிர்விடுவதான அவதானத்தையும் சிலர் வெளியிட்டிருக்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள், சிரியாவிற்கு சென்று, ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தகவல்களும் வெளியாகியிருந்தன. இவ்வாறானவர்கள் இந்தியாவின் கேரள மானிலத்திலுள்ள ஜ.எஸ்.ஜ.எஸ் வலமைப்பின் மூலமாகவே, சிரியாவிற்கு சென்றிருப்பதாகவும் ஏற்கனவே இந்திய புலனாய்வு தகவல்கள் உண்டு. ஆசாத் மௌலான என்னும் நபரும் இந்தியாவிற்கு சென்று, அங்கிருந்தே ஜரோப்பாவில் தஞ்சமடைந்திருக்கின்றார். இவர் எவ்வாறான தொடர்புகளின் வழியாக சென்றார், இவர் எதற்காக இவ்வாறான தகவல்களை வெளியிட்டார். ஆசாத் மௌலானாவின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை வேறுவிதமாக விசாரிக்க வேண்டிய அவசியமுண்டு. அதாவது, எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள், தங்களின் இலக்கிற்காக, உள்ளுர் அரசியல்வாதிகளை பயன்படுத்தியிருக்கின்றனரா? இந்தக் கோணத்தில் விசாரணை செய்வதற்கான தேவையுண்டு. குறித்த மௌலானாதான் இதற்கான பிரதான சாட்சியாகும். ஏனெனில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலங்கைக்கான தொடர்பாளராக அவர் செயற்பட்டிருக்கின்றார் என்னும் முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது. ஜரோப்பிய புலனாய்வுத் துறைகள், விடயத்தை, இந்தப் பின்புலத்தில் விசாரிக்க முற்பட்டால்தான், இதன் உண்மைத் தன்மை வெளியில்வரும். http://www.samakalam.com/சணல்-4-ஜ-எஸ்-ஜ-எஸ்-தாக்குதலை/
-
கனடாவிற்கு செல்லுதல் ? - யதீந்திரா தமிழர் வாழ்வில் புலப்பெயர்வு மிகவும் கவர்சிகரமான ஒன்று. எவருக்கு புலம்பெயர விரும்பமில்லை என்று கேட்டால் – இல்லையென்று சொல்பவர்கள் அரிதானவர்களாகவே இருக்க முடியும். அந்தளவிற்கு அது ஒரு கவர்சிமிக்க வாழ்வாகிவிட்டது. தமிழர் அரசியலில் தீர்க்கதரிசிகள் எவரும் இருந்ததாக தெரியவில்லை. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று ஒரு முறை கூறியிருந்தார். அதனையும் ஒரு தீக்கதரிசன பார்வையென்று கூறிவிட முடியாது – ஏனெனில், கடந்த 74 வருடகால அரசியல் நகர்வில், தமிழ் மக்களை கடவுளும் காப்பாற்றவில்லை. இருந்ததையும் இழந்து, இருப்பதையும் பாதுகாக்க முடியாதவொரு கையறு நிலையில்தான் தமிழினம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு மண்ணைவிட்டு ஓடலாமென்றே சிந்திக்கின்றனர். இந்த இடத்தில் உண்மையிலேயே ஒரு தீர்க்தரிசி பற்றி கூறுவதனால், முறிந்த பனையின் ஆசிரியர்களில் ஒருவரான, படுகொலை செய்யப்பட்ட ரஜனி திரணகமவைத்தான் குறிப்பிட முடியும். முறிந்த பனையில் பின்பக்கத்தில் சில வரிகளுண்டு. அதாவது, எரிகின்ற தேசத்தை விட்டுவிட்டு ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் ஓடிக் கொண்டிருக்கின்றான். இன்றைய புலப்பெயர்வு கவர்சியை உற்று நோக்கும் போது, அந்த வரிகள் தீர்க்கதரிசனம் மிக்கவைதான். ஆன்று ஓட ஆரம்பித்த தமிழன் ஓடுவதை நிறுத்தவேயில்லை. ஆரம்பத்தில் ஓடியவர்களுக்கு, ஓடியதற்கான காரணம் இருந்தது, இன்றோ, வெறும் வெளிநாட்டு கவர்ச்சி மட்டுமேயிருக்கின்றது. கனடிய அரசாங்கம் அதன் குடிவரவு கொள்கையை தளர்த்தியிருக்கின்றது. ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு கனடாவின் கதவு சற்று அகலமாகவே திறந்திருக்கின்றது. இதுதான் சந்தர்ப்பம் என்று கருதும் மத்தியவர்க்க தமிழர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். 50 வயதை கடந்தவர்களைக் கூட ஆசை விடவில்லை. அவர்களை பொறுத்தவரையில் எங்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு வாழ்வு கிடைக்கும்தானே என்கின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் கடனாவிற்கு குடிபெயர்ந்த கவிஞர் ஒருவர், ஒரு நேர்காணலில் கூறியதை இப்போது நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. எதற்காக கனடா வந்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில். கனடா அழகானதொரு நாடு. எனது ஆய்வுகளுக்கு சிறந்த நாடு. அந்தக் கவிஞரோ, தமிழ் தேசியத்தை செப்பனிட நினைத்த அறிஞர்களில் ஒருவர். அவரைப் போன்றவர்களால் செப்பனிட முடிந்ததா என்பது வேறு விடயம். அவ்வாறான ஒருவரே, இலங்கை அசிங்கம், கனடா அழகென்று எண்ணும் போது, சாமானிய மனிதர்கள் கனடாவை எண்ணி ஆசைப்படுவதில் என்ன தவறுண்டு. வறிய நாடுகளில் வாழ்வோர், வசிதியுள்ள நாட்டை நோக்கி செல்ல எண்ணுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தங்கள் எதிர்காலத்தை கனடாவிலும், மேற்குலக நாடுகளிலும் கழிக்க வேண்டுமென்று எண்ணும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பக்கத்து வீட்டிலுள்ளவர்கள், தங்களுடை உறவினர்கள் கடனாவில் இருக்கின்ற போது, அதனைப் பார்த்து மனம் வெந்து, தங்களுக்கு அந்த வாய்பில்லையே – என்று எண்ணும் தமிழர்கள் ஏராளம். இந்த மனோநிலைதான், வாய்ப்புக்கள் கிடைக்கும் போது, அவர்களை ஓடச் செய்கின்றது. தமிழர் தாயகமென்று அடையாளப்படுத்தப்படும், வடக்கு கிழக்கிலிருந்து ஏற்கனவே, பன்னிரண்டு லட்சம் வரையானவர்கள் வெளியேறிவிட்டனர். தொடர்ந்தும் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பத்து வருடங்களில் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கே குறிப்பிட்டளவான மக்கள் இருக்கப் போவதில்லை. வசதியில்லாத ஏழை மக்களே இறுதியில் தாயகத்தில் எஞ்சப் போகின்றனர். அவர்களின் பிரதான பிரச்சினை அடையாளமோ, அல்லது தேசியமாகவோ இருக்காது. அவர்களின் முதல் பிரச்சினை தாங்கள் பசியின்றி, வாழ்வதாக மட்டுமே இருக்கும். தமிழ் மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கான அரசியல் ஏற்பாடு ஒன்று வேண்டும். அதன் மூலம் மட்டும்தான், தமிழர்கள் தன்னிறைவாக வாழ முடியும். இதுதான் நமது அரசியல் சுலோகம். இந்தச் சுலோகத்திற்கு வயதோ முக்கால் நூற்றாண்டு. 1949இல் இலங்கை தமிழரசு கட்சி, அதன் ஆங்கிலப் பெயராக, சமஸ்டியை முன்நிலைப்படுத்திய காலத்திலிருந்து, எங்களது சமஸ்டி வரலாறு நீண்டுசெல்கிறது. அம்புலி மாமாக் கதையில் வருகின்ற, விக்கிரமாதித்தியன் வேதாளத்திற்கு கதை சொல்வது போன்று, நாங்களும் எங்களுடைய மக்களுக்கு சமஸ்டிக் கதையை கூறிவருகின்றோம். ஆனாலும் எங்களால் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட காண்பிக்க முடியவில்லை. புலம்பெயர் சமூகம் பெரியதொரு பலமென்று கூறிய போதிலும் கூட, நடைமுறையில் இதுவரையில் அந்தப் பலத்தை காண்பிக்க முடியவில்லை. வடக்கு கிழக்கில் புலம்பெயர் முதலீடுகள் பெரியளவில் குவியும் போது, தமிழ் மக்கள் மத்தியில் தொழில் துறைகள் உருவாகும், அதனால் மேலதிக புலப்பெயர்வை கணிசமானளவில் தடுக்க முடியுமென்றெல்லாம் எதிர்பார்ப்புக்கள் உண்டு. இது பற்றி பேசியவுடன், நம்வர்கள் பலர் முன்வைக்கும் கேள்வி – புலம்பெயர் முதலீடுகளுக்கு என்ன உத்தரவாதம்? உத்தரவாதம் இல்லையென்று கூறிக்கொண்டிருந்தால், இன்னும் பல தசாப்பதங்களுக்கு கூறிக்கொண்டிருக்கலாம். நாம் மாற்று வழிகளை ஆராய வேண்டும். தமிழ் நாட்டில் நிறுவனங்களை பதிவு செய்து, இந்திய முதலீடாக புலம்பெயர் முதலீடுகளை கொண்டுவர முடியும். அதற்கான பாதுகாப்பை இந்திய வழங்கும். இல்லாவிட்டால், ஒரு கனடிய நிறுவனத்தின் ஊடாக, அமெரிக்க நிறுவனத்தின் ஊடாக உள்வராலம். 2015இல், எனது நண்பர்களின் அழைப்பில் நேர்வேக்கு சென்றிருந்த போது, இந்தக் கருத்தை, நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு கூறியிருந்தேன். முதலீடுகள் தொடர்பில் அச்சமிருந்தால், நோர்வேஜிய முதலீடாகக் கொண்டுவாருங்கள். ஒரு வெளிநாட்டு முதலீடாக வரும்போது, அதற்கு சர்வதேச பாதுகாப்புண்டு. புலம்பெயர் சமூகமென்னும் அடையாளம் தேவையில்லை. குறித்த நாடுகளின் அடையாளம் மட்டும்தான் இருக்கும். இந்த அடிப்படையில் சிந்திக்காமல், அனைத்தையும் கறுப்பு வெள்ளையாக சிந்தித்தால், தாயகத்தை காப்பது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும். சாத்தியமான வழிகளில் சிந்திப்பவர்களுக்கு, அவ்வாறு சிந்திப்பவர்களை ஊக்குவிப்பதற்கு நம்மத்தியில் ஆதரவில்லை. வெறும் உணச்சிப் பிளம்பாக காட்சியளிக்கும் ஆட்களே நம் மத்தியில் அதிகம். கடந்த 14 வருடங்களில் இந்த உணச்சிப்பிளம்பால் எதனையாவது சாதிக்க முடிந்ததா? ஒரு நிலப்பரப்பை பாதுகாப்பதற்கு சனத்தொகை அவசியம். சனத்தொகை வீழ்சியடைந்து செல்லும் போது, அந்த நிலப்பரப்பை அடையாளப்படுத்துவதற்கான தார்மீக தகுதியை குறித்த மக்கள் கூட்டம் இழந்துவிடும். கிழக்கு மாகாணம் இன்று மூவினங்களும் வாழ்கின்ற ஒரு மாகாணம். இந்த பின்புலத்தில் ஏற்கனவே, கிழக்கு மாகாணம் தமிழர் பகுதியென்னும் அடையாளத்தை இழந்துவிட்டது. நாங்கள் வேண்டுமானால் அவ்வாறு உச்சரித்துக் கொண்டு, எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். கிழக்கு என்பது, இப்போது மூவின மக்களும் வாழும் பகுதி. வடக்கு மாகாணத்தின் நிலைமையும் இன்னும் பத்துவருடங்களின் பின்னர் இப்போதிருப்பது போன்று இருப்பதற்கான வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அதிகமான பகுதிகளில் வீடுகள் மட்டுத்தான் இருக்கும் – ஒரு வேளை அந்த வீடுகளில் வெளிநாட்டு குளிர் ஒத்துக் கொள்ளாத முதியவர்கள் இருக்கலாம். இதுதான் தமிழரின் நிலையென்றால், யாரை முன்னிலைப்படுத்தி, நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றோம்? வசிதியுள்ள மேற்குலக நாடுகளை நோக்கிச் செல்வதுதான், பெரும்பாலான தமிழரது கனவென்றால், அவ்வாறானவர்களுக்கு எதற்காக அரசியல் தீர்வு. அரசியல் தீர்வு, நமது நிலத்தை விட்டால் வேறு வழியில்லை என்பவர்களுக்கல்லவா! அடைந்தால் மகா தேவி இல்லாவிட்டால் மரண தேவி என்னும் நிலையில், சிந்தித்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில், தாயகமென்று அடையாளப்படுத்துவதற்கு எதுவுமிருக்காது. பின்னர், விகாரைகள் வருகிறதென்று, வீதிகளில் சிலர் கூடி சத்தமிடுவதில் பொருளில்லை. இன்னும் பத்துவருடங்களில் வடக்கு கிழக்கை பிரதிநித்துவம் செய்யும் தமிழ் நாடாளுமன்ற எண்ணிக்கை பத்து தொடக்கம் பன்னிரெண்டுக்குள் முடங்கலாம். மக்கள் தொடர்ந்தும் வெளியேறிக் கொண்டிருந்தால், எங்களிடம் எஞ்சியிருக்கும் ஜனநயாக பிரதிநித்துவ பலத்தையும் சிறுகச் சிறுக இழப்போம். இதனை கருத்தில் கொண்டு சிந்திக்க மறுப்பவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மைசெய்பவர்கள் அல்லர். http://www.samakalam.com/கனடாவிற்கு-செல்லுதல்/
-
ஏன் மீண்டும் 13வது திருத்தச்சட்டம் பேசுபொருளானது? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவது தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றது. இன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் இதனை சரியென்று கூறுகின்றனர். தொடர்ந்தும் இப்படியே சென்றால் நிலைமைகள் மோசமடைந்துவிடும் – எனவே ஏதாவதொரு புள்ளியில் நாம் சந்திக்க வேண்டும். ஆனால், நிலைமைகளை புரிந்துகொள்ள மறுப்பவர்களோ அல்லது, புரிந்து கொள்ள விரும்பாதவர்களோ வேறு விதமாக பேசுகின்றனர். இவர்கள் இந்தியாவின் நிகழ்சிநிரலை முன்னெடுக்க விரும்புகின்றனர் – இது ஒரு சாராரின் கருத்து. இவர்கள் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை திட்டமிட்டு பலவீனப்படுத்துகின்றனர் – இது இன்னொரு சாராரின் கருத்து. 13வது திருத்தம் என்றவுடன், இந்தியாவை தொடர்புபடுத்தி சிந்திக்கும் போக்கொன்றே மேலோங்கியிருக்கின்றது. இவ்வாறான அப்பிராயத்தை பரப்புவதையே சிலர் தங்களின் பணியாகவும் கொண்டிருக்கின்றனர். ஏன் 13வது திருத்தச்சட்டம் மீளவும் பேசுபொருளானது? 13வது திருத்தச்சட்டம் என்றவுடன் முட்டி மோதுவதற்கு காத்திருக்கும் எவரிடமும் இந்தக் கேள்விக்கு பதிலில்லை. ஆகக் குறைந்தது, இந்தக் கேள்வியின் அடிப்படையில், சிந்திப்பதற்குக் கூட, அவர்கள் தங்களை தயார்படுத்துவதில்லை. 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக்கொள்வதை முட்டாள்தனமென்று வாதிட முற்படுவர்களோ – தாங்கள் எவ்வாறானதொரு முட்டாள்தனத்துக்குள் சிக்குப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்வதில்லை. யுத்தம் முடிவுற்று 14 வருடங்களாகின்றன. இந்த காலத்தில் நடைபெற்றவைகள் ஏராளம். ஆனால் அதன் பின்னரும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றதென்றால், அதன் பொருள் என்ன? இந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் தமிழர் அரசியல் செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை என்பதுதானே! கடந்த 14 வருடகால தமிழ் செயற்பாடுகள் தாக்கம் மிக்கதாக இருந்திருந்தால், 13வது திருத்தச்சட்டத்தை கையாள வேண்டிய நிலைமை ஏற்;பட்டிருக்காதல்லவா? இப்போது 13வது திருத்தச்சட்டம் பேசப்படுதவதற்கு உண்மையிலேயே யார் காரணம்? வெறுமனே சமஸ்டி பற்றி உளறிக் கொண்டு, தங்களின் குடும்ப அலுவல்களை பார்த்துக் கொண்டிருக்கும், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் (எல்லோரும் அல்ல) சிவில் சமூக பிரதிநிதிகள் என்போரா அல்லது, இருப்பதையாவது காப்பாற்றுவோம் என்று சிந்திப்பவர்களா? யார் இதற்கு காரணம்? யுத்தம் முடிவுற்றதற்கு பின்னரான, கடந்த 14 வருடங்களில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்வதற்கான அர்ப்பணிப்பை எவருமே காண்பிக்கவில்லை. உதாரணமாக, விடுதலைப் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மட்டுமல்ல – சமஸ்டி பற்றியோ, அல்லது, ஒரு நாடு இரண்டு தேசம் பற்றியும் பேசியதில்லை. ஏன்? – ஏனெனில், விடுதலைப் புலிகளின் வெற்றிவாதம் அனைத்தையும் செல்லாக் காசாக்கியது. ஏதோ பெரிதாக கிடைக்கப் போவதான ஒரு நிழல் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தது. அது உண்மையா அல்லது மாயையா என்பது பற்றிய சிந்திப்பதற்கும் எவருமே தயாராக இருக்கவில்லை. ஏனெனில், விடுதலைப் புலிகள் என்னும் பிரமாண்டத்திற்கு முன்னால் ஏனைய விடயங்கள் அனைத்தும் பெறுமதியற்றுப் போனது. அப்போதும் யதார்த்தமாக பேசியவர்கள் இருந்தனர் – ஆனால் அவர்களை பொருட்படுத்துவதற்கு எவரும் தயாராக இருக்கவில்லை. நான் உட்பட. விடுதலைப் புலிகள் என்னும் பிரமாண்டம் மறைந்த போதுதான், அடுத்தது என்ன – என்னும் கேள்வி மேலெழுந்தது. இந்தக் கேள்விக்கான பதிலை தரக் கூடியவர்களாக சிலர் தமிழ் சமூகத்தின் முன்னால் காட்சியளித்தனர். முதலில் இரா.சம்பந்தன் என்னும் பார்வை மேலோங்கியது. பின்னர் சம்பந்தன் பொருத்தமானவர் அல்ல – அதற்கு மாற்றானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – என்றும் சிலர் வாதிட்டனர். இப்போதும் அவ்வாறான குரல்கள் உண்டு. இற்கிடையில், அரசியலுக்கு புதிதாக வந்த சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பிலும் சிறிது காலம் அரசியல் காற்று வீசியது. அதுவும் அதிக காலம் நீடிக்கவில்லை. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடகாலத்தை திரும்பிப் பார்த்தால், எவரிடமும் அர்பணிப்பு மிக்க அரசியல் செயற்பாடுகளை காண முடியவில்லை. இலங்கையின் ஆட்சியளார்கள் மீது நிர்பந்தங்களை ஏற்படுத்த எவராலும் முடியவில்லை. சர்வதேசம் என்னும் சொல்லும் எதிர்பார்த்த நன்மையை தரவில்லை. அவர்களை தமிழர் பக்கமாக திருப்பும் வல்லமையையும் எவரும் ஜனநயாக தளத்தில் நிரூபிக்கவில்லை. இந்த அடிப்படையில் 14 வருட கால தமிழர் அரசியல் செற்பாடுகள் படுதோல்வியையே அடையாளப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள் என்னதான், செய்வதென்னும் கேள்வி மேலெழுந்தது. இதில் இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். யுத்தம் முடிவுற்றதும் இந்தியா தொடர்பான கரிசனை எவரிடமும் இருந்திருக்கவில்லை. இந்தியா வழமைபோல் இலங்கை தொடர்பில் பேசுகின்ற போது, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை உச்சரித்துக் கொண்டிருந்தது. ஆனால் சம்பந்தன் தரப்போ, 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் உச்சரிக்கக் கூட இல்லை. மாறாக, மகிந்த ராஜபக்ச 13 பிளஸ் என்னும் ஒன்றை உச்சரித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதிலும் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசினர். அப்போதும் கூட நிலைமைகளை புரிந்துகொண்டவர்கள் 13வது திருத்தச்சட்டத்தை உச்சபட்சமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் சம்பந்தனோ, 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி தாங்கள் அதிக தூரம் சென்றுவிட்டதாகவும், அது பற்றிப் பேசவேண்டியதில்லை – என்று கூறி, அனைவரதும் வாயை அடைத்தார். புதிய அரசியல் யாப்பு மூலம் பிரச்சினைக்கான தீர்வை நெருங்கிவிட்டதாக கூறினார். இறுதியில் என்ன நடந்தது? இந்தக் காலத்தில், சம்பந்தன் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியலை செய்ய வேண்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ – அதற்கு, முற்றிலும் எதிர்மாறான, யதார்த்த விரோத அரசியலையே முன்னெடுத்தார். வர முடியாத அரசியல் யாப்பு தொடர்பில் கொள்கை விளக்கமளிக்கும் வேலையில் தனது நேரத்தை செலிவிட்டார். இதன் மூலம் சம்பந்தன் சுமந்திரனை விடவும் தாங்களே, தமிழ்த் தேசிய புனிதர்கள் என்னும் அரசியல் மாயையொன்றை ஏற்படுத்துவது ஒன்றே, அவர்களின் ஒரேயொரு இலக்காக இருந்தது. மொத்தத்தில் இரண்டு தரப்புக்களுமே மக்கள் விரோத அரசியலையே முன்னெடுத்தன. உண்மையில் சமபந்தன் தரப்பை குற்றம்சாட்டுபவர்கள், சம்பந்தனின் யதார்த்த விரோத செயற்பாடுகளை முன்வைத்தே, தங்களின் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ, சாதாரண மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் சிந்திக்கவுமில்லை, அதே வேளை தாங்கள் கூறியவற்றுக்கான உச்சபட்சமான அர்ப்பணிப்பையும் நிரூபிக்கவில்லை. வெறும் தேர்தல் மைய அரசியலை, முன்னெடுப்பதற்கான போட்டியிலேயே கவனம் செலுத்தினர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தொடர்ந்தும் சமஸ்டியென்றும், சர்வதேச விசாரணையென்றும் தமிழ் மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பது? இப்படியொரு கேள்வி சற்று வெளியில் முகம் காட்ட ஆரம்பித்தது. யதார்த்தமாக சிந்திக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் பலரும் சிந்திக்கத் தலைப்பட்டனர். இந்த பின்புலத்தில்தான், மீண்டும் இந்தியாவை நோக்கி செல்ல வேண்டுமென்னும் கரிசனை முன்னாள் ஆயுத இயக்கங்களின் மத்தியில் பேசுபொருளானது. இந்த பின்புலத்தில்தான், டெலோ 13வது திருத்தச்சட்டத்தை ஆரப்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளும் விவாதத்திற்கு பிள்ளையார் சுழியிட்டது. பின்னர் ஏனைய கட்சிகளும் இந்த முயற்சியில் சங்கமித்தது. இந்த சந்தர்ப்பத்திலும் கூட, இரா.சம்பந்தன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை. மீண்டும் வேதாளம் என்பது போல், இந்திய பிரதமருக்கான கடிதத்தில், தமிழ் கட்சிகள் மூன்றாக பிரிந்தன. இதில் ஒரு அணியினரது, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் நிலைப்பாட்டை மலினப்படுத்தும் நோக்கிலேயே, ஏனைய தரப்புக்கள் கடிதங்களை அனுப்பியிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியின் சமஸ்டிக் கதைகள், தங்களின் தேர்தல் அரசியலை பலவீனப்படுத்தி விடுமோ என்னும் அடிப்படையில்தான், தமிரசு கட்சி சிந்திக்கின்றது. ஆனால் இது அடிப்படையிலேயே தவறானது. மக்களுக்கு எது நன்மையோ, அது பற்றி மட்டும்தான், மக்கள் தொடர்பில் சிந்திப்பவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். மக்களை வாழ வைக்கும் முயற்சியில் தமிழ் தேசிய தரப்புக்கள் என்போரால் இதுவரையில் ஆக்கபூர்வமாக எதனையும் நிரூபிக்க முடியவில்லை. இதற்கு அடிப்படையான காரணம், எதனை எக்காலத்தில் கையிலெடுக்க வேண்டுமோ, அதனை கையிலெடுக்க தமிழ் கட்சிகள் தவறுகின்றன. 2015 ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அனைத்து தரப்புகளும் ஓரணியாக 13வது திருத்தச்சட்டத்தை கையிலெடுத்திருந்தால், நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். அரசாங்கமும் வேறு வழியின்றி சில விடயங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டதால், இன்று நிலைமை மேலும் சிக்கலடைந்திருக்கின்றது. 13வது திருத்தச்சட்;டத்தை அமுல்படுத்தும் விடயத்திற்கே கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பேசுபவர்களை முட்டாள்களென்று கூறுபவர்களோ, மறுபுறம், சமஸ்டியை அடையும் வழியைச் சொல்லத் தெரியாத முட்டாள்களாக இருக்கின்றனர். தாங்கள் முட்டாள்களாக இருப்பதை மறைப்பதற்காகவே, அவர்களுக்கு சதிக் கோட்பாடுகள் தேவைப்படுகின்றன. 13வது திருத்தச்சட்டத்தை பற்றி எவரேனும் பேசினால் அவர்கள் இந்தியாவின் சம்பளப் பட்டியலில் இருப்பதான கதைகளை மக்கள் மத்தியில் பரப்ப முற்படுகின்றனர். 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் சாதகமாக நோக்க வேண்டுமென்று கூறும், தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு, இந்;தியா நிதி வழங்குவதான கதைகளை கூறி, அவர்களின் ஈடுபாட்டை சீர்குலைக்க முற்படுகின்றனர். உண்மையில் இவ்வாறானவர்கள் யார், இவர்களது மக்கள் விரோத பின்னணி என்ன? இதற்கு பின்னால் சீனாவின் திரைமறைவு நகர்வுகள் இருக்கின்றதா? ஏன் அவ்வாறு நாம் சந்தேகிக்கக் கூடாது? 13வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக இந்தியா நிதிவழங்குவது உண்மையானால், 13வது திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு ஏன் சீனா நிதியளிக்க முடியாது? இதன் மூலம் இந்திய எதிர்ப்பு மனோபாவத்தை, வடக்கு கிழக்கு, தமிழ் மக்கள் மத்தியில் கூர்மைப்படுத்துவதற்கு சீனா முயற்சிக்கலாம்தானே! இதற்கு சில சீன முகவர்கள் துணை போகலாமல்லவா! இந்திய எதிர்ப்பு கருத்துக்களை, வடக்கு கிழக்கில் பரப்புவதை ஊக்குவிப்பதற்கான முகவர்கள் கிடைத்தால், சீனா நிச்சயம் அவர்களை பயன்படுத்திக்கொள்ளும். நான் தர்க்கரீதியில்தான், இந்தக் கேள்விகளை முன்வைக்கின்றேன் – அதாவது, 13வது ஆதரவுக்கு பின்னால் இந்தியா இருப்பது உண்மையாயின், 13 எதிர்ப்புக்கு பின்னால் சீனா இருப்பதற்கான காரணத்தை எவ்வாறு நாம் நிராகரிக்க முடியும்? 13எதிர்ப்பை முன்வைப்பவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம். ஒன்று, ஏழை தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் துளியளவும் அக்கறையில்லாதவர்கள். இரண்டு, இந்தியா தொடர்பான சதிக் கோட்பாடுகளை பரப்புவர்கள். மூன்று, சிங்கள தேசியவாத தரப்புக்களின் 13 எதிர்ப்பிற்கு துணைபோபவர்கள். நான்கு, அரசியல் தீர்விற்கான முயற்சிகளுக்கு, தமிழ் மக்கள் பக்கத்தில் ஆதரவில்லையென்னும், அரசாங்கத்தின் கருத்துக்கு வலுச் சேர்ப்பவர்கள். இப்போது ரணில் இவ்வாறானதொரு வாதத்தைத்தான் முன்வைக்கின்றார். இவர்களின் இலக்கு வெற்றிபெற்றால் நடக்கப் போவது ஒன்று மட்டுமே. அதாவது, வசதியுள்ள மத்தியதரவர்க்கம் நாட்டைவிட்டு வெளியேறிவிடும். வசதியில்லாத மக்களே மிஞ்சுவர். அவர்கள் அரசாங்கத்தின் பக்கமே இறுதியில் சாய்வர். ஏனெனில் – சோறே, அவர்களது பிரதான பிரச்சினையாக இருக்கும். ஆகக் குறைந்தது, 13வது திருத்தச்சட்டத்திலுள்ள சில விடயங்கள் அமுல்படுத்தப்பட்டால், ஓரளவு முன்னேறுவதற்கான அடித்தளம் உருவாகும். முற்றிலும் சாதகமாக அமையுமென்றோ, 13 ஒரு சர்வலோக நிவாரணியென்றோ நாங்கள் வாதிடவில்லை. இருப்பதை உச்சபட்டசமாக பயன்படுத்திக் கொண்டு இல்லாதவற்றுக்காக முற்சிப்பது பற்றியே நாம் வாதிடுகின்றோம். அது ஒன்றுதான் இன்றைய சூழலில் தக்கன பிழைப்பதற்கான ஒரே வழியாகும். தக்கன பிழைத்தல் என்பது, ஆற்றலோ அல்லது அறிவோ அல்ல – மாறாக, சூழ்நிலையை புரிந்து கொண்டு, அந்தச் சூழ்நிலைக்குள் தப்பிப்பிழைப்பதற்கான ஆற்றல் பற்றியது. அதற்கான உக்திகள் பறறியது. இன்றைய சூழலில் தக்கன பிழைத்தல் என்பது, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, முன்னேறுவதற்காக காத்திருப்பதாகும். எனவே – அடிப்படையில் இன்றைய சூழலில், எவரெல்லாம், இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, முன்னேறலாம் – என்று, கூறுபவர்களை தோற்கடிக்க முயற்சிக்கின்றார்களோ, அவர்களைப் பற்றி, அவதூறுகளை பரப்புகின்றார்களோ, அவர்கள் அனைவருமே தமிழ் இன அடையாளத்தை, சிதைத்து, உருத்தெரியாமல் ஆக்கும் நீண்டகால இலக்கின் முகவர்களாவர். http://www.samakalam.com/ஏன்-மீண்டும்-13வது-திருத்த/
-
யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி ? யதீந்திரா கடந்த மாதம் 29ம் திகதி, இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஜ.என்.எஸ் கஞ்சர் (Khanjar) திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, குக்குரி வகுப்பு (Khukri-class) ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல். அன்று மாலை ஒரு வரவேற்பு விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. யூலை – 29ம் திகதி, இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதி. இவ்வாறானதொரு திகதியில், இந்திய கடற்படைக் கப்பலின் வருகை தற்செயலானதுதான் ஆனால் முக்கியத்துவம் மிக்கது. 1990ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் திகதி, ஜ.என்.எஸ் துருப்புக்காவி கப்பல், மகர் (INS troop ship Magar) இணைந் வடக்கு கிழக்கு மாகாண சபைக்காக செயற்பட்டவர்களையும் உள்ளடக்கியவாறு, இந்திய அமைதிப்படையின் கடைசித் துருப்புக்களுடன், திருகோணமலை துறைமுகத்திலிருந்து வெளியேறியது. அத்துடன் வடக்கு கிழக்கில், நிலைகொண்டிருந்த, 50000 இந்திய அமைதிப் படையின் 32 மாதகால சகாப்தம் முடிவுற்றது. குறித்த கப்பலை, தமிழ் நாட்டு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதி அனுமதிக்கவில்லை. மார்ச் மாதத்தில், வடகிழக்கு மாகாண சபையை கலைத்த, அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தனிநாட்டுக்கான பிரகடணம் ஒன்றை முன்வைத்திருந்தார். இதனை காரணம் காண்பித்தே, கருணாநிதி, தமிழ் தேசிய இராணுவத்தின் உறுப்பினர்கள், தமிழ் நாட்டுக்கள் நுழைவதற்கான அனுமதியை மறுத்தார். இதனைத் தொடர்ந்து, கேரள துறைமுகத்திலும் குறித்த கப்பல், அனுமதிக்கப்படவில்லை. இறுதியாக. ஓடிசா, விசாக பட்டணத்தில்தான் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டது. கடந்த மாதம் யூலை29 இல், திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற ஜ.என்.எஸ் கஞ்சர், விசாகபட்டணத்திலிருந்தே அதன் பயணத்தை ஆரம்பித்திருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு, பிரேமதாச அரசாங்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதை தொடர்ந்தே, இந்திய படைகள் வடக்கு கிழக்கிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. இந்தியா, வடக்கு கிழக்கில் அதன் செல்வாக்கை இழந்துவிட்டதாக, முக்கியமாக, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை இழந்துவிட்டதாக, அப்போது, நியூயோக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையொன்று வெளியானது. 2023, யூலை, 29ம் திகதி, இந்திய கடற்படை கப்பலின் நிகழ்வில் மகழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்கு இந்த விடயங்களே நினைவுக்கு வந்தது. இதனை கப்பலின் கேப்டனிடம் தெரிவித்தேன். இதெல்லாம் உங்களைப் போன்ற புத்திஜீவிகளுக்கான விடயமென்று கூறி, சிரித்துக் கொண்டார். இலங்கை விடயத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடு தோல்வியடைந்தது. அன்றைய சூழலில், இது தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியுற்றது. குறிப்பாக பிரேமதாச மீது அவர்களுக்கு கோபம் இருந்தாலும் கூட, இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை, இந்தியாவின் வெளியேற்றத்திற்காக பிரேமதாசவுடன் இணைந்து கொண்ட விடயங்களே, இந்தியாவை பொறுத்தவரையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையின் உள்நாட்டு அரசியல் பிரச்சினையில் தலையீடு செய்வதிலிருந்து இந்தியா விலகிக்கொண்டது. இந்தியா விலகியிருக்க வேண்டுமென்பதே விடுதலைப் புலிகள் அமைப்பின் விருப்பமாகவும் இருந்தது. இந்தியா விலகிய பின்னரான 30 வருட காலப்பகுதியில் இலங்கையில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுவிட்டன. ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை காணும் விடயத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தாண்டி இரண்டு தரப்புக்களாலுமே நகர முடியவில்லை. இது எங்களின் உள் விவகாரம், நாங்கள் இதனை பார்த்துக் கொள்கின்றோமென்று கூறித்தான், இந்திய படைகள் வெளியேற்றப்பட்டன. ஆனால் இந்தியா இல்லாமல் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமென்று கூறியவர்களால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இந்தியா இல்லாமல், தனிநாடு ஒன்றை காண முடியுமென்று கூறித்தான், விடுதலைப் புலிகள் அமைப்பு, தனி வழியில் சென்றது. ஏராளமான உயிர் தியாகங்களையும் செய்தது. பெருந் தொகையான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இப்போது, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் தலையீட்டை தமிழ் கட்சிகள் கோருகின்றன. எங்களுடைய பிரச்சினையை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோமென்று கூறிய சிங்கள தரப்புக்களாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முடியவில்லை. இந்தியா எங்களுக்குத் தேவையில்லை, வெளியேறு – என்று கூறிய தமிழர்களாலும் வெற்றிபெற முடியவில்லை. இப்போது தோல்வியடைந்திருப்பது யார்? சந்தர்ப்பங்களை தவறி விட்டால், அது எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும், ஒரு இனத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு ஈழத் தமிழினம் ஒரு வாழும் சாட்சி. ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு யார் காரணமென்று கேட்டால், இந்தியாவை நோக்கி, அமெரிக்காவை நோக்கி விரல் நீட்டுவதற்கு, நம் மத்தியில் இப்போதும் பலருண்டு. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் முன்னர் எவ்வாறு சிந்தித்தனரோ, அவ்வாறுதான் இப்போதும் சிந்திக்கின்றனர். அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். பலம்பொருந்திய நாடுகளை வழிநடத்துவது அவர்களின் நலன்கள் மட்டுமேயாகும். அவர்களது நலன்களுக்குள் நமது நலன்களை தேடுவதில் வெற்றிபெற முடிந்தால், அதுவே ஈழத் தமிழனத்தின் வெற்றியாக இருக்கும் ஆனால், அவ்வாறானதொரு வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. வெற்றிக்கான வாய்ப்புக்களை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். இப்போது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, வாய்ப்புகளுக்காக காத்திருப்பதை மட்டுமே ஈழத் தமிழர் தலைமைகள் என்போர் செய்ய முடியும். இந்தியா தொடர்பில் ஈழத் தமிழ்ச் சூழலில் போதிய புரிதல் இருந்திருக்கவில்லை. இது சர்வதேச அரசியலை புரிந்துகொள்வதிலுள்ள பலவீனத்தின் விளைவு. இந்தியாவை எட்ட வைக்க வேண்டும், இந்தியா இல்லாமல் விடயங்களை கையாள முடியுமென்னும் சிந்தனையானது, இந்த அரசியல் புரிதலிலுள்ள, பலவீனத்தின் விளைவுதான். ஆரம்ப காலத்தில் இந்த விடயத்தில் போதிய புரிதல் இல்லாமலிருந்ததை மன்னிக்கலாம். ஆனால் ஒரு கட்டத்திற்கு பின்னர் அவ்வாறான புரிதல் ஏற்படாமல் போனதுதான் தவறானது. இந்தியா எக்காலத்திலும் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. இது நமது விருப்பு வெறுப்புக்கள் தொடர்பான விடயமல்ல. சர்வதேச அரசியலை விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கினால் நம்மால் ஒரு போதுமே விடயங்களை புரிந்துகொள்ள முடியாமல் போகும். இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அதே போன்று, நீதி, அநீதி, தர்மம் என்னும் சொற்கள் கொண்டும் சர்வதேச அரசியலை உற்று நோக்கக் கூடாது. அவ்வாறு நோக்கினாலும் நாம் விடயத்தை தவறவிட்டு விடுவோம். ஒரு காலத்தில், தமிழ் இயக்கங்களின் மத்தியில், உலகெங்கும் ஒடுக்கப்பட்ட சக்திகளோடு நாங்கள் தொடர்புகளை பேணிக்கொள்ள வேண்டும், அவர்களின் ஆதரவை திரட்டிக் கொள்ள வேண்டுமென்னும் பார்வை மேலோங்கியிருந்தது. தங்களை ஒரு புரட்சிகர சக்தியாக எண்ணிக் கொண்டன் விளைவாகவே, இவ்வாறான பார்வையை பலரும் வரித்துக் கொண்டனர். ஆனால் இதற்கு மாறாக அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் சிந்தித்திருந்தால், அது, நமக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும். இந்தியாவுடனான தொடர்பு, இயக்கங்களுக்கு அவ்வாறான அங்கீகாரத்தையே வழங்கியது. திம்பு பேச்சுவார்த்தையின் மூலம், இயக்கங்களின் அதுவரையான ஆயுத நடவடிக்கைகள் அனைத்துக்கும் அரசியல் பெறுமதி கிடைத்தது. இந்தியாவின் தலையீட்டினால்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் நீட்சிதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவதன் மூலம் மட்டும்தான், தமிழர் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியுமென்னும் நிலைமையே அன்றிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனை எதிர்ப்பதன் மூலம், அடுத்த கட்டத்தை நகர்த்த முடியுமென்று நம்பியது. இந்தியாவை விரோதித்துக் கொள்வதன் ஊடாக, அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியுமென்று நம்பியது. அதற்காக செயற்பட்டது. அதன் விளைவு, இப்போது தமிழர்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இந்த இடத்திலிருந்து எங்கு செல்வது – செல்ல முடியுமா என்னும் கேள்வியுடன்தான், கடந்த 14 வருடங்களாக, மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றோம். விடயங்களை திரும்பிப் பார்த்தால் ஒரு படிப்பினை நமக்கு முன்னாலிருக்கின்றது. சில விடயங்களை ஏற்றுக்கொண்டு செல்ல மறுக்கின்ற சந்தர்பங்களில், நாங்கள் மேலும் மோசமான பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றோம். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, மாகாண சபையில் பங்குகொள்ளும் முடிவை அனைவருமாக எடுத்திருந்தால், அதிலிருந்து முன்னோக்கி பயணித்திருக்கலாம். இங்கு விடயம் எவ்வளவு அதிகாரங்கள் கிடைக்கின்றன என்பதல்ல முக்கியம், முன்னோக்கி செல்வதற்கு நமக்கு எந்தளவு வாய்ப்புண்டு என்பதை மட்டுமே நோக்க வேண்டும். இந்த இடத்தில் இணங்கிச செல்ல மறுத்ததால், அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாற்றமடைந்தது. நண்பராக இருந்த ஒரு பிராந்திய சக்தி நம்மிலிருந்து விலகிச் சென்றது. இந்தியாவின் பார்வையில், ஈழத் தமிழர் நம்பிக்கைக்குரிய தரப்பல்ல என்னும் நிலைமை உருவாகியது. அவ்வாறு இந்தியா கருதினால், அது தவறான பார்வையல்ல. ஏனெனில் அவ்வாறான சம்பவங்களே நடந்திருக்கின்றன. இரண்டாவது, சந்தர்ப்பம், ஒஸ்லோ பேச்சுவார்த்தை. அப்போதும் தனிநாட்டுக்கான மாற்றுத் தீர்வொன்றை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தக் காலத்தில், தென்னாபிரிக்க ராஜதந்திரி, தற்போது தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் சிறில் ரமபோசா, ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலில், இப்படிக் கூறினாராம். எங்களுடைய அனுபவத்தில் உங்களுக்கு ஒன்றை சொல்வேன். இப்போது கிடைத்திருக்கும் இந்த சந்தர்பத்ததை பயன்படுத்திக் கொண்டு ஏதாவது, ஒரு தீர்வுக்கு நீங்கள் செல்லவில்லையென்றால், இந்த யுத்தத்தில் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள், நீங்கள் 40 வருடத்திற்கு பின்நோக்கிச் செல்வீர்கள். இறுதியில் அதுதான் நடந்திருக்கின்றது. 36 வருடங்களுக்கு முன்னரான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற, 13வது திருத்தச்சட்டத்தை நோக்கி, அதனையாவது, பாதுகாக்க முடியுமா என்னும் கேள்வியுடன் எங்களுடைய அரசியல் நாட்கள் நகர்கின்றன. அதற்கும் இந்தியாவின் ஆதரவில்லாமல் சாத்தியமில்லையென்னும் நிலையில்தான் நாமிருக்கின்றோம். இன்றுள்ள, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெயசங்கர், இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில், கொழும்பிலுள்ள, இந்தியத் தூதரகத்தில், அரசியல் செயலராக கடையாற்றிக் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் தயங்கிய போது, அவர் நேரடியாகவே சிலரிடம் பேசியதாகக் கூட தகவலுண்டு. இந்த சந்தர்ப்பத்ததை பயன்படுத்துங்கள். தவறவிடாதிர்களென்று அவர் கூறியிருக்கின்றார். இன்று காலம் எவ்வாறு நகர்ந்திருக்கின்றது? இன்று அவரிடம் சென்று, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உதவுங்கள், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாம் கோருகின்றோம். இது எதனை உணர்த்துகின்றது? அன்று சந்தர்பம் நமது காலடியில் கவனிப்பாரற்று கிடந்தது. இன்றோ, பயன்படுத்தத் தவறியதை, மீண்டும் பயன்படுத்துவதற்கு வாய்பொன்றை தருமாறு இரந்து நிற்கின்றோம்? நாங்கள், எங்களை அரசியல் தெரிந்த சமூகமென்று கூறிக்கொள்ள முடியுமா? எங்கள் இதுவரையான பெருமைகளுக்கு ஏதாவது அர்த்தமுண்டா? 1990இல் இறுதி துருப்புக் காவிக் கப்பலில் வெளியேறிதன் மூலம், இந்தியா எதனையும் இழக்கவில்லை. 36 வருடங்களுக்கு பின்னர், அன்றை ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருகோணமலை மீதான அதன் செல்வாக்கை மீளவும் உறுதிப்படுத்துகின்றது. தென்னிந்தியாவிற்கும் – திருகோணமலைக்கும் இடையில் எண்ணை குழாய்களை பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. இந்தியா மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துiமுகத்தின் மீதான அதன் செல்வாக்கை இழக்கவில்லை. இழக்கவும் மாட்டாது. இழந்ததெல்லாம் ஈழத் தமிழர்கள் மட்டும்தான். இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில், திருகோணமலையின் பெரும்பாண்மை சமூகமாக தமிழர்கள் இருந்தனர். திருகோணமலை தலைமையாகக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாண சபையின் தலைமைக் காரியாலயம் இயங்கியது. அனைத்தும் தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது எதுமில்லை. இப்போது யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி? http://www.samakalam.com/யாருக்கு-வெற்றி-யாருக்/
-
அமித்ஷாவின் கூற்று – புரிந்துகொள்ளப்பட்டதும், புரிந்துகொள்ளப்படாததும். யதீந்திரா பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித்ஷா, தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரது கவனத்தை பெற்றிருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி, இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், ஈழத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டதாக, அமித்ஷா கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, சிலர் இதற்கு விளக்கமளிக்க முற்பட்டனர். சிலரோ, இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறமுற்பட்டனர். இந்தக் கருத்து எவ்வாறானதொரு சூழலில் முன்வைக்கப்பட்டது என்பதை உற்றுநோக்க வேண்டும். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான உக்திகள் திட்டமிடப்படும் சூழலில்தான், அமித்ஷா இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். அமித்ஷாவின் கருத்தை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், தமிழ் நாட்டில், பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக பாடுபட்டுவரும், பாரதிய ஜனதாவின் தமிழ் நாட்டு தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாகவே அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருக்கின்றார். அண்ணாமலை சில தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்தில் புலம்பெயர் தமிழர்களோடு உரையாடியிருந்தார். பிரித்தானியாவை தளமாகக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், அவருக்கு பெரிய வரவேற்றை வழங்கியிருந்தன. அதிகாரத்திலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கினால், இந்தியாவின் ஆசிர்வாதத்தை பெறலாமென்னும் புரிதலொன்று தமிழ்ச் சூழலில் ஒரு பார்வையாக இருக்கின்றது. அதற்காக சிலர், தங்களது புரிதலுக்குட்பட்ட முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர். அண்ணாமலைக்கான வரவேற்பின் பின்னணியும் இதுதான். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில், ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு, அப்போது ஆட்சியிலிருந்த, காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டுவைத்திருந்த திராவிட முன்னேற்றக்கழகமும்தான் காரணம். இந்தக் கருத்தைததான் அமித்ஷா, இராமேஸ்வரத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த இடத்தில் அமித்ஷாவின் கருத்தை முன்னிறுத்தி சிந்திக்க முற்படுவோர், திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் மீதான குற்றச்சாட்டை எவ்வாறு நோக்கப் போகின்றனர்? அதனை ஏற்றுக்கொள்கின்றனரா – அல்லது நிராகரிக்கின்றனரா? ஏற்றுக்கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்நிலையிலேயே நிற்க வேண்டிவரும். ஏனெனில், பாரதிய ஜனதா கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவு நிலையென்பது, மிகவும் தெளிவாக, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எதிரானது. இந்தியாவை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி மிகவும் செல்வாக்குமிக்க கட்சி. பாரதிய ஜனதா கட்சியை சவாலுக்குள்ளாக்கக் கூடிய வகையில் பிறிதொரு தனிக்கட்சி இல்லை. காங்கிரஸ் பிராதான கட்சியாக இருந்தாலும் கூட, ஒப்பீட்டடிப்படையில் பலவீனமாகவே இருக்கின்றது. இந்த நிலையில்தான், நடைபெறவுள்ள தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்தியா என்னும் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில், ஒப்பீட்டு அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சி நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, இம்முறை, பாரிய வெற்றியை பெற முடியாதென்னும் கணிப்புக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் நாட்டை ஆளும் திராவிட முன்னேற்றக்கழகம், இந்தியா கூட்டில் முக்கிய பங்காளியாகும். இந்த பின்புலத்தில்தான், ஈழத் தமிழரின் கண்ணீருக்கு இவர்கள் பதில் கூறவேண்டுமென்னும் பிரச்சாரத்தை பாரதிய ஜனதாவின் தமிழ் நாட்டு தலைமை கையிலெடுத்திருக்கின்றது. இது ஈழத் தமிழ் மக்களுக்கு சாதகமானதா? சாதகம்தான். இந்தியாவின் செல்வாக்குமிக்க கட்சி. அதே வேளை, பெரும்பாண்மையான இந்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கும் கட்சியொன்றின் இரண்;டாம் நிலைத் தலைவர், இவ்வாறானதொரு கருத்தை கூறுகின்றார் என்றால், அது சாதகமான விடயம்தான். ஆனால் பெருந்தொகையில் கொலையை எதிர்கொண்ட மக்கள் கூட்டமொன்றிக்கான நீதியென்ன என்பதுதான் இந்த இடத்தில் எழும் கேள்வி? அந்த நீதி தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதுதான் கேள்வி? ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, என்பது இரகசியமான ஒன்றல்ல. அதே வேளை, ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் போது, இந்தியா எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றது என்பதும் இரகசியமானதல்ல. இது தொhடர்பான கேள்விக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கள் பதிலளித்திருக்கின்றார். அதாவது, இலங்கையை நாங்கள், இன அடிப்படையில் நோக்குவதில்லை. இலங்கை என்னுமடிப்படையிலேயே விடங்களை அணுகுகின்றோம். இது எமது நிலைப்பாடு மட்டுமல்ல – மாறாக, முன்னைய அரசாங்கங்கள், இலங்கை தொடர்பில் எவ்வாறான கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருந்தனவோ, அதனையே, பாரதிய ஜனதா கட்சியும் தொடர்கின்றது. இந்தக் கூற்றோடு, அமித்ஷாவின் கருத்தை தொடர்புபடுத்தினால், ஷாவின் கருத்துக்கள் முற்றிலும் உள்நாட்டு அரசியலை எதிர்கொள்ளும் உபாயத்துடன் தொடர்புபடுவதை நாம் காணலாம். ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு இதுவரையில் 13வது திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்லவில்லை. பிரதமர் மோடி, கூட்டுறவு சமஸ்டியின் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, அவர் தனது பார்வையின் அடிப்படையாக, இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் மானில ஆட்சி முறைமையே சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் விளைவான 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை புரிந்துகொண்டுதான், அமித்ஷாவின் கூற்றை உற்றுநோக்க வேண்டும். இந்தியா 13வது திருத்தச்சட்;டத்தை வலியுறுத்தினால், ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து விலகிச் செல்வார்கள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஈழத் தமிழரில்தான் தங்கியிருக்கின்றது – இப்படியெல்லாம் கூறி, நம்மவர்கள் சிலர், சுயதிருப்தி கொண்டாலும் கூட, இந்தியாவின் அடிப்படையான நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லை. வல்லரசுகளின் அயலுறவுக் கொள்கை பிராந்தியரீதியில் மற்றும் உலகளவில் ஏற்படும் அரசியல் மாறங்களினால் மட்டுமே நிகழ முடியும். அவ்வாறான சூழலில், இந்தியாவே, அதன் நிலைப்பாட்டை மாற்றியமைக்கும். இந்திராகாந்தி காலத்து இந்தியாவின் அணுகுமுறை அவ்வாறான ஒன்றுதான். அதே வேளை, நாடுகளின் அணுகுமுறையை நோக்குகின்ற போது, அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை உற்றுநோக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் இந்த விடயத்தை புரிந்துகொள்வதிலும் தெளிவின்மை காணப்படுகின்றது. அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்துவர்கள், தேர்தல்களின் போது, தங்களின் ஆட்சியை தக்கவைப்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள், பல கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆனால் அரசுக்கான அணுகுமுறை ஒன்றுண்டு. கொள்கை நிலைப்பாட்டை முன்னெடுப்பதில் அரசே முதன்மையானது. சிறிய நாடுகளில் வேண்டுமானால், அரசாங்கங்கள் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப, சில தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். ஆனால், பெரிய நாடுகளின் கொள்கை நிலைப்பாட்டில் சாதாரணமாக ஒரு போதும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இதனால்தான், வெளிவிவகாரக் கொள்கையை ஒரு தொடர் நிகழ்வென்பார்கள். இந்த தொடர் நிகழ்வில் பிரதமர்கள் எவராகவும் இருக்கலாம் ஆனால் அவர்கள் நினைத்தவுடன் கொள்கை நிலைப்பாடு மாறிவிடாது. இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் பலம்பொருந்திய நாடுகள் அனைத்தும், இலங்கையின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் பெரும்பாண்மை மக்களை அடிப்படையாகக் கொண்டே, தங்களின் கொள்கை முடிவுகளை மேற்கொள்கின்றனர். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இந்திராகாந்தி காலத்தில் மட்டும்தான், இந்தியா தமிழ் மக்களுக்கு பிரத்தியேக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது. அன்றிருந்த அரசியல் சூழலே அதற்கு காரணம்;. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவிற்கு எதிர்நிலையில் பயணிக்க முற்பட்டதன் காரணமாகவே அவ்வாறானதொரு சூழல் உருவாகியது. அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால் இந்தியா மீளவும் கடுமையான தீர்மானங்களை நிச்சயம் எடுக்கும். 1987இன் அனுபவங்களுக்கு பின்னர், தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனமாகவே செயற்பட்டுவருகின்றனர். மகிந்த ராஜபக்சவின் சீன சார்பு நிலைப்பாட்டால் இந்தியா அதிருப்தியுற்றாலும் கூட, நிலைமைகள் இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி, அதிகம் சென்றுவிட்டதாக கூறிவிட முடியாது. பாதுகாப்பு விடயங்களில் சிக்கலான நிலைமை உருவாகினால் மட்டுமே இந்தியா கடுமையான தீர்மானங்களுக்கு செல்ல நேரிடும். அமித்ஷாவின் கருத்துக்களில் புளகாங்கிதம் அடைய ஒன்றுமில்லை. அதே வேளை, இந்தியாவின் ஆளும் தரப்போடு தொடர்புகளை பேணிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதிலும் தவறில்லை. ஆனால் வெறுமனே, அவர்களது தேர்தல் தந்திரோபாயங்களுக்கான துருப்புச் சிட்டாக மட்டும் சுருங்கிப் போகாத வகையிலும் எமது நகர்வுகள் அமைய வேண்டும். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியில்தான், பாரதிய ஜனதா கட்சி தற்போது, ஈழத் தமிழர் பக்கம் திரும்பியிருக்கின்றது. பாரம்பரியமாக தமிழ் நாட்டின் ஈழ ஆதரவு கட்சிகளாக திராவிட கட்சிகள் மட்டுமே இருந்திருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, இதில் ஒரு உடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. திராவிட கட்சிகள், தற்போதைய சூழலில் மத்தியில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையிலிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதன் மூலம், இதுவரையில் திராவிட கட்சிகள் வசமிருந்த, ஈழ ஆதரவுக் கரிசனையை, தமிழ் நாட்டு பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டு;க்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் அண்ணாமலை கடுமையாக உழைக்கின்றார். இதன் காரணமாகவே, தங்களின் தமிழ் நாட்டுக்கான தேர்தல் பிரச்சார திட்டத்தில், ஈழத் தமிழ் அவலத்தை பிரதான பேசு பொருளாக்கியிருக்கின்றனர். ஈழத் தமிழ் செயற்பாட்டாளர்கள் நிலைமையை நிதானமாக கையாள வேண்டும். அனைவரும் நமக்குத் தேவையென்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் எமது உறவு இந்தியாவுடனானது. http://www.samakalam.com/அமித்ஷாவின்-கூற்று-புர/
-
ஜனாதிபதி தேர்தலை, தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் – ஏன் பயன்படுத்த வேண்டும்? - யதீந்திரா அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்திற்கு பின்னர், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். யார் பிரதான வேட்பாளர்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் அவற்றை ஊகிப்பது கடினமான காரியமல்ல. ரணில் விக்கிரமசிங்கவே பிரதான வேட்பாளராக இருப்பார். அவரை எதிர்த்து எவர் நிறுத்தப்படுவார் என்பதை இப்போதைக்கு ஊகிப்பது கடினம். ஒன்றில் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை தோற்கடிக்க வேண்டுமென்னும் வியூகமொன்று, உள்ளுக்குள்ளும் வெளியிலும் வகுக்கப்படுமாக இருந்தால் மட்டும்தான், ஒரு பலமான பொது வேட்பாளரை நாம் காண முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னால் ஒரு பலவீனமான வேட்பாளரே இருப்பார். ஒரு வேளை, சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவாராயின், தேர்தல் களம் சற்று சூடுபிடிக்கும். ஏனெனில், ஜனாதிபதி தேர்தலில் எவர் வெல்ல வேண்டுமென்றாலும் கூட, அவருக்கு எண்ணிக்கையில் சிறுபாண்மை மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. ஏனெனில் தற்போதுள்ள சூழலில்;, தனிச்சிங்கள வாக்குகளில் வெற்றிபெறுவதை ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வாறான அரசியல் சூழலும் இல்லை, அதனை உருவாக்குவதற்கான அரசியல் காரணங்களும் இல்லை. ஈஸ்டர் தாக்குதல் கோட்டபாயவிற்கு அவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. எண்ணிக்கையில் சிறுபாண்மை மக்களை பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னால் ஒரு பலமான பொது வேட்டபாளர் இல்லையென்றால், மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் தெரிவு ரணிலாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மீண்டும் பிரதான இடத்தை பிடிக்கும். 2005 தேர்தலில், ரணிலை தோற்கடிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. 2015இல், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில், தமிழ் மக்களின் வாக்குகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் தமிழ் மக்களை நாடிவருகின்றது. இதனை தமிழ் தேசிய தலைமைகள் என்போர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றனர்? முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்களின் வாக்குகள், ஒரு இலக்கிற்காக கையாளப்பட்டது, அந்த இலக்கு வெற்றியையும் பெற்றது ஆனால் அதன் பயனை தமிழ் மக்களால் அடைய முடிந்ததா? பதில் இல்லை என்பதே! இந்த நிலையில் மீளவும் தமிழ் மக்களின் வாக்குகள், ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கை ஆற்றப் போகின்றது. ஆனால், இதனை தமிழ் மக்களுக்கு நன்மை சேர்பிக்கும் வகையில் எவ்வாறு கையாளுவது? 2005 தேர்தல் பகிஸ்கரிப்பு, ரணில் விக்கிரமசிங்கவை மட்டும் தோற்கடிக்கவில்லை – மாறாக, விடுதலைப் புலிகளையும் அரசியல் அரங்கிலிருந்து அழித்தது. ஏனெனில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான தேர்தல் பகிஸ்கரிப்பு, இந்திய மற்றும் மேற்குலக வியூகங்களுக்கு எதிரான ஒன்றாகவே நோக்கப்பட்டது. இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளில் சிலவற்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடனான இணைப்புக்கான திட்டங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தார். அதே வேளை, அமெரிக்காவோ, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான, ஜக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவருவதில் ஆர்வம் காட்டியது. இவ்வாறானதொரு நிலையிலேயே, விடுதலைப் புலிகளின் தலைமை, ரணில் விக்கிரமசிங்கவை தேர்தல் பகிஸ்கரிப்பு மூலம், அதிகாரத்திலிருந்து அகற்றும் முடிவை எடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைமையை பொறுத்தவரையில், சமாதான முன்னெடுப்பு ஒரு அரசியல் பொறி, அதிலிருந்து தப்ப வேண்டுமாயின், ரணிலை அரங்கிலிருந்து, அகற்ற வேண்டும், அதன் மூலம், மீண்டும் யுத்தத்ததை ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கலாம். ஏனெனில் சமாதானத்தை முன்னெடுக்கும் நோக்கம் இருந்திருந்தால், ரணிலுடன்தான், புலிகள் காலத்தை செலவிட்டிருக்க வேண்டும். அதனை முழுமூச்சுடன் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் மேற்குலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த, மகிந்த ராஜபக்சவை, தென்னிலங்கையின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு ஒத்துழைத்தால், நோர்வே தலைமையிலான மேற்குலகின் சமாதான முன்னெடுப்புக்களை தொடர முடியாத சூழலை ஏற்படுத்தலாமென்றே புலிகள் கணக்குப் போட்டனர். அவர்களது கணக்கு சரி, ஏனெனில், அவர்கள் எதிர்பார்த்தது போன்றே, மகிந்த ராஜபக்ச நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதை விரும்பவில்லையென்று அறிவித்தார். நாங்களே பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார். எவ்வாறு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த பிரேமதாச, இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டாரோ, அவ்வாறானதொரு சூழல்தான், மகிந்த ராஜபக்ச விடயத்திலும் ஏற்படுத்தப்பட்டது. பிரேமதாச – புலிகள் உடன்பாட்டின் மூலம், இந்திய படைகளை வெளியேற்றும், அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறியது. புலிகள்; தப்பித்துக் கொண்டனர். அதே போன்று, ரணிலை அகற்றும் அவர்களது இலக்கும் நிறைவேறியது. அவர்கள் எதிர்பார்த்தது போன்று, நோர்வேயின் சமாதான முன்னெப்புக்களிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் உருவாகியது. ஆனால் இம்முறை சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணமுற்றார் – என்னும் நிலைமையே புலிகளுக்கு ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், முழு வேகத்துடன் இராணுவரீதியில் புலிகளுக்கு எதிராக திரும்பிய போது, ஒட்டுமொத்த உலகும் புலிகளுக்கு எதிராக இருந்தது. முன்னர் இந்தியா மட்டுமே இருந்தது. இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமையால், புலிகளால் தப்பித்துக் கொள்ள முடிந்தது ஆனால் இம்முறை ஒட்டுமொத்த மேற்குலகும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தமையால், புலிகளால், யுத்தப் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியவில்லை. சமாதான பொறியிலிருந்து தப்பித்துக் கொள்ளவதற்காக புலிகள் வகுத்த யுத்தப் பொறிக்குள், புலிகளே அகப்பட்டுக் கொண்டனர். இந்த பின்புலத்தில் நோக்கினால், ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் தேர்தல் பகிஸ்கரிப்பு தந்திரோபாயம் இறுதியில், தமிழ் மக்களுக்கு மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது. 2015இல் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் தந்திரோபாய நகர்விலும், தமிழ் மக்களின் வாக்குகள் பிரதான பங்கை வகித்திருந்தது. இந்த இடத்தில், சிலர், ஒரு வாதத்தை முன்வைக்கலாம். அதாவது, மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும்தானே அவ்வாறு பயன்படுத்தப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மட்டும் அப்படியென்ன விசேட தகுதியுண்டு? கேள்வியில் தவறில்லை ஆனால் தர்க்கரீதியில் தமிழ் மக்களின் வாக்குகள் ஆற்றும் பங்கை, ஏனையவர்களது வாக்குகள் வழங்காது. ஏனெனில், ஏனையவர்கள் எந்தவொரு சந்தர்பத்திலும், தேர்தல் பகிஸ்கரிப்பு அல்லது, குறிப்பிட்ட நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தேர்தலை பயன்படுத்தும் தீர்மானங்களை எடுக்கவே மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் அவ்வாறான அரசியல் நிலைப்பாடு இல்லை. மத்தியிலுள்ள அரசாங்கத்துடன் பேரம்பேசி, அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதன் மூலம், அரசியலை முன்னெடுப்பதே அவர்களிடமுள்ள அரசியல் உபாயமாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால், 2005இல் ரணிலை தோற்கடிப்பதில் ஈழத் தமிழ் வாக்குகளே பயன்பட்டது. அதே போன்று, 2015இல், மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் ஈழத் தமிழ் வாக்குகளே பிரதான பங்கை வகித்தது. அதே போன்று, 2024 தேர்தலிலும் ஈழத் தமிழ் வாக்குகளே பிரதான பங்கை வகிக்கப் போகின்றன. இந்த இடத்தை தமிழ் தலைமைகள் என்போர் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகின்றனர்? இதனை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு தமிழ் மக்களை ஒரு அரசியல் சமூகமாக நிறுவப் போகின்றனர்? தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் முக்கியமாக ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித்பிரேமதாச அல்லது பிறிதொருவர், எவராக இருப்பினும், அவர்கள் தமிழ் மக்களை நோக்கித் திரும்பும் சூழலை ஏற்படுத்த வேண்டும். வேறு வழியில்லாமல், தமிழ் மக்கள் தங்களுக்குத்தானே வாக்களிப்பார்களென்னும் எண்ணத்திற்கு வாய்ப்பளிக்கக் கூடாது. ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு எண்ணுவதற்கான வாய்ப்புண்டு. ஏனெனில் இன்றைய நிலையில், ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றான ஒருவரை முன்னிலைப்படுத்தக் கூடிய நிலையில் தென்னிலங்கையில் எந்தவொரு கட்சியும் இல்லை. இல்லாவிட்டால் அனைவருமாக பொது வேட்பாளர் ஒருரையே நிறுத்த வேண்டும். இந்தச் சூழலை தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், தமிழ் மக்களின் வாக்குகளை ஒரு பலமான ராஜதந்திர ஆயுதமாக பயன்படுத்துவதற்கான தந்திரேபாயம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிக்கும் தீர்மானத்தை எடுக்கலாம். இதன் மூலம் வேறு வழியின்றி, தமிழர் தரப்போடு பேரம் பேச வேண்டிய நிர்பந்தம் தென்னிலங்கைக்கு உருவாகும். ஆனால் கடந்த காலத்தில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை கோமாளித்தனமாக்கியது போன்று, இம்முறை நடந்துகொள்ளக் கூடாது. இன்றைய நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கு மிகவும் பொருத்தமானவர் இரா.சம்பந்தன் மட்டுமே. தேர்தல் பகிஸ்கரிப்பு உசிதமான அணுகுமுறையல்ல. அது ஜனநாயக விரோதமானதாகவே நோக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை அறிவித்தாலே, தென்னிலங்கை பதட்டமடையும். முக்கியமாக ரணில் பதட்டமடைவார். இதனை தேர்தலுக்கு முன்பாகவே, ஒரு பேரம் பேசுவதற்கான உக்தியாக கையாளலாம். சில விடயங்களை செய்து காண்பிக்குமாறு கூறலாம் அதே வேளை, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கலாம். காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளும் உபாயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய தரப்புக்கள் சிந்திக்க முன்வர வேண்டும். http://www.samakalam.com/ஜனாதிபதி-தேர்தலை-தமிழ்-ம-2/
-
சமஸ்டி, தனிநாடு பின்னர் மீண்டும் சமஸ்டி, தற்போது 13வது திருத்தமாவது காப்பற்றப்படுமா? - யதீந்திரா இன்று 13வது திருத்தச்சட்டத்திலும் வெட்டிக் குறைப்புக்கள் செய்வது தொடர்பில் உரையாடப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்புக்களின் நிலைப்பாடுகள் என்னவாகவும் இருக்கலாம் ஆனால் 13வது திருத்தச்சட்டத்தையாவது பாதுகாக்க முடியுமா அல்லது அதனையும் வெட்டிக் குறைப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா – என்னும் நிலையிலேயே தமிழ் தேசிய அரசியல், அதன் இயலாமைய பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. விடுலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் நகர்வானது, நமது தமிழ் தேசிய தரப்புக்களின் இயலாமைக்கான சான்றாகும். இதில் கொள்கைரீதியான உத்தமர்கள் தொடர்பில் விவாதிக்க ஒன்றுமில்லை. அனைவருமே தோல்வியின் அடையாளங்கள்தான். சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ் மக்களுடன் அதிகாரங்களை பகிர்வதற்கு தயாராற்ற சூழலில்தான், தமிழர்களுக்கான அரசியல் இயக்கம் உருவானது. 1949இல், இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், நான் உங்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கித் தருவேன் என்றார். தமிழரசு கட்சியை ஆங்கிலத்தில் சமஸ்டிக் கட்சியென்று அழைத்தார். இதன் மூலம், தமிழ் மக்களுக்கான தனித்துவமான அடையாளமென்பது, சமஸ்டியடிப்படையிலான இணைப்பாட்சி ஒன்றின் மூலம்தான் சாத்தியப்படுமென்பதே செல்நாயகத்தின் நிலைப்பாடாக இருந்தது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலிருந்து, ஜி.ஜி.பொன்னம்பலம் விலகிச் சென்றதன் காரணமாகவே, செல்வநாயகம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறி, தமிழரசு கட்சியை உருவாக்கினார். இந்தப் பின்புலத்தில் நோக்கினால், பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எப்போதோ, சமஸ்டிக் கோரிக்கையை தூக்கியெறிந்துவிட்டது. இதனை புரிந்து கொண்டிருப்பதால்தான், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்னும் பெயரை பயன்படுத்தாமல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்னும் பெயரில் மக்களிடம் செல்கின்றார். செல்வநாயகம் இவ்வாறு சமஸ்டிபற்றி பேசினாலும் கூட சமஸ்டியை அடைவதற்கான போராட்டங்களில் ஈடுபடவில்லை. சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கி நகரமுடியுமென்று அவர் நம்பியிருக்கலாம் ஆனால் அதனை ஒரு பாய்ச்சலில் அடைந்துவிட முடியுமென்று அவர் ஒருபோதும் நம்பியதாக தெரியவில்லை. 1957இல் இடம்பெற்ற பண்டா – செல்வா உடன்பாடு பின்னர், 1965இல், இடம்பெற்ற டட்லி-செல்வா உடன்பாடுகளின் மூலம் இது தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில் இந்த உடன்பாடுகளில் சமஸ்டி பற்றி பிரஸ்தாபிக்கப்படவில்லை. மிகவும் குறைவான அதிகாரங்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. சமஸ்டியை கட்சியின் பெயரில் வைத்திருந்த செல்வநாயகம் சமஸ்டிக்கான இணக்கப்பாடு தொடர்பில்தானே பேசியிருக்க வேண்டும். அதற்காகத்தானே அவர் சிங்களத் தலைவர்களுடன் உடன்பாடுகளை எட்ட முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லையே! ஏன்? செல்வநாயகம் தொடர்பான சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதவாது, செல்வநாயகம் எவ்வாறான தலைவரென்றால், அவர் கேக் கிடைக்கவில்லை என்பதற்கான பானை நிராகரிக்கின்ற தலைவர் அல்ல. இந்த பின்புலத்தில் செல்வநாயகம் சமஸ்டியை இலக்காகக் கொண்டிருந்தாலும், சமஸ்டிக்கான உடனடி வாய்ப்புக்கள் தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கின்றது. செல்வநாயகத்தின் குறைந்த தீர்வை எட்டும் முயற்சிகளும் கைகூடவில்லை. சமஸ்டிக்கான பிரத்தியேக போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத செல்வநாயகம் அணியினர்தான், பின்னர், தனிநாட்டுக்கான கோரிக்கையை நோக்கி சிந்தித்தனர். தனிநாட்டுக்கான கோரிக்கையை நவரெட்ணம் முன்வைத்த போது, அதனை நிராகரித்த செல்வநாயகம், பின்னர், தனிநாட்டுக் கோரிக்கைதான் ஒரேயொரு வழியென்னும் முடிவுக்கு வருகின்றார். ஆனால் இப்போதும் தனிநாட்டை எவ்வாறு அடைவதென்னும் கேள்விக்கு செல்வநாயகத்திடம் பதிலில்லை. இது தொடர்பில் ஒரு முறை இரா.சம்பந்தனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் கூறினார், இந்தியாவிற்கு தேவைப்பட்டிருந்தால் அது வந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு அவ்வாறானதொரு தனிநாடு தேவைப்பட்டிருக்கவில்லை என்பதை புரிந்துகொள்வதற்கு காலம் எடுத்தது. அதனை ஆய்வு செய்து புரிந்துகொள்ளக் கூடிய வல்லமையுடன் செல்வநாயகமும் இருக்கவில்லை. அன்றிருந்த அனைவரும் சட்டத்துறை சார்ந்தவர்களாக இருந்ததால், பிராந்திய, சர்வதேச அரசியல் சூழலை புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றலுடன் அவர்கள் இருக்கவில்லை. சமஸ்டியைப் போலவே, செல்வநாயகத்தின் தனிநாட்டுக் கோரிக்கையும் பிசுபிசுத்துப் போனது. வழிமுறை தெரியாது முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் அனைத்துமே வெறும் ஏட்டுச் சுரக்காய்தான். அது கறிக்கு உதவாது. ஆனால் தனிநாட்டுக் கோரிக்கையை ஆயுத பலம் கொண்டு அடைய முடியுமென்னும் புதிய சிந்தனையொன்று துளிர்விட்டு, வேகமாக வளர்சியுற்றது. மிதவாதிகளின் இயலாமையே இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு காரணம். இந்த பின்புலத்தில்தான், தமிழர்களின் அரசியல் சர்வதேச கவனத்தை பெறுகின்றது. தமிழர்களை பொறுத்தவரையில், சர்வதேசமென்பது, முதலில் இந்தியாதான். இ;ந்தியா இல்லாத சர்வதேசம் என்பது எப்போதுமே சாத்தியமற்ற ஒன்று. அன்றைய உலக அரசியல் சூழலும், அந்தச் சூழலில், அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னெடுத்த வெளிவிவகாரக் கொள்கையின் காரணமாகவே, இந்தியா கடுமையாக நடந்துகொண்டது. ஒரு வேளை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்தியாவை சார்ந்திருக்கும் அல்லது அனிசாரா அணுகுமுறைக்கு மாறான கொள்கைரீதியான முடிவுகளை எடுக்காதிருந்திருந்தால், இந்தியா இராணுவ ரீதியான தலையீட்டை மேற்கொண்டிருக்காது. ராஜதந்திர அணுகுமுறையிலேயே விடயங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் நிலைமைகள் இந்தியாவின் கையை மீறிச் சென்றதன் காரணமாகவே, இந்தியா சில கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டியேற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்று 36 வருடங்களாகின்றன. மீண்டும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அன்று நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட 13வது திருத்தத்தையாவது பாதுகாக்க முடியுமா, என்னும் கேள்வியுடன், தமிழ் தேசிய அரசியலின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழரின் யுத்தம் தனிநாட்டுக்கானது. விடுதலைப் புலிகளின் தோல்வி மீளவும் தமிழரின் அரசியல் தலைவிதியை மிதவாதிகளின் கைகளுக்கு மாற்றியது. மிதவாதிகளின் தோல்வியை தொடர்ந்துதான் இயக்கங்களின் எழுச்சி ஏற்பட்டது. 90களின் பின்னர் விடுதலைப் புலிகளின் எழுச்சியானது. தனிநாட்டுக்கான பயணத்தின் தோல்வி மீளவும் சமஸ்டியை உயர்த்திப்பிடிக்கும் நிலைமைய ஏற்படுத்தியது. இங்கு பலரும் கவனிக்க மறுக்கின்ற ஒரு விடயம் உண்டு. அதாவது, சமஸ்டியை அடையும் முயற்சியில் ஏற்கனவே மிதவாதிகள் தோல்வியடைந்திருந்தனர். கடந்த 74 வருடகால தமிழ் தேசிய அரசியலில், சமஸ்டிக்கான பேரம் பேசலை செய்வதற்கான ஆற்றல் பிரபாகரனிடம் மட்டுமே இருந்தது ஆனால், அவர் அதனை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கவில்லை. அவரால் தனிநாட்டுக்கு மாற்றான விடயமொன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் 2009இற்கு பின்னர், ஏற்கனவே தோல்வியடைந்த மிதவாதிகள், மீளவும் சமஸ்டி பற்றிப் பேசிய போது, இதனை எவருமே கேள்விக்குள்ளாக்கவில்லை. ஒப்பீட்டடிப்படையில் செல்வநாயகம் காலத்தில் மிதவாதிகள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக இருந்தனர். ஆளுமைமிக்க அரசியல்வாதிகள் இருந்தனர் ஆனாலும், அவர்களால் சமஸ்டிக் கோரிக்கையை வெற்றிகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ஒப்பீட்டடிப்படையில் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கும் தற்போதைய மிதவாதிகளால் எவ்வாறு சமஸ்டியை அடைய முடியும்? இந்தக் கேள்விக்கான பதிலாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீளவும் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக நோக்கப்படுகின்றது. ஏனெனில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றுதான், இன்றுவரையில் நிலைத்து நிற்கின்றது. அதில் போதாமைகள் இருக்கின்றது என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதனைத் தாண்டிச் செல்வதற்கான பேரம் பேசும் ஆற்றலுடன் தமிழர் தரப்பு இல்லையென்பதும் உண்மையாகும். இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு பிரதான விடயம் உண்டு. அதாவது, தமிழர்களுக்கு எந்தவொரு வெளித்தரப்பினதும் ஆதரவும் இல்லை. அவ்வாறானதொரு ஆதரவுநிலை இருந்திருந்தால், 13வது திருத்தச்சட்டத்தையாவது காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தமிழர் அரசியல் கீழிறங்கியிருக்காது. இந்த நிலைமையை புரிந்துகொண்டால், தற்போது இருப்பதை உச்சபட்சமாக பயன்படுத்திக் கொண்டு, முன்னேறும் வழிமுறை ஒன்றே, சாத்தியமான ஒன்றாக இருக்கின்றது. ஆனால் அதற்குக் கூட வெளித்தரப்புக்களின் அழுத்தம் அவசியப்படுகின்றது. இந்தியா ஒன்றுதான் அவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய ஒரேயொரு நாடாக இருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் அதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. ஈழத் தமிழர்களும் இந்தியாவிடம்தான் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டியிருக்கின்றது ஏனெனில், தமிழ் மக்கள் சார்பில், இந்தியாதான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றது. இலங்கை விடயங்களை முன்னெடுக்க தவறும் போது, இந்தியாவின் தலையீட்டைக் கோரும் உரித்து தமிழ் மக்களுக்குண்டு. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடங்களில், தமிழ் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புக்களும், பல முயற்சிகளை முன்னெடுத்ததாக கூறிக்கொண்டாலும் கூட, கொழும்பின் ராஜதந்திர லொபியை தோற்கடிப்பதில், தமிழர் தரப்பால் சிறிய வெற்றியைக் கூட பெற முடியவில்லை. அவ்வாறு வெற்றியை பெற்றிருந்தால், 13வது திருத்தச்சட்டத்திலுள்ள விடயங்களைக் கூட அமுல்படுத்துவதற்கு இந்தளவு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்காது. அதே வேளை, புதுடில்லியை நோக்கிச் செல்வதிலும், ஈழத் தமிழர் தரப்பால், குறிப்பிடத்தகு வெற்றியை பெறமுடியவில்லை. ஈழத் தமிழர் தரப்பின் தொடர் தோல்விகள்தான், தற்போதையை நிலைமைக்கு காரணம். எனவே இப்போதுள்ள சூழலில், 13வது திருத்தத்தையாவது பாதுகாப்போம் என்று கூறுபவர்கள் மீது கோபம் கொள்வதில் பயனில்லை. அவர்கள் தற்போதுள்ள சூழலில் சாத்தியமானதை பேசுகின்றனர். தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அவ்வாறுதான் சிந்திக்க முடியும். உண்மையில், கடந்த 14 வருடங்களாக, வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருந்த, தமிழ் தேசியவாதிகள் என்போர் மீதுதான், உண்மையிலேயே, கோபப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக தங்களை 24கரட் தேசியவாதிகளாக காண்பிக்க முற்படுவர்கள் மீதுதான், தமிழ் சமூகம், அதன் கோபத்தை காண்பிக்க வேண்டும். ஏனெனில், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் காற்று வரவில்லையே என்று அங்கலாய்ப்பதில் பயனில்லை. ஈழத் தமிழ் சமூகத்தின் இன்றைய நிலைக்கு சந்தர்ப்பங்களை நிறுத்துப் பார்த்து, பயன்படுத்தத் தெரியாமல் போனமையே அடிப்படையான காரணமாகும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், ஈழத் தமிழ் அரசியல் தொடர்ந்தும் சறுக்கிக்கொண்டே செல்கின்றது. சந்தர்பங்கள் நழுவவிடப்படுகின்ற போது, மீண்டும் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் முன்னரைப் போல் இருக்க வாய்ப்பில்லை. 13வது திருத்தச்சட்ட விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும். அன்றிருந்த சூழலில், 13வது திருத்தச்சட்டத்தின் பெறுமதியும், அதனை பயன்படுத்துவற்கான தமிழருக்கான வாய்ப்பும் வேறுவிதமானது. அன்று தமிழருக்கான முழுமையான ஆதரவு நிலையில், ஒரு பிராந்திய சக்தியே இருந்தது. இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்தது. ஆளுனர், முதலமைச்சரை பார்த்து நடுங்கினார். இப்போதுள்ள நிலைமை முற்றிலும் வேறானது. இன்றைய நிலையில் ஈழத் தமிழர்களுடன், முழுமையான ஆதரவு நிலையில், எவரும் இல்லை. நிரந்தர நண்பர்களை பெறும் வகையிலான புத்திசாலித்தனமான அரசியலை, தமிழர்கள் முன்னெடுக்கவுமில்லை. http://www.samakalam.com/சமஸ்டி-தனிநாடு-பின்னர்-ம/
-
ஏன் இந்தியா? யதீந்திரா தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தலையீட்டையே, அவர்கள் கோருகின்றனர். அவர்களது கடிதம் அந்த அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. அதற்காக தமிழர் தரப்பிலிருந்து நீண்டகாலமாக கோரப்படும் சமஸ்டித் தீர்வை அவர்கள் நிராகரிக்கவில்லை ஆனால் முன்னோக்கிச் செல்லுவதற்கான ஒரு ஏற்பாடாக, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். தர்க்கரீதியில் இது சரியானது. அடுத்த நிலைப்பாடு சிக்கலானது. புத்திசாலித்தனமற்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இந்தியா சமஸ்டித் தீர்வை வலியுறுத்தவேண்டுமென்று கோரியிருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் அணுனுமுறையிலும் இவ்வாறான போக்கே தெரிகின்றது. கஜேந்திரகுமார் அவ்வாறானதொரு கடிதத்;தை எழுதியிருப்பதால், அதற்கு சமதையான நிலைப்பாட்டைத்தான், தாங்களும் எடுக்க வேண்டுமென்று சம்பந்தன் கருதியிருக்கலாம். தமிழர்களின் கோரிக்கையென்று ஒன்றை முன்வைக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்ற போது, இந்தியாவை புரிந்துகொண்டு, அதற்கேற்பவே அணுக வேண்டும். எங்களது விருப்பங்களை கூறுவது கோரிக்கையல்ல. கோரிக்கைகளை முன்வைக்கும் போது, அதில் தந்திரோபாயம் இருக்க வேண்டும். அதே வேளை, இந்தியாவினாலும் நிராகரிக்க முடியாத விடயமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் பிறிதொரு நாட்டிடமே கோரிக்கையை முன்வைக்கின்றோம். இந்த இடத்தில்தான் இந்தியா எங்களுக்கு ஏன் தேவையனெனும் கேள்வி எழுகின்றது? இதனை இரண்டு நிலையில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, இலங்கை அரசியல் நிலையிலிருந்து நோக்குவது. இரண்டாவது, சர்வதேச அரசியல் பின்புலத்திலிருந்து நோக்குவது. முதலில் இலங்கை அரசியலை புரிந்துகொள்வோம். இலங்கைத் தீவின் அரசியலென்பது சிங்கள மேலாதிக்க அரசியலாகும். தென்னிலங்கை மைய அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ள, சிங்கள அரசியல் சமூகம் தயாராக இல்லை. இன்றுவரையில் இந்த நிலைமை தொடர்கின்றது. இந்த இடத்தில்தான், இந்தியாவின் தலையீடு தேவைப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுத்துவரும் நிலையில்தான், இந்தியாவின் அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. இந்தியா எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்? எந்த அடிப்படையில் பிரயோகிக் முடியும்? இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீட்டைச் செய்த காலத்திலிருந்து ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதாவது, இலங்கையை துண்டாட அனுமதிப்பதில்லை. அடுத்தது, தமிழ் மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கில் மாகாண அரசியல் நிர்வாக முறையின் கீழ் அதிகாரப்பகிர்வு. இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்துதான், இலங்கையின் உள் விவகாரத்தை இந்தியா அணுகி வருகின்றது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்த கொள்கையின் அடிப்படையில்தான் உருவானது. இதன் பின்னர் எதிர்பாராத திருப்பங்கள் சில அரசியலில் இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிற்கு எதிராக திரும்பியது. இந்தியாவை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதை ஒரேயொரு இலக்காகக் கொண்டே விடுதலைப் புலிகள் செயற்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை தந்திரத்தோடு கணித்துக் கொண்ட, பிரேமதாச விடுதலைப் புலிகளை அரவணைத்து, இந்தியாவை வெளியேற்றும் திட்டத்தை வகுத்தார். அவரது எதிர்பார்ப்பு இறுதியில் நிறைவேறியது. இதன் பின்னர் இலங்கையின் அரசியல் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்யவில்லை. உண்மையில் இந்தியா இந்த விடயத்தில் அவமானகரமாகவே வெளியேற நேர்ந்தது. எந்த மக்களுக்கு இந்தியா உதவ முன்வந்ததோ, எந்த மக்கள் மீது பரிவுணர்வு கொண்டிருந்ததோ, எந்த இயக்கத்திற்கு பயிற்சியும், ஆயுதமும், உணவும் வழங்கியதோ, அவர்களே இறுதியில், இந்தியாவை அன்னிய சக்தியென்று கூறி, வெளியேறுமாறு கூறினர். அவ்வாறு கூறிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியர், அன்ரன் பாலசிங்கம், பின்னர், இந்தியா எங்களுக்கு தேவையென்று கூறினார். 2000ஆம் ஆண்டு, இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டார். 2006இல், மன்னிப்பு கோருவதன் மூலம் பழைய கசப்புனர்வை மாற்றியமைக்கவும் முயற்சித்தார். ஆனால் அப்போது, காலம் அதிகம் கடந்திருந்தது. இன்று யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களாகிவிட்டது. இந்த 14 வருடங்களில், ஏராளமான விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இந்த நிலையில்தான், இந்தியாவினால் தலையீடு செய்யக் கூடிய விடயமொன்றில், இந்தியாவை தலையீடு செய்யுமாறு கோர வேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது. இந்தியா தலையீடு செய்யக் கூடிய, அதன் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரேயொரு விடயம், 13வது திருத்தச்சட்டம் மட்டும்தான். இலங்கைக்கு விஜயம் செய்த, இந்திய பிரதமர் மோடி, கூட்டுறவு சமஸ்டி முறைமையின் மீதான தனது ஈடுபாட்டை தெரிவித்திருந்தார். அதனை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு, இந்தியாவிடம் சமஸ்டியை வலியுறுத்தலாமென்று எண்ணுவது தவறு. ஏனெனில் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடாக 13வது திருத்தச்சட்டமே இருக்கின்றது. அதிலிருந்து ஒரு கூட்டுறவு சமஸ்டியை நோக்கிச் செல்ல முடியுமென்றால், அது சிறப்பானது. அதற்கு நாங்கள் முயற்சிக்கலாம் ஆனால் அதனை இந்தியா தட்டில் வைத்து தரவேண்டுமென்று வாதிடுவதும், அதற்காக தற்போதிருப்பதை உச்சபட்சமாக பயன்படுத்திக்கொள்ள மறுப்பதும்தான் தவறானது. இப்போது சர்வதேச அரசியல் பின்புலத்தில், இந்தியாவின் தேவையை நோக்குவோம். இன்றைய உலக அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அன்று எதிரணிகளில் இருந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது ஒரணியில் இருக்கின்றன. அன்று, அமெரிக்காவுடன் இணைந்திருந்த சீனா, இன்று அமெரிக்காவிற்கு எதிர்நிலையிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் பிராந்தியத்தில் சக்தி மிக்க நாடுகளாக இருப்பவற்றின் முக்கியத்துவம் முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்துவிட்டது. ரஸ்ய -உக்ரெயின் யுத்தத்தின் போது, இந்தியாவின் அணுகுமுறை இதற்கு சிறந்த உதாரணம். உக்ரெயினுக்கு பக்கபலமாக மேற்குலகம் நிற்கின்றது.# அமெரிக்கா தொடர்ந்தும் உக்ரெயினுக்கு உதவி வருகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்ற இந்தியா, இந்த யுத்தத்திலிருந்து தன்னை அதிகம் விலத்தி வைத்திருக்கின்றது. அமெரிக்கா ரஸ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கின்றது. ஆனால் இந்தியாவோ, சுதந்திரமாக ரஸ்யாவுடன் வியாபாரம் செய்கின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றது? ஏனெனில், உலகம் அதிகம் பிராந்திய மயப்படுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் முன்னர் அவ்வாறில்லை. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த காலத்தில், அது சோவியத் யூனியனுடன் நட்பிலிருந்தது. சோவியத் யூனியனுடனான பாதுகாப்பு உடன்பாட்டை ஒரு கவசமாகக் கொண்டுதான், இந்திராகாந்தி, தெற்காசி அரசியலில் சுயாதீனமாக இயங்கினார். கிழக்கு காக்கிஸ்தானை உடைப்பதற்கான இந்திய நகர்வின் போது, அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கும் நோக்கிலேயே, சோவியத் யூனியனுடன், இந்தியா அவ்வாறானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. இன்றைய அரசியல் சூழல் தலைகீழாகிவிட்டது. சோவியத் யூனியனின் செல்வாக்கு வளையத்திற்குள் இருந்த காலத்திலேயே, இந்தியாவை மீறி, செயற்படாத, அமெரிக்கா எவ்வாறு இப்போது செயற்படும். அமெரிக்காவின் அசைவின்றி, மேற்குலகின் தலையீட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. இவ்வாறானதொரு சூழலில், இந்தியாவை தவிர்த்து, ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்விற்கான அழுத்தங்களை எதிர்பார்க்கலாமா? எனவே இலங்கையின் அரசியல் பின்புலத்தில் நோக்கினாலும், இந்தியா எங்களுக்குத் தேவை. சர்வதேச அரசியல் பின்புலத்தில் நோக்கினாலும் இந்தியா எங்களுக்குத் தேவை. இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி, ஈழத் தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்போதுமே, ஏற்படப் போவதில்லை. இந்த விடயங்களை சரியாக புரிந்துகொண்டால், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது. இந்தியாவிடம் செல்லாமல் வேறு எங்கு சென்றும் பயனில்லை. இந்தியாவை தவிர்த்து இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அரசியல் தீர்வு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. இதனை நினைவில் நிறுத்திக்கொள்வது அவசியம். http://www.samakalam.com/ஏன்-இந்தியா/
-
ரணிலுக்கு, தமிழ் கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?- யதீந்திரா இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வரவேண்டுமென்று, ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். அண்மையில் இங்கிலாந்திற்கு சென்றிருந்த, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டு தலைவர், அண்ணாமலையும் இவ்வாறானதொரு கருத்தையே அங்கு வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் ஒன்றாகச் செல்ல வேண்டுமென்று அவர் தெரிவித்திருக்கின்றார். ரணில் இந்த வேளையில் இவ்வாறு கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக குறிப்பிட்ட, ரணில் விக்கிரமசிங்க, இப்போது, தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக வரவேண்டுமென்று கூறுகின்றார். ரணிலின் கூற்றுக்கு பின்னால், காலத்தை இழுத்தடிக்கும் நோக்கம் இருக்கலாம். அரசியலமைபிலுள்ள 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருப்பதை புரிந்துகொண்டு, இவ்வாறானதொரு கருத்தை ரணில் தெரிவித்திருக்கலாம். உங்கள் பக்கத்தில் ஒற்றுமையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடன் பேசுவதென்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்படியான கருத்து கொழும்பிலுள்ள தூதரக மட்டங்களிலும் உண்டு. மேற்கு நாட்டு தூதுவர் ஒருவர் என்னிடம் ஒரு முறை இப்படிக் கேட்டார். உங்கள் பக்கத்திலுள்ள கட்சிகள் மத்தியில் குழப்பங்கள் காணப்படுகின்றதே. இந்;த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் யாருடன் பேசுவது? எனது பதில், நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் தமிழ் கட்சிகள் மத்தியிலிருக்கும் குழப்பங்களுக்காக, நீங்கள், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை புறம்தள்ளமுடியாது. தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் பிளவுபடக் கூடாது. ஒரு ஜக்கிய முன்னணியாக செயற்பட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் கடந்த பத்து வருடங்களாக பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் தமிழ் கட்சிகள் ஒன்றுபடவில்லை. மேலும், மேலும் பிளவுபட்டே சென்றனர். இந்த நிலையில், உள்ளுராட்சி தேர்தலை காரணம் காண்பித்து, வீட்டுச் சின்னத்தின் கீழிருந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிளவுற்றது. தமிழரசு கட்சி, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியிலிருந்த மூன்று கட்சிகளும் இணைந்து, குத்துவிளக்கு சின்னத்தில் தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இயங்கிவருகின்றனர். அவர்களுடன் இணைந்து பயணிப்பாரென்று எதிர்பார்க்கப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய மணிவண்ணணையும் இணைத்துக் கொண்டு, தனியாக செயற்பட்டுவருகின்றார். மறுபுறம், (சைக்கிள் சின்னம்) இந்திய எதிர்ப்பு அரசியல் கட்சியான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி) தொடர்ந்தும் ஏனை கட்சிகளை இந்திய முகவரென்று கூறிக்கொண்டு, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர். அந்த வகையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர், தென்னிலங்கையின், சரத்வீசசேகர, விமல்வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரின் இந்திய எதிர்ப்பு வரிசையில் இருக்கின்றார். தமிழர் அரசியல் இவ்வாறு பல அணிகளாக பிளவுற்றிருக்கும் சூழலில்தான், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டுமாயின், தமிழ் கட்சிகள் ஒன்றாக வரவேண்டுமென்று ரணில் கூறுகின்றார். குறிப்பாக 13வது திருத்தச்சட்ட விடயத்தில், சிங்கள கடும்போக்காளர்கள் மட்டுமல்ல, மறுபுறம், தமிழ் தேசிய தரப்புக்களுக்குள்ளும் பிளவுகள் உண்டு என்பதை நன்றாக புரிந்து கொண்டே, தமிழ் கட்சிகளை ஒன்றாக வருமாறு ரணில் அழைக்கின்றார். விரைவில் இந்தியாவிற்கு செல்லவுள்ள நிலையிலேயே ரணில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறான அப்பிராயம் புதுடில்லியிலும் உண்டு. இந்தியா 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தெளிவாக கூறிய பின்னரும் கூட, இந்தியாவிடம் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைப்பதை புதுடில்லி எவ்வாறு நோக்குமென்பதும் முக்கியமானது. இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கர், இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். 13வது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் உங்களோடு நிற்கும் அதற்கப்பால் செல்வதை கூடாதென்று இந்தியா கூறவில்லை, ஆனால், அந்த விடயத்திற்கு இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாதென்பதையே அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இதற்கு பின்னரும் கூட, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சமஸ்டி தொடர்பில் குறிப்பிட்டதை நிச்சயம் புதுடில்லி ரசித்திருக்காது. இந்த விடயத்தை ரணில் நிச்சயம் தனகுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார். ரணில் மிகவும் தந்திரமான அரசியல்வாதி. ஏனையவர்கள் போன்று ரணிலை கையாளுவது கடினம். ரணில் ஆரம்பத்திலேயே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தென்னிலங்கையில் பௌத்த பிக்குகள், 13இன் பிரதியை கொழுத்தி தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 13வது திருத்தச்சட்டத்தை தான் உச்சரித்தால், தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வெளிவரும் என்பதை தெரிந்து கொண்டுதான், ரணில் அவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் பௌத்த பிக்குகள் வெளியில் வருவதற்கு முன்பாகவே, வடக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (முன்னணி) 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வடக்கின் வீதிகளில் இறங்கியிருந்தது. பௌத்த பிக்குகள் 13இன் பிரதியை கொழுத்தியது போன்று, அவர் செய்யவில்லை. அது ஒன்றுதான் பௌத்த பிக்குகளுக்கும், காங்கிரசுக்குமுள்ள வித்தியாசம். ஆறு கட்சிகள் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கில் வீதிகளில் ஊர்திப்பவணியை முன்னெடுத்தது. இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சிகளை இந்திய முகவர்களென்று கஜேந்திர குமார் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் 13வது திருத்தச்சட்டத்தை மட்டும் தாங்கள் எதிர்க்கவில்லை மாறாக, அதனை வலியுறுத்தும் இந்தியாவையும் எதிர்க்கின்றோம் என்பதையே அவர்கள் குறிப்பிட்டனர். அதே வேளை, பூபதி கணபதிப்பிள்ளை நினைவு தினத்தின் போது, இந்திய படைகள் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாகவும், தமிழ் இளைஞர்களை கொன்றதாகவும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இப்போது மீண்டும் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் கட்சிகளை நிர்பந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் (முன்னணி) வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பை மக்கள் மத்தியில் விதைத்துவரும் ஒரு கட்சி என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. அவர்கள் முன்னெடுத்துவரும் 13 எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பின் நீட்சிதான். மறுபுறம், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கும் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சியும், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. தொடர்ந்தும் சமஸ்டியை, உச்சரித்துக் கொண்டிருப்பதுடன், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் பேசிவருகின்றது. ஆனால் அவ்வாறானதொரு புதிய அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான சூழல் நாட்டில் இல்லை. பொருளாதார நெருக்கடியை ஒரு சாதகமான விடயமாக பலரும் சுட்டிக்காட்டினாலும் கூட. 13வது திருத்தச்சட்டத்தையே, அதிகமென்று வாதிடும் தென்னிலங்கை கடும்போக்கு தரப்புக்கள், 13இற்கும் அதிகமான விடயங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவதை எவ்வாறு ஆதிரிக்கும்? இதற்கு என்ன பதில்? புதிய அரசியல் யாப்பு தொடர்பில் வாதிடுபவர்கள் எவரிடமும் இந்தக் கேள்விக்கான தெளிவான பதில் இல்லை. அவ்வாறாயின் 13இற்கும் குறைவான அதிகாரங்களை முன்வைக்கும் யாப்பாகவே அது இருக்க முடியும். இந்த விடயங்கள் அனைத்தையும் நன்கு குறித்து வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவிற்கு செல்லும் போது, இந்த விடயங்களை அங்கு நிச்சயம் முன்வைப்பார். அதாவது, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதில் தான் அக்கறையுடன் இருந்தாலும் கூட, அதற்கு இரண்டு பக்கத்திலும் தடைகள் இருப்பதாக அவர் குறிப்பிடுவார். இந்த நிலையில் விடயங்களை படிப்படியாகத்தான் செய்ய முடியுமென்று வாதிடுவார். இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழ் கட்சிகள் ஒரணியாக என்ன செய்ய வேண்டும்? 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் நாம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றோம், பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது சுட்டிக்காட்டிய, ஒத்துழைப்புடன் கூடிய சமஸ்டிதான் எங்களின் நிலைப்பாடு, எனினும், 13வது திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துவதையே இன்றைய சூழலில் ஒரேயொரு சாத்தியமான தீர்வாக நாங்கள் கருதுகின்றோம். இதற்காக இந்தியாவின் ஆதரவை வலுவாக கோருவதுடன், ரணில் விக்கிரமசிங்க கூறியது போன்று, 13வது திருத்தச்சட்டத்தை அவர் முழுமையாக அமுல்படுத்த வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்தில், இந்தியா ஒரு மூன்றாம்தரப்பு மேற்பார்வையாளராக செயலாற்ற வேண்டும். இந்தியா பங்குபற்றும் மூன்றாம் தரப்பொன்றே இலங்கைக்கு பயன்படும். வேறு எந்த நாடுகளது பங்களிப்பும் இந்த விடயத்தில் பயன்படாது. இதனையே தமிழ் மக்கள் கோருகின்றார்கள். இதுவே கட்சிகளின் ஒன்றுபட்ட உறுதியான நிலைப்பாடாகும். மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தில் இந்த விடயங்களை குறிப்பிட வேண்டும். தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் மதில் மேல் பூனை நிலைப்பாட்டை முன்வப்பதன் மூலம் இந்தியாவின் ஆதரவை கோர முடியாது. தமிழ் கட்சிகளை ஒன்றாக வாருங்கள் என்னும் ரணிலின் அழைப்பிற்கு, இவ்வாறுதான் தமிழ் கட்சிகள் பதிலளிக்க வேண்டும். http://www.samakalam.com/ரணிலுக்கு-தமிழ்-கட்சிகள/
-
தமிழர்களால் ஒரு பலமாக திரட்சிபெற முடியுமா -யதீந்திரா தமிழ் தேசிய அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையிலேயே செல்கின்றது. இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் விவாதித்திருக்கின்றேன். தமிழர்களின் அரசில் பயணத்தை எடுத்து நோக்கினால், அதனை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வாநாயகம் காலகட்டம். இரண்டாவது, பிரபாகரன் காலகட்டம், மூன்றாவது, 2009இற்கு பின்னரான சம்பந்தன் காலகட்டம். இந்த மூன்று கட்டங்களும் தோல்வியில் முடிந்தமை தொடர்பில் நான் முன்னைய கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியிருக்கின்றேன். நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். ஆனால் முன்னேற்றங்களைத்தான் காணவில்லை. எனினும் சலிக்காமல் வேதாளத்திற்கு கதை சொல்லும் விக்கிரமாதித்தியன் போன்று, என்னைப் போன்றவர்கள் எழுதியும் பேசியும் வருகின்றனர். எப்போதாவது மாற்றங்களை காண மாட்டோமா என்னும் ஏக்கமே, என்னை போன்றவர்களை வழிநடத்துகின்றது. நாம் தோல்வியடைந்திருந்தாலும் கூட, இலங்கைத் தீவில் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக கவனத்தில் கொள்ளப்படுவதற்கான தகுதிநிலைகளை இழந்துவிடவில்லை. இப்போதும் அதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விடவில்லை. ஆனால் ஒரு சமூகம் தன்னை ஒரு அதிகார மையமாக கட்டியெழுப்ப வேண்டுமாயின், அதற்கு அந்த சமூகம் தன்னை சதா தயார் செய்து கொண்டிருக்க வேண்டும். வீழும் ஒவ்வொரு சந்தர்பங்களையும், பலமாக எழுவதற்கான ஊன்றுகோலாகக் கொள்வது எவ்வாறென்று சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் விடாது செயலாற்ற வேண்டும். இதன் மூலம் மற்றவர்களால் இலகுவில் புறம்தள்ளக் முடியாத நிலைமையை ஏற்படுத்த வேண்டும். எப்போது நாம் மற்றவர்களால் இலகுவில் புறம்தள்ள முடியாதவர்களாக இருக்கின்றோமோ, அப்போது அனைவரும் நம்மை திருப்பிப்பார்க்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும். இந்த நிர்பந்தத்தை உருவாக்கும் வல்லமையை ஒரு சமூகம்தான் நிரூபிக்க முடியும். ஒரு சமூகம் தன்னை ஒரு அதிகார மையமாக கட்டியெழுப்ப வேண்டுமாயின், முதலில் அதன் தற்போதைய நிலைமையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். வாய்ப்புக்களை அறிய வேண்டும். முன்னோக்கி பயணிப்பதிலுள்ள சவால்களை அறிய வேண்டும். இலங்கைத்தீவு யுத்தத்திலிருந்து வெளியில் வந்துவிட்டது. ஆனால் யுத்தத்தின் விளைவுகளிலிருந்து வெளியில் வரவில்லை. இலங்கையின் மீது தொடரும் மென்மையான அழுத்தங்களே இதற்கான எடுத்துக்காட்டாகும். அது நமது எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையாயினும் கூட, இந்த அழுத்தங்கள், பிரச்சினையை தொடர்ந்தும் நூர்ந்து போகாமல் பாதுகாத்துவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் அது தமிழர்களுக்கு சாதகமான ஒன்றுதான். இரண்டாவது வாய்ப்பு நல்லிணக்க முயற்சியில் இதுவரையில் அரசாங்கத்தினால் முன்நோக்கி பயணிக்க முடியவில்லை. இந்த நிலையில் மீளவும் தென்னாபிரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு, விடயங்களை மேற்கொள்ளப் போவதாக, அரசாங்கம் கூறுகின்றது. இந்த இடத்தில் ஒரு விடயம் தமிழ் மக்களுக்கு சாதமானது. அதாவது, இலங்கைத் தீவில் நல்லிணக்க முயற்சியில் வெற்றிபெற்றுவிட்டதான தோற்றமொன்றை ஏற்படுத்த வேண்டிய இக்கட்டு நிலையில் அரசாங்கம் இருக்கின்றது ஆனால் இந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டுமாயின், தமிழர்களின் ஆதரவு இன்றியமையாதது. தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் விடயங்களை நல்லிணக்கத்தின் வெற்றியாக காண்பிக்க முடியாது. இதிலுள்ள அரசியல் யதார்தத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, தமிழர்களுக்கு எதிராக யுத்த வெற்றிவாதத்தை முன்வைத்தவர்கள் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின் இப்போது, தோற்கடிக்கப்பட்ட தமிழர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. இதுதான் இந்த அரசியலுள்ள எதிர்மறையான விடயம். ஏனெனில் யுத்த வெற்றிவாதத்தை முன்வைத்து, சிங்களவர்களிடமிருந்து வாக்குகளை வேண்டுமானால் பெறலாம் ஆனால், நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள முடியாது. நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை வெற்றிபெற்றச் செய்ய வேண்டி இடத்திலிருக்கின்றனர். இந்த விடயம் தமிழர்களுக்கு சாதகமானது. ஏனெனில் இந்த இடத்தில் தமிழர்களை புறக்கணிக்கவும் முடியாது அதே வேளை நல்லிணக்கத்தை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் அரசாங்கம் முயற்சிக்கின்றது. உதாரணமாக ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவர வேண்டுமாயின், தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், முன்னரைப் போன்று, சிங்களவர்களின் ஆதரவுடன் கொண்டுவர முடியும் ஆனால் தமிழ் மக்களின் ஆதரவில்லாத புதிய அரசியல் யாப்பின் மூலம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியிட முடியாது. அவ்வாறானதொரு அரசியல் யாப்பு வருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் நாட்டிலில்லை. ஒரு உதாரணத்திற்காகவே இதனை குறிப்பிட்டேன். நல்லிணக்கத்திற்கு தமிழர்களின் ஆதரவு இன்றியமையாதது என்னும் நிலைமை, தமிழர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். மேற்குலக நாடுகளில், தமிழர்களின் பிரச்சினை பேசிக்கொண்டிருக்கும் வல்லமையுடன் புலம்பெயர் சமூகமொன்று இருப்பது இன்னொரு வாய்ப்பு. மேற்குலகின் அரசியல் சூழல் ஆசிய அரசியல் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மேற்குலகில், அரசியலை, அரசியல் சமூகம் மட்டும் தீர்மானிப்பதில்லை. அங்கு அரசியலானது, அரசியல் சமூகமாகவும் சிவில் சமூகமாகவும் பிரிந்திருக்கின்றது. இந்த இரண்டு தளங்களையும் கையாளக் கூடிய வாய்ப்பு புலம்பெயர் சமூகத்திற்குண்டு. இலங்கை அரசாங்கம் எவ்வாறான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டாலும் கூட, மேற்குலகில் புலம்பெயர் சமூகத்தின் இயங்குநிலையை தடுத்துவிட முடியாது. இது தமிழர்களுக்குள்ள ஒரு சாதகமான வாய்ப்பாகும். அடுத்த வாய்ப்பு சர்வதேசளவில், தமிழர் பிரச்சினை, ஒரு மனித உரிமைவிவகாரமாகவே நோக்கப்படுகின்றது. அரசியல் விடயமாக நோக்கப்படவில்லை. இது மேற்குலகின் அரசியல் அணுகுமுறையோடு தொடர்பானது. அதே வேளை அமெரிக்காவின் உளகளாவிய அணுமுறையில், மனித உரிமை விவகாரம் பிரதான இடத்தை பெறுகின்றது. நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் அமெரிக்க அணுகுமுறையில், மனித உரிமை மற்றும் ஜனநாய ஆட்சியே பிரதான கருவிகளாக இருக்கின்றன. மேற்குலகம் தமிழரின் பிரச்சினையை ஒரு அரசியல் விவகாரமாக நோக்காமல் இருப்பதானது, ஒரு வகையில் நமக்கு பின்னடைவென்றாலும் கூட, இன்னொரு வகையில் இலங்கைத் தீவின் பிரச்சினை, தொடர்ந்தும் மேற்குலக மயப்படுத்துவதற்கான வாய்ப்பையும் இது தருகின்றது. புலம்பெயர் சமூகம் செயற்படுவதற்கான வாய்ப்பு இந்த இடத்திலிருந்துதான் உருவாகின்றது. ஏனெனில், மனித உரிமையின் மீதான மேற்குலகின் கரிசனையின் மீது புலம்பெயர் சமூகம் தொடர்ந்தும் கேள்வியெழுப்பலாம். தமிழர்கள், இவ்வாறான சாதகமான விடயங்களைக் கொண்டு, எவ்வாறு ஒரு பலமாக திட்சிபெறலாம்? ஒரு சமூகம் தனக்குள்ள சாதகமான வாய்ப்புக்களை கொண்டு, முன்னோக்கி அடியெடுத்து வைக்க வேண்டுமாயின், முதலில் தனக்குள் சிதறாமல் இருக்க வேண்டும். ஒரு ஜக்கிய முன்னணியாக தன்னை கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் போருக்கு பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறானதொரு ஜக்கிய முன்னணியாக திரட்சிபெறுவதில், தமிழ் தேசிய தரப்புக்களால் சிறிய முன்னேற்றத்தைக் கூட காண்பிக்க முடியவில்லை. இப்போதும் நான்கு அணிகளாகவே நிற்கின்றனர். எத்தனை கட்சிகளும் இருக்கலாம் ஆனால் அந்தக் கட்சிகளை, அரசியல்ரீதியாக பிரித்தாள முடியாதளவிற்கு, கட்டுறுதியாக இருப்பதே ஜக்கிய முன்னணி தந்திரோபாயமாகும். இவ்வாறானதொரு தந்திரோபாயம் தொடர்பில் கடந்த பத்து வருடங்களாக இந்தக் கட்டுரையாளர் மட்டுமல்ல இன்னும் பலரும் தொடர்சியாக பேசிவந்திருக்கின்றோம். ஆனால் இதுவரையில் முன்னேற்றமில்லை. 2009இற்கு பின்னர் தமிழ் தேசிய தரப்புக்கள் செய்திருக்க வேண்டிய முதலாவது நகர்வாக இதுவே இருந்திருக்க வேண்டும். ஆனால் முதலாவது நகர்விலேயே தமிழர்கள் 14 வருடங்களாக சறுக்கிவீழ்ந்து கொண்டேயிருக்கின்றனர். இந்த நிலையில் எவ்வாறு வாய்புக்களை கையாள முடியும்? இன்று இந்தியாவாக இருக்கலாம் அல்லது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகாக இருக்கலாம், தமிழ் மக்களின் பிரச்சினையை, இலங்கைத் தீவின் சிறுபாண்மையின பிரச்சினையாகவே பார்க்கின்றனர். இந்த அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளை அவர்கள் கையாளுகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவோடு பேசுங்கள், அவர் அனுபவமுள்ளவர் என்றவாறு மேற்குலக ராஜதந்திரிகள் கூறுகின்றனர். இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில், இந்தியா பேசுகின்றது ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தில், தமிழ் மக்களை இந்தியா ஒரு தனியான அரசியல் சக்தியாகவே கையாண்டது. அந்த அடிப்படையில்தான் இலங்கைத் தீவின் அரசியலில் நேரடியாகவும் தலையீடு செய்தது. தமிழ் மக்களை சிறுபாண்மையாக அணுகுவதற்காக அவர்களுடன் முரண்பாடுவதாலோ அல்லது, அவர்களை விமர்சிப்பதாலோ எவ்வித பயனுமில்லை. ஏனெனில் இது அவர்களின் பிரச்சினையில்லை. இலங்கைத் தீவில் இரண்டு அசியல் சக்திகள் இருக்கின்றன ஒன்று, சிங்கள அரசியல் சமூகம் மற்றையது ஈழத் தமிழ் அரசியல் சமூகமென்னும் வகையில், விடயங்களை கையாளும் நிலைமையை தமிழர்களே ஏற்படுத்த வேண்டும். அவ்வாறானதொரு சூழலை, தமிழர்கள் நிரூபிக்காத வரையில், அவர்களது அணுகுமுறையும் மாறப்போவதில்லை. இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் ஜனநாகயம்தான் அரசியலை முன்கொண்டு செல்வதற்கான ஒரேயொரு கருவியாகும். ஆனால் அதே ஜனநாயக தளம்தான் மறுபுறம் அரசுகளுக்கும் சாதகமாக இருக்கின்றது. இதனை புரிந்துகொண்டுதான் நாம் செயற்பட வேண்டும். ஜனநாயக தளத்தில், அரசுகளின் தந்திரங்களை எதிர்கொள்வதற்கிருக்கும் ஒரேயொரு வழி, பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தங்களுக்குள் சிதறிச் செல்லாமல், தங்களுக்குள் ஒன்றுசேரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஜக்கிய முன்னணி உபாயத்தின் மூலம் அரசின் அணுகுமுறைகளை எதிர்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜக்கிய முன்னணிச் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் நிச்சயம் மக்களுக்கு எதிரானவர்களாவர். அவ்வாறானவர்களை மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தோற்கடிக்க வேண்டும். வெறும் வீரவசனங்களால் இன்றைய அரசியல் சூழலை கையாள முடியாது. அதற்கான அரசியல் சூழல் எப்போதோ காலமாகிவிட்டது. இன்று, தமிழ் மக்கள் மத்தியில் எவரெல்லாம் மற்றவர்களை துரோகிகளென்றும், இந்திய முகவர்களென்றும், கைக் கூலிகளென்றும் கூறுகின்றனரோ, அவர்கள் அனைவருமே, தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக பலமாக எழுச்சியுறுவதை தடுப்பவர்களாவர். இவர்கள் அடிப்படையிலேயே மக்களுக்கு எதிரான தீய சக்திகளாவர். தீய சக்திகள் எப்போதுமே மற்றவர்களை குற்றம்சாட்டுவதன் ஊடாக, தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் நயவஞ்சகத்தையே புரிவார்கள். நயவஞ்சகம்தான் அவர்களின் அரசியலாகும். இதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் காணப்படும் அறியாமைதான், இவர்களின் ஒரேயொரு பலமாகும். நல்ல மனிதர்கள் மற்றவர்களின் அறியாமையை ஒருபோதுமே, தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, தமிழ் மக்களுக்கு இப்போதும் சாதகமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கையாளுவற்கான அரசியல் பொறிமுறை தமிழ் மக்களிடம் இல்லை. இதுதான் தமிழர் அரசியலின் பிரதான பிரச்சினையாகும். அனைத்து கட்சிகளும், உள்நாட்டிலும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் துரோகி, கைக்கூலி, புலிகளின் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர், வசைச் சொற்கள், இவ்வாறான அனைத்துவிதமான உளறல்களையும் புறம்தள்ளி, நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாவர், நாம், நமக்குள் ஒரணியாக வேண்டுமென்னும் சிந்தனை உருவாகினால் மட்டுமே, தமிழர்கள் ஒரு பலமாக திரட்சிபெற முடியும். இலங்கைத் தீவின் தவிர்க்க முடியாத தரப்பாக எழுச்சியுற முடியும். அவ்வாறானதொரு சூழல் உருவாகாத வரையில், எவருக்குமே தமிழர்கள் தேவைப்படப் போவதில்லை. நாம் மற்றவர்களுக்கு தேவைப்படாத போது, நம்மீதிருப்பது, பாவமென்னும் பரிவுணர்வு மட்டுமேயாகும். இப்போது நடப்பது அதுதான். http://www.samakalam.com/தமிழர்களால்-ஒரு-பலமாக-தி/
-
ஏன் 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும்? - யதீந்திரா 13வது திருத்தச்சட்டமானது, இந்தியாவின் நேரடியான தலையீட்டின் விளைவு. இதன் காரணமாகவே இன்றும் இந்தியா அது தொடர்பில் பேசிவருகின்றது. தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில், இது தொடர்பில் பலவாறான குழப்பங்கள் உண்டு. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுகின்றவர்களை பின்வரும் மூன்று பிரிவுகளாக நோக்கலாம். ஒரு பிரிவினர், 13வது திருத்தச்சட்டத்தின் போதாமை தொடர்பில் பேசுகின்றனர். இன்னொரு பிரிவினர் 13வது திருத்தச்சட்டமென்பது, இந்தியாவின் தேவைக்காக பேசப்படுவதாக கற்பனை செய்கின்றனர். இன்னொரு பிரிவினரோ, 13வது திருத்தச்சட்டத்தை ஒரு தீண்டத்தகாத விடயமாக பார்க்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வாதிடும் ஒரு தரப்பினருமுண்டு. அவர்கள் மிகவும் சிறுபான்மையினர். தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் பலர் மதில் மேல் பூனையாக இருக்கின்றனர். முதலாவது இந்தியா தொடர்பில் பார்ப்போம். இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதாக பேசுவோர் உண்டு. குறிப்பாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, இவ்வாறானதொரு பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றது. இது அடிபபடையிலேயே தவறானது. அரசியல் தொடர்பில் போதிய புரிதலின்மையின் விளைவு. இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் உதவி கோருகின்ற காரணத்தினாலேயே, இந்தியா இந்த விடயம் தொடர்பில் பேசுகின்றது. இதனை தாண்டிச் செல்லும் வல்லமை தமிழர்களிடம் இருந்தால், அதன் பின்னர் இந்தியாவிற்கு அவசியமில்லை. 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் உதட்டளவில் பேசிவிட்டே, இந்தியா அமைதியாக இருக்க முடியும். ஏனெனில் கடந்த 35 வருடங்களாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாமலாக்குவதற்கு கொழும்பின் ஆட்சியாளர்கள் முயற்சிக்கவில்லை. சீன சார்பான மகிந்த ராஜபச்சவின் ஆட்சிக்காலத்தில், கொள்கையளவில் சீனாவிற்கு ஆதரவான ஜனதா விமுக்கி பெரமுனவின் (ஜே.வி.பி) ஊடாகவே, வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 13வது திருத்தச்சட்டம் பெரியளவில் பலவீனப்படுத்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முதலாவது நகர்வு, பிரேமதாச காலத்தில் இடம்பெற்றது. மேற்படி இரண்டு சந்தர்பங்களையும் நோக்கினால் ஒரு விடயத்தை காணலாம். அதாவது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்பட்ட முதலாவது நகர்வு, விடுதலைப் புலிகள் – பிரேமதாச உடன்பாட்டின் கீழ் இடம்பெற்றது. ஏனெனில் எதிரிக்கு எதிரி நண்பண் என்பது போல், இந்தியாவிற்கு எதிரான இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து, இந்தியாவை வெளியேற்றுவதில் வெற்றிபெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பரம எதிரியான பிரேமதாச, இந்த சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தினார். இதன் பின்னர், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சாத்தியப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை, நிரந்தரமாக பிரிக்கும் நோக்குடன், 2006இல், இந்திய எதிர்ப்பு ஜே.வி.பி வழக்கொன்றை தாக்கல் செய்து, அதனை சாத்தியப்படுத்தியது. 1990களுக்கு பின்னரான சூழலில், இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்யவில்லை. இந்தக் காலத்தில், வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாமலாக்குவற்கான முயற்சிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு எவருமே முயற்சிக்கவில்லை. இந்திய எதிர்ப்பு சக்திகள் தங்களை பலமாக ஒன்றிணைத்திருந்த சூழலிலேயே, 13வது திருத்தச்சட்டம் பாரதூரமாக பலவீனப்படுத்தப்பட்டிருப்பதை இப்போது ஒரு தெளிவாக புரிந்துகொள்ள முடியும். 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் முன்னோக்கி பயணிக்க முடியுமானால், அது, தமிழ் மக்களுக்கு மட்டுமே நன்மையானது. இந்தியாவிற்கு அல்ல. ஏனெனில் இந்தியா இப்போதிருப்பது போன்றே, உதட்டளவில் பேசிக்கொண்டிருக்க முடியும். ஏனெனில் 13வது திருத்தச்சட்டத்தை இலங்கை முழுமையாக இல்லாமலாக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆனால் தமிழர்கள், 13வது திருத்தச்சட்டம் வேண்டாமென்று வாதிடுகின்ற போது, கொழும்பு 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முடியும். இரண்டாவது 13வது திருத்தச்சட்டம் போதாது – அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாதென்று வாதிடும் தரப்பினர் பற்றியது. 13வது திருத்தச்சட்டத்தில் சில குறைபாடுகள் உண்டு என்பது தொடர்பில்; முரண்பாடுகள் இல்லை. அந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதும் முக்கியமானது. ஆனால் இங்கு பிரச்சினை அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பதாகும். 13வது திருத்தச்சட்டமே தமிழர்களுக்கு அதிகமென்று தென்னிலங்கையின் தரப்புக்கள் வாதிடுகின்ற போது, அதனை இல்லாதொழிக்க வேண்டுமென்று வாதிடுகின்ற போது, 13வது திருத்தச்சட்டத்தை விடவும் ஒரு சிறந்த அரசியல் ஏற்பாட்டை எவ்வாறு நம்மால் அடைய முடியும்? 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலேயே இந்தளவு சிக்கல்கள் இருக்கின்ற போது, எவ்வாறு அதனைத் தாண்டிய, ஒரு அரசியல் தீர்வை உடனடியாக அடைய முடியும்? 13இன் போதைமை தொடர்பில் பேசுகின்றவர்கள் எவரிடமும் இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. புதிய அரசியல் யாப்பு மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்று கூறுவோருமுண்டு. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி அரசியல்வாதிகள் அவ்வாறான பார்வையே முன்வைத்து வருகின்றனர். ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவ்வாறானதொரு நம்பிக்கையுடன்தான், காலம் கழிந்தது. ஆனால் புதிய அரசில்யாப்பிற்கு என்ன நடந்தது? இப்போதும் ரணில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றார். அதே போன்று, சந்திரிக்கா குமாரதுங்க போன்றவர்களும் பேசுகின்றனர். ஆனால் புதிய அரசியல் யாப்பின் மூலம் 13இற்கு அப்பால் செல்வதற்கான சாத்தியப்பாடு என்ன என்பதுதான் இங்குள்ள கேள்வி? 13இலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களே பிரச்சினைக்குரியதாக நோக்கப்படுகின்றது. ஏற்கனவே 13இலுள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வாறான அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வழங்கக் கூடியதொரு அரசியல் யாப்பிற்கான சாத்தியப்பாடு என்ன? புதிய அரசியல் யாப்பை கொண்டுவர வேண்டுமாயின், சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் – கூடவே அதில் வெற்றிபெறவும் வேண்டும். ஒரு வேளை சர்வசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் அனைத்து முயற்சிகளும் கிடப்பிற்கு சென்றுவிடும். சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டுமாயின், சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களுக்கான அரசில் சூழ் தென்னிலங்கையில் இருக்கின்றதா? மூன்றாவது 13இல் ஒன்றுமில்லை, அது ஒரு தீண்டத்தகாதென்று வாதிடும் தரப்பினர் பற்றியது. இவர்கள் அடிப்படையில் அரசியலை அறிவுரீதியாக நோக்கத் தெரியாதவர்கள். அனைத்தையும் உணர்சிகரமாக நோக்குபவர்கள். இவ்வாறானவர்களிடம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வில்லை ஆனால், இவர்களோ அனைவரையும் குற்றவாளிகளாக காண்பிக்க முயற்சிப்பார்கள். அரசியலை அறிவுரீதியாக நோக்குபவர்களை இந்திய முகவர்களென்றும், அடிவருடிகள் என்றும் பிரச்சாரம் செய்வார்கள். சமூக ஊடகங்களை மிகவும் அனாகரிகமாக பயன்படுத்துபவர்களும் இவ்வாறானவர்களே. இவர்களின் உணர்சிகரமான செயற்பாடுகள், மறுபுறும், தமிழ் மக்களுக்கான அரசியல் அடித்தளத்தையே இல்லாதொழிக்க வேண்டுமென்று எண்ணும், தென்னிலங்கை சிங்கள-பௌத்த தேசியவாத தரப்புக்களுக்கே பயன்படுகின்றது. இப்போது, 13வது திருத்தச்சட்டத்தை ஏன் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்னும் கேள்வியை நோக்குவோம். 13வது திருத்தத்தை எதிர்ப்பவர்கள், அதன் போதாமை தொடர்பில் பேசுபவர்கள் அனைவருமே, 13வது திருத்தச்சட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். ஒரு வேளை இதனை ஆதரிக்கும் சில தரப்புக்கள் கூட இருக்கும் ஒன்றையும் இழந்துவிடக் கூடாதென்னும் நோக்கில் பேசக் கூடும். ஆனால் இந்தக் கட்டுரை 13வது திருத்தச்சட்டத்தை கெட்டியாக பற்றிக்கொள்ளுமாறு கூறுவதற்கு பிறிதொரு காரணமுண்டு. அதவாது, தற்போதுள்ள சூழலில் 13வது திருத்தச்சட்டத்தில் என்ன இருக்கின்றது – என்ன இல்லையென்பதற்கு அப்பால், இலங்கைத் தீவில், ஈழத் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை பேசுவதற்கான ஒரு அடிப்படையான விடயமாக, 13வது திருத்தச்சட்டம் மட்டுமே இருக்கின்றது. இங்குள்ள அடிப்படையான விடயம் கொழும்பு 13வது திருத்தச்சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்த வேண்டும் – அல்லது முழுமையாக இல்லாமலாக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதன் ஊடாக 13வது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்கலாம் ஆனால் அந்தப் புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்களின் ஆதரவுடன் கொண்டுவந்தால் மட்டுமே, இனப்பிரச்சினைக்கான தீர்வை வெற்றிகொண்டதாக அரசாங்கம் அறிவிக்க முடியும். இல்லாவிட்டால், 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்களை தமிழ் மக்கள் நிராகரித்தது போன்று, இதனையும் நிராகரித்தால், நல்லிணக்க முயற்சியில் அரசாங்கம் வெற்றியை கொண்டாட முடியாது. அதே வேளை, புதிய அரசியல் யாப்பின் மூலம், 13இற்கு அப்பால் செல்லக் கூடிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கினால், அதனை சிங்கள கடும்போக்குவாதிகள் எதிர்ப்பார்கள். தென்பகுதியில் மீண்டும் சிங்கள – பௌத்த சக்திகள் பலமடையும். இந்த பின்புலத்தில் புதிய அரசியல் யாப்பு முயற்சி வெற்றிபெறாது. 13வது திருத்தத்தை இல்லாதொழித்தால் அதனை விடவும் சிறந்த ஒன்றை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி செல்லும் பாதை அறிய வேண்டும். சிங்கள ஆளும் தரப்பை பொறுத்தவரையில் இது ஒரு சிக்கலான அரசியல் முடிச்சு. இதனை சிங்களவர்களாக, தனித்து அவிழ்க்க முடியாது. ஆனால் ஒரு வழியுண்டு. தமிழர்களே இதனை வேண்டாமென்று கூறினால், 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியும். 13வது திருத்தத்தை இப்போதிருப்பது போன்றே பேணிப்பாதுகாத்துக் கொண்டு செல்லலாம். முழுமையான அமுலாக்கத்திற்கான காலத்தை இழுத்தடிக்கலாம். ஒரு அரசாங்கம் கூறுவதை பிறிதொரு அரசாங்கத்தின் மூலம் மறுப்பதாக விடயங்களை கையாளலாம். இதற்கு அரசாங்கத்திற்கு பலமானதொரு இந்திய எதிர்ப்பு தமிழர் தரப்புத் தேவை. ஏனெனில் இந்திய எதிர்ப்பு தமிழர் தரப்பொன்றாலேயே 13வது திருத்தச்சட்டத்திற்கான எதிர்ப்பை பெரியளவில் மக்கள் மயப்படுத்த முடியும். தற்போதுள்ள சூழலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) மட்டுமே, முதன்மையான இந்திய எதிர்ப்பு தமிழ் கட்சியாகும். ஆனால் அந்தக் கட்சி இன்னும் பலமடையுமாக இருந்தால்தான், இந்த விடயத்தை பெரியளவில் மக்களுக்குள் கொண்டுசெல்ல முடியும். அவ்வாறாயின் அந்தக் கட்சி பலமடைவதே தென்னிலங்கைக்கு குறிப்பாக, 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்று எண்ணும் தரப்புகளுக்கு நன்மையானது. நான் இவ்வாறு கூறுவதற்கு ஒரு வலுவான காரணமுண்டு. அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அதன் அங்கமான 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்பட்ட இரண்டு சந்தர்பங்களிலும் இந்திய எதிர்ப்பு சக்திகளே முன்னணியில் இருந்திருக்கின்றன. 13வது இல்லாமல் போனால் என்ன? 13வது திருத்தச்சட்டம் இல்லாமலாக்கப்படுமாக இருந்தால், அதன் பின்னர், இலங்கைத் தீவில், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்விற்கான உரையாடல் முற்றிலுமாக இல்லாமலாக்கப்படும். அதே வேளை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவின் தலையீட்டுக்கான கதவு மூடப்படும். 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக, இந்தியாவின் தலையீட்டுக்கான சூழல் பாதுகாக்கப்படுகின்றது என்பதற்காகவே, தென்னிலங்கை கடும்போக்கு சக்திகள் 13வது திருத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றன. பிரதான அரசியல் கட்சிகள் இது தொடர்பில் வெளிப்படையாக பேசாவிட்டாலும் கூட, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தாமல் விடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால், அதனை பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிப்பர் ஏனெனில் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்பதில் எவருக்குமே உண்மையான கரிசனையில்லை. இந்த பின்புலத்தில் சிந்தித்தால், சிங்கள தரப்புக்கள் எதிர்க்கும், இல்லாதொழிக்க வேண்டுமென்று எண்ணும் ஓரு விடயம்தானே, மறுபுறும் தமிழர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்க முடியும்! அதுதானே தமிழர்களின் அரசியலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும். அது ஒன்றுதானே, தமிழர்கள், பிராந்திய சக்தியான இந்தியாவுடன் உறவாடுவதற்கான கருவியா இருக்க முடியும். இதனை கருத்தில் கொள்ளாமல் உணர்சிவசப்படுவதால், தமிழ் மக்களின் வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்த பின்புலத்தில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான எனது புரிதல் அதன் உள்ளடக்கம் தொடர்பானதல்ல – மாறாக, அதன் அரசியல் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் தொடர்பானது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் பலர், மூலோபாய ரீதியாக விடயங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். உலகம் அதிகம் பிராந்தியமயப்பட்டுவருகின்றது. இந்த பின்னணியில் இந்தியாவின் முக்கியத்துவம் முன்னர் என்போதுமில்லாதவாறு அதிகரித்திருக்கின்றது. இந்த பின்புலத்தில், இந்தியாவினால் ஆர்வம் காண்பிக்கப்பட்டுவரும், ஒரு விடயத்தை, பாதிக்கப்பட்ட தமிழர்களே எதிர்ப்பது அரசியல் ரீதியில் முதிர்சியற்ற செயலாகும். எனவே 13 எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் நிச்சயம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. அவர்களின் சேவை வேறு யாருக்கோ தேவைப்படுகின்றது http://www.samakalam.com/ஏன்-13வது-திருத்தச்சட்டத்/
-
ரணிலுடன் பேசுதல் ? - யதீந்திரா தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிவருகின்றன. ரணிலுடன் பேசுவது தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. மைத்திரிபால அரசாங்கத்திலும் ரணிலுடன் பல சுற்றுப் பேச்சுக்களில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்றும் தமிழ் கட்சிகள் – குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் சம்பந்தன் தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. இறுதியில் வழமைபோல் வெறுங்கையுடன் திரும்பினர். ரணில் தந்திரமான அரசியல்வாதியென்று பெயரெடுத்த ஒருவர். ரணில், அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்டவர். தமிழ் சூழலை பொறுத்தவரையில், ரணிலை நரியென்று கூறுவதுண்டு. அதுவும் கூட ஜே.ஆரின் அரசியல் வழியாக வந்த ஒன்றுதான். ஜே.ஆர் ஜெயவர்த்தனவை பழைய நரியென்பார்கள். சிங்கள ராஜதந்திரத்திடம் தமிழர்கள் தோற்றுப் போகும் சந்தர்பங்களிலேயே, இவ்வாறான நரிக் கதைகள் தலைநீட்டுவதுண்டு. ரணில் நரியாக இருப்பது அவரது கெட்டித்தனம் ஆனால், தமிழர் பக்கத்தில் நரியாக சிந்திக்கக் கூடாதென்று எந்த நிபந்தனைகளும் நமக்கில்லைதானே! இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ரணில், எவ்வாறானதொரு சூழலில் ஜனாதிபதியானார் என்பது தொடர்பில் மீண்டும் பேசவேண்டியதில்லை. நாட்டில் மோசமானதொரு பொருளாதார நெருக்கடியேற்பட்டதன் காரணமாகவே, ரணில் ஜனாதிபதி கதிரையில் அமர முடிந்தது. இல்லாவிட்டால் ரணில் ஜனாதிபதியாக ஒரு போதுமே வந்திருக்க முடியாது. இந்த பின்புலத்தில் நோக்கினால் 2015 ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரம்மிக்க பிரதமராக இருந்த ரணில் அல்ல இப்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்க. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அரசியலில் காணாமல் போன ஒருவர், மீளவும் நிரந்தரமாக நிமிர்வதற்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். தனது காய்நகர்த்தல்களுக்கு மற்றவர்களை கையாள முயற்சிக்கின்றார். இந்த பின்புலத்தில் சிந்தித்தால், முன்னர் ரணிலுடன் பேசியதற்கும், இப்போது ரணிலுடன் பேசுவதற்குமிடையில் பெரிய வேறுபாடுண்டு. இதனை புரிந்துகொண்டுதான் ரணிலுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். இப்போதுள்ள ரணில் எதேச்சையாக கிடைத்த கதிரையில், மீண்டுமொரு முறை, மக்கள் ஆதரவுடன் அமருவதற்கான தந்திரம் தொடர்பில் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர். அதற்கு என்ன செய்யலாம் என்பதுதான், ரணிலை பொறுத்தவரையில் முதன்மையான விடயமாகும். அதற்கு எதையலெ;லாம் செய்யக் கூடாதென்பதுதான் அடிப்படையான விடயமாகும். ரணில் மீண்டும் ஜனாதிபதியாவதற்கு நிச்சயம் தமிழ் மக்களின் ஆதரவும் தேவை. இவ்வாறானதொரு சூழலில்தான், தமிழ் கட்சிகளுடன் ரணில் பேசிவருகின்றார். முதலில் வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப் போவதாக அறிவித்தார். இவ்வாறு கூறினால், தமிழ் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளியிடுமென்று தெரிந்து கொண்டே, அவ்வாறு கூறினார். பின்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கூறினார். ஒவ்வொரு விடயங்களையும் கூறிவிட்டு, அது தொடர்பான எதிர்வினைகளை குறித்துக் கொண்டார். இவை அனைத்துமே நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும். ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பிலும் தமிழ் அரசியல் சூழல் தொடர்பிலும் போதிய அனுபவமும் அறிவும் கொண்ட ஒருவர். எனவே ரணில் விடயங்களை புரிந்துகொள்ளாமல் பேசுகின்றார் என்று எவரேனும் எண்ணினால், அவ்வாறானவர்கள் நிச்சயம் அரசியலில் கற்றுக்குட்டிகளாகவே இருப்பர். ரணிலுடன் தமிழ் கட்சிகள் பேசிவருவதாக கூறிவரும் சூழலில், தமிழ் அரசியல் தரப்புக்கள் எவ்வாறான நிலையிலிருக்கின்றன? உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, விடயங்களை ஆராயாமல் அவசரப்பட்டு, தமிழரசு கட்சி தனியான போட்டி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்த விடயங்களை சுமந்திரனாலோ அல்லது சம்பந்தனாலோ முன் கூட்டியே கணிக்க முடியவில்லை. நடைபெறாத ஒரு தேர்தலை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தது. இந்த பின்புலத்தில் அதுவரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக (பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட) விடயங்களை அணுகியவர்கள் பின்னர், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பிளவுற்றனர். இவ்வாறு பிளவுற்ற நிலையில்தான், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசவும் சென்றனர். ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதான ஒரு தோற்றத்தை காண்பித்தார். ஆனால் ஒரு சிறிய விடயத்தில் கூட ரணில், கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வடக்கு மாகாண ஆளுனர் விடயத்தில் கூட, ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தவில்லை. இது ஒரு சிறிய விடயம் ஆனால் இவ்வாறானதொரு விடயத்தில் கூட, தமிழ் கட்சிகளின் தலைவர்களை பொருட்படுத்தாதவர், எவ்வாறு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், இந்தக் கட்சிகளின் கருத்துக்களை செவிமடுப்பாரென்று எதிர்பார்க்கலாம்? விடயங்களை ஆழமாக நோக்கினால், தமிழ் தலைவர்கள் என்போரை, ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே மதிக்கின்றாரா என்னும் கேள்வி எழுகின்றது. ரணில் மட்டுமல்ல, கொழும்பில் அதிகாரத்திலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் எவருமே தமிழ் தலைவர்கள் என்போரை மதிக்கிவில்லை போன்றே தெரிகின்றது. இதற்கு யார் காரணம் – சிங்கள அரசியல்வாதிகளா அல்லது தமிழ் அரசியல்வாதிகளா? உண்மையில், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசச் செல்வதற்கு முன்னர், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் அனைவரும் (நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் – இல்லாதவர்கள் அனைவரும்) விடயங்கள் தொடர்பில் முதலில் தங்களுக்குள் பேசி, எதனை எவ்வாறு, முன்வைப்பதென்பதில் உறுதியானதொரு உடன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லை. இதன் காரணமாக இன்று என்ன நடந்திருக்கின்றது? தமிழ் தேசியம் பேசும் ஒரு கட்சியின் தலைவரான சி.வி.விக்கினேஸ்வரனின் ஏற்பாட்டில், மாகாண சபை தேர்தல் இடம்பெறும்வரையில் ஒரு ஆலோசனை சபையை நியமிக்கும் யோசனையை ரணிலிடம் ஒப்படைத்திருக்கின்றனர். (விக்கினேஸ்வரனின் அரசியல் அணுகுமுறை தொடர்பில் அவருடனிருப்பவர்களின் – குறிப்பாக அவரின் மூலம் அரசியல் எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கும், மணிவண்ணன் போன்றவர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை) இப்போது ரணில் அதனையே தான் செய்யவுள்ளதாக கூறுகின்றார். இதனையே ஊடகங்கள் இடைக்கால தீர்வு என்பதாக தவறாக விளக்கமளிக்கின்றன. இது இடைக்கால தீர்வல்ல. மாகாண சபை தேர்தல் இடம்பெறும் வரையில், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆலோசனை சபையொன்றின் மூலம், மாகாண சபை நிர்வாகத்தை முன்னெடுப்பதாகும். ஆனால் நாடு உள்நாட்டு யுத்தத்திற்குள் சிக்கியிருந்த காலத்தில் கூட, அவ்வாறானதொரு ஆலோசனை சபையின் மூலம் மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் அரசியல்வாதிகளால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க முடியுமென்று சிங்கள அரசியல்வாதிகள் கருதவில்லை. அதற்கான ஆற்றலை தமிழ் அரசியல் தலைமைகள் இழந்துவிட்டன என்றே அவர்கள் கருதுகின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான், தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்கிரமசிங்க பேசிவருகின்றார். இவ்வாறான பேச்சுக்களின் போது, அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படுவதுமில்லை. பேச்சுவார்த்தை தொடர்பில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அல்லது முதல் நாளே அறிவிக்கப்படுகின்றது. ஒரு வேளை ஒரு கட்சியின் தலைவர் குறித்த அறிவிப்பின் போது, கொழும்பில் இல்லாவிட்டால் அவரால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது. ஒரு தேசிய இனத்தின் பிரச்சினையை இவ்வாறுதான் பேசுவதா? இதற்கு யார் காரணம்? தமிழ் கட்சிகளின் தலைவர்களை இவ்வாறு அணுக முடியும் – நாம் எவ்வாறு அணுகினாலும் கூட, சூடு சுறனையில்லாமல், அவர்கள் நாய்குட்டிகள் போன்று வருவார்களென்றா? கொழும்பின் அதிகாரபீடம் கருதுகின்றது? கொழும்பிலுள்ள தூதரகங்கள் குறிப்பாக அமெரிக்க தூதரகம் அதன் நிகழ்வுகளுக்காக அழைப்புவிடுக்கும் போது, அழைப்பிதழை இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அனுப்பி, உறுதிப்படுத்துமாறு கோருகின்றது. உண்மையில் ஒரு நிகழ்விற்காக மற்றவர்களை அவ்வாறுதான் அழைக்க வேண்டும். ஆனால் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக, தமிழ் மக்களின் தலைவர்களுக்கு முதல் நாள் அழைப்பு விடுக்கப்படுகின்றது. அந்த அழைப்பை ஒரு பெரும் பாக்கியம் போன்றே, கட்சிகளும் பாவனை செய்கின்றன? இதிலிருந்தே தமிழ் தலைவர்களை எவ்வாறு சிங்கள அரசியல்வாதிகள் மதிக்கின்றனர் என்பது தெளிவாகின்றதல்லவா! முதலில் தமிழ் தலைவர்கள் என்போர், தங்களை மற்றவர்கள் தலைவர்களென்று கருதுமளவிற்கு நடந்துகொள்ள வேண்டும். தங்களை அவமதிக்கும் செயல்களுக்கு கடுமையான எதிர்வினைகளை ஆற்ற வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து, தங்களின் எதிர்ப்புக்களை பதிவு செய்ய வேண்டும். ரணிலுடன் தொடர்ந்தும் நாங்கள் பேச விரும்பவில்லையென்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தற்போதைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க ஒரு பலமான நபரல்ல. பல்வேறு நெருக்கடிளை எதிர்கொண்டிருப்பவர். இவ்வாறான நிலையில் கூட, தமிழ் கட்சிகள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்றால், ஒரு வேளை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தமிழ் கட்சிகளை எவ்வாறு நடத்துவார்? http://www.samakalam.com/ரணிலுடன்-பேசுதல்/
-
தமிழ் தேசியம் ஒரு தோல்வி வாதமா? -யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் விக்கினேஸ்வரன் கூறியதான ஒரு தகவல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, விக்கினேஸ்வரன் ஒருவரின் சாதியை கேட்டதாகக் கூறி, அவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒரு படித்த மனிதர் இவ்வாறு கேட்கலாமா – இவரை அரசியலுக்கு கொண்டுவந்தவர்கள் தவறிழைத்துவிட்டனர், என்றவாறு விக்கினேஸ்வரனை பலரும் சமூக ஊடங்களில் விமர்சித்திருந்தனர். ஆனால் விக்கினேஸ்வரன் தான் சாதியை கேட்டதை மறுக்கவில்லை. அது பல வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது, கேட்கப்பட்ட விடயம், இப்போது அரசியல் நோக்கத்திற்காகவே அது தொடர்பில் பேசுகின்றனர் – என்று விக்கினேஸ்வரன் பதிலளித்திருக்கின்றார். இந்த இடத்தில் எழும் கேள்வி. ஒரு வேளை விக்கினேஸ்வரன் வெளிப்படையாக கேட்காமல், மற்றவர்களை போன்று, சாதிய மேலாதிக்க எண்ணத்தை தலைக்குள் பாதுகாத்துக் கொண்டு, உதட்டளவில் சமதர்மம் பேசியிருந்தால், அவர் ஒரு சிறந்த தமிழ் தேசியவாதிக்கான தகுதியை பெற்றிருப்பாரா? விக்கினேஸ்வரன் மேட்குடித்தனமானவர் – அவரிடம் மேலாதிக்க சிந்தனை இயல்பாகவே இருக்கின்றது, என்றெல்லாம் இப்போது சேப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஒருவரை முன்னிறுத்தியே தமிழ் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பலரும் முயன்ற கதையை நாம் எவ்வாறு இலகுவாக மறந்துவிட முடியும்? விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், அரசர்கள் வெளியில் வருகின்ற போது, ஒரு காவலாளி ஆலாவட்டத்துடன் வருவது போன்று, ஒருவர் குடையுடன் வருவார். விக்கினேஸ்வரன் மேடைகளில் பேசுகின்ற போது, அவருக்கு குடை பிடித்தவாறு ஒருவர் மேடையில் நிற்பார். இவற்றை எவருமே தவறாக நோக்கவில்லை. எந்தத் தமிழ் தேசியவாதியும் கண்டிக்கவில்லை. இப்படியான விக்கினேஸ்வரனை தலைவராகக் கொண்டே, தமிழ் மக்கள் பேரவையின் மூலம் தமிழ் தேசிய இயக்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமென்று பலரும் நம்பினர். அதாவது, விக்கினேஸ்வரன் எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும் , எங்களுக்கு, தமிழ் தேசியத் தேரை இழுப்பதற்கு ஒரு முகம் தேவைப்படுகின்றது. அதற்கு விக்கினேஸ்வரனை பயன்படுத்திக் கொள்வோம். இந்த அடிப்படையில்தான் விக்கினேஸ்வரன் பலரது தெரிவானார். இதுவே மறுபுறமாக விக்கினேஸ்வரனின் பலமாகவும் இருந்தது. விக்கினேஸ்வரனை ஈழத்து தலைலாமா என்று சொன்னவர்களும் உண்டு. விக்கினேஸ்வரனின் தலைமையில் ஒரு வலுவான மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்க முடியுமென்று நம்பிச் செயற்பட்டவர்களும் உண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் விக்கினேஸ்வரன் தங்களின் கற்பனைகளுக்கு அதிக தூரத்திலிருக்கின்றார் என்பதை கண்டுகொண்ட போது, பலரும் விக்கினேஸ்வரன் மாயையிலிருந்து வெளியேறிவிட்டனர். விக்கினேஸ்வரன் கேட்டதாகச் சொல்லப்படும் சாதிக் கதையானது, நம் மத்தியிலுள்ள பலருக்கும் பொருத்தமானது. பலரும் விக்கினேஸ்வரன் வெளிப்படையாகக் கேட்டதைத்தான், தங்கள் மத்தியில் காதும்காதும் வைத்தாற்போல், முணுமுணுத்துக் கொள்கின்றனர். விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தனும் சாதித்தடிப்பில் கூறிப்போன ஒருவர்தான். சம்பந்தனுக்கு வாக்களித்த நகரசுத்தித் தொழிலாளர் ஒருவரின் வீட்டில் சம்பந்தனை நீர் அருந்தச் சொல்லுங்கள் – நான் இந்த அரசியல் ஆய்வுத்துறையை விட்டே வெளியேறுகின்றேன். எனவே பலரும் தங்களை சுற்றியிருப்பவர்களிடம் கேட்கும் கதையைத்தான், விக்கினேஸ்வரனும் சாதாரணமாக கேட்டிருக்கின்றார். ஆனால் மெல்லுவதற்கு விக்கினேஸ்வரன் கிடைத்ததும் தங்களை உத்தமர்கள் போல் காண்பித்துக்கொள்ள பலரும் முயற்சிக்கின்றனர். தமிழ் சமூகம் சாதிய அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகம்தான். இந்த சமூக அமைப்பிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் எவ்வாறு இந்தக் கட்டமைப்பிலிருந்து தங்களை தூரத்தள்ளி வைப்பார்களென்று எதிர்பார்க்க முடியும்? தமிழ் தேசிய அரசியல் மிதவாத கட்சிகளான தமிழரசு கட்சி பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில், தமிழ் தேசிய அரசியலை தீர்மானித்த அனைவருமே, சாதிய நிலையில் உயிரடுக்கினராக தங்களை கருத்திக் கொண்டவர்கள்தான். தமிழ் தேசிய அரசியலானது சாதிகளை கடந்த ஒரு விடயமென்று கூறிக்கொண்டாலும் கூட, அரசியல் பதவிநிலைகள் சாதியத்தை கடந்த ஒன்றாக இருக்கவில்லை. தமிழ் தேசிய அரசியல் இளைஞர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர்தான், இந்த நிலைமையில் உடைவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அன்றைய சூழலில் இடதுசாரித்துவ சிந்தனையை முன்னிலைப்படுத்திய இயக்கங்களான, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (ஈரோஸ்) போன்ற இயக்கங்கள் இன விடுதலையோடு இணைந்து, சமூக விடுதலைக்கான சிந்தனைகளையும் முன்வைத்தன. இயக்கங்களின் வரவின் பின்னர்தான் சமானியர்களும் அரசியலுக்குள் பிரவேசிக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் சமூக விடுதலை சிந்தனைகளை முன்னிலைப்படுத்திய, ஒரு இயக்கமாக இருக்காவிட்டாலும் கூட, தங்களுடைய கட்டமைப்பில் சாதிய படிநிலைகளில் கீழ் நிலையிலிருந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கிய இடங்களை வழங்கியதன் ஊடாக, யாழ்ப்பாணிய வெள்ளாள மேலாதிக்க சிந்தனைப் போக்கின் செவிப்பறையில் அடிக்க முயற்சித்தனர். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்புக்கள் பலவற்றில் சாதிய படிநிலையில் குறைவான பிரிவுகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் காலத்தில்தான், அவ்வாறானவர்கள் அதிகாரத்திலிருக்க முடிந்தது. பிரபாகரன் வெள்ளாளர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர். பிரபாகரனையும் ருகுணு விஜயவீரவையும் ஒப்பிட்டு, போர்க்குணம்மிக்க கராவ சமூகத்தை சேர்ந்தவர்களென்று கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் வெள்ளாளர் சமூகத்திற்கு வெளியில், ஒருவர் தமிழ் மக்களுக்கான ஏகபோக தலைவராக இருந்த சந்தர்ப்பம் பிரபாகரன் காலத்தில் மட்டும்தான் நிகழ்ந்தது. பிரபாகரனுக்கு முன்னரும் நிகழவில்லை அதற்கு பின்னரும் நிகழவில்லை. உண்மையில் ஜனநாயக அரசியல் தளத்தில் பிரபாகரன் போன்ற பின்புலம் கொண்ட ஒருவர், ஒருபோதுமே தமிழ் மக்களின் தலைவராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவ்வாறானதொரு நிலைமை இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. இந்தக் கட்டுரையாளரின் வாதத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமாயின், அது நிரூபிக்கப்பட வேண்டும். பிரபாகரனுக்கு அவ்வாறானதொரு இடத்தை சமூகம் வழங்கவில்லை. ஆயுத பலத்தின் மூலம் அவ்வாறானதொரு சூழலை அவர் ஏற்படுத்தியிருந்தார். விரும்பியோ விரும்பாமலோ அவரை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அனைவருக்கும் ஏற்பட்டது. ஆனால் என்னதான் இயக்கங்கள் சமூகத்தின் மத்தியில் உடைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, சமூக தளத்தில் சாதியவாதம் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டேயிருந்தது. இயக்கங்களால் ஏற்படுத்தப்பட்ட உடைவுகள் சமூகதளத்தில் சிந்தனை மாற்றமாக பரிணமிக்கவில்லை. யாழ்வைதீக சிந்தனைப் போக்கில் பெரியளவில் உடைவுகள் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகளின் வீழ்சியை தொடர்ந்து, அவர்கள் செயலின் மூலம் ஏற்படுத்த முற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் புஸ்வானமாகிவிட்டது. புளொட் இயக்கத்தின் செயலதிபர் உமா மகேஸ்வரன் கூறிய போன்று, யாழ்ப்பாண வெள்ளாள சமூகம் குளிரூட்டியில் கவனமாக பாதுகாத்து வைத்திருந்த சாதிய மேலாதிக்க சிந்தனைகள் இப்போது மீண்டும் துளிர்விடத் தொடங்கிவிட்டது. ஆனால் முன்னர் காணப்பட்டது போன்ற நிலையில் இப்போது சாதிய கட்டமைப்பு வலுவாக இருப்பதாக கூறவிடமுடியாது. அதில் உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் ஒருவரின் சாதியை குறிப்பிட்டு அவரை ஒடுக்க முற்படும், உதாசீனப்படுத்த முற்படும் வேலையை இப்போது எவராலும் செய்ய முடியாது. ஏனெனில் சாதிய படிநிலைகளில் கீழ்நிலையில் இருப்பதாக கூறப்பட்டவர்கள் புலப்பெயர்வின் மூலமும், கல்விப் பின்புலங்களாலும் தங்களை உயர்த்தியிருக்கின்றனர். பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். அவ்வாறானவர்களை முன்னரைப் போல் இலகுவாக புறம்தள்ள முடியாது. ஆனால் அரசியலில் சாதிய மேலாதிக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, மறைமுகமாக ஏதோவொரு வகையில் தொடரத்தான் செய்கின்றது. ஒரு பெரும் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்ததாக கூறப்படும் சூழலில், சாதிய மேலாதிக்க மனோபாவத்தை கடந்துசெல்ல முடியாமல் இருக்கின்றதென்றால், இதுவரை காலமும் முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ் தேசியவாதம் தோல்வியடைந்துவிட்டது என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டும். தமிழ் தேசியவாதம் ஒரு முற்போக்கு வாதமாக பரிணமிக்கவில்லை. அது வெறும் அரசியல் சுலோகமாகவே நிலைபெற்றிருக்கின்றது. சமூகத்தின் பாகுபாடுகளை சிதைத்து, மேலெழும் ஒரு மந்திரச் சொல்லாக தமிழ் தேசியவாதம் எழுச்சியுறவில்லை. இதன் விளைவாகவே, இப்போதும் சாதியம் தொடர்பில் விவாதிக்கக் கூடிய நிலைமை தமிழ்ச் சூழலில் காணப்படுகின்றது. இதற்கு மதில் மேல் பூனையாக வாழும் ஆய்வாளாகள், புத்திஜீவிகள் என்போரும் ஒரு காரணமாவர். ஏனெனில் அரசியல்வாதிகள் உச்சரிக்கும் தமிழ் தேசியத்தையே சரியானதொரு வாதம்போன்று ஆய்வாளர்கள் என்போரும் பிரதிசெய்ய முற்படுகின்றனர். உண்மையில் இன்று உச்சரிக்கப்படும் தமிழ் தேசியம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திற்குள் சுருங்கிப்போன வாதமாகவே இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு வெளியில், இதற்கு பெரியளவில் மக்கள் கவர்ச்சியிருப்பதாக தெரியவில்லை. ஒரு பலமான புலம்பெயர் சமூகமிருப்பதால், ராஜதந்திரிகள், கொழும்பு அரசியல்வாதிகள் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்குச் செல்வதாலும் அனைத்தும் தங்களை சுற்றியே வட்டமிடுவதான மாயத் தோற்றமொன்றுக்குள் பலர் சிக்கியிருக்கின்றனர். ஆனால் பலரும் காணத் தவறுகின்ற விடயமொன்றுண்டு. அதாவது, ஏனைய மவாட்ட மக்கள் தமிழ் தேசிய அரசியல் சுலோகத்திலிருந்து விலகிக்கொண்டு செல்கின்றனர். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் பேசப்படும் விடயங்கள் எதனையும் ஏனைய மாவட்டங்களிருப்பவர்கள் கருத்தில்கொள்ளவில்லை. ஏன் ஆகக் குறைந்தது யாழ்ப்பாணத்திலிருக்கும் சாதாரண மக்களும் இவைகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் இன்றைய தமிழ் தேசிய சுலோகம் பெருமளவு மக்களுக்கு அன்னியமான ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செயற்கையாக சில எதிர்ப்புக்களை ஏற்படுத்துவதன் ஊடாக, தமிழ் தேசியத்திற்கு உயிரூட்டலாமென்று எண்ணுகின்றனர். முன்னரைப் போன்று, சிங்கள எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி தமிழ் தேசிய அரசியலுக்கு உரமூட்ட முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. விடயங்களை அறிவுபூர்வமாக அணுகுவதன் ஊடாகவே இன்றைய சவாலை எதிர்கொள்ள வேண்டும். சிங்கள ஆளும் வர்க்கம் அதன் நகர்வுகளை திறம்பட செய்து கொண்டேயிருக்கின்றது. சிறிய விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்தை சிதறடித்துவிட்டு, நீண்டகால நோக்கிலான நகர்வுகளை காதும் காதும் வைத்தாற்போல் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். திருகோணமலையை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நகர்வுகள் இடம்பெறவுள்ளது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளோ, புத்தர் சிலையை தாண்டி சிந்திக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். காலப்போக்கில் சாதியபடிநிலைகளில் – கீழ்நிலையில் இருப்பதாக கூறப்படும் மக்கள் பிரிவொன்று, புத்தரையும் தங்களுடைய விடுதலைக்கான மார்க்கமாக கூறினாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை. http://www.samakalam.com/தமிழ்-தேசியம்-ஒரு-தோல்வி/
-
நீதி கோரும் தமிழர் அரசியலின் தோல்வி ? -யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று 14 வருடங்கள். முள்ளிவாய்க்கால் என்பது, ஒரு ஆயுத போராட்டத்தின் தோல்வியின் விளைவாகும். இந்த பின்புலத்தில் முள்ளிவாய்க்காலை நினைவு கொள்வதென்பது, இன்னொரு வகையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை, அழிவையும் நினைவுபடுத்துவதாகும். 2010இல், இந்தக் கட்டுரையாளர், பின்வருமாறு எழுதியிருந்தார். அதாவது, இலங்கையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது பற்றி, அதிகம் எழுதி ஓய்ந்துவிட்டது. முன்வைக்கப்பட்ட கண்டனங்களும் ஏராளம். “அவர் – இவர் எனப் பலர் வரக்கூடும் என ஊட்டப்பட்ட நம்பிக்கைகளும் அலாதியானவை. இறுதியில் நடந்தது எதுவுமில்லை. இனி முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்து வருடங்கள் தோறும் நாம் கல்லறைகளுக்கு வெள்ளையடித்து நம் துயரை போக்கிக் கொள்ளலாம். பெரும்பாலான சந்தர்பங்களில் நம் மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான நினைவு தினங்கள் அனைத்தும் இயலாமையின் வெளிப்பாடாக இருந்திருக்கின்றனவே தவிர செயலுக்கான அணிச் சேர்க்கையாக, செயலுக்கான முனைப்பாக இருந்ததில்லை. இந்த வரிகள் அடங்கிய கட்டுரை, ‘நீதியும் நவீன அரசியலும் ‘என்னும் தலைப்பில், ‘காலத்துயரும் காலத்தின் சாட்சியும்’ என்னும் தலைப்பிலான, எனது நூலிலும் இடம்பெற்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடங்களில், இந்த எதிர்கூறலை தாண்டி, இன்னும் தமிழ் தேசிய அரசியல் பயணிக்கவில்லை. இது எனது எழுத்தின் வெற்றியெனலாம் ஆனால் மக்களின் நிலையில் ஒரு மோசமான தோல்வியாகும். ஏனெனில் கடந்த 14 வருடங்களில் தமிழ் தேசிய அரசியலால் முன்நோக்கி பயணிக்க முடியவில்லை. 2009இற்கு பின்னர், தமிழ் தேசிய அரசியலை தாங்கிப் பிடிப்பவர்களாக நம்பப்பட்ட அனைவருமே இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். இப்போது தமிழ் தேசிய அரசியல் முள்ளிவாய்க்கால் கஞ்சியில் திருப்திகாண்கின்றது. ஆனால் மக்களை பொறுத்தவரையில் இவற்றை சாதாரணமாக கடந்து செல்வதாகவே தெரிகின்றது. சித்திரா பருவதத்திற்கு கஞ்சி குடிப்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடுகளை காணமுடியவில்லை. ஏனெனில் அரசியல் தலைமையற்ற சமூகமொன்றில் எவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுத்தாலும் கூட, அதற்கு அரசியல் பெறுமதியிருக்கப் போவதில்லை. தமிழர் அரசியல் கடந்த காலத்தின் மீதான பரிவுணர்விற்கும், கடந்து சொல் வேண்டிய அரசியல் உண்மைகளுக்கும் இடையில் சிக்கிக் கிடக்கின்றது. இந்த விடயத்தை பலரால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை, புரிந்துகொண்டவர்களால் துனிகரமாக பேசமுடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால் 2009இற்கு பின்னரான நமது தமிழ் தேசிய அரசியல் ஆய்வுகளில் வறுமை குடிகொண்டுள்ளது. யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமல், நமது ஆய்வாளர்கள் என்போர் பலர் தடுமாறிக் கொண்டேயிருக்கின்றனர். தமது கருத்துருவாக்கங்கள் தோல்வியுற்றிருக்கின்ற என்பதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு காரணமுண்டு. எழுதுவதன் மூலம் ஒரு பிரமுக அடையாளம் கிடைத்துவிடுகின்றது. பின்னர் அதனை எப்படியாவது பழுதுபடாமல் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்னும் ஆசையைலிருந்து விடுபட முடியாமல் இருக்கின்றது. சாதாரண மக்களின் மனநிலை வேறு. அவர்கள் எப்போதும் உணர்சிவசப்பட்டவர்களாகவே இருப்பவர். அதிலும் முப்பது வருடங்களுக்கு மேலான யுத்தச் சூழலொன்றுக்குள் சிக்கியிருந்த மக்கள் கூட்டமொன்றில் இப்போது பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர் இருக்கின்றனர். விடுதலைப் புலிகள் மீது அனுதாபமுள்ளவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்தவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் என்னுமொரு தொகுதி மக்களுண்டு. விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கோபமும், விமர்சனமுள்ளவர்கள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளை விரும்பாவிட்டாலும் கூட, பொதுவில் ஆதரவாளர்கள் போன்று நடிப்பவர்கள் இருக்கின்றனர். இவை எவற்றிலுமே அக்கறையற்று, தானுண்டு, தங்களின் வாழ்க்கையுண்டு என்றிருப்பவர்கள் இருக்கின்றனர். தமிழ் மக்களில் இவர்களே பெரும்பாண்மையினரவார். ஆனால் யுத்தத்திற்கு பின்னரான கடந்த 14 வருடங்களில் யுத்தகாலத்தின் நினைவுகளிலிருந்து அதிகமான பெரும்பாண்மையான மக்கள் வெளியில் வந்துவிட்டனர். இதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளே சிறந்த உதாரணம். யுத்தத்தின் அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை அரசியல் கட்சிகளுக்கு இருந்தாலும் கூட, சாதாரண மக்களோ அதிலிருந்து அதிக துரத்திற்கு செல்லவே விரும்புவதாக தெரிகின்றது. கிழக்கு மாகணத்தில் இந்த நிலைமை அதிகம். இதற்கு அங்குள்ள அரசியல் மற்றும் சமூக நிலைமைகளும் ஒரு காரணமாகும். கடந்த 14 வருடகால அரசியல் அனுபவங்களை தொகுத்து நோக்கினால், விடுதலைப் புலிகள் தொடர்பான அரசியல் கதைகள் பெரும்பாலும் யாழ் குடாநாட்டு விடயமாக சுருங்கிவிட்டது. வடக்கு மாகாணத்தின் குறிப்பாக, யாழ் குடாநாட்டை மற்றும் கிளிநொச்சியில் வாக்குகளை எதிர்பார்த்திருக்கும் அரசியல்வாதிகளே அவ்வப்போது விடுதலைப் புலிகளை உச்சரிப்பவர்களாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தேர்தல் அரசியல் போட்டிக்கே இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாண அரசியல் உரையாடல்களை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக தங்களை காண்பித்துக் கொள்வதில் ஒரு போட்டி இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கை ஓங்கிவிடக் கூடாதென்று ஏனைவர்களும், ஏனையவர்களின் கை ஓங்கிவிடக் கூடாதென்று கஜன் அணியினரும் செயற்படுகின்றனர். இதன் காரணமாகவே அவ்வபோது, நினைவேந்தல் சச்சரவுகள் இடம்பெறுகின்றன. ஆனால் இவ்வாறான அரசியலை தங்களின் வாக்குவங்கிக்கு தேவையில்லையென்று கருதும் அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கின்றனர். இவ்வாறான நினைவேந்தல் சண்டைகள், தீலிபன் சண்டை, பூபதி சண்டைகளுக்குள் அவர் ஈடுபடுவதில்லை. ஆனால் கடந்த 14 வருடகால நீதிகோரும் அரசியலை உற்று நோக்கினால், இவர்களால் எதனையுமே சாதிக்க முடியவில்லை. இ;த்தனை கட்சிகள், இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள், இவர்களுக்குகிடையில் யார் சரியானவர்கள் என்னும் போட்டிகள், எவையும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதிலோ, அரசியல் தீர்வை அடைவதிலோ குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. அண்மையில் இந்தக் கேள்வியை ஒரு புலம்பெயர் செயற்பாட்டாளர், கஜேந்திரகுமாரிடம் கேட்பதான ஒரு வீடியோ கிளிப் வெளியாகியிருந்தது. 13 வருடங்களாக எதை அடைய முடிந்தது என்று அந்த நபர் கேட்டபோது, அதற்கு கஜேந்திரகுமாரின் பதிலோ நீர் எந்ந அமைப்பு? உண்மையில் அவரின் கேள்விக்கு கஜேந்திரகுமாரிடம் பதிலில்லை. கடந்த 14 வருடகால அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கினால், கஜேந்திரகுமார் அணியினரின் பிரதான அரசியல் செயற்பாடாக இருந்தது, இருப்பது, ஒன்று மட்டுமே, அதாவது, மற்றவர்களை குற்றம்சாட்டுவது, மற்றவர்களுக்கு இந்திய அடிவருடிகள் முகவர்களென்று பட்டம் கூூட்டுவது. 2008, இறுதி மாவீரர் தின உரையிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்திய பேரரசுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார். 2006இல், விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கம், இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் முன்னை பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அதாவது, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தாம் வருந்தி மன்னிப்பு கோருவதாக பாலசிங்கம் தெரிவித்திருந்தார். இதில் இந்திய படைகளுடன் சண்டையிட்டது, ராஜீவ்காந்தியின் கொலை தொடர்பிலும் பால சிங்கம் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவை தவிர்த்து, தாண்டி பயணித்து, எதனையும் செய்ய முடியாதென்பதை தனது இறுதிக் காலத்தில் பிரபாகரன் உணர்ந்திருந்தார். பாலசிங்கத்திற்கு அந்த உணர்வு ஏற்கனவே இருந்தது. அதன் காரணமாகத்தான் முன்னரே மன்னிப்பும் கோரியாவது, இநதியாவுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் அவர் முயற்சித்தார். இந்த பின்புலத்தில், இந்தியாவுடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டு;மென்றும், அதனுடன் பணியாற்ற வேண்டும், அவர்களது ஆலோசனையை செவிமடுக்க வேண்டுமென்று கூறுபவர்கள் இந்திய அடிவருடிகள், இந்திய முகவர்கள் என்றால், இந்த விடயத்தின் முன்னோடி பாலசிங்கமும் பிரபாகரனுமல்லவா! அவர்களையும் அடிவருடிகள், முகவர்களென்று அழைப்பதற்கு கஜேந்திரகுமாரும் அவரது தொண்டர்களும் தயாரா? இதே போன்று கூட்டமைப்பின் செயற்பாடுகளை எடுத்து நோக்கினால், கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவதையே ஒரு பிரதான அரசியலாக முன்னெடுத்தது. சூழ்நிலைமைகளை புரிந்துகொண்டு, அரசியலை முன்னெடுப்பது தொடர்பில் சிந்திக்காமல், அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுவதன் மூலம் தனது தவறுகளை மூடிமறைக்க முற்பட்டது. அரசாங்கம் – அதாவது, சிங்கள ஆட்சியாளர்கள் எதனையும் தாமாக செய்ய மாட்டார்கள், என்பதுதானே இத்தீவின் சிங்கள அரசியல் வரலாறு. அவ்வாறான சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து, அதிகாரத்தை பெறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அதற்கான ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதும்தானே தமிழ் அரசியல் இலக்கு. அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதற்கு எதற்கு ஒரு தனியான கட்சி? 14 வருடகால தமிழர் லொபி, எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தோல்விலேயே முடிந்திருக்கின்றது. இதற்கான காரணங்களை ஆராய வேண்டும். இதற்கு நான் முன்னர் குறிப்பிட்ட ஒரு விடயத்தைப்பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். அதாவது, கடந்த காலம் தொடர்பான பரிவுணர்விற்கும் அரசியலில் கடக்க வேண்டிய உண்மைகளுக்கும் இடையில் சிக்குப்படுசதிலிருந்து விடுபட வேண்டும். தமிழர் அரசியல் லொபியை விடுதலைப் புலி விசுவாசத்திலிருந்து வெளியில் எடுக்க வேண்டும். சாகசக் கதைகள் தமிழர்களுக்குரியதே தவிர, அது சர்வதேசத்துக்குரியதல்ல. விடுதலைப் புலிகள் தொடர்பான மேற்குலகின் பார்வையில் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றமும் ஏற்படாது. யுத்தம் முடிவுற்று, 14 வருடங்களின் பின்னரும், கூட விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அப்படியே தொடர்கின்றது. மேற்குலகம் விடுதலைப் புலிகள்அமைப்பை எல்லைதாண்டிய பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கிவருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில், தமிழர்களுக்கான நீதி கோரும் லொபியை முன்னெடுக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் தங்களை புலி விசுவாச வட்டத்திற்குள் அடையாளப்படுத்துவதானது, அவர்களது நகர்வுகளில் ஒரு போதும் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. கடந்த 14 வருடகால, நீதிக்கான தமிழ் லொபியின் தோல்வியை இந்தக் கண்ணோட்டத்தில் நோக்குவதற்கு நாம் தயாராக வேண்டும். மேற்குலகத்தினால் பயங்கரவாத அமைப்பாக நோக்கப்படும் ஒரு அமைப்பின் விசுவாசிகளாக, மேற்குலகத்தை அணுகுவது, நம்மீதான பரிவுணர்வை ஏற்படுத்தாது. உண்மையில் இந்த விடயம் தொடர்ந்தும் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கே சாதகமாக இருக்கின்றது. இப்போதும் தாங்கள் பயங்கரவாத்தினால் பாதிக்கப்பட்ட நாடென்னும் ஒரு பிரச்சாரத்தோடுதான், சிங்கள ஆளும் வர்க்கம் உலகத்தை எதிர்கொள்ளுகின்றது. இதனை புரிந்துகொள்ளாமல் நாம் முன்னெடுக்கும் விடயங்கள் எங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். வேண்டுமானால் விசுவாசத்தை மனதில் வைத்துக் கொள்வோம், ஆனால் நமது நாவில் தந்திரம் மட்டுமே இருக்க வேண்டும். தந்திர அரசியலுக்கு விசுவாசம் இல்லை. http://www.samakalam.com/நீதி-கோரும்-தமிழர்-அரசிய/
-
கன்பூசியஸ் நிலையம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஊடுருவல் கருவி? - யதீந்திரா அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவருகின்றது. இதில் தற்போது எவருக்குமே சந்தேகமில்லை. இன்றைய சீனாவின் எழுச்சியின் முதல் பகுதி டெங்சியோ ஒபியின் காலமென்றால், அதன் அடுத்த கட்டத்தை நகர்த்துபவராக தற்போதை சீனத் தலைவர் சி.ஜின்பிங்கின் இருக்கின்றார். சீன வரலாற்றில் மாவோவிற்கு பின்னர் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக சி.ஜின்பிங் நோக்கப்படுகின்றார். சீனாவை ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைச் செய்யும் இலக்கில், ஜின்பிங்கின் நிர்வாகமானது, ஆக்கோரசமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்க – சீன போட்டியே இன்றைய சர்வதேச அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கின்றது. ஆனால், அமெரிக்க – சீன முறுகல் நிலை பனிப்போர் நிலையை எட்டவில்லையென்றும் – இல்லை பனிப்போர் நிலையை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்டதாகவும் – இரு வேறு பார்வைகளில் விவாதிப்போருண்டு. அண்மையில் அமெரிக்க வான் பரப்பின் மீது பறந்த சீன உளவு பலூன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இது ஒரு வகையான பனிப்போர் அரசியலை நினைவுபடுத்துவதாகவே இருக்கின்றது. தாய்வான் விடயத்தில் அமெரிக்கா காண்பித்துவரும் ஈடுபாட்டை, சீனா தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பலுசி, தாய்வானுக்கு விஜயம் செய்ததை தொடர்ந்து, தாய்வான் விடயத்தில் சீனா கடும்தொனியிலேயே பேசிவருகின்றது. தாய்வான் விடயத்தில் தலையிடுவோர் அதன் விலையை கொடுக்க நேரிடுமென்று சீனா அவ்வப்போது எச்சரித்துவருகின்றது. ஆனால், தாய்வானுடனான அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை அமெரிக்கா, தொடர்ந்தும் பலப்படுத்தி வருகின்றது. சீனா அடிப்படையில் ஒரு சர்வாதிகார அரசியல் கட்டமைப்பை கொண்டிருக்கும் நாடாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால், சீனாவின் அரசியலும், இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் அரசியல் அணுகுமுறைகளும் தலைகீழானது. அமெரிக்க – சீன போட்டியென்பது வெறுமனே பொருளாதார மற்றும், அதிகார போட்டியல்ல – மாறாக, இரண்டு அரசியல் முறைமைகளுக்கிடையிலான போட்டியாகும். அதாவது, சர்வாதிகார அரசியல் கட்டமைப்பிற்கும் தாராளவாத ஜனநாயக கட்டமைப்பிற்கும் இடையிலான மோதலாகும். கம்யூனிச – சர்வாதிகார கட்டமைப்பின் மூலம் வளர்சியடைந்திருக்கும் சீனா, அதனை உலகெங்கும் பரவல்படுத்தவும், அதனை நியாயப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், சீனாவின் கன்பூசியஸ் நிலையத்தின் செயற்பாடுகள் உற்று நோக்கப்படுகின்றன. 2004இல் ஆரம்பிக்கப்பட்ட சீன, கன்பூசியஸ் நிலையம், தற்போது 160இற்கு மேற்பட்ட நாடுகளில் அதன் செயற்பாடுகளை விஸ்தரித்திருக்கின்றது. உலகெங்கும் 400இற்கு மேற்பட்ட கன்பூசியஸ் நிலையங்கள் இதுவரையில் நிறுவப்பட்டுள்ளன. ஹன்பானா என்னும் அரசு சாரா, அரசாங்க அமைப்பொன்றே இதன் தலைமைக் காரியாலயமாக இருக்கின்றது. இதன் இயக்குனராக இருப்பவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தின் உறுப்பினராவார். இது சீன கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இதில் சீன கம்யூனிஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். 2013இல், கன்பூசியஸ் நிலையங்களின் ஊடாக, சீனா பற்றிய நல்ல பார்வைகளை வழங்குங்கள் என்று, ஜின்பிங், உத்தரவிட்டார். http://www.samakalam.com/wp-content/uploads/2023/05/confucius-e1683359373128.jpg ஏனைய நாடுகளுக்குள் இலகுவாக ஊடுருவவும் நோக்கிலேயே, கன்பூசியஸ் நிலையம் என்னும் பெயர் தெரிவுசெய்யப்பட்டது. 2014இல் சைனா போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றின்படி, கன்பூஸியசுக்கு பதிலாக, மாவோ அல்லது, டென்சியோ ஒபிக்கின் பெயர் இந்த நிலையத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த விடயத்தில், இந்தளவு முன்னேறியிருக்க முடியாதென்று குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியிருந்தது. ஏனெனில் மாவோவின் வழியாக சீனா தொடர்பான உலகப் பார்வை எதிர்மறையாக இருக்கின்றது. இந்த எதிர்மறையான சிந்தனையை போக்குவதற்கான ஒரு கருவியே கன்பூசியஸ் நிலையம். இந்த நிலையத்தின் மூலம், சீனா தொடர்பில் நிலவிவரும் விமர்சனங்கள், குறிப்பாக தியன்மன் சதுக்க கொலைகள், சீனாவின் மனித உரிமைகளுக்கு எதிரான கொள்கைள், சர்வாதிகார ஆட்சிக் கட்டமைப்பு போன்றவை தொடர்பில், சாதகமான அபிப்பிராயத்தை மேற்குலக மாணவர்களுக்குள் புகுத்துவதற்கான ஒரு கருவியாகவே கன்பூசியஸ் நிலையத்தை சீனா பயன்படுத்திவருவதான குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்திருக்கின்றன. அதே வேளை சீன உளவுச் செயற்பாடுகளுக்கான ஒரு தளமாகவும் இந்த நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக மேற்குலக பாதுகாப்பு நிபுனர்கள் எச்சரிக்கின்றனர். 2013இல், சிக்காக்கோ பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த பேராசிரியர், மார்ஷல் சாஹ்லின்ஸ், கன்பூசியஸ் நிலையம் சிக்காக்கோ பல்கலைக்கழக்கத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றது, நிலையத்தின் தீர்மானங்களின் கம்யூனிஸ்ட்; கட்சியின் உயர் பீடம் எவ்வாறு தலையீடு செய்கின்றது போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான கட்டுரையையொன்றை வெளியிட்டிருந்தார். 2019இல் அமெரிக்க செனட், கன்பூசியஸ் நிலையங்களுக்கான அனுமதியை மறுபரீசீலனை செய்ய வேண்டுமென்று அறிக்கையிட்டிருந்தது. கன்பூசியஸ் நிலையம் சீனாவின் பிரச்சாரத்திற்கான ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் 2020இல் அறிவித்தது. தற்போது, பிரித்தானியாவில், இந்த விடயம் ஒரு அரசியல் விவாதமாக மாறியிருக்கின்றது. பிரித்தானியாவில், 30 பல்கலைக்கழகங்களில் கன்பூசியஸ் நிலையங்கள் இயங்கிவருகின்றன. கன்பூசியஸ் நிலையங்களின் செயற்பாடுகள் பிரித்தானிய சட்ட நடைமுறைகளுக்கு மாறாக முன்னெடுக்கப்படுவதாக தற்போது, கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழங்களில் பின்பற்றப்படும் கருத்துச் சுதந்திர நடைமுறைகளுக்கு மாறாக கன்பூசியஸ் நிலையங்களின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்திருக்கின்றன. இதன் மூலம், பிரித்தானியாவின் சிவில் சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் அனைத்து கன்பூசியஸ் நிலையங்களையும் மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கின்றார். சீனாவை பொறுத்தவரையில் அமெரிக்க மற்றும் மேற்குலகம் பனிப்போர் மனநிலையில் செயற்படுவதாக குற்றம்சாட்டிவருகின்றது. ஆனால் கன்பூசியஸ் நிலையங்களின் செயற்பாடுகளை, தொடர்சியாக, கண்காணித்ததன் மூலம், சில விடயங்களை பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர். http://www.samakalam.com/wp-content/uploads/2023/05/Confucious.png அதாவது, கன்பூசியஸ் நிலையங்களுக்கான பணியாளர்கள் – தேர்வு செய்யும் முறைமையானது, பிரித்தானிய சட்டங்களுக்கு முரணாணது. அதாவது, பணியாளர்களை தெரிவு செய்யும் போது, அவர்களது அரசியல், பால்நிலைத் தெரிவு, மதம், இனவாத பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை நோக்குதல், அவர்களது அரசியல் நடத்தைகள் அத்துடன் பணிக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்னும் உறுதிமொழி போன்ற விடயங்களின் அடிப்படையிலேயே பணியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறான நடைமுறை, பிரித்தானிய சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. சீனாவின் மென்வலு அதிகாரத்தை விரிவாக்குவதற்கான ஒரு கருவியாகவே கன்பூசியஸ் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா, கடனா, பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகளின் பல்கலைகழக நிர்வாகம் தற்போது விழிப்படைந்துவிட்டது. சீனாவின் செல்வாக்கை விரிவாக்குவதற்கான கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கருவியாகவே, கன்பூசியஸ் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டுவருவது, கண்டுகொள்ளப்பட்டதை தொடர்ந்து, மேற்குலக நாடுகள் கன்பூசியஸ் நிலையங்களுக்கான அனுமதியை இரத்துச் செய்திருக்கின்றன. கன்பூசியஸ் நிலையங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடுருவல் திட்டமென்னும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, இவற்றை ஆராய்வதற்கான சிறப்பு குழுவொன்றை இந்தியா நியமித்திருந்தது. இந்தியாவில் இரண்டு கன்பூசியஸ் நிலையங்கள் மட்டுமே இயங்கியிருக்கின்றது. தெற்காசியாவில் அதன் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருக்கும் சீனா, தற்போது, இலங்கை பல்கலைக்கழங்களிலும் கன்பூசியஸ் நிலையங்களை ஆரம்பிப்பதில் அதிக ஆர்வத்தை காண்பித்துவருகின்றது. தென்னிலங்கையில் மூன்று நிலையங்களை இதுவரையில் நிறுவியிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழங்களிலும் கன்பூசியஸ் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காண்பித்துவருகின்றது. இது தொடர்பில் இரண்டு பல்கலைக்கழகங்களையும் அணுகியிருக்கின்றது. இந்த விடயத்தை நமது பல்கலைக்கழங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் நமது பல்கலைக்கழங்கள் காலை விடுமாக இருந்தால், மேற்குலக பல்கலைக்கழங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்று, ஒரு வேளை அதனைவிடவும் சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம். வளர்ச்சியடைந்த நாடுகளின் பலக்லைக்கழகங்களே கன்பூசியஸ் நிலையத்தை கையாள முடியாமல் தடுமாறுகின்ற போது, வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களால் எவ்வாறு இதனை எதிர்கொள்ள முடியும்? ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலக நாடுகளின் அல்லது இந்திய பல்கலைக்கழங்களோடு கல்விசார் தொடர்புகளை பேணுவதற்கும், சீனாவின் பல்கலைக்கழங்களோடு இணைந்து பணியாற்றுவதற்குமுள்ள சிக்கல்கள் மாறுபட்டது. மேற்குலக, இந்திய பல்கலைக்கழகங்கள் சுயாதீனமானவை. ஜனநாயக கட்டமைப்புக்களின் கீழ் இயங்குபவை. எனவே அவ்வாறான பல்கலைக்கழங்களோடு இணைந்து பணியாற்றுவதில் அரசியல்ரீதியான சிக்கல்கள் இடம்பெறப்போவதில்லை. ஆனால் சீனாவின் பல்கலைக்கழங்களின் தீர்மானங்கள் சுயாதீனமானவை அல்ல. மாறாக, அனைத்துத் தீர்மானங்களுமே, கம்யூனிஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் சீனாவின் அனைத்து நிறுவனங்களுமே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார கட்டமைப்பிற்கான பிரச்சார நிறுவனங்கள்தான். இதனை புரிந்துகொண்டே, அகலக் காலை வைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். http://www.samakalam.com/கன்பூசியஸ்-நிலையம்-சீன-க/
-
தமிழரின் அரசியலை வழிநடத்தும் நம்பிக்கைகள்? - யதீந்திரா அரசியலில் மிகவும் துல்லியமான கணிப்புக்களை எவராலும் வழங்க முடியாது. சில அனுமானங்களை செய்ய முடியும். உலகின் முன்னணி புத்திஜீவிகளில் ஒருவரான பேராசிரியர் நோம்ஷொம்ஸகி, கூறுவார், என்னால் நாளைய காலநிலையை எதிர்வுகூற முடியாது. அதாவது, அரசியலிலும், உலக விவகாரங்களிலும் ஒருவர் என்னதான் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் கூட, எதிர்காலம் தொடர்பில் அப்பழுக்கற்ற பார்வையை எவராலும் முன்வைக்க முடியாது. பிஸ்மார்க், கூறியது போன்று, நான் என்னதான் ஆற்றல் வாய்ந்தவனாக இருந்தாலும் கூட, கடிகாரத்தின் முள்ளை மாற்றிவைப்பதால், காலத்தை நகர்த்திவிட முடியாது. எனவே மனிதனின் ஆளுமையென்பது எல்லையற்றதல்ல. அது எல்லைக்குட்பட்டது. ஒரு எல்லைக்குட்பட்ட நம்மால், ஒரு எல்லைக்குள்தான் சிந்திக்கவும் செயலாற்றவும் முடியும். இதற்குள் நம்மை நாமே வல்லுனர்களென்று கருதிக் கொள்வதெல்லாம் நமது தனிப்பட்ட ஆர்வங்கள் சார்ந்தது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு என்ன நடைபெறப் போகின்றது? இதற்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? தாயுமானவர் கூறுவது போன்று, நாமொன்றும் அறியோம் பராபரமேயென்று கூறிவிட்டு, அமைதியடைந்துவிடவும் முடியாது. பதிலளிக்கவும் வேண்டும் ஆனால் அந்த பதிலில் நிதானமும் தெளிவுமிருக்க வேண்டும். இதுவரையில் என்ன நடந்தது என்பதில் தெளிவிருக்கும் போதுதான், இனிமேல் நடைபெறப் போகும் – அல்லது, நடைபெறலாமென்று நாம் எதிர்பாக்கும் விடயங்களின் சாத்தியப்பாட்டை ஆராய முடியும்? ஒரு விடயத்தை சிலரும், சிலவேளைகளில் பலரும் கூறுவதை காணமுடிகின்றது. அதாவது, இந்தியாவை கையாண்டிருக்கலாம், அமெரிக்காவை கையாண்டிருக்கலாம், அதற்கான வாய்ப்பு இப்போதுமுண்டு, ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அதனை சரியாக புரிந்துகொண்டு கையாள முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களிடம் ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்கினால், அவர்களால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம். ஏனெனில் இது பேசுவது போன்று, கட்டுரையெழுதுவது போன்று, இலகுவான விடயங்கள் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்ற சிலர் ஆற்றல்லற்றவர்கள் அல்லர். குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கின்ற சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு ஆற்றலுண்டு. அவர்களுக்கு இந்த விடயத்தில் நீண்ட அனுபமுண்டு. அதே போன்று, தமிழரசு கட்சியில் சுமந்திரனும் ஆற்றலுள்ளவர்தான். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விடயங்களை அறிந்தவர்தான். அதனை மறுதலிக்க முடியாது. ஆனால் இவர்களால் என்ன செய்யமுடியும்? தேர்தல் அரசியலுக்காக சில விடயங்களை கூறவேண்டிய நிர்பந்தத்திலிருந்தாலும், இவர்கள் கூறிவரும் விடயங்கள் எதனையும், அடைய முடியாதென்பதை அவர்களும் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசியல் கட்சியென்பதால் தங்களால் முடியாதென்றும் மக்களிடம் கூறமுடியாது. ஒரு வகையில் அரசியல் கட்சிகளின் நிலைமை திரிசங்கு நிலைதான். இன்றைய தமிழ் தேசிய அரசியலை ஆழமாக நோக்கினால், ஒரு விடயத்தை காணலாம். அதாவது, இன்று தமிழ் தேசியமென்பது சில நம்பிக்கைகளினால் மட்டுமே அசைகின்றது. முதல் நம்பிக்கை, சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் ஈழத் தமிழ்மக்களுக்கு நன்மை கிட்டும். இரண்டாவது, நம்பிக்கை, இந்தியாவிற்கு ஒரு தேவையேற்படும், அப்போது வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கித்தான் வரவேண்டும் ஏனெனில், இலங்கைக்குள் சீனா வலுவாக காலூன்றிவிட்டது, அதனை கையாள முடியாமல் இந்தியா தடுமாறுகின்றது. மூன்றாவது நம்பிக்கை, புலம்பெயர் சமூகம் பற்றியது. புலம்பெயர் சமூகம் பலமாக இருக்கின்றது, மேற்குலக நாடுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தும் ஆற்றலோடிருக்கின்றது. அவர்களின் அழுத்தங்களால் ஏதோவொரு வகையில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். நான்காவது, சீன – அமெரிக்க உலகளாவிய போட்டியின் காரணமாக, இலங்கை முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த பின்புலத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஈழத் தமிழர்கள் இருப்பதால், அமெரிக்காவின் நகர்வுகளுக்கு தமிழர்கள் தேவைப்படுவார்கள், இது தமிழர்களுக்கு சாதகமானது. மொத்தத்தின் இவற்றின் வாயிலாக ஈழத் தமிழர்களுக்கு விமோசனமுண்டு. யுத்தமில்லாத கடந்த 13 வருடகால தமிழ் தேசிய அரசியலானது இவ்வாறான நம்பிக்கைகளின் வழியாகத்தான், நகர்ந்திருக்கின்றது. இவைகள் அனைத்துமே சிலரிடமும், பலரிடமும் உள்ள எதிர்பார்ப்புக்கள் மட்டுமே. முதலாவது நம்பிக்கையை நோக்குவோம், சர்வதேச அழுத்தங்களின் வழியாக தமிழ் மக்களுக்கு சில விடயங்கள் கிடைக்கும். இதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. நாங்கள் எதிர்பார்க்கலாம், எங்களுடைய அறிவின் எல்லைக்குட்பட்டு, அனுமானிக்கலாம். முதலில் சர்வதேச அழுத்தங்கள் என்பதால் நாம் எதை விளங்கிக் கொள்கின்றோம்? இது தொடர்பில் முன்னைய பத்திகளிலும் சில விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றேன். முதலில் சர்வதேச அழுத்தமென்பது, மேற்குலக அழுத்தம் மட்டுமே. அதாவது, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா அத்துடன் ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மூலம் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களாகும். மனித உரிமையின் மீதான கரிசனையே, இந்த அழுத்தங்களின் அடிப்படையாகும். ஒரு வேளை நாம் மனித உரிமை தொடர்பில் பேசாவிட்டாலும் கூட, அவர்கள் பேசுவார்கள். ஏனெனில் அது அவர்களின் வெளிவிவகார அணுகுமுறையாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மேற்படி நாடுகள் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றன. இந்த நாடுகளின் அழுத்தங்கள் நேரடியாகவும், ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாகவும் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச அழுத்தமென்பது, இதுதான். இதுதான் கடந்த 13 வருடங்களாக இடம்பெற்றுவரும் அழுத்தங்கள். இந்த அழுத்தங்களை தீவிரப்படுத்துங்கள் – என்னும் பெயரில்தான், ஆண்டுகள் தோறும், தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூக குழுக்களும், புலம்பெயர் குழுக்களும் கடிதங்களை அனுப்பியிருந்தன, பயணங்களையும் மேற்கொண்டிருந்தன. எதிர்பார்த்த விளைவுகள் கிடைத்தனவா? இல்லை. ஏன் அவ்வாறு நடைபெறவில்லையென்பதற்கு நம்மில் சிலரிடமுள்ள இலகுவான பதில், அரசியல்வாதிகள் இதனை சரியாக கையாளவில்லை. அவர்களுக்கு விடயங்கள் விளங்கவில்லை. இதிலுள்ள அடிப்படையான விடயம் அரசியல்வாதிகளால் இந்த விடயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் எதனையும் செய்ய முடியாது. கடிதங்களை அனுப்பலாம், தேர்தல் அரசியலுக்காக, தங்களுடைய கடிதங்களிலுள்ள விடயங்களைத்தான் ஆணையாளர் உள்வாங்கியிருக்கின்றார் – என்று அறிக்கை வெளியிடலாம். இந்த அறிக்கைகள் தேர்தல் அரசியல் தொடர்பானது. அதே போன்று, இன்னொரு கட்சி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரன் தடுக்கின்றார், என்று அறிக்கை வெளியிடலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதை சுமந்திரனால் எவ்வாறு தடுக்க முடியும்? நிச்சயம் முடியாது. இவ்வாறான கதைகளெல்லாம் தேர்தலில் ஒருவரை தோற்கடிப்பதற்கு மற்றைய கட்சி கூறும் கதைகள். ஆனால் அறிவுள்ள ஒரு தரப்பு இவ்வாறான கதைகளை ஆராயமல் உச்சரிக்கக் கூடாது. இரண்டாவது இந்தியா தொடர்பானது. இந்தியா தொடர்பில் தெளிவான பார்வை, தமிழ் சூழலில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இங்கும் பிரச்சினை இந்தியா தொடர்பான எதிர்பார்ப்புக்கள்தான். இதில் அரசியல்வாதிகளிடம் பிரச்சினையில்லை. ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போரிடம்தான் பிரச்சினையுண்டு. ஒரு தரப்பினர், இந்தியாவை ஈழத் தமிழர்களின் வேலையாள் போன்று நோக்குகின்றனர். தாங்கள் விரும்பும் ஒன்றை இந்தியா செய்ய வேண்டும். இரண்டாவது, தரப்பினர், இந்தியாவென்னும் ஒரு பிராந்திய சக்தியின் தேசிய பாதுகாப்பே, ஈழத் தமிழர்களில்தான் தங்கியிருக்கின்றது – என்றவாறு புனை கதைகளை எழுத முற்படுகின்றனர். இரண்டுமே அடிப்படையிலேயே தவறானது. இந்தியா, நாம் விரும்புவதையெல்லாம் செய்யாது என்பதை நாம் முதலில் குறித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவின் கொள்கை, அன்றிலிருந்து இன்றுவரையில், ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது, இலங்கை ஒரு நட்புநாடு. அந்த நட்புநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதில் தலையீடு செய்யும் கடப்பாடு இந்தியாவிற்குண்டு. அன்றைய சூழலில் இந்திராகாந்தி கூறியது ஒன்றுதான் – அதாவது, ஆறு கோடி தமிழ் மக்களை கொண்டிருக்கும் இந்தியாவானது, அருகிலுள்ள இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது, அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனால் அதற்காக சிங்களவர்களின் குரல்வளையை நசிக்க வேண்டுமென்று, தமிழர்கள் எதிர்பார்த்தால், அதனை இந்தியா ஒரு போதும் செய்யாது. ஏனெனில் இந்திராகாந்தி, அதன் பின்னர், அவரது புதல்வர் ராஜீவ்காந்தி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குரல்வளையை பிடிக்கும் சிறிய அணுகுமுறையிருந்தது உண்மைதான். ஒரு புறம் ஈழ ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளித்த இந்தியா, பின்னர் அதனையே ஒரு காரணமாகக் கொண்டு இராணுவத் தலையீட்டை மேற்கொண்டது. இந்தியாவின் அன்றைய அணுகுமுறை இராணுவரீதியானது. ஆனாலும் இந்தியா ஈழத் தமிழர்களின் பெயரில் தலையீட்டை முன்னெடுத்த போதிலும் கூட, அதன் மூலம் இந்தியாவிற்கு மோசமான அனுபவங்களே கிடைத்தது. இறுதியில் விரல்களை சுட்டுக்கொண்ட அனுபவத்தோடு, இந்தியா வெளியேறியது. மூன்றாவது நம்பிக்கை புலம்பெயர் சமூகம் தொடர்பானது. தாயக தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக புலம்பெயர் சமூகம் வளர்சியடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். அதனை மறுதலிக்க முடியாது ஆனால் இது தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. புலம்பெயர் சமூகம் தலையீடு செய்வதால்தான் மேற்குலம், இலங்கை விடயத்தில் சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக கருதுவது தவறானது. அண்மையில் கனடிய வெளிவிவகார விடயங்களில் நிபுனத்துவம் வாய்ந்த பேராசிரியர் கிம் நொஷலை, எனது மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கான நேர்காணல் செய்திருந்தேன். இதன்போது அவர் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது, கனடாவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் அடிப்படையானது. மேலும் கனடாவின் அணுகுமுறை தனியானது அல்ல, அதன் நேச நாடுகளின் அணுகுமுறையின் அங்கமாகும். ஒருவேளை, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கூட, கனடாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. மேலும் கனடாவில் இடம்பெறும் புலம்பெயர் செயற்பாடுகளை உள்நாட்டு விவகாரமாக நோக்க வேண்டும். உதாரணமாக இனப்படுகொலை வாரத்தை அனுமதிப்பது. இவைகள் உள்ளுர் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளேயன்றி, கனடாவின் வெளிவிவகார கொள்கையில் தாக்கம் செலுத்தும் விடயங்களல்ல. எனவே விடயங்களை நோக்கினால், இவ்வாறான எதிர்பார்புக்களும், அந்த எதிர்பார்ப்புக்கள் மீதான எதிர்வு கூறல்களும் முற்றிலும் சரியானதல்ல. இவற்றுக்கான வாய்ப்புக்கள் என்பது, பெரும்பாலும் அதிஸ்டத்தை நம்புவது போன்றது. ஒரு இனத்தின் அரசியல் போக்கை இவ்வாறு அணுகுவது சரியானதா? கடந்த காலம் நமக்கு தந்திருக்கும் படிப்பினைகள் எவையுமே இவ்வாறான விடயங்கள் மீது நம்பிக்கை வைப்பதை சந்தேகத்துடன் நோக்குமாறுதான் வற்புறுத்துகின்றது. முதலில் நாம் ஏதாவதொரு வகையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நமக்கு ஏதாவதொரு கட்டமைப்பு தேவைப்படுகின்றது. அவ்வாறில்லாவிட்டால், நமது நிலைமையானது, பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை என்பதாகிவிடும். கடந்த 13 வருடங்களாக, நமது காலம், பல்லக்கு பேச்சுக்களில்தான் கழிந்திருக்கின்றது. இது சுகமானது ஆனால் மக்களுக்கு பயனற்றது. http://www.samakalam.com/தமிழரின்-அரசியலை-வழிநடத்/
-
இன்னும் பத்து வருடங்களின் பின்னர்? - யதீந்திரா அரசியல் பற்றி பேசுவதற்கும், அரசியலை சரியாக பேசுவதற்கும் இடையில் மலையளவு வேறுபாடுண்டு. அரசியலை எவர் வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம் – ஒரு மரக்கறிக்கடையில் இருப்பர், இறைச்சிக்கடையில் இருப்பவர், ஏன் யாசகம் செய்பவரும் பேசலாம். இவ்வாறு பேசுபவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களின் வழியாகவே அரசியலை புரிந்துகொள்வார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் ஒரு சமூதாயத்தின் எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பவர்கள் சாமாணியர்கள் போன்று அரசியலை, தங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்க முடியாது. அரசியலை சரியாக புரிந்துகொள்ள முற்படுவதென்றால் என்ன? கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, நிகழ்காலத்தை அணுகுவதும், அதிலிருந்து எதிர்காலத்தை கையாளுவதற்கான வாய்ப்புக்களை தேடுவதும்தான் சரியானதொரு அரசியலாக இருக்க முடியும். ஆனால் யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்கள் சென்றுவிட்ட பின்னரும் கூட, தமிழ் அரசியல் சூழலில் இடம்பெறும் உரையாடல்களில் அரசியல் முதிர்சியை காணவில்லை. அனைவருமே, அதே பழைய சகதிக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கின்றனர். இப்போதும் துரோகி, ஒட்டுக்குழு, காட்டிக்கொடுப்பாளர், இப்படியான சொற்களைகளையே கேட்க முடிகின்றது. தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர், நேற்றுவரையில் ஒன்றாக பயணித்தவர்களை நோக்கி, எதுவித குற்றவுணர்வுமின்றி, காட்டிக்கொடுத்தவர்கள், சந்திகளில் நின்று கொலை செய்தவர்களென்று சாதாரணமாக கூறமுடிகின்றதென்றால், தமிழ் சமூகத்தின் அரசியல் முத்திர்சியை என்னவென்பது! கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரு சமூகம் இவ்வாறான போக்கை ஒரு போதுமே ஆதரிக்காது. இ;வ்வாறான சொற்களை பயன்படுத்த முற்படும் அரசியல்வாதிகளை கண்டிக்கும் போக்கை எங்குமே காணமுடியவில்லை. கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட துரோகி, காட்டிக்கொடுப்பாளர் போன்ற சொற்களின் வழியாக தமிழர்கள் சாதித்தது என்ன? நமக்குள் நாமே வெறுப்பையும் விரோதங்களையும் வளர்த்ததை தவிர, வேறு எதனை சாதிக்க முடிந்தது? முக்கால் நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் நமக்குண்டு. அதற்கு முற்பட்ட, பொன்னம்பலம்களின் காலத்தை இந்தக் கட்டுரை கருத்தில்கொள்ளவில்லை. இந்த முக்கால் நூற்றாண்டில் நாம் கற்றுக்கொண்டதென்ன? செல்வநாயகம் தொடக்கம் சம்பந்தன் வரையில் பல்வேறு கோரிக்கைகள் காலத்திற்கு காலம் உச்சரிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் புதிய புலிகள் தொடக்கம் தமிழீழ விடுலைப் புலிகள் வரையிலான ஆயுத விடுதலைப் போராட்ட அனுபவங்கள் நமக்கு ஏராளமான விடயங்களை கற்பித்திருக்கின்றது. தமிழரசு கட்சி மேடைகளில் ஒலித்த துரோகி தியாகிக் கதைகள் பின்னர், ஆயுத விடுதலை இயக்கங்களின் மத்தியில் துப்பாக்கிக் குண்டுகளின் வழியாக தீர்த்துக் கொள்ளப்பட்டது. ஆங்கிலப் புலமைகொண்ட, அப்புக்காத்து அரசியல்வாதிகள் பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையை விடவும் அதிகமானவர்களை கொண்டிருந்த தமிழ் ஆயுத இயக்கங்கள் அனைத்தினதும் இறுதி அடைவு என்ன? இன்று தமிழர்கள் வந்து சேர்ந்திருக்கும் இடத்தையெண்ணி பெருமைப்பட என்ன இருக்கின்றது? ஆனால் நாம் கடந்துவந்த பாதை நமக்கு போதுமான படிப்பினைகளை தந்திருக்கின்றது. இதிலிருந்து கற்றுக்கொள்வது மட்;டும்தான் நாம் செய்ய வேண்டியதாகும். சட்டப்புலமை, ஆங்கிலப் புலமை, இராணுவ ஆற்றல் இவையனைத்தும் இருந்தும்தானே நாம் தோல்வியுற்றிருக்கின்றோம். அப்படியானால் இவற்றையும் தாண்டி அரசியலில் சிந்திக்கும் திறன் அவசியமென்பதைத்தானே, கடந்தகாலம் நமக்கு கற்றுத்தருகின்றது. ஏனெனில் அவைகளின் மூலம் அரசியல் சவால்களை வெற்றிகொள்ள முடியுமென்றால், ஏற்கனவே நாம் அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டல்லா இருந்திருக்க வேண்டும். இன்றைய தமிழ் தேசிய அரசியலை உற்றுநோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, நமது அனைத்து உரையாடல்களும் தோல்விக்கு விளக்கமளிப்பதாகவும், மற்றவர்களை குற்றம்சாட்டுவதாகவுமே இருக்கின்றது. ஒரு கட்சியை பிறிதொரு கட்சி குற்றம்சாட்டுவது போன்றே, மறுபுறம், அரசாங்கத்தை குற்றம்சாட்டுவது, இந்தியாவை குற்றம்சாட்டுவது, அமெரிக்காவை குற்றம்சாட்டுவது. கடந்த பதின்மூன்று வருடகால அரசியலை உற்றுநோக்கினால் இதனைத் தவிர வேறு எதனையும் நம்மால் காணமுடியாது. முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த குற்றச்சாட்டுக்கள், இப்போது முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான குற்றச்சாட்டுக்களாக மாறியிருக்கின்றது. முதலில் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, ஈழத் தமிழர்கள் மீது எவருக்கும் தனியான பிரியங்கள் இல்லை. அப்படி தனியான ஈடுபாடு தமிழர்கள் மேல் இருந்திருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்காது. ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள் யுத்தம் இடம்பெற்றால் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை எவருமே அறியாமல் இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முடிவுக்கும் தீர்மானத்திற்கு முன்னால், ஏனைய அனைத்து விடயங்களும் இரண்டாம் பட்சமாகியது. ஆனால் விடுதலைப் புலிகளின் முடிவுக்கு முன்னர் உலகம் சில எச்சரிக்கைகளை யாருவழங்காமலும் இருக்கவில்லை. புலிகளுக்கு முன்னால் இருந்த ஒரேயொரு தெரிவை புலிகள் நிராகரித்த போது, மற்றவர்கள், அவர்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவை எடுத்தனர். இதில் ராஜபக்சக்கள் ஒரு கருவி மட்டும்தான். அதனை ராஜபக்சக்கள் புரிந்துகொள்ள தவறியபோது, அவர்களுக்கான நெருக்கடி ஆரம்பித்தது. இன்று பயங்ரவாதத்தை வெற்றிகொண்டதாகவும், பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உலகிற்கே ஆலோசனை வழங்க முற்பட்ட கோட்டபாய ராஜபக்சவின் நிலையென்ன என்பதை அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, ஒரு புலம்பெயர் தமிழ் புத்திஜீவி, மேற்குநாட்டு ராஜதந்திரி ஒருவருடனான உரையாடலின் போது, பரிமாறப்பட்ட விடயமொன்று வெளியாகியிருந்தது. அதாவது, மகிந்த ராஜபக்ச மேற்குலகிற்கு எதிரான நிலைப்பாடுடைய ஒருவர். அவர் முன்னெக்கும் யுதத்தை ஏன் ஆதரிக்கின்றீர்கள்- இதற்கு அந்த ராஜதந்திரி வழங்கிய பதில். இப்போது ராஜபக்ச, பிரபாகரனை பார்த்துக் கொள்ளட்டும், பின்னர் நாம் ராஜபக்சவை பார்த்துக் கொள்வோம். ஏனெனில் உலகிற்கு விடுதலைப் புலிகள் ஒரு விடயமல்ல. எனது முன்னைய பத்தியொன்றிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். இறுதி யுத்தத்தின் போது, ஜக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இருந்தவர், கோடன் வைஸ். தனது அனுபவங்களை தொகுத்து ‘கூண்டு’ என்னும் பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருந்தார். அவர் 2011இல், வெளிவிவகார சஞ்சிகையில் புலிகளின் இரத்தம் என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதில் அவர் கூறிய விடயமொன்று, உலகை புரிந்துகொள்வதற்கு போதுமானது. அவர் எழுதுகின்றார், புலிகள் இல்லாத உலகம் முன்னரைவிடவும் இப்போது சிறப்பாக இருக்கின்றது. இவ்வளவுதான், புலிகள் இயக்கதிற்கு உலகம் கொடுத்த இடம். உலகின் பார்வையில் நமது தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் அனைத்தும் பயங்கரவாதமாகும். நாம் நமக்குள் எவ்வாறான புனிதங்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம், ஆனால் உலகின் பார்வையோ வேறு. விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டு, அதன் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து, பதின்மூன்று வருடங்கள் கழிந்துவிட்ட பின்னரும் கூட, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் புலிகள் அமைப்பை இப்போதும் பயங்கரவாத பட்டிலில்தான் வைத்திருக்கின்றனர். இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நமக்குள் நாம் துரோகியென்றும், ஒட்டுக்குழுவென்றும், காட்டிக் கொடுப்பாளர்களென்றும் அடிபட்டுக் கொண்டிருக்கும் போது, உலகமோ அனைத்தையும் பயங்கரவாதமென்னும் ஒரு சொல்லால் தூக்கியெறிந்துவிட்டது. இன்றைய சூழலில் ஒரு புதிய தலை முறை அரசியலை கையிலெடுக்க வேண்டும். அது அரசியலை மதமாக்காத, கடந்தகாலத்தை கற்றுக்கொள்வதற்காக மட்மே பேசுகின்ற ஒரு தலைமுறையாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் ஒரு விடயம் ஆதரிக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்ட என்பதற்காக, அதனை எல்லாக் காலத்திலும் காவித்திரிய வேண்டுமென்பதல்ல. நிகழ்காலத்தின் தேவைகளோடு ஒரு விடயம் பொருந்தவில்லையாயின், அது பயனற்றது. ஏனெனில் நிகழ்காலம் என்பது மட்டுமே உண்மையானது. ஏனெனில் அது மட்டுமே நம்மிடமுண்டு. நம்மிடமுள்ள ஒன்றிலிருந்துதான் எதிர்காலத்தை நோக்க வேண்டும். இப்போதும் சிலர் வட்டுக்கோட்டை தீர்மானம் தொடர்பில் பேசுவதுண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானமென்பது, 1976ஆம் ஆண்டில், அன்றைய தலைமுறை முன்வைத்த விவகாரம். அதனை கேள்விகளின்றி பிறிதொரு தலைமுறை எதற்காக சுமக்க வேண்டும்? வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்த செல்வநாயகம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஒரு தெளிவான புரிதலுடன் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. அடையும் வழிதெரியாமலேயே தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எப்படி அடையப் போகின்றீர்களென்னும் கேள்விக்கு செல்வநாயகம் வழங்கிய பதில், நாங்கள் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றோம், அவர்கள் எங்களை வெளியில் வீசிவிடுவார்கள். ஆனால் நடந்ததோ வேறு. செல்வநாயகத்தின் தவறால், ஒரு தலைமுறையே அழிந்து போயிருக்கின்றது ஆனால் செல்வநாயகத்தின் குடும்ப வழித்தோன்றல்களோ நிலத்திலேயே இல்லை. ஓரு தலைமுறை தெளிவான வேலைத்திட்டமற்று முன்வைத்த கோரிக்கைளை, எதற்காக பிறிதொரு தலைமுறை சுமக்க வேண்டும்? அரசியலை இந்த அப்படையில்தான் இளைய தலைமுறை புரிந்துகொள்ள வேண்டும். அவர் கூறினார் – இவர் கூறினார் என்பதற்காகவெல்லாம் கடந்தகாலத்தின் நிலைப்பாடுகளை நிகழ்காலத்தில் சுமக்க முற்படக் கூடாது. யுத்தமில்லாத கடந்த பதின்மூன்று வருடங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் தெளிவாகும். அதாவது, அரசியல் தீர்வு தொடர்பில் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை. தமிழர்கள் என்னதான் சத்தங்களை எழுப்பினாலும் கூட. ஒரு கட்டத்திற்கு மேல் போக முடியாதென்னும் நிலைமையே காணப்படுகின்றது. ஏன் முடியவில்லையென்னும் கேள்விக்கு சிலரிடம் இருக்கும் ரெடிமெட் பதில், இந்தியாவிற்கு கரிசனையில்லை. இந்தியாவிற்கு கரிசனையில்லையென்றால், இன்னொன்றை தெரிவு செய்து கொண்டு, தமிழர்கள் முன்னோக்கி செல்வதில் என்ன தடையுண்டு? இந்தியா அதன் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்த பின்னர், இந்தியாவிற்கு கரிசனையில்லையென்று கூறுவதில் என்ன பொருளுண்டு. 1987இல் இந்தியா காண்பித்த கரிசனை ஏன் பிற்காலத்தில் இல்லாமல் போனது? இதற்கு யார் காரணம்? இந்தியாவின் கரிசனை தொடர்பில் பேசுபவர்கள், மறுபுறம் அதற்கான காரணங்களை முன்வைப்பதில்லை. இன்றைய சூழலில் இந்தியா ஆகக் குறைந்தது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் கரிசனையுடன் இருப்பதே பெரிய விடயம். இந்தியாவின் ஆகக் குறைந்த கரிசனையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாமென்றுதான் தமிழ் தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் அதுவுமில்லையென்றால், தமிழர்களின் நிலைமை வேலியால் விழுந்தவரை மாடு ஏறிமிதித்த கதையாகிவிடலாம். இந்தியாவின் இந்தக் கரிசனை கூட தொடருமென்றும் எதிர்பார்க்க முடியாது. இருபது வருடங்கள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேறின. அமெரிக்க ஆதரவு ஆப்கான் ஜனாதிபதி நாட்விட்டு ஓடிவிட்டார். ஆப்கான் மீண்டும் தலிபான்கள் வசமானது. இது தொடர்பில் ஊடவியலாளர் ஒருவர் அமெரிக்க ஜனதிபதி பைடனை கேட்கின்றார். மீண்டும் தலிபான்களிடம் ஆப்கானிய மக்கள் சிக்குப்பட்டுவிட்டார்களே! அதற்கு பைடனின் பதில் – ஆப்கானியர்களுக்கே, ஆப்கானிஸ்தானில் அக்கறையில்லாவிட்டால், அதற்கு நாம் என்ன செய்வது? – ஆப்கானியர்களுக்காக அமெரிக்க படைகள் செத்துக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களின் நிலைமையும் இப்படித்தான். விடயங்களை தமிழர்கள் கையாளவிட்டால், இப்போதுள்ள ஓரளவு கரிசனையையும் ஏனையர்கள் கைவிட்டுவிடுவார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து சிந்தித்தால் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் கையறு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் பத்து வருடங்களுக்குள் விடயங்களை கையாளாவிட்டால், 13வது திருத்தச்சட்டம் கூட, தமிழர்களுக்கு இல்லாமல் போகலாம். அது அரசியலமைப்பில் இருக்கும், ஆனால், அது அவ்வப்போது உச்சரித்துவிட்டுப் போகும் விடயமாகிவிடலாம். இறுதியில் தமிழர்களுக்கு எதுவுமே இல்லாமல் போகும். தமிழ் தேசிய அரசியலென்பது, இறுதியில், நல்லூர் கோவிலடி அரட்டையாக மாறிப்போகும். ஆண்டுகொரு, ஆர்ப்பாட்டம், சிவில் சமூக அறிக்கையுடன் அரசியல் சுருங்கிப்போகும். http://www.samakalam.com/இன்னும்-பத்து-வருடங்களின/
-
தமிழ் புலம்பெயர் சமூகம் (டயஸ்போறா) என்ன செய்யலாம்? - யதீந்திரா தமிழர் அரசியலில் புலம்பெயர் சமூகம் பிரிக்க முடியாதவொரு அங்கம். இதனை எவராலும் சீர்குலைக்க முடியாது. சீர்குலைக்கவும் அனுமதிக்கக் கூடாது. 2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலில் பிரதான குரலானது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சர்வதேச குரலாக மாறியது. எனினும் புலம்பெயர் சமூகத்தின் உழைப்பு எதிர்பார்த்த பலனை தரவில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள், சில தனிநபர்கள் மீதான அமெரிக்க தடைகள், தற்போது முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்சக்கள் மீதான கனடாவின் தடை – இவற்றை தவிர குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் எவையும் கடந்த 13 வருடங்களில் நிகழவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால், புலம்பெயர் சமூகம் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இதிலுள்ள அடிப்படையான சவால் தாயகத்தின் நிலைமையாகும். தாயகமென்று ஒன்று இருந்தால்தான் புலம்பெயர் சமூகம் செயற்பட முடியும். தாயகத்தின் பிரதான சவால்கள் இரண்டு. ஒன்று, மிகவும் பலவீனமான அரசியல் தலைமைத்துவம். அதாவது, கடந்த 75 வருடகால தமிழர் அரசியல் வரலாற்றில் இப்போது இருப்பது போன்றதொரு பலவீனமான அரசியல் தலைமைத்துவம் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. சிதறிச் செல்லுவோரை ஒன்றுதிரட்டி, வழிநடத்தக் கூடிய ஆளுமைமிக்க நபர்(கள்) தமிழ் சமூகத்திலில்லை. கடந்த பதின்மூன்று வருடகால அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கினால், எந்தளவிற்கு தமிழ் தேசிய அரசியல் சிதைந்து, சீரழிந்திருக்கின்றது என்பதை காணலாம். 2009இல் யுத்தம் முடிவுற்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே, தமிழ் மக்களின் ஒரேயொரு தாயக தலைமையாக இருந்தது. ஆனால் இன்றோ பத்து கட்சிகள் தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றன. இப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சியும் வெளியேறிவிட்டது. இவ்வாறு தாயக அரசியல் சிதைந்து போனமைக்கு சிலரின் சுயநலப்போக்கை ஒரு காரணமாக கூறிமுடியுமனாலும் கூட, அனைவரையும் அரவணைத்து, வழிநடத்தக் கூடிய தனிநபர் ஆளுமைகள் இல்லைமையே பிரதான காரணமாகும். ஏனெனில் ஒரு அரசியல் இயக்கத்தில் பல்வேறு வகையானவர்கள் வந்து சேர்வார்கள். அவர்களில் சிலர், அரசியலை தங்களின் சுயநலத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்த வேண்டுமென்று எண்ணுபவர்களாக இருக்கலாம், ஆனால், அவ்வாறானவர்களின் ஆதிக்கத்திற்குள் ஒரு இயக்கம் வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டுமானால், அது நான் மேலே குறிப்பிட்டவாறான ஆளுமைமிக்க தலைவர்களில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஆளுமைகளுக்கு பஞ்சம் காணப்படுகின்றது அதே வேளை அண்மைக்காலத்தில் அவ்வாறானதொரு ஆளுமை வெளித்தெரிவதற்கான வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில் ஒரு கூட்டுத் தலைமை ஒன்றின் மூலம்தான் அரசியலை முன்னெடுக்க முடியும். ஆனால் அதிலும் பிரச்சினைகள் ஏராளம். இவ்வாறானதொரு சூழலில் தாயக அரசியலை பலப்படுத்த வேண்டிய பணியும் புலம்பெயர் சமூகத்திற்குண்டு. இதற்கு முன்னரும் சில சந்தர்பங்களில் இந்தக் பத்தியில் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றேன். அதாவது, புலம்பெயர் சமூகம் தாயக அரசியல் கட்சிகள் மத்தியில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. விடயங்களின் அடிப்படையில்தான் தாயக அரசியலில் தலையீடு செய்ய வேண்டும். அவ்வாறில்லாது, கட்சியடிப்படையில் சில நிலைப்பாடுகளை முன்னெடுக்கும் போது, அது புலம்பெயர் சூழலிலும் பிளவுகளை ஏற்படுத்தும். ஏற்படுத்தியுமிருக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே சில புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் தவறிழைத்திருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்நிலையிலிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியை சிலர் ஆதரித்தனர். அவர்களை பலப்படுத்த முயற்சித்தனர். அதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை முன்னிலைப்படுத்துவதற்கு சிலர் முன்னுரிமையளித்தனர். விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய அயுதப் போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் பல முரண்பாடுகளிருந்ததும், ஏனைய அமைப்புக்களை விடுதலைப் புலிகள் தடைசெய்தமையும், மோதலில் ஈடுபட்டதும், பலர் உயிரிழந்ததும் வரலாறு. ஆனால் பிற்காலத்தில் அதே அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட விடுதலைப் புலிகள் அமைப்பு பின்நிற்கவில்லை. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய யதார்த்தத்தை புலிகளாலும் நிராகரிக்க முடியவில்லை. இந்த பின்னணியில் சிந்தித்தால், 2009இற்கு பின்னரான சூழலில் அனைத்து தரப்புக்களையும் அரவணைத்து, முன்நோக்கி பயணிப்பதில் புலம்பெயர் சமூகம்தான் முன்னணி வகித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் சில கட்சிகளை, சில நபர்களை முன்னிலைப்படுத்தியதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்கள் சாதித்தது என்ன? எதுவுமில்லை. கடந்த பதின்மூன்று வருடங்களில் தாயக அரசியல் பலவீனமடைந்திருக்கின்றதே தவிர பலமடையவில்லை. அது பலமடையவில்லையாயின், அந்தப் பலவீனத்திற்கு கட்சிகளை, தனிநபர்களை ஆதரித்த புலம்பெயர் அமைப்புக்களுமல்லவா பொறுப்பேற்ப வேண்டும். தமிழர் தாயகத்தில், அரச ஆதரவு கட்சிகளின் செல்வாக்கு முன்னரைவிடவும் அதிகரித்திருக்கின்றது. தற்போது தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் நான்கு அணிகளாக போட்டியிடுகின்றன. இந்த நிலைமையானது, அரசாங்க கட்சிகளை பொறுத்தவரையில், பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகலாம். புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு விடயத்தை குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு அரசின் நகர்வுகளுக்கு எதிராகவே புலம்பெயர் அமைப்புக்கள் போராடிவருகின்றன. ஒரு அரசிற்கு இருக்கின்ற எந்தவொரு வாய்ப்பும் புலம்பெயர் சமூகத்திற்கில்லை. ஆனால் ஜரோப்பிய நிலத்தில் நின்றவாறு, மேற்குலகின் மனச்சாட்சியை உலுப்பும் கேள்விகளை முன்வைக்கும் வல்லமை புலம்பெயர் சமூகத்திற்குண்டு. டயஸ்போறா லொபியென்பது இந்த அடிப்படையை கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால் என்னதான் நீதி பற்றியும் ஜனநாயக விழுமியங்கள் தொடர்பில் பேசினாலும் கூட, சர்வதேச நகர்வுகளை தீர்மானிப்பது நீதிக்கான தீர்மானங்கள் அல்ல – மாறாக, பலம்பொருந்திய நாடுகளின் நலன்கள் மட்டுமே இறுதியில் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. அதனை கருத்தில் கொள்ளாமல் மேற்குலகின் – உதாரணமாக கனடிய தடைகளை கருத்தில் கொண்டு திருப்திப்பட்டுக் கொண்டால், அது நமக்கு பயன்படாது. இது பல்துருவ உலகம். உலக அதிகார கட்டமைப்புக்கள் பெரியளவில் மாறிவிட்டன. இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலையில் அமெரிக்காவுமில்லை. இன்றைய உலக நகர்வுகளில் பிராந்தியங்கள் பிரதான செல்வாக்குச் செலுத்துகின்றன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் யதார்தங்களை புறம்தள்ளி ஒரு இம்மியளவு கூட நம்மால், நகர முடியாது. இந்த பின்புலத்தில் இந்தியாவின் கரிசனைகள், நிலைப்பாடுகள் தவிர்க்கவே முடியாதவை. தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரம் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. அதே வேளை, அதன் அடிப்படையாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் அழுத்திவருகின்றது. ஒரு பிராந்திய சக்தியும் உடனடி அயல்நாடுமான இந்தியா, இருதரப்பு உடன்பாட்டை கொண்டிருக்கும் போது, அதில் எந்தவொரு வெளித்தரப்பும் தலையீடு செய்ய முடியாது. மேலும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சில விடயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, இந்தோ-பசுபிக் மூலோபயத்தில் இந்தியா ஒரு வலுவான பங்காளி. மேலும் இந்தியா பொருளாதா ரீதியிலும் வேகமாக வளர்ச்சிடைந்துவரும் ஒரு நாடு. அண்மையில் முன்னாள் கலானிய ஆட்சியாளரான பிரித்தானிவையே இந்தியா பொருளாதார ரீதியில் பின்னுக்கு தள்ளியிருந்தது. இந்தியாவின் சர்வதேச முக்கியத்துவம் முன்னரைவிடவும் வேகமாக பெருகிவருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கை தளமாகக் கொண்டு உறுதியுடன் செயற்படும் அதே வேளை, இந்த பிராந்திய யதார்தங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். தற்போது, மீளவும் கொழும்பு அரசியல் தீர்வு தொடர்பில் பேசிவருகின்றது. ரணில் விக்கிரமசிங்க அதில் எந்தளவு தூரம் உண்மையாக இருப்பார் – உறுதியாக இருப்பார் என்பது நமது பிரச்சினையில்லை. அது கொழும்பின் – சிங்கள அரசியல் சமூகத்தின் பிரச்சினை. ஆனால் ரணில் கையிலெடுத்திருக்கும் விடயம் சிக்கலானது. ரணில் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கூறுகின்றார். அதனையே இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தற்போது அதனை அமுல்படுத்த விடமாட்டோமென்று கூறி, சிங்கள கடும்போக்கு தரப்புக்களும் பௌத்த சங்கங்களும் வீதிக்கு வருகின்றன. 13வது திருத்தச்சட்டத்தின் நகலை கொழுத்தி எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவோ எவர் எதிர்த்தாலும் நான் சில விடயங்களை செய்யத்தான் போகின்றேன் என்கின்றார். ரணில் விரைவில் இந்தியா செல்லவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, ரணில், 13 தொடர்பில் நிச்சயம் பேசுவார். உத்தியோகபூர்வமாக அறிவிக்கவும் இடமுண்டு. இந்த விடயங்களில் புலம்பெயர் சமூகம் அசமந்தமாக இருக்கக் கூடாது. சிலர் (தாயகத்திலும் புலத்திலும்) கூறுவது போன்று இது சாதாரண நகர்வல்ல. இது ஒரு மூலோபாய நகர்வு. நாங்கள் எப்போதோ, 13வது திருத்தத்தை நிராகரித்துவிட்டோம் – அது பற்றி இப்போது பேச வேண்டியதில்லையென்று சாதாரணமாக கூறிவிட்டுச் செல்லக் கூடிய விடயமல்ல. இது வெறுமனே 13பற்றியதல்ல. மாறாக இது ஒரு புவிசார் அரசியல் விவகாரம். இந்த விடயங்கள் தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்கள் நிதானமாகவும், சகிப்புணர்வோடும் விடயங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டும். 13இற்கு வெளியிடப்படும் எதிர்ப்பையே சர்வதேச அரங்குகளில் அரசியல் லொபியாக முன்வைக்க வேண்டும். 13இனை அமுல்படுத்த ரணிலால் முடியாமல் போகும் இடம்தான், புலம்பெயர் சமூகத்தின் அடுத்த கட்ட லொபிக்கான அஸ்திபாரமாகும். இந்த லொபியை பலமாக முன்னெடுப்பதற்கு புலம்பெயர் சமூகம் தன்னை தயார் செய்ய வேண்டும். நான் மேலே குறிப்பிட்டவாறு, பிளவுண்டு செல்லும் தாயக கட்சிகள் மீது முதலிட்டுக் கொண்டிருக்காமல், ஒரு புலம்பெயர் சமூகமாக திரட்சிபெற வேண்டும். இதற்கு அறிவூட்டக் கூடிய தனிநபர்களையம் அமைப்புக்களையும் (இரு இடங்களிலும்) அணிதிரட்ட வேண்டும். குறிப்பாக, புலம்பெயர் சமூகத்தின் லொபி அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்க வேண்டும். வேறு நாடுகளில் என்னதான் குரல்களை எழுப்பினாலும் அது பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தாது. உலக ஒழுங்கினை தீர்மானிக்கும் மேற்குலக சக்தி அமெரிக்கா மட்டும்தான். அங்குதான் புலம்பெயர் லொபி மையம்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதுடில்லியுடனும் ஊடாடுவது இலகுவாகும். ஆனால் அதற்கு சில தகுதிநிலைகள் அவசியம். புலம்பெயர் செயற்பாடுகளுக்கு தலைமையேற்பவர்கள் தங்களை தாராளவாத அரசியல் விழுமியங்களுக்குரியவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம்மால், அமெரிக்க உலகில் அசைய முடியாது. http://www.samakalam.com/தமிழ்-புலம்பெயர்-சமூகம்/
-
சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்? யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு கோரிக்கையே முன்வைக்கப்பட்டது. இது அரசியலில் துனிப்புல் மேயும் பிரச்சினை. தமிழ்ச் சூழலில் தங்களை படித்தவர்களென்று கருதிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கே விடயங்கள் சரியாக விளங்காத போது, பல்கலைக்கழக மாணவர்களால் எவ்வாறு இந்த விடயங்களை புரிந்துகொள்ள முடியும்? பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூறுவோரும் கூட அவர்களை தவறாக வழிநடத்தியிருக்கலாம். இவ்வாறான பேரணிகளின் போது முன்வைக்கப்படும் கோசங்கள், இறுதியில் அந்த பேரணிகளின் பெறுமதியையே இல்லாமலாக்கிவிடுகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களது உழைப்பு சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையால் பயனற்றுப்போனது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டியென்னும் பெயரில் இடம்பெற்ற பேரணிக்கும் இதுதான் நடந்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான பேரணிகள் இறுதியில் விழலுக்கிறைத்த நீராகவே கடந்துபோகும். அவைகளை முன்னெடுப்பவர்கள் சரியானவர்களால் வழிகாட்டப்படவில்லையாயின், தொடர்ந்தும் இதுதான் கதையாக இருக்கும். சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கையானது, அது பற்றி பேசுபவர்களின் சொந்த புத்தியிலிருந்து வரவில்லை. அது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கோரிக்கை. எப்போது கோரிக்கைகள் இறக்குமதி செய்யப்படுகின்றனவோ, அப்போது அதன் மீதான அறிவுரீதியான பார்வை இல்லாமல் போய்விடும். இந்த கட்டுரை, சர்வஜன வாக்கெடுப்பு கோரிக்கையை அறிவுரீதியாக ஆராய முற்படுகின்றது. ஆங்கிலத்தில் ரிபரெண்டம் என்று அழைக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பானது, ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக மக்களின் அபிப்பிராயத்தை கோரும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சட்டபூர்வமான நடவடிக்கையாகும். இதனை ஜனநாயகத்திற்குள் ஜனநாயகமென்றும் அழைப்பர். இதனை ஒரு நாட்டின் அரசாங்கமே நடத்தமுடியும். அதாவது, ரிபரெண்டம் என்பது சட்டரீதியானது. சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் எந்தவொரு மக்கள் அப்பிராய வாக்கெடுப்புக்களும் ரிபரெண்டமென்னும் வரையறைக்குள் அடங்காது. சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் வாக்கெடுப்புக்கள் Public Vote என்னும் ஆங்கிலச் சொல்லின் வழியாகவே நோக்கப்படும். அதாவது, மக்கள் தங்களின் அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கின்றனர் ஆனால் அதற்கு சட்டரீதியான வலு இல்லை. இலங்கையின் வரலாற்றில் ரிபரெண்டம் என்னும் சொல் நமக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் அறிமுகமாகியிருக்கின்றது. ஒன்று, 1982இல், ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தின் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். தேர்தலை நடத்தினால், நாடு நக்சலைட்டுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் ஆபத்துண்டதென்னும், காரணத்தை முன்வைத்தே, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். ஜே.ஆரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக, 54 வீதமான மக்கள் வாக்களித்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், ரிபரெண்டம் நமக்கு இரண்டாவது தடவையாக அறிமுகமானது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டுமென்னும் தமிழர்கள் அரசியல் கோரிக்கையை சட்டரீதியாக அங்கீகரிப்பதாயின், கிழக்கு மாகாணத்தில், ரிபரெண்டம் நடத்தப்பட வேண்டுமென்று, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அடிப்படையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, செப்டம்பர் 1988இல், வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக பிரகடணம் செய்தார். நொவம்பர் மாதத்தில், இணைந்த வட-கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் இடம்பெற்றது. வரதராஜபெருமாள் முதலமைச்சரானார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, டிசம்பர் 31, 1988இல் அல்லது அதற்கு முற்பதாக, கிழக்கு மாகாணத்தில் ரிபரெண்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அது நடத்தப்படவில்லை. ஒப்பந்தத்தின்படி, ரிபரெண்டத்தை தனது சுயவிருப்பின் பெயரில் ஜனாதிபதி பிற்போட முடியும். அவ்வாறானதொரு ரிபரெண்டம் இடம்பெறாமலேயே வடக்கு கிழக்கு மாகாணங்கள் 18 வருடங்களாக ஒரு நிர்வாக அலகாக இருந்தது. 2006இல், ஜே.வி.பி இணைப்பிற்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்து, இணைப்பின் சட்டபூர்வ தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனி நிர்வாக அலகாகின. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி கிழக்கு மாகாணத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு இடம்பெற்றால,; அது ரிபரெண்டம் என்றே அழைக்கப்படும், ஏனெனில், அது சட்டரீதியானது. இதனை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு இப்போதும் உரிமையுண்டு. ஆனால் இதிலுள்ள நடைமுறைச் சிக்கல், அவ்வாறானதொரு ரிபரெண்டம் இடம்பெற்றால் கிழக்கில் தமிழர்கள் தோல்வியடைவார்கள். ஏனெனில் அதனை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஆதரிக்கப்போவதில்லை. இன்றைய சூழலில் தமிழர்களின் ஒரு பகுதியினர் ஆதரிப்பார்களா என்னும் கேள்வியுமுண்டு. ஆனால் ஒரு வேளை 1988இல், அவ்வாறானதொரு ரிபரெண்டம் இடம்பெற்றிருந்தால், தமிழர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பிருந்தது. ஏனெனில் அன்றிருந்த சூழலில், முஸ்லிம்கள் அதனை எதிர்ப்பதற்கான வாய்ப்பு பெருமெடுப்பில் இருந்திருக்கவில்லை. இன்று சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் பேசுவது முற்றிலும் வேறானது. ஏனெனில் இது அடிப்படையில், தமிழ் மக்கள் தங்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கான சுதந்திர வாக்கெடுப்பு பற்றியது. ஆரம்பத்தில் இது பற்றி உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த அரசாங்கம் மட்டுமே பேசிவந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்கும் சில புலம்பெயர் அமைப்புக்களும், இப்போது பேசுகின்றன. இவர்களது செல்வாக்கின் காரணமாகவே வடக்கிலும் சிலர் இது பற்றி பேசிவருகின்றனர். இவர்களது செல்வாக்கிற்குட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் இதனை அவ்வப்போது உச்சரிக்கின்றனர். ஒன்றை விரும்புவது என்பது வேறு, அதனை சரியாக புரிந்துகொண்டு விரும்புவது என்பது வேறு. ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ள முற்படும் போது, விருப்பங்கள் இரண்டாம்பட்சமாகி, யதார்த்தங்களே முன்னுரிமைபெறும். யதார்த்தங்கள் ஒரு வேளை கசப்பானதாக இருந்தாலும் கூட, அதுதான் இறுதியில் வெற்றிபெறும். தமிழ் சூழலில் பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் பேசுவோர் முதலில் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, நீங்கள் யாரிடம் அந்த வாக்கெடுப்பை கோருகின்றீர்கள்? ஒரு வாக்கெடுப்பை அரசாங்கம் மட்டுமே நடத்த முடியும். அவ்வாறாயின் சிறிலங்கா அரசாங்கத்திடமா நீங்கள் வாக்கெடுப்பை கோருகின்றீர்கள்? 13வது திருத்தச்சட்டத்தையே முழுமையாக அமுல்படுத்த முடியாதவொரு சூழலில் ரிபரெண்டம் ஒன்றை கொழும்பிடம் எவ்வாறு கோரமுடியும்? அடுத்தது பிறிதொரு நாடு தமிழர்களுக்காக ரிபரெண்டத்தை கோர முடியுமா? அதற்கான வாய்;ப்புக்கள் என்ன? நிச்சயமாக எந்தவொரு வாய்ப்பும் இல்லை. உண்மையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கோரப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான ரிபரெண்டம் அரிதானதொரு நிகழ்வாகும். ஏனெனில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ரிபரெண்டம் உள்ளடக்கப்பட்டதை, அப்போது, முக்கிய இந்திய தலைவராக இருந்த வி.பி.சிங் விமர்சித்திருந்தார். இந்தியாவிலேயே ரிபரெண்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளாத போது, எவ்வாறு பிறிதொரு நாட்டில் அதனை நீங்கள் கோரலாமென்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார். எனினும் ஜனநாயக ரீதியில் கிழக்கு வடக்குடன் இணைவதற்கான ஏற்பாட்டை ராஜீவ் காந்தி ஆதரித்திருந்தார். ராஜீவ் கொலையை தொடர்ந்து, வி.பி.சிங்க இந்தியாவின் பிரதமரானார். வி.பி.சிங் கூறியது முற்றிலும் சரியானது. ஏனெனில், காஸ்மீரின் சுயநிர்ணய உரிமைக்கான ரிபரெண்டத்தை 1949இலிருந்து இந்தியா எதிர்த்துவருகின்றது. ஜ.நா பரிந்துரைத்தும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. காஸ்மீர் சுயநிர்ணய கோரிக்கையை பாக்கிஸ்தானே தூண்டிவருகின்றது. பிராந்திய அரசியல் பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழர்களுக்கான ரிபரெண்டக் கோரிக்கையை இந்தியாவினால் ஆதரிக்கவே முடியாது. இந்த பின்புலத்தில் நோக்கினால், இந்த விடயத்தில், பிராந்தியரீதியான ஆதரவும் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. அடுத்த சர்வதேச ரீதியானது. சர்வதேச ரீதியாக நோக்கினால், இதனை இரண்டு வகையில் நோக்கலாம் – ஒன்று, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ரிபரெண்டங்கள், இரண்டு, அங்கீகரிக்கப்படாத அபிப்பிராய வாக்கெடுப்புக்கள். ஊதாரணமாக, கேட்டலோனியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ரிபரெண்டம் அல்ல. தமிழ் சூழலில் விடயங்கள் தவறாக முன்வைக்கப்படுகின்றன. ரிபரெண்டம் தொடர்பில் பேசுவோர் விடயங்களை நேர்மையாக முன்வைப்பதில்லை. ஒரு வேளை அவர்களுக்கு விடயங்கள் தெரியாமலும் இருக்கலாம். உதாரணமாக கேட்லோனியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பு தொடர்பில் தமிழ்ச் சூழலில் சிலர் பேசுவதுண்டு. இந்த விடயங்கள் அனைத்துமே புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றால்தான் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை அரைகுiறாக விளங்கிக்கொண்டு நமது சூழலிலும் சிலர் பேசுவதுண்டு. கேட்டலோனியாவின் பிரச்சினை வேறு ஈழத் தமிழர்களின் பிரச்சினை வேறு. ஸ்பெயின் 17 சுயாதீன பிராந்தியங்களை கொண்டிருக்கின்றது. இதல் ஒரு பிராந்தியம்தான் கேட்டலோனியா. உதாரணமாக இந்தியாவில் தமிழ் நாடு இருப்பது போன்று. ஸ்பெயினின், ஏனைய பராந்தியங்களோடு ஒப்பிட்டால், கேட்டலோனியா, பொருளாதார ரீதியில் வளமான பகுதியாக இருக்கின்றது. இந்த பின்புலத்தில், கேட்டலோனியாவை ஒரு தனிநாடாக்க வேண்டுமென்னும் கோரிக்கை அங்குள்ள அரசியல் சமூகத்திடமுண்டு. இந்த அடிப்படையில்தான், 2017இல், கேட்டலோனியா பாராளுமன்றத்தில், சுயநிர்ணயத்திற்கான சுதந்திர வாக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையே நம்மவர்கள் சிலர் கேட்டலோனியாவிற்கான ரிபரெண்டமென்று கூறினர். உண்மையில் இது ரிபரெண்டம் அல்ல ஏனெனில், ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பை நிராகரித்துவிட்டது. எனவே கேட்டலோனியவிற்கான வாக்கெடுப்பை, கேட்டலோனிய பாராளுமன்றம் ரிபிரெண்டமென்று கூறியபோதிலும் கூட, அதனை ஸ்பெயின் நிராகரித்துவிட்டது. இந்த அனுபவத்திலிருந்து ஒரு விடயத்தை நமம்வர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதாக இருந்தால் கூட முதலில், ஒப்பீட்டடிப்படையில், சுயாதீன நிர்வாக கட்டமைப்பு கட்டாயமானது. அந்த நிர்வாக கட்டமைப்பு ஒப்பீட்டடிப்படையில் பலமானதாகவும் இருக்க வேண்டும். அடுத்தது, அந்த நிர்வாக கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் வாக்கெடுப்பானது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இவைகளை ஈழத் தமிழர்களால் எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும்? இப்போது ரிபரெண்டமென்று உச்சரிப்பவாகளால் இதனை எவ்வாறு முன்னெடுக்க முடியும்? இன்னொரு முக்கியமான விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சில புலம்பெயர் அமைப்புக்கள் மேற்குலக அனுபவங்களிலிருந்து மட்டுமே விடயங்களை நோக்குகின்றன. அவர்களிடம் பிராந்திய அரசியல் சுழல் தொடர்பில் தெளிவான புரிதல்கள் இருப்பதாக தெரியவில்லை. இந்த தவறிலிருந்தும்தான், ரிபரெண்டம் தொடர்பான தவறான புரிதல்கள் எழுகின்றன. ஜரோப்பிய அரசியல் பின்புலத்தில் இடம்பெறும் விடயங்களை தெற்காசிய அரசியல் சூழலுக்குள் பயன்படுத்த முடியாது. தெற்காசிய அனுபவங்களிலிருந்துதான் விடயங்களை நோக்க வேண்டும். ஜரோப்பிய சூழலில் பல ரிபரெண்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கிழக்குதிமோர், குர்திஸ், கொசோவா, தென்சூடான் -இவ்வாறு பல நாடுகளில் ரிபரெண்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அவற்றின் அரசியல் பின்புலமும், பிராந்திய உலகளாவிய அரசியல் தாக்கங்களும் முற்றிலும் வேறானது. அவற்றை ஒரு அனுபவமாக ஈழத் தமிழர்கள் கொள்ள முடியாது. மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்துமே ஒரு அதிகார கட்டமைப்பை கொண்டே சுயநிர்ணயத்திற்கான ரிபரெண்டத்தை கோரின. ஆனால் நமது சூழலில் சிலரால் கோரப்படும் ரிபரெண்டம் வெறுங்கை ரிபரெண்டம். எதுமில்லை ஆனால் எல்லாமும் இருப்பதான கற்பனையிலிருந்து சிந்திப்பது. அடிப்படையில் இது ஒரு அரசியல் நோய். இந்த நோய்க்கு அறிவுள்ள தரப்பு மருந்திட வேண்டும். இல்லாவிட்டால் இந்த நோயை அனைவரையும் தொற்றிக்கொள்ளும். http://www.samakalam.com/சர்வஜன-வாக்கெடுப்பு-தொடர/
-
தேசியமென்னும் வெற்றுக் கூடு – அன்றும் இன்றும் ? - யதீந்திரா அரசியலில் ஒரு கூற்றுண்டு. அதாவது, பேருந்தை தவறவிடுதல். வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, அதனை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்தக் கூற்றின் பொருளாகும். தமிழில் இதனை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுதல் எனலாம். ஒரு மேற்குலக நாடொன்றின், தூதுவருடனான கலந்துரையாடலொன்றின் போது, இதனை நான் குறிப்பிட்டேன், அவர் திரும்பக் கூறினார், நீங்கள் பேருந்தை தவறவிட்டது மட்டுமல்ல, பேருந்திலிருந்து பாய்ந்துமிருக்கின்றீர்கள். திபெத் ஆண்மீகத் தலைவர் தலைலாமா கூறுவார். அதிஸ்ட தேவதை எப்போதாவதுதான் கதவை தட்டுவார். அவர் கதவை தட்டும்போது தாமதிக்காமல் கைகை பிடித்து, உள்ளுக்குள் இழுத்துக்கொள்ள வேண்டும். அதிஸ்ட தேவை கதவை தட்டும்போது, சீ போ, என்று கூறி துரத்திவிட்டால், அதன் பின்னர் அவர் ஒருபோதும் கதவை தட்டப் போவதில்லை. அரசியலில் வாய்ப்புக்கள் எல்லா சந்தர்பங்களிலும் கிடைப்பதில்லை. ஒரு அரசியல் சமூகம் என்னதான் திறமைகள் பொருந்தியதாக இருந்தாலும் கூட, அதனிடம் தியாகங்களும் அர்ப்பணிப்புமிருந்தாலும் கூட, வாய்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், அந்தச் சமூதாயத்தின் தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் இறுதியில் விழலுக்கு இறைத்த நீராகும். இந்த அனுபவத்திற்கு நாம் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. நாம்தான் இதற்கு மிகவும் சிறந்த உதாரணம். பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரபாகரன் இருக்கின்றாரென்று ஒருவர் கூற, அதனை முன்வைத்து விவாதம் இடம்பெறுகின்றதென்றால், விதியே, இந்த ஈழத் தமிழினத்தை என்ன செய்யப் போகின்றாய் என்று மனம் நோவதை தவிர, இந்த சமூதாயத்தில் வேறு எதனைச் செய்ய முடியும்? ‘முறிந்த பiனை’ நூலின் முகப்பில் ஒரு குறிப்புண்டு. அதாவது, புத்தியுள்ள ஒவ்வொரு மணிதனும் எரிகின்ற தேசத்தை விட்டுவிட்டு, ஆகக் குறைந்த நன்றியுணர்வுகூட இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றான். இன்று தமிழ் தேசியமென்னும் பெயரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குத்தாட்ட அரசியலை எண்ணினால், தமிழ் சமூகத்தில் எஞ்சியுள்ள புத்திமிக்க சமூகமும் வீழ்சியடைந்து செல்கின்றதா என்னும் கேள்வியையே, நாம், நமக்குள் கேட்க வேண்டியிருக்கின்றது. மார்டின் லூதர்கிங் கூறுவது போன்று இங்கு பிரச்சினை தீயவர்கள் அல்லர், ஆனால், அந்தத் தீயவர்களின் செயல்களை கண்டும்காணமால் இருக்கின்றார்களே நல்லவர்கள், அவர்கள்தான் நமது தலைமுறையின் பிரச்சினையாகும். விடுதலைப் புலிகள் அமைப்பு, நமது காலத்தில் நம்மால் ஆதரிக்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் என்பதில் பலராலும் மாறுபட முடியாது. ஏனெனில் அதுதான் உண்மை. இந்தக் கட்டுரையாளர் உட்பட, தற்போது தமிழ் சூழலில் கருத்துருவாக்கங்களில் முன்னணி வகிக்கும் பலரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் ஒரு வீழ்சியேற்பட்ட பின்னர், சரி பிழைகளை நிறுத்துப் பார்ப்பதுதான் அறிவுக்கு முன்னுரிமையளிக்கும் அல்லது படித்தவர்களென்று கூறப்படும் சமூகமொன்றின் தலையாய பணியாகும். ஆனால் அது நமது சமூகத்தில் நிகழவில்லை. நிகழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இன்று பதின்மூன்று வருடங்களுக்கு பின்னரும் கூட பரபரப்பில் காலத்தை விரயம் செய்ய வேண்டியேற்பட்டிருக்காது. ஈழத் தமிழ் சமூகத்தின் – படித்தவர்களென்னும் இறுமாப்பு, அதன் கண்முன்னாலேயே சீன்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. அறிவுள்ளவர்கள் என்போர் அனைவரும் வாய் மூடிக் கிடக்கின்றனர். அறிவை ஆயுதமாக்கிக் கொள்ள முடியாத சமூகமொன்றில், அறிவின் பெறுமதியென்ன என்பது இந்தக் கட்டுரையாளருக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கூறுங்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள். இப்படியொரு கூற்றுண்டு. கிடத்தட்ட இப்படியானதொரு நிலையில்தான், இன்றைய தமிழ் தேசிய அரசியல் இருக்கின்றது. முகநூல், வட்ஸ்அப், யுடியூப் இல்லாவிட்டால் தமிழ் தேசியமிலை. முன்னர் செயலால் தீர்மானிக்கப்பட்ட தமிழ் தேசிய அரசியல் இப்போது, சைபர் வெளியால் தீர்மானிக்கப்படுகின்றது. ஈஸி கேஸ் போன்று, ஈஸி தேசியம். ஒரு முகநூல் கணக்கு அல்லது யுடியூப் இருந்தால் தேசியவாதியாகிவிடலாம். ஆனால் நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்த்தால் எத்தனை தியாகங்கள், எத்தனை அர்பணிப்புக்கள். பல்லாயிரம் பேர் தங்களின் வாழ்வை கொடுத்திருக்கின்றனர். ஆனால் இப்போது எவ்வித அர்பணிப்புமில்லாத ஒரு குழுவினர் அரசியலை சாதாரணமாக தீர்மானித்துவிட்டுச் செல்கின்றனர். இந்தக் கட்டுரையாளர் பல வருடங்களுக்கு முன்னர் தேசியம் ஒரு வெற்றுக் கூடென்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். தேசியம் ஒரு வெற்றுக் கூடென்பது, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ்ட் பேனானின் கருத்தாகும். தேசியவாதம் தொடர்பில் பல பார்வைகள் உண்டு. ஆனால் பேனானின் பார்வை மிகவும் கனதியானது. தேசியம் ஒரு வெற்றுக் கூடென்று கூறுவதால், தேசியவாதம் வெற்றுத்தனமான கோசமென்று எண்ணிவிடக் கூடாது. அந்த அடிப்படையில் நானும் இந்த விடயத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் ஒரு தேசியவாத அரசியல் போக்கிற்கு எவர் தலைமை தாங்குகின்றாரோ, அவரது அல்லது குறித்த குழுவினுடைய பண்புகளையே குறித்த தேசியவாதப் போக்கு வெளிப்படுத்துமென்பதுதான், பேனானின் வாதம். தேசியவாத அரசியல் போக்குகளை புரிந்துகொள்வதற்கு இது மிகவும் சரியானது. உதாரணமாக ஒரு தேசியவாத அரசியல் போக்கிற்கு மதவாதத்தை முன்னிலைப்படுத்துபவர் தலைமையேற்றால், அந்த தேசியவாதம் மதவாத முகத்தையே காண்பிக்கும். உதாரணமாக பி.ஜே.பி முன்னிலைப்படுத்தும் இந்துத்வா தேசியவாதம். இந்திய அரசியலுக்கு காங்கிரஸ் தலைமையேற்கும் போது, இந்துத்வா அடையாளம் முன்னிலைவகிக்காது. ஏன்? ஏனென்றால் தலைமை தாங்குபவரின் கருத்தியல் சார்புநிலையே அவர் தலைமையேற்கும் அரசியலை தீர்மானிக்கின்றது. அதே போன்று, இடதுசாரி கருத்தியல் சார்புநிலைகொண்டர்கள் தேசியவாத அரசியலுக்கு தலைமையேற்கும் போது, அங்கு தேசியவாதம் வேறு முகத்தை காண்பிக்கும். இதன் காரணமாகவே தேசியவாதத்தை வெற்றுக் கூடென்று பேனான் கூறுகின்றார். தேசியவாதமென்னும் வெற்றுக் கூட்டை ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களால் நிரப்பிக் கொள்கின்றனர். இந்த பின்புலத்தில் நோக்கினால், 2009இற்கு முன்னர் தமிழ் தேசியவாத அரசியல் எவ்வாறிருந்தது, அது இப்போது எவ்வாறிருக்கி;ன்றது என்பதை ஒருவர் இலகுவாக புரிந்துகொள்ள முடியும். 2009இற்கு முன்னர் தமிழ் தேசியவாதம் அன்றைய செயல்களால் தீர்மானிக்கப்பட்டது. அர்பணிப்பும் தியாகங்களுமே அன்றைய தமிழ் தேசியத்தை தீர்மானித்தது. இன்றோ எவ்வித செயல்களுமில்லாதவர்களே தமிழ் தேசியத்தை தீர்மானிக்கின்றனர். இன்று தேசியமென்னும் வெற்றுக்கூடு வெறுமனே தேர்தல் வெற்றிக்கான முயற்சிகளாலும், வெறும் கோசங்களாலும், வெளியாரின் தயவுக்கான எதிர்பார்ப்புக்களாலும் மட்டுமே நிரம்பியிருக்கின்றது. எங்கு தாங்கள் முன்வைக்கும் விடயங்களை வெற்றிகொள்வதற்கான ஆகக் குறைந்தளவு அர்பணிப்பு கூட, இல்லாமலிருக்கின்றதோ, அங்கிருந்து எந்தவொரு நன்மையையும் மக்கள் பெறமுடியாது. இன்றைய தமிழ் தேசியமென்பது வெறும் கோசங்களால் நிரப்பட்டிருக்கும் வெற்றுக் கூடு மட்டுமே. இந்த வெற்றுக் கூடு மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்காது. ஏனெனில் இன்று தமிழ் தேசியத்திற்கு தலையேற்றிருப்பதாக கூறிக்கொள்வோர் எவருமே, தாங்கள் கூறுவதை அடையும் வழிமுறை அறியாதவர்கள். ஒரு வகையில் இன்று தமிழ் மக்களின் நிலைமை, லொட்ரியில் அதிஸ்டம் கிடைக்குமென்று நம்பிக் கொண்டு, தினமும் தவறாமல் லொட்ரிச் சீட்டு வாகிக்கொண்டிருப்பது போன்ற ஒன்றுதான். இதில் இன்னொரு பிரிவு, தேசியமென்னும் பெயரால் மக்களை மேலும் ஓட்டாண்டியாக்கும் இலக்குடன் செயற்படுபவர்கள். ஒப்பீட்டடிப்படையில் இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இவ்வாறானவர்கள், மற்றவர்கள் அனைவரை விடவும், தங்களை மட்டுமே புனிதர்களாக பிராச்சாரம் செய்துவருகின்றனர் ஏனையவர்களை, கைக் கூலிகளென்றும் ஒட்டுக்குழுக்களென்றும் கூற முற்படுகின்றனர். இந்த அரசியல் போக்கு ஆபத்தானது. தங்களை புனிதர்களாகக் காண்பித்துக்கொள்ள இவர்கள், கொள்கையென்னும் துருப்புச் சீட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களை பொறுத்தவரையில் ஒரு விடயத்தை தொடர்ந்து அப்படியே கிளிப்பிள்ளைபோல் கூறிவருவதுதான் கொள்கை. உண்மையில் இது கொள்கைக்கு கொடுக்கப்படும் மிகவும் கொச்சையான விளக்கமாகும். இது அறிவுநிலைக்கு அப்பாற்பட்டது. இது சரியென்றால், இப்போது உலகில் சிறந்த கொள்கைவாத தலைவராக வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜுங் உன்னின் தலைமுறையைத்தான் கூறவேண்டும். உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும், அவை எவற்றையும் கருத்தில்கொள்ளாது, இப்போதும், வடகொரியாவை, உலகிலிருந்து தனிமைப்படுத்தியே ஆட்சிசெய்கின்றனர். இதனை சிறந்த கொள்கையென்று கூற முடியுமா? உண்மையில் கொள்கையென்பது மாற்றங்களை கண்டு அஞ்சியோடுவதல்ல. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதல்ல. மாறாக, மாற்றங்களை உள்வாங்கி, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப சமூகத்தை முன்னேற்றுவது. தங்களை நம்பும் மக்களுக்கு அபிவிருத்தியையும் ஏற்றத்தையும் கொடுப்பது. மக்கள் தொடர்ந்தும் வறுமையில் வாடுகின்றனர், ஏனைய சமூகங்களை விடவும் பின்தங்கிய நிலையிலுக்கின்றனர் என்றால், நமது கொள்கை வாதத்தின் பெறுமதியென்ன? உலகில் வளர்ச்சியடைந்த அனைத்து சமூகங்களும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட சமூகங்கள்தான். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகங்கள் தொடர்ந்தும் பின்நோக்கியே சென்றிருக்கின்றன. மற்றவர்களிடம் கையேந்திக் கொண்டிருக்கின்றன. இதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம். அரசியல் முன்னோக்கி நகர்வதை தடுக்கும் கடும்போக்குவாதிகளுக்கு முன்னுரிமையளித்தமையால்தான், நாடு இவ்வறானாதொரு நிலையிலிருக்கின்றது. இதனை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இப்போது தமிழ் மக்களுக்கு தேவையான தமிழ் தேசியவாதம் தாராளவாத தமிழ் தேசியவாதமாகும். இருப்பதை உச்சமாக பயன்படுத்திக் கொண்டு, கிடைக்கும் ஒவ்வொரு வாய்புக்களையும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலுள்ள இளைய தலைமுறையொன்று தேசியமென்னும் வெற்றுக் கூட்டை நிரப்ப வேண்டும். http://www.samakalam.com/தேசியமென்னும்-வெற்றுக்-க/
-
இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம் - யதீந்திரா விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் முதல் முதலாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமையேற்றார். இந்த அடிப்படையில் சம்பந்தனது தலைமைத்துவம் கவனிப்புக்குரியதாக இருந்தது. அவரது தலைமைத்துவத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்புமிருந்தது. அதாவது, ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பின்னரான அரசியலை வழிநடத்தும் வரலாற்று பொறுப்பு அவருக்கு வாய்த்தது. முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழிநடத்துவதற்கான வாய்ப்பை பெற்ற முதல் அரசியல்வாதியும் சம்பந்தன்தான். இந்த பின்புலத்தில், அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள எவருமே பின்நிற்கவில்லை. வரலாற்றில் முதல் முதலாக, வடக்கு தலைமைகள் அனைவருமே, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்தன. இணைந்து பயணித்தன. முன்னாள் ஆயுத இயங்கங்களும் மிதவாத அரசியல் கட்சிகளும் ஒரணியாக பயணிப்பதற்கான அரசியல் சூழல் உருவாகியது. இந்த வாய்ப்பை, புதிய அரசியல் சூழலை சம்பந்தனால் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடிந்ததா? சம்பந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னணி செயற்பாடாளராக ஒருபோதுமே இருந்ததில்லை. அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, 1976இல், தனிநாட்டுக்கான வட்டுக் கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கோசத்துடன் 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டதன் மூலம்தான், சம்பந்தன் முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றார். இதிலுள்ள சுவார்சியமான விடயம். அதன் பின்னர் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் 2001இல்தான், சம்பந்தன் தேர்தலில் பெற்றிபெற முடிந்தது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தன் எந்தவொரு தேர்தல்களிலும் வெற்றிபெறவில்லை. 1994இல், திருகோணமலையில், தங்கத்துரையே வெற்றிபெற்றிருந்தார். தோல்வியடைந்த சம்பந்தன், பதவியை விட்டுத்தருமாறு தங்கத்துரையிடம் கேட்ட கதையை, திருகோணமலையின் பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அறிவார்கள். தங்கத்துரை 1997இல், சிறிசன்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற தாக்குதலின் போது, கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது இடத்திற்கு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். ஈழ ஆயுத விடுதலைப் போராட்ட காலத்தில் சம்பந்தன் அதன் மீதான தீவிர ஆதரவாளராக ஒரு போதுமே இருந்ததில்லை. முக்கியமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை சம்பந்தன் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டவரல்ல. இவ்வாறானதொரு பின்னணியில்தான், சம்பந்தன் விடுதலைப் புலிகளால் இலக்குவைக்கப்பட்ட நபரானார். சந்திரிக்கா குமாரதுங்கவுடன் நெருக்கமாக இருந்த காலத்தில், சம்பந்தன் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாகவே பரவலாக பேசப்பட்டது. 2012இல், சம்பந்தன் ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றின் போது, அவரே இதனை குறிப்பிட்டிருக்கின்றார். 2001இல், இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களோடு வெற்றிபெற்றது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலமானது, விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்தவரையில், முக்கியமானதொரு திருப்புமுனைக்குரிய காலமாக இருந்தது. 2001 செப்டம்பரில், அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குலைத் தொடர்ந்து, உலக அரசியல் நிலைமைகள் சடுதியாக மாற்றமடைந்தன. பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. இதே 2001இல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உருவானது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் சம்பந்தனுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இருந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பங்குகொள்வது, அவர்களது கூட்டத்தில் பேசுவது என்பதை தவிர பிரத்தியேக முக்கியத்துவங்கள் இருக்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளையமைப்பாகவே செயற்பட்டிருந்தது. 2004இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக விடுதலைப் புலிகள் அமைப்பு மாவட்டங்கள் தோறும் பணியாற்றியிருந்தது. இதன் காரணமாகவே, 2004இல், திருகோணமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறமுடிந்தது. 2005இல், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தல் பகிஸ்கரிப்பை அறிவித்திருந்தது. இந்த முடிவை அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரித்திருந்தது. உண்மையில் இதனை சம்பந்தன் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தன் எதிர்க்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளை விரோதித்துக்கொள்ள சம்பந்தன் விரும்பவில்லை. சம்பந்தனும் கூட்டமைப்பும் அன்றைய சூழலில் முற்றிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர் என்பதற்கு, இதனைவிடவும் வேறு சான்றுகள் தேவையில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை தொடர்ந்து அரசியல் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்தது. தேர்தல் பகிஸ்கரிப்பில் தொடங்கிய புலிகளின் புதிய அரசியல் நகர்வுகள், இறுதியில் அவர்களுக்கான புதைகுழியானது. இந்தப் பின்புலத்தின்தான் சம்பந்தனது புதிய அரசியல் அவதாரம் ஆரம்பிக்கின்றது. அதுவரையில் எந்தவொரு முக்கியத்துவமற்றிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் எவராலும் தவிர்க்க முடியாதவராக மாறுகின்றார். உள்நாட்டிலும், ராஜதந்திர தரப்பினர் மத்தியிலும் கவனிப்புக்குரிய தமிழ் தலைவரென்னும் அந்தஸ்த்தை பெறுகின்றார். சம்பந்தனது ஆளுமைக்குரிய காலமாக 2010 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும். சம்பந்தனது ஆரம்பகால நகர்வுகளை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை தெளிவாகப் பார்க்கலாம் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிரபாகரன்-பாலசிங்கம்) எந்த இடத்தை சரியாக விளங்கிக் கொள்ளா முடியாமல் சறுக்கியதோ, அந்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதையே சம்பந்தன் ஒரு பிரதான வழிமுறையாக பற்றிக்கொள்ள முற்பட்டார். அதாவது, இந்திய, அமெரிக்க ஆதரவை வெற்றிகொள்ள வேண்டும். 2010, ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்ததிலிருந்து, 2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டதுவரையில், அனைத்துமே இந்திய மற்றும் மேற்குலக விருப்பங்களை ஆதரிப்பதாகவே இருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க விருப்பங்களுடன் முக்கியமாக புதுடில்லியின் ஆதரவை வெற்றிகொள்ளும் உபாயங்களை இந்தக் கட்டுரை வரவேற்கின்றது. அதுதான் சரியானதும் புத்திசாலித்தனமான அரசியலுமாகும். ஆனால் 2010இற்கு பின்னர் கிடைத்த வாய்ப்புக்கள் எவற்றையுமே சம்பந்தன் முறையாகவும் நேர்மையாகவும் கையளவில்லை. இந்த இடத்தில்தான் சம்பந்தனது தோல்வியின் கதை ஆரம்பிக்கின்றது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சம்பந்தனுக்கு முன்னர் இருந்தவர்கள் வெற்றிபெற்றவர்களா? பதில் சுலபமானது. அனைவருமே தோல்விடைந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் தோல்வியடைந்த காலமும், அன்றைய அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சம்பந்தனது காலத்தில் உள்ளுக்கும், வெளியிலும் எந்தவொரு சவாலும் இருந்திருக்கவில்லை. அதே வேளை, போருக்கு பின்னரான அரசியல் சூழலை கையாளும் முழுமையான ஆளுமையுள்ள ஒருவராகவே சம்பந்தன் இருந்தார். அனைத்துமே சம்பந்தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. சம்பந்தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடியளவிற்கு கூட்டமைப்புக்குள் எவரும் இருந்திருக்கவில்லை. அவர்கள் அனைவருமே சம்பந்தனை பின்தொடர்வதற்கு தயாராகவே இருந்தனர். ஆனால் அனைத்தையும் சம்பந்தன் அவரது தலைமைத்துவ மோகத்தாலும், கட்சி மோகத்தாலும், அரசியல் நேர்மையின்மையாலும் போட்டுடைத்தார். 2010இல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அவரைப் போன்ற சிக்கலான ஒருவரை கையாளுவதிலுள்ள சிக்கல்களை இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளுகின்றது. ஆனால் இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு, ஏனையவர்களை தொடர்ந்தும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவத்தை சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து, அதனை ஒரு பலமான தேசிய இயக்கமாக மாற்றவேண்டுமென்று ஏனைய கட்சிகளும், தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தனோ, அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதன் காரணமாக கூட்டமைப்பு பலவீனமடைந்து கொண்டே சென்றது. கூட்டமைப்பு பலவீனமடைவது தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்;துமென்னும், சிறிதளவு கரிசனை கூட சம்பந்தனிடம் இருக்கவில்லை. சம்பந்தனது தவறுகளால் இறுதியில் கூட்டமைப்பு சிதைவடைந்தது. கூட்டமைப்பின் தலைவராக இருந்து கொண்டே, கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சிகளுக்கு சம்பந்தன் துணைபோனார். ஒரு அரசியல் அமைப்பின் தலைவரே, அதனை சிதைக்க முயற்பட்ட அதிசயம் தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே நிகழ்ந்தது. சம்பந்தனின் தவறுகள் இன்று அவர் உயிரோடு இருக்கின்ற போதே, கூட்டமைப்பை சிதைத்துவிட்டது. கூட்டமைப்பிலிருந்து தமிழசு கட்சி வெளியேற முற்பட்ட போது, கூட்டமைப்பின் தலைவராக அதனை தடுக்க சம்பந்தன் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இன்று மீளவும் தமிழ் அரசியல் உரையாடல்கள் 13வது திருத்தச்சட்டத்திற்கே திரும்பியிருக்கின்றது. இதனை முன்கூட்டியே கணித்து, அப்போதே பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தை உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும். தமிழர்களுக்கு வாய்ப்பான சூழல் அப்போதிருந்தது. ஆனால் சம்பந்தன் தான்தோன்றித்தனமாக அனைத்தையும் நாசமாக்கினார். வரமுடியாத அரசியல் யாப்பிற்காக ஜந்து வருடங்களை வீணாக்கினார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, புதுடில்லியை எட்டியும் பார்க்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, இந்திராகாந்தியுடன் நட்புறவை ஏற்படுத்தியிருந்தார். தமிழினத்திற்காக அந்தப் பதவியை உச்சபட்டசமாக பயன்படுத்தியிருந்தார். ஆனால் மரியாதையுடன் புதுடில்லிக்கு விஜயம் செய்ய வேண்டிய சம்பந்தனோ, பத்தோடு பதினொன்றாக, அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து புதுடில்லி சென்றிருந்தார். சம்பந்தனது எதிர்கட்சி தலைவர் தகுதியை பயன்படுத்தி, புதுடில்லியின் ஆலோசனையுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை சிறப்பாக கையாண்டிருக்கலாம். ரணில்-மைத்திரி அரசாங்கமும் அதனை நிராகரித்திருக்காது. ஏற்கனவே 13 பிளஸ் தொடர்பில் வாக்குறுதியளித்திருந்த மகிந்த ராஜபக்சவும் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை எதிர்த்திருக்க வாய்ப்பில்லை. இறுதியில் தமிழ் இனத்திற்கு எந்தவொரு பயனுமில்லாமல் அனைத்தும் முடிவுற்றது. கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து மீளவும் அனைத்தும் பழைய நிலைமைக்கே திரும்பியது. சம்பந்தனை புத்திக் கூர்மையுள்ளவரென்று சிலர் சொல்வதுண்டு. அது உண்மைதானா? பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமர், உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர், கடந்த 21 வருடங்களாக இந்தியாவில் தொடர்ந்தும் வெற்றியை மட்டுமே கண்டுகொண்டிருந்தவரான, சிறி நரேந்திரமோடி – கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தார். புதுடில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தனோ, சில்லறைத்தனமான காரணங்களை கூறி அந்த சந்திப்பை பிற்போட்டார். மாவையின் மகனுக்கு திருமணம்- அதற்கு போக வேண்டியிருக்கின்றது. இதுதான், ஒரு பிராந்திய சக்தியின் தலைவரை சந்திப்பதை பிற்போடுவதற்கு சம்பந்தன் கூறியிருந்த காரணம். ஒரு பத்தாமாண்டு மட்டுமே படித்தவர் கூட, இவ்வாறானதொரு காரணத்தை கூறியிருக்கமாட்டார். இதுதான் சம்பந்தனது புத்திக் கூர்மையோ? அப்போதே கூட்டமைப்பின் பங்காளிகள் சம்பந்தனை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியிருக்க வேண்டும். ஏனெனில் அப்போதே கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் தகுதியை சம்பந்தன் இழந்துவிட்டார். 2010-2020 காலப்பகுதி வரையில் சம்பந்தனது அனைத்து நகர்வுகளுமே தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. இன்று கூட்டமைப்பிலும் சம்பந்தன் இல்லை. தமிழரசு கட்சியிலும் சம்பந்தனை பொருட்படுத்த எவருமில்லை. தவறுகள் பின்னர் தவறுகள் மீண்டும் தவறுகள், இதுதான் கடந்த பத்துவருடங்களாக சம்பந்தன் செய்தவை. தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் இராஜவரோதயம் சம்பந்தனது இடம், தோல்விக்கும், ஏளனத்திற்கும், அரசியல் முட்டாள்தனத்திற்குமான சான்றாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், இனிமேல், இடம்பெறப் போகும் எதற்கும் சம்பந்தன் காரணமாக இருக்கப் போவதில்லை. சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி, நாங்கள் எங்கோ சென்றுவிட்டோமென்று கூறியிருந்தார். ஆனால் அதனை தாண்டி எங்கும் செல்லவில்லை, செல்லவும் முடியாதென்பதே, மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் அதனை தாண்டி எங்கோ சென்றுவிட்டோமென்னும் வாதத்தின் பெறுமதியென்ன? இதனை சரியாக புரிந்துகொண்;டு செயற்பட்டிருந்தால், சம்பந்தன் தோல்வியடைந்திருக்க வேண்டியதில்லை. இப்போது, சம்பந்தன் ஒரு தோல்வியின் அடையாளம் மட்டுமே! http://www.samakalam.com/இரா-சம்பந்தன்-தோல்வியின/
-
நாடுகடந்த அரசாங்கம் மறுசீரமைக்கப்பட வேண்டும்? - யதீந்திரா 2009இல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றதை தொடர்ந்து, புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலில் பிரதான இடத்தை பெற்றது. இந்த பின்புலத்தில்தான் 2010இல் நாடுகடந்த அரசாங்கம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் புலம்பெயர் சமூகமென்று அழைக்கப்படும் மரபிற்கு மாறாக நாடுகடந்த தமிழ் சமூகமென்னும் அடையாளம் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையிலேயே நாடுகடந்த அரசாங்கமென்னும் எண்ணக்கரு தோற்றம்பெற்றது. தமிழ் புலம்பெயர் சமூகமென்று அடையாளப்படுத்தும் போது அது – மேற்குலக நாடுகளில் சிதறிவாழும் ஈழத் தமிழ் மக்களை மட்டுமே குறிக்கும் ஆனால், நாடுகடந்த தமிழ் சமூகமென்று அடையாளப்படுத்தும் போது அது உலகின் பல பாகங்களில் சிதறிவாழும் ஈழத் தமிழ் மக்கள் அiனைவரையும் உள்வாங்கும். இந்த எண்ணக்கருவே பின்னர் நாடுகடந்த அரசாங்கமென்னும் அமைப்பாக துளிர்விட்டது. இது அடிப்படையில் தொலை தூர தேசியவாதமென்னும் கருத்தாக்கத்திலிருந்தே வருகின்றது. இந்தக் கருத்தாக்கம் பெனடிக் அன்டர்சனால் 1998இல் முன்வைக்கப்பட்டது. அப்படையில் இது ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து அரசியல் காரணங்களால் வெளியேறிவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு தேசியத்துடன் தொடர்புபடுகின்றனர் – என்பது பற்றியது. தாயக மக்களையும் அந்த தாயக பரப்பிலிருந்து வெளியேறி வாழும் மக்களையும் தொலை தூர தேசியவாதம் இணைக்கின்றது. தாயக பிரதேசத்திலிருந்து வெளியேறி பிறிதொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் கூட தங்களை எல்லைதாண்டிய தாயக குடிமக்களாகவே கருதிக் கொள்கின்றனர். இந்தக் கருத்தாக்கத்திலிருந்துதான் தொலை தூர தேசியவாதமென்னும் கருத்தாக்கம் உருவானது. விடுதலைப் புலிகளின் தோல்வியை தொடர்ந்து அதுவரையில் விடுதலைப் புலிகளின் பிரதான ஆதரவுத் தளமாகவிருந்த புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய தரப்பாக மாறியது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிவரையில் ஆயுதப் போராட்டத்திற்கான பிரதான நிதி வழங்குனரென்னும் பாத்திரத்தையே புலம்பெயர் சமூகம் ஆற்றியிருந்தது. புலிகளின் வீழ்சியை தொடர்ந்தே புலம்பெயர் சமூகம் அரசியல்ரீதியான செயற்பாடுகளில் தீவிரம் காண்பித்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தாயகத்தில் தனிநாட்டுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்புலத்தில் புலம்பெயர் சூழலில் தனிநாட்டுக்கான அரசியலை தொடரும் நோக்கில், நாடு கடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இது அடிப்படையில் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதனது (கே.பி) சிந்தனையின் விளைவே நாடுகடந்த அரசாங்கமாகும். எனினும் கே.பி சிறிலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அமைப்பினை வழிநடத்தும் பொறுப்பு விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. கடந்த 13 வருடங்களாக உருத்திரகுமாரனே இந்த அமைப்பை வழிநடத்திவருகின்றார். தற்போதுள்ள புலம்பெயர் அமைப்புக்களில் அமெரிக்கா, கனடா ஜரோப்பா – என பரந்தளவில் ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகத்தை இணைக்கும் ஒரேயொரு அமைப்பென்றால் அது நாடு கடந்த அரசாங்கத்தை மட்டுமேயாகும். ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் மட்டுமே மட்டுப்பட்டிருக்கின்றன. ஒரு சில அமைப்புக்கள் சில நாடுகளில் வலமைப்புக்களை கொண்டிருந்தாலும் கூட அவற்றால் பரவலான கவன ஈர்ப்பை பெற முடியவில்லை. ஆனால் நாடுகடந்த அரசாங்கம் மட்டும்தான் பரவலான மக்களின் கவன ஈர்பை பெற்றிருக்கின்றது. ஆனால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் பலர் இதனோடு இணைந்திருந்தனர். நாடுகடந்த அரசாங்கம் 2010இல் உருவாக்கப்பட்ட போது இதன் ஆலோசகர்களாக பலர் இணைந்திருந்ததாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டிருக்கின்றது. ஆனால் அவர்களில் பலர் இப்போது இந்த அமைப்போடு இல்லை. மேலும் இந்த அமைப்பு மேற்குலக மற்றும் இந்திய ராஜதந்திர சமூகத்தினர் மத்தியிலும் கருத்தில்கொள்ளப்படக் கூடியளவிற்கு வளர்சியடையவில்லை. ஒப்பீட்டடிப்படையில் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுக்கிருக்கின்ற அங்கீகாரம் கூட நாடு கடந்த அரசாங்கத்திற்கில்லை. இதற்கு நாடு கடந்த அரசாங்கத்தின் கடடமைப்பிலுள்ள சிக்கல்களே பிரதான காரணமாகும். இந்த நிலையில் இந்த அமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பான கேள்விகள் எழுகின்றன. இந்த மறுசீரமைப்பு இரண்டு அடிப்படையைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒன்று கொள்கை நிலைப்பாடு சார்ந்தது அதாவது அரசியல் ரீதியானது. அடுத்தது கட்டமைப்பு சார்ந்தது. கட்டமைப்பு சார்ந்த விடயங்களுக்குள் நான் அதிகம் செல்லவில்லை. ஏனெனில் இது அந்தச் சூழலிலுள்ளவர்கள் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட வேண்டி ஒன்றாகும். ஆனால் இந்த அமைப்புக்குள் உள் முரண்பாடுகள் இருப்பது தெளிவாகவே தெரிகின்றது. உள்முரண்பாடுகளை பூசிமெழுகிக் கொண்டு செல்வதால் ஒரு போதும் பிரச்சினைகளை கையாள முடியாது. அவை முளையிலேயே கண்டறிந்து சரிசெய்யப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்த முரண்பாடுகளை சரியான முறையில் கையாண்டிருந்தால் இன்று தாயக தமிழ் தேசிய அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கியிருக்காது. பிளவுகளும் ஏற்பட்டிருக்காது. இந்தக் கட்டுரையாளர் அதிகம் அரசியல்ரீதியான மறுசீரமைப்பு தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றார். புலம்பெயர் சூழலில் இயங்கும் அமைப்புக்கள் தொலை தூர தேசியவாதமென்னும் கருத்தாக்கத்தின் கீழ் தாயகத்தோடு இணைகின்ற போது தாயக அரசியல் சூழலையும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும். போர் முடிவுற்றதை தொடர்ந்து அவசர அவசரமாக உரையாடப்பட்டே நாடு கடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அன்றைய சூழலில் ஆழமான பரிசீலினைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே வேளை விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சுயவிமர்சனம் சார்ந்த உரையாடல்களிலும் எவரும் ஈடுபடவில்லை. முக்கியமாக இந்தியாவின் வகிபாகம் தொடர்பில் தெளிவான புரிதல்கள் புலம்பெயர் சமூகத்திடம் இருந்திருக்கவில்லை. வெறுமனே மேற்குல நாடுகளில் சத்தம் போடுவதன் மூலம் விடயங்களை கையாண்டுவிட முடியுமென்னும் மேலோட்டமானதொரு பார்வையுடனேயே புலம்பெயர் சமூக அரசியல் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டன. ஆனால் கடந்த பதின்மூன்று வருடகால அனுபவங்கள் பிராந்திய அரசியல் சூழலை புறம்தள்ளி ஒரு போதுமே செயற்பட முடியாதென்னும் அனுபவத்தை நமக்கு வழங்கியிருக்கின்றது. உலகம் ஒழுங்கு பல்துருவ நிலையிருக்கின்ற போது மேற்குலகில் இங்குவதன் மூலம் விடயங்களை கையாள முடியாது. அது ஒரு துருப்புச் சீட்டாக இருக்கலாம் ஆனால் அதனைக் கொண்டு மட்டும் நகர முடியாது. இது நமது விருப்பு வெறுப்புக்கள் சார்;ந்த விடயமல்ல. இதுதான் உலக அரசியல் யதார்த்தமாகும். இந்த பின்புலத்தில் சிந்தித்தால் நாடுகடந்த அரசாங்கத்தை அரசியல்ரீதியில் மறுசீரமைக்க வேண்டிய கட்டாயமுண்டு. ஏனெனில் எவ்வாறு தாயக தமிழ் தேசிய அரசியல் சிதைவுற்றிருக்கின்றதோ அவ்வாறானதொரு நிலையில்தான் புலம்பெயர் யெற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. முதலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பெயர் மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான நாடுகடந்த அரசாங்கமென்று பெயரை மாற்றியமைக்கலாம். அதாவது தனிநாட்டுக்கான நிலைப்பாடு கைவிடப்பட வேண்டும். ஏனெனில் தாயகத்தில் அவ்வாறான நிலைப்பாட்டுக்கான அரசியல் சூழல் முற்றிலும் இல்லை. அத்துடன் அது பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் பின்புலத்தில் நோக்கினால் முற்றிலும் ஒரு கற்பனாவாதம் மட்டுமே. முக்கியமாக பிராந்திய அரசியல் சூழலுக்கு அது ஏற்புடைய வாதமல்ல. எனவே, அதற்கு பதிலாக உள்ளக சுயநிர்ணய உரிமையென்னும் நிலைப்பாட்டை கைக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது உள்ளக சுயநிர்ணய உரிமையென்னும் நிலைப்பாட்டுடன்தான் சென்றிருந்தனர். நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஒரு தாராளவாத வெளித் தோற்றத்தை காண்பிக்க வேண்டும். அப்போதுதான் மேற்குலக ராஜதந்திர சமூகத்தோடு ஊடாடும் வாய்ப்பை பெறலாம். அங்கீகாரமே அரசியல் லொபிக்கான அடிப்படையாகும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு இராணுவ கட்டமைப்பாக இருந்த போது பயன்படுத்திய அடையாளங்களை போருக்கு பின்னரான ஜனநாயக அரசியல் இயக்கத்திற்கு பன்படுத்த முடியாது. அது அடிப்படையிலேயே தவறானது. கடந்த பதின் மூன்றுவருடகால அரசியல் நகர்வுகளை உற்று நோக்கினால் நாம் ஒரு விடயத்தை காணலாம். அதாவது அரசியல் பலமில்லாமல் நாம் ஒரு அடிகூட முன்நோக்கி பயணிக்க முடியாது. இந்த பின்புலத்தில் நோக்கினால் பதின்மூன்று வருடகால அரசியல் முன்னெடுப்புக்களானது வெறுமனே வெளியாரின் கருணைக்காக காத்திருந்த காலமாகவே கழிந்திருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மீதான நம்பிக்கை அமெரிக்க அழுத்தங்களின் மீதான நம்பிக்கை மேற்குலக நாடுகளின் மீதான நம்பிக்கை இப்படித்தான் கடந்த பதின்மூன்றுவருடங்கள் நகர்ந்திருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் தாயகத்திலுள்ள மக்களால் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை. இந்தக் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை திரும்பிப் பார்த்தால் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள் சில இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் பயணத் தடைகள் தற்போது கனடிய அரசு ராஜபக்சக்கள் மீது விதித்திருக்கும் தடைகள் போன்ற சில விடயங்கள் மட்டுமே நமக்கு முன்னாலிருக்கின்றன. ஆனால் தாயக மக்களுக்கான அரசியல் தீர்வில் ஒரு துரும்பளவு கூட நம்மால் முன்னநகர முடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் மீளவும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படுகின்றது. இலங்கைத் தீவு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற சூழலில்தான் மீளவும் அரசியல் தீர்வு விடயம் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்னும் வாதம் மேலேழுந்திருக்கின்றது. பிராந்திய சக்தியான இந்தியா தொடர்ந்தும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையானஇ 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மட்டுமே வலியுறுத்திவருகின்ற நிலையில்இ அதனை ஓரமாக வைத்துவிட்டு ஈழத் தமிழர்களால் நகர முடியாது. இது தொடர்பில் ஈழத் தமிழர் புலம்பெயர் அமைப்புக்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெயசங்கர் இந்தியாவின் நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துச் சென்றிருக்கின்றார். இதன் பின்னரும் நாங்கள் இந்தியாவிடம் வலியுறுத்துகின்றோம் என்றெல்லாம் பேசுவதும் விவாதிப்பதும் பயனற்றது. இந்தக் கட்டுரையாளர் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். அதாவது இந்தியாவின் எல்லையை புரிந்துகொள்ளாமல் இந்தியாவிடம் செல்வதில் பயனில்லை. அதே வேளை இந்த விடயத்தில் இந்தியாவை மீறி வேறு எவராலும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் முடியாது. உதவினால் இந்தியாதான் உதவ முடியும் ஆனால் இந்தியா அதனால் உதவக்கூடிய எல்லையை தெளிவாக குறிப்பிட்ட பின்னர் அதற்கப்பால் சிந்தித்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் ஆனால் அதுவரையில் அரசியல் அசைவற்ற நிலையில் இருக்க முடியுமா? இந்தியாவுடன் ஊடாடுவது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம். நான் மேலே குறிப்பிட்டது போன்று நாடு கடந்த அரசாங்கத்தினை அரசியல்ரீதியில் மறுசீரபைபுச் செய்தால்தான் அது சாத்தியப்படும். தவிர, நாடு கடந்த அரசாங்கம் மத்திய அரசு பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களை எதிர்ப்பதை ஒரு அரசியல் நிகழ்சிநிரலாகக் கெண்டிருக்கும் தமிழ்நாட்டு குழுக்களிலிருந்தும் அமைப்புக்களிலிருந்தும் முற்றிலும் வெளியில் வரவேண்டும். பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் விவகாரங்கள் முற்றிலும் உள்நாட்டு விவகாரங்களாகும். அது தொடர்பில் எந்தவொரு நிலைப்பாடும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது. அவர்களுடன் உறவுகளை பேணிக்கொள்ள முடிந்தால் நல்லது. ஒரு வேளை முடியாவிட்டால் அமைதியாக இருக்கலாம். தமிழ் நாட்டிலுள்ள அரச எதிர்ப்பு குழுக்களுடன் தொடர்புகளை பேணிக்கொள்வது அடிப்படையிலேயே தவறானது மற்றும் ஆபத்தானது. இன்றைய அரசியல் ஒழுங்கு புரட்;சிகர வாதங்களுக்கானதல்ல. அதற்கு ஒரு காலமிருந்தது. இன்றைய உலக அரசியல் ஒழுங்கென்பது அடிப்படையிலேயே பலம் பொருந்திய நாடுகளின் நலன்களுக்கான உலக ஒழுங்காகும். ஒவ்வொரு நாடும் அதன் நீ;ண்டகால நலன்களை கருத்தில் கொண்டுதான் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் தலையீடு செய்கின்றது. இதில் சரி – பிழை, நீதி – அநீதி என்னும் சொற்களுக்கு எவ்வித பெறுமதியும் இல்லை. தந்திரம் தெரிந்தவர்கள் தப்பித்துக் கொள்ள முடியுமென்பதுதான் இந்த ஆட்டத்திற்கான விதியாகும். இதனை புரிந்துகொண்டுதான் நாம் செயற்பட வேண்டும். புலம்பெயர் சமூகங்கள் தேசக்கட்டுமானங்களில் வரலாற்று ரீதியான பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றது. குறிப்பாக இஸ்ரேல் ஜரிஸ் ஆர்மேனியா ஸ்லேவேனியா குரோஸியா போன்ற தேசங்களின் கட்டுமானங்களில் புலம்பெயர் சமூகம் வரலாற்றுரீதியான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகம் – தாயகத்தின் கட்டுமானங்களில் பெரியளவில் பங்களிக்க முடியும். புலம்பெயர் சமூகம் ஈழத் தமிழர்களுக்கான பலமென்பதில் இரு வேறுகருத்தில்லை. ஆனால் அது சரியாக கையாளப்படாவிட்டால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். கடந்த பதின்மூன்று வருடகால புலம்பெயர் நகர்வுகள் சுயவிமர்சனத்திற்கும் மறுசீரமைப்பிற்கும் உள்ளாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய போக்குகளுக்கு புலம்பெயர் சமூகத்தினால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடும். http://www.samakalam.com/நாடுகடந்த-அரசாங்கம்-மறுச/