Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ போராட்டம் முடிந்து விட்டதா அல்லது முடக்கப்பட்டு விட்டதா? – செண்பகத்தார்

Featured Replies

தமிழீழம் என்ற விடுதலை உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. இன்னும் உயிரோடு தான் இருக்கிறது. சர்வதேச சமூகம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மேற்கு நாடுகள் அண்மையில் ஒரு முடக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழீழக் கோரிக்கையை முடிக்க அது போதுமானதல்ல.

இலங்கையின் ஜனநாயகத் தோல்வியை ஈடு செய்வதற்காகச் சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையின் அரசியல் தலைமை மாற்றத்தையும்(Regime Change) தமிழீழத்திற்குப் பதிலாகப் புனர்வாழ்வையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் (Rehabilitation and Development)வழங்கினால் போதுமென்று உத்தேசிக்கின்றன.

இதற்காக முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் விடுதலைப் புலிகளைச் சமாதானப் பொறிக்குள் வீழ்த்த உதவியவருமான றணில் விக்கிரமசிங்க என்ற அமெரிக்கச் சார்பு அரசியல்வாதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடைய சென்ற வாரப் புது டில்லிப் பயணம் மேற்கூறிய பின்னணியைக் கொண்டது. அவர் ராஜபக்ச அரசு மீது பலவித குற்றச்சாட்டுகளை அப்போது சுமத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் ஒன்றை மாத்திரம் மனங் கொள்ள வேண்டும். இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை, அது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இருபத்தி நான்கு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டாலும் ஒரு போதும் ஈழத் தமிழர்களின் விடுதலைக் கோரிக்கைக்கு மாற்றீடாக அமையப் போவதில்லை.

ஈழத் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் இரண்டு இலங்கையின் அரசியல் -.இராணுவத் தலைமையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாகச் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக தமிழீழ மக்கள் மத்தியில் சுய நிர்ணயக் கோரிக்கை அடிப்படையிலான ஒரு பகிரங்க கருத்துக் கணிப்பை(Referendum) ஜநா நடத்த வேண்டும். இதில் இலங்கை அரச படைகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை ஜநா அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன. அது 2009 மே 27ம் நாள் இலங்கையின் போர் வெற்றியைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதே நாள் சுவிற்சர்லாந்து பிறிதோர் பிரேரணையைக் கொண்டு வந்தது.

இலங்கை அரசு போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தப் பிரேரணை கோரியது. சீனா, ரூஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னின்று அதைத் தோல்வி அடையச் செய்தன. அதன் தொடர்ச்சியாக 2012 மார்ச்சு 23ம் நாள் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தீர்மானத்தை அமெரிக்கா, ஜக்கிய இராச்சியம், நோர்வே, இந்தியா ஆகிய நாடுகள் நிறைவேற்றின.

இந்த மூன்று வருட இடை வெளிக்குள் அறிக்கைகள், ஆவணப் படங்கள், தனியார் நீதி மன்ற வழக்குகள் என்பன பதிவாகியுள்ளன. இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த இன அழிப்பு கொடூரங்கள் பற்றிய செய்திகள் உலகின் கவனத்தில் இருந்து மறைய மறுக்கின்றன.

முதலாவது அறிக்கை முள்ளிவாய்க்கால் முடிந்த ஆறாவது மாதம் வெளிவந்தது. அமெரிக்க செனேற் சபை வெளிவிவகார குழுத் தலைவர் ஜோன் கெரி பெயரில் (John Kerry Senate Foreign Relations Committee Report) 2009 டிசம்பர் 07ம் நாள் வெளிவந்தது.

“ இலங்கையை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுப்படியாகாது” என்ற செய்தி அதில் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நல்லிணக்கத்தையும் மேம்பாட்டையும் (Reconciliation and Development) வழங்க வேண்டும் என்றும்; இந்த அறிக்கை கூறுகிறது.

2009 மே 27ல் மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்திற்குச் சவாலாக அயர்லாந்து டப்ளின் தீhப்பாயம் (Dublin Tribunal) வழங்கிய நான்கு அம்சத் தீர்ப்பு அமைகிறது. அவையாவன.

1) இலங்கை அரசும் அதன் இராணுவமும் போர்க் குற்றம் புரிந்துள்ளன.

2)இலங்கை அரசும் அதன் இராணுவமும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளன.

3) இன அழிப்புக் குற்றச்சாட்டு விரிவாக விசாரிக்கப்பட வேண்டும.;

4) அமைதி நடவடிக்கை தோல்வி அடைவதற்குச் சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா, ஜக்கிய இராச்சியம் என்பன பொறுப்பேற்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பு இலங்கைப் போர் பற்றிய கரிசனை காட்டாத ஜநா பொதுச் செயலாளரைச் செயற்படத் தூண்டியது. அவர் நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2011 மார்ச்சு 31ம் நாள் வெளியிட்டது. ஜநாவைச் செயற்படத் தூண்டியதற்கு ஜக்கிய இராச்சிய சீ4 தொலைக்காட்சி வெளிட்ட வீடியோ ஆவணப் படங்களும் துணைக் காரணமாக அமைந்தன.

ஜநா அறிக்கை போர் குற்றங்கள் (War Crimes) என்ற குறுகிய பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரு தேசங்கள் இருப்பதையும் ஒரு தேசம் விடுதலைப் போர் நடத்துவதையும் அது கருத்தில் எடுக்க மறுத்துவிட்டது. அது மாத்திரமல்ல போர் குற்றங்களை போரில் ஈடுபட்ட இரு பகுதி மீதும் சுமத்துவதில் அது குறியாக இருந்தது.

நோர்வே நாடும் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடுவராகத் தோன்றிய நோர்வே அமெரிக்காவின் பினாமியாகச் செயற்பட்டு ஈழத்தமிழர்களின் இன அழிப்பிற்குத் துணை போயுள்ளது.

இறுதியாக இலங்கை அரசும் தனது பங்கிற்கு நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. குற்றவாளி நாடு தன்னை நிரபராதியாகக் காட்டுவதற்கு வெளியிட்ட அறிக்கைக்கு அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழத் தேசியத்தைத் திருப்திப்படுத்த அதில் கூறப்பட்டவை போதுமானதாம்.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் நிறைவேற்றிய மனித உருமைக் கவுன்சில் தீர்மானத்தால்; உலகத் தமிழர்கள் மீண்டும் ஏமாந்து விடக் கூடாது. சர்வதேச விசாரணைகளை இல்லாமற் செய்வதும் இலங்கை அரசை காப்பாற்றுவதும் அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கிறது. இன அழிப்பிற்கு அனுசரணை வழங்கிய அமெரிக்கா இந்தத் தீர்மானத்தின் வாயிலாகத் தமிழீழத்தின் கட்டமைப்பு அழிப்பை மேற்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கத் தீர்மானத்திற்கு வழங்கும் ஆதரவு இனத் துரோகமாகக் கணிப்பிடப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழரின் சுய நிர்ணயக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கை இத்தீர்மானம் கொண்டிருக்கிறது. டப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அடுத்து 2010 மே 17ம் நாள் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) என்ற என்ஜிஓ (NGO) இலங்கை போர்க் குற்றங்கள் (War Crimes in Sri Lanka) என்ற விரிவான அறிக்கையை வெளியிட்டது.

ஜநா அறிக்கையில் அவதானிக்கப்பட்ட அதேயளவு அடிப்படைக் குறைபாடுகள் இதிலும் காணப்படுகின்றன. போரின் இரு பகுதியும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சுமத்தும் இந்த அறிக்கை ஈழப் போரின் வரலாற்றுப் பின்னணியையும் மக்களின் சுய நிர்ணயக் கோரிக்கையின் நியாயப்பாடுகளையும் விளக்கிக் கூறாமல் விடுத்துள்ளது.

மிக அண்மையில் தமிழ் நாட்டின் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியையும் பிற உறுப்பினர்களையும் மேற்கூறிய நெருக்கடிக் குழுவின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இது பற்றி 2012 மார்ச் 18ம் நாள் திருவல்லிக்கேணி, சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் திருமுருகன் காந்தி தகவல் வெளியிட்டார்.

“போர்க் குற்றங்கள் பற்றிப் பேச வேண்டாம் என்று கேட்டார்கள். ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கை பற்றியும் எம்மைப் பேச வேண்டாம் என்றும் கேட்டார்கள். இந்திய அரசோடு தமிழர்களுடைய புனர்வாழ்வு பற்றி மாத்திரம் பேசும்படி அவர்கள் எம்மை வேண்டினார்கள்” என்றார் காந்தி.

தமிழ் நாட்டின் பிற அரசியல் கட்சிப் பிரதிநிதிகளோடும் இதே மாதிரியான வேண்டுகையை நெருக்கடிக் குழு உறுப்பினர்கள் விடுத்துள்ளனர். தனி நாட்டுக் கோரிக்கையை போர்க் குற்றங்கள். மனித உரிமை மீறல்கள் என்ற குறுகிய பரப்புக்குள் முடக்குவது மேற்கு நாடுகளின் நிதி உதவியில் இயங்கும் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

சர்வதேச சமூகம் ஏன் தமிழீழத்தை எதிர்க்கிறது என்ற கேள்வி எழுகிறது. இலங்கையைப் பிளவுபடாத தரைப்பரப்பாக வைத்துக் கொண்டு அதைத் தமக்கிடையில் பங்குபோட இந்த நாடுகள் திட்டமிடுகின்றன. இதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களின் தேசிய எழுச்சியைத் துடைத்தழிக்க விரும்புகின்றனர்.

இலங்கைத் தீவு ஏற்கனவே நான்கு வலயங்களாகப் பிரிந்துள்ளன. மேற்கில் சிங்கள மேலாதிக்கம், வடக்கில் இந்தியாவின் ஊடுருவல், தெற்கில் சீனக் கட்டுப்பாடு, திருகோணமலை உட்படக் கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் இதற்கு ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயக் கோரிக்கை முட்டுக்கட்டையாக அமைகிறது. அது அமைதியாக நீக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் அபிலாசை.

அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேவை முடிந்து விட்டது. பாக்கிஸ்தானில் சியா உல் ஹக், ஈராக்கில் சதாம் குசேயின், எகிப்தில் முபராக் ஆகியோரைப் போல் இவரையும் தூக்கி எறிய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்தியா இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டுள்ளது.

ஆட்சித் தலைமை மாற்றம் ஈழத் தமிழர்களை எவ்விதத்திலும் திருப்திப் படுத்தப்போவதில்லை. சர்வதேச சமூகத்தின் பின்னணி ஆதரவோடு சிங்கள மேலாதிக்கம் கூடுதல் பலம் பெற்றுவிடும். ஈழத் தமிழர்கள் புனர்வாழ்வு மற்றும் மேம்பாடு என்ற எல்லைக்குள் முடக்கப்படுவார்கள்.

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால் மாத்திரம் ஈழத் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப் போவதில்லை. உண்மையான நீதியும் நியாயமும் ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்ககையை அங்கீகரிப்பதில் மாத்திரம் தங்கியுள்ளன.

www-Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.