Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 17 - கடக்க முடியா நிழல்

Featured Replies

மே 17 - கடக்க முடியா நிழல்

அக்கினி

துக்கத்தின் நினைவுகளைக் கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் 'அழியா நினைவுகள்' அவை. ஏனெனில் அவை 'மரண நனவுகள்'.

பசியோடிருந்த வயிறுகளை, மரணக்குழியில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்களை, முடிவேயற்றிருந்த சாவோலத்தை, பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை, நம்பிக்கையூட்டுவதற்கு எந்த வார்த்தைகளுமே இல்லாதிருந்த கையறு நிலையை எந்த நிலையில் மறக்க முடியும்?

மனித வரலாற்றில் இத்தகைய சிலுவையேற்றம் எத்தனை தடவை நடந்தாலும் இன்னும் முடியாத அவல நாடகம் அதிகார வெறியும் ஒடுக்குமுறையும்.

மனித மனம் உண்மையில் அத்தனை குரூரமானதுதானா?

சட்டங்களும் அறமும் விழுமியங்களும் நீதியும் அன்பும் கருணையும் நம்பிக்கையும் மனிதாபிமானமும் அதிகாரத்தின் பின்னே மங்கிச் செல்லும் விதியை என்வாழ்விற் கண்டேன் வெளிப்படையாகவே.

சர்வதேச சமூகம் என்பது அழகொழிரும் வெறும் பொய்த்திரை என்று சிறு பிள்ளைக்கும் புரிந்தது அப்போது.

சாதாரண சனங்களின் மரணத்தோடும் பசியோடும் விதியோடும் விளையாடிக்கொண்டிருந்தது இந்த உலகம். இது வேடிக்கையான உலகமா? இல்லைக் குரூரமான உலகமா? இல்லை இதுதான் நடைமுறை உலகமா? எது, எது?

விடுதலையைக் கொடுப்பதற்குப் பதிலாக அடக்குமுறையைப் பிரயோகிக்கும் விதியின் வேருக்கு மேலும் நீர்விட்ட சந்தர்ப்பம் அது. கொடிதிலும் கொடிதான அணுகுமுறை அது.

மரணத்தை ஒரு பொறியாக, பசியை ஒரு சுருக்குக் கயிறாகக் கையாண்ட தந்திரோபாயம். அதை எந்த நிலையிலும் எந்த மனிதரும் மறக்கவே முடியாது.

உலகத்தில் இதைவிடக் கேவலமான தந்திரோபாயம் ஒன்று இருக்க முடியுமா?

ஆனால், இந்தக் கேவலமான தந்திரோபாயத்தைத் தான் பெரும்பாலான அரசுகளும் ஆதிக்கச் சக்திகளும் எப்போதும் எங்கும் கையாள்கின்றன.

ஒவ்வொரு அதிகார பீடத்தினுள்ளேயும் நிணமும் சீழும் கண்ணீரும் குருதியும் வேதனையின் முனகலுமே உள்ளன என்ற வரலாறு பற்றிய சித்திரத்தில் முழு உண்மையே உண்டு.

வன்னியின் இறுதிப்போர் எல்லாவகையான மனித விதிகளுக்கும் மாறாகவே நடந்தது, நடத்தப்பட்டது.

இன்று நடக்கின்ற பிரேத பரிசோதனைகள் இன்னொரு அவமதிப்பு. அரசியல் லாப நட்டக்கணக்குகளின் கள நிலைமைகள் வேறாக இதை உணர வைக்கலாம்.

ஆனால், உண்மையை உணர்ந்த மனதுக்குத் தெரியும் என்னவெல்லாம் நடந்தன என்று. அப்போது எப்படியான மதிப்பை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இந்த உலகம் கொடுத்தது என்றும், உலகத்தின் கள்ள உறக்கம் அன்று எப்படி இருந்தது என்றும்.

ஆகவே முன்னர் நடந்தது உயிரோடான அவமதிப்பெனில், இப்பொழுது நடந்து கொண்டிருப்பது, இறந்த உடலுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. நீதி கிடைக்கவே கிடைக்காத விசாரணைகளும் விசாரணைகளைப் பற்றியும் நீதி அளித்தலைப் பற்றியுமான விளம்பரங்கள் உண்மையில் பாதிக்கப்பட்டோரைக் கேலிசெய்தலே.

உயிரோடு எஞ்சிய சனங்களுக்கு எந்த விதமான மதிப்பையும் அளிக்கத்தயாரில்லாத நிலையே இன்னும் நீடிக்கிறது.

இதை யாராற்தான் மறுத்துரைக்க முடியும்?

ஆனாலும் நாங்கள் என்ன செய்ய முடியும்?

உலகம் என்பது ஒரு பொது ஓட்டம். அதற்கு எதிராக மறுத்தோட எத்தனிக்கும்தோறும் இடறலே ஏற்படுகிறது. இந்த இடறல் பேரவலத்தில், பெருந்துக்கத்தில் போய் முடிகிறது.

இதனாற்தான் சொன்னார்களா, 'ஊரோடு சேர்ந்தோடு' என்று?

மனித விதியையும் விட சர்வதேச அரசியலின் விதியே அதிக வலிமை கூடியது. எனவே அந்த விதியின் அசைவின் படியே நிகழ்ச்சிகள் அமைகின்றன. அதன்படியே நிலைமைகளும் உள்ளன.

என்றாலும் துக்கத்தின் நினைவுகளை மறக்க முடியாதே. வலி அடங்காத வரையில் வேதனை தீராது. வேதனையோ காயங்களைப் பற்றிப் பேசச் சொல்லும். காயங்களின் நினைவுகளை மீட்கும். அந்தளவுக்குக் கொடுமையான காய நிகழ்வுகளின் நினைவுகள்.

நினைவுகளே மனிதனின் காயங்களை, துக்கத்தைத் தொடர்ந்து காவுகின்றன என்றாலும் அவையே மனித அடையாளத்துக்கும் இருப்புக்கும் காரணமாக உள்ளன. நினைவுகளை இழந்தால், அடையாளங்களையும் இழந்ததாகி விடுமல்லவா.

மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லையென்றால் நீங்கள் உங்களுடைய வீட்டுக்கே திரும்ப முடியாது. உங்களின் தாயையும் தந்தையையும் கூட உங்களால் அடையாளம் காண முடியாது. உங்களின் பிள்ளையை உங்களுக்கு அடையாளம் காட்டுவது கூட உங்களிடமுள்ள நினைவே.

இதே நினைவுகளே இன்னொரு பக்கத்தில் காயங்களின் வலியைப் பற்றியும் துக்கத்தின் கனதியைப் பற்றியும் ஞாபகப்படுத்துகின்றன.

நீங்கள் அடைந்த அவமானங்களைப் பற்றி, நீங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி, உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதைப் பற்றி, உங்களுக்கு அநீதியை இழைத்தவர்களைப் பற்றி எல்லாம் இந்த நினைவுகளே உங்களுக்கு அறிதலைத் தருகின்றன. இவையே உங்களை எச்சரிக்கை செய்து வைக்கின்றன.

செப்ரெம்பர் 11 என உலகம் பேசுகின்ற துக்கம் மட்டும்தான் உலகத்தின் பெருங்காயமா?

அன்று ஏற்பட்ட காயந்தான் பெருங்காயமா?

செப்பெரம்பர் 11 க்குப் பின்னர் எப்படி உலக ஒழுங்கு மாற்றமடைந்தது?

அவ்வாறெனில் அதையும்விடப் பல மடங்கு துயரும் அவலமும் உயிரிழப்பும் நடந்த வன்னிப் போர்க் காயத்தின் பெறுமதி என்ன? அதன் மதிப்பு என்ன?

குறைந்த பட்சம் 2009 மே 17 க்குப் பின்னரான ஈழத்தமிழரின் நிலைமை என்ன?

எங்களுடைய நினைவுப்பரப்பில் உறைந்து போயிருக்கும் ஆறாக் காயத்தை ஆற்றுவது எப்படி?

காயங்களுக்கான மருந்தின்றியே 'காயங்களை ஆற்றுங்கள்' என்றே நாங்கள் தொடர்ந்து கேட்கப்படுகிறோம்.

இது கொடியதே. இது நீதிக்குப் புறம்பானதே. நீதிக்குப் புறம்பான எதுவும் 'நெருப்பைத் தின்' என்று சொல்வதற்குச் சமனானது.

ஆனால், மறைமுகமான கட்டளைகள் இப்படித்தானுள்ளன.

கடவுளே!

இந்த நிலையில் கடக்க முடியாமலிருக்கும் துக்கத்தின் நிழலை எப்படிக் கடப்பது?

மரணத்திற் பிறந்த, மரண அவஸ்தையிற் பிறந்த, மரணக்குழிகளிலிருந்து படர்ந்த நினைவுகளின் நிழல் இது. அங்கே பிறந்த காயங்களின் நிழல் இது.

மரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக் கொடியது, மரணத்தைக் கண்டும் அஞ்சுவோரைத் தேற்றுவது. அதையும் விடக் கொடியது மரணத்தினால் அலைக்கழிக்கப்பட்ட நாட்களின் நினைவுகளைக் கடப்பது.

செப்ரெம்பர் 11 அமெரிக்காவுக்குப் பெருந்துக்கத்தைத் தந்ததெனில், ஹிரோஸிமாவும் நாகசாகியும் யப்பானுக்குப் பெருங்காயத்தைத் தந்ததெனில்,

மே 2009 ஈழத்தமிழர்களுக்கு மறக்கவே முடியாத காயத்தைத் தந்தது.

அன்று மூடமறுத்துத் துடித்த விழிகளை எப்படி மறப்பது?

கதற முடியாமல் மூச்சையடக்கிய அந்தக் குரல்களை மறப்பதெங்கனம்?

விடுதலையையே மூச்சாகக் கொண்டியங்கிய வீரர்கள் களத்தில் வீழ்வதற்குப் பதிலாக, வெற்றியைப் பெறுவதற்குப் பதிலாக, வன்கொடுமைச் சாவில் வீழ்த்தப்பட்டதை மறந்து விடுவதெப்படி?

தாங்கிய ஆயுதத்தையும் நெஞ்சிலேந்திய கனவையும் கொண்ட உறுதியையும் இலட்சியத்தையும் ஒரே கணத்தில் விட்டுச் சரணடைவெனும் நிர்க்கதியில், நிராயுத நிலையில் வீழ்ந்ததை மறத்தலெவ்வாறு?

எல்லாத் திசைகளிலிருந்தும் மரணத்தை ஒரு பெரிய கரிய இரும்புத் திரையாக நெருக்கி, அதன்மூலம் நெருக்கடியை ஏற்படுத்தி, அதனாற் கிளம்புகின்ற பீதியையே எல்லா ஒடுக்குமுறையாளர்களும் தங்களுடைய வெற்றிக்கொடிக் கயிறாக்கிக் கொள்கிறார்கள்.

வன்னியில் 2009 மே யிலும் அப்படித்தான் தமிழ்ச் சனங்களின் கழுத்தை இறுக்கிய தூக்குக் கயிற்றைத் தங்களுக்கான வெற்றிக்கொடியின் கயிறாக்கிக் கொண்டது இலங்கை அரசு.

ஒரு அரசு இப்படித் தன்னுடைய குடிமக்களின் குருதியிலேயே வெற்றி முழக்கங்களைச் செய்ததை உலகத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக் கொண்டேயிருந்தன என்பதே இந்தக் காயப்பரப்பில் மறக்கக் கடினமாக இருப்பது.

'மே' என்றவுடன் மனம் பதைக்கும் நினைவுகள் மேலெழுந்து வருகின்றன.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுகூடுங்கள் என்று மேயில் முழங்கப்படும் வார்த்தைகளை விடவும் 2009 மேயில் கதறிய அவலக்குரல்களே நினைவுப் பரப்பில் நிறைந்து போயுள்ளன.

இது காயங்களைப் புதுப்பிக்கும் - நினைவுகளைக் கிளப்பி விடும் காரியமல்ல. அந்தக் காயங்களிலிருந்து அரசியல் அறுவடையைச் செய்யும் குறுகிய நோக்கமுடைய எண்ணங்களுமல்ல.

வீழ்ந்தவர்களுக்கும் வீழ்த்தப்பட்டவர்களுக்குமான இரங்கல் அவமதிக்கப்படாதிருக்க வேண்டும் என்ற வேட்கையின் ஒலிப்பு.

ஆயிரமாயிரம் கண்களில் அணையாதிருந்த விடுதலை வேட்கையின் நெருப்பை ஒரே நாளில் இரகசியமாகக் கைவிடுங்கள் என்று எப்படி இந்த உலகம் கேட்க முடியும்?

அது நந்திக்கடலோரத்தில், வங்கக் கடற்கரையில், முல்லைத்தீவு என்ற தொன்மையான பட்டினத்தினோரத்தில் வீழ்ந்து பட்ட மக்களின் மீதான சத்தியப் பாடலின் ஆன்மா.

அதற்கான சாந்தி என்பது விடுதலையிற்தான் கிட்டும். அன்றே வீழ்ந்தவர்களின் நினைவுகளுக்கு இந்த உலகத்தின் இரங்கலும் மரியாதையும் அமையும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=2af18fe6-3d3a-4e8a-ad54-4f4b3c7d8632

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.