Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குழந்தை பொம்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பொம்மைகள்

child.jpg

கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள் எல்லாவற்றிக்கும் ‘ஆமாம்’ என்ற பதில் உங்களிடம் இருக்குமானால் இந்தக் கட்டுரையைத் தவிர்த்து வேறு பக்கங்களுக்கு நீங்கள் செல்லலாம். முழுவதற்கும் ‘இல்லை’ என்ற பதிலானால் கட்டாயம் ஒரு நிமிடம் செல்வழித்து இதை வாசித்துவிடுவது நலம். சிலவற்றுக்கு ஆம் சிலவற்றுக்கு இல்லை என்று நடுவில் தத்தளிப்போருக்கு படிப்பதும் விடுவதும் உங்கள் சாய்ஸ்.

1) உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறீர்களா?

2) அவர்களின் உடல் மற்றும் மனத் தேவைகளை பூர்த்தி செய்கிறீர்களா?

3) குழந்தைகளின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?

4) வேலையிலிருந்து திரும்பியதும் அவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குகிறீர்களா?

5) அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்னவென்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

இன்னும் இது போன்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்தான். இந்த சாம்பிள் கேள்விகளுக்குள் ஆயிரம் உப கேள்விகளும் அடக்கம். கேள்விகளுக்கு பதில்கள் யோசித்திக்கொண்டிருக்கும் வேளையில் என் தோழியின் பிரச்சனையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தீர்வு தெரிந்தால் சொல்லுங்கள்.

சுதாவிற்கு ஒரு பதிமூன்று வயது மகளும் பத்து வயது மகனும் இருக்கிறார்கள். அவள் தனியார் கம்பெனியில் உயர் பதவி வகிக்கிறாள். இந்த நிலையை அடைய அவள் நிறைய உழைக்கவேண்டியிருந்தது. நேரம் காலம் இல்லாமல் வேலை வேலை எப்போதும் வேலை. கணவன் பிரசாத் பூனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என்று தன் வேலைக்கு ஏற்றபடி சுற்றிக் கொண்டிருப்பவன். தனிமையில் விடப்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சியிலும், இண்டர்நெட்டிலும், ஐபாட்களிலும், மொபைலிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தோழர் தோழியர் தான் உலகம். மற்றவர்கள் அது பெற்றோர்களாக இருந்தாலும் சரி ‘இருக்கிறார்கள்’ அவ்வளவே.

மனித மனத்திற்கு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் போதாது. ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீட்டை வாங்கி அதை வாடகை விடச் சொல்லும். வேலைக்கு போய் பழகி பதவி தரும் சுகங்களை அனுபவித்து விட்ட சுதாவிற்கு அது மட்டும் முடியாது. ஆனால் குழந்தைகளைப் பற்றி சதா கவலைப் பட்டு பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.

சுதாவின் மகள் ஹர்ஷிதாவிற்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். கேள்விகள் கேட்டால் பிடிக்காது. அழுது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வாள். அம்மாவிடம் சண்டை போட்டு, சாப்பிடமால் ப்ளாக் மெயில் செய்வாள். இவள் இப்படியென்றால் ஆறாவது படிக்கும் ராகுலுக்கு படிப்பில் நாட்டமே இருப்பதில்லை. எல்லா சப்ஜெக்டிலும் பெயிலாகிவிடுவான். இந்தப் பிரச்சனை இத்துடன் நிற்காமல் கணவன் மனைவிக்குள் உறவு விரிசல் ஏற்படும் அளவிற்கு பாதித்தது. நீ சம்பாதிச்சு கிழிச்சது போதும் அதான் நான் நாய் மாதிரி அலைஞ்சு சம்பாதிச்சு கொட்ட்றேனே, நீ குழந்தைகளை பாத்துட்டு வீட்டல இருக்க வேண்டியது தானே?

வார்த்தைகள் வார்த்தைகள் வீடு முழுவதும் இறைக்கப்பட்ட வார்த்தைகள் வீதி வரை வழிந்தோடி கோர்ட் வந்ததும் தான் நிற்கிறது. சுதாவிற்கும் பிரசாத்திற்கும் மிகவும் தேவையானது பொறுமை. அதன் பின் உணர்ச்சிகளின் சமன்நிலை (emotional intelligence) தங்களின் ஆத்திரம் கோபம் இயலாமை ஆகியவற்றை தங்கள் அப்பாவி குழந்தைகளின் மீது கொட்டி குடும்பம் என்னும் அமைப்பை உடைத்தெறிய நினைக்கிறார்கள். அவர்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது, அவர்கள்தான் வளர்ந்துவிட்டார்களே? ஆனால் எதிர்ப்பு காட்ட இயலாத அந்தக் குழந்தைகளை பலியாக்கி அவர்கள் சாதிக்கப் போவது என்ன? அவர்களின் மனச் சிக்கல்கள் மேலும் மேலும் தான் கூடுமே தவிர குறையாது.

சுதாவிற்கு மட்டும் அல்ல இது போன்ற பிரச்சனைகள் நம்மை சுற்றியுள்ள ப்ரியா, அமிர்தா, சாரதா, தாரிணி என்று பெண்களின் பெரும் ‘பிரச்சனை’ குழந்தை வளர்ப்பு.

‘குழந்தை வளர்ப்பு கலை’ என இனிமையாக சொல்ல வேண்டிய ஒன்றை ‘பிரச்சனை’யாக்கியது காலக் கொடுமை தான்.

இதெற்கெல்லாம் என்ன தான் தீர்வு?

வேலையிலிருந்து திரும்பியதும் மிகவும் களைப்பாகத் தான் இருக்கும். ஆனால் நம் களைப்புக்கள் எல்லாம் பிள்ளைகளைக் கண்டால் காணாமல் போய்விடும் தானே. அவர்களுடன் மேலும் சில மணி நேரம் செலவழித்து அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளுங்கள்

‘அறுக்காதே, அய்யோ உன் ஸ்கூல் புராணத்தை நிறுத்தேன்’ என்று சொல்லி அவர்கள் முகத்தை வாடிப் போகச் செய்யாதீர்கள. அவ்வப்போது அவர்களின் உலகத்திற்குள் என்ன நடக்கிறது என்று வேடிக்கைப் பாருங்கள்.

அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்களில் பங்கு எடுங்கள். அவர்களின் கஷ்டத்திலும் தான். நமக்கு கடுகு போலத் தெரியும் பிரச்சனைகள் அவர்களுக்கு மலை போன்றது. சில குழந்தைகள் என்ன செய்வது யாரிடம் சொல்வது என்று பயந்து தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருப்பார்கள். பேசித்தான் விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.

அவர்களின் ஒவ்வொரு வெற்றியையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு கிப்ட் வாங்கிக் கொடுத்தாலும் அன்பான ஒரு முத்தத்திற்கு அர்த்தங்கள் நிறைய.

நம் மகனுக்கோ மகளுக்கோ சிங்கப்பூரிலிருந்து பொம்மைகளும் சீனாவிலிருந்து விளையாட்டுச் சாதனங்களோ எளிதில் வாங்கிக் குவிக்க நம் பொருளாதாரம் இடம் கொடுக்கிறது. ஆனால் அவர்களின் சின்னஞ்சிறு உலகத்தில் எங்கிருந்து வாங்கினால் என்ன அது ஒரு சாதாரண விளையாட்டுப் பொருள் அவ்வளவே. தாகூரின் கவிதை ஒன்று (Playthings) நினைவுக்கு வருகிறது.

வேலையின் அழுத்தங்களால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு தந்தை தன் மகன் விளையாட்டை ஒரு காலைப் பொழுதில் வேடிக்கைப் பார்க்கிறான். புழுதியில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு சின்னஞ்சிறிய உடைந்த மரக்கட்டை ஒன்று கிடைத்தது. அது அவனின் அப்போதைய விளையாட்டுப் பொருளாக மாறி அளவில்லா மகிழ்ச்சியை அவனுக்குத் தருகிறது. விளையாட்டிக் திளைக்கிறான். இனிய காலையை பேப்பரிலும் எழுத்திலும் தொலைத்துவிட்டீர்களா அப்பா என்று மகன் தன்னைப் பற்றி மனதிற்குள் நினைத்து சிரிக்கக்கூடும். மகனே நானும் உன் போன்றே நானும் ஒரு காலத்தில் மண்ணையும் கல்லையும் வைத்து விளையாடி உள்ளேன், ஆனால் அவையெல்லாம் மறந்துவிட்ட தருணங்கள். விலைமதிப்பற்ற உன் விளையாட்டுச் சாமான்களுக்கு எதிராக பொன்னையும் வெள்ளியையும் கொட்டிக் குவித்தாலும் ஈடாகாது.

அடையவே முடியாத பொருள்களின் மேல் ஆசைக்கொண்ட என் பயணங்களின் பாதைகள் முடிவற்றவை, நீயோ புதிது புதிதாக உன்னால் உருவாக்கப்பட்ட விளையாட்டு உலகத்தின் எல்லை வரை சென்று திரும்புகிறாய். உன் உலகம் என் போன்றதில்லை. இந்த உலகமே விளையாட்டுக் களம் என்ற மறந்த எனக்கு எதுவுமே பெரிதாய் தெரிவதில்லை.

என்ன அற்புதமான பார்வை!

நாம் இழந்த அந்தக் குழந்தைகளின் உலகை முடிந்த வரை அறிந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுடன் சக பயணிகளாக இல்லாவிட்டாலும் வழித்துணையாக நம்மால் இருக்க முடியும்.

குழந்தைகளின் வெற்றி விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, அவர்களின் தோல்விகளையும் பெரிது படுத்த வேண்டாம். தோல்வியின் காரணங்களை இதமாக அவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும். நாம் தானே அவர்களை அணைத்து ஆறுதல் படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். தண்டம், ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை என்று பழித்து அவர்கள் மனதை சுக்கு நூறாக்கிவிட்டால், பின்னர் என்ன செய்தாலும் அதை சரி செய்ய முடியாது.

நம் குழந்தைகளின் ஆர்வங்களை கண்டறிந்து கொள்ள வேண்டும். ஓவியமோ, கவிதையோ, நடனமோ, பாடலோ, வெறும் டீவி ஷோக்களில் திற்மைகளை வெளிக்கொண்டு வந்து நாலு பேர் பாராட்டினால் போதாது. முறையாக அவர்க்ளை அத்துறையில் பயிற்றுவித்து அவர்களின் விருப்பம் அறிந்து செயல் பட வேண்டும். ‘என் பையன் ராக மாலிகாவில் பாடி பரிசு பெற்றான் என்பது மட்டும் சிறப்பல்ல. அதன் பின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை அவனுக்கு வழிக்காட்டியாக இருந்து பெற்றோர்கள் தான் நிகழ்த்த வேண்டும். அதை விட்டுவிட்டு என்னால் முடியாததையெல்லாம் என் மகன் செய்வான் என்று கனவுகளை ஒரு போதும் திணிக்காதீர்கள், அது எவ்வளவு உன்னதமாக இருந்தாலும் அது நம் கனவு, நம் பிள்ளைகளின் கனவல்ல. அவர்களின் கனவு லட்சியம் வேறாக இருந்தால் நீங்கள் தான் மாறிக்கொள்ளவேண்டும்.

கலீல் கிப்ரானின் இந்த வரிகள் எவ்வளவு அர்த்தமானது? ‘தீர்க்கதரிசி’எனும் அவரின் கவிதை நீங்கள் குழந்தையை வளர்க்காதீர்கள் எனும் கருத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது.

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல;

அவர்கள் வாழ்க்கை தமக்கென்று வேண்டிய குழந்தைகள்

அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்; உங்களிடமிருந்தல்ல

அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல

உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்

உங்கள் எண்ணங்களை அல்ல

அவர்களுக்கென்று தனி சிந்தனைகள் உண்டு

அவர்களின் உடல்களுத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும்

அவர்களின் ஆன்பாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை

அங்கே நீங்கள் செல்ல முடியாது

உங்கள் கனவுகளிலும் கூட.

அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால்

அவர்களை உங்களைப் போல ஆக்கிவிடாதீர்கள்.

வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது; நேற்றுடன் ஒத்துப் போகாது

நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்”

குழந்தைகள் மீது எதையும் நாம் திணிக்க வேண்டாம். கற்றுத் தருகிறேன் பேர்வழி என்று நமக்கே தெரியாத எதையும் அவர்களின் சின்னஞ்சிறு தலைகளில் ஏற்றிவிடவேண்டாம். ஐந்து வயது பிள்ளையை நாலு மணிக்கு எழுப்பி ‘அபாக்கள்’ க்ளாஸ் அனுப்பும் கொடுமைகள் இங்குதான் நடக்கும்.

வாழ்க்கையை விட சிறந்த ஆசிரியன் யாருமில்லை. நீங்கள் கூட இருந்தால் போதும்,சூழல்களை உருவாக்கித் தந்தால் போதும், அன்புத் துணையாக கூட இருந்தால் போதும். அற்புதமான குழந்தைகள் உருவார்கள். குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள்.

வேலை என்றும், வசதிகள் என்றும் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை தொலைத்துவிட்டு பிறகு அழுது புலம்புவதில் பயனில்லை. குழந்தைகள் நம் வாழ்வின் பொக்கிஷங்கள். அவர்கள் இயற்கையிலேயே மலர்ச்சியானவர்கள். அடுத்த தலைமுறை எதிலும் பின் தங்கிப் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

குழந்தைகளுக்காக இன்று நாம் நேரம் ஒதுக்கவில்லையென்றால் நாளை எல்லா வசதிகளும் நிறைந்த ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் அதி நவீன பொருள்கள் எல்லாம் இறைந்து கிடக்க, எதிலும் பற்றில்லாமல் மோட்டு வளையத்தைப் பார்த்தபடி இருக்கவேண்டிய நிலை தேவைதானா? அமெரிக்காவிலோ ஆஃபிரிக்காவிலோ இருக்கும் பிள்ளைகளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் கடந்து போன காலம் திரும்பித் தான் வந்துவிடுமா?

('பெண்ணே நீ' பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.