Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலஷ்னிக்கோவ் ஏந்திய கரங்கள் எழுதிய கவிதைகள் தலிபானின் ஆழ்கருத்துச் செய்யுள்கள்

Featured Replies

சற்று யோசிக்கையில் ஹாலிவூட் சினிமாக்கள் ரம்போ 1, ரம்போ 2 போல் கடைசியாகக் காலச்சுவடில் எழுதிய பத்தியின் கட்டுரைத் தலைப்பையே இதற்கும் கொடுத்துப் ‘படிவார்ப்புகள் சிதைந்த கதை 2’ என எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. தலிபான்கள் என்றால் இறுக்கமான எண்ணம் நமக்கு இருக்கிறது. அவர்கள் கவிதை எழுதுவார்கள் என்று யாராவது உங்களுக்குச் சொன்னால் நம்புவீர்களா? தலிபான்கள் கவிதை எழுதுவது ராஜபக்ஷ ஈழ உரிமைக்காக உயிர்கொடுப்பார் என்று சொல்வதைப் போன்றது. அப்படிச் சொல்பவரை இரண்டுதடவையாவது மேலும் கீழும் கட்டாயம் பார்ப்பீர்கள். அவர் உங்களுக்கு வேண்டியவராக இருந்தால் அவரது புத்தி சுவாதீனம் பற்றி உங்களுக்குக் கவலையும் ஏற்படலாம்.

afghanistan.jpgகட்டுங்கடங்காத தாடி, ஊத்தையான தலைப்பாகை, கசங்கிய நீண்ட உடுப்பு, கையில் துப்பாக்கி, பெண்களை அடுப்படியில் அடக்கிவைத்தல், எதிரிகள்/துரோகிகளின் தலைகளைக் கொய்தல், நவீனத்தின் கனிகளான சினிமா, ஒலித்தட்டுகளை அழித்தல், தற்கொலைக் குண்டுதாரிகள் இவைதாம் நம்முன் காட்சியளிக்கும் தலிபான் பற்றிய தோற்றுருவுகள். ஆனால் தலிபானுக்கு இன்னுமோர் அழகியல் ஆளுமை உண்டு. உயர்கருத்துகளையும் ஆழ் உணர்ச்சிகளையும் வடிவான சொற்கோப்பால் தரும் தலிபான்களும் இருக்கிறார்கள். அவர்களை Poetry of the Taliban என்னும் கவிதைத் தொகுப்பில் காணலாம். காலனியக் காலத்தில் இருகவிதைத் திரட்டுகள் வெளிவந்தன. அவற்றில் ஒன்றை ஆங்கிலேயரான எச். ஜி. ராவர்டியும் (Selections from the Poetry of the Afghans (1862), H. G.. Raverty) மற்றதைப் பிரஞ்சுக் காரரான ஜேம்ஸ்டாமஸ்டெட்டரும் (Chants Populaires des Afghans 1888, James Darmesteter) பதிப்பித்திருந்தார்கள். அதே வரிசையில் பின்காலனியத்தின் கருத்தறிவிப்பாக இந்தத் தொகைநூலைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆப்கான் காரியங்களில் அதிகம் பரிச்சயமுள்ள Alex Strick Van Linschoten,Felix Kuehn என்னும் ஆராய்ச்சி யாளர்கள் இந்தத் தொகுப்பைப் பதிப்பித்திருக்கிறார்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள 235 கவிதைகள் தலிபான் கலாசார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவையல்ல. தலிபான் தலைமைப் பீடத்தால் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட பரப்புரையும் அல்ல. இந்தக் கவிதைகள் அலுவல் முறைக்கு அப்பாற்பட்ட தனிமனிதத் தலிபான்களின் மாற்றுக் குரல்கள். இதுவரை ஊடகத்தில் தலிபானின் உத்தியோகபூர்வமான ஞானப் பிரசங்கத்தை வாய்ப்பாடுபோல் உளறும் சுயத்தை இழந்த, ஆள்வோரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வெகுசில தலிபான்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தத் தொகுப்பில் சாதாரணமான சதையும் ரத்தமுமான தலிபான்களைச் சந்திக்க முடிகிறது. அவர்களின் காதல்கள், காத்திருப்புகள், ஏக்கங்கள், தேடுதல்கள், எதிரிகள், வினவல்கள், ஏளனங்கள் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தலிபான்களின் பன்மைத்தன்மை, அவர்களின் முறிவுகள், தொடர்ச்சியின்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்தக் கவிதைகளை இரண்டு சங்கதிகள் ஒருங்கிணைக்கின்றன. தாய்நாட்டின் மீதுள்ள மட்டுமீறிய வாஞ்சை, அன்னியப் பிரவேசிகளை நாட்டிலிருந்து எப்படியாவது வெளியேற்றுதல் ஆகியன அவை.

இந்தத் தொகுப்பில் பதிவாகியுள்ள செப்டம்பர் 11க்கு முன் எழுதப்பட்ட கவிதைகள் பத்திரிகைகளிலிருந்தும் இதழ்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை. மற்றவை அவர்களின் இணையத்திலிருந்து தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கப்பட்டவை. எல்லாக் கவிதைகளுமே ஆப்கான் வாழ்க்கை, அரசியல், சமூகம் மற்றும் அந்த நாட்டின் நிலப்பரப்பு பற்றியவை. ஒன்றைத் தவிர. சாடாட் என்னும் கவிஞரால் எழுதப்பட்ட லண்டன் வாழ்க்கை அந்த நகர மக்களைப் பற்றித் துயருறுகிறது:

மின்தேய்ப்பு செய்யப்பட்ட தூய உடுப்புகளுடன் நடமாடுகிறார்கள்

// ஆனால் அவர்களின் அகங்கள் பரிசுத்தமானவை அல்ல// யாருடன் மோதலாம் என்பதுதான் இரவும் பகலும் இவர்களுடைய வேலை// இதைவிட வேறு செயல்திறம் இவர்களிடம் ஒன்றும் இல்லை.

என்று ஆங்கிலேயரின் இருமை வாழ்க்கையையும் அவர்களின் அரசியல் குறுக்கீடுகளையும் இக்கவிதை விமர்சிக்கிறது.

எதிர்பார்த்தபடி இத்தொகுப்பில் பதிவுசெய்யப்பட்ட எல்லாக் கவிதைகளுமே ஆண்களால் எழுதப்பட்டவை. இந்த இயல்பை மீறிய ஒரேயொரு பெண் ஆசிப் நசரட். அவரது ‘உன் தலைப்பாகையை எனக்குத் தா’ என்னும் கவிதையில் சண்டித்தனமற்ற சப்பையான தலிபானைப் பார்த்துக் கேட்கிறார்:

Felix-Kuehn.jpg‘உன் தலைப்பாகையை எனக்குத் தா/என் முக்காடை எடுத்துவிடு/வாளை எனக்குத் தா. ஒரு முடிவு எடுத்துவிடலாம்/நீ வீட்டில் இரு. நான் யுத்தத்திற்குப் போகிறேன்/நான் நாட்டை விடுதலைசெய்வேன் அல்லது அன்பே ஒரு புதிய கார்பலாவை1 உருவாக்குவேன்/நீ உன்னை ஆண் என்று சொல்லாதே/எத்தனை நாட்களுக்குத்தான் நீ படுத்துக் கிடப்பாய்/சிறு பெண்களிடம் சிக்கிக்கிடக்கிறாய்/உன் ஆண் பிள்ளைத் தனத்துக்கு அவக்கேடு வரட்டும்/நாடே கொழுந்துவிட்டு எரிகிறது.//விதவைகளையும் அனாதைகளையும் பற்றி உனக்கு என்ன தெரியும்?’

இந்த வாக்கியங்கள் தலிபான்கள் எப்போதுமே துடிதுடிப்புடன் செயல்படும் கடும் போராளிகள் என்ற எண்ணத்தைச் சிதைப்பதுடன் பெண்களிடையே தலிபான்கள் பற்றிய மனப்பாங்கையும் வெளிப்படுத்துகின்றன. தலிபானைத் தட்டி எழுப்பும் ஆசிப் நசரட்டின் இந்த வீர வாக்கியங்கள் இன்னுமொரு ஆப்கான் பெண் விடுதலை வீரரை ஞாபகப்படுத்துகின்றன. 1880 ஆங்கில - ஆப்கான் போரில் தளர்ந்திருந்த ஆப்கான் வீரர்களைத் தட்டி எழுப்பிய மல்லாய்2 என்ற ஆப்கான் மாதுவின் உக்கிராவேச வசனங்கள் இன்னும் ஆப்கான் நாட்டார் வழக்கில் இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் பல இடங்களில் மல்லாயின் துணிச்சல் மிக்க செய்கை தலிபான் கவிஞர்கள் பலரால் நினைவுகூரப்பட்டிருக்கிறது.

ஆறு தலைப்புகளில், செப்டம்பர் 11க்கு முதல், காதல், சமயப் பற்றார்வம், மனக்குறைகள், மறைகுழி, மனித வாழ்வின் விலைபெறு ஆகிய தலிபான் கவிதைகள் இந்தத் தொகுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. கவர்ச்சியூட்டும் அதே வேளையில் கருத்துமாறுபாட்டுக்குரிய கவிதைகள் கடைசிப் பகுதியில் இடம்பெறுகின்றன. பெரும்பாலான கவிதைகள் போரையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசுகின்றன. போர்ப் பாடல்கள் ஆப்கான்களுக்குப் புதிதல்ல. கிரேக்கர், மங் கோலியர், பாரசீகர், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், ருசியர்கள் கடைசியாக அமெரிக்கர்கள் எனப் பலர் இந்த நாட்டை ஆக்கிரமித்திருக்கிறார்கள். படையெடுத்து நுழைந்த அன்னியர்களை எதிர்த்து ஆப்கான் கவிஞர்கள் பலர் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் Khushal Khan Khattak, Mahmoud Tarzi, Salih Mohammad.

சரித்திரம், இலக்கியம் ஆகிய சமாச்சாரங்களில் தலிபான்களுக்கு அக்கறை இல்லை என்பது பொதுவான கருத்து. சாக்கீர் என்னும் கவிஞரின் “The history of epics is not lost, reopen it!” என்னும் வாசகம் இதைப் பொய்ப்பிக்கிறது. இந்தக் கவிதைகளில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டையை ஏதோ இஸ்லாமுக்கும் அதன் எதிரிகளுக்கும் நிகழும் முடிவில்லாப் போராகப் பார்க்காமல் வரலாற்று உணர்ச்சியுடன் தலிபான்கள் அணுகும் தன்மை காணப்படுகிறது. அமெரிக்கக் கூட்டுப்படையைச் சிலுவைப் போர் வீரர்களுடன் ஒப்பிட்டது ஏற்புக்குரிய எடுத்துக்காட்டு. பழைய ஏற்பாட்டு எகிப்திய பாரோ (Pharaoh) இன்றைய ஏகாதிபதிகளின் மாதிரிப்படிவியலாகப் பார்க்கப்படுவது இன்னுமொரு மேதகு மேற்கோள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜியார்ஜ் புஷ் நவீனப் பாரோவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பழைய ஆப்கான் போர் வீரர்களின் சாகசங்கள் இன்றைய போராட்டத்திற்கு மீண்டும் வரவழைக்கப்படுகின்றன. இடைக்கால ஜயசீலரான முகமது காசானி, 18ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் சமைத்த அகமது சா தூராணி, ஆங்கில ஆக்கிரமிப்பை எதிர்த்த அக்பர், அயூப் கான் போன்ற ஆப்கான் சரித்திர நாயகர்களை இந்தக் கவிஞர்கள் மறவாது நினைவுகூர்கிறார்கள். அதுமட்டுமல்ல பலரின் ஞாபகத்தில் இன்றும் இருக்கும் பழைய யுத்தங்களும் அடிக்கடி இந்தக் கவிதைகளில் மீட்டழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது 1880இல் நிகழ்ந்த இரண்டாம் ஆங்கில-ஆப்கான் போர். இந்தச் சமரில்தான் மேலே சொல்லப்பட்ட ஆப்கான் பெண் மல்லாயின் வீரார்ந்த வசனங்கள் திருப்புமுனையாக அமைந்தன. இந்த நினைவுகூரல்கள் தலிபான்கள் சரித்திர உணர்வில்லாத, கலாசாரமற்ற கடையர்கள் என்னும் அபிப்பிராயத்தை மாற்ற உதவும்.

இலக்கியக் காதலர்களான லைலா-மஜ்னு இந்தத் தொகை நூலில் நினைவுபடுத்தப்படுகிறார்கள். விவிலிய நாயகர்களான ஆபிரகாம், மோசே, ஜோசேப்பு பற்றிய குறிப்புகள் தலிபான் கவிதைகளில் உண்டு. பழைய ஏற்பாட்டில் மோசேயும் ஜோசேப்பும் கொடுன்கோன்மை ஆட்சிக்கு எதிராகப் போராடிய சூரர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மாறாகத் தலிபானின் விவரிப்பில் ஆபிரகாமின் அன்பு, மோசே நடத்திய அற்புதங்கள், ஜோசேப்பின் வசீகர உடல் வாகும்தான் அதிகம் கவனத்தைப் பெறுகின்றன. பரிச்சயமான இலக்கிய, விவிலியப் பாத்திரங்கள், பழக்கப்பட்ட பழம்பெரும் ஆப்கான் வீரர்கள், நன்கு தெரிந்த சரித்திரச் சம்பவங்களைக் கவிதைகளுக்குள் புகுத்தித் தலிபான் போராட்டத்திற்கு மரபுவழி அதிகாரத்தைச் சேர்த்தது மட்டுமல்லாமல் அவர்களுடைய செயல் நோக்கத்தின் சரித்திரத் தொடர்பையும் உறுதிப்படுத்த இக்கவிதைகள் முயல்கின்றன.

தலிபான்கள் எப்போதுமே சிடுசிடுப்பானவர்கள், தங்களைத் தாங்களே பகடிசெய்துகொள்ளத் தெரியாதவர்கள் என்னும் கருத்தைக் கூட இத்தொகுப்பு சற்று நகர்த்தும். தலிபானின் சுயகுறும்புத்தனத்திற்கு ருசிகரமான இரண்டு உதாரணங்கள்: ஒன்று The reason we always fold our moustaches upwards / Is because we break the necks of our enemies என்ற வரிகள். மற்றது புஷ்ஷையும் ஹாமீட் காசாயையும் காதலர்களாகக் கற்பித்து அவர்களின் பிரிவை அங்கதமாக எழுதிய கவிதை.

அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுடன் தலிபான்களின் கவிதைகளில் கடுங்காரமான தாக்குதலுக்குள்ளாகியிருப்பவர்கள் வெளிநாட்டுப் பகைவருக்கு உடந்தையாக இருக்கும் சக ஆப்கான்கள். ஆப்கான் தலைவர் ஹாமீட் காசாயும் அரசு சாரா நிறு வனங்களுடன் தொடர்புடையவர்களும் சிறப்புக் கவனம் பெறுகிறார்கள். வெள்ளை மாளிகை, அமெரிக்கன் டாலர், குந்தான பே, இஸ்ரேல் எல்லாமுமே தலிபான் பாணியில் காபப் (kebab) செய்யப்படுகின்றன.

இஸ்லாம் பற்றிய கவிதைகளும் இந்தத் தொகுப்பில் உண்டு. ஆனால் மூர்க்கத்தனமான, அச்சந்தரும் இஸ்லாம் இங்கே திணிக்கப்படவில்லை. தனித் தலிபானின் ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் ஜெபங்கள், அல்லாமீது கொண்ட அடங்காத அன்பு ஆகியவை தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அன்னிய குண்டுகளால் அழிந்துபோன மசூதிகள் பற்றிக் கவலையான கவிதைகள் சில இருக்கின்றன. போர் வீரர்கள் பசியாக இருக்கும்போது எப்படி இத் (ணிவீபீ) கொண்டாடலாம் எனத் தொடங்கும் கவிதை அன்னிய ஆக்கிரமிப்பின்போது பண்டிகைகள் அனுஷ்டிப்பதன் செயல்நோக்கம் பற்றி வினா எழுப்புகிறது. ஃபாசால் ஹானி ஹாக்மாலின் ‘ரம்சான் பல மெய்யியல்களின் மாதம்’ என்னும் வரி இந்தப் பண்டிகை பற்றிய மூலக் கோட்பாட்டறிவு தலிபானிடம் இருக்கிறது என்பதற்கு அடையாளம். திருக்குரான்கூடப் பலவீனமான பிரதியாகத்தான் கருதப்படுகிறது. போரால் அனாதைகளும் குழந்தைகளும் படும் அவதிகளை விவரிக்கும் காவியக் கதறல் என்னும் கவிதையில் இந்த ஒடுக்கப்பட்டவர்களை இரட்சித்துக்கொள்ளத் திராணியற்றுத் திருக்குரானும் அவர்களுடன் சேர்ந்து அழுவதாக அப்துல் கபீர் தாலையீ எழுதுகிறார்.

தலிபான்களின் கவிதைகளில் காணப்படும் ஆப்கானிஸ்தான் பரந்த பல்வேறு இனக் குழுக்களைக் கொண்ட உள்ளடங்கலான ஒரு நாடு அல்ல. இக்கவிதைகள் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு - முக்கியமாக பஷ்டூன்களின் (Pashtun) - அடையாளத்துக்கே சிறப்புரிமை அளிக்கிறது. குறுகிய இனவாதத்தை இந்தக் கவிஞர்கள் ஆதரிப்பதை லேசாக வாசிப்பவர்கள்கூடக் கண்டுகொள்ளலாம். ஆப்கானிஸ்தான் பஷ்டூன்களின் ஒற்றை இனத் தேசம்போல் உருமாற்றப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு அப்பால் பாகிஸ்தான், ஈரான், இந்தியா போன்ற நாடுகள் இருப்பது பற்றியும் அவற்றின் அரசியல் அசைவுகள் பற்றியும் தலிபான் கவிஞர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் பெரும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்திய ஒசாமா பின்லாடனைப் பற்றிப் பூதக்கண்ணாடி வைத்துப் படித்தாலும் இந்தத் தொகுப்பில் காணக்கிடைக்காது. வெளிப்படையாகவோ மறைவடக்கமாகவோ அல் கைதா குறிப்பிடப்படவில்லை.

Alex-Strick-van-Linschoten.jpgவழமைபோல் இந்தப் பிரசுரம் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்று ஆப்கான் என்றால் எல்லாருமே தலிபான் என்ற வர்ணம் பூச வேண்டுமா என்பதாகும். இதில் இடம்பெற்றுள்ள எஸ்சாட்டூல்லா சாவாப் என்பவரின் நிலைப்பாடு சற்றுச் சங்கடமானது. இவர் இதழாசிரியரும் கவிஞருமாவார். இவர் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் பற்றியும் ஹாமீட் காசாய் அரசின் பழுதான பழக்க வழக்கங்கள் பற்றியும் கூர்மையாக விமர்சிப்பவர். அமெரிக்காவையும் உள்நாட்டு ஆட்சியாளர்களையும் எதிர்க்கும் எல்லா ஆப்கான்களுமே தலிபான்களா? இது சிங்கள ஆட்சியின் ஊழல்களைப் பற்றிக் கேள்வி கேட்பவர்கள் எல்லோருமே விடுதலைப் புலிகள் என்று சொல்வதைப் போன்றது.

தலிபான்கள் நெறிமுறைக் கண்காணிகள், அவர்களின் கருத்தியலுக்கு ஒத்துப்போகாத விசயங்களைத் தணிக்கை செய்பவர்கள். ஆகையால் அவர்களின் இந்தத் தொகுப்பைத் தடைசெய்ய வேண்டுமென்ற கருத்தும் உண்டு. கவிதை, பாடல், இசைக் கருவிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தடைசெய்வது தலிபானுக்கு மட்டுமே உரிய நற்குணாம்சமல்ல. ஆங்கிலேயரின் சரித்திரத்திலும் இந்த மாதிரியான தடுப்புகள் நடந்திருக்கின்றன. 17ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் குடிமக்கள் போரில் மன்னராட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிறுவிய ஒலிவர் குரோம்வேல்கூடக் கிறிஸ்மஸ் கொண்டாடுவதை நிறுத்தியிருந்தார். அவர் ஆண்ட நாட்களில் பெண்கள் அலங்காரம் செய்வதுகூடத் தண்டனைக்குரிய காரியமாகக் கருதப்பட்டது. அதே நாட்களில் உருவான Quakers (நண்பர்களின் குழு) கூடச் சங்கீதத்திற்குத் தடைவிதித்திருந்தார்கள். தார்மீக இலக்குள்ள எந்த இயக்கமுமே தன்னொழுக்கத்துக்குத் தடையாக இருக்கும் காரியங்களுக்குத் தயைகாட்டுவதில்லை.

இந்தத் தொகுப்புப் பற்றி மற்றொரு குற்றச்சாட்டு இதில் தலிபான் களை மனிதத் தன்மையுள்ளவர்களாகக் காட்ட எடுக்கப்பட்ட முயற்சி. தலிபான்களைக் கொடூரமானவர்கள், சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு குறுகிய சட்டகத்துக்குள் வைத்திருப்பது அமெரிக்காவின் அன்னியக் கொள்கைக்கு வசதியாயிருக்கிறது. முக்கியமாக ஆளற்ற வானூர்தித் தாக்குதலுக்குச் சாதகமாக இருக்கிறது.

இந்தக் கவிதைகள் தலிபானின் கருத்தியல் பரப்பலுக்கு விளம்பர மூட்டும் பிராணவாயு என்பது இந்தத் தொகைநூல் பற்றி இன்னும் ஒரு விமர்சனம். இந்தத் தொகுப்பு பிரசுரமாவதற்கு முன் ஆப்கானில் பணிபுரிந்த ஆங்கிலப் படைவீரர்களின் கவிதைகள் Heroes என்னும் பெயரில் வெளிவந்தது. இந்த இரு தொகுப்புகளையும் அருகருகே வைத்துப் படிக்கும்போது ஒன்று புலனாகிறது: போரும், போர் ஏற்படுத்தும் விளைவுகளும் பற்றி இந்தக் கவிதைத் திரட்டுகளிடையே மேலீடாக நிற்கும் பிரத்தியட்சமான வித்தியாசங்கள் இல்லை. மகன் தாயிடம் விடைபெறும் கடைசித் தருணம், சண்டைக்கு முதல் நாள் வீரர்களிடையே ஏற்படும் சிலிர்ப்பும் பயமும், யுத்தத்தில் பலியான நண்பர்கள், உறவினர்கள் பற்றிய கவலைகள் போன்ற இயல்பான இணைக் கருத்துகள் இந்த இரு தொகுப்புகளிலும் உண்டு. ஆங்கிலப் போர்வீரர்களின் கவிதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கருத்தைத் தெரிவிக்கின்றன என்றால் தலிபான் களின் கவிதைகள் ஆக்கிரமிப்புக்குட்பட்டவர்களின் எண்ணங்களைக் காட்சிப்படுத்துகின்றன. ஒருவரின் பற்றுறுதி இன்னொருவரின் பரப்புரை.

hameed-karzai.jpgசாக்குபோக்குகளைச் சொல்லி இந்தத் தொகைநூலைப் புறக்கணிப்பதைவிட இது தரும் இரண்டு செய்திகள் எனக்கு முக்கியமாகப்படுகின்றன. ஒன்று அன்னிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர்களுக்கு நேரிடும் உளவுருக் காயங்கள் பற்றி அவர்களுடைய வார்த்தைகளிலே அறிய முடிகிறது. இவர்களுடைய உணர்ச்சிக் கோளாறுகள், மன அதிர்ச்சிப் புண்கள் பற்றி இரண்டாம் ஆளின் மத்தியஸ்தம் இல்லாமல் அவர்களுடைய சொந்த வார்த்தைகளாலேயே தெரிந்துகொள்ளலாம். மற்றது ஒரு சமூக இயக்கத்தின் உள்ளே இயக்குபவர்களுக்கும் அந்த இயக்கத்தினருக்கும் இடையே உள்ள சிக்கலான உணர்வுகளை இந்தக் கவிதைகள் பதிவுசெய்கின்றன. தலிபான்கள் ஒற்றை அடையாளம் உள்ளவர்கள் அல்ல. அவர்களிடையேயும் கருத்துவகையிலும் உணர்ச்சி வகையிலும் மதம் பற்றியும் நய, நுட்ப வித்தியாசங்களும் நுணுக்க திரிபுகளும் உண்டு. இந்த இருவுளப் போக்கைத் தலிபான் காவலாளிகளே மிகத் தயக்கத்துடன் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரட்டும் (ambigious) போக்கைத் தலிபான்கள் உணர்ந்திராவிட்டல் அவர்களுடைய வலைத்தளத்தில் இவை பிரசுரமாயிருக்கமாட்டா.

நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது தலிபான்கள் வாரிஸ்தானிலோ சுவட் பள்ளத்தாக் கிலோ சோரம்போன பெண்ணுக்குக் கல்லால் எறிந்து சாகடிக்கும் தண்டனைவிதித்திருப்பதாக அல்லது ஒரு மேற்கத்தைய பள்ளிக்குக் குண்டுவைத்ததாகச் செய்தி வந்துகொண்டிருக்கலாம். அந்த நேரத்தில் நிச்சயமாக வேசிமகனே என்ற வார்த்தையும் காலச்சுவடில் எழுத முடியாத வேறு மோசமான சொற்களும் உங்கள் வாயிலும் வரக்கூடும். கொஞ்சம் கோபம் தணிந்த பின்பு தலிபானின் கவிதைகளில் இருந்து நான் கீழே தந்திருக்கும் இரண்டு எடுத்துக்கூறல்களைப் படியுங்கள். அதற்கு முன்பு இந்தக் கவிதைகளில் எக்கச்சக்கமாகத் தாக்கப்பட்ட ஆப்கான் தலைவர் ஹாமீட் காசாய் ஒரு பேட்டியில் கூறியிருந்த வாசகம் ஒன்றை இங்கு நான் மீள்பதிவு செய்திருக்கிறேன். அந்த வாக்கியத்தைச் சற்று வாசியுங்கள்: ‘ஆப்கான் மக்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள், தலிபான்களும்கூட. அவர்களும் நம்மைப் போல் மனி தர்கள்தாம்’. இனி இந்தத் தொகுப்பிலிருந்து நான் தேர்ந்தெடுத்த தலிபானின் வரிகளைக் கவனமாகப் பாருங்கள். நாங்கள் நினைப்பதுபோல் தலிபான்கள் ஒற்றைப் பரிமாண மனிதர்கள் அல்ல. எல்லா மனிதர்களையும் போல் தலிபான்கள் குழப்பமான, சிக்கலான பேர்வழிகள் கையில் காலஷ்னிக்கோவைத் தூக்காத வரையில்.

கமால் எழுதிய வாசங்கள்:

The world today is better than yesterday / Tomorrow will be better than today / Alas, Afghans don’t know how to go forward / They are slipping backwards into dust.

மனிதத்தன்மை என்ற கவிதையில் வரும் வசனங்கள்:

We are not animals, / I say this with certainty. / But, Humanity has been forgotten by us, / And I don’t know when it will come back, / May Allah give it to us.

1. கார்பலா ஈராக்கில் இருக்கும் ஒரு நகரம். ஷியாக்களில் வரலாற்றில் முக்கியமான காரியங்கள் நடந்த இடம்.

2. பெண் கவிகளில் முக்கியமானவர்களில் இன்னுமொருவர் நாசோ 1651-1717). இவர் கவிஞர் மட்டுமல்ல போராளியும்கூட. பள்ளிக்கூடங்களுக்கு இவரின் பெயரை வைப்பதுண்டு.

-

சச்சிதானந்தன் சுகிர்தராஜா

காலச்சுவடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.