Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் மரணம் சமஸ்கிருதத்தின் புத்துயிர்ப்பு

Featured Replies

[size=4]தமிழின் மரணம் சமஸ்கிருதத்தின் புத்துயிர்ப்பு[/size]

[size=4] -ரவிக்குமார்[/size]

[size=4]இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. தற்போது கிடைக்கும் சங்க இலக்கியப் பிரதிகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. அக் காலத்தில் பாலி , பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவை வடமொழி, வடசொல் என்று சுட்டப்பட்டன. ‘‘ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன்....’’ என்ற கலித்தொகைப் பாடல் அப்போதிருந்த சமஸ்கிருத செல்வாக்குக்கு ஒரு அடையாளம். ‘‘சங்க காலத் தமிழகத்தில் வடமொழியைத் தாய்மொழியாகவும் தமிழைப் பிறமொழியாகவும் கற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதால் அவர்களுடைய இருமொழியத்தை ( Bilingualism ) வடமொழி, தமிழ் இருமொழியம் என்று குறிப்பிடலாம்’’ என செ.வை.சண்முகம் குறிப்பிடுகிறார்.( செ.வை.சண்முகம், மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும், 1989) அந்த அளவுக்கு சமஸ்கிருத மொழி அறிவு தமிழகத்தில் அப்போது பரவியிருந்திருக்கிறது. [/size]

[size=4]சமஸ்கிருதத்தைத் தமிழோடு இணையாக வைத்துப் பார்க்கும் அணுகுமுறை பக்தி இலக்கிய காலத்தில் இருந்து வந்துள்ளது. ’ தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தாள்நிழல் சேர’’ என ஞானசம்பந்தர் பாடியிருப்பதையும்; ’ முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்’ என்று அப்பர் பாடியிருப்பதையும்; ’ செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்’’ என்று திருமங்கை ஆழ்வார் பாடியிருப்பதையும்; தென்சொற் கடந்தான் வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தான் ’’ என்ற கம்பனின் கூற்றையும் இதற்கான சான்றுகளாக எடுத்துக் காட்டுகிறார் சோ.ந.கந்தசாமி ( உலகச் செம்மொழிகள் இலக்கியம், தொகுதி :1, தமிழ்ப் பல்கலைக்கழகம் 2010). மனோன்மணியம் சுந்தரனார், ‘‘தமிழைக் கலைமகளின் வலது விழியாகவும், வடமொழியை இடது விழியாகவும் ’’ குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதையும் சோ.ந.க சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு எவ்விதக் காழ்ப்புமின்றித்தான் வடமொழியைத் தமிழர்கள் பாராட்டிவந்துள்ளனர்.[/size]

[size=4]இரண்டு மொழிகளிலும் இருக்கின்ற வளமான செவ்வியல் இலக்கியங்களை அறிந்தவர்கள் அவற்றுக்கிடையிலான ஒற்றுமைகள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். மேகத்தைத் தூது விடுவது; மூங்கிலின் ஓட்டையில் காற்று புகுந்து எழுப்பும் ஓசையைப் புல்லாங்குழலின் இசையோடு ஒப்பிடுவது போன்ற அம்சங்கள் சங்கப் பாடல்களிலும் காளிதாசனின் படைப்புகளிலும் காணப்படுவதை ஒப்பிட்டுக் காட்டுகிறார் ஜார்ஜ் எல் ஹார்ட்( A History of Indian Literature,Otto Harrassowitz - Wiesbaden, 1976 ) . காளிதாசனின் குமாரசம்பவத்துக்கு திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் முன்மாதிரிகளாக விளங்கியிருக்கவேண்டும் என்பதைப் பல்வேறு சான்றுகள் கொண்டு ப.மருதநாயகம் விளக்கியிருக்கிறார். ‘‘ காளிதாசன் குமாரக் கடவுளிடம் கொண்டிருந்த அன்பு வடமொழி இலக்கிய மரபில் அவனுக்குமுன் காணப்படாத ஒன்றாகும். அவன், தான் மிக விரும்பிய குமாரக் கடவுளைப் பற்றி ஒரு காப்பியம் எழுதியதோடல்லாமல் தனது மற்றைய நூல்கள் எல்லாவற்றிலும் பலவிடங்களில் போற்றிப் பரவுவது முருகனை அழகு, இளமை, வீரம் ஆகியவற்றின் தொல்படிவமாகவே படைத்துப் பலபடப் பாராட்டும் சங்கப் பாடல்களை நமக்கு நினைவூட்டும்’’ என்று அவர் ( சங்க இலக்கிய ஆய்வு & தெ.பொ.மீயும் மேலை அறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2008 ). சங்கப் பாடல்களுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்குமிடையே ஒத்த கூறுகள் இருப்பதை எடுத்துக்காட்டினாலும் ஒன்றின் தாக்கத்தால் மற்றது உருவானதென்று ஜார்ஜ் ஹார்ட் கூறவில்லை. ‘‘ சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் இந்தக் கூறுகளைக் கடன்வாங்கவில்லை. ஏனெனில் சமஸ்கிருதத்துக்கு முன்பே தமிழில் அவை இயற்றப்பட்டுவிட்டன. அதுபோலவே சமஸ்கிருதம் தமிழிலிருந்து அவற்றைக் கடன்வாங்கியதென்றும் சொல்லமுடியாது. அந்த அளவுக்குத் தமிழை அவர்கள் அறிந்திருக்கவில்லை’’ என்று குறிப்பிடும் ஹார்ட் , ஒன்றைப் பார்த்து மற்றது உருவாக்கப்பட்டது என்று கூறுவதைவிடவும் இரண்டு இலக்கிய மரபுகளுக்கும் பொதுவான ஊற்றுக்கண் ஒன்று இருப்பதாகக் கருதுவதே சரி, பிராகிருதமே அந்த ஊற்றுக் கண் என்று கூறுகிறார். தமிழிலும் பிராகிருதத்திலும் இருக்கும் பொதுவான சொற்களை எடுத்துக்காட்டிய எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கூற்றை இது வலுப்படுத்துவதாக இருக்கிறது.[/size]

[size=4]இன்று, சமஸ்கிருதம் பிராமணர்களோடு இணையாக வைத்துப் பார்க்கப்படுகிறது. அவர்களும் அப்படி உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால், அப்படிப் பார்ப்பது வரலாற்று உண்மைக்கு மாறானதாகும். பிராமணரல்லாதார் பலர் சமஸ்கிருதத்தில் தமது படைப்புகளை இயற்றியுள்ளனர். அதுவொரு தொடர்பு மொழியாக இருந்திருக்கிறது. இந்துக்கள் மட்டுமின்றி பௌத்தர்களும் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.சமஸ்கிருத செவ்விலக்கியத்தின் சிகரமாகக் கருதப்படும் காளிதாசனுக்கு முன்பே சமஸ்கிருதத்தில் ஒப்பற்ற காப்பியங்களைப் பாடியவர் அஸ்வகோஷர். பௌத்தர் என்பதால் அவரது படைப்புகளுக்கு வைதிகர் முதன்மை கொடுக்கவில்லை. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கனிஷ்கரின் அவைக்களப் புலவராக இருந்த அஸ்வகோஷர் மகாயான பௌத்த நெறியைப் பின்பற்றியவர். புத்தரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர் இயற்றிய காப்பியம் ‘ புத்த சரிதம்‘ ஆகும். புத்தரின் தம்பியான நந்தன் என்பவனது வாழ்க்கையை மையமாகக்கொண்டு அவர் இயற்றிய காப்பியம் ‘ சௌந்தரானந்தம்‘. இந்த இரு காப்பியங்களும் காளிதாசனது காப்பியங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவானவை. ( சோ.ந.கந்தசாமி பக்கம் 150 _- 151 )[/size]

[size=4] ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து உற்பத்தியானவையென்றும், ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவையென்றும் சொல்லப்படும் தமிழும் சமஸ்கிருதமும் இன்று எதிர் எதிராக நிறுத்தப்பட்டிருப்பது ஏன் ? தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்தும் அரசியலே அதற்கு முதன்மையான காரணம் . வடமொழியின் தொன்மையைச் சொல்லும் வேதங்களுக்கு ‘‘ அபௌருஷேயங்கள் என்னும் அடைமொழியை ஈந்து , வேத நூல்கள் மக்களால் ஆக்கப்படாத தெய்வீக நூல்கள்’’ என சொல்லப்பட்டன. சமஸ்கிருதம், சிவபெருமானின் உடுக்கையிலிருந்து உருவான ஒலித்திரள்களிலிருந்து தோன்றியது என்று கற்பிக்கப்பட்டது. வேதங்களை சரியாக உச்சரிக்காதவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று, பாணிணியின் இலக்கணத்துக்கு உரை எழுதியவரும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமெனக் கருதப்படும் பதஞ்சலியின் கூற்று வேதங்கள் இயற்றப்பட்ட சமஸ்கிருதத்தின்மீது ஒருவித அச்சத்தை உண்டாக்கியது.சமஸ்கிருதத்தைப் பயில்வது ஒருவர் தன்னை மிலேச்சர்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகத்தான் என்றும் பதஞ்சலி கூறினார். சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்கள் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளை அஸதுசப்த, அபஸப்த, அபப்ரம்ஸ என்று கேவலமான பொருள் தொனிக்கும்படிக் குறிப்பிட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையை முதலில் எதிர்த்தவர்கள் பௌத்தர்கள். உண்மை, அறம், இனிமை, பயன்பாடு ஆகிய நான்கு பண்புகளே மொழிக்குத் தேவை என்று புத்தர் கூறியதன் அடிப்படையில் அவர்கள் சமஸ்கிருதத்தின் புனிதத்தை மறுத்து வாதிட்டார்கள். .[/size]

[size=4]சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்குமான உறவைப் போலவே அவற்றுக்கிடையிலான மோதலுக்கும் நீண்ட வரலாறு உண்டு. சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீஸ பாஷை என்ற அணுகுமுறையே இந்த முரண்பாட்டுக்கு வித்திட்டது. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அந்த முரண்பாடு தீவிரம் அடைந்தது. ‘கிரந்த யூனிகோடு’ பிரச்சனையின்போது அது மேலும் கூர்மையடைந்துவிட்டது. இந்திய அரசு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியபிறகு இந்த முரண்பாட்டைப் பகையாக ஊதி வளர்க்கும் வேலையில் சிலர் இறங்கியுள்ளனர். தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் யாவும் சமஸ்கிருதத்தைப் பார்த்து நகல் செய்யப்பட்டவையே என்று அவர்கள் கூறிவருகின்றனர். இந்திய மொழிகள் பலவற்றிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருப்பதை மொழியியலாளர்கள் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள். தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தொன்மையான வரலாறும், தனக்கென்று ஒரு எழுத்து மரபும் கொண்ட தமிழ் மொழியானது சமஸ்கிருதத்துக்கு அப்பால் தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டு வருகிறது. இந்த உண்மையை அறிஞர்கள் பலர் ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லியிருந்தாலும் ஆத்திரமூட்டிக் கவனத்தை ஈர்க்க விரும்புகிறவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்வினையாற்ற முற்பட்டிருக்கும் தமிழறிஞர் சிலர், சமஸ்கிருதத்துக்குத்தான் அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது. ஏராளமாக அதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் சமஸ்கிருதத்தால் தமிழ் அழிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர். ஆனால், ” சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றால் தமிழ் அச்சுறுத்தப்படுகிறது என நான் நினைக்கவில்லை. தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை அதன் தனித்துவம் பேணி வளர்க்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படி அது பாதுகாக்கப்படும். தமிழர்கள் தமது மொழியை மதிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்.அவர்கள் தொடர்ந்தும் அதைச் செய்வார்கள்’’ என்கிறார் ஜார்ஜ் ஹார்ட்.( http://tamil.berkeley.edu/sanskrit-and-tamil )[/size]

[size=4]2[/size]

[size=4]ஒருபுறம், தமிழுக்கு ஆரசாங்கம் ஆதரவு அளிக்கவில்லை என்று தமிழ் அறிஞர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். இன்னொருபுறம், சமஸ்கிருத ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களோ சமஸ்கிருதம் ஆதரவின்றி நசிந்து வருகிறது என்று வருந்துகின்றனர். சமஸ்கிருதத்தின் இந்த ‘ நசிவு‘ நிலை குறித்து ஷெல்டன் பொல்லாக், ‘ சமஸ்கிருதத்தின் மரணம்’ என்ற தனது கட்டுரையில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்( http://columbiauniversity.us/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf) .பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருத மொழியைப் பயிற்றுவிப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டதையும் , 1999_ 2000 ஆண்டை சமஸ்கிருத ஆண்டு என மத்திய அரசு அறிவிப்பு செய்ததையும் கவர்ச்சிவாத நடவடிக்கைகள் என விமர்சிக்கும் பொல்லாக் , அத்தகைய நடவடிக்கைகளால் சமஸ்கிருதத்தைக் காப்பாற்றிவிட முடியாது என்கிறார். ‘‘இன்று இந்தியாவில் மிகச் சில அறிஞர்கள்தான் சமஸ்கிருதத்தில் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். இந்திக்கும் , மலையாளத்துக்கும் சமஸ்கிருதம் ஏராளமான சொற்களை வழங்கியிருக்கிறது என்றாலும் அது இப்போது புறக்கணிக்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பண்பாட்டு வரலாறு தொடர்பான பல ஆவணங்களை வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று ஷெல்டன் பொல்லாக்கின் கவலையை வழிமொழிகிறார் ஜார்ஜ் ஹார்ட்.[/size]

[size=4]சமஸ்கிருதத்தின் நசிவுக்கான காரணங்களை ஆராய்ந்திருக்கும் பொல்லாக் அந்த நசிவு ஏற்பட்ட நான்கு கட்டங்களை சுட்டிக்காட்டுகிறார்: 13 ஆம் நூர்றாண்டுக்குப் பிறகு காஷ்மீரில் சமஸ்கிருதம் மறைந்துபோன நிகழ்வு; விஜயநகரப் பேரரசில் 16 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சி; 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டெல்லி மொகலாய ஆட்சியாளர்களிடம் சிலகாலம் மட்டும் அதற்கிருந்த மதிப்பு; காலனிய ஆட்சியின்போது வங்காளத்தில் ஆவி உருவில் அதன் இருப்பு. இந்த வரலாறு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று குறிப்பிடும் பொல்லாக் அவற்றை ஒவ்வொன்றாகத் தனது கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறார்.சமஸ்கிருத இலக்கியப் பண்பாட்டைத் தக்கவைப்பதற்குத் தேவையான அரசியல் நிறுவனங்கள் யாவை?; பிரதேசப் பண்பாடுகளோடான போட்டி எந்தவிதமான தாக்கத்தை சமஸ்கிருதத்தின்மீது உண்டாக்கியது?; சமஸ்கிருத நவீனத்துவத்தை நிலைநிறுத்த என்னவிதமான தன்னிலைத்துவம் தேவைப்படுகிறது ? சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு ஒருகாலத்தில் உயிரளித்த சமூக, ஆன்மீக ஆற்றல்களே அதைக் கொல்லும் நஞ்சாக மாறிவிட்டனவா? என்ற நான்கு வினாக்களை எழுப்பி அவற்றுக்கான விடைகளை விரிவாக விவாதித்திருக்கிறார் பொல்லாக்.[/size]

[size=4]பன்னிரெண்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் கவிஞரும்,அகராதியியல் அறிஞருமான மங்கா என்பவர் தனது ‘ ஸ்ரீகந்தசரிதா‘ என்ற நூலை அரங்கேற்றுவதற்காகக் கூட்டிய கூட்டத்தில் எண்ணற்ற அறிஞர்கள் பங்கேற்றதையும் ஆனால் அதன்பின் ஐம்பது ஆண்டுகளுக்குள் சமஸ்கிருத படைப்பிலக்கிய ஆற்றல் காஷ்மீரில் இல்லாதொழிந்து[/size]

[size=4]போனதையும் குறிப்பிடும் ஷெல்டன் பொல்லாக் மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் சுல்தான் ஜைனுலாபிதினின் காலத்தில் அது தலைய்எடுத்து மீண்டும் மறைந்துபோனதை விவரிக்கிறார். ஆட்சி மாற்றங்களும் படையெடுப்புகளும் காஷ்மீரின்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அது சமஸ்கிருதத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.[/size]

[size=4]பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வங்காளம் மற்றும் சென்னை மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் சமஸ்கிருதத்தின் நிலை குறித்து சில அரிய விவரங்களை நமக்குத் தருகின்றன. தாமஸ் மன்றோ தலைமையில் 1822 ஆம் ஆண்டு சென்னையிலும், வில்லியம் ஆடமின் தலைமையில் 1830 ஆம் ஆண்டு வங்காளத்திலும் அந்த கணக்கெடுப்புகள் நடந்தன. வங்காள மாகணத்தின் ஐந்து மாவட்டங்களில் மட்டும் 353 சமஸ்கிருத பல்ளிகள் இருந்தன, அவற்றில் 2555 மாணவர்கள் பயின்றனர். அவர்கள் அனைவரும் பிராமணர்கள். ஆனால் அதே நேரத்தில் அங்கு நடத்தப்பட்ட 899 பெர்ஷியன் பள்ளிகளில் பாதிப் பேர் முஸ்லிம் அல்லாதவர்கள், கால்வாசிப் பேர் பிராமணர்கள்.அவ்வளவு பள்ளிகள் இருந்தும் சமஸ்கிருத கல்வி இருந்தும் சமஸ்கிருத இலக்கிய நடவடிக்கைகள் குறையத் தொடங்கின. சமஸ்கிருதம் தினசரி பயன்பாட்டிலிருந்து ஒதுங்கி நின்றது. அந்த இடத்தில் வங்க மொழியே புழங்கியது.[/size]

[size=4] [/size]

[size=4]‘‘கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் லத்தீன் மொழிக்கு நேர்ந்ததுபோல சமஸ்கிருதமானது தொடர்பு மொழியாக இருப்பதில் எந்த சிக்கலையும் இங்கு எதிர்கொள்ளவில்லை.அதுபோலவே இங்கு பிராந்திய மொழிகள் சமஸ்கிருதத்துக்குத் தடையாக அமையவில்லை. பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்த பலர் சமஸ்கிருதத்திலும் புலமைபெற்று விளங்கினார்கள்.ஆட்சியதிகாரத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியதும்கூட சமஸ்கிருதத்தை பலவீனப்படுத்திவிடவில்லை. மாறாக, முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் புத்துயிர் பெற்றது. பிராந்திய எல்லைகளைக் கடந்த பொது மொழியாக விளங்கிய சமஸ்கிருதம் பிராந்திய அடையாள அரசியல் எழுச்சி பெற்றபோது தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது’’. என்கிறார் ஷெல்டன் பொல்லாக். உலகளாவிய பார்வை கொண்டதாயிருந்த சமஸ்கிருதம் மேலும் மேலும் உள்ளூர்மயப்பட்டுக்கொண்டிருந்த அரசியல் சூழலில் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது என்பது பொல்லாக்கின் கருத்து. [/size]

[size=4]ஷெல்டன் பொல்லாக் எழுப்பியிருக்கும் பிரச்சனைகள் முக்கியமானவை. தமிழோடு தொடர்புபடுத்தி நாம் அவற்றை விவாதிக்கவேண்டும். சமஸ்கிருதம் உலகளாவிய பார்வைகொண்ட(Cosmopolitan ) மொழி என்றால் தமிழுக்கு அத்தகைய பார்வை இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. தமிழைப் பிராந்திய மொழியென்றே ஒப்புக்கொண்டாலும்கூட அதன் எழுச்சி இங்கே சமஸ்கிருத செல்வாக்கை முற்றாக நீக்க முடியாமல்போனது ஏனென்றும் பார்க்கவேண்டியுள்ளது. சமஸ்கிருதத்தின் பழம்பெருமையோடு ஒப்பிட்டு இப்போது அதன் நசிவை பொல்லாக் எடுத்துக்காட்டுகிறார். அதே அளவுகோலை வைத்துப் பார்த்தால் தமிழின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தமிழ் செவ்வியல் இலக்கியங்களோடு தற்கால படைப்புகளை ஒப்பிட முடியுமா ? தொல்காப்பியத்துக்கு நிகராக இப்போதைய படைப்பு எதையாவது எடுத்துக்காட்ட முடியுமா ? பெரிய புராணத்துடன், கம்ப ராமாயணத்துடன் இணையாக வைத்துப் பார்க்கத்தக்க படைப்பு எதையாவது நவீனத் தமிழ் உருவாக்கியிருக்கிறதா? என்று ஆராய்ந்துபார்த்தால் நமக்கு சில விஷயங்கள் தெளிவுபடும்.[/size]

[size=4]‘‘ சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்ட மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று. அதனால் அதற்கு நிதி நல்கைகளை இந்திய அரசு வழங்கிவருகிறது. அந்த நிதி சமஸ்கிருத கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றை உருவாக்கப் பயன்பட்டிருக்கிறது. ஆனால் அங்கு நிலவும் கலவிச் சூழல் சுதந்திரத்துக்கு முன்பிருந்த மேதமைக்கும்,தரத்துக்கும் ஈடாகக்கூடியதல்ல’’ என்கிறார் பொல்லாக். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வங்காள மாகாணத்தில் நிலவிய சமஸ்கிருத கல்விச் சூழலை சாதகமாக மதிப்பிடும் பொல்லாக், சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக பா.ஜ.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கேலியுடன் நிராகரிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்தியாவில் எதுவொன்றின் வளர்ச்சிக்கும் அரசாங்கத்தின் ஆதரவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனியார் அமைப்புகளின் முன்முயற்சிகளுக்கும்கூட அரசாங்கத்தின் ஆதரவு தேவை. சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக அப்போது பா.ஜ.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். நமக்கு இப்போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் சமஸ்கிருதத்தின் மரணத்தை விடவும் அதன் புத்துயிர்ப்பையே எடுத்துக்காட்டுகின்றன.[/size]

[size=4]3[/size]

[size=4]சுதந்திர இந்தியாவில் சமஸ்கிருத ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதைக் கொண்டாடும் விதமாகப் பல்வேறு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட இரண்டு தொகுதிகளை ‘ராஷ்ட்ரிய ஸான்ஸ்க்ரிட் ஸான்ஸ்தான்’ ( Rashtriya Sanskrit Sansthan ) என்ற அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கிறது. அது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். அதன் துணைவேந்தராக இருக்கும் ராதா வல்லப் திரிபாதி அந்த நூல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ( Radha Vallabh Tripathi ( Ed) Sixty Years of Sanskrit Studies, 2 Volumes, Rashtriya Sanskrit Sansthan, 2012 ). இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் சமஸ்கிருத ஆய்வுகள் எவ்வாறு நடைபெறுகின்றன, அதற்காக எந்தெந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற விவரங்கள் ஒரு தொகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக நாடுகளில் இவ்வாறான ஆய்வுகள் எங்கெங்கே நடக்கின்றன என்பதை இன்னொரு தொகுதியில் இருக்கும் கட்டுரைகள் விவரிக்கின்றன.[/size]

[size=4]இந்தியாவில் மொத்தம் 282 பல்கலைக்கழகங்கள் உள்ள்ன. அவற்றுள் 112 பல்கலைக் கழகங்களில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைக்கொண்ட சமஸ்கிருதத் துறைகள் இருக்கின்றன.சுமார் பத்தாயிரம் கல்லூரிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்துக்கென பதினாறு பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவைதவிர அரசு ஆதரவில் இயங்கும் சுமார் எட்டாயிரம் சமஸ்கிருதப் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் சுமார் பதினந்து லட்சம் பேர் சமஸ்கிருதம் பயில்கிறார்கள்.(தமிழ்நாட்டில் இந்தப் பாடசாலைகள் 55 செயல்படுகின்றன.) இருபத்தொரு மாதிரி கல்லூரிகள் சமஸ்கிருதத்துக்கென நடத்தப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்கள் எதிலும் அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டம் செல்லுபடியாகாது. அதற்கென சிறப்பு விதிவிலக்கு இவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் செயல்படும் இந்த நிறுவனங்கள் தவிர அர்ஜென்டினா, ஆஸ்த்ரியா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, சீனா, ஃப்ரான்ஸ், ஜப்பான், நேபாளம், போலந்து, ரஷ்யா, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் சமஸ்கிருதத்துக்கென் இருக்கின்றன. சமஸ்கிருத ஆய்வை மேற்கொள்ளும் அறிஞர்களை கௌரவிக்கவென குடிய்ரசுத் தலைவர் விருது ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கான முதல் விருதைப் பெற்றவர் ஷெல்டன் பொல்லாக்.[/size]

[size=4]தமிழ்நாட்டில் சமஸ்கிருத பாரதி என்ற அமைப்பு மாநிலமெங்கும் கிளைகளை அமைத்தும், தொலைநிலைக் கல்வி வழியாகவும் சமஸ்கிருத மொழியைக் கற்றுத்தருகிறது. அதுதவிர சென்னை எழும்பூரில் உள்ள சுரா பாரதி, சமஸ்கிருத கல்விக் கழகம் உள்ளிட்ட இன்னபிற அமைப்புகளும் உள்ளன. சென்னையைத் தவிர மதுரை, திருச்சி, கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் முதலான ஊர்களிலும் சமஸ்கிருத ஆய்வு மையங்கள் இருக்கின்றன.தஞ்சாவூரிலிருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம்; சேலம் பெரியார் பல்கலைக் கழகம், நெல்லையில் இருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் சமஸ்கிருதப் பாடப் பிரிவுகள் உள்ளன. தமிழகத்தில் இருக்கும் அரசு பல்கலைக் கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள் பலவற்றில் சமஸ்கிருத ஆய்வுகள் நடந்துவருகின்றன. சென்னைப் பல்கலைக் கழகம், மாநிலக் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி , திருவையாற்றில் அமைந்திருக்கும் அரசர் கல்லூரி முதலியவற்றில் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு 300 மையங்களில் சமஸ்கிருத வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முறையான கல்வி நிறுவனங்கள் தவிர பாரம்பரிய முறையில் சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. வேத பாடசாலைகள், சமஸ்கிருத கலாசாலைகள், ஓரியண்டல் பள்ளிகள் முதலானவையும் சமஸ்கிருதம் போதிப்பதில் ஈடுபட்டுள்ளன. இவைதவிர மயிலாப்பூரில் இருக்கும் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி மையம் , திருவான்மியூரில் இருக்கும் சத்ய நிலையம், அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம் ஆகியவற்றிலும் சமஸ்கிருத ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.[/size]

[size=4]1947க்குப் பிறகு மத்திய அரசு சமஸ்கிருதம் தொடர்பான நான்கு ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்கியது. பரோடாவில் இருக்கும் கெய்க்வாட் பல்கலைக்கழகத்தில் ராமாயணம் தொடர்பான ஆய்வுத் திட்டத்தையும்; புனேவில் இருக்கும் BORI நிறுவனத்தில் மகாபாரதம் தொடர்பான திட்டத்தையும்; சமஸ்கிருத அகராதி தயாரிக்கும் திட்டத்தை புனேவில் இருக்கும் டெக்கான் கல்லூரியிலும் மத்திய அரசு துவக்கியது. பாலி, பிராகிருதம் சமஸ்கிருதம் தொடர்பான பிரதிகளின் அட்டவணை தயாரிக்கும் பணி சென்னையில் இருக்கும் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. இதுவரை பதினெட்டு தொகுதிகள் அந்த நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. சமஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியும் நடந்துவருகிறது. காரைக்குடியில் இருக்கும் கோவிலூர் மடாலயமும், வீரசுப்பையா ஸ்வாமிகள் மடமும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன.அடையாறு நூலகம், சம்ஸ்க்ருத ரங்கா, க்ருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம், வேதாந்த தேசிகர் ஆராய்ச்சி மையம் முதலான இருபது நிறுவனங்கள் சமஸ்கிருத நூல்களை வெளியிட்டுவருகின்றன.சமஸ்கிருத ஆய்வுகளை வெளியிடுவதற்கென ஆங்கிலத்தில் Journal of Oriental Research என்ற ஆய்விதழை குப்புஸ்வாமி சாஸ்த்ரி ஆராய்ச்சி மையம் நடத்துகிறது; அடையாறு நூலகத்திலிருந்து Brahma Vidya என்ற பத்திரிகை வெளியாகிறது. சமஸ்கிருத கல்விக் கழகம் ‘சம்ஸ்க்ருத ஸ்ரீ’ என்ற சமஸ்கிருத பத்திரிகையை நடத்துகிறது. (Sundari Siddhartha, Sanskrit Studies in Tamilnadu- In Sixty Years of sanskrit Studies- Vol 1 , 2012 )[/size]

[size=4]புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சமஸ்கிருத வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத துறை இருக்கிறது. அதன்மூலம் இதுவரை 61 மாணவர்கள் எம்.ஃபில் பட்டத்தையும் 22 மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். தற்போது 30 பேர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்தத் துறை விஸ்வபாரதி என்ர தேசிய அலவிலான பத்திரிகை ஒன்றையும் நடத்துகிறது. புதுச்சேரியிலிருக்கும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அங்கிருக்கும் இந்தியவியல் துறையும், கீழ்த்திசைப் பள்ளியும் உலகப் புகழ் வாய்ந்தவை.ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் இந்த நிறுவன நூலகத்தில் உள்ளன. அவற்றுள், சைவாகமம் குறித்த சுவடிகள் 1900; ஸ்தோத்ரா/மகாத்மியா சுவடிகள் 1360; மந்திரங்கள் தொடர்பானவை 1890; மருத்துவம் தொடர்பானவை 250; வேதங்கள் குறித்தவை 187; சமஸ்கிருத இலக்கியம் தொடர்பானவை 160; ராமாயணம் தொடர்பானவை 192 உள்ளன. சுவடிகள் எண்வயத் தொழில்நுட்பத்தின்மூலம் பிரதி எடுக்கப்பட்டு இணையத்தில் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருக்கும் அரவிந்தர் ஆஸ்ரமம் ‘ அரவிந்தர் சமஸ்கிருத காரியாலயம்’ என்ற நிறுவனத்தை நடத்திவருகிறது. அதன்மூலம், ‘ லோகசம்ஸ்கிருதம்‘ என்ற காலாண்டிதழ் வெளியிடப்படுகிறது. அங்கு இணையத்தின்மூலம் சமஸ்கிருதம் போதிக்கப்படுகிறது. ( http:// sanskrit.sriaurobindoashram.org.in ) புதுவைக்குட்பட்ட காரைக்காலில், ஸ்ரீகந்த சிவாச்சார்யா வேத சிவாகம வித்யாபீடம் என்ற நிறுவனம் குருகுல முறையில் சமஸ்கிருதக் கல்வியை வழங்கிவருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு பன்னிரு திருமுறைகள்,வேதங்கள், சிவாகமங்கள், சிற்பசாஸ்திரம், ஜோதிடம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவை போதிக்கப்படுகின்றன. ஆறு ஆண்டு காலப் படிப்புக்குப் பிறகு ‘வேத சிவாகம பண்டித ப்ரவார’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது.இந்த நிறுவனம் தவிர, சமஸ்கிருத விகாஸ் கேந்த்ரா என்ற அமைப்பும் சமஸ்கிருத மொழியைப் போதித்துவருகிறது.( C.S.Radhakrishnan, Sanskrit Studies in Puducherry, In Sixty Years of sanskrit Studies- Vol 1 , 2012 ) .[/size]

[size=4]சமஸ்கிருதத்துக்கு அரசாங்க ஆதரவு அவ்வளவாக இல்லாத தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்த அளவுக்கு சமஸ்கிருத ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றால் மாநில அரசின் ஆதரவுபெற்ற இதர மாநிலங்களில் எந்த அளவுக்கு சமஸ்கிருதம் தழைத்துக்கொண்டிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ராஷ்ட்ரிய ஸான்ஸ்க்ரிட் ஸான்ஸ்தான் அமைப்பின் சார்பில் மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மத்தியப் பிரதேசத்தில் 644, உத்தரப் பிரதேசத்தில் 1347, ராஜஸ்தானில் 1698 சமஸ்கிருத பாடசாலைகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 29 சமஸ்கிருத கல்லூரிகள் உள்ளன. இந்த விவரங்கள் யாவும் இந்தியாவில் சமஸ்கிருதம் செத்துப் போய்விட்டதன் அடையாளங்கள்தான் என்று ஷெல்டன் பொல்லாக் சொல்வாரேயானால் அதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்தத் தொகுப்பில் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சமஸ்கிருத ஆய்வுகள் குறித்து அவரே கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். 1950 இல் அமெரிக்காவின் ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே நிகழ்ந்துவந்த சமஸ்கிருத ஆய்வுகள் இப்போது பல்கிப் பெருகியிருப்பதை அவர் அதில் விவரித்திருக்கிறார். அந்த விவரங்களும்கூட சமஸ்கிருதத்தின் மரணத்தை அறிவிப்பனவாக இல்லை.[/size]

[size=4]4 [/size]

[size=4]சமஸ்கிருத ஆய்வுகளின் நிலையைப் பார்க்கும்போது தமிழ் ஆய்வுகளின் நிலை என்ன என்ற கேள்வி தானாகவே முகிழ்க்கும். நமது நாட்டிலும் அயல்நாடுகளிலும் தமிழ் ஆய்வுகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி அவ்வப்போது சிற்சில கட்டுரைகளும், வெளியீடுகளும் வந்துள்ளன என்றபோதிலும், கடந்த அறுபது ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ் ஆய்வுகளின் நிலை குறித்து சமஸ்கிருதத்துக்கு செய்யப்பட்டிருப்பதுபோல இப்படியொரு விரிவான தொகுப்பு முயற்சியை இங்கிருக்கும் அரசு சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. ராஷ்ட்ரிய ஸான்ஸ்க்ரிட் ஸான்ஸ்தான் அமைப்பு மாநிலவாரியாக செய்திருப்பதுபோன்றதொரு கணக்கெடுப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமோ, தமிழ்ப் பல்கலைக்கழகமோ அல்லது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமோ செய்வதற்குத் தடை எதுவும் இல்லை. ஏதாவதொரு மலிவான வெகுசன எழுத்தாளரின் புதினங்களைப்பற்றி நீளமாக எழுதப்படும் மதிப்புரைக்கு முனைவர் பட்டம் வழங்கும் கேவலமான நிலைதான் நமது பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் நடந்துகொண்டிருக்கிறது. ‘சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு ஏராளமாக நிதி அளிக்கிறது, அந்த மொழிக்கு அயல்நாட்டு ஆய்வாளர்களின் ஆதரவு இருக்கிறது’ என்று வயிறெரிந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.ஒதுக்கப்படும் நிதியை செலவுசெய்வதற்குக்கூட உருப்படியான திட்டங்களை உருவாக்க நம்மால் முடியவில்லை என்பதே உண்மை. சமஸ்கிருதத்தில் நடக்கும் ஆய்வு முயற்சிகள், தொகுப்பு முயற்சிகளைப் பார்த்தாவது நாம் முனைப்போடு பணியாற்ற முன்வரவேண்டும். இல்லாவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் தமிழ் சாகும், தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதம் தழைத்தோங்கும். அதை யாராலும் தடுக்க முடியாது.[/size]

[size=4] ( இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் தீராநதி அக்டோபர் 2012 இதழில் வெளியாகியுள்ளது )[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.