Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவ்யராஜனின் சகா - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திவ்யராஜனின் சகா - யமுனா ராஜேந்திரன்
02 டிசம்பர் 2012
 

 

saka_CI.jpg

 

இன்னுமொரு ஈழத் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படம் திவ்யராஜனின் சகா. இங்கிலாந்துப் படமான ஸ்டில் லைப், பிரெஞ்சப் படமான இடிமுழக்கம் கனடியப் படமான 1999 போன்று பிறிதொரு கனடியப்படம் சகா. கேங்ஸ்டர் படங்கள் அந்தக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டு வேறு வேறு கோணங்களில் படமாக்கபபட்டிருக்கிறது. கேங்ஸ்டர் கலாச்சாரத்துக்கு உட்பட்ட குழுவினரின் பார்வையில், கேங்ஸ்டர்கள் பற்றி காவல்துறையினர் பார்வையில், கேங்ஸ்டர்களின் வன்முறைக்கு உள்ளான பொதுச் சமூகத்தவரின் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் குடும்பத்தவர் பார்வையில், கேங்க்ஸ்டர்களின் வன்முறைக்குப் பலியான இளைஞர்களின் பெற்றோர்களது பார்வையில் என கேங்க்ஸ்டர்கள் குறித்த திரைப்படங்கள் பல்வகையானவை.

 

வெகுஜன சினிமா சார்ந்தவர்கள் பெரும்பாலும் கேங்க்ஸ்டர் குழுவினருது பார்வையில் அல்லது காவல்துறையினரது பார்வையில்தான் பெரும்பாலூன கேங்க்ஸ்டர் படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். காரணம் வன்முறை, இரத்தச் சிந்துதல்,துப்பாக்கிச் சூடு, வேகமான வாகனத்துரத்தல்கள், மரபு மீறிய பாலுறவு போன்றவற்றைக் காட்சிகளாகச் சித்தரிக்க உகந்த கோணம் இதுதான். இதுவன்றி பொதுச் சமூகத்தினால் அனுபவம் கொள்ள முடியாத கேங்க்ஸ்டர்கள், காவல்துறையினரின் உளவியல் போக்குகளையும் ஆவலுடன் பொதுச்சமூகம் இத்தகைய சித்தரிப்புகளில் அடையாளம் காணமுடியும். பெரும்பாலுமான வெற்றி பெற்ற ஹாலிவும்-பாலிவுட்-கோலிட் கேங்க்ஸ்டர் படங்கள் இத்தகையவைதான்.

 

இடிமுழக்கம் திரைப்படம் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் எவ்வாறு உருவாகிறது எனும் கோணத்தில் அனாதரவான விடலைப் பிள்ளைகளின் உளவியலை அலசியது. ஸ்டில் லைப் விளையாட்டைப்போல உருவாகிற குழுக் கலாச்சார வன்முறைக்குப் பலியாகிற மாணவனின் குடும்பத்தவர் பார்வையில் இப்பிரச்சினையை அணுகியது. 1999 கேங்ஸ்டர் குழுக்களில் உள்ள தோழமை, துரோகம் என்பவற்றோடு, இதற்கு முற்றிலும் தொடர்பற்றுப் பலியாகும் இளைஞர்களின் கண்ணோட்டத்தில் இப்பிரச்சினையைப் பார்த்தது. திவ்யராஜனின் சகா இவற்றிலிருந்தெல்லாம் விலகி வித்தியாசமான முறையில் இப்பிரச்சினையை அணுகுகிறது.

 

எதிர்காலக் கனவுகளும் வாழ்வு மேம்பாடும் என வாழ்கிற கனடியப் பெற்றோரது பார்வையில் இப்பிரச்சினையை அணுகுகிறது சகா. கேங்க்ஸ்டர் கலாச்சாரத்தில் ஈடுபடும் இளைஞர்களின் உளவியலாக்கம் குறித்து முற்றிலும் விலகி நின்று, அறமும் ஒழுக்கமும் வாழ்வில் மேன்மை எய்துதலும் என தமது குழந்தைகளை வளர்க்கும் பெற்றோரது பார்வையில் இப்பிரச்சினையை அணுகுகிறது சகா திரைப்படம். இந்தத் தளத்தை நாம் ஈழ புகலிட சமூகத்தின் பொதுப்புத்தி சார்ந்த தளம் என வரையறுக்கலாம். பிற சமூகங்களில் கேங்க்ஸ்டர்கள் என்பவர்கள் போதை மருந்து கடத்துபவர்களாக, கூலிக்குக் கொலை செய்பவர்களாக, தாம் வாழும் சமூகத்தில் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களாகத் தம்மைத் திரட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் பொருளியல் பலமும் அதிகார பலமும் கொண்டவர்கள். ஈழத்தமிழ் கேங்ஸ்டர்கள் இத்தகைய பண்புகள் கொண்டவர்கள் அல்ல என்கின்றன இதுவரை புகலிட நாடுகளில் நடைபெற்ற சமூகவியல் ஆய்வுகள்.

 

ஈழத்தமிழ் கேங்க்ஸ்டர் கலாச்சாரம் என்பது சிறிய அளவிலான கடன் அட்டை மோசடிகள், அதிக அளவில் காதல் தகராறுகள் என்பதாகவே வடிவம் பெற்றிருக்கிறது. இதில் ஈடுபடுபவர்கள் குழு மணப்பான்மை தரும் தோழமைக்காகவும், விடலைப் பிள்ளைகளின் சாகசங்களுக்காகவும், தமிழகத் திரைப்பட நாயகர்களைப் பிரதிபண்ணிய மோஸ்தராகவும், பிரதேசப் பாசத்திலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் முழுமையாக ஈழத் தமிழ் சமூகத்தின் வில்லன்களாகவோ, கறுப்பு ஆடுகளாகவோ, தீமையின் வடிவங்களாகவோ சித்தரிக்கப்பட முடியாதவர்கள். இந்தக் காணத்தினால்தான் இவர்கள் நிரந்தரக் குழக்களாக, குற்றச் சமூகமாக உருவாகவில்லை. இந்தக் காரணத்தினாலேயே கனடிய,ஆங்கில,பிரெஞ்சு சமூகங்களில் திட்டமிட்ட காவல்துறை நடவடிக்கைகளின் பின் இவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

 

இந்தத்தரவுகளுடனேயே நாம் திவ்யராஜனின் சகா திரைப்படத்தினை அணுகவேண்டியிருக்கிறது.

 

மூன்று கனடியத் தமிழ் குடும்பங்கள். முதல் குடும்பத்தில் தகப்பன் இளவயதில் இறந்துவிட தாயும் தாத்தாவும் சேர்ந்து ஒரே ஆண்குழந்தையை வளர்க்கிறார்கள். அமெரிக்கக் கறுப்பினப் பாடகன் துபாக்கின் ரசிகனான அந்த இளைஞன் துடிப்பு மிக்க, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கும் மாணவன். அவனுக்கு அவனை நேசிக்கும் தமிழ் சிநேகிதியும் உண்டு. இரண்டாவது குடும்பத்தில் தமது குழந்தைகள் மீது அபரிமிதமான பாசம் செலுத்தும் பெற்றோர்களும், ஒரு மாணவனும் அவனது சகோதரியான சிறுமியும் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தக் குடும்பத்தில் தந்தை தனது மகனின் வானியல் ஆசைக்காக தொலைநோக்கி வாங்கித்தருகிறவர். ஐன்ஸ்டைன் அந்த மாணவனின் ஆதர்ஷம். இந்த இரு குடும்பத்தினரதும் ஆண் வாரிசுகளான மாணவர்கள் ஒரே வகுப்பில் படிக்கிற அத்யந்த நண்பர்கள். இரண்டாம் குடும்பத்தில் தாயும் மகனும் இசையில் நாட்டம் கொண்டவர்கள். இந்தக் குடும்பத்து மகனான மாணவனுக்கு சீக்கிய சிநேகிதி உண்டு.

 

அறம், ஒழுக்கம், பாசம், அன்பு போன்றவற்றினால் வழிநடத்தப்படும் குடும்பங்கள் இவை இரண்டும்.

 

மூன்றாவது குடும்பம் சிக்கலான குடும்பம். இரண்டு மூன்று வேலைகள் செய்து சோர்ந்து வீடுதிரும்பும் தந்தை. ஊதாரிச் செலவு, ஓயாத தொலைக் காட்சி நாடகங்கள், அடுத்தவரை புறம்பேசிக் கழிப்பது என இவைகளின் மொத்த உருவம் தாய். சதா தூங்கிக் கழியும் இந்தத் தாய் சமைப்பதும் இல்லை, மாணவனான மகனைக் கவனிப்பதும் இல்லை. இந்த மூன்று குடும்பத்திலுமுள்ள மாணவர்கள் மூவரும் வகுப்புத் தோழர்கள். சதா சண்டை போடும் தாய் தகப்பனும், மேலாக வம்பளப்புத் தாயும் கொண்ட மூன்றாவது குடும்ப மாணவன் கேங்க்ஸ்டர்களாலும் போதை வஸ்துவினாலும் குடிவகைகளாலும் உள்வாங்கப்படுகிறான்.

 

எல்லாச் சமூகங்களிலுமே மத்தியரவர்க்கம் என்பது பொருளியல் வாழ்வின் அடுத்தகட்டம் நோக்கித் திட்டமிட்டு நகரும் சமூகப் பகுதி. புகலிட நாடுகளில் இறுக்கமான குடும்பக் கட்டமைப்பு அச்சூழலில் வளரும் குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டையும் பாதுகாப்புணர்வையும் வழங்குகிறது. ஈழத்து நிலைமையில் அரசியலில் நேரடியாக ஈடுபடாதவர்கள், அதனால் வழிவழியாக நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாகாதவர்கள் இப்படியான மனநிலையில்தான் புகலிடத்திலும் தம்மைத் ஸ்தாபித்துக் கொள்கிறார்கள். சமூகவியல் ஆய்வுகளின்படி வன்முறைக்குழுக்களில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலுமானவர்கள் ஏதேனும் ஒரு பெற்றோரை இழந்தவர்கள், சகோதர சகோதரியரை இழந்தவர்கள், உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், தமது உடனடிக் குடும்பத்தை இழந்தவர்கள், அறைகளையும் வீடுகளையும் பகிர்ந்துகொண்டு வாழ்பவர்கள். பாதுகாப்புணர்வு அற்ற இவர்களின் பாசப்பிணைப்பு என்பது குழுஉணர்வு மட்டும்தான்.

 

குழுக் கலாச்சாரத்துடன் இயல்பாகவே எந்த உறவும் கொண்டிருக்க முடியாத முதல், இரண்டாம் குடும்பம் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவசமாக ஒரு பிரச்சினைக்குள் உள்ளிடுகிறார்கள். தான் காதலிக்கிற பெண் இன்னொருவனைக் காதலிப்பது அறிந்து அந்த இன்னொருவனை வன்முறைக்குழ சார்ந்த ஒருவன் மிரட்டுகிறான். கைகலப்பு நேராமல் தடுப்பதற்காக இரு குடும்பத்து இளைஞர்கள் அதில் தலையிட்டு அவர்களை விலக்குகிறார்கள். மிரட்ட வந்தவன் பழிவாங்குவேன் எனச் சொல்லிவிட்டுப் போகிறான். அவன்தான் மூன்றாவது குடும்பழ்து மாணவனுக்கு போதை வஸ்துவும் குடிவகைகளும் பழக்கியவன். அவனைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவன். இவனோடு கொண்ட உறவினால் மூன்றாவது குடும்பத்து மாணவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டும் விடுவிக்கப்படுகிறான்.

 

துப்பாக்கி கொண்ட இந்த மிரட்டல்காரனின் துப்பாக்கி ரவைகளுக்குப் பலியாகிறார்கள் நூலகம் சென்றுவிட்டு வீடு திரும்பும் முதல் இரண்டு குடும்பத்தின் மாணவர்கள். தமது சிநேகிதர்களை இழந்து கண்ணீரில் கரையும் இரு இளம்பெண்கள். தனது ஒரே மகனையும் இழந்து அரற்றும் இளம் விதவைத் தாய். பேரனை இழந்து கரையும் தாத்தா. பூச்சிக்கும் தீங்கு நினையாத மகனைப் பறிகொடுத்த பெற்றோர். தனது ஆருயிர் நண்பர்களைப் பறிகொடுத்த தனித்த மூன்றாவது குடும்ப மாணவன். இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

 

சகா  தனது கதையமைப்பில் இதற்கான பதிலை அலச முயல்கிறது. பாசமற்ற, பூசல் நிறைந்த பெற்றோர் ஒரு காரணம் என்கிறது திரைப்படம். அன்பு நிறைந்த பெற்றோர் பாதுகாப்பும் வழிகாட்டு நெறியும் வழங்க முடியும் என்கிறது படம். வன்முறையை மத்தியதர வயது மனிதரும் ஊட்டி வளர்க்கிறார்கள் என்கிறது கதை. விதாரணையார் போன்றதொரு சமூகப் பாத்திரத்தை கனடியச் சூழலில் எவர் ஏற்க முடியும்? ஆதார ஈழ சமூகம் போல் பொதுச் சமூகக் கட்டுப்பாடு என்பது கனடியச் சூழலில் எவ்வாறு சாத்தியம்? இது குறித்த விவாதங்களை படத்தில் வரும் மூத்தவர்கள் பதிலற்று உரையாடியபடியே இருக்கிறார்கள்.

 

படத்தில் தலைமுறை இடைவெளி குறித்த பிரச்சினைகளும் வருகிறது. பிற சமூகததவர் குறித்த புரிதலற்ற பெற்றோரிடமிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறார்கள் இன்றைய தலைமுறை இளைஞர்கள். சீக்கியர்கள் அனைவரும் ஒரு தமிழ்த்தாய்க்கு 'கிரிமினல்'களாகத் தெரிகிறார்கள். காதல் வயப்பட்ட பெண் ‘கீழ்சாதிக்காரனை’ காதலித்துவிட்டாள் என்பதற்காக மகளை ஐரோப்பாவுக்குக் கடத்துகிறார்கள் தமிழ் பெற்றோர். இந்தவிதமான அவமானகரமான சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் தாண்டிவந்துவிட்டார்கள் என்பதற்குச் சாட்ச்pயமாக மூன்று குடும்பத்தினதும் மாணவச் சகாக்கள் இருக்கிறார்கள்.

 

ஒப்பனைகள் அற்று நடிக நடிகையரை இயல்பாகப் பாவித்திருக்கிறார் இயக்குனர் திவ்யராஜன். அநேகமாக அனவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள். இறுதிப் பாடல் தவிர பிற பாடல்கள் படத்திற்குத் தேவை என்று தோன்றவில்லை. முதியவர்கள் தொடர்பான பல காட்சிகள் படத்துடன் ஒட்டவில்லை. வன்முறை குறித்த பொத்தாம் பொதுவான உரையாடல்கள் உபதேசத்தின் தன்மையையும் அரசியல் வன்முறை குறித்த குறிப்பான அணுகுமுறை கொண்டிராத தன்மையையும் கொண்டிருக்கின்றன. படத்தில் முதலில் தோன்றிப் பேசுவதும், இறுதியில் வரும் பொன்மொழிகளும் நவீன சினிமா மொழிக்கு உரியது இல்லை.

 

படத்தில் ஒரு காட்சி இன்னும் எனக்கு நெருடுகிறது. முதல் இரண்டாம் குடும்பத்து மாணவர்கள் மூன்றாவது குடும்ப மாணவச் சகாவை ஒரு காட்சியில் அருகில் அழைக்கிறார்கள். அவரோடு போதைக் குழு சார்ந்தவர் ஒருவரும் வருகிறார். மூன்றாமவர் பிற இருவரிடமும் பேசிவிட்டு நகரும்போது அவருடன் வந்தவர் பிற இரு மாணவர்களையும் பார்த்து காறி உமிழ்ந்துவிட்டுப் போகிறார். என்ன காரணம் என எனக்குப் பிடிபடவேயில்லை. இது இயக்குனரின் ஒற்றைப் பரிமாணப் பார்வையிலிருந்து வருகிறது என நினைக்கிறேன். இதுமாதிரியிலான ஒற்றைப் பரிமாணப் பார்வை படம் நெடுகிலும் குழுவன்முறையாளர்களின் மீதும் இருக்கிறது. இது சமூகவியல அடிப்படையில் மிகச் சிக்கலான ஒரு கண்ணோட்டமாகும்.

 

காதல் சிக்கலுக்கு இன்னொரு காரணாக 'கீழ்சாதி'ப் பையன் என ஒரு வசனம் வருகிறது. அதனைச் 'சாதியப் பிரச்சினை' எனும் தேர்ந்த வசனத்தினால் குறிப்பிட்டிருக்க முடியும்.

 

காதல்பாடல் காட்சி உள்ளிட்டு சில நாடகீயமான காட்சிகளில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை என்றாலும், முழுமையான திரை அனுபவம் எனும் அளவில் சகாவின் அசலான, தனித்தன்மைமிக்க கதை அமைப்பும், அதனைச் சொன்ன முறையும், இயல்பான ஒப்பனையற்ற நடிக நடிகையரின் நடிப்பாற்றலும் படத்தினுள் ஒருவரை ஆழ்ந்துபோகவே செய்கிறது. மிகச் சிக்கலான ஒரு பிரச்சினையை திவ்யராஜன் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓரு முக்கியமான பரிமாணத்திலிருந்தும் கோணத்திலிருந்தும், வன்முறைக்குத் தமது மகவைப் பலிகொடுக்கும் பெற்றோரது பார்வையில் பிரச்சினையை அணுகியிருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகள் எந்தப் பெற்றோரதும் மனத்தை அசைத்துவிடும் காட்சிகள். தமது பார்வையில் அர்த்தமற்ற வன்முறைக்கு எதிராகப் பேசியதற்காக புகலிடத்துப் பெற்றோர்கள் திவ்யராஜனை வாழ்த்துவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86079/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.