Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையாரின் முட்டையும் குடியானவனின் அம்மியும்

Featured Replies

வழமையாக செய்திகள், வார்த்தைகள் மூலமோ காட்சிகள் மூலமோ எம்மை வந்தடைவதுண்டு. அவ்வாறே ஓவியங்கள், புகைப்படங்கள் போன்றவையும் செய்தி சொல்வனவாக விளங்குகின்றன.

சில சமயங்களில் ஓவியங்கள், புகைப்படங்கள் என்பன தமது தளத்துக்கு வெளியே விரிவடைந்து பல செய்திகளை உணர்த்துவதுண்டு. அவ்வகையில் அண்மையில் சண்டேலீடர் ஆங்கில இதழில் வெளிவந்த ஒரு புகைப்படம் தனது காட்சிப் படிமங்களுக்கு வெளியே பல செய்திகளை உணர்த்துவதாகவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசனத்தில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றிச் சில அமைச்சர்கள் நின்றிருக்க அமைச்சர் மேர்வின் சில்வா ஜனாதிபதியின் காலடியில் நிலத்தில் பணிவுடன் அமர்ந்திருக்கிறார்.

ஜனாதிபதியின் அன்புக்குரிய அவரின் விசுவாசமுள்ள ஜீவனாக அப்படத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா காணப்படுகிறார். தான் ஜனாதிபதியின் அன்புக்குரியவன் எனவும் அவர் எப்போதும் தன்னைக் கைவிடமாட்டார் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா ஒரு முறை கூறி இருப்பது இப்படத்தைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது.

களனித் தொகுதியில் மேர்வின் சில்வா செய்யும் அடாவடித் தனங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக விளங்கியவர் முன்னாள் களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவல. அவர் கடந்த வாரம் அவரது வீட்டின் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஐவரில் பிரதான சந்தேகநபர் மேர்வின் சில்வாவின் களனிப் பிரதேச இணைப்புச் செயலாளர். ஏனைய நால்வரும் கூட அமைச்சரின் தீவிர ஆதரவாளர்கள்.

இது தொடர்பாக களனி பிரதேச சபைத் தலைவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகவே இந்தக் கொலைக்கும் மேர்வின் சில்வாவுக்கும் தொடர்பு உண்டு எனவும் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.


ஆனால் இதுவரை அமைச்சர் கைது செய்யப்படவில்லை. மாறாக ஜனாதிபதியின் காலடியில் அமைச்சர் மேர்வின் பணிவுடன் அமர்ந்திருக்கும் படம் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

மேர்வினுக்கும் மடவலவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துபவர்களுக்கு இப்படம் சில செய்திகளைச் சொல்லக் கூடும்.

ஓர் இரவு விடுதியில் மேர்வின் சில்வாவின் மகனால் நையப்புடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படை அதிகாரி பின் தன்னை அமைச்சரின் மகன் தாக்கவில்லை என வாக்குமூலம் கொடுத்ததை நாம் மறந்துவிட முடியாது. களனி பிரதேச சபைத் தலைவரின் நிலைப்பாட்டையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படியிருந்த போதிலும் அரசியல், நீதித்துறை, ஊடகம் எனப் பல்வேறு மட்டங்களிலும் இன்று கொலைகள், கொலை முயற்சிகள், கொலை அச்சுறுத்தல்கள் என்பன மூலம் ஒரு ஜனநாயக விரோதப் போக்கு அதிகார பீடங்களாலும் அவர்களின் அடிவருடிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இப்படியான செயற்பாடுகள் அரசியல் களத்தில் மட்டுமன்றி நீதித்துறை, ஊடகத்துறை எனப் பல முனைகளிலும் பாய்வதை நாம் அவதானிக்க முடியும். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்தின நடு வீதியில் வைத்துத் தாக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும்படி நீதிமன்றம் இரு முறை உத்தரவு பிறப்பித்த பின்பும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் பிரதம நீதியரசர் தொடர்பான குற்றவியல் பிரேரணை சம்பந்தமாக அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அது தொடர்பாகவும் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. அதாவது அதிகாரபீடங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் அது தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலை நிலவுவதும் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அண்மையில் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்த பின்பு விஜயதாச ராஜபக்ஷவின் நிலைப்பாட்டில் தளர்வு ஏற்பட்டதையும் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளமையும் அவதானிக்க முடியும்.

அதாவது நியாயத்திற்கான குரல்கள் வன்முறை மூலமோ அல்லது அச்சுறுத்தல்கள் மூலமோ அடக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை எவரும் நிராகரித்து விடமுடியாது. இன்று அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் கூட நீதித்துறையின் மீதான அரசியல் அழுத்தங்கள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடர்கின்றன. உதயன், எம்.ரி.வி., லங்கா நியூஸ் உட்படப் பல ஊடகங்கள் பல முறை தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன.

பல பிரபலமான ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்டனர், பலர் தாக்கப்பட்டனர், பலர் காணாமற்போயினர், பலர் சிறை செய்யப்பட்டனர், பலர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு ஓடினர். எனினும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை எவருமே தண்டிக்கப்படவில்லை.

தென்னிலங்கையில் மேர்வின் சில்வா தெருச் சண்டியனைப் போன்று அடாவடித்தனங்களை சுதந்திரமாக மேற்கொள்வதைப் போன்றே வடக்கிலும் சில அதிகார பீடத்தின் செல்லப்பிள்ளைகள் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர் மீதும் நியாயங்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீதும் வன்முறைகளை ஏவிவிட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை மீதும் அதன் பணியாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது ஒரு தொடர் கதையாகவே விளங்கி வருகிறது. கடந்த வருடம் உதயன் செய்தி ஆசிரியர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிர் ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அண்மையில் உதயன் விநியோகத்தர் கூட மாலிசந்தியில் வைத்து நையப்புடையக்கப்பட்டதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் பத்திரிகைகளும் எரியூட்டப்பட்டன. இவற்றை மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்படவில்லை, கைதுசெய்யப்படப் போவதும் இல்லை.

இப்படியான வன்முறைகளுக்கு பின்னணியில் நிற்கும் அதிகார பீடத்தின்  செல்லப்பிள்ளைகள் யார் என்பது எல்லோருக்கும் தெரிகிற போதிலும் உயிர் அச்சம்  காரணமாக எவரும் வாய்திறப்பதில்லை.

மாணவர் அமைப்பின் தலைவர்கள், மருத்துவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என எவரையுமே இவர்கள் விட்டு வைப்பதில்லை தாக்குதல் நடத்தல், கழிவு ஒயில் வீசுதல் என இவர்கள் பலவித வழிமுறைகளை கையாள்வது உண்டு. மன்னாரில் கூட நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு மன்னார் நீதிமன்றில் உண்டு.

இது தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மன்னார் உப்புக்குளம் மீன்பிடித் துறைமுகத்தை தமிழ் மீனவர்கள் வேறு ஓர் ஏற்பாடு செய்யும் வரை பாவிக்க நீதிமன்றம் அனுமதித்த காரணத்தால் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்போது நீதிமன்றக் கட்டடமும் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அது தொடர்பாகவும் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இதை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையே  மோதல்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் மன்னார் வாழ் தமிழ், முஸ்லிம் பிரமுகர்கள் ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு முரண்பாடுகள் எழாமல் தடுத்து நிறுத்தினர். இவ்வாறே மன்னார், வவுனியா, சாளம்பைக்குளம் ஆகிய இடங்களிலும் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

அப்படியான  முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில் இப்போ இன்னொரு வடிவில் ஓர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலுள்ள மூன்று ஊடகவியலாளர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் "சிஹாத்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் ரிசாத் பதியுதீனுக்கு எதிராகச் செயற்படுவதாகச் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமைச்சர் தனக்கு அதில் சம்பந்தமில்லையெனவும் தோற்றுப்போன புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதலை ஏற்படுத்த முயலும் சதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கில் எப்படி மேர்வின் சில்வா அதிகார பீடங்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறாரோ அப்படியே வடக்கிலும் நியாயங்களை வேண்டி குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக செல்லப்பிள்ளைகள் வன்முறைகளை ஏவி விடுகின்றனர். உடையார் வீட்டுக் கோழி முட்டைகள் குடியானவன் வீட்டு அம்மியைச் சில சமயங்களில் உடைக்கலாம். ஆனால் அம்மி அம்மி தான் முட்டை முட்டைதான்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3795945323368783

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.