Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தர்க்கபூர்வ விதி ஈழத்திற்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தர்க்கபூர்வ விதி ஈழத்திற்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது

தத்தர்
 

 

தமிழகத்தை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு பெரிதும் கொதிநிலையடையச் செய்துள்ளது. உலகப் பெரு வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளினால் அவை ஒன்றுடன் ஒன்று உரசுண்டு அல்லது மோதுண்டு ஏற்படுத்தும் தீப்பொறிகள் அவ்வப்போது தமிழக அரசியலைப் பற்றி எரிய வைக்கின்றன.

 

இராஜபட்சேக்கள் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் குளிர்காய்ந்து பெருவெற்றி ஈட்டியுள்ளார்களே ஆயினும் அந்தப் பெருவெற்றியின் பாதையில் அவர்கள் தமது பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டவும் அதற்கான விதைகளை விதைக்கவும் தவறவில்லை. எனவே அவர்கள் உருவாக்கிய வெற்றிப் பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டத் தவறவில்லை. இதனை அரசியல் வரலாற்றில் தர்க்கபூர்வ வளர்ச்சிப் போக்கு (Process of Logical Development) என அழைப்போம்.

 

இராஜபட்சேக்கள் தமது வெற்றிக்காகத் தோற்றுவித்த உள்நாட்டு அரசியலும் இனஅழிப்பு நடவடிக்கைகளும் அதன்பொருட்டு அவர்கள் உருவாக்கிய வெளிநாட்டு அரசியலும் அதன் பிரதிவிளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்தப் பிரதிவிளைவுகள் தற்போது உள்ளும் புறமும் என ஈழத்தமிழர்களின் நேர்க்கணிய வளர்ச்சிக்குச் சாதகமான ஒட்டுமொத்த இயங்கியல் வளர்ச்சிப் போக்கையும் குறிப்பான தர்க்கபூர்வ வளர்ச்சி விதிகளையும் கொண்டுள்ளது.

 

வரலாற்றில் ஒருவிடயம் சரியாகவோ பிழையாகவோ கருக்கொண்டு விட்டால் அக்கரு விருப்பு வெறுப்புக்கப்பாலான இயங்கியல் வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க (DEVELOPMENT OF DIALECTICAL PROCESS) நிர்ணயம் பெறுகின்றது. இந்நிலையில் அரசியலானது ஒன்றிலொன்று தங்கி தவிர்க்கமுடியாத சங்கிலித் தொடர் வளர்ச்சிப் போக்கைக் கொள்கின்றது.

 

முள்ளிவாய்க்கால் பெருமெடுப்பு தமிழீழ மண்ணில் தன் அக்கினிச் சுவாலையை அடிவேர்வரை பாய்ச்சியுள்ளது. இதனால் களத்தில் ஒரு மடிவு ஏற்பட்டிருக்கின்றது. களத்தில் புற்களையும் பூண்டுகளையும் கூட முளைக்கவிடக் கூடாதென்று எதிரி கங்கணம் கட்டும் நிலையில் களத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர் ஒருபுறமும் தமிழகம் மறுபுறமும் என வீறுமிக்க இரு கிளை அரசியல் தழைத்தோங்கத் தொடங்கியுள்ளது. அது சர்வதேச அரசியல் மேகங்களால் மழையூட்டப்பட்டு செழித்தோங்கி வளரக்கூடிய அரசியல் சூழலைக் கொண்டுள்ளது.

 

ஈழத்தமிழர்களினது அரசியல் களத்தில் ஒப்பீட்டு ரீதியில் பெரும் வெற்றிடத்தைக் கொண்டுள்ள அதேவேளையில் களத்திற்கு வெளியே சர்வதேச அரசியல் சூழல், தமிழக அரசியல் கொதிநிலை, புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் கால்வாய்களென இம் முப்பெரும் பரிமாணங்களாக வளம்படுத்தக்கூடிய இயங்கியல் தளத்தை ஈழத்தமிழரின் அரசியல் கொண்டுள்ளது.

 

இதில் தமிழக அரசியலின் இயங்கியல் மற்றும் தர்க்கபூர்வ நிலையை இங்கு புரிந்துகொள்ள வேண்டியது முதற்கண் அவசியமானது. தமிழக அரசியலில் பல்வேறு அங்கங்கள் உண்டே ஆயினும் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பால் தோற்றுவிக்கப்பட்ட இனமான உணர்வின் விளைவால் அது ஒரே ஒரு நேர்க்கணியப் பாதையை மட்டும் கொண்டுள்ளது. இது எதிரி விரும்பாத ஆனால் எதிரி தோற்றுவித்த செயலின் மறுபக்கத் தர்க்கபூர்வ விளைவாகும். இதனை மிகக் கவனமாகவும் சரியாகவும் பொறுப்புடனும் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மாறிமாறிப் பதவிக்கு வரக்கூடிய அளவில் ஏறக்குறைய சமபலம் கொண்டவை. மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் ஏனைய கட்சிகளும் தத்தமக்கென பலமான மக்கள் பின்னணிகளைக் கொண்டவை.

 

மேற்படி இருபெரும் கட்சிகளும் மொத்த வாக்குகளில் சுமாராக 2/3 பங்கை தம்மிடையே பங்கீடு செய்ய முடியும்போது ஏனைய அனைத்துக் கட்சிகளாலும் சுமாராக மிகுதி 1/3 பங்கு வாக்குக்களை தம்மிடையே பங்குபோட முடிகிறது. இனமான உணர்வு என்று வந்துவிட்டால் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து அனைத்து வாக்குகளும் ஒருமுனை மனப்போக்கைக் கொண்டுள்ளன. இந்த ஒருமுனை மனப்போக்கிற்கு அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் பணிந்தாக வேண்டும். இந்நிலையில் இக்கட்சிகள், ஒருமுனைப் போக்கைக் கொள்ளக்கூடிய இந்த வாக்குக்களை முண்டியடித்து தம்பக்கம் கவரவேண்டிய அவசியத்தின் பெயரில் இனமான பிரச்சனையை தமது அரசியலுக்கான முதன்மைக் காரணியாய் முன்நிறுத்த வேண்டும்.

 

இந்நிலையில் இத்தகைய இனமான உணர்வை அறுவடை செய்வதற்கு தேவையான வகையில் ஒரு முக்கிய கட்சி தன் நிலைப்பாட்டை மேற்கொள்ளுமேயானால் மற்றைய முக்கிய கட்சி விரும்பியோ விரும்பாமலோ அதற்கு உட்பட்டு, தானும் அவ்வழியில் முன்னேற முயற்சிக்கும். ஆதலால் இரு கட்சிகளுக்கிடையேயான வேறுபாடும் போட்டியும் ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னெடுக்க உதவுமே தவிர பின்னோக்கிச் செல்லமுடியாது. இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிரானவைகளே ஆயின், இக் குறித்த இனமான வளர்ச்சிகளின் பொருட்டு அவை ஒன்றுக்கொன்று அனுசரணையானவையாகவே உள்ளன. ஆதலால் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையேயான போட்டியும் ஒன்றுடன் ஒன்றான பகைமையும் ஈழத்தமிழர் அரசியலை முன்னேற்றுவதில் பங்களிப்புச் செய்யவல்ல சாதகமான அம்சமாகவே கணிப்பீடு செய்யவேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக நிற்பதனாலேயே ஈழத்தமிழர் அரசியலை ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு முன்னேற்ற வேண்டிய அவசியம் இருக்கின்றது.

 

ஆதலால் இயங்கியலின்படி இதனை ஒரு சாதக விடயமாகப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர பாதகமாக அல்ல. அதாவது ஒன்று பிரச்சினையைக் கையிலெடுக்காவிட்டால் மற்றது பிரச்சனையைக் கண்டுகொள்ளாது விடும் என்ற அபாயத்துக்கப்பால், ஒன்று கையிலெடுக்க மற்றையது தலையில் தூக்கும் என்ற நிலையே இதன் தர்க்கபூர்வ போக்காகும். இவ்வகையில் இந்நிலை தமிழகத்தில் காணப்படும் வலதுசாரிகள் அரசியல் கட்சிகள் ஆயினும் சரி, இடதுசாரி அரசியல் கட்சிகளாயினும் சரி பல்வேறு கட்சிகளும் ஈழத்தமிழர் அரசியலை ஒருமுனையில் உயர்த்தத்தக்க ஒன்றுக்கொன்றான அணுசரணை வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ளன. ஆதலால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய எத்தகைய அரசியல் வேறுபாடுகளும் ஒன்றையொன்று முன்தள்ளி முன்னேற்றக்கூடிய பின்புலத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய பின்புலத்தை, இத்தகைய இயங்கியல் யதார்த்தத்தை புலம்பெயர் தமிழர்களும் களத்தில் வாழும் தமிழர்களும் சரிவரப் புரிந்து அதனை ஈழவிடுதலைக்குப் பொருத்தமான வகையில் முன்னெடுக்கப் பாடுபடவேண்டும்.

 

களத்தில் வாழும் தமிழர்கள் எதிரியின் அழிப்பிலிருந்தும் அது ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்தும் இன்னும் விடுபடவில்லை. எதிரி தனது இராணுவத்தாலும், காவல்துறையினராலும், புலனாய்வுத் துறைகளினாலும், நிர்வாக கடிவாளங்களினாலும், அரசியல் நகர்வுகளினாலும் தமிழீழ மண்ணை தனது கடவாய்ப் பிடிக்குள் வைத்துள்ளான். இவ்வகையில் மக்கள் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் அங்கு தெளிவான அரசியல் வெற்றிடமும் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் கைவீசி நடக்கக்கூடிய அரசியல் சூழலை தாம் வாழும் மேற்குலகில் பெருமளவு கொண்டுள்ளன. அவர்களுக்குரிய வாய்ப்பும் அவர்கள் நிறைவேற்றக்கூடிய பங்கும் அவர்களுக்கான பொறுப்பும் மிகப்பெரியது. கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழகத்தில் காணப்படுகின்ற அரசியல் கொதிநிலையை உணர்ந்தேற்று அவற்றைச் சாதகமாக கையிலேந்த வேண்டும்.

 

உலக வரலாறு இரண்டு பலம்பொருந்திய டயஸ்பறாக்களைக் (Diaspora) இதுவரை கண்டுள்ளது. ஒன்று யூத டயஸ்பறா மற்றையது ஈழத்தமிழர் டயஸ்பறா. டயஸ்பறா என்னும் சொல்லின் பொருள் என்னவெனில் தம் சொந்தநாட்டைவிட்டு வேறுநாடுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள், அந்த வேற்று நாடுகளில் தம் சொந்த நாடுகளின் உணர்வுடன் கூட்டாகச் செயற்படும் உணர்வைக் கொண்டு வாழ்பவர்கள் என்பதாகும். இந்த வகையில் இன்று உலகில் காணப்படும் முதலாவது பலம்பொருந்திய டயஸ்பறா ஈழத்தமிழர் டயஸ்பறாதான்.

 

எதிரி ஈழத்தமிழர்களை அவர்களது சொந்தமண்ணில் கொன்றொழித்துள்ள நிலையில் அதன் தர்க்கபூர்வ விளைவாய் புலம்பெயர்ந்த மக்களிடம் ஒரு ஆத்திரமும், உத்வேகமும் ஏற்படுவது இயல்பு. மேலும் சொந்தமண்ணில் எஞ்சியுள்ளோர் முடமாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தர்க்கபூர்வ விளைவாயும் புலம்பெயர்ந்த மக்களுக்கான பொறுப்பு இயல்பாகவே அதிகரிக்கும். இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இரட்டிப்பு வேகத்துடன் அரசியல் ஊக்கத்தைப் பெறுவது தவிர்க்கமுடியாது. இந்த அரசியல் ஊக்கமும் தெளிவான இயங்கியல் வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ளது. இது தமிழகத்தில் கூட்டு வேகத்தில் அனுசரணை ஆகும்போது எமக்கு இருக்கக்கூடிய ஓரளவு வாய்ப்பான சர்வதேச சூழலில் மேலும் வாய்ப்புக்கள் பல்கிப் பெருகி டயஸ்பறா, தமிழகம், சர்வதேசம் என ஒன்றுக்கொன்று அணைகட்டையாய் ஈழத்தமிழர் அரசியல் சுவாலையை வியாபகமாக்கும். இந்த வியாபகத்தில் ஈழத்தமிழர்களுக்கு விடிவேற்பட வாய்ப்பு இருக்கின்றது.

 

இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் ஒன்றுக்கொன்று எதிரானவைகள் போல தோன்றக்கூடிய தமிழகக் கட்சியரசியல்கள்கூட ஒரே புள்ளியை உயர்த்திப் பிடிக்கக்கூடியது. அதேபோல எதிரிக்கு வெற்றிபோல் தோன்றுவதில்கூட வீழ்ச்சிக்கான குழிகளும் விதைகளும் உள்ளன. இவை அனைத்தையும் விதைத்து காலபோக அறுவடைசெய்ய ஈழத்தமிழர் தயாராக வேண்டும். தமிழகத்திலும் டயஸ்பறாவிலும் சர்வதேசத்திலும் ஏற்படக்கூடிய அரசியல் முன்னேற்றங்கள் களத்திலுள்ள அரசியல் வெற்றிடத்தை வேகமாக இட்டுநிரப்பிவிடக் கூடியவை. இம்மும்முனை அரசியல் வளர்ச்சிகளும் ஒன்றுகூடும்போது களத்திலுள்ள அரசியல் தொடர்ந்து வெற்றிடமாய் இருக்காது. இம்மும்முனை அணைப்பில் அதுவும் ஓங்கி வளரத் தொடங்கியுள்ளது. ஆதலால் விரும்பியோ விரும்பாமலோ யாரும் அசமந்திருந்திட முடியாது. வரலாற்று அசைவு எல்லாவற்றையும் அசைத்து முன்னேற்றும். ஆதலால் அதிகம் விழிப்புடன் அனைத்து சக்திகளும் ஒரு முனையில் முன்னேறவேண்டிய வரலாற்று அழைப்பை இவ்வாண்டு ஈழத்தமிழர்களுக்குத் தோற்றுவித்துள்ளது.

 

ஈழத்தமிழர்களின் உரிமைக்கான வெற்றியில்தான் ஈழத்தமிழரதும் தென்னாசியாவினதும் இந்துமகா சமுத்திரத்தினதும் அமைதி தங்கியுள்ளது. வரப்போகும் தசாப்தங்கள் இலங்கைத் தீவையும் ஈழத்தமிழர்களையும் மையமாகக் கொண்ட ஓர் அரசியல் சகாப்தமாகும். ஈழத்தமிழர்கள் அளவால் சிறியவர்கள் என்பதல்ல முக்கியம். அவர்கள் உள்ளடக்கத்தால் இந்து சமுத்திரத்தின் முக்கிய இயக்கப் புள்ளி ஒன்றில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களை நோக்கிய அரசியல் கவர்ச்சி உள்ளும் புறமும் தவிர்க்க முடியாது ஓங்கும்.

 

தமது அண்டையில் தமது இனத்தவர்களான ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதை தம்மால் தடுக்க முடியாது போனதை எண்ணி தமிழக மக்கள் ஒருபுறம் தம்மை நோவதும் மறுபுறம் தம் கையாலாகாத தனத்தை எண்ணி வேதனையுற்று ஆத்திரப்பவதுமென தமிழக அரசியலில் ஒரு புதிய கருப் பாய்ந்துள்ளது. இக்கரு இதற்கேயுரிய வளர்ச்சிவிதியைக் கொண்டுள்ளது. ஆதலால் இது கட்சி வேறுபாடுகளைக் கடந்து எங்கு அடிவைத்தாலும் அது முன்னேற்றத்தைத் தவிர வேறு எங்கும் நகரமுடியாத பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

 

சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ள எமது வாழ்வையும், ஆழமாய் காயப்படுத்தப்பட்டுள்ள எமது இதயத்தையும், இதயத்தின் அடித்தளத்தில் புதைந்துகிடக்கும் எமது அபிலாசைகளையும் மீட்டெடுத்து ஒரு வரைபடமாய் வரைந்தால் எமது துயரத்தின் அளவையும் அது ஏற்படுத்தவல்ல தாக்கத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

 

தொன்மையும் செழிப்பும்மிக்க நாகரிகத்துடன்கூடிய ஒட்டுறவும் பற்றுறுதியும் கொண்ட வாழ்க்கை முறையையுடைய ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக நிகழும் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையின் விளைவாய் கூடுகுலைந்து காடுகலைந்து புவிபரப்பின் நாலாபுறங்களிலும் அகதிகளாய், கையேந்திகளாய் பல்வேறு நாட்டவர்களின் கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் கூனிக்குறுகிப் பதில்சொல்ல வேண்டியவர்களாய் மதிப்பற்ற மக்களாய் மனமுடைந்து நிலைகுலைந்து வாழ்கின்றோம்.

 

வீட்டிலும் வீதியிலும், கோவிலிலும் கொல்லையிலும், தெருவிலும் திண்ணையிலும், பள்ளிக்கூங்களிலும் கலைக்கூடங்களிலும், காட்டிலும் மேட்டிலுமென எங்கள் உறவுகளை இழந்துள்ளோம். காதலனை இழந்த காதலி, பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், சகோதரியை இழந்த சகோதரன் என உறவினர்களினது இழப்பும் அயலவர்கள் நண்பர்களினது இழப்பும் கனவிலும் நனவிலும் எங்கள் முன் நிழலாடுகின்றன. எதிரி வீட்டையும் வணக்கத்தலங்களையும் கொலைக்களங்கள் ஆக்கியதற்கப்பால் தான் நடத்தும் சிறைச்சாலைகளையும் கொலைக்களங்களாக்கியே உள்ளான். பள்ளிக்கூடங்களிலும் நாம் கொல்லப்பட்டோம். கலைக்கூடங்களிலும் நாம் கொல்லப்பட்டுள்ளோம். நீதி சொல்வார் எவருமில்லை. எமக்கேற்பட்டுள்ள வடுவையும் அவமானத்தையும் இழப்புக்களையும் எவற்றாலும் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. காலஓட்டத்தால் இவை எதுவும் கழுவுப்பட்டுப் போக மாட்டாது. விடுதலை ஒன்றால் இதிலிருந்து மீள்வதைத் தவிர எமக்கு மாற்றுவழி எதுவும் இல்லை.

 

'மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் என மூன்றும் அத்தியாவசியமானவை' என்று கால் மார்க்ஸ் எளிமைப்படுத்தி வரையறுத்தார். ஆனால், இவை மூன்றுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பே தலையாயது. உயிர் பாதுகாப்பு இல்லையேல் மற்றைய மூன்றும் இருந்தும் பயனில்லை. ஆதலால் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் முதலாவது உயிர்ப் பாதுகாப்பும் அடுத்து உணவு, உடை, உறைவிடமென நாம் நான்கையும் ஒன்று சேர்த்துக் கூறவேண்டியுள்ளது. முதல் மூன்றையும் வரையறுத்துக் கூறிய கால் மார்க்சுக்கு நன்றி. ஆனால் அவர் கூறிய அந்த மூன்றுக்கும் முன்னால் நாம் உயிர்ப் பாதுகாப்பு என்பதை முதலாவதாக நிறுத்த வேண்டியுள்ளது.

 

எங்களுக்கென்று ஒரு அரசில்லாமல் எங்களுக்கென்று ஒரு வாழ்விருக்க முடியாது என்பதையே கடந்த தசாப்தகால சிங்கள ஒடுக்குமுறை எமக்கு எடுத்துக் கூறுகின்றது. யாரால் எப்படி இதைப் புரிந்துகொள்ள முடியுமோ நாமறியோம். எம் கண்முன் கசக்கிப் பிழியப்பட்ட எம் பிள்ளைகளின் இளமைக்கால வாழ்வை, இளமை பறிக்கப்பட்டு எஞ்சியுள்ள எம் தலைமுறையின் மனவுணர்வுகளை வெறும் வார்த்தைகளாலோ சித்திரங்களாலோ விபரிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் தீர்வாய் அரசமைத்து ஆறுதலடைவதைத் தவிர, எமது இனிய தமிழ் தேசியத்தை மீட்டு அதற்கு புது வாழ்வு அளிப்பதைத் தவிர வரலாறு எம்முன் வேறு தெரிவுகளை விட்டுவைக்கவில்லை.

 

இப் பின்னணியில் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னும் அதைக்கண்டு வருந்த மறுக்கின்ற ஆறுதலோ அனுதாபமோ கூறத் தயாரில்லாத நீதி சொல்ல விரும்பாத சிங்கள பௌத்தத்துடனும், சிங்கள நிறுவனங்களுடனும், சிங்கள ஊடகங்களுடனும் சிங்கள மக்களுடனும் எவ்வாறு இனியும் இணைந்துவாழ முடியும்?

 

இப்பின்னணியில் ஐ.நா.வரை ஈழத்தமிழர் பிரச்சினை இப்போது பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. ஐ.நா.சபையால் தீர்வு கிடைக்குமென்று நாம் பெரும் எதிர்பார்ப்பைக் கொள்ள இடமில்லை. ஓர் உலகப் பொதுமன்றமாக ஐ.நா.சபை விளங்குவதால் அங்கு எமக்காகப் பேசப்படுவதை நாம் வரவேற்கிறோம். ஐ.நா.சபையின் கடந்தகால வரலாற்றைப் பார்க்கும்போது பொதுவாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலோ, அல்லது நீதி வழங்குவதிலோ ஐ.நா.சபை பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால் தோற்கடிக்கப்படாத, பதவியிலிருக்கும் கொடுங்கோலர்களுக்கு எதிராக ஐ.நா. சபையின் நடவடிக்கைகள் எதுவும் வெற்றிபெற்றது என்றில்லை.

 

ஐ.நா.சபையின் எத்தகைய தீர்மானமும் நடைமுறை வடிவம் பெறுவதற்கு இறுதியிலும் இறுதியாக பாதுகாப்புச் சபையில் அது நிறைவேற்றப்பட வேண்டும். பாதுகாப்புச் சபையிலுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒரு நாட்டினது வெட்டுவாக்கு (வீட்டோ) மட்டும் போதும் ஒரு தீர்மானத்தை நிராகரித்து விடுவதற்கு. சிங்கள அரசிற்கு சீனாவின் வெட்டுவாக்குப் பலம் இருக்கும்வரை நாம் அதிகம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அதேவேளை பெரும் அரசுகள் தங்களுக்கிடையே ஒத்த ஒரு புள்ளியில் சமரசம் செய்துகொள்ளக் கூடிய இயல்பு கொண்டவை. இந்நிலையில் ஐ.நா.சபையின் பயன்பாடு ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான். ஆனாலும் ஐ.நா.சபையால் ஒரு பிரச்சனையில் உலக அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடிய பெரும் பாத்திரம் வகிக்கமுடியும்.

 

தற்போது ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கு ஈழத்தமிழரின் விவகாரம் கொண்டுவரப்படுவதை இத்தகைய முக்கியத்துவத்தின் கீழ்த்தான் நாம் பரிசீலிக்க வேண்டும். அதேவேளை இத்தீர்மானத்தால் வளர்ச்சியடையக்கூடிய எமக்குச் சாதகமான உலக அபிப்பிராயம் பற்றிய முக்கியத்துவத்தை நாம் இழந்துபோகவும் கூடாது. இவ்வாறு சிங்கள அரசின் கொடூரம் உலக அரங்கில் அம்பலப்பட ஐ.நா.மன்றம் ஒரு கருவியாகப் பயன்பட முடிவதால் அதைநோக்கி நாம் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

 

சேபியர்களின் இனப்படுகொலை கிழக்கு ஐரோப்பாவில் உச்சநிலை அடைந்தபோது, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு இனப்படுகொலை புரிந்த ஆட்சியாளன் மிலோசவிச்சிற்கு இருந்தபோது ஐ.நா.சபையால் அங்கு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் மிலோசவிச்சின் இனப்படுகொலையை ஓர் உலக அபிப்பிராயமாகத் திரட்ட ஐ.நா. பயன்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட உலக அபிப்பிராயத்தின் பின்னணியில் ஐ.நா.விற்கு அப்பால் நேட்டோ நாடுகள் தமது படையை இறக்கி மிலேசவிச்சையும் சேபியர்களின் படுகொலை அரசையும் தோற்கடித்தன. அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட பின்பு ஐ.நா.சபையிடம் இவ்விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு விநோதமான நடைமுறை. ஆதலால் அந்தளவில் ஐ.நா.விற்கு இருக்கக்கூடிய பங்கையும் பாத்திரத்தையும் அதன் பருமனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

ஐ.நா.மனிதவுரிமைக் கவுன்சிலுக்கு 'யுத்த குற்றச்சாட்டு' பற்றிய தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் பின்னணியில்தான் அதனை ஒரு கருவியாகக் கொண்டுதான் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி தமிழகத்திலும் ஊடகங்களிலும் பெரிதும் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. அப்படிப் பார்த்தால் ஐ.நா.மனிதவுரிமைக் கவுன்சிலுக்கு இத்தீர்மானம் கொண்டுவரப்படுவதன் முதலாவது பலனை நாம் அடைந்துவிட்டோம். இத்தீர்மானத்தால் மேலும் கிடைக்கக்கூடியவையும் இனிக் கிடைக்காமல் போகக்கூடியவையும் இரண்டாம் பட்சமே.

 

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொதிநிலையை அறுவடைசெய்ய வேண்டியது ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தது. இப்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொதிநிலையானது எமக்கு சாதகமான ஒரு முன்நிபந்தனையாகும். தமிழகத்தின் கொதிநிலை தற்போது புதுடில்லியின் ஆட்சி மன்றங்கள் வரை ஒலிக்கத் தொடங்கியுள்ளது. பாராமுகம் கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் மேற்படி ஐ.நா.மனிதவுரிமைக் கவுன்சிலில் இதுபற்றிய தீர்மானம் கொண்டுவரப்படும் பின்னணியில் தான் நிகழ்ந்தேறியுள்ளது.

 

ஒன்றை அதன் அளவில் பார்க்கவேண்டுமே தவிர அதன் அளவுக்கு மேல் நாம் கற்பனை செய்ய வேண்டியதல்ல. ஐ.நா.சபையின் அமைப்பையும் அதன் அளவையும் கடந்த காலத்தில் ஏற்பட்ட அதன் செயல் வீச்சுக்களின் எல்லையையும் புரிந்துகொண்டால் எமது எதிர்பார்ப்புகளின் எல்லைகளை நாம் வரையறுத்துக்கொள்ள முடியும். அதாவது இங்கு நிராகரிப்புக்கும் இடம் வேண்டாம். அதிக எதிர்பார்ப்புக்கும் இடம் வேண்டாம். அதனை அதன் அளவில் புரிந்து அதில் நாம் காலூன்றிப் பாயக்கூடிய எல்லையைக் கண்டுகொள்வோம். இப்போது ஐ.நா.சபை தீர்மானத்தின் வரையறைகளை நாம் உணரமுடிகிறது. அதன் அடிப்பiயில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றுப் போக்குக்களும் எமது கண்ணுக்குத் தெரிகிறது. இத்தகைய மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் செய்யவேண்டிய பணி என்னவென்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

 

முதலில் நாம் எமக்கான ஓர் தலைமைத்துவத்தை உருவாக்கி எம் நியாயத்தை முன்வைத்து உலக அரங்கில் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான ஒரு களம் பிறந்திருக்கிறது. இக்களத்திற்குப் பொருத்தமாக எம்மை நாம் வடிவமைக்க வேண்டும். 'உன்னை நீ கைவிட்டுவிட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது' என்று ஒரு பிரஞ்சுப் பழமொழி இருக்கின்றது. ஆதலால் முதலில் எம்மை நாம் பற்றிப் பிடிக்க வேண்டும். எமக்குத் தேவையானவற்றை இந்த உலகிற்கு நாம் சொல்ல வேண்டும். உலகின் அனுசரணையுடன் எமக்கான அரசை நாம் அமைக்க வேண்டும். உலகின் அனுசரணை என்பது முழுநாடுகளும் எம்மை ஒரே நாளில் அங்கீகரித்துவிடும் என்ற அர்த்தத்தில் அல்ல. உதாரணமாக தென்சூடானின் விடுதலைக்கொதிராக சீனா கடும்போக்கை மேற்கொண்டது. சீனக்குண்டுகளும் தென்சூடானியர்களை பலிகொண்டன. ஆனால் தென்சூடான் விடுதலை அடைந்தபோது சீனா தென்சூடானை அங்கீகரிப்பதைத் தவிர அதற்கு மாற்றுவழியற்றுப் போனதை வரலாறு எம்கண்முன் படைத்துள்ளது.

 

தென்சூடானியரை எல்லா வல்லரசுகளின் வெடிகுண்டுகளும் காலத்திற்குக் காலம் பலியெடுத்தன. ஆனால் இறுதியில் வெடிகுண்டு போட்ட எல்லா நாடுகளின் வெடிகுண்டுகளையும் மீறி அந்நாடுகளாலேயே தென்சூடான் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நடைமுறையையும் நாம் கண்முன் காண்கிறோம். நியாயம், நீதி, அறம், ஒழுக்கம் என்ற அனைத்திற்கும் அப்பால் இரத்தமும் தசையுமான இத்தகைய நடைமுறைகளைப் புரிந்துகொண்டு எமது விடுதலையை நடைமுறைச் சாத்தியமான வழிகளில் நாம் சிந்திக்க வேண்டும். வரலாறு வெற்றிக்கான கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றது. அதற்கு நாம் எம்மை பொருத்தமுடையவர்களாகவும் தயாரானவர்களாகவும் ஆக்கவேண்டும். எம்மை ஓர் கொள்கையின் அடிப்படையில் ஒருங்கிணைத்து உருத்திரட்டுவதுதான் எம்மைப் பொருத்தமுடையவர்களாக்குவது என்பதன் பொருளாகும். வரலாறு எமக்குத் தரும் ஒரு சிறிய வாய்ப்பை அதனதன் அளவில் பயன்படுத்துமாறு வரலாற்று அனுபவம் எமக்குக் கண்டிப்பான குரலில் கட்டளையிடுகிறது. அக்கட்டளையை தலைமேல் தாங்கி விடுதலைக்கான வழியைத் தேடுவோமாக.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=1dfad8e5-b4b2-4486-a107-d8034084bdc8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.