Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் அம்பலமாகும் வடக்கின் வசந்தம்

Featured Replies

வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.

அது போர் இடம்பெற்ற காலம். கிளிநொச்சி வளர்ந்து வரும் ஒரு நகரமாக உருப்பெற்றிருந்த நாள்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகங்கள் அத்தனையும் அங்குதான் மையம் கொண்டிருந்தன.

அப்போது அங்கே அகன்ற அழகான ஏ9 வீதி இருக்கவில்லை. ஓங்கி உயர்ந்த கட்டடங்கள் இருக்கவில்லை. பிரதான வீதியால் பறக்கும் நவீன வாகனங்களையோ பெரும் கனரக வாகனங்களையோ காணமுடியாது.

எனினும் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். கிபிர் வரப் போகும் முன்னறிவிப்பு விசில் அடித்ததுமே மக்கள் ஆங்காங்கே இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் இறங்கி விடுவார்கள்.

ஒரு சில நிமிடங்களில் நகரம் வெறிச்சோடிவிடும். கிபிர் விமானம் குண்டுகளைப் பொழிந்துவிட்டு மேலெழுந்ததுமே கரும்புகை மண்டலம் அடங்குவதற்கு முன்பே நகரம் மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும். பொருளாதாரத் தடை காரணமாக எரிபொருள் முதற்கொண்டு பல பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு. எனினும் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ மக்கள் பழகிவிட்டனர்.

உரப் பசளைகள் இல்லாத போதும் இயற்கைப் பசளைப் பாவனை மூலமும், அமுதம்  என்ற உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பசளைகளையும் உள்ளீடு செய்து விவசாயம் செழித்தோங்கியது. அரிசி, மரக்கறி, மீன், இறைச்சி என்பன மலிவான விலையில் கிடைத்தன.

நடுச் சாமத்திலும் பெண்கள் நகைகளுடன் அச்சமின்றி நடமாடுமளவுக்கு களவு, கொள்ளை என்பன காணாமலே போய் விட்டன. பாலியல் வல்லுறவு, காடைத்தனம் என்பனவும் இல்லாமற் போய்விட்டன. அரச காரியாலயங்கள் சீராக இயங்கின. லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

போரின் அவலங்கள் மத்தியிலும் வசதிகள் குறைவாக இருந்த போதிலும் அப்போது வசந்தம் வீசியது. மக்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். போர் உக்கிரமடைந்து வசந்தத்தைத் துடைத்துவிட்டு புயலைத் திணித்தது. தொடர் இடப்பெயர்வுகளும், சாவுகளும் உடல் உறுப்பு இழப்புகளுமென அவலங்கள் மக்களை முள்ளிவாய்க்கால் வரை தள்ளிச் சென்றன.

உயிர் தப்பியவர்கள் செட்டிக்குளம் முட்கம்பி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கும் கூட அவலத்தின் மேல் அவலங்கள். கைதுகள், காட்டிக் கொடுப்புக்கள், காணாமற் போதல்கள், உணவுக்கும் நீருக்கும் நீண்ட வரிசைகள் என மக்கள் மீது பல்வேறு அவலங்கள் சுமத்தப்படுகின்றன.

மீண்டும் மீள்குடியேற்றம் என சொந்த இடங்களில் கொண்டு வந்து கொட்டப்பட்டபோது இடிந்த சுவர்களும் கூரையற்ற சுவர்களும் எஞ்சிக் கிடந்தன. கிளிநொச்சி நகரம் இடிபாடுகளின் நகரமாகவும் பற்றைகளின் மையமாகவும் மாறிக் கிடந்தது. அது அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டது.

இப்போது போர் முடிந்த நான்காவது ஆண்டை நெருங்கக் கூடிய காலம். நான்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகக் கூடிய அகன்ற அழகான ஏ9 வீதி. அதன் இருபுறமும் ஓங்கி உயர்ந்த கட்டடங்கள் பல வண்ணங்களில் எழுந்து நிற்கின்றன.

இலங்கையின் அத்தனை வங்கிகளும் அடுக்குமாடிகள் அமைத்து அங்கு குடிவந்துவிட்டன. வாடகைக் கொள்வனவுக்கு வாகனங்களை வழங்கும் லீசிங் நிறுவனங்களும் கிளிநொச்சியை நிறைத்துவிட்டன.

மேலும் சுப்பர் மாக்கற்றுகள், பூட் சிற்றிகள், எங்கும் கண்ணாடி மயப்பட்ட அழகான வர்த்தக நிலையங்கள், இடையிடையே கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகர்களும் சில குச்சுக் கடைகளில் ஒண்டிக் கிடக்கின்றனர்.

எனினும் கிளிநொச்சி, தென்னிலங்கையில் கவர்ச்சிகரமான வர்த்தக  சந்தையாகக் காட்சி கொடுக்கிறது. வடக்கின் வசந்தம் பாரீர் எனப் பூரித்துப் போய் நிற்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் முன்வைக்கும் வடக்கின் துரித அபிவிருத்தியின் சாட்சியங்களாக அகன்ற ஏ9 வீதியும் உயர்ந்த வண்ணக் கட்டடங்களும் எழுச்சி பெற்று நிற்கின்றன.

ஆனால் இந்த அலங்கார அபிவிருத்தி வீசிய சுருக்கு வலையில் பலியாகிப் போன அப்பாவிகளின் சாட்சியங்களாகச், சிந்தப்படும் கண்ணீரும், இழக்கப்பட்ட குருதியும், பறிக்கப்பட்ட உழைப்பும், மௌனச் சாட்சியங்களாகக் குமுறுகின்றன.

நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு சென்று விட்டதைப் போன்று போரின்போது ஏற்பட்ட பேரிழப்புகளின் பின்பும் எஞ்சிக் கிடந்த ஒன்றிரண்டு சொத்துகளும் கூட துடைத்துப் பறிக்கப்பட்டு விட்டன.

கைநிறைந்த கடன் மட்டுமே எஞ்சிக் கிடக்கும் ஒரே ஒரு சொத்தாகிவிட்டது. இடப்பெயர்வின் பின்பு வன்னி விவசாயிகள் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பிவிடும் தாகத்துடன் விவசாயத்தில் இறங்கினர்.

வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்கின. நகைகளும் அடைவு கடைகளுக்குப் போயின. மண் கைவிடவில்லை. நன்றாகவே விளைந்து கொடுத்தது. அறுவடையில் பொலி பெருகியது.

ஆனால் விளைந்த நெல்லைச் சந்தைப்படுத்த முடியவில்லை. தற்காலிகக் கூடாரங்களுக்குள்ளும் சிறு தகரக் கொட்டிலுக்குள்ளும் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து பழுதடைந்தது. வேறு வழியற்ற நிலையில் தனியார் வியாபாரிகளுக்கு அறா விலைக்கு நெல்லை விற்க வேண்டி வந்தது.

நெற் சந்தைப்படுத்தும் சபை உரிய நேரத்தில் வரவில்லை. காலம் தாழ்த்திவந்த போதும் ஒரு சிறிய அளவு கொள்முதல் செய்துவிட்டுப் போய்விட்டது. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நிதி இல்லை, களஞ்சிய வசதி இல்லை எனக் கூறித் தட்டிக் கழித்துவிட்டன.

எனினும் விவசாயிகள் நஷ்டமடைந்த போதிலும் ஓரளவு கடனையாவது திருப்பிச் செலுத்திக் கொண்டனர். மீண்டும் அடுத்த வருடமும் வங்கிக் கடன்களும் அடைவு கடைகளுமே விவசாய முதலீட்டின் அடிப்படைகளாகின. ஆனால் மழையும் வெள்ளமும் ஆடிய வெறியாட்டத்தில் வயல் நிலங்கள் பேரழிவுக்குள்ளாயின.

முதலில் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாகக் கூறிய அரசு, பின்பு கடன்களைத் திருப்பக் கால அவகாசம் வழங்கப் போவதாகவும், அந்தக் காலப்பகுதிக்கு வட்டி அறவிடப் போவதில்லை எனவும் அறிவித்தது. அந்த அறிவிப்பு வடக்கின் வசந்தத்தை நெருங்கவேயில்லை.

கடன்களை உடனடியாகக் கட்டும்படியும், இல்லையேல் நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாகவும் வங்கிகள் விவசாயிகளை மிரட்டுகின்றன. அடைவு நகைகள் மீட்கப்படாத நிலையில் விலை போய்க் கொண்டிருக்கின்றன.

இன்றைய வன்னி  விவசாயி, வடக்கின் வசந்தத்தின் நிழலில் படு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு மூச்சுத் திணறுகின்றான். ஏ9 வீதியின் இருமருங்கிலும் லீசிங் நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன.

இவை ஒரு பகுதி முற்பணம் பெற்றுக் கொண்டு தவணைக் கட்டண அடிப்படையில் வாகனங்களை வழங்குகின்றன. பல விவசாயிகள் கிடந்தவற்றை விற்றோ, கடன்பட்டோ முற்பணம் கட்டி உழவு இயந்திரங்களை வாங்கினர்.

வெள்ளத்தில் விளைச்சல் அழிந்தது. தவணைப்பணம் கட்ட வழியில்லை. லீசிங் நிறுவனங்கள் உழவு இயந்திரத்தைப் பறித்துச் சென்றுவிட்டன. இப்போது கட்டிய தவணைப்பணமும் இல்லை; இடையில் கட்டிய முற்பணங்களும் இல்லை; உழவு இயந்திரமும் இல்லை.

நாளை என்ன செய்வது என அறியாது விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கிறனர்.
வீதி அபிவிருத்தி, கட்டடப் பணிகள் என்பன பெருமளவு மேற்கொள்ளப்படும் நிலையில் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் பலர் வாடகைக் கொள்முதல் அடிப்படையில் முற்பணம் கட்டி "ரிப்பர்' வாகனங்களை வாங்கினர்.

ஒப்பந்தக்காரர்களே வாகனங்களைத் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். ரிப்பர் வாகனங்களுக்கு தொழில் கிடைப்பது குறைவடைந்தது. எனவே தவணைப்பணம் கட்ட முடியாத நிலையில் ரிப்பர்கள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.

வாகனத்தை வாங்கியவரோ இருப்பதையும் உழைப்பின் பயன்களையும் லீசிங் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து விட்டு நடுத்தெருவில் நிற்கிறார். "ஹையெஸ், முச்சக்கரவண்டி என லீசிங் அடிப்படையில் கொள்முதல் செய்தவர்களும், இப்போ ஒவ்வொன்றாகப் பறி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வறுமைக்குள் தள்ளப்பட்ட வன்னி மக்கள் பஸ்ஸில் பயணம் செய்யக் கூடப் பணமின்றித் திண்டாடும் போது "ஹையெஸ்' வாகனத்தை வாடகைக்கு அமர்த்தவோ முச்சக்கரவண்டியில் பயணம் செய்யவோ முடியுமா?

இது தான் வன்னியில் வடக்கின் வசந்தத்தின் நிலை. அதாவது கொடுப்பது போல் கொடுத்து இருப்பதையும் பறித்தெடுத்து நடுத்தெருவில் வன்னி மக்களை விட்டுள்ளது வடக்கின் வசந்தம்.

அதேவேளையில் போரில் கணவன்மாரையோ, தந்தை தாயாரையோ இழந்த பெண்களின் நிலைமையோ படுமோசமாக உள்ளது. இவர்கள் இரு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

ஒன்று குடும்பத்தை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய தேவை. மற்றது படையினராலும் சமூக விரோதிகளாலும் பாலியல் ரீதியில் வேட்டையாடப்படுதலிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளல். இந்த இரு விடயங்களுமே அவ்வளவு இலகுவாக இல்லை.

இந்த நிலைமையைப் பாவித்து பெண்களை இராணுவத்தில் சேர்த்தல், ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை பெற்றுத் தருவதாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் சொல்லி ஏமாற்றி தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களில் பலர் உளநலப் பாதிப்புக்கு உள்ளாகி அண்மையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஏன் அத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பதை எவராலும் இலகுவாக ஊகித்துக் கொள்ள முடியும்.

அதேவேளையில் ஆடைத்தொழிற்சாலை வேலை, வெளிநாடுகளுக்கு அனுப்புதல் எனத் தென்னிலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

தப்பி வந்த சில பெண்கள் தாம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை வெளியே தெரிந்தால் தங்கள் எதிர்காலமே சிதைவடைந்துவிடும் என்பதால் அதுபற்றி எதுவுமே வெளியே சொல்ல முடிவதில்லை.

அடிப் படையில் வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.

அதற்கு ஆதாரமாக ஏ9 வீதியின் அகன்ற அழகான தோற்றமும் இரு மருங்கிலும் அமைந்துள்ள பெரும் வர்த்தக நிலையங்களினதும் நிதி நிறுவனங்களினதும் கட்டடங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. வடக்கின் வசந்தம் வன்னியில் வீசுவது உண்மைதான்.

அது வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகன விற்பனையாளர்கள், தரகர்கள், கட்ட ஒப்பந்தகாரர்கள், சமூக விரோதிகள், படையினர், லஞ்ச ஊழல் பேர்வழிகள், அரசுக்கு வால்பிடிக்கும் அடிவருடிகள் ஆகியோருக்கு வளம் தரும் வசந்தமாக வீசுகிறது. வன்னி மக்களைச் சுரண்டிச் செல்லும் களமாக மாறி அவர்களுக்கு வளமான வசந்தமாக வீசுகிறது.

போரின் போது சகலவற்றையும் இழந்து வெறுங்கையுடன் வந்த வன்னி மக்கள் மீண்டும் தமது கடும் உழைப்பின் மூலம் தலைநிமிர முயன்ற போது அவற்றையும் வழித்துத் துடைத்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வடக்கின் வசந்தம் வறட்சியின் வசந்தமாக மாறி எரிந்து கொண்டிருக்கிறது.  எவ்வளவுதான் அழகான அறிக்கைகளும் அலங்கார வார்த்தைகளும் முன்வைக்கப்பட்ட போதிலும் வடக்கின் வசந்தம் வன்னியில் அம்பலப்பட்டுப் போய்நிற்கின்றது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4441647617218629

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.