Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்குப் பின்: எதிர்பார்ப்பும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்


ஜெனீவா ஐ.நா மனித உரிமை அமர்வுகளை முன்வைத்து புகலிட நாடுகளில் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்தன. தமிழகமெங்கிலும் மாணவர்களின் எழுச்சி முக்கியமான நிகழ்வாக இருந்தது. வடகிழக்கில் ராணுவ பிரசன்னத்துக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. முஸ்லிம்களுக்கும் இலங்கை அரசுக்குமான முறுகல்நிலை அதிகரித்து வருகிறது. தமிழக சட்டசபையில் இலங்கை அரசுக்கு நெருக்கடி தரக்கூடிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கலைஞர் கருணாநிதியின் திமுக இந்திய மத்திய அரசிலிருந்து வெளியேறியிருக்கிறது. இதனது பெறுபேறுகள் அல்லது விளைவுகள் என்னவாக இருக்கிறது எனப் பார்ப்பதற்கு முன்னால், உலக மற்றும் இந்திய இலங்கை அரசியல் சதுரங்கத்தில் பாத்திரம் வகிக்கும் அரசியல் அமைப்புகள் என்னவாக இருக்கின்றன என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

 

சர்வதேசிய விசாரணை குறித்து இலங்கையின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ஜேவிபி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், புதிதாகத் தோற்றம் பெற்றிருக்கிற சோசலிச சமத்துவக் கட்சி போன்றவற்றிற்கு இடையில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? ஏதொன்றும் இல்லை. இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை இனப்பிரச்சினை என்பதையும் இதற்குத் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பதும் தொடர்பாக மேலே குறிப்பிட்ட கட்சிகளிடம் ஏதேனும் 'குறிப்பான தீர்வுத்திட்ட பரிந்துரை' இருக்கிறதா? இந்தக் கட்சிகளுக்கு இடையிலான முரண்கள் அல்லது வேறுபாடுகள் என்பது சிங்கள மேலாதிக்க அரசிற்குள் தமக்கிடையிலான அதிகாரச் சமன்பாட்டை எய்துவது என்பது அல்லாமல் தமிழர் அரசியலுக்கு எல்லா விதத்திலும் விலகியது இவர்களது அரசியல்.

 

இலங்கையினுள் இருக்கும் தமிழர் அரசியலின் பண்புகள் என்னவாக இருக்கிறது? சுமந்திரன், மனோ கணேசன் போன்றவர்கள் முன்வைத்து வரும் தமிழ் அரசியல் பிரிவுபடா இலங்கையினுள் தமிழருக்கு சுயாட்சி என்பதாக இருக்கிறது. புகலிட நாடுகளில் பெரும்பாலுமானவர்கள் முன்வைத்துவரும் அரசியல் தமிழீழம் அல்லது தமிழருக்கான இறைமை பெற்ற நாடு என்பதாகவே இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்து ஈழத் தமிழர்பால் அக்கறை கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாகவே தமிழீழம் என்பதனைத் தீர்வாக முன்வைத்து வருகின்றன. மாணவர்கள் தெளிவாக தமிழீழம் என்பதை முன்வைத்துப் போராடத் துவங்கியபின் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளும் அந்த நிலைபாட்டை அடைந்திருக்கின்றன.

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஈழத்தமிழர் சார்பு அரசியல் கொண்டிருந்தாலும் கூட, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசியல் தீர்வு எனும் அளவில், பிற இந்திய தேசியக் கட்சிகள் போலவே பிரிவுபடாத இலங்கையினுள் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு என்பதைத்தான் முன்வைக்கின்றன. இது தமிழக மாநிலங்களை ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதுவே இவர்களது அனுமானமாக இருக்க வேண்டும். தேர்தல் அரசியல் கட்சிகளாக திமுக, அதிமுக போன்றவற்றின் உள்ளக்கிடக்கையாக இந்தத் தீர்வே இருக்க முடியும். இந்த இரண்டு கட்சிகளும் பாப்புலிஸ்ட் கட்சிகள் எனும் அளவில் வெகுமக்கள் ஆதரவு பெறவேண்டும் என்பதற்காகத் தமது அரசியல் நிலைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் கட்சிகள் என்பதனை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

 

இவ்வகையில் பாராளுமன்ற அரசியல் அமைப்பினுள் இயங்கக்கூடிய, தற்போது குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்டிருக்கிற, இலங்கை இந்திய அரசுகளுடன், இதன்வழி சர்வதேசிய அரசுகளுடன் ஊடாடக் கூடிய அனைத்து அரசியல் அமைப்புக்களுடையதும் தீர்வு இலக்கு என்பது பிரிவுபடாத இலங்கையினுள் தமிழருக்கான ஓர் அதிகார அலகு என்பதாகவே இருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இதே மொழியில் இதனை முன்வைக்காவிட்டாலும் இவைகள் வலியுறுத்தும் அரசியல் தீர்வு எனும் கருத்தமைவு கூட இலங்கை நிலைமையில் இதனையே கொண்டிருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியும்.

 

இலங்கையில் தமிழருக்கான அரசியல் தீர்வு என்பது அமெரிக்க, மேற்கத்திய, இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலாக இருக்கமுடியாது. சர்வதேசிய விசாரணை, மனித உரிமை அரசியல் போன்றவற்றை முன்வைத்து தமது பிராந்தியம் சார் பொருளியல் அதிகார எல்லைகளை அகலித்துக் கொள்வது மட்டுமே இவைகளது நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பவே அவர்களது இலங்கை தொடர்பான நகர்வுகள் இருக்கும். இந்திய, அமெரிக்க அரசுகள் இந்த வகையில்தான் பிரிவுபடாத இலங்கைக்குள் தமிழருக்கான சுயாட்சி என்பதனை முன்வைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஊடாட்டம் நிகழ்த்தி வருகிறது.

 

என்றாலும், மேற்கத்திய, அமெரிக்க, இந்திய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு தீர்வு காணப்படமுடியாத முரண்பாடு அதிகரித்தபடியே இருக்கிறது. சீன, ரஸ்ய, பிராந்திய பொருளியல் அதிகாரத்துடன் இலங்கை தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பதுதான் அந்த முரண்பாடு. முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான கடந்த நான்கு ஆண்டு காலங்களில் இந்த முரண்பாடு அதிகரித்து வந்திருக்கிறது. உலக அரசியலின் பல நிகழ்வுகளில் இலங்கை அரசானது அமெரிக்க, மேற்கத்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளையே எடுத்திருக்கிறது. இந்த நிலைபாட்டை கெடுபிடிப் போர்க்கால ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாடு என எவரும் மயங்க வேண்டிய அவசியமில்லை.<

 

சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் தமது ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பும் ஒரு மூன்றாம் உலக, ஜனநாயக விரோத, குடும்ப அதிகார எதேச்சாதிகாரியின் நிலைப்பாடே மகிந்த அரசின் நிலைப்பாடு என்றே நாம் இதனை விளங்க வேண்டும். மாவோ, கிசிங்கர், நிக்சன் உடன்பாட்டில் கருத்தியல்தான் செயல்பட்டது என நம்புவது இன்று மூடத்தனமான அரசியலாகவே இருக்க முடியும். இது போலவே இன்று நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் கருத்தியல் செயல்படுகிறது என நம்புவதும் ஒரு மூடத்தனம். வல்லரசுகளுக்கு இடையிலான பொருளியல் அதிகாரப் போட்டியே இன்று செயல்படும் வெளிவிவகார அரசியல்.

 

இந்த அரசியல் வெளிதான் இன்று இலங்கை அரசும், தமிழீழம் கோரும் சக்தியினரும், பிரிவுபடா இலங்கைக்குள் சுயாட்சி கோரும் சக்தியினரும் சந்திக்கும் வெளி. இலங்கை அரசைப் பொறுத்தவரை இந்திய இலங்கை ஒப்பந்த அடிப்படையிலான 13வது சட்டத்திருத்தத்தைக்கூட அது கைவிட நினைக்கிறது. அதனிடம் எந்தத் தீர்வும் இல்லை. இலங்கை ராணுவத்தின் மீது அது எத்தகைய சுயாதீன விசாரணையையும் ஒரு போதும் கொண்டிருக்கப் போவதில்லை. இலங்கை ஒரு பௌத்த சிங்களநாடு என்பதை கோத்தபாய தெளிவாக முன்னெடுத்து வருகிறார். தயான் ஜயதிலக கூட இதனை அழுத்திக்காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்.

 

இச்சூழலில் இந்தியாவுடனான முறுகல்நிலையை தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் மனித உரிமையாளர்களும் மாணவர்களும் இன்னும் கூர்மைப்படுத்த முடியும். இதே அடிப்படையில் சீன, ரஸ்ய சார்பை முன்வைத்து இலங்கைக்கும் மேற்குக்கும் அமெரிக்காவுக்கும் இருக்கும் முறுகல்நிலையை புகலிட அமைப்புகள் இன்னும் கூர்மைப்படுத்த முடியும். இலங்கையின் வடக்கைப் பொறுத்து இலங்கை அரசபடையினருக்கும் வெகுமக்களுக்கும் இடையிலான முரண் அடித்தள அளவில் கூர்மையடைந்து வருகிறது. சாத்தியமான வழிகள் அனைத்திலும் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆயிரக்கணக்கான வழக்குகள் என்பது ஒரு எடுத்துக்காட்டு.

 

முஸ்லிம் வெகுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முரண் வளர்ந்து வந்தாலும் முஸ்லிம் தலைமை அரசுடனான சமரச அரசியலையே முன்னெடுத்து வருகிறது. முஸ்லிம் தேசியம் என்பதும் அதனது தலைமையைப் பொறுத்து வெறும் சொற்றொடர் என்பது தவிர, எந்தவிதமான கருத்தியல் அடிப்படையையும் அது கொண்டிருக்கவில்லை. தமிழ் இனப்பிரச்சினையைப் பொறுத்து தெற்கில் சிங்களக் கட்சிகள் கொண்டிருக்கும் நிலைபாடுதான் முஸ்லிம் காங்கிரசின் நிலைபாடும்.

 

இச்சூழலில் தமிழகம், புகலிடம் போன்ற இடங்களில் முன்னெடுக்கப்படும் தமிழீழம் எனும் இலக்கின் நடைமுறை சாத்தியம் என்னவாக இருக்கும்? வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் பிரிவுபடாத இலங்கையினுள் தமிழ் சுயாட்சி அலகின் சாத்தியம் என்னவாக இருக்கும்?

 

இந்தியா, சீனா, ரஸ்யா, மேற்குலகு, அமெரிக்கா அனைத்தும் தத்தமது நலன்களுக்காகச் செயல்படுகின்றன என அறிந்திருக்கிறோம். சிங்கள கட்சிகளில் வலது இடது வித்தியாசமில்லாமல், சோசலிச சமத்துவக் கட்சி உள்பட இனப்பிரச்சினையை நிராகரிக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கைத் தேசியம், தேசிய பக்தி, இலங்கை சோசலிசம் என இவை வேறு வேறு குரல்களில் பேசினாலும் இவைகளது பொதுக் கருத்தியல் சிங்கள பௌத்த பேரினவாத தேசியம்தான்.

 

சிறுபான்மை தேசிய இன உரிமையை இனவாதம் என சில தமிழ் மார்க்சியர்கள் நிலைப்பாடு எடுக்கிறார்கள். இனம், தேசியம், ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க தேசிய விடுதலை என எவை குறித்தும் மார்க்சியப் புரட்சியாளர்கள் எழுதியிருக்கிற எவை குறித்தும் எந்த அறிதலும் அற்ற ஒரு பகுதியினரே இந்த நிலைபாட்டை எடுக்கிறார்கள்.

 

அமில்கார் கேப்ரல், ஜோஸே மார்த்தி, கானெல்லி, மார்க்ஸ், லெனின் போன்றவர்களது எழுத்துக்களை வாசிக்கும் எவரும் பொத்தாம் பொதுவாக இனப்பிரச்சினையை இனவாதம் எனக் குறுக்கமாட்டார்கள். பெரும்பான்மை இனவாதத்திற்கு எதிரான சிறுபான்மை இன உரிமைக் கோரிக்கை ஒரு ஜனநாயகக் கோரிக்கையே அல்லாது அது இனவாதம் இல்லை. இவ்வகையில் மிகச் சிறுபான்மை தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் இலங்கை சோசலிச மாயமானை நம்பிப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.

 

இந்த நிலைமையில் இருவகையிலான இலக்குகளை முன்வைத்து நகரும் ஈழத்தமிழ் அரசியல் தமது இலக்குகளை எட்டக்கூடிய வலிமையைக் கொண்டிருக்கிறதா? ஒன்றுபட்ட குரலைக் கொண்டிருக்கிறதா? இதனது போராட்ட வடிவங்கள் என்னவாக இருக்க முடியும்? உலகின் சகல சக்திகளும் தமது நலன்களை முன்வைத்து நகர்வுகளை மேற்கொள்ளும்போது, தமிழர் தரப்பு தமது நலன்களை முன்வைத்து தமது நகர்வுகளை மேற்கொள்ளக்கூடிய அரசியல் வலிமையைக் கொண்டிருக்கிறதா? அந்த வலிமையை அது எங்கிருந்து பெறுதல் சாத்தியம்? அல்லது தமிழர் தரப்பு பிறர் வலிமையையும் அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரங்களையும் நிராகரித்து தமது நிலைப்பாடுகளை மட்டுமே கொண்டிருப்பது காரிய சாத்தியமான அரசியலாக இருக்க முடியுமா?

 

இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான பதில் இரு முனைகளில்தான் இருக்கிறது. ஒரு முனையில், வடகிழக்கில் உள்ஜனநாயகம் கொண்ட ஒன்றுபட்ட தமிழர் தரப்பு அரசியல் அமைப்பு ஒன்று தமிழ் வெகுமக்கள் அரசியலைக் கட்டி எழுப்புவதன் மூலம் உள்ளக நிலைமையில் இலங்கை அரசுக்கு நெருக்கடியை வழங்க முடியும். அத்தனை முரண்கள் இலங்கை அரசுக்கும் தமிழ் வெகுமக்களுக்கும் இடையில் இருக்கிறது. பிறிதொரு முனையில், புகலிட தமிழக அரசியல் என்பது இலங்கை அரசுக்கும் இந்தப் பிரதேச அரசுகளுக்கும் இடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்துவதில் தமது வாக்குவங்கி அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவே அமையமுடியும்.

 

ஐ.நா தீர்மானத்தை நிராகரிப்பது, இந்திய எதிர்ப்பு நிலைபாடு எடுப்பது என்பதற்கு அப்பால், இருக்கும் முரண்களை இன்னும் ஆழப்படுத்தும் தந்திரோபாய அரசியலே இலங்கை அரசை நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். இலங்கையின் உள்ளும் புறமும் ஈழத்தமிழர் அரசியலுக்கு விட்டுவைக்கப்பட்டுள்ள சாத்தியமான வெளி இதுதான். இந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களால் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக அடையப்படாமல் இருக்கலாம், ஆனால் இலங்கை அரசுக்கு இந்தப் போராட்டங்கள் உள்ளும் புறமும் நெருக்கடிகளை அதிகரித்திருக்கிறது. அது எதிர்கொண்டுவரும் பிராந்திய, உலக அரசியல் முரண்கள் இன்னும் ஆழப்பட்டிருக்கிறது. இதனையே நாம் நான்கு ஆண்டுப் போராட்டங்களின் பெறுபேறு எனலாம்.

 

இலங்கை அரசு உள்ளும் புறமும் தப்புதல் என்பது சாத்தியமில்லை. தமிழீழம் அல்லது பிரிவுபடாத இலங்கைக்குள் சுயாட்சி அலகு எனும் இரு அரசியல் நீட்சிகளுக்கு இடையில் இன்று இலங்கை அரசு அகப்பட்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனமாக இருக்கிறது. விடுதலை அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளை ஒப்பிட முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான நான்கு ஆண்டுகள் என்பது மிகக் குறுகியகாலம் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=e1548f69-bd72-492f-87e1-73d444601a53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.