Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரந்த நபர்? வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் நிலவும் புதிர் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரந்த நபர்? வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் நிலவும் புதிர் - யதீந்திரா

எங்கும் வடக்கு மாகாணசபை தொடர்பான ஆரவாரங்களையே காண முடிகிறது. இன்றைய அர்த்தத்தில், இலங்கையின் அரசியல் அரங்கானது வடக்கு தொடர்பான வாதப் பிரதிவாதங்களாலேயே நிரம்பிக் கிடக்கின்றது. வடக்கு தேர்தல் தொடர்பான செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தெற்கில் அது தொடர்பில் பல்வேறு வகையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வகையான வாதங்களை மூன்று வகையில் காணலாம். ஒன்று, மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இவ்வகையான அபிப்பிராயங்கள் அதிகமாக தெற்கின் கடும்போக்குவாதிகள் மத்தியிலேயே காணப்படுகிறது. இரண்டு, வடக்கு தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்க வேண்டும். மூன்று, இல்லை - அரசாங்கம் வடக்கில் குறிப்பிட்டவாறு தேர்தலை நடத்துவதுடன், மாகாணசபை முறைமையை மேலும் பலப்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை காண முடியும்.

 

ஆளும் மகிந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இவ்வகையான அபிப்பிராயம் வலுவாக காணப்படுகின்றது. 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடும் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஒரே புள்ளியில்தான் சந்திக்கின்றன. எனினும், கூட்டமைப்பு 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு எதனையும் வெளிப்படுத்தாத நிலையில், இது தொடர்பில் மௌனம் காக்கவேண்டிய நிலைக்குள் முடங்கியுள்ளது எனலாம். தவிர 13வது திருத்தச்சட்டத்திற்கான ஒரு பாதுகாப்பு அரணாக இந்தியா இருக்குமென்னும் நம்பிக்கையும் கூட்டமைப்பினர் மத்தியில் காணப்படுகிறது.

 

தெற்கில் இடம்பெறுவது போன்று தீவிரமாக இல்லாவிட்டாலும், வடக்கிலும் மாகாணசபை பற்றிய விவாதங்கள் இடம்பெறாமலில்லை. குறிப்பாக கஜேந்திரகுமார் அணியினர் ஆரம்பத்திலிருந்தே மாகாணசபை முறைமைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் யாழ் சென்றிருந்த இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் 13வது திருத்தச் சட்டத்தில் ஒன்றுமில்லை என்றுவாறு கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி பொலிஸ் அதிகாரங்கள் இருக்கின்ற நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால், தெற்கோடு ஒப்பிட்டால் தமிழ் சூழலில் பெரியளவில் மாகாணசபை தொடர்பான அரசியல் விவாதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில எதிர் குரல்கள் இருப்பினும், மாகாணசபை நிர்வாகத்தை எங்களது கையிலெடுக்க வேண்டுமென்னும் அபிப்பிராயமே காணப்படுகிறது.

 

ஆனால் தமிழ் சூழலில் வடக்கு மாகாணசபையை முன்வைத்து பிறிதொரு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது குறித்தே இப்பத்தி கவனம் செலுத்துகின்றது. முன்னர் சில அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டுக்கொண்டிருந்த இவ்விடயம், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, ஐந்து கட்சிகளும் இது தொடர்பில் தனித்தனியாக கவனம் செலுத்தி வருகின்றன. வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதுதான் மேற்படி விவாதத்தின் அடிப்படையாகும்.

 

இந்த இடத்தில் சில விடயங்களை பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பத்தியாளர் அறிந்தவரை, கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுற்ற கையோடு, அடுத்து வடக்கு மாகாணசபைதான் என்றவாறான அபிப்பிராயங்கள் மேலெழுந்தன. கூடவே, அவ்வாறு வடக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெறுமாயின் சு.வித்தியாதரனே முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்றவாறானதொரு அபிப்பிராயமும் பரவலாகியது. அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமன்றி, இராஜதந்திர வட்டாரங்களுடன் உரையாடும் சில அரசுசாரா நிறுவன புத்திஜீவிகள் மத்தியிலும், அவ்வாறானதொரு அபிப்பிராயமே காணப்பட்டது. அவ்வாறான ஒரு சிலர் இப்பத்தியாளரிடம் இது குறித்து நேரடியாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

 

முன்னைநாள் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான வித்தியாதரன் அப்பொறுப்புகளிலிருந்து விலகி, பின்னர் முழுநேர அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தற்போது தமிழரசு கட்சியின் உறுப்பினராக இருக்கும் வித்தியாதரன், பல நெருக்கடியான காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு ஊடகப் பணியாற்றிய ஒருவர். இதன் காரணமாகவே வித்தியாதரன் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. பின்னர் அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவே அரசாங்கம் அறிவித்திருந்தது. கொழும்பின் உயர்பீடங்களால் வித்தியாதரன் ஒரு பயங்கரவாதியாகவே பார்க்கப்பட்டிருந்தார். வித்தியாதரனை காப்பாற்ற முற்படுபவர்களது கைகளிலும் இரத்தக்கறை உண்டு என்று குறிப்பிடுமளவிற்கு அன்றைய சூழலில் வித்தியாதரன் மீது அரசிற்கு அதீத வெறுப்பிருந்தது. பின்னர் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதுவுமற்ற நிலையில் வித்தியாதரன் விடுவிக்கப்பட்டார். வித்தியாதரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் உணவருந்துவது போன்றும், புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்ட அன்ரன் பாலசிங்கத்துடன் உரையாடுவது போன்றதுமான புகைப்படங்கள் ஏலவே சிங்கள பத்திரிகையான 'மௌவிமவில்' வெளியாகியிருக்கின்றன. எனவே வித்தியாதரனின் கடந்தகாலம் குறித்த விடயங்கள் எவையும் இப்பத்தியாளரின் புனைவுகளல்ல.

 

இவ்வாறு வித்தியாதரனது பெயர் பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், இன்னும் சிலரது பெயர்களும் வெளியாகத் தொடங்கின அல்லது அவர்களும் இதில் ஆர்வம் காட்டலாம் என்றவாறான ஊகங்கள் மேலெழுந்தன. இந்த இடத்தில்தான் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விடயம் ஒரு சிக்லுக்குரிய வியடமாக மாறுகிறது. இதில் முக்கியமானவர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆவார். இது தொடர்பில் சில மாதங்களாக ஒரு வாதப்பிரதிவாதமே இடம்பெற்றது. நீதியரசர் விக்னேஸ்வரன் விடயம் பெரியளவில் விவாதிக்கப்பட்டதற்கு ஏசியன் ரிபியூன் இணையத்தில் இடம்பெற்ற கட்டுரையொன்றே காரணமாகும்.

 

குறித்த இணையத்தின் ஆசிரியரான ஏ.ரி.ராஜசிங்கம் எழுதிய கட்டுரையொன்றில், இலங்கை தமிழரசு கட்சி ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும், விக்னேஸ்வரனும் அதற்கு இணங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் மீது ஊடகங்கள் அனைத்தும் திரும்பின. இந்த சந்தர்ப்பத்தில், ராஜசிங்கத்தின் கட்டுரையை முன்வைத்து (Mischief By Asian Tribune: The Northern Province Chief Minister Candidature) எழுதியிருந்த ரத்னஜீவன் கூல், வடக்கு தேர்தலில் ஆர்வமுள்ளவர்களென சிலரை பட்டியலிட்டிருந்தார். இதில் அனேகம் கட்டுரையாளரின் ஊகங்களேயன்றி, கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் எவரும் தங்களது ஆர்வத்தை உத்தியோகபூர்வமாக இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. ரத்னஜீவன் கூல் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவர்களான விக்னேஸ்வரன் மற்றும் வித்தியாதரனுடன் சேர்த்து புதிதாக, தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சி.வி.கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரது பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

 

இவ்வாறான எழுத்துக்கள், ஆரம்பத்தில் வித்தியாதரனுடன் மட்டுமே மட்டுப்பட்டுக் கிடந்த முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தை, ஒரு சிக்கலுக்குரிய விடயமாக மாற்றியது. இறுதியில் எவருக்கெல்லாம் வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் எதிர்பார்ப்புள்ளது என்பதை கண்டுபிடிப்பதே கடினமான ஒன்றாக மாறியது. எனினும் நீதியரசர் விக்கேனஸ்வரன் தொடர்பான சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளியிட்டிருக்கிறார். சமீபத்தில், தனக்கு அவ்வாறான ஆர்வம் எதுவும் இல்லையென்று அவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, ஒருவாறு விக்னேஸ்வரன் பற்றிய புதிர் அவிழ்க்கப்பட்டுவிட்டது.

 

ஆரம்பத்தில் வித்தியாதரனில் நிலைகொண்டிருந்த மேற்படி விவாதம், பின்னர் விக்னேஸ்வரனை நோக்கிச் சொன்று, இறுதியில் பலரை நோக்கித் திரும்பியிருக்கிற நிலையிலேயே, குறித்த விடயம் கூட்டமைப்பினர் மத்தியிலும் ஒரு விவாத்திற்குரிய விடயமாக மாறியிருக்கிறது. ஆனால் இங்கு ஒரு விடயத்தை குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவரையான சர்ச்சைகளில், எங்குமே மிக மூத்த தமிழ் தலைவரும், யாழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாவை சேனாதிராஜா வடக்கு தேர்தலில் ஆர்வம் காட்டுவாராயின், ஏனையவர்கள் அனைவரும் பின்னுக்குச் செல்ல நேரிடும். ஏனெனில் மாவையின் தகுதிநிலையை ஏனைய எவராலும் நிராகரிக்க முடியாது. எனினும் இதுவரை அவ்வாறான ஆர்வத்தை மாவை சேனாதிராஜா காண்பிக்காத நிலையிலும், நீதியரசர் விக்னேஸ்வரன், தன்குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியிட்டிருக்கின்ற நிலையிலும், வித்தியாதரனின் பெயரே முன்னுக்கு வந்துள்ளது.

 

எனினும் வடக்கு மாகாணசபைக்கான அந்த முலமைச்சர் கதிரை தொடர்பில், ஒரு புதிர் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அந்த நபர் யாராக இருக்க முடியும்? இந்த புதிரை அவிழ்க்கும் ஒரே ஆற்றல் தமிழரசு கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அரசியல் நகர்வுகள் அனைத்தையும் தீர்மானிக்கும், இரா.சம்பந்தரிடம்தான் உண்டு. அவரது முடிவே இறுதிய முடிவாகவும் இருக்கும். அவர் யாரை கருத்தில் வைத்திருக்கின்றார்? அந்த நபர் யார்? இப்போதைக்கு அவரவர் தங்களின் எண்ணவோட்டங்களுக்கு ஏற்ப ஊகங்களை அசைபோடலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=b4314a59-bbb6-4354-8cad-9e683e001087

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.