Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீயில் எரிந்தது போதும் விடியலுக்காக உழையுங்கள்

Featured Replies

நெஞ்சு கனக்கிறது. இன விடுதலைக்காக உயிர்களை அர்ப்பணித்த தமிழினம், இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நீதி கேட்டும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

li-tamil-tigers-cp-6575347.jpg

ஜெனீவாவில் மீண்டுமொருமுறை தமிழினம் தீக்குளித்திருக்கின்றது. 2009ம் ஆண்டு தமிழினப்படுகொலை மிக மோசமாக அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி ஐ.நா. மனித உரிமைகள் முன்றலில் முருகதாசன் என்ற இளைஞன் தீக்குளித்து அந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவதற்கு முயன்றான். இப்போது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக நீதி கேட்டு இன்னொரு இளைஞன் தன்னை தீக்கிரையாக்கியிருக்கின்றான். இது ஒரு இளைஞனின் தீக்குளிப்பல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் வலி சுமந்த பக்கவிளைவு.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் முன் தீயாக எரிந்து மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரட்ணசிங்கம் செந்தில்குமரன் என்ற இந்த 35 வயதான இளைஞன் நீதி கேட்டிருக்கின்றான். இந்த இளைஞன் எதற்காக எரிந்தான் என்பதற்கான ஆதாரங்கள் இன்று மறைபட்டுப் போயிருக்கலாம். ஆனால், தனது மனைவி, மூன்று பிள்கைள், தந்தையிடம் இறுதியாகப் பேசியபோது அவன் பேசியதாக அறியவரும் செய்திகள் ஒரு இறுதிவிடை பெறுதலாகவே இருந்திருக்கின்றது. அந்த உணர்வுப் பகிர்தல்களில் நீதிக்கான கதைவைத் தட்டுவதே அவன் நோக்கமாக இருந்திருக்கின்றது.

தாயகத்தில் வாழ்ந்ததைவிட அதிக காலம் இந்தப் புலம்பெயர்ந்த மண்ணில் வாழ்ந்தபோதும் தாயகத்தையும், தமிழீழத் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்திருக்கின்றான். அங்குள்ள மக்கள்படும் இன்னல்களைக் களைய முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அனைத்திலும் முழுவீச்சோடு கலந்துகொண்டிருக்கின்றான். ஆனால், எங்குமே அவனுக்கு நீதி கிடைக்காது என்று தெரிந்ததன் பின்னர்தான், தன்னைத் தீக்கிரையாக்கி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கதவைத்தட்டி நீதி கோர முனைந்திருக்கின்றான்.

அழகான குடும்பம், வாழ்வதற்கான நல்ல வசதிகள் இருந்தும் தனது உயிரை அர்ப்பணித்து நீதியைக் கோரவேண்டிய நிலைக்கு அவனைத் தள்ளியதற்கு யார் காரணம்? கடந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அங்குள்ள நிலைமைகளை அவதானித்துத் திரும்பியிருக்கின்றார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக ஆரம்ப அறிக்கையன்றை அவர் இவ்வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், இலங்கை சென்று உண்மை நிலைமைகளை கண்டறிந்துகொண்ட அம்மையார்கூட, தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கான உண்மையான காரணத்தை ஏனோ புரிந்துகொள்ளவில்லை. தனது பயணத்தின் முடிவில் தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் அவர் அங்கு பதிவு செய்திருந்தார். அவரது கருத்துக்குறித்து தமிழர்கள் தரப்பில் இருந்து காத்திரமான கண்டனங்களோ, எதிர்ப்புக்களோ இதுவரை எழவில்லை.

தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்கள்தான் என்றுகூறி இன்று அங்கு வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கூட நவநீதம்பிள்ளை அம்மையாரின் இந்தக் கருத்துக் குறித்து இதுவரை வாய்திறக்கவில்லை. ஆனால், ஒரு சிங்கள இனத்தவராக இருந்துகொண்டும் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மறுத்திருக்கின்றார்.

“தென்னாபிரிக்காவில் இன விடுதலைக்காக நெல்சன் மண்டேலா செய்ததைத்தான் பிரபாகரனும் செய்தார். அவரின் இலக்குத்தவறல்ல. போராட்டத்தில் மண்டேலா வெற்றி பெற்றமையால் அவரை மாமனிதராகவும் பிரபாகரன் அதில் தோல்விடைந்தமையால் சர்வதேசத்தின் முன் பயங்கரவாதியாகவும் முத்திரை குத்தியுள்ளனர்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம்பிள்ளைக்குக் கூட இது ஏன் புரியவில்லை?” என்று இடதுசாரித் தலைவரும் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றார். “நவிப்பிள்ளை ஒன்றை மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் வாழும் நாடான தென் ஆபிரிக்காவின் தலைவரான நெல்சன் மண்டேலாவும் பிரபாகரன் செய்ததையே தான் செய்தார். மண்டேலாவும் பல வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான்.ஏன், அவர் மனைவிக்கு எதிராகவும் பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், இன்று அவர் அனைவராலும் போற்றப்படுகின்ற, சர்வதேசமே மதிக்கின்ற ஒரு மனிதராக வாழ்ந்து வருகிறார். காரணம், அவர் தம்மின மக்களுக்காக நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றார். அதனால்தான், இன்று இவ்வாறான நிலையிலுள்ளார். அதே செயற்பாட்டைத்தான் பிரபாகரனும் அன்று செய்தார். ஆனால், இன்று சர்வதேசத்தின் முன் ஒரு பயங்கரவாதியாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளார். பிரபாகரன் போராட்டத்தை மேற் கொண்டவிதம் பிழையாக இருக்கலாம். ஆனால், தமது இன மக்களுக்காகப் போராடிய இவரது குறிக்கோளை ஒருபோதும் பிழையென்று கூறவே முடியாது? என்றும் தமிழினத்தின் சார்பாக நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார்.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையோ, இன்னமும் சிங்களப் பேரினவாதத்திற்கு செங்கம்பளம் விரித்து வரவேற்கின்ற உலக நாடுகளோ தமிழர்களுக்கான நீதியை உடனடியாகப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை நோக்கி இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. அதற்காக தமிழ் மக்கள் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது.

முத்துக்குமாரன் தீக்குளித்தபோதும் முருகதாசன் தீக்குளித்தபோதும் இனத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவேண்டிய அவசர தேவை அவர்களிடம் இருந்தது. ஆனால், இந்தவேளையில் தமிழர்கள் தங்களையே அழித்து நீதி கோருவதென்பது, தமிழர்களுக்கு மேலும் மேலும் இழப்பைக் கொடுக்குமே தவிர காத்திரமான மாற்றங்கள் எதனையும் சர்வதேசத்திடம் ஏற்படுத்திவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

இலட்சக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டபோதும் எந்தவொரு யூதரும் நீதி கோரி தீக்குளித்ததாக வரலாறு இல்லை. ஆனால், தங்கள் இனம் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை யூதர்கள் உலகெங்கும் தேடிக் கண்டுபிடித்து, ஆதாரங்களுடன் சட்டத்தின் முன் நிறுத்தி  இன்றுவரை தண்டனை வாங்கிக்கொடுத்து வருகின்றார்கள்.

தற்போதுகூட இரண்டாம் உலகப்போரில் படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் நாஜிப் படையினன் ஒருவர் ஜேர்மனி நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். நெதர்லாந்தைச் சேர்ந்த சியர்ட் புரூயின்ஸ் என்ற இந்த நபர் 92 வயதைக் கடந்துவிட்டார் என்பதற்காக அவரை மன்னித்துவிட்டு விடவில்லை. தங்கள் இனத்திற்கு கொடுமை இழைத்த அவருக்கு இறுதிக் காலத்தில் என்றாலும் தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று தலைமுறைகள் பல கடந்தும் யூதர்கள் உறுதியோடு இருக்கின்றார்கள், அதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நாம் வாழும் காலத்தில் நடக்கும் இந்த வரலாற்றை தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே தமிழர்களை விடியலை நோக்கி நகர்த்திச்செல்லும்.

ஆசிரியர் தலையங்கம்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/33034/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.