Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடைபெற்றது விடுதலைச் சூரியன் - சோழ.கரிகாலன்

Featured Replies

இது சரித்திரத்தில் ஒரு வியப்பு மிக்க தருணம். பிரித்தானியாவின் அரச குடும்பத்திலிருந்து வில்லியமும் கேம்பிரிட்ஜின் சீமாட்டியும் வில்லியமின் மனைவியுமான கேட், நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி மண்டேலா மற்றும் பல அரசியல், திரைத்துரைப் பிரபலங்கள் செங்கம்பள வரவேற்பில் வரவேற்கப்பட்டு, இரண்டு வாரங்களிற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் வெளியாகிய பிரித்தானிய ஆபிரிக்கத் தாயாரிப்பான ‘LONG WALK TO FREEDOM’ எனும் திரைப்படத்தின் சிறப்பு முதற்காட்சியைக் காண்பதற்காகத் தயாராகவும் ஆவலுடனும் காத்திருக்கின்றார்கள்.

தந்தை உடல் நலத்துடன் உள்ளதாக ஜிண்ட்சி மண்டேலா விருந்தினர்களிற்குத் தெரிவிக்கின்றார். அங்கு இத்திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக  நடித்த பிரபல நடிகர் Idris Elba மற்றும் அவரது மனைவியான வின்னியாக நடித்த  Naomie Harris ஆகியோரும் ஆவலுடன் இலண்டன் திரையரங்கில் காத்திருக்கின்றனர். சரியாகக் காட்சி ஆரம்பிப்பதற்கு பத்து நிமிடங்கள் இருக்கையில் தென்னாபிரிக்க ஜனாதி ஜாக்கோப் ஜுமா நெல்சன் மண்டேலாவின் இறப்புச் செய்தியை அறிவிக்கின்றார். எந்தப் பிரித்தானிய அரசு நெல்சன் மண்டேலாவைச் சிறையிலிட்டுச் சித்திரவதைகள் செய்ததோ அதே மேற்குலக அரசின் வாரிசு அதே மேடையில் நெல்சன் மண்டேலாவின் இறப்பிற்காகத் தலை வணங்கி நின்றது.

nelsan%20mandela.jpg

உலகத்தின் எல்லா மூலைகளிலும் விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலாவிற்காக மக்கள் கண்ணீர் வடிக்கின்றார்களே! உலகத்தின் தலைவர்கள் எல்லாம் சுதந்திரப் போராட்டத்தின் குரல் அடங்கி விட்டதாக இரங்கற்பா வாசிக்கின்றார்களே! அமெரிக்காவின் கடைக்கோடியிலிருந்து சீனாவின் பெருஞ் சுவர்களையும் தாண்டி கடைசி எல்லை வரை மெழுகுதிரிகள் கண்ணீர் வடிக்கின்றனவே! யார் இந்த நெல்சன் மண்டேலா? இவர் நடந்து வந்த விடுதலையின் நீண்ட பாதை என்ன? இவர் போராட்டம் எங்கு ஆரம்பித்தது?

நெல்சன் மண்டேலா பிறப்பதற்கு இரண்டரை நுற்றாண்டுகளிற்கு முன்னரே ஆபிரிக்காவிற்கான ஆக்கிரமிப்பு அடித்தளமிடப்பட்டு விட்டது. டச்சுக் காலனித்துவ முற்றுகைப் படையுடன் வந்த வன் ரிபீக் (Jan Anthoniszoon Van Riebeeck) கடலாடும் தமது நாட்டின் கப்பல்கள் பொருட்களை நிரப்பிக் கொள்ளவும் தங்கிச் செல்லவும் ஏதுவாக கேப்டவுன் எனப்படும் நன்னம்பிக்கை முனையைத் தனது டச்சுக் கிழக்கிந்தியக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இதுவே ஆபிரிக்காவிற்குள் வெள்ளையர்கள் நுழைவதற்கான வாசலைத் திறந்து விட்டது.

18ம் 19ம் நுற்றாண்டுகள் படை வலுவையும் கடல்வலுவையும் கொண்ட நாடுகள் செல்வமும் இயற்கை வளங்களும் கொண்ட நாடுகளை அடிமைப்படுத்துவதையே வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்த காலம். கடல் கடந்து செல்லும் படைகள் அல்லது கொள்ளையர் கூட்டங்கள் தமது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களால் நாடுகளைப்பிடிப்பதும் மக்களை அடிமைகளாகப் பிடிப்பதும் போட்டி போட்டுக் கொண்டு நடந்து வந்தது. டச்சுக்காரர்களும் பிரித்தானியர்களும் ஸ்பானியர்களும் இதில் முதன்மை வகித்தனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் தென் ஆபிரிக்காவை ஆக்கிரமிக்கப் பொரும் போராட்டம் நடத்தினார்கள். ‘ஆபிரிக்காவிற்கான இழுபறி’ என்றே இது அழைக்கப்பட்டது. 20ம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் தென் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது. நான்கு காலனிகளாகப் பிரிக்கப்பட்ட தென் ஆபிரிக்காவின் இரண்டு பிரிவுகள் பிரித்தானியாவிடமும் மற்றைய இரண்டும் போயர்கள் என அழைக்கப்படும் ஜேர்மானிய (Germanic) இனத்தின் வம்சாவளியினரான வெள்ளை ஆபிரிக்கானியர்களிடமும் வீழ்ந்தது. பிரித்தானிய நாடாளுமன்றத்தால் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு இனங்களிடையேயான வேறுபாடுகளைக் களையப் பிரித்தானிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் போயர்களைக் கோபமடைய வைத்தது. இதனால் ஆங்கிலோ-போயர் யுத்தம் வெடித்தது. 1902ம் ஆண்டின் இரண்டாவது யுத்தத்தில் போயர்கள் வீழ்த்தப்பட்டுத் தென் ஆபிரிக்காவின் நான்கு பிரிவுகளும் பிரித்தானியர்களிடமே வீழ்ந்தது.

1910ம் ஆண்டில் தென் ஆபிரிக்காவின் பகுதிகள் இணைக்கப்பட்டு புதிய ஐக்கிய தென் ஆபிரிக்கா உருவாக்கப்பட்டது. இதுவே இன்றைய தென்னாபிரிக்கக் குடியரசின் ஆரம்பமாகும். அதன் பின்னராவது அந்தத் தேசத்தின் புதல்வர்களிற்கு உரிமைகள் மீளக் கிடைக்குமா என்ற ஒரு கனவு உருவானது. அந்தக் கனவை நனவாக்குவதாகக் கூறிக்கொண்டு லுயிஸ் போத்தா பிரித்தானியாவின் தனித்த மேலாதிக்கத்தை நிறுவப் பிரதமராக்கப்பட்டார். நாட்டின் குடிமக்களான கறுப்பின மக்களிற்கு வழங்கப்பட்டிருந்த மிகச் சிறிய அளவிலான உரிமைகளும் பறிக்கப்பட்டன. மிகவும் கடுமையான சட்டங்களால் அவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். 1913ம் ஆண்டின் புதிய சுதேசக் காணிச் சட்டத்தின் கீழ் அந்த நாட்டின் சொந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. மிகவும் சிறுபான்மையினரான வெள்ளையர்களிற்கு நாட்டின் 90 சதவீதமான நிலங்களும் சொந்தமாக்கப்பட்டன. அந்த நாட்டின் குடிமக்களான கறுப்பின மக்கள் அனைவரும் வாழ நாட்டின் 10 சதவீதமான நிலங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. கடுமையான முறையில் மக்கள் அடக்கி ஆளப்பட்டனர். இதிலிருந்து மக்களைக் காக்கும் நோக்கில் தென்னாபிரிக்கச் சுதேசித் தேசியக் கொங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் 1923 இல் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசாக (ANC) மாற்றம் பெற்றது.

இதே வேளையில் போயர்களின் வெள்ளையின ஆபிரிக்கானர்களின் சார்பில் 1914ல் தேசியக்கட்சி (NP) J. B. M. Hertzog இனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கட்சி பிரித்தானியர்களிடம் இருந்து வெள்ளையின ஆபிரிக்கானர்களின் நலத்தைக் காத்ததோடு தென்னாபிரிக்கர்களை ஒதுக்கியது. இந்தச் சமயத்திலேயே பின்நாளில் நாட்டின் வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் ஒரு விடுதலை வீரன் என்ற ஆரவாரங்கள் எதுவுமின்றித் தென்னாபிரிக்காவின் ஒரு சிறு கிராமமான எம்வேசோவில் தெம்பு இனமக்களின் தலைவனின் மகனாக இராஜ பரம்பரையில் யூலை 18ம் திகதி 1918ம் அன்று ரோலிலாலா மண்டேலா பிறந்தார்.

தொடர்ச்சியான மக்களின் நிலப்பறிப்போடு நிற்காமல் தொடர்ச்சியான ஆபிரிக்க மக்களின் கல்வியும் பறிக்கப்பட்டு அவர்களின் சுதந்திரக் கல்வியும் குடும்பங்களின் சுயாதீன வருமானத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. பல தடைச்சட்டங்கள் போடப்பட்டுத் திறமைகள் தேவைப்பட்ட, பயிற்சி பெறவேண்டிய வேலைகள் வெள்ளயைர்களிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. கறுப்பின மக்களிற்கு வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்டு நடாத்தப்பட்ட சுரங்களிலும் அவர்களின் தோட்டங்களிலும் கூலிவேலைகளே வழங்கப்பட்டன. 1930களில் 30 சதவீதமான கறுப்பின இளைஞர்களே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். கல்வி கற்ற தென்னாபிரிக்க இளைஞன் செய்யும் வேலைக்கு அதே வேலை செய்யும் வெள்யைனுக்குக் கொடுக்கும் சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா 1944 ஆம் ஆண்டில் சட்டக் கல்வியை முடித்துக் கொண்டு வழக்கறிஞரானார். ஆபிரிக்கத் தேசியக் கட்சியில் தன்னை இணைத்து வெள்யைர்களிற்கு எதிரான போராட்டதில் தன்னை இணைத்துக் கொண்டார். முட்டிமோதி ஆபிரிக்காவின் இரண்டு கறுப்பின வழக்கறிஞர்களில் ஒருவராக நெல்சன் மண்டேலா திகழத் தொடங்கினார்.

mandela13-100613-jpg_114743.jpg

1948 இல் தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தது. தென்னாபிரிக்க அரசியல்வாதியான பிரான்சுவா மலான் தேசியக் கட்சியை அரசாக்கினார். அதன் மூலம் வெள்ளையின மேலாதிக்கத்தை உறுதி செய்து நிற அடக்குமுறையை அதிகாரபூர்வக் கொள்கையாக்கினார். கறுப்பின மக்கள் இரும்புக் கரங்களால் ஒதுக்கப்பட்டனர். 1950 இல் சுதேசி மற்றும் குடியேற்றப்பட்ட மக்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள அரசினால் கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் தம்மைப் பதிவு செய்வதற்கு நான்கு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வெள்ளை, கறுப்பு, நிறம் (கலப்பினம்), நான்காவதாக ஆசிய இனம் என்பது பின்னர் இணைத்து வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் தென்னாபிரிக்காவிற்கு இந்தியா, பாகிஸ்தானிலிருந்து மக்கள் வேலைக்காகக் கொண்டு வரப்பட்டனர். அவர்களைப் பதிவு செய்வதற்காகவே நான்காவது பிரிவு இணைக்கப்பட்டது.

மக்கள் பிரிவு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுக் குடும்பங்கள் கூடப் பிரிக்கப்பட்டு வேறு இடங்களிற்கு அனுப்பப்பட்டு பிரித்தாளப்பட்டனர். கலப்பினத் திருமணம் சட்டவிரோதமாக்கப்பட்டது. கறுப்பின மக்கள் வெள்ளையர்களின் பகுதிகளிற்குள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டது. நுழைவதற்கு அவர்களிடம் தகுந்த அடையாளப்பத்திரம் கோரப்பட்டது. இது ஒரு உள்ளகக் கடவுச் சீட்டாகவே வழங்கப்பட்டது. கறுப்பின மக்கள் தமது சொந்த மண்ணிலேயே வேற்று நாட்டு மக்கள் ஆக்கப்பட்டார்கள். கறுப்பினத்தவர்கள் அனைவரும் இந்தக் கடவுச் சீட்டுடன் நடமாடுவது கட்டாயமாக்கப்பட்டது. முட்டிமோதி ஆபிரிக்காவின் இரண்டு கறுப்பின வழக்கறிஞர்களில் ஒருவராக நெல்சன் மண்டேலா திகழத் தொடங்கினார். 

1951 இல் பண்டு அதிகாரச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் குடியேற்றப்பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை பண்டுஸ்தான் என்றே அழைக்கப்பட்டன. இங்கு கறுப்பினத் தென்னாபிரிக்க மக்கள் பலர் கட்டாயமாகக் குடியேற்றப்பட்டனர். இப்பகுதிகள் தென்னாபிரிக்க அரசாங்கத்திலிருந்து பிரித்தே ஆளப்பட்டன. இதன் மூலம் சொந்த மண்ணிலிருந்து அந்த மக்கள் நாடுகடத்தப்படுவதன் மூலம் அந்த மண்ணிற்கு உரிமைகோரும் அடிப்படை ஆதாரத்தை வெள்ளையர்கள் அகற்றினார்கள். தென்னாபிரிக்காவில், தென்னாபிரிக்காவின் உண்மையான உரிமையுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 1961 இலிருந்து 1994 வரை 3.5 மில்லியன் கறுப்பின தென்னாபிரிக்கர்கள் இப்படியான பண்டுஸ்தான் குடியேற்றங்களிற்குக் கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் அங்கு எந்தவித உதவிகளும் இன்றி ஏழ்மைக்குள் சிக்கினார்கள்.

1953இல் பண்டு கல்விச் சட்டத்தின் மூலம் கறுப்பர்களிற்குத் தனியான கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தக் கல்வித்திட்டம் மக்களின் தேவைக்கான கல்வித்திட்டம் என்ற போர்வையில் அவர்கள் விறகு வெட்டிகளாகவும் தண்ணீர் காவிகளாகவுமே உருவாக்கப்பட்டார்கள். வேறெந்தத் தொழிற்கல்வியும் அவர்களிற்கு வழங்கப்படவில்லை. ஒரு தலைமுறையையே கல்வியற்ற சமூகமாக மாற்றித் தொடர்ந்தும் அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காகவே இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

1952இல் இதற்கான எதிர்ப்புக்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் காந்தீய வழியிலேயே காட்டப்பட்டது. அகிம்சை வழியில் நெல்சன் மண்டேலாவும் மேலும் பலரும் தமது கடவுச் சீட்டுக்களைத் தீயிலிட்டுத் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர். இது போன்ற போராட்ட முறைகளே அங்கு பிரச்சாரப்படுத்தப்பட்டது. காந்தி இந்திய விடுதலையின் தந்தையாகச் சித்தரிக்கப்பட்டது. இப்படியான போராட்ட வழிகளில் நெல்சன் மண்டேலா போன்றோரையும் நம்பிக்கை கொள்ள வைத்தது.

1956ம் ஆண்டில் நிற அடக்குமுறைக்கு எதிராக நெல்சன் மண்டேலாவும் பல நாற்றுக்கணக்கான ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரஸ் போராளிகளும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதில் நெல்சன் மண்டேலா உட்பட 152 பேர் தேசவிரோதக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்டனர். அந்தச் சமயத்தில் நெல்சன் மண்டேலா ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசின் உபதலைவர்களில் ஒருவராக உருவாகி இருந்தார்.

தொடர்ச்சியான கடவுச்சீட்டு எதிர்ப்புப் போராட்டமும் வெள்ளையர்களின் நிறவெறிக்கெதிரான போராட்டமும் பலமடைந்து வந்தது. ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசின் கிளையான பான்-ஆபிரிக்கக் கொங்கிரசின் ஒருங்கிணைப்பில் 1960 ஆம் ஆண்டு மார்ச் 21ம் திகதி sharpeville காவல்நிலையத்திற்கருகில் கூடிய மக்கள் கடவுச் சீட்டினைக் கட்டயாமாகக் கொண்டு செல்ல வேண்டிய சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் அணிதிரண்டனர். ஐயாயிரம் முதல் ஏழாயிரம் மக்கள் அங்கு திரண்டிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாத தம்மைக் கைது செய்யும்படி அவர்கள் கோரினார்கள். சிறிய அளவிலேயே காவல் நிலையத்தில் இருந்த ஆத்திரம் கொண்ட காவற்துறையினர் 130 மேலதிகக் காவற்துறையினரை அங்கு வரவழைத்தனர். அங்கு அணிவகுத்த காவற்துறையினர் போராட்ட மக்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள். அதில் 69 மக்கள் கொல்லப்பட நுற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூரப் படுகொலையின் பின்னர் ஆபிரிக்கத் «சியக் கொங்கிரசும் பான்-ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசும் முற்றாகத் தடைசெய்யப்பட்டன.

sharpeville(0).jpg

sharpeville(1).jpg

sharpeville(3).jpg

இந்தப் படுகொலை தென்னாபிரிக்கப் போராட்ட வரலாற்றில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. படுகொலையை ஜ.நா. பாதுகாப்புச் சபை கடுமையாகக் கண்டித்தது. தென்னாபிரிக்கா மீது தடைகளை ஏற்படுத்தி அதனைத் தனிமைப்படுத் ஐ.நா முடிவெடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளின் அணியிலிருந்து வெளியேறியது. ஆனாலும் இதைவிட தென்னாபிரிக்க மக்களின் போராட்டம் அங்கு நிறம் மாறியது. ஏற்கனவே அகிம்சை முறையில் நம்பிக்கையற்ற நெல்சன் மண்டேலா ஆயுதப் போராட்டதிற்கு அழைப்பு விடுவித்தார். வன்முறை ஆட்சிக்கு எதிரான காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம் அழிவை மட்டுமே ஏற்படுத்தியது.

‘அடக்குமுறையின் உச்சத்தில் எந்த ஒரு தேசத்திற்கும் இரு தெரிவுகள் மட்டுமே இறுதியில் எஞ்சி நிற்கும். அது சரணடைவு அல்லது எதிர்த்து நின்று போராடுவது. அந்தத் தெரிவிற்கான நேரம் இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வந்துள்ளது. நாம் சரணடையத் தயாராக இல்லை. எமக்கு வேறு தெரிவுகள் இல்லை. எமது வளங்கள் அனைத்தையும் இணைத்து எமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் எங்களின் எதிர்காலத்திற்காகவும், எமது சுதந்திரத்திற்காகவும் நாம் திருப்பித் தாக்குவோம்’ என்று வீர அறைகூவல் விடுத்தார்நெல்சன் மண்டேலா ஒரு கரந்தடிப் படையணியை உருவாக்கி அதற்கு ‘Umkhonto’  தேசத்தின் ஈட்டி என்று பெயரிட்டார். ஆபிரிக்கத் தேசிய கொங்கிரஸ் தனது அகிம்சைப் பாதையிலிருந்து இராணுவப்பாதைக்குத் திரும்பியது. மண்டேலா ‘மடிபா’ என்று அவரின் இனவழக்கில் அழைக்கப்பட்டு இராணுவப்பிரிவிற்குத் தலைமை வகித்தார். அயல் நாடுகள் எங்கும் திரிந்து இராணுவப் பயிற்சிக்கான உதவியையும் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசிற்கான ஆதரவையும் திரட்டப் பெரிதும் போராடினார். நாட்டின் சுதந்திரத்திற்காக நீண்ட நடைப் பயணங்களை மேற்கொண்டார். இவரது முதல் மனைவியுடனான மணவாழ்க்கை முறிந்து விவாகரத்தான பின்னர், போராட்ட வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போது மண்டேலாவுடன் சேர்ந்து களமாடிய அதே போராட்டக் குணமுள்ள வின்னியை மணமுடித்துக் கொண்டார்.

நெல்சன் மண்டேலா தலைமையிலான இந்த இராணுவப்பிரிவு அயல் நாடுகளின் உதவியுடன் பயிற்சியும் ஆயுதமும் பெற்று 1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாபிரிக்க அரசின் மீது முதலாவது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டது. உடனடியாகவே தென்னாபிரிக்க அரசு அலறியது. தேசத்தின் ஈட்டியையும் ஆபிரிக்க தேசிய கொங்கிரசையும் பயங்கரவாதிகள் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் வக்காலத்து வாங்கி இந்த அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது.

‘எனது வீரர்கள் பயிற்சி பெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலை வீரர்கள். பயங்கரவாதிகள் அல்ல. நாம் ஜனநாயகத்திற்காகப் போராடுகின்றோம். பெரும்பான்மையினராகிய எமது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். ஆபிரிக்கா ஆபிரிக்கர்களால் ஆளப்படும் உரிமைக்காகப் போராடுகின்றோம். நாங்கள் அனைத்து மக்களிற்கும் சமமான உரிமை உள்ள அமைதியான நல்லிணக்கமான ஒரு தென்னாபிரிக்காவை உருவாக்கப் போராடுகின்றோம். நாங்கள் இனவாதிகள் அல்ல. எம்மை அடக்கி ஆளும் வெள்ளையர்களே இனவாதிகள். எமது நாட்டில் வாழும் அனைவரிற்கும் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரஸ் தனது சுதந்திரச் செய்தியை அறிவிக்கின்றது’ எனப் புகழ்பெற்ற ‘நாங்கள் போரில் உள்ளோம்’ எனும் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசின் அறிக்கையில் விடுதலை வீரர்களைப் பயங்கரவாதிகள் என்னும் சர்வதேசத்தின் முகத்தில் நெல்சன் மண்டேலாவின் குரல் ஓங்கி அறைந்தது.

தொடர்ச்சியான ஆதரவு தேடலில் ‘மடிபா’ நாடு நாடாக அல்ஜீரியா, எகிப்து, கானா போன்ற நாடுகளிற்கு விடுதலைப் பயணம் மேற்கொண்டு போராட்டத்திற்கான சர்வதேசத்தின் ஆதரவினைத் திரட்டிக் கொண்டு நாடு திரும்பியபோது மண்டேலாவும் சில ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசின் உறுப்பினர்களும் 1962 இல் கைது செய்யப்பட்டனர். 1963ம் ஆண்டு இவர்கள் நாட்டிற்கெதிராக ஆயுத வன்முறையில் ஈடுபட்டதாகவும் அரசிற்கெதிராக சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். கடவுச்சீட்டு இன்றி நாடுகள் கடந்ததாகவும் இலண்டன் வரை கூடச் சென்று வந்ததாகவும் நெல்சன் மண்டேலா குற்றம் சாட்டப்பட்டார். இதற்கு முதலில் நெல்சன் மண்டேலாவிற்கும் மற்றவர்களிற்கும் ஐந்து வருடச் சிறைத்தண்டனையே வழங்கப்பட்டது.

ஆனால் மற்றவர்கள் இதிலிருந்து விலக்கப்பட்டு அரசிற்கெதிரான சதிச் செயல்களிற்காக நெல்சன் மண்டேலாவிற்கு 1964ம் ஆண்டு ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு ரோபன் தீவுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தென்னாபிரிக்க அரசு, எப்படியும் நெல்சன் மண்டேலாவைக் களத்தில் இருந்து அகற்றிவிட்டால் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று எண்ணியே அவருக்கு மட்டும் ஆயுட் தண்டனை வழங்கியது. இதில் பரலது சதிகளும் துணைபோயிருந்தனது. ஆனாலும் வெளியில் இவர் உருவாக்கிய விடுதலை இராணுவம் பல தோல்விகளைச் சந்தித்தாலும் தொடர்ந்து போராடியது.

தனக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தில் பேசிய நெல்சன் மண்டேலா ‘எனது வாழ்நாளில் எனது நாட்களை நான் ஆபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டதிற்காக அர்ப்பணித்தேன். நான் வெள்ளை இன அடக்குமுறைக்கும் கறுப்பின அடக்கமுறைக்கும் எதிராகப் போராடினேன். நான் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் சமமான வாய்ப்புகளுடனும் வாழும் ஒரு சுதந்திரமான ஜனநாயக நாட்டையே உருவாக்கப் போராடினேன். அந்த நாளைக் காண்பதற்காகவே நான் வாழ்கின்றேன். ஆனால் தேவை ஏற்படின் அப்படியான ஒரு தேசம் உருவாவதற்கு நான் என் உயிரையும் கொடுக்கத் தயாராகவே உள்ளேன்’ என்று எந்தத் தண்டனையும் தன் உறுதியைக் குலைக்காது என்பதை 1964ம் ஆண்டு ரிவோனா வழக்கு விசாணையில் மரணதண்டனை கூட வழங்கப்படலாம் என்ற நிலையில் இன்று உலகத் தலைவர்கள் எல்லாம் தலைவணங்கி நிற்கும் நெல்சன் மண்டேலா உரத்து அறிவித்தார்.

‘துணிவு என்பது பயமில்லாத் தன்மை அல்ல. அது உண்மையில் பயத்தின் மீதான வெற்றி. நான் பல தடவைகள் பயந்து உள்ளேன். ஆனாலும் நான் தைரியம் எனும் என் முகமூடிக்குள் பயத்தை ஒளித்து வைத்து விட்டேன். துணிந்த வீரன் என்பவன் பயத்தை உணராதவன் அல்ல. அதனை வெற்றி கொள்பவன்’ என்று தனது தைரியம் பற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். நெல்சன் மண்டேலாவின் ஆயுட்தண்டனை மாணவர்களிடையே பெரும் கோபத் தீயை உருவாக்கியது. இந்தச் சமயத்தில் மாணவர்கள் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. 1968 இல் மருத்துவ மாணவனான ஸ்டீவ் பிக்கோ தென்னாபிரிக்க மாணவர்கள் அமைப்பை உருவாக்கி மக்களிடையே மக்களின் உரிமைகளை எடுத்துக் கூறி அவர்களிற்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். இது 1970களில் பல்கலைக்கழகங்கள் எங்கும் பரவியது. அதனைத் தடுக்க அரசாங்கம் தென்னாபிரிக்காவிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படும் இளைஞர்களிற்கு வெளியில் உருவாக்கப்படும் குடியேற்றங்களின் குடியுரிமையை வழங்கியது.

1976 இல்லிருந்து 1981 வரை எட்டு மில்லியன் கறுப்பின இளைஞர்களின் தென்னாபிரிக்கக் குடியுரிமை பறிக்கப்பட்டது. மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. வெள்ளையின ஆபிரிக்கர்களின் மேற்கு ஜேர்மானிக் மொழியினை ஆங்கிலத்துடன் கட்டாயக் கல்வியாக்கும் சட்டத்தினை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் 1976 யூன் 16 வலுப் பெற்றது. சோவேட்டோவிலிருந்து தென்னாபிரிக்க நகரங்கள் வரை இந்தப் போராட்டம் வலுப் பெற்றது. இவர்களைக் கடுமையான வன்முறைத் தாக்குதலோடு காவற்துறையினர் எதிர்கொண்டனர். இதில் 700ற்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1977ல் மாணவர்கள் அமைப்பை உருவாக்கிய ஸ்டீவ் பிக்கோ கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலைக்குள் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டார். நெல்சன் மண்டேலா கொழுத்திப்போட்ட விடுதலைத்தீ தொடர்ந்தும் எரிந்து கொண்டே இருந்தது.

சிறைச்சாலையில் பல துன்பங்களைச் சந்தித்த நெல்சன் மண்டேலா, 27 ஆண்டுகள் அந்தத் தனிமையான சிறையினில் அடைக்கப்பட்டிருந்தார். 19 வருடச் சிறையின் பின்னர் 1982 இல் இவர் போல்ஸ்மோர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். நெல்சன் மண்டேலாவிற்கு வரும் கடிதங்கள் கூட தணிக்கை செய்யப்பட்டு முற்றாக கிழிக்கப்பட்டுச் சிலவரிகள் மாத்திரமே கொடுக்கப்பட்டது.

இவரை யாரும் சந்திப்பது தடுக்கப்பட்டது. இவரிற்கு மிகச் சிறிய சிறை அறையினுள் நிலத்திலே படுக்கையும் மலசலகூடத்திற்காகச் சிறிய வாளியுமே வழங்கப்பட்டது. அங்கு கல் உடைக்கும் இடத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டார். வருடத்திற்கு ஒருவர் மட்டும் ஒரே ஒரு நாள் 30 நிமிடங்கள் மட்டுமே இவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இவர் கடிதம் எழுதவும் இவரிற்கு வெளியிலிருந்து கடிதம் வரவும் ஆறு மாதங்களிற்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் இந்தக் கொடுமையான சிறைச்சாலையையும் தனது சுதந்திர இடமாக மாற்றும் திறமை நெல்சன் மண்டேலாவிற்கு இருந்து. இவரது அறிவின் ஆழத்தினாலும் பேச்சு வல்லமையாலும் எவ்வளவு கொடிய சிறை அதிகாரியையும் தன் விருப்பப்படி வளைக்கும் திறமை இவருக்கு இருந்தது. சக சிறைக்கைதிகளின் தலைவராக தன்னை மாற்றிக் கொண்டு அந்தச் சிறைச்சாலையின் தலைவன் போலவே இவர் தன்னை உருவாக்கிக் கொண்டார். இவரது உளவுறுதியை உடைக்கும் வலிமை எந்தச் சிறைச் சாலைக்குமோ அல்லது எந்தச் சிறை அதிகாரிக்குமோ இருந்ததில்லை. இந்தச் சிறை அனுபவம் இவரை மேலும் பக்குவப்படுத்தி ஒரு ஜனநாயகத் தென்னாபிரிக்கக் குடியரசை உருவாக்கும் வலிமையக் கொடுத்தது.

‘சிறைச்சாலையில் அவர் முடிவுகளை அவரே எடுப்பார். யார் கட்டளைக்கும் அடிபணிய மாட்டார். அவரை ஓடச் சொல்லிக் கட்டளை இட்டால் அவர் நடந்தே செல்வார். வேகமாக நடக்கச் சொன்னால் அவர் மெதுவாக நடந்தே செல்வார். ஆதிக்கவாதிகளின் கட்டளைக்குப் பணிவதில்லை என்பதை அவர் தனது கொள்கையாக வைத்திருந்தார்’ என இவரது சக கைதியாக இருந்த நெவில் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

1985ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதி வில்லியம் போத்தா நிபந்தனையுடன் கூடிய விடுதலையை வழங்க முன்வந்தார். ஆயுதப் போராட்டத்தையும் விடுதலைப் பேராட்டத்தையும் கைவிடுவதாக எழுதித்தந்தால் விடுதலை என அவர் நிபந்தனையிட்டார். அதனை நிராகரித்த நெல்சன் மண்டேலா ‘எனது மக்கள் இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளபோது எனது விடுதலை முக்கியமானது அல்ல. சுதந்திர மனிதன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தமுடியும்’ எனத் தன் விடுதலையை விட மக்களினதும் மக்கள் அமைப்புக்களினதும் விடுதலையே மேலானது என்பதை மீண்டும் உலகத்திற்கான சுதந்திப் புரட்சியின் அடையாளமாகத் திகழும் நெல்சன் மண்டேலா உணர்த்தி உள்ளார்.

1988 இல் கண்காணிப்புடன் கூடிய விடுதலையுடன் விடுவிக்கப்பட்ட இவர் 11ம் திகதி பெப்ரவரி மாதம் 1990ம் ஆண்டு நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டார். நெல்சன் மண்டேலாவின் சிறைக்காலம் உலகளாவிய ரீதியில் அரசியற் தலைவர்களிடம் இனப்பாகுபாடுகளிற்கு எதிரான கோபத்தைத் தீவிரமாக எழுப்பியது. அடக்குமுறைக்கும் நிறவெறிக்கும் எதிரான ஒரு விடுதலைச் சின்னமாகவே இவர் சிறியிலிருக்கும் போதும் மற்றவர்களால் பார்க்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தினத்தில் மக்கள் முன் உரையாற்றிய நெல்சன் மண்டேலா ‘நான் அமைதிக்கும் இங்கு வாழும் சிறுபாண்மையின வெள்ளையர்களுக்கான நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என உறுதி அளிக்கின்றேன். ஆனாலும் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசின் ஆயுதப் போராட்டம் இன்னமும் முடிந்து விடவில்லை என்தையும் நான் உங்களிற்குத் தெரிவிக்கின்றேன்.’ என்று கூறினார்.

1990ம் ஆண்டு 25ம் திகதி பெப்ரவரி மாதம் உறுதியுடன் மூடப்பட்ட கையினை உயர்த்திப் போராட்டதின் உறுதியைக்காட்டிக் கொண்டு தென் ஆபிரிக்காவின் Bloemfontein நகரிற்குள் மக்கள் கூட்டத்துடன் பிரவேசித்த காட்சி உலகமெங்கும் பத்திரிகைகளில் வலம் வந்தது. 6ம் திகதி யூன் மாதம் 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவும் அவரது மனைவி வின்னியும் பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா மித்தரோனினாலும் அவரது மனைவி டானியல் மித்தரோனினாலும் அழைக்கப்பட்டு பரிசின் மனித உரிமைகள் சதுக்கமான Trocaderoவில் கௌரவிக்கப்பட்டனர். 22ம் திகதி யூன் மாதம் 1990ம் ஆண்டு இவரை நியூயோர்க்கிலுள்ள ஜ.நா சபையின் மண்டபம் பலத்த கரகோசத்தின் மத்தியில் வரவேற்றது. இதழ்களில் புன்னகையோடு வானை நோக்கி கையை உயர்த்தியபடி நிறவெறி அடக்குமுறை தகர்த்தெறியப்படும் வரை தொடர்ந்தும் தென் ஆபிரிக்கா மீதான தடைடையத் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

இவர் உருவாக்கிய அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என்று கூறிய அதே அமெரிக்கா அங்கு இருக்கும் தனது ஐ.நா மன்றத்தில் வரவேற்று இவரைப் பேசவும் அனுமதித்தது. வெற்றி பயங்கரவாதியைப் போராளி ஆக்கிவிடும். 1993ல் அப்போதைய தென் ஆபிரிக்க வெள்ளை ஜனாதிபதியான  Frederik de Klerk உடன் இணைந்து அடக்குமுறையையும் நிறவேறுபாட்டையும் நெல்சன் மண்டேலா உடைத்தெறிந்தார். நிறவேறுபாட்டு அடக்கு முறையை உடைத்தெறிந்தமைக்காவும் தென்னாபிரிக்காவில் புதிய நவீன ஜனநாயக அரசை உருவாக்கிய தற்காகவும் இவர்கள் இருவரிற்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆபிரிக்கத் தேசியக் கொங்கிரசில் போட்டியிட்ட நெல்சன் மண்டேலா பெரும் வெற்றி ஈட்டித் தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி ஆனார். அல்கோர் முதல் பிடல் கஸ்ரோ வரையான உலகின் பெரும்பாலான அதிபர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். இவரது அரசு முதல் இன நிறத் துவேசமற்ற பாகுபாடற்ற தென்னாபிரிக்க அரசாக அமைந்தது. தென்னாபிரிக்காவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி சர்வதேச முதலீடுகளை உருவாக்கிய நெல்சன் மண்டேலா, 1995 இல் உலக எயிட்ஸ் நோய்க்கெதிரான போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்.

பெரும் இசை நிகழ்ச்சிகளை ‘46664’ என்ற பெயரில் தொடர்ந்து நடாத்திப் பெரும் நன்கொடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த இலக்கமானது சிறைச்சாலையில் இவருக்குக் கொடுத்திருந்த கைதி இலக்கமாகும். இவரது நலன்புரி அறக்கட்டளையான ‘மண்டேலா அறக்கட்டளை’ யின் ஜொகானஸ்பேர்க் தலைமையகத்திற்கு நிக்கோலா சார்க்கோசியும் அவர் துணையாரும் 2008ம் ஆண்டு சென்றிருந்தனர். 2004ம் ஆண்டு பொது வாழ்க்கயிலிருந்தும் கட்சியின் தலைமைப்பதவியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மண்டேலா அறிவித்தார். 2007ம் ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இவரது சிலை ஒன்று உருவாக்கப்பட்டது. உயிருடன் இருக்கும் தலைவர்களிற்குச் சிலை வைப்பது என்பது இவரிற்காக மட்டும்தான் இருந்திருக்கும்.

2011ம் ஆண்டிலிருந்து நோய்வாய்ப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் மூன்று முறை நீண்ட கால வைத்திய சிகிச்சைக்கு உட்பட்டிருந்தார். நுரையீரல் அழற்சி காரணமாகத் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பில் இருந்தவர் தனது 95வது வயதில் கடந்த ஜந்தாம் திகதி சாவடைந்தார். இவரது சாவு உலகையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. தன் வாழ்நாளையே நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த இந்த மாவீரனிற்காக மொழி நிற இன பேதமின்றி, அனைத்து மக்களும் தலைவணங்கி மரியாதை செலுத்தி உள்ளனர்.

எதிர்வரும் 15ம் திகதி நடக்க இருக்கும் இவரது இறுதிச் சடங்கை உலகின் பெரும்பாலான தலைவர்களின் இறுதி மரியாதையோடு மிகவும் பிரம்மாண்டமாக நடாத்தத் தென்னாபிரிக் அரசு முடிவெடுத்துள்ளது. 1965ம் ஆண்டு சே ர்வின்சன்ட் சேர்ச்சிலின் இறுதிச் சடங்கிலும் பார்க்க அதிகமான அரச தலைவர்களின் பங்கேற்போடு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டினதும் தனது இன மக்களினதும் விடுதலைக்காக வாழ்நாளை அர்பணித்தவர்களும் நாட்டிற்காக வீழ்த்தப்பட்டவர்களும் மக்கள் மனதில் நிலையாக நிற்பார்கள் என்பதற்கு கண் முன்னான சாட்சிமாய் உலகின் விடுதலைச் சின்னம் நெல்சன் மண்டேலா!

நன்றி: ஈழமுரசு

 http://www.tamilkathir.com/news/14281/58//d,full_art.aspx#sthash.BrE3Xy80.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.