Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்குமாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளக்குமாறு
ஆருத்ரா


விளக்குமாற்றிற்கு எதற்கு பட்டுக்குஞ்சம் என்றுசொல்லுவார்கள். ஒரு பொருள் பற்றிய தேவையையும் மதிப்பையும் சார்ந்து அதனை வைத்திருக்க வேண்டிய இடம் பற்றி இந்த பழமொழி சொல்லிச் செல்கின்றது. எங்கள் ஊர்களில் வீடு கூட்டுவதற்கு தும்புக்கட்டையையும் வீடுவளவு கூட்டுவதற்கு விளக்குமாற்றையும் பயன்படுத்துவதற்கு மாறாக இந்தியாவில் வீடுபெருக்குவதற்கு கைவிளக்குமாற்றை பயன்படுத்துவார்கள். கூட்டுவதற்கு பதிலாக பெருக்குதல் நடைபெறும். தமிழர்கள் தமது கணித நிபுணத்துவத்தை இவ்வாறுதான் காட்டிக் கொள்கின்றார்கள்.
 

in.jpeg?w=150&h=84

இவ்வாறு கூட்டிப் பெருக்குவதற்கு ஐரோப்பாவில் விளக்குமாறு தும்புக்கட்டை தவிர்த்து வாக்குவம் கிளினர்கள் என்றழைக்கப்படும் HOOVER கள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போதைய நிலையில் இதன் மேம்பட்ட பதிப்பாக தானாக தரையில் விரைந்து தன்போக்கில் செயற்படும் ரோபாட் கிளீனர்கள் வந்துவிட்டது. இயக்கிவிட்டால் தானாக சென்று போகக்கூடாத இடங்களுக்குள் சென்று தும்பு ‌ தூசி அனைத்தையும் அகற்றி அழகான வீட்டை உருவாக்குவதாக சொல்லித்தான் இவற்றை விற்பனை செய்கிறார்கள். இவற்றுடன் கூடவே ஈரலிப்பான காற்றையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பகுதிசார் தொழில்நுட்பத்தின் பலாபலன்களை உள்ளடக்கிய வாக்குவம் கிளீனர்கள் இருப்பதாக விற்பனை பிரதிநிதிகள் வீடுகளுக்கு வந்து டெமொ காட்டதயாராக இருக்கின்றார்கள்.

இன்று வாங்கக்கூடிய தகமை கொண்ட நுகர்வோர் உலகம் பல்கிப் பெருகிவிட்டது. அத்தியாவசிய தேவை, அடாவடித் தேவை என்ற மாயமான்களுக்கிடையில் சிக்குப்பட்டு அல்லல்படுகின்றது நுகர்வுக்கலாச்சாரம். தொலைக்காட்சி விளம்பரங்களில் இருந்து சிறு துண்டுப்பிரசுரம் ஊடாக தொலைபேசி அழைப்பு என நீண்டு செல்கின்றது நுகர்வுமானை அடித்துப் போடுவதற்கான உத்திகள்.

விற்பனைப் பிரதிநிதிகள் என்ற பிரிவில் பல்வேறு இன மொழிபேசும் மக்களின் நாடித்துடிப்பறிந்து விற்பனை செய்வதற்கேற்ற வகையில் அவ்வினத்தைச் சார்ந்த அந்தமொழியை சரளமாக பேசக்கூடியவர்களை அப்பணிகளில் அமர்த்தி இருக்கின்றன வெளிநாட்டுநிறுவனங்கள். பெரும்பாலும் தேமதுரத்தமிழ் பேசும் இளம் யுவதிகள் சிலரை வேலைக்கு வைத்திருக்கும் இந்நிறுவனங்கள் அவர்களுக்கு பாட்டில் பாட்டிலாக தேன்களையும் வழங்குகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு. SWEET VOICE அவர்களுக்கு !

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை முதலில் தரவுக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் முதற்பணி. பின்னர் ஒருநாளைக்கு இத்தனை தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நிறுவனம் வரையறுத்துக் கொடுப்பதற்கு ஏற்ப அவர்கள் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.1033_1.jpg?w=150&h=150


 

ஹலோ.. வணக்கம்! உங்களுக்கு நேரம் இருக்கின்றதா? தொடர்ந்து உரையாடலாமா? என்ற தொனியில் ஆரம்பித்து தாங்கள் இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் எனவும் அது பற்றி உரையாட விரும்புவதாகவும் சொல்லி அறிமுகப்படுத்தி உரையாடல்களை தொடர்வார்கள்.

நுகர்வுக் கலாச்சாரம் பற்றியும் உங்கள் தொண்டைக்குள் குத்தப்போகும் தூண்டில்கள் பற்றியும் விழிப்புணர்வான கருத்துகள் உங்களுக்குக்குள் நிறைந்திருந்து- நாளைபார்க்கலாம் அல்லது பின்புபார்க்கலாம் என நாசூக்காகவும் வேண்டாமே என ஒரேயடியாகவும் மறுத்து விடுவீர்களாயின், உங்கள் தாய் தந்தையர் செய்தபுண்ணியம் உங்களுக்கும் வந்திருக்கின்றது நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள் என்பது அர்த்தமாகும். தேன் குரல் நாயகிகளின் வசீகர சுண்டும் குரலுக்கு அடிபணிந்து பேச்சில் குழைவு காட்டினீர்களானால் தொலைந்தீர்கள். பட்டினத்தார் பரதேசம் போக ஆயத்தப்படுத்திய கதையாகி விடும்.

முன்னைய நுகர்வு கலாச்சாரம் குறித்து பார்க்கலாம்.சாவகச்சேரியில் இருந்த வரைக்கும் எங்கள் வீட்டில் விறகு அடுப்புத்தான். ஈரவிறகுடன் அல்லாடும் அம்மாக்களும் பொச்சுமட்டை வைத்து ஊதி ஊதி அல்லாடும் அம்மாக்களும் நினைவுக்கு வருவார்கள். குளிர்பதனப் பெட்டி என்ற ஒரு சமாச்சாரம் அரிதாக சில வீடுகளில் மாத்திரமே காணப்பட்டன. அவற்றை வைத்திருப்பவர்கள் ஊர்களில் வசதியானவார்களாக இருந்தார்கள். வீடுகளில் OVEN களும் மைக்கிரோவேவ் OVEN களும் பின்னாட்களிலேயே புழக்கத்தில் வந்தவை. கேக் தயாரிப்பதற்கு வீடுகளில் எல்லாவற்றையும் தயார்ப்படுத்தி பேக்கரி கொண்டு சென்று போறனைக்குள் வைத்து எடுப்பது அன்றையகாலம்.
 

manpanai.jpeg?w=150&h=112

 

ஆனாலும் நல்ல தண்ணி வீட்டில் இல்லாதவர்கள் மகளிர் கல்லூரியிலும், சாவகச்சேரி சிவன் கோவிலிலும் வெள்ளைகான்களில் நீர் அள்ளி வந்து மண்குடங்களில் ஊற்றி வைத்திருந்து தாகசாந்தி செய்வது நினைவுப் பரிமாணங்கள். அந்த வெக்கைக்கு மண்குடத்தின் ஈரப்பதன் போதுமானதாகவே இருந்தது. மனமும் நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் சிக்குப்படாமல் போதுமென்ற மனம்…பொன்செய்யும் மருந்து.. அமைதியான வாழ்க்கை.

ஐரோப்பாவில் எழுபதுகளில் மைக்ரோவேவ் ஓவன்கள் விற்பனைக்கு வந்த காலத்தில் இருந்து தான் விதவிதமாக பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதும், மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டுவதற்காகவே தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதான நுகர்வுக் கலாச்சாரம் அபரிமிதமாக வளர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அப்பொழுதெல்லாம் ஐரோப்பிய வீடுகளில் வெவ்வேறு விதமான மூன்று நான்கு மைக்ரோவேவ் சாதனங்கள் சமையலறையை அடைத்துக்கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாள் காலை 10 மணி இருக்கலாம். தமிழில் நன்கு உரையாடக்கூடிய அந்ததேன்குரலாள் எங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினாள். ஹலொ நாங்கள் இன்ன நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள். தங்கள் அமெரிக்க நிறுவனம் புதிதாக சந்தைக்கு விட்டிருக்கும் வாக்குவம் கிளீனர் ஒன்றை செயல்முறையில் செயற்படுத்திக் காட்டுவதற்காகவே தொடர்புகொண்டதாக கூறினாள். நீங்கள் எப்பொழுது வீட்டில் இருப்பீர்கள்? நான் எனக்கு கிடைத்துள்ள நாளை மறுநாளின் விடுமுறையை தெரிவித்தேன். அன்று தனியேதான் நிற்பீர்களா? வீட்டில் வேறு யாரும் இருக்கமாட்டார்களா? என்று அடுத்து வந்த கேள்விகளை மாத்திரம் தனியே எனது மனைவி கேட்டிருந்தாளானால் அந்தப்பெண் என்னுடன் வேறு எதற்கோ தொடர்பு கொள்வதாக நினைத்து பெரும் பிரளயம் நிகழ்ந்திருக்கும். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்றுகேட்டேன்.

அவர்களின் வாக்குவம் கிளீனர் கான DEMO செய்து காட்டும் போது எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமாம். ஏலவே நான் இந்த வாக்குவம் கிளீனர் பற்றி அறிந்திருந்ததாலும் எனது நண்பர்கள் இருவர் அதே மாதிரியான பொருள் ஒன்றை பெரும் பெறுமதி கொடுத்து வாங்கி இரண்டு வருடங்களாக உபயோகிக்காமல் பூட்டி வைத்திருப்பதை தெரிந்திருந்ததாலும் எங்களுக்கு வேண்டாம்- பின்பு பார்க்கலாம் எனஅந்தப் பெண்ணிடம் கூறி இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். எனினும் பின்பும் பலமுறை தொடர்பு கொண்டும், இந்த DEMO செய்து காட்டும் போது தாங்கள் அன்பளிப்பாக தரும் கத்திசெற் ஒன்றை பெற்றுக் கொள்ளலாம் என்ற அந்தப் பெண்ணின் ஆசை வார்த்தை எனது மனைவியை கட்டிப்போட்டு விட்டதாலும் ஒருநாள் வீட்டிற்கு வந்து DEMO செய்து காட்டுவதற்கு சம்மதித்தேன்.

பின்பு ஒரு சனிக்கிழமை நான்கு மணிக்கு DEMO ஆரம்பமானது. நன்கு அழகாக உடை தரித்த அந்த தமிழ் இளைஞன் தமிழும் டொச்சும் கலந்து தங்கள் நிறுவனத் தயாரிப்பை வானளாவப் புகழ்ந்தான். இவ்வாறான வேறு தயாரிப்புகள் உலகில் எங்கும் தயாரிக்கப்படவில்லை என்று சத்தியம் செய்தான். தங்கள் நிறுவனத் தயாரிப்பு எங்கள் கைகளில் தவழ்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றான். நன்றாக வார்த்தைகளால் குழை அடிப்பதற்கு கற்றுத் தேர்ந்திருந்தான் என்பது சொல்லாமலே விளங்கிப் போயிற்று.

சாதாரண வாக்குவம் கிளீனர்கள் காற்றை ஒரு பக்கத்தால் இழுத்து மற்றப் பக்கத்தால் வெளியேற்றுகையில் தங்களது தயாரிப்புகள் வெளியேறும் காற்றை நீருக்குள் இழுத்து சுத்தப்படுத்துவதாகவும் அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் வளியானது மாசுமரு அற்று விளங்கும் – நீங்கள் எல்லோரும் சுகதேகியாகி நூறுவருடங்கள் வரை வாழலாம் என்பதாக அந்த விற்பனைப் பிரதிநிதி சொல்லத் தொடங்கினான். இதைக் கேட்டதும் மைக்கேல் ஜாக்சன் தனது குழந்தையை தூக்கும் போதெல்லாம் தொற்றுநீக்கி உபயோகித்து கைகளை துடைத்த பின்பே தூக்கி முத்தமிட்டதான செய்தி என் நினைவில் வெட்டியது.

 

fr-1.jpeg?w=150&h=113

 

அடுத்து அந்த விற்பனைப் பிரதிநிதி செய்த காரியம் தான் என்னையும் மனைவியையும் அந்த வாக்குவம் கிளீனர் ஐ வாங்குவதற்கான சஞ்சலத்தை ஏற்படுத்தியது. தனது வாக்குவம் கிளீனர் ஐ படுக்கையறை வரை கொண்டு சென்று அங்கு கிடந்த மெத்தை ஒன்றினை செய்முறைக்கு எடுத்துக் கொண்டான். மெத்தையின் ஓரங்களை வாக்குவம் கிளீனரால் சுத்தப்படுத்தி அதன் முனையை திறந்து காட்டி அங்கு தென்பட்ட வெள்ளைமாவு போன்ற பொருளை கையில் எடுத்து இது என்ன தெரியுமா? என்றான். இவைகள் பாக்டீரியாவின் தோல்கள். பாக்டீரீயாக்கள் இறந்ததும் மெத்தைகளில் தங்கிவிட்டன. தான் அதை இப்போது சுத்தப்படுத்தியதாக கூறிக் கொண்டான்.

இவ்வாறான அதகளமான உரையாடல், வசியம், குழையடிப்பு எல்லாமான முடிவில் உலகின் முழுமுதல் தொற்றுநீக்கியான வாக்குவம் கிளீனரை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு நாங்கள் ஆட்பட்டிருந்தோம். சுத்தமான காற்றை சுவாசிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை. அந்த விற்பனை பிரதிநிதி தனது வாக்குவம் கிளீனரை விற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு கூறியபோதில் எனது மனைவி நாளைக்குப் பார்க்கலாம்- நாங்கள் யோசித்து இறுதி முடிவு எடுப்பதாக கூற விற்பனைப் பிரதிநிதியோ ஒரு கையெழுத்துப் போட்டுவிட்டு பின்பு யோசிக்கலாம் என்ற தோரணையில் கதை பேச தொடங்கினான்.

அந்த விற்பனை பிரதிநிதியான விடாக்கண்டனை எனது மனைவியாகிய கொடாக்கண்டன் வழியனுப்பி வைத்து சுவிஸ் பிராங்கில் 4500 பெறுமதியான செலவுத் தானத்தில் இருந்து என்னை காப்பாற்றிப் பாதுகாத்தாள் என்பதும் பாக்டீரீயாவின் தோல்கள் வளிமண்டலப் பரப்பெல்லாம் வியாபித்து இருக்கின்றது என்பதும் வாசகர்களாகிய உங்களுக்கும் தெரிந்து விட்டு போகட்டுமே.

வாய்ப் பேச்சை நம்பி கைக்காசை இழக்கவேண்டாமே.

http://aruthra.com/2013/11/02/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.