Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையும் – மு.பொ

Featured Replies

தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையும் – மு.பொ

 

 

‘இப்போது மட்டுமல்ல ஈழத்தில் இன அழிப்பு நடந்தபோதும் பல எழுத்தாளர்கள் கள்ளமௌனம் சாதித்தார்கள். மிகச்சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தனர். எழுத்தாளர்கள் என்போர் மொழியைக் கொண்டு பிழைக்கின்றார்கள். அவர்கள் தான் முதலில் வினையாற்றியிருக்க வேண்டும்.’

 

indra-srima-300x253.jpg

 

இவ்வாறு தமிழக எழுத்தாளர்கள் பற்றிக் கூறியிருக்கிறார். பிரபல ஓவியர் மருது, ஆனந்த விகடனில் (30-10-13) பாரதி நம்பிக்கு அளித்த செவ்வியின் போது.

மேற்கண்ட பேட்டியைப் படித்தபோது, கனகாலமாக என் மனதை அரித்துக் கொண்டு கிடந்த, ‘தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரையை எழுதி வெளிக் கொணர வேண்டுமென்ற உந்துதல் பெற்றேன். உண்மையில் ஈழத்தில் இனப்படுகொலை யொன்று (Genocide) நடந்து கொண்டிருந்த போதும் சரி அதற்கு பின்னரும் சரி தமிழக எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பல பிரபலங்கள் ‘அப்படி ஒன்று நடந்ததா’ என்ற உணர்வேயற்ற அல்லது உணர்வுகளை உள்ளிழுத்த ஜடங்களாக, ஓவியர் மருதுவின் வார்த்தைகளில் சொல்வதானால் கள்ளமௌனம் சாதித்தார்கள், அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஏன் இந்த அவலமான நிலைக்குள் தமிழக எழுத்தாளர்கள் தள்ளப்பட்டார்கள்? ஈழத்தமிழர் இனப்பிரச்சினையை தமிழக அரசியல்வாதிகள் தம்தோள் மேல் சுமக்கத் தொடங்கியதாலா?

‘சொல்லப் போனால் அரசியல் கட்சிகளின் அவலமான சூழல், இவர்கள் தங்கள் பொறுப்பைப் தட்டிக் கழித்து ஒதுங்கிக் கொள்ள வசதியாகவும் இருக்கிறது’ என்று கலைஞர் மருது கூறுவது தான் இந்த தமிழக எழுத்தாளர்களின் இந்த அருவருப்பான மௌனத்துக்கு காரணமெனில் அதைவிட வெட்கக்கேடான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. யாராவது செய்யட்டும் நாம் பின் வரிசையில் போய் நின்று கொள்வோம். அப்படியா?

உலக வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட எந்த எழுத்தாளனும் இப்படி இருந்திருக்கவும் மாட்டான். இருக்கவும் மாட்டான்.

1783 களில் வெடித்துக்கிளம்பிய முதலாவது பிரஞ்சுப் புரட்சி பற்றி எதிர்வு கூறியவர்கள் றூசோ‚ வோல்ட்ரயர், மொன்ரெஸ்கி போன்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமே. அவ்வாறே 1968ல் வெடித்த இரண்டாவது பிரஞ்சுப் புரட்சிக்குரிய சுலோகங்களை எழுதியவர்களும் அதை முன்னின்று நடத்தியவர்களும் எழுத்தாளர்களும் புத்திஜீவகளுமே.

மார்ச்சியம் கூறியவற்றை தலைகீழாக்குவது போல் ‘commodities are the opium of the people’ (பொருதாளார பண்டங்களே மக்களின் அபின்) என்று எழுதியவர்கள் அவர்கள் தான்.

இன்னும் எழுந்து கொண்டிருக்கும் புரட்சி பற்றி அவர்கள் கூறியதை சிலர் (மார்க்சியவாதிகள்) புரிந்து கொள்ளவில்லை என்பதை விளக்க அவர்கள் எழுதிய சுலோகம் இப்படி அமைந்தது: When the wise man points the moon the fools looks at the finger (அறிஞன் சந்திரனைச் சுட்டும் போது முட்டாள் அவன் சுட்டிக் காட்டும் விரலைத்தான் பார்க்கிறான்) என்பது பொருத்தமான சுலோகமாக இன்றும் இருக்கிறது.

எங்கு அடக்கு முறைக்கு எதிரான முற்போக்கான போராட்டங்கள் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் அதை முன்னின்று வரவேற்பவர்களாக இருப்பவர்கள் எழுத்தாளர்களும் கவிஞர்களும் புத்திஜீவிகளுந்தான்.

இதற்கு நல்லதோர் உதாரணமாக ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப்போரைச் (Spanish civil war) சொல்லலாம். 1930 களில் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிராக ஸ்பெயினில் நிகழ்ந்த உள்நாட்டுப்போரின் போது உலகெங்கும் வாழ்ந்த எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் கிளர்ந்தெழுந்தனர். கிளர்ந்தெழுந்தது மட்டுமல்லாமல் போரில் பங்குபற்றவும் சென்றனர். ஏர்னஸ்ட் கெமிங்வே அந்தப் போரில் பங்குபற்றி முன்னின்று போராடினான். அவன் எழுதிய “for whom the bell tolls” அப்போர் தொடர்பாக எழுந்த மிகச் சிறந்த நாவல். அவ்வாறே உலக மேதைகளில் ஒருவரான ஆர்தர் கோஸ்லர் (Arthur Koestler) அதில் பங்குபற்றி கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படும் தறுவாயில் பிரிடிஷ் அரசாங்கம் தலையிட்டு தன்னிடமிருந்த கைதியொருவனைக் கொடுத்து கோஸ்லரைக் காப்பாற்றியது. இவரது‚ மரண தண்டனைக்குள்ளான ஒருவரின் அனுபவத்தை அறிய வேண்டுமாயின் Dialogue with Death (சாவோடு சம்பாஷணை) என்ற நூலையும் Darknees at moon (உச்சிப் பகலில் இருள்) என்ற உலகப் புகழ் பெற்ற நாவலையும் படிக்கவேண்டும். இன்னும் இக்னேஷியஸ் சைலோன், ஜோர்ஜ் ஓர்வல் என்று வகை தொகையின்றி அப்போரில் பங்குபற்றியவர் தொகை நீளும். ஏன் இலங்கையில் இருந்துகூட பிலிப் குணவர்த்தனா என்ற இளம் இடசாரிப் புத்திஜீவி அப்போரில் பங்குபற்றச் சென்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இச் சந்தர்ப்பத்தில் 1962ல் நிகழ்ந்த இந்திய சீனப் போர் பற்றி நினைவூட்டிச் செல்வது இன்னும் பல விஷயங்களை விளக்க உதவும். இந்தியாவை சீனா தாக்கிய போது, அது பற்றி அக் காலத்தில் தமிழகத்தில் எந்த எழுத்தாளனும் ஆழமான பின்னணியில் வைத்து எழுதவில்லை. இதே காலத்தில் இலங்கையில் முற்போக்குவாதிகள் எனச் சொல்லப்பட்ட, பேராசிரியர் க. கைலாசபதியின் கீழ் இயங்கிய சீனச் சார்பு கொம்யூனிஸ்ட எழுத்தாளர்கள், எங்கும் இருந்த கட்சிக்காரர்கள் போல் கள்ளமௌனம் சாதித்தபோது, கலைச்செல்வி என்ற ஈழத்துச் சிற்றிதழால் ஒழுங்குசெய்யப்பட்ட முற்போக்கு இலக்கியம் என்ற கருத்தரங்கத் தொடரில் ஈழத்து எழுத்தாளர் மு. தளையசிங்கம் பின்வருமாறு எழுதினார்.

‘இந்தியாவின் வடக்கு எல்லையில், இப்போது நான் இதை எழுதும் நேரத்தில் (ஒக் 31-1962) நான் முன் கூறிய ஆபத்து பயமுறுத்திக் கொண்டு முன்னேறுகிறது. இங்கே உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஐந்தாம்படை பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. பின்னர் ஓர் அறிக்கை விடப்பட்டிருகிறது. இந்திய சீன எல்லைப்போர் ஓர் சிறிய விஷயம் என்றும் அதை விட்டுவிட்டு கியூபா பிரச்சினை பற்றி கவலைப்பட வேண்டும் என்றும் உபதேசம் செய்யும் பாணியில் சீனப் பொதுவுடைமை வாதிகள் இந்தியா மீதும் நேரு மீதும் வசைமாரி பொழிந்தும் ஏகாதிபத்தியவாதிகள் என்று பிரசாரம் செய்தும் கியூபா சார்பில் பெரும் பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடத்தியும் உள்நாட்டு மக்களை ஏமாற்றுவது இங்கே கவனிக்கத்தக்கது. இந்தப் பொதுவுடைமை வாதிகளிடம் ஒரு தவறாத Consistency இருக்கிறது. ரஷ்ஷியாவில் குலாக்குகளை மறைத்துக் கொண்டு ஜேர்மன் யூதர்களைப் பற்றிப் பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக் கொண’டு சுயஸ்கால்வாயைப் பற்றிக் கத்தினார்கள்.

இப்போது சீனாவை மறைத்துக் கொண்டு கியூபாவைக் காட்ட முயல்கின்றனர். இப்படித் திரித்துக் கூறும் ஒரு கட்சியின் கீழிருந்து இலக்கியம் எழுதும் நிலையை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள். சீனாவில் ஒரு எழுத்தாளன் இப்போ எப்படித் தன்னை ஒரு சரியான உலக நிலையில் நிறுத்திச் சிந்திக்க முடியும்? சோஷலிஸ யதார்த்தம் என்பதும் ஒரு பக்கத்தை மறைத்துக் கொண்டு மறுபக்கத்தைக் காட்டும் வித்தைதான். அத்தோடு இந்தோ சீனயுத்தம் வேறொரு உண்மையையும் காட்டுகிறது. அதாவது இந்தியா பொருளாதார வளர்ச்சியோடு ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு உதாரணமாக நிற்கிறது. சீனா வெறும் லோகாயத வளர்ச்சியை மட்டுந்தான் குறிக்கிறது. லோகாயத வளர்ச்சி மனிதனை எந்த வகையிலும் வளர்க்காமல் பழைய கொலோனிய வாதியாகவே விட்டிருக்கிறது. அது ஒரு புதிய Idealogy யின் தேவையைக் குறிக்கிறது.

Spanish civil war இன் போது பொதுவுடமை வாதிகளுக்காக நின்ற உலக அறிவாளி வர்க்கம், இந்தோ சீன யுத்தத்தில் அவர்களுக்கு எதிராக நிற்கிறதென்றால் அது ஒரு புதிய சகாப்தத்தின் பிறப்பைப் தான் குறிக்கிறது என்கிறார் மு.த. (1984 இல் கிரியாவால் வெளியிடப்பட்ட முற்போக்கு இலக்கியம்’ என்ற நூலிலிருந்து) மு.த இத்தோடு நிறுத்தவில்லை. இந்தோ சீனபோரை அடிப்படையாக்க கொண்டு ‘சுஸுல்’ என்ற குறுநாவலையும் எழுதினார். சுஸுல் என்ற இடமே லடாக் பிரதேசத்தில் சீனாவின் கையில் கடைசிவரை வீழாதிருந்த பிரதேசம்.

இதிலிருந்து நாம் தெரியவேண்டியது எழுத்தாளன் என்பவன் உலகத்தில் எங்கிருந்தாலும் அவன் உலகத்தின் மனசாட்சியாக, எங்கு அநியாயம் நடக்கிறதோ அதற்கெதிராக போராடும் ஆளுமை மிக்கவனாக இருக்க வேண்டும் என்பதையே. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் தலைமை தாங்கிய மகாயோகி அரவிந்தர், அதிலிருந்து விலகி புதுச்சேரிக்குப் போயிருந்த போதும் அவர் உலகெங்கும் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமலோ தன் சக்தியை அவற்றுக்கு எதிராகப் பாவிக்காமலோ இருந்ததில்லை.

உலகின் ஒவ்வொரு சிறிய அசைவையும் அவர் தன் கவனத்தில் எடுத்திருந்தார். 1940 ஓகஸ்ட் 15ல் ஹிட்லர், பக்கிங்ஹாம் மாளிகையில் உணவருந்தப் போவதாகக் கூறிய போது, ‘நான் பிறந்த தினத்தில் அந்த அரக்கன் அங்கு உணவருந்துவதா’ என்று போர்க்கோலம் பூண்ட அரவிந்தர், முழு இந்தியாவுமே (காந்தி உட்பட்ட) பிரிட்ஷ்காரருக்கு எதிராக இயங்கிய போது, இவர்களைப் பொருட்படுத்தாது ஹிட்லருக்கு எதிராக Psychic bombardment அனுப்புகிறார். அதுவே அவன் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது மட்டுமல்லாமல் இந்தியாவின் சுதந்திரத்துக்கும் கால்கோள் போட்டதும் எனலாம். அதனால்தான் ‘எனது பிறந்த தினமே இந்தியாவின் சுதந்திர தினமாகும்’ என்பதை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அரவிந்தர் கூறியிருந்தார்.

‘இடிபட்ட சுவர் போல் கலிவிழுந்தான் கிருத யுகம் எழுகமாதோ’ என்று சோவியத் புரட்சியை வரவேற்றுப் பாடினான் பாரதி.

praba-ipkf8-300x194.jpg

 

இவ்வாறு உலகின் சுதந்திர உரிமைப் போராட்டங்களுக்கெல்லாம் தமது ஆத்மார்த்த ஆதரவைத் தந்து தம் எழுத்துக்களை அர்ப்பணித்த எழுத்துலகப் பேராளுமைகள் வாழும் இந்திய நாட்டில் உள்ள தமிழக எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில பிரபலங்கள் ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பாக கடைபிடித்த கள்ளமௌனமும் அருவருப்பான அமைதியும் எம்மை மூக்கின்மேல் விரலை வைக்கவே செய்கிறது.

ஏன் இவர்கள் இவ்வாறான அருவருப்புள் வீழ்ந்தார்கள்?

இந்தப் பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக எழுத்தாளர்கள் தமக்கே உரித்தான சில IDIOSYNCRASIES என்கின்ற வினோதப்போக்குகளை ஊதிப் பெருக்க வைத்து, அல்லது அத்தகைய போக்குகளைக் கொண்டுள்ள எழுத்தாளர்களை அடியொற்றி அவற்றில் குளிர்காய்வதைப் பெருமையாய்க் கொள்வதில் நேரத்தைச் செலவழிப்பவர்களாகவே உள்ளனர். இன்னுஞ் சிலர் ஊர் ஊராக சுற்றுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். சிலர் அப்படிச் சுற்றித் திரிந்த ராகுல் சங்கிருத்தி யாரை, அவருக்கு 32 மொழிகள் தெரிந்தமைக்காக ஞானியாகத் துதி பாடுகின்றனர்.

ஒரு ஞானிக்கு நினைவாற்றல் இல்லாமல் போவதோடு வயோதிப ‘அறளை’ பெயர் தலோ (senile) ஏற்படுவது இல்லை என்ற அற்ப விடயம் கூடத் தெரியாத பெரிய எழுத்தாளர்கள் இவர்கள்! ‘இந்தியாவே உலகின் ஆத்மா’ என்ற மகாயோகி அரவிந்தரின் கூற்றுக்கு ஒப்ப, இத்தனை கோமாளித்தனமான இந்திய அரசியல் குளறுபடிகளின் மத்தியிலும் இந்தியாவை தாங்கி நிற்பது, கண்ணுக்குத் தெரியாத மாபெரும் பேரியல்பான ஆத்மீகப் பண்பாடே என்பதை அறியாது, மேலோட்டமான மார்சீயப் பார்வையில் மாபெரும் ரிஷிகளின் ஆத்மீக செயற்பாடுகளை கொச்சைப்படுத்திய ராகுல் சங்கிரிதயரின் எழுத்துக்களை (வோல்காவிலிருந்து கங்கைவரை) போற்றுபவர்களுக்கு இன அழிப்பு பற்றி கவலை ஏன்?; அது எங்கு நேர்ந்தால்தான் என்ன? இன்னொரு எழுத்தாளர் மனிதர் அற்ற வெட்ட வெளிக்கு, தன் நாவலை வாசித்துக் காட்டி வெளியீட்டு விழா நிகழ்த்துகிறார். இப்படி வாசகரை ஒதுக்கிய வெளியீட்டு விழாக்கள், வாசகரை அடைய வேண்டும் என்பதற்காகத்தானே இவற்றை கசிய விடுகின்றனர்.? ஈற்றில் வாசகரை ஒதுக்கப்போய் அவர்களின் வினோத நடத்தைகள் (IDIOSYNCRCIES) வாசகரை அடைய வேண்டும் என்பதிலேயே குறியாய் உள்ளதே வேடிக்கை !

இன்னுஞ் சிலர் ஞானமலையாக இருந்த, மகாயோகி அரவிந்தரால் SPIRITUAL HERCULES எனப் புகழ்ப்பட்ட ரமண மகரிஷியை அறியாது, He is looking without seeing என்ற ஜே.கே போன்ற சில இடைத்தரிப்பாளரின் கூற்றுகளை மகாவாக்கியங்களாகப் போற்றும் வழிதவறிய, இடந்தவறிய போக்குகளே தமிழக எழுத்தாளப் பிரபலங்களைச் சூழ்ந்துள்ளது.

இன்னும் சிலர், தமிழைக் கொண்டு தமிழ் நாட்டில் வாழ்ந்த போதும் தமிழ் நாட்டுக்கு எதிராகவே இருக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணைக்கட்டு விவகாரத்தின் போது இவர்கள் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து அதை அறியலாம். இன்னும் இவரின் நெடும் புனைவொன்றில் பாண்டிய மன்னர்கள் மேக நோயாளர்களாகக் கேவலப்படுத்தப்படும் காட்சி மற்றொன்று. எவ்வாறு ஈழத்தமிழினத்தின் அழிப்புக்கு (GENOCIDE) நம்பியார் சகோதர்கள், சிவசங்கரர் மேனன் முன் நின்றது போலவே, இது பற்றிய இந்த எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க மௌனமும் முன்னின்று உதவுகிறது.

ஆனால் அத்தகைய எழுத்தாளர்கள் செய்த கர்ம விளைவுகளுக்கும் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் தேடுவது போல ஈழத்தமிழர் இனப்படுகொலையை அம்பலப்படுத்துவதில், அந்த அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்ட மே 17 இயக்க திருமுருகன் காந்தியும் தோழர்களும் தமது செயற்பாடுகள் மூலமும் எழுத்துக்கள் மூலமும் காட்டிய கரிசனையும் அர்ப்பணிப்பும் இந்தியாவின் முகமூடியை கிழித்து தமிழினப் படுகொலையில் இந்திய அரசின் பங்களிப்பை தமிழர்களுக்கும் உலகுக்கும் அறியச் செய்தது. திருமுருகன் காந்தி கடந்த 3 ஆண்டுகளாத் திரட்டித் தொகுத்து வழங்கிய ஆவணங்கள் 2013 ஜெர்மனியில் நடந்த சர்வதேச விசாரணையில் ஈழத்தில் நிகழ்ந்தது தமிழ் இனப்படுகொலையே என்பதை நிரூபிக்க உதவியது. உலகெங்கும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே திருமுருகனின் பின்வரும் ஆத்மார்த்தப் வரிகளுக்கு முன்னால் தோற்றுப் போகின்றனர்: “திருமுருகனாகிய நான் இசைப்பிரியா உட்பட அனைவரின் படுகொலை நடப்பதற்கும் 2009இல் எனது மெளனத்தின் மூலமாக, குறை நிறைந்த அரசியல் செயல்பாடு காரணமாக, என் கோழைத்தனத்தின் காரணமாக, என் சுயநலத்தின் காரணமாக உடந்தையாக இருந்திருக்கிறேன்.”

ஈழத்தில் 2009 இல் தமிழின அழிப்பு நிகழ்ந்த போது தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் மௌனமாக இருக்க கேரளப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய், ஈழத்தமிழின அழிப்பில் இந்தியாவின் பங்கை தமிழகத்துக்கு வெளியே அம்பலப்படுத்தினாள். இத்தகைய எழுத்தாளுமைகளே அடியோடி நிற்கும் இந்திய பண்பாட்டின் சூக்கும பேரியல்புகளை என்றும் வாழ்ந்திருக்க உதவுவதோடு இந்தியாவை உலகின் ஆத்மாகவாகவும் இயங்க வைக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கோவை ஞானி‚ பா.செயப்பிரகாகசம்‚ ராஜேந்திர சோழன்‚ தமிழவன்‚ எஸ்.வி.ராஜதுரை‚ நாஞ்சில் நாடன் ‚ பொன்னீலன்‚ அரசு‚ மங்கை‚ இன்குலாப்‚ ஜெ.பிரபாகரன்‚ ஓவியர் மருது‚ ஒவியர் சந்தானம்‚ பெருஞ்சித்திரனார்‚ மாலதி மைத்திரி போன்றவர்கள் மௌனித்துப் போன பிரபலமான எழுத்தாளர்களை விட அன்புக்குரியவர்கள்.

ஈழத்து எழுத்தாளர் மு.பொன்னம்பலம்.

உயிர்எழுத்து (பெப்பிரவரி மாதம்)

 

 

http://www.naamthamilar.ca/?p=18651

 

 

நியானி: மூலம் திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.